நாள் : அக்டோபர், 2022

இடம் : ஹோ சி மின் சிட்டியின் ஏதோ ஒரு தெரு

நேரம்: நள்ளிரவு 2 மணி

“காந்தி கண்ட கனவை நாம் வியட்நாமில் வந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் இல்லையா?” என ஒருநாள் இரவு 2 மணிக்கு நானும் சரிதாவும் சீரியஸாகச் சிரித்துப் பேசிக்கொண்டு அறைக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். ஆம், எந்த நேரத்திலும் எந்தப் பயமும் இல்லாமல் பெண்கள் மட்டுமாக காலாறச் சுற்றிக்கொண்டிருந்ததும் நன்றாகத்தான் இருந்தது.

ஊரெல்லாம் நிறைந்து கிடக்கும் ‘பேக் பேக்கர்ஸ் ஹாஸ்டல்’ (Back Packers) என்று அழைக்கப்படும் (ஹோட்டல்கள்) இடத்தில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். அறைகள் மிகச் சுத்தமாகவும் மெயின் ரோட்டுக்கு வெகு அருகிலும் இருந்தன. கீழ்த்தளத்தைக் கட்டிடத்தின் சொந்தக்காரக் குடும்பம் ஆக்கிரமித்திருந்தது. மிகப்பெரிய குடும்பத்திலிருந்த ஒரு பெண் (Binh – அமைதி என்று அர்த்தம்) நாங்கள் கேட்கும் போதெல்லாம் (நடுநிசியில்கூட) சிரித்துக்கொண்டே காபி போட்டுக் கொடுத்து, எங்களுக்கு ரொம்ப நெருக்கமாகிவிட்டார். 100 மீட்டர் தூரத்தில் சைவ, அசைவ மார்க்கெட். நேர் எதிரே சாலையைக் கடந்தால் பொதுப் பேருந்து நிலையம். வெளியே செல்வதற்கு டாக்சி, பேருந்து என அனைத்து வசதிகளும் அருகில் கிடைத்ததால் ஹோ சி மின்லிருந்த நாட்களில் போக்குவரத்துக்குப் பிரச்னை இல்லை. இரண்டு தெரு தள்ளிப்போனால் உலகப் புகழ்பெற்ற புய் வியன் வாக்கர்ஸ் ஸ்ட்ரீட். பிறகென்ன, இரவுப்பொழுது போதவில்லை எங்களுக்கு!

மிக அவசியமான உடைமைகளை மட்டும் ஒரு பையில் எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றுவதும் உலகம் முழுக்கப் பயணிப்பதும் இன்று சுற்றுலாவின் ஒரு முக்கிய வடிவமாக ‘பேக் பேக்கர் சுற்றுலாவாக’ பிரபலமாகியுள்ளது. அத்தகைய பேக் பேக்கர்களின் முக்கியத் தேர்வாக ஹோ சி மின் நகரம் இருக்கிறது. பத்து மாதம் சம்பாதிப்பதும் இரண்டு மாதங்கள் உலக நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதுமான மேலைநாட்டுப் பழக்கம்தான் எத்தனை ரசனையானது! ஒருமுறை பெல்ஜியத்திலிருந்து இந்தியா திரும்பும்போது ப்ளைட்மேட் தோழியாக மாறி இன்றும் தொடர்பிலிருக்கும் 32 வயது கிறிஸ்டா ஐந்து மாதம் வேலை, அந்த வருமானத்தைச் சேர்த்து ஒரு மாதம் வெளிநாடு, மீண்டும் ஐந்து மாத வேலை, ஒரு மாதம் ஊர்சுற்றல் என்று, தான் வாழும் வாழ்க்கைப் பற்றிக்கூறும்போது சற்று… இல்லையில்லை… நிறையவே பொறாமையாக இருந்தது. அது சரியான வாழ்க்கைமுறைதானா என்று தெரியவில்லை. ஆனால், கிறிஸ்டா மகிழ்ச்சியாக இருக்கிறார். நாமெல்லாம் என்றைக்கு அப்படி ஒரு வாழ்வு நோக்கி நகர?

