(நானும் கராத்தேவும் விபாசனாவும்)

நானும் ‘தீபா. ஜா’ வும் பேசிக்கொள்ளவே மாட்டோம். ஆனால், பேசினாலோ அந்த உரையாடல் குறைந்தது ஒரு மணிநேரமாவது நீளும். சிரிப்பிற்குப் பஞ்சமே இருக்காது. அப்படி ஒருமுறை உரையாடலில், “உங்களுக்கு ஏன் கராத்தே கற்றுக்கொள்ளத் தோனுச்சு பிருந்தா” என்று அவர் கேட்க, “உங்களுக்கு டைம் இருக்கா தீபா” என்று கேட்டு, ஃப்ளாஷ் பேக்’கில் தொடங்கி மிகப் பெரிய பதில் சொல்லப் போக, “ப்ளீஸ் பிருந்தா, இதை எப்பவுமே வெளில சொல்லிறாதீங்க. நமக்கு மட்டுமே தெரிந்த தங்கமலை ரகசியமாக நமக்குள்ளவே இருக்கட்டும்” என்றெல்லாம் அன்று அவர் எவ்வளவோ சொன்னதையும் மீறி எழுத ஆரம்பிக்கிறேன்.

சின்ன வயதிலிருந்து வளையல் போட மாட்டேன். இது உறவினர்களிடத்தில் ஒரு முரண்பாட்டை வளர்த்தது. ‘பிள்ளை வளர்த்து வச்சிருக்காள் பார்’ என்று அம்மாவை யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அம்மாவும் வளையலணிய வற்புறுத்தி வற்புறுத்தி, கடைசியில் விட்டுவிட்டார்.

ஆனால், பார்க்கிறவர்களெல்லாம் அட்வைஸ் பண்ணுவார்கள். கைக்கு வளையல் போடுவதுதான் அழகு. மொட்டைக்கை சிறப்பு அல்ல. ஏன் இப்படி இருக்கிறே? பெந்தகோஸ்ட் ஆகப் போறியா என்றெல்லாம்.

நான் சொல்வேன், “எனக்கு வளையல் போடப் பிடிக்கவில்லை. நீங்கள் வளையல் போட்டிருப்பது என்னை உறுத்தவில்லை; அதே போல, நான் போடாதது ஏன் உங்களை உறுத்த வேண்டும்? உங்களை வளையல் அணிய வேண்டாம் என்று நான் சொல்லவில்லையே” என்று.

கிட்டத்தட்ட அதே போல இப்போது அனுபவிக்கும் விஷயம் என்றால், ‘கராத்தே’ கற்றவள் என்பது. ‘ஐயோ, கராத்தே தெரியுமா? பத்தடி தள்ளியே நின்னுக்குறேன்’ என்று ஏதோ ஜோக்கடிப்பதாக நினைத்து தன்னைத்தானே படு கேவலமாக தாழ்த்திக்கொள்வார்கள்.

கராத்தே தெரிந்தவர்கள் எல்லாரையும் எப்போதும் அடித்துக்கொண்டே இருப்பது மாதிரியும், இவர்கள் நம்மிடம் அடிவாங்கும் கேவலத்தை ஒவ்வொரு நொடியும் செய்யத் துணிந்தவர்கள் என்பது மாதிரியும். கேவலத்தைச் செய்தால் அடிக்க, கராத்தே தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை; அந்த கேவலமே போதுமானது.

எனது நடை, உடை, பாவனை என்பது சிறுவயதிலிருந்து இப்படித்தான். என்னை இளவயதிலிருந்தே அறிந்தவர்களுக்கு இது தெரியும்.

‘பிருந்தாவுக்கு அப்படியே அவள் அப்பாவினுடைய நடை’ என்று சொல்லிச் சொல்லியே, நடை பதிந்துவிட்டது. விபத்தில் காலுடைந்த பிறகு இன்னும் தத்து நடையாகப் போய்விட்டது.

நான் மகள் இருவருமே கராத்தே கற்றவர்கள். என்னையும் மகளையும் ஒருசேர பார்த்தாலே, நான் Tom Boy தன்மை, மகள் Feminine தன்மை – ‘நடை, உடை, பாவனை’ என்பது வேறு; ஒரு கலையைக் கற்றுக்கொள்ளுதல் என்பது வேறு. நமது விருப்பம், நாம் கற்பவற்றிலிருந்து நம்மைக் கொண்டு சேர்க்கிறது.

தாகமுள்ளவன் நதியைத் தேடுகிறான்; நதியும் தாகமுள்ளவனையே தேடுகிறது என்பதைப் போலத்தான் இதுவும். நம் உள்ளார்ந்த தேடல் கொண்டு சேர்க்கிற இடம் இது.

அப்போது நான் சேலம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். பெரியம்மா எனக்கு ஒரு கைக்கடிகாரத்தைப் பரிசளித்தார். அதுதான் எனது முதல் கைக்கடிகாரம். ‘முதல்’ என்பதால் மிகவும் அழகான ஒன்றாக மனதுக்கு இருந்தது. மேலே கண்ணாடி பதித்த, நீல நிற டயல் உள்ள வெள்ளி நிற உலோக கைக்கடிகாரம்.

எங்களது பள்ளியில் ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்குப் போகும் வழிநெடுக நிறைய தூண்கள் இருக்கும். நான் கை வீசி நடக்கும்போது குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது கைக்கடிகாரம் தூணில் பட்டு, கண்ணாடி சிதறிவிடும். கண்ணாடி மாற்றிய காசுக்கு இன்னொரு கைக்கடிகாரமே வாங்கி விடலாம்.

இது தொடர்ந்து நடக்க, வீட்டினர் பாராட்டு (!?) தாங்காமல், இதை எப்படியாவது சரி பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற அறிவு வளர்ந்து, கைக்கடிகாரத்தை மேல் நோக்கிக் கட்டாமல் உள்ளங்கைப் பக்கம் கட்ட ஆரம்பித்தேன். தூணில் இடிபட்டாலும் கைக்கடிகாரத்தின் வார்தான் லேசாய் சிராய்க்குமே தவிர, கைக்கடிகாரத்தின் கண்ணாடி தப்பித்தது.

எனது எல்லா அனிச்சை செயல்களுமே கொஞ்சம் மெதுவாகத்தான் இருக்கும். சின்ன வயதில் மேலூர் வீட்டில், படிக்கட்டில் இடப்பறம் திரும்ப மறந்து, நேரே சென்று விழுவது; இப்பவரை மேஜையருகே குனியும் போது தடாலென்று இடித்துக் கொள்வது; தாளிக்கும்போது சுதாரித்து நகர்ந்துகொள்வது, சூடான குக்கருக்குப் பின்னால் உள்ள சாமான் எடுக்கும்போது சூடுபட்ட தழும்புகள் என… அப்புறம் சற்றே அறிவு தெளிந்து, அடிபடாமல் தப்பினேனே தவிர, அடிபட்டுக்கொள்ளும் தன்மை என்பது இருந்து கொண்டே இருந்தது.

