காடார்ந்த கிழக்கு –5

‘சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா’ என மனம் சொல்லிக் கொண்டாலும், ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்; என நினைத்து வாழ்ந்தால் தான் நம்மால் வெளிநாடுகளில் வாழ முடியும். ‘நாம் இருக்கும் நாடு நமதென்போம்’ என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப அமெரிக்காவின் எனது ஊரைப் பற்றிய எனது பதிவு இது.

ஊரின் பெயர் பெல்மான்ட் (Belmont). பெல்மான்ட் கலிபோர்னியாவில் சான் மத்தேயு கவுண்டியில் (San Mateo County ), சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் உள்ளது.

இங்கு ஊர் பெயர்களில் வரும் சான் (San) என்ற வார்த்தை ஆண் புனிதரையும் (Saint) சான்டா என்ற வார்த்தை பெண் புனிதரையும் குறிக்கும். கவுண்டி என்பது வட்டம் (தாலுகா).

சான் பிரான்சிஸ்கோ விரிகுடா, ஏறக்குறைய முதலையின் வாய் போன்ற அமைப்பில் உள்ளது. வாய்ப் பகுதியின் மேற்குப் பக்கம், சான் பிரான்சிஸ்கோ, சான் மத்தேயு, பெல்மான்ட், ரெட்வுட் சிட்டி, பாலோ ஆல்டோ (Palo Alto) போன்ற ஊர்கள் இருக்கின்றன. கிழக்குப் பக்கம், ஓக் லேண்ட் (Oakland நகரம் மற்றும் அதன் அருகாமை ஊர்களான, San Leandro, Hayward, Union City, Fremont போன்ற ஊர்கள் உள்ளன. வாய்ப்பகுதி, ஏறக்குறைய சான் ஓசே (San Jose) நகரின் புறநகரில் இணைகிறது. இந்த இடைவெளிப் பகுதியில், மூன்று பாலங்கள் உள்ளன. சான் பிரான்சிஸ்கோ, ஓக் லேண்ட், சான் ஓசே ஆகிய மூன்று நகரங்களிலும் பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளன.

பெல்மான்ட் ஊரின் கிழக்குப் பக்கம் கடலும் மேற்குப் பக்கம் மலைத்தொடரும் இருக்கிறது. எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் இரண்டு சாலைகளின் பெயர், Marine View மற்றும் Mountain View. பெயர்களே, அந்த இடத்தின் அமைவிடத்தைச் சொல்கிறது. இப்போது ஊர் வளர்ச்சியடைந்த பிறகு மலையும் அந்த இடத்தில் தரையில் தெரிவதில்லை. கடலும் தெரிவதில்லை.

பெல்மாண்ட் ஸ்லஃப், (Belmont Slough), பெல்மாண்ட்டில் உள்ள சதுப்பு நிலம். கடல் அலைகளின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, மழை அளவிற்கு இங்கு தண்ணீரின் அளவு, கூடும்; குறையும். 1900 களின் முற்பகுதியில், வாத்து வேட்டையாடுவதற்கான சிறந்த இடமாகக் இது கருதப்பட்டது. இன்றும் இங்கு பெரிய வகை வாத்துகள் (geese), மிக அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் seagull போன்ற பல வகையான பறவைகளையும் இங்கு காணலாம்.

சதுப்பு நிலத்தை ஒட்டி 8.6 மைல் நீளத்திற்கு சாலை உள்ளது. இந்தச் சாலையில் நடக்க, சைக்கிளில் செல்ல மட்டுமே முடியும். மற்ற வாகனங்களில் செல்ல முடியாது.

அந்தச் சாலை ஓரத்தில், இடையிடையே டெலஸ்கோப் உள்ளது. கம்பால் செய்த பெஞ்ச்கள், இரும்பு கம்பிகள் என உடற்பயிற்சி செய்வதற்கான பல அமைப்புகள் உள்ளன.