கிறிஸ்டா போலவே பயணத்தின்மீது தீராக்காதல் கொண்டவர்கள்தாம் மனிதர்கள். அதனாலேயே போக்குவரத்து வசதிகள் ஏதுமற்ற காலங்களில்கூட, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தங்கள் உடைமைகளை முதுகில் சுமந்துகொண்டு நாடு நாடாகப் பயணித்திருக்கிறார்கள். அன்றைய காலக்கட்டங்களில் பெரும்பாலும் பொழுது போக்கிற்காக அல்லாமல், தேவைக்காக இடம்பெயர்ந்திருக்கிறார்கள். கி.மு. 3350 முதல் 3105க்கு இடையில் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படும் ஓட்சி பனிமனிதன் (Otzi the Iceman – 1991ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை மம்மி) விலங்குகளின் தோல்கள், ஒரு மரச்சட்டத்துடன் செய்யப்பட்ட முதுகுப்பையுடன் இத்தாலியில் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது. அவரே உலகின் முதல் பேக் பேக்கராக இருக்கக்கூடும். 7ஆம் நூற்றாண்டில் சீன பௌத்த துறவி யுவான்சுவாங் பல நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தை பேக் பேக்கரின் மிகச் சரியான பயண வடிவமாகக்கொள்ளலாம். போக்குவரத்து வசதிகள் மலிந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து நாடுகளிலிருந்துமே குழுவாகவும் தனியாகவும் முதுகில் ஒரு பையை மட்டும் மாட்டிக்கொண்டு ஹாயாகக் கிளம்பிவிடுகிறார்கள். ஆனால், பத்து நாள் பயணத்திற்குப் பாதி வீட்டைக் காலி செய்துகொண்டு வந்திருக்கும் எங்களை அவர்களுடன் ஒப்பிட்டதற்காக ஒரு நிமிடம் வெட்கப்பட்டேன்.

முதல் நாள் எந்த இலக்குமில்லாமல், நடந்தும் பஸ்ஸில் சுற்றியும் ஹோ சி மின் பற்றித் தெரிந்துகொள்வோம் என்பதுதான் எங்களது ஐடியாவாக இருந்தது. ஊர் சுற்றிப் பார்க்க எப்போதும் பேக்கேஜ்டு டூரில் சிக்குவதில்லை. நமது விருப்பப்படி, தேவையான இடங்களைப் பார்ப்பதுதான் வழக்கம். உள்ளூர் பயணத்திற்கு சைக்ளோஸ் என்கிற மூன்று சக்கர சைக்கிள்கள், கிராப் என்று அழைக்கப்படும் நம்ம ஊர் ஓலா, ஊபர் போல வாடகை டாக்ஸிகள், பொதுப் பேருந்துகள், வாடகை டூ வீலர் டேக்ஸிகள் என அனைத்தும் கிடைக்கின்றன.

தெருக்களை, சாலைகளை, புதுப்புது மனிதர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே நடக்கத் தொடங்கினோம். மிகுந்த நெரிசலான பகுதிகளில், தவறுதலாகச் சாலையைக் கடக்க நேர்ந்த பொழுது, ஊரு விட்டு ஊரு வந்து வியட்நாமிய மொழியில் ‘சாவு கிராக்கி’ என்று திட்டு வாங்கப் போகிறோமோ என ஒரு நொடி பயந்து நிமிர்ந்தால், வாகனத்தில் வருபவர்கள் சிரித்த முகத்துடன் நின்று வழிவிடுவது கண்டு ஜெர்க் ஆனோம். உயர்தர உணவகங்கள், நின்றுகொண்டே சாப்பிடும் ரோட்டுக் கடைகள், பரபரப்பான சின்னஞ்சிறு சந்துகள், புதுப்பாணியில் பொட்டிக்குகள், நெடிய வணிகக் கட்டிடங்கள், பேரம் பேசும் நடைபாதைக் கடைகள் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறது நகரம்.