‘தாரே ஜமீன் பர்’ பார்த்துவிட்டு, ஒருவேளை டிஸ்லெக்ஷியா பேஷண்ட்டோ என்றுகூடச் சந்தேகம் வந்தது. ஆனால், பள்ளிக் காலத்தில் கேட்சிங் எல்லாம் பிரச்னையே இல்லை. கேம்ஸ் பீரியட்டில் வளையம் தூக்கிப் போட்டு விளையாடியதிலோ, ஷாட் புட்டிலோ சோடை போனதில்லை. ஷாட் புட் யார் மேலும் தவறி விழுந்ததில்லை; டீச்சர் குறித்த எல்லையிலேயேதான் சென்று விழுந்திருக்கிறது.

எப்போதும் ஏதோ ஒருவித ஆழ்ந்த கனவு கவிதை மனோநிலையிலேயே இருப்பது போல அல்லது இப்படியும் சொல்லலாம், துளியும் விழிப்புணர்வு அற்ற நிலை. எல்லாருக்கும் சாதாரணமாக இருக்கும் விழிப்புணர்வு நிலையை நான் அடைய, எல்லாரையும்விட இன்னும் கொஞ்சம் அதிகம் உழைக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது. ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையைக் கற்க வேண்டும் எனத் தோன்றியதற்கு இது ஒரு காரணம்.

மகளுக்கு ஐந்து வயதிருக்கும். விடுமுறை நாளில் எல்லா வேலைகளும் முடித்த களைப்பில், தரையில் படுத்திருந்தேன். மகள் சோஃபாவிலிருந்து, அப்படியே நீச்சல் குளத்தில் டைவ் அடிப்பது போல வயிற்றில் குதித்தார். பிறகொருநாள் அவர் விளையாட்டாக விட்ட ‘கும்மாங் குத்தில்’ குடலே வெளி வந்துவிடும் போல வலித்தது.

ஏற்கெனவே அனிச்சை செயல்களில் மெதுவாக இருந்த எனக்கு இதெல்லாம் இன்னும் அதிகக் கலக்கம் கொடுத்தது. இந்தக் குறும்புக்கார மகளின் தாக்குதல்களில் இருந்து அடிபடாமல் தப்பிக்க நான் ஏதாவது தற்காப்புக் கலையில் சேர வேண்டும் என்று தோன்றியது.

எப்போதும் மகளுக்கு மன நலத்திற்கு ஒன்று, உடல் நலத்திற்கு ஒன்று என அப்படித்தான் திட்டமிட்டிருந்தேன். ஆடல் கலை பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு வெகு இயல்பாகத் தொடுகை அத்துமீறல்கள் இருந்தன. தொடுகை பற்றிய அறிதல் இல்லாமல், அத்துமீறலை இயல்பான தொடுதலாகப் பழகிக்கொள்வது வருத்தமளித்தது. எனவே, தற்காப்புக் கலைக்கு அனுப்பலாம் எனத் தேடியபோது, மனதிற்கிசைவாகக் கிடைத்த, BTF (Born To Fight – a place of positive vibration) இஷ்ன்ர்யு கராத்தே வகுப்பில் சேர்த்தேன். வாரத்திற்கு இரண்டு வகுப்புகள். இரு வாரங்கள் வகுப்பு தொடங்கி முடியும்வரை உடன் இருந்தேன். கண்ணாடிக் கதவு வழியாகப் பிள்ளைகள் செய்யும் உடற்பயிற்சிகளை, காத்திருக்கும் இடத்திலிருந்து பார்க்க முடியும்.

பொதுவாகச் சின்ன வயதில் குழந்தைகள் எல்லாருக்கும் டிரைவர் ஆக வேண்டும் அல்லது போலீஸ் ஆக வேண்டும் என்பதான விருப்பங்கள் இருக்கும். அப்படி எனக்கும் இருந்தது. பிறகு ராணுவத்தில் சேர வேண்டும் என்பதான ஆசை வந்தது. எல்லாம் ஆசை என்ற அளவிலேயே இருந்தது. வாழ்வின் போக்கு வேறாக இருந்தது. இப்போது என் வாழ்வின் சுக துக்கங்களுக்கு நானே பொறுப்பாக இருக்கும்போது, ஏன் கராத்தே கற்றுக்கொள்ளக் கூடாது என்று தோன்றிற்று.

மாஸ்டரிடம் கேட்டேன். ‘ஓ கத்துக்கலாம் மேடம்’ என்றார். ஆனால், கராத்தே கற்றுக்கொள்ளும்போது கராத்தே உடைதான் அணிய வேண்டும் என்றார். எனக்கு அந்த உடையை அணிவதில் மனத் தயக்கம் இருந்தது; பயிற்சிகளில் ‘ஃப்ராக் ஜம்ப்’ செய்யக் கூச்சமாக இருந்தது; கண்ணாடி கதவு வழியாக வேறு யாரும் பார்ப்பார்களே என்கிற வெட்கம் பயங்கரமாக இருந்தது.

கராத்தே என்றால் ‘வெறும் கை’ என்று பொருள். தாக்க வருபவர்களை வெறும் கையால் தடுப்பது; தற்காப்பிற்காகத் தாக்குவது. உடலே ஆயுதம். உடலைக் கூர் தீட்டுதல்.

கராத்தேயின்போது அணியும் உடை, முன்னோர்களை வணங்கிக் கற்றலை ஆரம்பிப்பது எனப் பாரம்பரிய புனிதத்தைக் கராத்தேயில் கடைப்பிடித்தே ஆக வேண்டும் என்பதைப் போகப் போகப் புரிந்துகொண்டேன். கற்க கற்கத்தான் கராத்தே என்பது உடலைப் பலப்படுத்துதல் மட்டுமல்ல, உடல் வழியாக மனதைப் பண்படுத்துவது என்பதை உணர்ந்தேன்.

எல்லாரும் நினைப்பதுபோல, கராத்தே என்பது ‘தற்காப்புக் கலை’ மட்டுமல்ல; அது ஒருவகை தியானம். கண்களைத் திறந்துகொண்டே செய்கிற தியானம்தான் கராத்தே.