ஒவ்வொரு ¼ கிலோமீட்டருக்கும் ஒரு கழிவறை, குடிதண்ணீர் எல்லாம் உண்டு. இங்கு மட்டுமல்ல அனைத்து பூங்காக்களிலும் இந்த வசதிகள் இருக்கும்.

இங்கு ஊரின் பரபரப்பான இடத்தை டவுன்டவுன் (Downtown) என்கிறார்கள். எங்கள் வீடு பெல்மான்ட் டவுன்டவுனில் இருப்பதால், ஏறக்குறைய அனைத்து வசதிகளும் அருகிலேயே உள்ளன. வீட்டின் ஒரு புறம் ரயில் நிலையமும், மறுபுறம் அஞ்சலகமும் உள்ளன.

அஞ்சல் நிலையத்தில் வழக்கமான அஞ்சலக சேவைகள் கிடைக்கின்றன. மேலும் இங்கு பாஸ்போர்ட் எடுத்துக் கொள்ளலாம். நாம் வெளியூர் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே சொல்லி விட்டால், கட்டணம் இல்லாமல், ஒரு மாதம் வரை நமது அஞ்சல்களைத் தனியாக எடுத்து வைத்து, நாம் வந்த பின் தருவார்கள். பயணத்தில் பெருமளவிற்கு இருப்பவர்கள், கட்டணம் செலுத்தி நமக்கென்ற அஞ்சல் பெட்டியை வாங்கிக் கொள்ளலாம். அது குறிப்பிட்ட அஞ்சலகத்தில் இருக்கும். நாம் நமக்கு விருப்பமான நேரம் சென்று எடுத்துக் கொள்ளலாம். அஞ்சலகம் எப்போதும் திறந்தே இருக்கும்.

ஊரின் மக்கள் தொகை ஏறக்குறைய 25,000. அவர்களுக்கு சேவை செய்வதற்கான அஞ்சலகத்தில், முப்பதிற்கும் மேற்பட்ட பட்டுவாடா வாகனங்கள் உள்ளன. வாகனம் ஏறக்குறைய ஜீப் போன்று சதுரமாக இருக்கிறது. பின்பகுதி முழுவதும், பொருட்கள் வைப்பதற்கான விசாலமான இடம் உள்ளது. கடிதம் எழுதும் வழக்கமே இல்லாத இந்த காலகட்டத்தில் தான், வண்டிகள் நிரம்ப பொருட்களுடன் பட்டுவாடா வண்டிகள் செல்கின்றன என்பதே விநோதம் தான்.

எங்கள் வீட்டு முன் அறையின், சன்னல் வழியே பார்த்தால், அஞ்சல் நிலையத்தின் வாகன நிறுத்தும் இடம் தான் தெரியும். பல நாட்கள், வெளியுலக தொடர்பு என்பதே அங்கு வந்து செல்லும் வாகனங்களைப் பார்ப்பதும், அவற்றை இயக்கும் பணியாளர்களைப் பார்ப்பதும் தான். பெரும்பான்மையான காலை நேரம் கையில் காப்பியை வைத்துக் கொண்டு வேடிக்கை பார்ப்பேன். பெரிய stroler போன்ற வண்டியில், தாங்கள் பட்டுவாடா செய்ய வேண்டிய பொருட்களை பட்டுவாடா வாகனத்தில் ஏற்றி விட்டு மீண்டும் stroler யை உரிய இடத்தில் கொண்டு வைத்து விட்டு, அவரவர் வாகனத்தில் புறப்படுவார்கள். எங்கள் வீட்டிற்கும் அஞ்சல் நிலைய வாகன நிறுத்தும் இடத்திற்கும் இடையில் உயரமான மரங்கள் உண்டு. அவற்றில் மிக சிறிய அளவிலான காய்கள் இருக்கும். பார்ப்பதற்கு, பச்சை மிளகு கொத்து மாதிரி இருக்கும். அவற்றைச் சிறு சிறு குருவிகள் கொத்திக் கொண்டிருக்கும். பார்ப்பது அவ்வளவு அழகு. அதுவும் குளிர்காலத்தில் இலைகள் முழுமையாக உதிர்ந்து காய்கள் மட்டுமே அந்த மரத்தில் இருக்கும். அப்போது பணியாளர்களின் நடமாட்டம் தெளிவாகத் தெரியும். மாலை 3 மணிக்கு மேல் வாகனங்கள் திரும்பத் தொடங்கும்.