மூன்று சக்கர சைக்கிளில் காய்கறிகளை நிரப்பி, கஷ்டப்பட்டு அழுத்திச் செல்லும் கூம்பு வடிவத் தொப்பியணிந்த பெண்களையும் ஒரு நீண்ட குச்சியில் இருபுறமும் தொங்கவிடப்பட்டுள்ள பெரிய பெரிய கூடைகளில் பூக்கள், பழங்கள் இன்னபிற பொருள்களை வைத்து விற்கும் பெண்களையும் அதிகமாகக் காண முடிந்தது. எல்லா நாடுகளையும் போலவே கம்யூனிச நாட்டிலும் பெண்கள்தாம் அதிகம் உழைக்கிறார்கள் எனத் தோன்றியது. வியட்நாமிய தேசிய உடையான ஆவோ தாய் (Ao dai) உடையில் அத்தனை அழகாக இருக்கிறார்கள். கூம்பு வடிவத் தொப்பி அதைவிட அழகாக இருக்கிறது. An, Be, Bich, Ca, Diep, Lan, Kim, Quy, Vinh, Xuan என மிக எளிமையாகவே பெண்களுக்கான பெயர்கள் இருக்கும் என்பதை Binh மூலம் தெரிந்துகொண்டேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் பணிவு, கட்டுப்பாடு, அடக்கம் என்பதை சொல்லிச் சொல்லியே வளர்க்கிறார்களாம். தற்பெருமை காட்டுவதோ, செல்வத்தைக் காட்டுவதோ தவறு என்பதை இளம் வயதிலேயே புரியவைத்துவிடுகிறார்கள். ஆண்களும் பெண்களும் கணவன் மனைவியாக இல்லாவிட்டால் கையைத் தொடக் கூடாது என்று அவர் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது. அதனால் பார்த்ததும் கட்டிப்பிடிக்கும் மேற்கத்திய வழக்கம் இங்கு இல்லை. முதியவர்களுக்கு மிகுந்த மரியாதை அளிக்கும் வலுவான குடும்ப அமைப்புகளிலேயே வாழ்கிறார்கள். கூட்டுக்குடும்ப அமைப்பு இன்னும் விடாப்பிடியாக இருக்கும் நாடுகளில் வியட்நாம் ஒன்று என நினைக்கிறேன். Binh அம்மா குடும்பத்தில் நான்கு தலைமுறை உறுப்பினர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வதாகச் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்தில் வாய் பிளந்தோம்.

ஷாப்பிங் செய்ய வேண்டுமானால் பேரம் பேசியே தீர வேண்டும். ஆனால், தெரியாத ஊரும் புரியாத பாஷையும் நமக்குப் புதிதல்ல என்றாலும் இங்கு மொழி மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. “ஆங்கிலம் கற்றுக்கொண்டால் உலகமெங்கும் சுற்றலாம்” எனச் சின்ன வயதில் அம்மா என்னைப் படிக்க வைப்பதற்காக ஏமாற்றிச் சொன்ன வார்த்தைகள் பொடிப்பொடியாக உதிர்ந்து போயின வியட்நாமிய மண்ணில். ரோட்டுக்கடை அண்ணாச்சியோ வானுசர நிற்கும் வணிக வளாக அண்ணாச்சியோ யாருக்கும் அடிப்படை ஆங்கிலம்கூடத் தெரியவில்லை. எங்கோ ஓரிருவர் பேசும் ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகள்தாம் காதில் தேன்மாரி பொழிந்தன. மற்ற நேரத்தில் ஆங்கிலத்தில் வாங்கிய டாக்டரேட்டைத் தூக்கிக் கடாசிவிட்டு, கூகுள் ட்ரான்ஸ்லேட்டரே கண் கண்ட தெய்வம் எனத் தேட வேண்டியதாயிற்று. அலுவலக மொழியாக வியட்நாமிஸ் இருந்தாலும், நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகிறதாம். தாய்மொழியில் மட்டுமே கல்வி அளிக்கப்படுவதால் ஆங்கிலத்தை யாரும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. கல்வியும் மருத்துவமும் இலவசம் என்பது கேட்கவே சந்தோஷமாக இருந்தது. இங்கு நம் உழைப்பு அத்தனையும் கல்விக்கும் மருத்துவத்துக்கும்தானே கொட்டியழ வேண்டியிருக்கிறது எனப் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

ஹோ சி மின் நகரம் வியட்நாமின் ஸ்பா சென்ட்ரல் எனச் சொல்லிவிடும் அளவிற்குத் தெருவெங்கும் ஸ்பாக்கள். நகரமெங்கும் ஸ்பாக்கள். விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மலிவாக இருந்ததால் தினம் தினம் ஸ்பா சென்டருக்குச் செல்வதை வழக்கமாக்கி அங்கும் ஒரு தங்கையை பழக்கமாக்கிக்கொண்டோம் செய்திகளைச் சேகரிப்பதற்காக.