சில விஷயங்கள் அது சரியோ தவறோ நம் மனதில் நாமறியாமல் பதிந்து போய்விடும். கராத்தே என்றவுடன் செங்கல் உடைப்பதும், பல்லால் லாரியைக் கயிறு கட்டி இழுப்பதும்தான் நினைவுக்கு வரும். கராத்தே கற்றுக்கொள்வதால், மென்மைத் தன்மை போய்விடுமோ என்கிற கற்பிதம் இருக்கிறது. உண்மையில், நாம் என்னவாக இருக்கிறோமோ, அதை அப்படியே கராத்தே இன்னும் நுணுக்கமாகக் கூர்மைப் படுத்தித் தரும். வெண்டைக்காய் செடியை இன்னும் கவனமாக பார்த்துக்கொள்வதால், அது புடலங்காய் கொடியாக மாறிவிட முடியாது. அப்படித்தான் கராத்தே கற்றுக்கொள்வதால், நாம் நமது தன்மையில் இன்னும் ஃபிட் ஆவோமே தவிர, முரட்டுத்தனமாக ஆகிவிட மாட்டோம். சொல்லப்போனால், நமது முரட்டுத்தனங்கள் எல்லாம் கராத்தேயில் ‘முறை’ படுத்தப்பட்டுவிடும்.

டைல்ஸ் உடைப்பது, கை மேல் லாரி ஏற்றுவது அதெல்லாமே ஒரு குறியீடு. நாமறியாமலேயே, நமக்குள்ளேயே நம்மைப் பற்றி இருக்கிற ஆயிரம் மனத்தடைகளை உடைத்து, நம்மை நமக்கே வெளித்தெரிய வைப்பதைத்தான் கராத்தே செய்கிறது. உடம்பு என்கிற கருவி வழியாக, நமது மனதைப் பலப்படுத்துகிறது.

வாரத்திற்கு இரு தினங்கள் வகுப்பு; மாதத்திற்கு எட்டு நாட்கள். விரும்பினால் எத்தனை வகுப்புகள் வேண்டுமானாலும் வரலாம்; மழை, புயல், ஏன் உலகமே இடிந்து விழுந்தாலும் வகுப்பு நடக்கும். மாஸ்டருக்கு கராத்தே மீதிருந்து தீவிரத்தை இவை காட்டின.

அப்போதெல்லாம் சனிக்கிழமை மதியம் எங்களுக்கு அலுவலகம் விடுமுறை என்பதால், நான் முதலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு மதிய வகுப்பில் சேர்ந்தேன். இருக்கும் ஓர் ஓய்வு நாளையும் பணயம் வைப்பதாக இது இருந்தது. வேலைக்குச் செல்பவர்களுக்குத் தெரியும். அந்த ஒரு நாளில்தான், வார நாட்களில் விட்டுப்போன வீட்டு வேலைகள் மொத்தமும் செய்ய இருக்கும். கையால் துவைக்க வேண்டிய துணிகள், இட்லி மாவரைத்து வைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்ரூம் கழுவுவது, சோஃபாவில் குவிந்திருக்கும் துணிமணிகளை மடிப்பது, வரும் வாரத்திற்கான துணிகளை அயர்ன் செய்து வைப்பது இப்படி…

எனக்கு அப்போது 24/7 வேலை என்பதால், இதற்கும் பெரும் இடையூறு வந்தது. சனிக்கிழமை மதிய வகுப்பில் நுழைந்ததும், சரியாக அலுவலகத்தில் கூப்பிடுவார்கள். போய்விடுவேன். பார்த்தேன். இது வேலைக்காகாது என்று மாஸ்டரிடம் பேசி, காலை வகுப்பில் சேர்ந்தேன். ரித்திகாவை பள்ளியில் விட்டவுடன் 8 – 9 மணி வகுப்பு. முடிந்ததும் அலுவலகத்திற்குத் தயாராக வேண்டும். கொஞ்சம் ஓட்டம்தான். அந்த இரு தினங்களிலும் எளிதாகச் சமைக்கக் கூடிய உணவு வகையைத் தேர்ந்தெடுத்தேன். அல்லது உடனடி உணவு. மூன்றரை வருடங்களாக கராத்தே வகுப்பிற்குச் சென்றது இப்படித்தான்.

ஒரு விஷயத்தைச் செய்ய முடிவெடுத்து, தொடர்ந்து இடைவிடாமல் செய்வது என்பது அத்தனை சுலபமல்ல; எத்தனையோ இடையூறுகள்; விசுவாமித்திரரின் தவம் கலைக்க வரும் அத்தனை மேனகைகள்; நமக்குள்ளேயே இருக்கும் வளையாத்தனங்கள்; சோம்பேறித்தனங்கள்; சிறிய தயக்கங்கள்; எதைச் செய்ய நினைக்கிறோமோ, அதைவிட முக்கியமாய்த் தெரியும் மற்ற காரியங்கள்; தவிர்க்க வேண்டி வரும் தவிர்க்கவியலா செயல்கள்; எத்தனை நண்பர்களைச் சந்திக்க தட்டிப் போனது, எத்தனை முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் செல்ல முடியாமல் போவது, வேறெதுவுமற்று நாம் அதுவாகவே மாற, மற்ற அத்தனையையும் இழந்து நிற்பது.

வகுப்பு போகத் தொடங்குவதற்கு முன்பும் என்னால் முடியுமா, செய்வேனா, என்னென்ன நடைமுறைச் சிக்கல்கள் வரும்; எப்படி எதிர்கொள்வது என ஆயிரத்தெட்டு யோசனைகள் வந்தன.

உண்மையில் கராத்தே உடை அணிவது குறித்த எனது எண்ணங்களே எனக்குத் தடை. இதை உணர்ந்து கொண்டால், எதிலிருந்தும் வெளிவருவது எளிது. வந்தேன். ஃப்ராக் ஜம்ப் வாரமிருமுறை வகுப்பில் பயிற்சியின்போது செய்ய, தினமும் வீட்டிலும் பயிற்சி செய்தேன். செய்ய வேண்டும் என நாம் முடிவெடுத்துவிட்டால் போதும்; எப்படியும் செய்துவிடுவோம்.

கராத்தே வகுப்பில் சேர்ந்த இரண்டாவது வாரம். மூன்றாவது வகுப்பு – முதலிரண்டிலும் ‘பஞ்ச் பேக்கில்’ குத்துப் பயிற்சி செய்தது போல, இப்போது எப்படி ‘கிக்’ பண்ணுவது என மாஸ்டர் சொல்லிக் கொடுத்தார். இடுப்பு உயரம் காலைத் தூக்கி நிதானித்து, பஞ்ச் பேகில் ஓங்கி உதைக்க வேண்டும். இரண்டு மூன்று நான்காவது கிக்’கின்போது ஆர்வக் கோளாறில், இன்னொரு காலை சரியாக ஊன்றாமல், மற்றொரு காலால் கிக் செய்த வேகத்தில், சரேலென வழுக்கி, பறந்து அப்படியே மல்லாக்க விழுந்தேன். ஒரு நிமிடம் என்ன நடந்ததென்று புரியவில்லை. அப்படியே கிடந்தேன். பிறகு எழுந்து அமர்ந்து கையைக் காலை உதறி ஒன்றுமில்லை என்று உணர்ந்த பிறகு வீட்டிற்குக் கிளம்பிப் போய்விட்டேன். அன்றைய வகுப்பு அவ்வளவுதான்.