அவ்வப்போது மிகப்பெரிய வாகனங்கள் வேறு இடத்தில் இருந்து அஞ்சலகத்திற்குப் பொருட்களைக் கொண்டு வரும்; இங்கிருந்து எடுத்துக் கொண்டு போகும். அவற்றை இயக்குபவர்கள் பலரும் பஞ்சாபிகள். அவர்கள் வாகனத்தில் அவ்வப்போது ஹிந்தி பாடல்களைக் கேட்கலாம். நள்ளிரவில்கூட அவர்கள் வருவார்கள்; போவார்கள்.

வீட்டின் முன்பக்கம் ஒரு கொரியர் நிறுவனமும் உள்ளது. அஞ்சலக ஊழியர்கள், கொரியர் நிறுவனத்திற்குத், தபால்களைக் கொண்டு செல்வார்கள். கொரியர் ஊழியர்கள், அஞ்சலகத்திற்குத், தபால்களைக் கொண்டு செல்வார்கள். என்ன புரிதலோ எனக்குத் தெரியாது. ஒரே இடத்தில் இரு போட்டியாளர்களும் தங்களது தொழிலை ஒற்றுமையாகச் செய்வது வியப்பு தான். எப்படி இருவரும் வெற்றிகரமாக இயங்குகிறார்கள் என அவ்வப்போது நினைத்துப் பார்ப்பது உண்டு.

அதே மாதிரி எங்கள் தெருவிற்கு அடுத்த தெருவில், மூன்று Gas Station கள் உள்ளன. இங்கு பெட்ரோல் பங்க் தான் Gas Station என்று அழைக்கப் படுகிறது. ஒரே தெருவில் மூன்று பேருக்கும் எங்கிருந்து வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்பதும் வியப்பு தான்.

அஞ்சலகத்திற்கு முன்னால், அஞ்சல் பெட்டிகள், நீல நிறத்தில் உள்ளன. நடந்து செல்பவர்கள் போடுவதற்கென ஒரு பக்கமும், மறுபக்கம் வாகனத்தில் இருந்தவாறே போடுவதற்கெனவும் வசதி உள்ளது. அஞ்சல் பெட்டிகளுக்கு அடுத்து, ஒரு சில பெட்டிகள் உள்ளன. அவற்றில் செய்தித்தாள்கள் வைக்கப் பட்டிருக்கும். சில பெட்டிகளில் உள்ளவை இலவசமாகவே. சில பெட்டிகள், காசு போட்டால் மட்டும் திறக்கக் கூடியவை. இவ்வாறான பெட்டிகள் பல இடங்களிலும் இருக்கும்.

இங்கு வாகனங்களில் ஓட்டுனர்கள் இடதுபக்கம் இருப்பார்கள். அஞ்சலக வாகனங்களில் மட்டும், பட்டுவாடா செய்வதற்கு வசதியாக, ஓட்டுனர்கள் வலது பக்கம் இருப்பார்கள்.

அஞ்சலகத்திற்கு எதிரே (Yaseen Foundation /Belmont Masjid) ஒரு மசூதி உள்ளது. அவ்வப்போது மக்கள் தொழுகைக்கு செல்வதைப் பார்த்திருக்கிறேன். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு இலவசமாக அரிசி, காய்கறி எனச் சமையலுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கொடுப்பார்கள். தேவையானவர்கள் போய் வாங்கிக் கொள்ளலாம்.