Ho Chi Minh City SightSeeing Sygon என்று பெயரிடப்பட்ட சிவப்பு நிறத்தாலான அடுக்குமாடி பஸ்கள் (double decker) குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்க, அதில் 24 மணி நேரத்துக்கான டிக்கெட்டை எடுத்துக்கொண்டோம். (தமிழ் சினிமாக்களில் பார்க்கும் மேற்கூரையில்லாத அடுக்குமாடி கண்ணாடி பஸ்ஸில் பயணிக்க வேண்டுமென்ற என் நெடுநாள் ஆசை ஒரு வழியாக நிறைவேறியது.) பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் பேருந்து நிற்கிறது. பார்க்கவிருக்கும் இடங்கள் குறித்த செய்திகளை ஹெட்போன் வழியாக மூளையில் ஏற்றிக்கொள்ளலாம். நம் வசதிக்கேற்றாற்போல தேவையான நேரம் எடுத்து சுற்றிப் பார்த்துவிட்டு, அடுத்து வரும் அதே போன்ற வண்டியில் ஏறி அடுத்த இடத்துக்குச் செல்லலாம். இரண்டு நாட்களும் அந்தப் பேருந்திலேயே இடங்களைச் சுற்றிப் பார்த்தோம்.

ஆண்களும் பெண்களும் பகல் முழுக்கக் கடுமையாக உழைக்கிறார்கள். மாலையானதும் ஹோ சி மின் நகரின் முகம் மாறுகிறது. வீட்டுக்குள் யாரும் அடைந்து கிடப்பதில்லை. அத்தனை வீடுகளிலும் வாசலில் சின்ன சின்ன நாற்காலிகளில், வீட்டு மனிதர்களைக் காண முடிகிறது. யாரும் தொலைக்காட்சித் தொடர்களில் தங்களைத் தொலைப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு சாலையிலும் குறிப்பிட்ட பகுதி பொழுதுபோக்கு/விளையாட்டு மைதானமாக விடப்பட்டுள்ளது. இரவு ஆனதும் குடும்பம் குடும்பமாகவும் நண்பர்களுடனும் அங்கு திரள்கிறார்கள். கயிறு விளையாட்டு, நடனம், ஓவியர்கள், ஓவியங்கள், பலூன்கள், ஸ்கேட்டிங், உடல்முழுக்க பெயின்ட் அடித்துக்கொண்ட மனிதர்கள் என அந்தப் பகுதி களைகட்டுகிறது. இளைஞர்களை, இளைஞிகளைத் திருவிழா கூட்டம்போல, கும்பல் கும்பலாகப் பார்க்க முடிகிறது. அவர்களில் பலர் ஆங்காங்கே தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்க, சுற்றியிருக்கும் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.

சிறுவர்கள் மனம் போல் ஓடியாடி விளையாடி மகிழ, சுற்றியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் பார்த்துப் பார்த்துப் பூரிக்கிறார்கள். சமையலறையில் புழுங்கி, வீட்டுக்குள் அடைந்து, தொலைக்காட்சியில் சரணடைந்து, உறவுகளுக்குள் மனம் கசக்கும் வாழ்க்கையல்லாமல் புதுவிதமான வாழ்வாக இருக்கிறது. மாலையானதும் இதுபோன்ற சாலையோர மைதானங்களில் ஆர்ப்பரித்துக் கிடக்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது, பாடப் புத்தகங்களுக்குள் தங்கள் மொத்த குழந்தைப் பருவத்தைத் தொலைக்கும் நம் குழந்தைகள் மனதுக்குள் நிழலாடிச் சென்றார்கள். மொத்தத்தில் வயது வித்தியாசமின்றி அனைவரும் வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்க்கிறார்கள். காலை ஐந்து மணிக்கு வெளியே சென்றால், முந்தைய இரவின் எந்தச் சாயலுமின்றி அவரவர் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். இவர்கள் எப்போது தூங்கி, எப்போது எழுந்து, எப்போது தங்கள் அன்றாட வாழ்வைத் ஆரம்பித்தார்கள் என்று தலைசுற்றியது. When you are in Vietnam, be a Vietnamese என்பது போல இந்தத் தூங்கா நகரத்தின் கலாச்சாரத்துக்குள் நாங்களும் இரண்டறக் கலந்து இரவு முழுவதும் உலா வந்தோம்!

(தொடரும்)

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அடுப்பங்கரை டூ ஐநா தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரித்திருக்கிறார். இலங்கை ‘எழுதித் தீராச் சொற்கள்’ என்கிற பெயரில் இலங்கை அனுபவங்களை அழகாக எழுதியிருக்கிறார். இவை இரண்டும் ஹெர் ஸ்டோரிஸில் தொடர்களாக வந்து, பின்னர் ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடாகப் புத்தகங்களாகவும் வெளிவந்து பாராட்டுகளைப் பெற்றுள்ளன. வியட்நாம் அனுபவங்கள் இவரது மூன்றாவது தொடர்.