மாஸ்டர் இன்றைக்கும் சொல்வார், ‘நான் ஒரு நிமிஷம் பதறிப் போயிட்டேன் மேடம். அன்னிக்கு மட்டும் விழுந்ததும் நீங்க போய்ட்டு, மறுபடி அடுத்த க்ளாஸ் வரவில்லை என்றால், நான் பெண்களுக்குக் கற்றுத் தர வேண்டும் என்பதைத் தொடர்ந்திருக்க மாட்டேன்; ஏன்னா பெண்கள் பொதுவா இப்படி வகுப்புகளுக்கு வர மாட்டாங்க; வந்தாலும், எதாவது ஒன்னுனா வகுப்பிற்கு வருவதையே நிறுத்திடுவாங்க’ என்று.

எங்கள் கராத்தே வகுப்பில் எனக்கப்புறம் சேர்ந்த எவ்வளவோ பெண்களிடம் நான் ‘console & convince’ பண்ணுவேன். பிள்ளைகள் படிப்பு, கணவர் வேலை, வீட்டை விட்டு வாரத்தில் இரண்டு நாட்கள்கூடத் தனக்கென ஒதுக்க முடியாத குடும்பப் பிண்ணனி என ஆயிரம் ஆயிரம் காரணங்கள் தமக்கு விருப்பமான கராத்தேயைக் கற்றுக்கொள்ளாததற்கு ஒவ்வொருவருக்கும் இருக்கும்; ஆனால், ஒரே ஒரு காரணம்தான் கற்றுக்கொள்வதற்கு – என்ன ஆனாலும் எதனாலும் தடை படாமல் கற்றுத் தேர்வேன் என்கின்ற மன உறுதிதான் அது.

ஆனால், நாட்கள் செல்லச் செல்ல நான் இன்னொன்றையும் உணர்ந்தேன். வளர்ந்த பெண்கள் திருமணமான பெண்கள் மட்டுமல்ல, வேலைக்குச் செல்லும், கல்லூரிக்குச் செல்லும் ஆண்களிடமும் இதே விதத் தயக்கம், கூச்சம், பயம் உள்ளது என்பதை. ஆம்; அவர்களோடும் அதைப் பற்றி நான் பேச ஆரம்பித்தேன்.

கூச்சம், தயக்கம், பயம் என்கிற உணர்வுகள் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது; இல்லாவிடில் இத்தனை சுதந்திரம் உள்ளதாக நம்பப்படுகிற ஆண்கள் இந்நேரம் எவ்வளவோ சாதித்திருக்க முடியும்தானே? அந்தத் தயக்கத்தை உடைத்து நம்மிடம் பேசும் நம்பகத் தன்மை வரவும், நம்மை அதைப் பற்றி எல்லாம் உரையாட அனுமதிப்பதுமே பெரும் சவாலாக இருந்தது. கடல் அலைகள் போலத்தான்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே உள்ள அலைகளைத் தாண்டிவிட்டால், இருவருமே கடல்தான். ஒத்த உயிரினம்தான்.

முதலில் பெண்கள் மட்டுமே உள்ள வகுப்பு என்பது மாறி, வளர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருக்கிற வகுப்பாக எங்கள் வகுப்பு ஆனது. மிக அற்புதமான நண்பர்கள் கிடைத்தார்கள். மாசூமி என்கிற அஸ்ஸாமி பெண் அதில் ஒருவர். என்னைவிட வயதில் மூத்தவர். வயலின் வாசிப்பார். கவிதைகள் எழுதுவார். பரிச்சயமான ஆரம்ப காலத்தில், அவரது அஸ்ஸாமி கவிதையை எனக்கும் என்னுடையதை அவருக்கும் கொஞ்சம் இந்தி, கொஞ்சம் உடைந்த ஆங்கிலம் மற்றும் சைகைகள் வழியாக உணர்த்தியது அழகான தருணம்.

பரத நாட்டியத்திற்கும் கராத்தேவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. நாங்கள் கீபதாஜி என்று சொல்வோம்; அவர்கள் அரைமண்டி என்பார்கள். அவர்களின் கை வீச்சு, கால் வீச்சு, கராத்தேவின் அதே உறுதியைப் போன்றேதான் இருக்கும். பரத நாட்டியம், வயலின், கராத்தே மூன்றையும் கலந்து ஒரு ‘பெர்ஃபார்மன்ஸ்’ செய்ய வேண்டும் என எனக்கும் மாசூமிக்கும் ஒரு கனவு இருந்தது.

ஒருமுறை, காலேஜ் பையன், ஆள் போன்ற தோற்றத்தில் இருந்ததால், அவர் குடும்பம் அவருக்கு எத்தனை பிள்ளைகள் என்றெல்லாம் கேட்டு, கடைசியில் அவர் காலேஜ் படிக்கிற பையன் என்றறிந்து, நானும் மாசூமியும் ‘பல்பு’ வாங்கினோம். பிறகு ஒரு குஜராத்திக்காரர் சிறு பையன் போன்ற தோற்றம். முந்தைய அனுபவம் காரணமாக, ரொம்ப முன் ஜாக்கிரதையாக, எந்த காலேஜ் படிக்கிறார் என்று கேட்டால், அவரோ திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை என்றார். மறுபடியும் ‘பல்பு’.

மாசூமியின் அபார்ட்மெண்ட்டில் கராத்தே டெமோ வைத்தோம்; அதற்காக கதை அல்லது காட்சி யோசிப்பது சுவாரசியமாக இருக்கும். பேருந்தில் ஒரு பெண் பயணிக்கிறாள்; ஒருவன் இடிக்கிறான்; இவள் அடித்துத் துவைப்பது. பேருந்து நிலையத்தில் ஒரு பெண் காத்திருக்கிறாள்; ரவுடி வம்பு பண்ணுகிறார்கள் அல்லது பர்சை பிடுங்கிக்கொண்டு ஓடுகிறார்கள். இப்படி.

சிறிய கைப்பை போன்ற எனது பர்ஸே என் வீட்டுச் சாவி, எங்களது கேட் சாவி, அலுவலக சாவி எனக் குண்டாகவும் கனமாகவும் இருக்கும். மாசூமி, ‘பர்சைப் பிடுங்கும் பசங்களிடம் நாம் சண்டையே போட வேண்டாம் மாஸ்டர்; பிருந்தாவின் கைப்பையால் ஓங்கி அடித்தாலே போதும் செத்துவிடுவான்’ என்பார்.

எங்களது அலுவலகத்தில், கல்லூரியில் டெமோ வைத்தோம். அதில் மாசூமி நெருப்பு மூட்டிய டைல்ஸை உடைத்தார். நான் தலையால் 6 டைல்ஸை உடைத்தேன்.