மசூதிக்கு அடுத்து தீயணைப்பு நிலையம் உள்ளது. அதனால் அடிக்கடி தீயணைப்பு வண்டி சைரன் சத்தத்துடனும் சத்தமில்லாமலும் செல்வத்தைப் பார்க்கலாம். வீட்டின் அருகில் இருக்கும் நால்வழி சாலையில் தீயணைப்பு வண்டி செல்வதைப் பார்ப்பதே அழகு. சத்தம் அடுத்த சாலையில் வந்தாலும், சத்தம் கேட்டவுடன், அனைத்து வாகனங்களும் நின்று விடும். சாலையின் குறுக்கே நடந்து செல்பவர்களும், அந்தந்த இடத்தில் நின்று விடுவார்கள். தீயணைப்பு வண்டி, சாலையின் நடுப்பகுதிக்குள் நுழையும் போது, சிறிது நின்று ஆரன் சத்தம் கொடுக்கும். வண்டியில் இருக்கும் வீரர்கள், இருபுறமும் நிற்கும் நமக்கு நன்றி சொல்லும் விதமாக கை அசைத்துச் செல்வார்கள். எத்தனை முறை பார்த்தாலும் இது சலிக்காது.

வீட்டின் மற்றொரு புறம் இருக்கும், ரயில் நிலையம் குறித்து பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஒரு பாலத்தின் மேலே அது இருக்கிறது. கீழே சாலை உள்ளது. ரயில் நிலையத்தை அடைவதற்கு கீழிருந்து படிக்கட்டும், lift ம் உள்ளன. இங்கு lift யை elevator என்று தான் அழைக்கிறார்கள்.

பெல்மான்ட் ஊரின் டவுன்டவுனில் இருக்கும் பெரிய பூங்காவின் பெயர், Twin Pines Park. பல ஆயிரம் ஆண்டுகளாக லாம்ஷின் பழங்குடி மக்கள் பெல்மாண்ட் க்ரீக்கில் அமைந்திருக்கும் இந்த Twin Pines Park பகுதியில் குடியிருந்தனர் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

பூங்காவின் முன் பகுதியில் அரசு அலுவலகங்கள் உள்ளன. அந்த மொத்த தொகுப்பிற்கு, குடிமை மையம் (Civic center) என்று பெயர். அங்குள்ள சிட்டி ஹால் (City Hall) என்பது, நமது மாநகராட்சி அலுவலகம் போன்றது. சிட்டி ஹாலின் பின் வாசல் பக்கத்தில் வழக்கமாக ஒரு குப்பைத் தொட்டி இருக்கும். ஆனால், தேர்தல் காலத்தில் குப்பைத் தொட்டியை எடுத்துவிட்டு வாக்குப் பெட்டியை வைத்து விடுவார்கள். மாதக்கணக்கில் அது இருக்கும். வீடுகளுக்கு வாக்குச் சீட்டு அனுப்பி விடுவார்கள். வாக்காளர்கள் அங்கு தங்களது வாக்குச் சீட்டை நிரப்பிப் போட்டு விடலாம். தேர்தல் நாள் என அறிவிக்கும் நாளன்று வாக்குச் சாவடியிலும் போய் வாக்குச் செலுத்தலாம். ஆனால், அவ்வாறு செல்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. தேர்தல் நாளன்று விடுமுறை கிடையாது. ஓரிரு மணி நேரம் அனுமதி பெற்றுச் செல்லலாம். எங்கள் பகுதியின் வாக்குச் சாவடி அருகில் பள்ளி ஒருபுறம் இயங்கிக் கொண்டிருக்கும். ஓர் அறையில் வாக்குப் பதிவு நடக்கும். இன்றும் தேர்தல் நடக்கிறது. எங்கள் ஆளுனரைத் திரும்பப் பெற வேண்டுமா வேண்டாமா என்று தேர்தல் நடக்கிறது. இன்று மாலையே முடிவு தெரிந்துவிடும்.

