சான் பிரான்சிஸ்கோ சுற்றுலா -1

நேற்று மார்ட்டின் லூதர் கிங் டே, விடுமுறை என்பதால், அருகில் எங்காவது செல்ல நினைத்தோம். காரில் சுற்றிய சான் பிரான்சிஸ்கோ நகரை நடந்து சென்று சுற்றலாம். கால் வலித்தால் திரும்பி விடலாம் என்பது தான் திட்டம். 

மார்ட்டின் லூதர் கிங்

மார்ட்டின் லூதர் கிங், 1929 ஜனவரி 15 பிறந்தார். அதனால் அவரது பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மூன்றாவது திங்கட்கிழமை கொண்டாடப் படுகிறது. மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பிறந்தார். 

ஆபிரகாம் லிங்கன் அவர்களின் முயற்சியால் கருப்பினத்தவரின் அடிமைத்தளை அகன்றதே தவிர, சம உரிமை கிடைக்கவில்லை. பொது இடங்களில் கருப்பர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.

மார்ட்டின் லூதர் கிங் அறவழியில் போராடுவதைப் பற்றி அறிந்து கொள்ள இந்தியாவுக்கு வந்தார். காந்தி, டால்ஸ்டாயின் நூல்களை வாசித்தார். டால்ஸ்டாய், காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகிய மூவருமே வன்முறையற்ற எதிர்ப்பு என்ற ஆயுதத்தை நம்பியவர்கள். 

மார்ட்டின் லூதர் கிங். 1963-ஆம் ஆண்டு வாஷிங்டெனில் மிகப்பெரிய அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார். அந்தப் பேரணியில் வரலாற்று சிறப்புமிக்க தனது சொற்பொழிவில் இவ்வாறு கூறினார்-

“எனக்கு ஒரு கனவு உண்டு ஒருநாள் என்னுடைய பிள்ளைகள் அவர்களுடைய தோல் நிறத்தின் அடிப்படையில் அல்லாமல் அவர்களுடைய குணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும். என்றாவது ஒருநாள் வெள்ளையின சிறுவர்களும், கருப்பின சிறுவர்களும் கையோடு கை கோர்த்து நடக்க வேண்டும்”.

அவரது உரையை இங்கே பார்க்கலாம்…

அடுத்த ஆண்டே அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என் சட்டத்தையும்  நிறைவேற்றியது. 

டென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப் பட்டார். அப்போது அவருக்கு வயது 39 தான். 

1969 ஆம் ஆண்டு,மார்ட்டின் லூதர் கிங்  அவர்கள் இறந்த பின் வந்த முதலாவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் புகைப்படத்துடன், அஞ்சல் தலை இந்தியாவில் வெளியிடப்பட்டது.

தபால் தலை

சான் பிரான்சிஸ்கோ நகரை நடந்து சென்று சுற்றலாம் என்ற எண்ணத்தில், வீட்டிலிருந்து ரயிலில் நகரை அடைந்தோம். பியர் 39 என்னும் கடற்கரைக்கு செல்வதாக முடிவு செய்தோம்.

ஒரு முனியைப் பிடித்தோம். குறிப்பிட்ட தூரம் சென்ற பின் மாண்ட்கோமெரி (Montgomery) ரயில் நிலையம் வந்தது. உலகப் புகழ் பெற்ற ரோசா பார்க்கரின் மாண்ட்கோமரி பேருந்து புறக்கணிப்பிற்கும் (Montgomery bus boycott) இந்த ரயில் நிலையத்திற்கும் எந்த தொடர்புமில்லை. ஜான் பெரியன் மாண்ட்கோமெரி (John Berrien Montgomery) என்ற அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவரின் பெயரால் இது அழைக்கப் படுகிறது.

ரயில் வேறு திசையில் போகிறது என தெரிந்ததால், இறங்கி நடந்து விடலாம் என தீர்மானித்து நடக்கத் தொடங்கினோம். கூகிள் ஆண்டவர் எங்களை சுற்றி விட்டு விட்டார். நெடு தூரம் நடந்த பின் பார்த்தால், நாங்கள் மீண்டும் ரயில் நிலையம் அருகில் தான் இருந்தோம். இருந்தாலும் நடக்கத் தானே வந்தோம் என ஒருவாறு மனத்தைத் தேற்றி விட்டு நடந்தே பியர் 39 யை அடைந்தோம்.

அப்போது பார்த்த பலவிதமான வாகனங்கள் தான் இந்த கட்டுரையை எழுதத் தூண்டியது. இந்த கட்டுரையில், பல இடங்களில் பயன்பாட்டில் உள்ள மற்றும் இல்லாத சான் பிரான்சிஸ்கோ போக்குவரத்து வசதிகள் குறித்து சொல்ல நினைக்கிறேன்.