குழந்தைகளுக்கான கராத்தே வகுப்பில் கராத்தே தவிரவும் சுவாரசியமான பயிற்சிகள் இருக்கும். கரெண்ட் கட் ஆகிவிட்டால், வகுப்பு தடை படாது; கண்ணைக் கட்டிவிட்டு நேராக நடந்து எதிரில் இருப்பவரிடம் பொம்மையைத் தருவது போன்ற பயிற்சிகள் அதற்கு இவ்வளவு மதிப்பெண், இத்தனை மதிப்பெண் பெற்றால், ஒரு பேட்ஜ் அல்லது ஏதாவது பரிசு என்று இருக்கும்.

எங்களுக்கும் இதுபோன்ற போட்டிகள், பரிசுகள் கிடையாதா என்று நானும் மாசூமியும் கேட்போம். எங்கள் மாஸ்டர் நுன்சாக்கு சுற்ற ஆரம்பித்தால், புரூஸ்லி போல சுழற்றுவார். மூன்று கம்பியுள்ள நுன்சாக்குவே எளிதாகச் சுழற்றுவார். எங்கள் அனத்தல் தாங்காமல் ஒரேயொரு முறை போட்டி வைத்தார். அவரது போன் ஸ்டூல் மேல். அவர் நுன்சாக்கு சுழற்ற அடி படாமல் சென்று போனை எடுக்க வேண்டும். எடுத்தால், போன் (ரூபாய் நாற்பதாயிரம்) அவர்களுக்கே தருவதாகச் சொன்னார். எல்லாரும் தோற்க, நான் போனை எடுத்து வெற்றி பெற்றேன். ஆனால், போனைத் தரவில்லை என்பது வேறு விஷயம்.

வகுப்பில் பயிற்சியின்போது ‘குமிதே’யில் எதிராளியிடம் நான் பொத்து பொத்தென்று அடி வாங்குவேன். என்னை அடிக்கச் செய்ய மாஸ்டர் கடும் பிரயத்தினம் செய்ய வேண்டியிருந்தது.

கராத்தேயில் ஸ்ட்ரெச் எக்ஸர்ஸைஸ் தவிர ‘கட்டா’ என்கிற வகைமைதான் முக்கியமானது. அதுதான் கண்களைத் திறந்து கொண்டே செய்கிற தியானம்; இன்னொரு விதமாகச் சொன்னால், நகர்ந்துகொண்டே செய்கிற தியானம்.

டோஜோவில் (கராத்தே செய்யும் இடம்) ஒரு சுவர் முழுக்க கண்ணாடிதான். நாம் உள்ளே நுழைந்து நமது முழு உருவத்தையும் பார்ப்பதே நமக்கு நேர்மறை உணர்வைத் தரும். அந்த உணர்வு நமது ஆளுமையில் அப்படியே வெளிப்படும். எங்கள் பதின் பருவத்தில், வீடுகளில் நம் உயரத்திற்கு எக்கி நெற்றியை மட்டும் பார்த்து, பொட்டு வைக்கத்தான் சிறிய கண்ணாடிகள் இருக்கும். அதில் ஒரு நொடி அதிகமாகப் பார்த்துவிட்டால்கூட, வயசுப்பிள்ளை என்ன அடிக்கடி கண்ணாடி பார்க்கிற என்று அதட்டுவார்கள். உண்மையில் நமது ஆளுமையில் கண்ணாடி பெரும்பங்கு வகிப்பதை மறுக்கவே முடியாது.

2013 மே மாதம் நான் ப்ளாக் பெல்ட் கேம்ப் போவதாக இருந்தது. மாஸ்டர் வெகு தீவிரமாக என்னைத் தயார் செய்தார். நான் எனது வகுப்புகள் தவிரவும் முடிந்தபோதெல்லாம் மிகுதி வகுப்புகளுக்கும் வந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகச் சென்றது. ஒரே பவர் எக்ஸெர்ஸைஸை 100 முறை செய்வது, ஒவ்வொரு கட்டாவையும் பலமுறை செய்வது, ஒரு கட்டா புலி வேஷம் கட்டியது போல இருக்கும் – அதன் குதித்துத் திரும்புதலை மட்டுமே ஒரு வகுப்பில் 100 முறை செய்வது, வராத கட்டாவே இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு கட்டாவையும் இன்னும் இன்னுமென தீர்க்கமாகச் செய்ய வைத்தார்.

கராத்தே மாஸ்டரிடம் ஒரு ராயல் என்ஃபீல்ட் பைக் இருந்தது. அதில் ஹெட்லைட் மேலுள்ள கண்ணாடியில் Do or Die Do என்று எழுதி இருக்கும். அதுதான் அப்படித்தான் எங்கள் மாஸ்டர்.

கராத்தேயில் கட்டா தவிரவும் முக்கியமாகச் செய்வது, அடி படாமல் தப்பிக்கும் மற்றும் அடியைத் திருப்பி அடித்தவர்களையே தாக்கும் விதவித டெக்னிக்குகள், நமது தலைமுடியைப் பிடித்தால் எப்படி விடுபட்டுத் தாக்குவது, கையை ஒரு கையால் பிடித்திருந்தால் எப்படி விடுவிப்பது, இரு கைகளால் பிடித்தால் எப்படி விடுவித்துக்கொள்வது போன்றவை இருக்கும்.

நான் இவற்றில் என்னைத் திறம்பட உணர்ந்ததும், சரி கராத்தே க்ளாஸ் தவிர யாரிடமாவது இதைப் பிரயோகித்துப் பார்ப்பது என விரும்பினேன். அப்போது பிரவுன் பெல்ட்டில் இருந்தேன்.

அலுவலகத்தில் எங்கள் உதவியாளர் சரவணன் என்ற உழைப்பால் உயர்ந்த உத்தமன். ஆறடி உயரம் ஆஜானுபாகுவான தோற்றம். அவனிடம் பேசி சம்மதம் வாங்கி, என் கேபின் கதவைச் சாத்தி, ‘என் கையைப் பிடி சரவணா’, ‘மேடம் ஏதாவது பிரச்னையாகிடப் போவுது’,

‘ஆவாதுப்பா. நானேதானே சொல்றேன்’, அவன் ‘மேடம் நான் கையை விடணும்கிறதுக்காக, என்னை வேற எங்கேயாவது உதைச்சிட மாட்டீங்களே’, ‘இல்லப்பா நீ கையைப் பிடி; இறுக்கமா பிடி; நான் லாக் ரிலீஸ் பண்ணிக் காட்றேன்’, அவன் கையைப் பிடித்தான். உடும்புப் பிடி. ம்ம்… என்னால் எவ்வளவு முயன்றும் முடியவேயில்லை. எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது. பிறகுதான் தெரிந்தது, அவன் ஆறேழு வயதிலிருந்து மண்வெட்டிப் பிடித்த கையாம். காட்டு வேலைகள் செய்து உரமேறிய கைகள். நான் பாத்திரம் கழுவியது தவிர, வேறு முரட்டு வேலைகள் செய்ததே கிடையாது. கடைக்குட்டி என்பதால், இன்னும் செல்லம் வேற.