அந்த வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் அமெரிக்க நாட்டின் கொடி, கலிபோர்னிய மாநிலக் கொடி, ஒன்றன் கீழ் ஒன்றாகப் பறக்கின்றன. ஆம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி கொடிகள் உள்ளன. எங்களுடையது கரடி கொடி. 1846 இல், மெக்சிகோவின் ஒரு பகுதியாக இருந்த கலிபோர்னியா, 1846 ஜூன் மாதம் மெக்சிகன் ஆட்சிக்கு எதிரான எழுச்சியைத் தொடங்கியது. கிளர்ச்சியின் போது, கரடி கொடி வடிவமைக்கப்பட்டது. ஜூன் 1846 இல் சான் பிரான்சிஸ்கோவிற்கு வடக்கே உள்ள சோனோமாவில் (Sonoma), கரடி கொடி முதன்முறையாகப் பறக்க விடப்பட்டது. அவர்கள் கரடி கொடி கொண்டவர்கள் (Bear Flaggers) என்று அடையாளப் படுத்தப்பட்டனர்.

இந்த முதல் கிளர்ச்சியின் போது, கிளர்ச்சியாளர்கள் சான் பிரான்சிஸ்கோவிற்குத் தெற்கே உள்ள மான்டேரியைக் (Monterey) கைப்பற்றினர். கலிபோர்னியாவை சுதந்திர நாடு என்று அறிவித்தனர். ஒரு மாதம் நீடித்த கிளர்ச்சி தோல்வியடைந்தது.

பல ஆண்டுகளுக்குப் பின், வில்லியம் ராண்டால்ப் ஹியர்ஸ்ட் (William Randolph Hearst) என்பவர் ஒரு கரடியை சான் பிரான்சிஸ்கோ கோல்டன் கேட் பூங்காவில் காட்சிப்படுத்தி, அதற்கு மோனார்க் (Monarch) என்று பெயரிட்டார். பிற்காலத்தில் அதுவே மாநிலத்தின் கொடியாக மாறியது.

சிட்டி ஹாலை ஒட்டி காவல் நிலையம் இருக்கிறது. அதன் பின்பக்கம், மணல், மண்வெட்டி, சாக்கு போன்றவை எப்போதும் இருக்கும். மழைக் காலத்தில் அதிகமான மணல் இருக்கும். மலையில் வாழ்பவர்கள் அவர்கள் வீட்டின் முன் உள்ள சாலையின் சிறு மண் அரிப்புகளை, இந்த மணலைச் சாக்குகளில் கட்டிக் கொண்டு போய் அடுக்கி தடுத்துக் கொள்வார்கள். இதனால் சாலையில் ஏற்படும் பழுது கணிசமான அளவிற்குக் குறையும்.

அதையடுத்து மிகப் பெரிய புல்வெளி இருக்கிறது. அதில் உட்கார்ந்து சாப்பிட மேசைகள், சமையல் செய்வதற்கு, Barbeque அடுப்புகள் உள்ளன. புல்வெளியில் ஒருபுறம் மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வப்போது இன்னிசைக் கச்சேரிகள் நடைபெறும். இரவில் திரைப்படங்கள் ஒளிபரப்புவார்கள். மேலும் பல பொது நிகழ்வுகளும் இங்கு நடைபெறும்.

இங்கு என்னைக் கவர்ந்தவை புல்வெளியைச் சுற்றி உள்ள அழகிய மரங்கள். அவற்றை கிங்கோ (ginkgo tree) மரங்கள் என்கிறார்கள். அந்த மரங்களில் இருந்து, ஒருவிதமான, நெல்லிக்காய் அளவிலான பழங்கள் பழுத்து விழுகின்றன. பழத்தின் உள்ளே பார்ப்பதற்கு பிஸ்தா மாதிரி விதைகள் உள்ளன. சுவை ஏறக்குறைய முருங்கை விதைப் போல உள்ளது. அவை உடலுக்கு மிகவும் நல்லது எனச் சீனர்கள் சேகரித்துக் கொண்டு செல்வார்கள். அந்த மரம் பசுமையாக நிற்கும் போதும் அழகு. இலையுதிர் காலத்தில் மஞ்சள் நிறமாக இலைகள் மாறும் போது இன்னும் அழகு.