விமான நிலையம்:

நகருக்கு அருகில் உலகத்தரமான பன்னாட்டு விமான நிலையம் உள்ளது. Bayfront Park, என்னும் இடம் சான் பிரான்சிஸ்கோ விமான நிலயத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. அதனருகில், நடைபாதையும் உள்ளது. விமானத்தின் ஓடுதளம் கடலுக்குள் இருக்கிறது. விமானங்கள் ஏறுவதையும், இறங்குவதையும் பூங்காவில் நாம் மிக அருகில் இருந்து பார்க்கலாம். குறைந்தது ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் இறங்கும். ஒரு விமானம் இறங்கும் வேளையில் வானத்தில், இரண்டு விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். 

இரவு நேரத்தில் மிகக் குறைந்த அளவிலான விமான போக்குவரத்து தான் இருக்கும் அதனால், இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை பல விமானங்கள், நமது பேருந்து நிலையத்தில், பேருந்துகள் நிற்பது போல, மிக நீண்ட தூரத்திற்கு வரிசையாக நிற்கும்; விடியற்காலையில் சரசரவென ஒவ்வொன்றாக புறப்படும். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.

விமான நிலையம்

கால்ட்ரெய்ன்:

கால்ட்ரெய்ன் (Caltrain) என்னும் கலிபோர்னியா ரயில், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து தெற்கில் உள்ள சான் ஓசே பயணிக்க உதவுகிறது. அவற்றில் சில ரயில்கள், கில்ராய் (Gilroy) வரை செல்கின்றன. அதாவது, சான் பிரான்சிஸ்கோ 4வது மற்றும் கிங் ஸ்ட்ரீட் வடக்கு முனையமாகவும், கில்ராய் நகரம் தெற்கு முனையமாகவும் உள்ளன.

கிங் ஸ்ட்ரீட் நிலையம்

இரட்டை மாடி கொண்ட ரயிலின் உட்புறம்

பார்ட்:

பார்ட் எனப்படும் Bay Area Rapid Transit (BART), சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தை கிழக்கில் உள்ள  ஓக்லாண்ட் விமான நிலையத்துடன்  (Oakland International Airport) இணைக்கிறது.

முனி ரயில்கள்:

முனி (Muni) ரயில்கள், மெட்ரோ போன்று பூமிக்கடியிலும் வெளியே டிராம் வண்டிகள் போலும் இயங்குகின்றன. இவை மின்சாரத்தால் இயக்கப் படுகின்றன. சாலையில் வரும்போது, நமது மின்சார ரயில் போல மேலே உள்ள மின்கம்பி மூலம் இயங்குகிறன.

முனி ரயில்

F Market & Wharves சான் பிரான்சிஸ்கோவில் F line முனிசிபல் இரயில்வே / முனி (Muni) SFMTA மூலம் இயக்கப்படுகிறது. 

1983 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவை முதலில் காஸ்ட்ரோ (Castro District) /  டிரான்ஸ்பே டெர்மினலுக்கு (Transbay Terminal) இடையில் இயக்கப்பட்டது, 1995 இல் ஆண்டு முழுவதும் சேவையாகத் தொடங்கப்பட்டது. 2000 இல், கிழக்கு முனையில் எம்பார்கேடோ (Embarcadero) மற்றும் வடக்கில் ஃபிஷர்மேன் வார்ஃப் வரை (Fisherman’s Wharf) நீட்டிக்கப்பட்டது. மேலும் மார்க்கெட் தெரு மற்றும் டிரான்ஸ்பே டெர்மினல் இடையேயும் இயங்குகிறது. இவை நமது வழக்கமான பேருந்துகள் போல உள்ளன. ஆனால் வடிவமைப்பில் பழைய கால பேருந்து போல இருக்கும்.

பரபரப்பான சாலையில் முனி ரயில்

இது, வழக்கமான சாலையில் செல்லும் (தண்டவாளத்தில் அல்ல) பேருந்து தான். ஆனால் நமது மின்சார ரயில் போல மேலே உள்ள மின்கம்பி மூலம் இயங்குகிறது.

கிளியர் ஏர் பேருந்துகள்:

இவை, நமது ஊர்களில் உள்ளவை போன்ற வழக்கமான பேருந்துகள். இந்த வகை பேருந்துகள், சில ஒற்றையாகவும், சில தொடர்வண்டி போன்று இரு பகுதிகள் இணைந்ததாகவோ இருக்கும். இவை clear air வகை பேருந்துகள். 

கிளியர் ஏர் பேருந்து

கேபிள் கார்கள்:

கேபிள் கார்கள் (Cable cars) சான் பிரான்சிஸ்கோவின் வரலாற்று சின்னம். சான் பிரான்சிஸ்கோவில் இயங்கும் கேபிள் கார்கள் தான், இது போன்ற கேபிள் கார் அமைப்பில், உலகின் கடைசியாக புழக்கத்தில் உள்ள அமைப்பு. 

செங்குத்தான சாலையில் பயணிக்கும் போது, வண்டியை இழுக்கும் குதிரைகள் இறந்ததைக் கவனித்த, ஒருவர், கேபிள் கார்கள் இங்கு வருவதற்குக் காரணமாக இருந்தார் என சொல்லப் படுகிறது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கேபிள் கார் அமைப்பு 1873 இல் நிறுவப் பட்டது. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மின்சார கார்கள் (electric streetcars) புழக்கத்திற்கு வந்து விட்டதால், உலகின் பல இடங்களிலும், கேபிள் கார்கள் வழக்கொழிந்து போயின. ஆனால் இங்கு இன்னமும் புழக்கத்தில் உள்ளன.