‘ஹையோ, கத்துக்கிட்ட கராத்தே எல்லாம் வேஸ்ட்டா’ என என் மனம் புலம்பியது; இல்லை, பலம் பலத்தோடு மோதுவதல்ல. பலத்தை அதன் பலவீனத்தில் பிரயோகிப்பது என்பது பின்னாளில் புரிந்தது. மேலும் சொல்லி வைத்துக்கொண்டு தாக்குவதல்ல; எதிர்பாராதத் தாக்குதல் நடத்துவது என்றும் மனம் தெளிந்தது.

2012 நவம்பரில் என் மாமா (அக்காள் கணவர்) எதிர்பாராத விபத்தில் மறைந்து போனார். 2009இல் எனது ‘வீடு முழுக்க வானம்’ கவிதைத் தொகுப்பிற்குப் போல மாமா, அக்கா, பிள்ளைகள், அம்மா என மொத்த குடும்பத்தினரும் உடனிருக்க ‘ப்ளாக் பெல்ட்’ வாங்க வேண்டுமென்ற எனது கனவு பொய்த்துப் போனது. அதைத் தாங்க முடியாமல், 2013 மே மாதம் சென்றிருக்க வேண்டிய ப்ளாக் பெல்ட் காம்ப்பிற்கு ‘என்னால் முடியாது; டிசம்பரில் செய்கிறேன்’ என்று மாஸ்டரிடம் சொல்லிவிட்டேன்.

2013 ஆகஸ்டில் நானும் மகளும் ட்ரம்ஸ் க்ளாசிற்கு, டூவீலரில் போகும்போது ஒரு கறுப்பு நாய் குறுக்கே வர, நாய்க்கு விபத்து நேராமல் தடுக்க, இரண்டு பிரேக்கையும் இறுக்கிப் பிடித்ததில் வண்டி எகிற, நான் கீழே விழ, பின்னாலிருக்கிற மகளுக்கு எதுவும் நேர்ந்து விடவில்லையே என்று திரும்பிப் பார்த்த நொடிக்கும் குறைவான நேரத்தில், வண்டி என் காலின் மேலேயே விழ, மல்ட்டிபிள் ஃப்ராக்சர். மிக எதிர்பாராத விபத்து. விழுந்ததுமே ‘ஹையோ! மொதோ நாமளா தள்ளிப் போட்டோம்; இப்ப அதுவா தள்ளிப்போகுதே’ என்று ப்ளாக் பெல்ட் கனவு மின்னலடித்துப் போனது. எழுந்து நடப்பேனா என்பதே சந்தேகம். இதில் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கக்கூட முடியாது.

ஆனால், ஸ்டிக் வைத்து நடக்க ஆரம்பித்தவுடனேயே டாக்டரிடம் இது பற்றிக் கேட்டேன். ‘அது உங்க முயற்சியைப் பொறுத்தது’ என்று சொல்லிவிட்டார்.

வாழ்க்கையில் வேறெப்போதும் எனது கால்களை இத்தனை முறை பார்த்ததில்லை, இத்தனை காதலோடும் கவனத்தோடும் இருந்ததில்லை. உடம்பை அற்புதம் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றவில்லை; ஆனால், எத்தனை அத்தியாவசியம் என்று புரிந்தது. உடைந்ததும் ஒட்ட வைத்ததும் ஒட்டியதும் பேராச்சரியமாக இருந்தது.

ஒவ்வொருவர் வாழ்விலும் வாழ்க்கையே போய்விட்டது மாதிரி சில கடுமையான சூழ்நிலைகள் வரத்தான் வரும். அதற்கு யாரும் காரணமாக இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால், அதன் பாதிப்பு நம்மைத் தாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருந்து எவ்வளவு சீக்கிரம் மீண்டு வெளி வர முடியுமோ வந்தால்தான், மீதி நம்முடைய வாழ்க்கையை வாழ முடியும்.

பிளாக் பெல்ட் கேம்ப்:

அத்தனை ஆண்கள் பெண்களில் நானும் மாசூமியும். ஆண்களில் இருவர் மட்டும்தான் வொய்ட் பெல்ட்டிலிருந்து ப்ளாக் பெல்ட் வரை தொடர்ந்து வந்திருந்தோம். மாசூமியின் இரு பதின் பருவ மகன்களோடு ப்ளாக் பெல்ட் கேம்ப் அட்டகாசமாக இருந்தது.

வெவ்வேறு வகுப்புகளிலிருந்தும் எல்லா வயதுப் பிள்ளைகளும் எங்களோடு ப்ளாக் பெல்ட் கேம்பில் இருந்தார்கள். மொத்தம் இருபத்தைந்து பேர். 18 நாட்கள் தேர்வு. முதல் பதினைந்து நாட்கள் இத்தனை மாதங்கள் வருடங்கள் நாங்கள் கற்றுத் தேர்ந்து வந்திருந்த அனைத்து நிற பெல்ட்டின் சிலபஸையும் அதிகாலை 5 மணி தொடங்கி, மாலை மூன்று வரை செய்ய வேண்டும். கடைசி மூன்று நாட்கள் ப்ளாக் பெல்ட்டிற்கான தேர்வு.

பொதுவாக, நான் எப்போதும் வகுப்பில் மாஸ்டரிடம் முழு சரணாகதிதான். அவர் துரோணர் என்றால் நான் அர்ச்சுனர். கிணற்றில் குதி என்றாலும் கேள்வியே இல்லாமல் குதிப்பேன். ஆனால், ஏனோ எதனாலோ பிளாக் பெல்ட் தொடங்கி ஓரிரு நாட்களில் ஒருமுறை குமிதேயில் நான் கலந்துகொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தேன். ‘மேடம், ஒருநாள் குமிதே’ செய்யவில்லை என்றாலும் நீங்கள் ஃபெயில்தான்’ என்றார் மாஸ்டர். ஏனோ நான் பிடிவாதம் செய்தேன்.

அன்று பொழுதே எனக்கு ஏதோ போல விடிந்திருந்தது. காலை எனது விபத்தான கால் என்பதறியாமல், ஒரு வாலண்டியர் என் காலில் கம்பால் ஓங்கி அடித்திருந்தார். சிறு பையன்தான் அவர். அவரிடம் விளக்கிச் சொன்னேன். இன்னொரு குட்டிப் பெண் ஃப்ராக் ஜம்ப் பண்ணும்போது, அவளது ஆஸ்துமா தூக்கி விட்டுவிட்டது. மூச்சிழைக்க ஆரம்பித்தாள். உடனடியாக ஃபர்ஸ்ட் எய்ட் செய்தோம். அவளோடு பேசிப் பேசி மதியம் சரியாகிவிட்டாள். இதனாலெல்லாமோ என்னவோ நான் குமிதே செய்ய மாட்டேன் என்று மறுத்தேன்.