இந்த மரங்களும் கிங்கோ மரங்கள் தான். ஆனால், இவற்றில் பழங்கள் வருவதில்லை. இவற்றை ஆண் மரங்கள் என்கிறார்கள்.

சிட்டி ஹாலின் பின்பக்கம், ஒரு முதியோருக்கான சமூக நலக்கூடம் (Senior Centre) உள்ளது. முதியோருக்கானது என்றாலும் யார் வேண்டுமானாலும் பயன் பெறலாம்.

வாரநாட்களில் உடற்பயிற்சி வகுப்புகள், யோகா வகுப்புகள், இத்தாலியன்/ பிரெஞ்சு/ ஸ்பானிஷ்/ சைனீஸ் மொழி குழுக்கள், ஓவிய, தையல், பின்னல் குழுக்கள், அஞ்சல் தலை சேகரிப்போர் கூட்டம், புத்தக அறிமுகம், சினிமா, mahjong, puzzle போன்ற மேசை மீது விளையாடும் விளையாட்டுகள் என ஏதாவது நடந்து கொண்டே இருக்கும். மாதமொரு முறை நடனம் ஆட விரும்புபவர்களுக்காக மெல்லிசைக் குழுவினரை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவார்கள். உணவும் வழங்கப்படும்.

மேலும் அவ்வப்போது, Diabetic Test, Pressure Test, வருமான வரி தொடர்பான ஆலோசனைகள், காவல் துறை அதிகாரியுடன் கலந்துரையாடல் போன்ற பல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். பெரும்பாலும் இலவசம்தான்.

சீனியர் சென்டர் வருபவர்களை, அவரவர் வீட்டிலிருந்து அழைத்து வந்து, மீண்டும் வீட்டில் கொண்டுவிட மிகவும் குறைந்த கட்டணத்தில் வாகன வசதியும் உண்டு.

இது குறித்து அதன் மேலாளரிடம் கேட்டபோது, ‘இவ்வாறு முதியவர்களுக்குச் செய்யும் வசதிகள் எல்லாம், அரசாங்கத்திற்கு, மறைமுகமான முதலீடு. இது விரயமான செலவு அல்ல; இவ்வாறு இவர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அரசின் மருத்துவம் மற்றும் மனநிலை பிறழ்வு தொடர்பான நோய்களுக்கான செலவு கணிசமாகக் குறையும் என்றார்.

இவ்வாறு பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென மேலும் இரண்டு கட்டடங்கள் உள்ளன. தேவை போக மீதி இருக்கும் நேரத்தில் இந்தக் கட்டடங்களை வாடகைக்குக் கொடுத்து விடுகிறார்கள்.

மேலும் இந்த வளாகத்திலேயே பெல்மாண்ட்டின் வரலாறு குறித்த சிறு கண்காட்சி ஒன்றும் வைத்துள்ளார்கள்.

பூங்காவின், பின்பக்கம் முழுக்க முழுக்க மரங்கள் அடர்ந்த பெரிய காட்டில், குழந்தைகள் விளையாட சறுக்கு, ஊஞ்சல், உட்கார்ந்து சாப்பிட மேசைகள், சமையல் செய்வதற்கு, Barbeque அடுப்புகள், தண்ணீர் குழாய்கள், கழிவறைகள் என ஒரு நாள் சுற்றுலா செல்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. வாடகைக்கும் கொடுக்கிறார்கள். அவ்வாறு வாடகைக்குக் கொடுக்காத நாட்களில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தக் காட்டின் இடையே ஒரு சிறு ஓடையும் பாய்கிறது. மரங்கள் எல்லாம் 100- 200 அடி வளர்ந்த பிரமாண்டமான மரங்கள். நம் நாட்டில் இப்படி ஊருக்குள் இவ்வளவு பெரிய காட்டை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இவ்வாறாகச் சிறியதும் பெரியதுமாக, ஊர் முழுவதும் 12 பூங்காக்கள் உள்ளன.