கேபிள் கார்கள் இயந்திரங்கள் இல்லாதவை. அவற்றின் இயந்திரங்கள் குறிப்பிட்ட இடத்தில் வைக்கப் பட்டுள்ளன. நிலத்தடி கம்பிகள் மூலம் இயந்திரம், காருடன் இணைக்கப் பட்டுள்ளது. காரில் ஓட்டுநர் காரில் உள்ள அமைப்பின் மூலம் கார் இயங்கவும், நிறுத்தவும் செய்கிறார்.

கார் திரும்பும் இடங்களில் ஒரு வட்டம் இருக்கும். அதன் மேலே கேபிள் கார் நின்றதும், அது சுழன்று வண்டியைத் திருப்பி விடும். அது பார்க்க அழகாக இருக்கும். வெளிப்பக்கம் படி கொஞ்சம் அகலமாக ஒரு சிலர் நிற்பதற்கு வசதியாக இருக்கும். சிலர் அதில் நின்று கொண்டு பயணம் செய்வார்கள். முழுக்க முழுக்க மூடிய கார், பேருந்து, ரயிலில் மட்டுமே பயணம் செய்தவர்களுக்கு, இது ஒருவித புது அனுபவமாக இருக்கும்.

கேபிள் கார் அருங்காட்சியகம் மற்றும்  SF ரயில்வே அருங்காட்சியகத்தில், சான் பிரான்சிஸ்கோ கேபிள் காரின் வரலாற்றுத் தகவல்களை அறியலாம்.

இயக்கத்தில் இருக்கும் உலகின் கடைசி கேபிள் கார்கள்
கேபிள் காருக்காக காத்திருக்கும் மக்கள்

‘மொட்டை மாடிப்’ பேருந்துகள்:

மொட்டை மாடி போன்ற அமைப்பைக் கொண்ட பேருந்துகளும் இயங்குகின்றன. அவை நகரின் சிறப்பு வாய்ந்த இடங்கள் வழியே செல்கின்றன. பேருந்தில் அமர்ந்து கொண்டே, ஊரின் அழகைக் கண்டு களிக்கலாம். இது முழுக்க முழுக்க சுற்றுலா வருபவர்கள் உல்லாசமாக செல்லும் பேருந்து.

குறிப்பிட்ட இடத்தில் புறப்பட்டு, குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணித்து, குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தப் படும் பேருந்து. அவரவருக்கு விருப்பமான இடத்தில் இறங்கி பார்த்து விட்டு அடுத்து வரும் குறிப்பிட்ட அந்த நிறுவனப் பேருந்தில் ஏறிக்கொள்ளலாம். பேருந்துகள் பொதுவாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அவற்றின் வழித்தடத்தில் அரை மணி நேர இடைவெளியில் இயங்கும்.

மொட்டை மாடி பேருந்து

கோகார் டூர்ஸ் (GoCar Tours):

GoCar என்பது இரண்டு இருக்கைகள் கொண்ட, 3 சக்கர ஸ்கூட்டர். GoCars ஆடியோ GPS அமைப்பைக் கொண்டுள்ளது. இது குறிப்பிட்ட பாதைகளில் வாகனத்தை செலுத்த உதவுகிறது. 

கோ கார்கள்

சைக்கிள் ரிக்ஷாக்கள்:

இது மாதிரி சைக்கிள் ரிக்ஷாக்களை வாடகைக்கு அமர்த்தியும் சுற்றுலா தளங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.

ரிக்ஷா

சைக்கிள்:

சைக்கிள் வாடகைக்குக் கிடைக்கும். இது மாதிரி வாகனம் வாடகைக்குக் கிடைக்கும். இவற்றின் மூலம், சுற்றுலா தளங்களைச் சுற்றிப் பார்க்கலாம்.

ஸ்கூட் சைக்கிள்

இவ்வாறு பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகள் இருந்தாலும், நடந்து ஊரைச் சுற்றுவது தான் இன்பம். ஊரின் சாலைகள் மைல் கணக்கில் நேராக இருக்கும். 

நீளம் நீளமான சாலைகள், நடுவில் கேபிள் கார் செல்வதற்கான மூன்று கம்பிகள் கொண்ட தண்டவாளங்கள், டிராம் வண்டிகளுக்கான இரண்டு கம்பி தண்டவாளங்கள், அழகிய வீடுகள், மலைகள், ஆங்காங்கே தெரியும் கடல், இடையிடையே ஓடும் கேபிள் கார்கள், டிராம் வண்டிகள், பேருந்துகள், என நடந்து ஊரை சுற்றினால், கால் வலிக்க வலிக்க சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே நடக்கலாம். கால் வலித்தாலும் மனம் இன்னும் இன்னும் என எங்கும் அளவிற்கு அவ்வளவு அழகான ஊர்.

சுற்றுவோம்…

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.