உண்மையில் ப்ளாக் பெல்ட் கேம்ப்பின் போது யாருக்கும் யாரிடமும் பேசிக் கொண்டிருக்க நேரமே இருக்காது. அடுத்தடுத்து என்று ஓடிக்கொண்டே இருப்போம். என்னோடு வாதம் புரிய விரும்பாமல் மாஸ்டர், அடுத்த ஜோடியை குமிதேவுக்கு அழைக்க, அவர்கள் குமிதே செய்யும்போது காலுயர்த்தித் தடுத்த 30 வயதுள்ளவருக்கு கட்டை விரல் முறிந்து போனது. உடனடியாக அவரைக் கூட்டிக்கொண்டு மாஸ்டர் ஆஸ்பத்திரிக்குப் போக, மற்றவர்கள் கேம்ப்பில் பயிற்சியைத் தொடர்ந்தோம்.

என்னவோ எனக்கு அந்த விபத்து எனக்கு நடந்திருக்க வேண்டியதோ என்று தோன்றியது. ஏனென்றால், எனக்குக் காலொடிவதற்கு முந்தைய வாரம் இது போன்ற சில நிகழ்வுகள் நடந்தன; ரித்திகா தனது பள்ளியில் ஸ்கேட்டிங் வகுப்பில் சேர்ந்திருந்தார். வாரம் ஒரு முறை தனிப்பட்ட முறையிலும் ஸ்கேட்டிங் க்ளாஸ் சேர்ந்திருந்தார். கராத்தே போலவே நானும் அவரும் சேர்ந்து ஸ்கேட்டிங் க்ளாஸ் செல்வதென முடிவெடுத்திருந்தோம். முதல் நாள் நான் ஸ்கேட்டிங் போகையில், வாறியடித்து விழ, இடுப்பிலும் பின்னந் தலையிலும் சரியான அடி.

அதற்கடுத்த வாரம், கராத்தே வகுப்பில் நான் தலைகீழாக (சிரசாசனம்) நிற்க விரும்பி, கராத்தே உதவியாளரிடம் உதவி கேட்க, அவர் ‘அவரைப் போல் நான்’ என்று நினைத்துக் கொண்டு, என்னைத் தலைகீழாக நிறுத்திய வேகத்தில் விட்டுவிட்டுப் போக, என் கால்கள் கீழ் நோக்கிச் சரிய, கழுத்து முறிவது போலாக, நான் கிக்கி முக்கி எனக் கத்த, மாசூமி ஓடிவந்து காலை நிறுத்திக் காப்பாற்றினார். அதற்கும் மறுவாரம்தான் டூவீலர் விபத்து நிகழ்ந்தே விட்டது.

மறுபடி எல்லாவற்றையும் முதலிலிருந்து தொடங்கினேன். வைஜயந்தி ஐபிஎஸ் படத்தை rewind பண்ணிக்கொள்ளவும். ஒருவர் தன் வாழ்க்கையில் சம்பாதித்த பணம் மொத்தத்தையும் முற்று முழுதாகப் பறிகொடுத்து, முதலிலிருந்து ஜீரோவிலிருந்து ஆரம்பிப்பதற்கு நிகரானது அது. அவுட் இன், இன் அவுட் செய்வது, கிக்கை அதிக உயரமாக்க இப்போதும் ஒரு காலில் கிக்கின் உயரம் குறைவாகத்தான் செய்ய முடியும். என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்தேன். தினமும் இவ்வளவு நேரம் என்று நடப்பேன்.

அந்த நிலையில், எனது கராத்தே குரு சென்சய் அய்யப்பன் மணி கொடுத்த மன தைரியம் அளப்பரியது. அவர் அழகாக வேலை வாங்குவார். ‘இதெல்லாம் ஒன்னுமேயில்ல. வாங்க மேடம் பாத்துக்கலாம்’ னு சொல்லிவிட்டு, நாம் நம்மைப் பற்றி குறைத்து மதிப்பிட்டதையெல்லாம் தகர்த்தெறிந்து, நம்மையே நமக்குக் காண்பிப்பார். அவர்தான் ஐந்தைந்து நிமிடங்களாகத் தினமும் நடையை அதிகரிக்கச் சொன்னார். பிறகு ஒரு நிமிடம் ஜாகிங் என்று செய்து பார்க்கச் சொன்னார். என்னால் இப்போதும் குதிக்க முடியாது. பவர் எக்ஸர்ஸைஸில் ஜம்ப்பிங் பதிலாக அல்டர்னேடிவ் செய்து கொள்ளலாம் என்றார். கவனிக்க: நோ காம்ப்ரமைஸ், ஒன்லி அல்டர்னேடிவ். அவ்வளவு அருமையான குரு அவர்.

என் வீடிருப்பது மூன்றாவது மாடி. No lift. அடையாறு டோஜோ (கராத்தே செய்யும் இடம்) இருப்பது நாலாவது மாடி. No lift. தினமும் 8 மணி நேரமும் தொடர்ந்த உடலுழைப்பு. எந்தச் சிறப்பு சலுகையும் எதற்கும் கிடையாது; மிகச் சில தவிர்க்கவே முடியாதவை தவிர்த்து.

எல்லாரும் கும்பலோடு கும்பலாக பவர் எக்ஸெர்ஸைஸ் செய்தால், மாஸ்டர் என்னை மட்டும் தனியாக எல்லாருக்கும் எதிரில் நிற்க வைத்து செய்யச் சொன்னார். மற்றவர்கள் நான்கைந்து எண்ணிக்கையை ஸ்கிப் பண்ணிவிட முடியும். இப்படி எல்லார் முன்னாலும் தனியாகச் செய்யும்போது அந்த வாய்ப்பும் பறிபோனது. நான் பயிற்சி செய்யும்போது 100 கவுண்ட் என்றால், 100 கவுண்ட் செய்திருப்பேன். மாஸ்டர் செல்லுமிடமெல்லாம் அவரைப் பார்த்து முறைத்துக் கொண்டே செய்வேன்.

பிறகு வெகு தினங்கள் கழித்து, அவரிடம் ராயல் என்ஃபீல்ட் கற்றுக்கொள்ளும்போது, எனது ப்ளாக் பெல்ட் கேம்ப் பற்றிய பேச்சின்போது சொன்னார், ‘உங்க குணத்திற்கு, ப்ளாக் பெல்ட் கேம்ப்பிற்குத் தகுதியாக முழுமையாக நீங்க எல்லாவற்றையுமே செய்தால்தான், முழு மகிழ்வுடன் இருப்பீங்க’ என்று. இப்படி ஒவ்வொரு கராத்தே ஸ்டூடெண்டையுமே அவரவர் தனித்தன்மைகளுடன் அவர் அறிந்து வைத்திருந்தார்.