இது பிளம்ஸ் மரம்.

இது ஒரே மரம்

அந்த காட்டின் முகப்புப் பகுதியில் ஒரு சிங்கம் சிலை உள்ளது. இப்போது கோவிட் எச்சரிக்கைக்காக முகக்கவசம் அணிந்து அந்தச் சிங்கம் இருக்கிறது. முகக் கவசம் தேவையில்லை என்ற கொள்கை கொண்டவர்கள், அதைக் கழற்றுவர்; பின் யாராவது வந்து மாட்டி விடுவர். எல்லா இடங்களிலும் இவ்வாறு இரண்டு கொள்கைகள் கொண்டவர்கள் இருக்கத் தானே செய்வார்கள்.

இது, ஒரு வீட்டின் வாசலில் உள்ள பொம்மை.

உலகின் மிக உயரமாக வளரக்கூடிய ரெட்வுட் மரங்கள் (redwood trees) இங்கு உள்ளன. இவை சராசரியாக 250 முதல் 300 அடி உயரம் வரை வளரக் கூடியவை. சராசரியாக 3000 ஆண்டுகள் வளரக் கூடியவை.

///////பனாமா – பசிபிக் சர்வதேசக் கண்காட்சி 1915இல் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. அந்த கண்காட்சியின் எஞ்சியிருக்கும் கட்டடம் ஒன்று பெல்மாண்ட் அவென்யூவில் உள்ளது என்கிறார்கள். கண்காட்சி மூடப்பட்ட சிறிது நேரத்திற்தில் அந்த இடத்திலிருந்து இங்கு கொண்டு வந்து வைத்ததாகச் சொல்கிறார்கள்.

அப்போது அது எப்படி நடந்ததோ தெரியாது. ஆனால், 2008 இல் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

Caption provided by Denny Lawhern, (Belmont Historian):

Walter Emmett was an early pioneer merchant, Postmaster and a one man Chamber of Commerce in Belmont. He supported and encouraged the growth of our original business community along Old County Road in old Belmont, where he owned the Emmett store at the corner of Ralston Avenue and Old County Road from the late 1870’s until the 1920’s.

The historic Emmett House became threatened because of the redevelopment of the downtown area and, (thanks to the support of the Belmont City Council, the Belmont Historical Society, and the citizens of Belmont), the decision was made to move the historic Emmett House. On January 22, 2008 in the middle of a rain storm, with about 2,500 people lining Ralston Avenue and 6th Avenue, the historic house was rolled along the streets until it reached the O’Neill Avenue site. The Emmett House was restored on the 1000 O’Neill site and dedicated in March 2011.

கட்டடம், பழைய / புதிய இடங்களில்

டவுன்டவுனில் இரு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. கடைகள், உணவு விடுதிகள் பல உள்ளன. ஓர் இந்திய உணவகமும் இந்தியப் பலசரக்குக் கடைகளும்கூட உள்ளன. ஏறக்குறைய நமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் டவுன்டவுனில் வாங்கிக் கொள்ளலாம். ஏறக்குறைய 2 மைல் தூரத்தில் ஒரு Mall இருக்கிறது. அதற்குப் போய் வர ரயில் நிலையத்தில் இருந்து இலவசமாகச் சிறு பேருந்து ஒன்று இயங்குகிறது. அருகிலேயே பேருந்து நிலையங்கள் உள்ளன. அதனால், சொந்த வாகனம் இல்லாமலேயே சமாளிக்க முடியம். அதனால், வயதானவர்கள் பலர் டவுன்டவுனில் வசிக்கின்றனர்.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.