கடைசி மூன்று நாட்கள் ப்ளாக் பெல்ட்டிற்கான தேர்வில், 21 கி.மீ. மெல்லோட்டமும் உண்டு. அதிகாலை 2 மணிக்கு லேண்டன்ஸ் ரோடு டோஜோவில் இருந்து கொடியசைத்து ஓடத்தொடங்கி, அடையாறு டோஜோ சென்று முடிக்க வேண்டும். எனது டிரைவரிடம் இந்தப் பதினெட்டு நாட்களில், இந்த மூன்று நாட்கள் எவ்வளவு அதி முக்கியமானவை என்று படித்துப் படித்துச் சொல்லி, காலை 1.40தற்கு வரச் சொல்லியிருந்தேன். அவர் வரவில்லை. அவரது செல்போன், அவரது தங்கை, அவரது அம்மா, அப்பா எல்லாருடையதும் ஸ்விட்ச்டு ஆஃப். டிரைவர்கள் இப்படித்தான் கடைசி நேரத்தில் காலை வாறிய முந்தைய அனுபவங்கள் காரணமாக அவரது குடும்பத்தினர் மொத்த பேரின் செல்போன் நம்பரையும் வாங்கியிருந்தேன். ‘நாம அப்பாடக்கர் என்றால், அவர் நமக்கு மேல் அப்பாடக்கர்’. என்னத்தைச் சொல்ல!

கராத்தே மாஸ்டரிடம் ‘நான் நடந்தே வந்துவிடுகிறேன் மாஸ்டர். கொஞ்சம் எனக்காக வெய்ட் பண்ணுங்க’ என்று சொல்லிவிட்டு, பேயும் உறங்கும் நடு ஜாமத்தில், நடக்கத் தொடங்கினால் ஓர் இருபது இருபத்தேழு நாய்கள் எனக்கு அரையடித் தொலைவில் என்னைச் சுற்றிச் சூழ்ந்தன – நான் வேறு உஜாலா வெண்மையில் கராத்தே வெள்ளுடையில் அவை என்னைப் பார்த்து என்னவென்று நினைத்தனவோ –விடாமல் குரைக்கத் தொடங்கின. என்னால், என் காலிருக்கிற நிலையில் ஓடவும் முடியாது. எனது மெல்லோட்டமே ‘ததுங்கினதோம்’, இதில் இந்த நாய்களிடம் ஓடி கடிபட யாரால் முடியும்? நாய்கள் துரத்தினால் ஓடக் கூடாது என்கிற சைக்காலஜி தெரியும். ஆனால், அதைக் கடைப்பிடிப்பது கடுங்கடினம். ஒரு நிமிடம் மூச்சை இழுத்துவிட்டு, அங்கு நாய்களே இல்லை என்றால் எவ்வாறு நடப்பேனோ அது போல நினைத்துக்கொண்டு நடந்து, அவை கத்தும் எல்லை வரை கடந்து சும்மா சொல்லக் கூடாது நாய்கள் போல, ஜென்டில் அனிமல்ஸ் வேறு இல்லை – அவற்றின் எல்லை முடிந்தவுடன் அவை கத்துவதை நிறுத்திவிட்டுப் போய்விடும். ஆனால், கிளைச் சாலை முழுவதும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் நடந்தேன். முக்கியச் சாலை வந்து, அவை திரும்பிப் போனதும்தான் உயிர் திரும்ப வந்தது.

விபத்திற்குப் பிறகு நான் கராத்தே சென்றது என்பது, மற்றவர்களைவிட நான் எடுப்பது 5 மடங்கு ரிஸ்க். சாதாரணமாக ஒரு விபத்து நடந்தாலே நம்மை என்னவோ வேண்டும் என்றே திமிரெடுத்து விழுந்த மாதிரி பேசுவார்கள். ‘பாத்து போயிருக்கலாம்ல’ என்பார்கள். ‘செல்போன் பேசிட்டே போனீங்களோ’ என்பார்கள். ‘இப்ப உங்க வயசுக்கு இந்த க்ளாஸ்லாம் அவசியமா’ என்பார்கள். ‘இதுக்குதான் பெண்கள் வீட்டை விட்டே போக வேணாம்; சம்பாரிக்கிறது அவ்ளோ அவசியமா’ என்பார்கள். ஆனால், பேசும் யாரும் நம் வேதனையின் ஒரு நொடியைக்கூட வாங்கிக்கொள்ளப் போவதில்லை. இப்போது இதில் தவறாக எதுவும் ஆகி மறுபடி விபத்தானது என்றால், சொல்லவே வேண்டியதில்லை.

ஆனால், நமக்கென்ன வேண்டும்; நாம் யார்; நாம் எதைச் செய்ய வேண்டும், இதையெல்லாம் நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நாம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிற்கும் நாம் மட்டுமே பொறுப்பு.

இத்தனை பெரிய விபத்திற்குப் பிறகு, தெரியாமல் காலில் லேசாக இடித்துக்கொண்டாலே கொடுக்கப் போகும் விலை கற்பனைக்கு அப்பாற்பட்டது. எல்லாம் சரியாகவே நடக்க வேண்டும்; நடந்தாக வேண்டும்; நடக்கவில்லை என்றால் என்கிற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொரு நொடியும் பத்திருபது மடங்கு கவனத்துடன், மன அழுத்தத்துடன், கவலையுடன், அவற்றைவிட அதிகப்படியான மகிழ்வுடன் சென்றது.

நமக்கு வாழ்க்கையில் அம்மா, அப்பா, தம்பி, தங்கை, அண்ணன், அக்கா, நண்பன் என்று அநேக பொறுப்புகள் இருக்கும். அவையற்ற வெறும் உயிராக நமக்கே நமக்கெனச் சில கனவுகள் இருக்கும். அந்தக் கனவுகளை நிகழ்த்துவதில்தான் வாழ்வின் உயிர்ப்பே இருக்கிறது. அவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒவ்வொரு காலத்திலும் நிலையிலும் மாறலாம். புதிது புதிதாகத் தோன்றலாம். ஆனால், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நிலையிலும் தோன்றும் கனவுகளை ஒவ்வொன்றாக நிகழ்த்தத்தான் இந்த வாழ்க்கை.

கராத்தேவிற்குப் பிறகு நானும் மகளும் நீச்சல் கற்றுக் கொண்டோம். தண்ணீருக்குள் அவ்வளவு அலெர்ட்டாக இருந்தே ஆகவேண்டும், வேறு வழியே கிடையாது. கை, கால், மனம், புத்தி எல்லாம் ஒரே நேரத்தில் வேலை செய்தாக வேண்டும். அப்போதுதான் உயிரோடு இருக்க முடியும். மரணத்தின் நுனியில்தான் எப்பவும் வாழ்க்கை இருக்கிறது.

(விபாஸனா அடுத்த இதழில்)

படைப்பாளர்:

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். ஹெர்ஸ்டோரீஸில் இவர் எழுதிய ’கேளடா மானிடவா’ என்ற தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.