காடார்ந்த கிழக்கு- 2

சான் அன்டோனியோ, அமெரிக்காவில் ஏழாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும், டெக்சாஸில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும், உள்ளது. சான் அன்டோனியோ என்பது புனித அந்தோனியார்  என்பதற்கான ஸ்பானிஷ் மொழி பெயர். அவர்கள் ஆண் புனிதர்களை சான் என்றும் பெண் புனிதர்களை சாண்டா என்றும் குறிப்பிடுகின்றனர்.

சகோதரி நகரங்கள் (SISTER CITIES) என்ற கருத்தாக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர், டி. ஐசனோவர் (Dwight D. Eisenhower) அவர்களால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம், அமெரிக்க நகரங்கள், பொருளாதார, கலாச்சார மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்களை உலகளவில் உள்ள நகரங்களுடன் உருவாக்குகிறது.

நம் சென்னை, 2008 ல் சான் அன்டோனியோவின் சகோதரி நகரமாக நிறுவப்பட்டது. சான் அன்டோனியாவின் ஆற்றை சுத்தம் செய்த தொழில்நுட்ப ஆலோசனை உதவி கூவம் ஆற்றை சுத்தப்படுத்த கிடைக்கும் என்றே அப்போது எதிர்பார்க்கப்பட்டது.

ஸ்பானிஷ் ஆய்வாளர்கள் முதலில் 1691 ஆம் ஆண்டில் சான் அன்டோனியோ பகுதியைப் பார்வையிட்டனர். அந்த நாள் (ஜூன் 13), புனித அந்தோனியார் நாள் என்பதால், பிற்காலத்தில் உருவான இந்த குடியேற்றத்திற்கு சான் அன்டோனியோ என பெயர் வைத்தார்கள். நாம் இந்தியாவில் பொதுவாக குறிப்பிட்ட நபரின் பெயருடன் நகர், ஊர் (காந்திநகர்) என சேர்த்து பெயர் வைப்போம். ஆனால் அமெரிக்காவில் ஆட்களின் பெயரையே ஊர் பெயராக (வாஷிங்டன், ஆஸ்டின்) வைத்து விடுவார்கள். 

1718 மே 1 ஆம் தேதி மெக்ஸிகோவிலிருந்து ஒரு ஸ்பானிஷ் குழு வந்து, சான் அன்டோனியோ டி வலேரோவை (Mission San Antonio de Valero) நிறுவியது. அந்த நூற்றாண்டின் இறுதிக்குள், இந்த கட்டிடங்கள் ஏறக்குறைய இடிந்துவிட்டன. 1801 க்குப் பிறகு புதுப்பிக்கப் பட்ட இந்த ஆலயத்தை, அலமோ என்று அழைக்கத் தொடங்கினர்.

அலமோ என்றால்,  காட்டன்வுட் மரங்களின் தோப்பு என்பது பொருள். காட்டன்வுட், வட அமெரிக்க மர வகைகளில் ஒன்று. இந்த பகுதியில் இவ்வகை மரங்கள் நிறைந்து இருந்ததால், அலமோ என்று அழைக்கப்பட்டது. சான் அன்டோனியோவின் சின்னமான அலமோ, இப்போது நகரின் மையத்தில் அமைந்துள்ளது. 

ஸ்பெயினுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற மெக்ஸிகோ, 1821 இல் சுதந்திரம் பெற்றது. அதனால், டெக்சாஸ், மெக்ஸிகோவின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. 

இக்காலகட்டத்தில், ஸ்டீபன் எஃப். ஆஸ்டின் 1825 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலிருந்து 300 குடும்பங்களை இப்பகுதிக்கு அழைத்து வந்து ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தினார். அதனால், ஸ்டீபன் எஃப். ஆஸ்டின், டெக்சாஸின் தந்தை என்றும், ஆங்கிலோ டெக்சாஸின் நிறுவனர் என்று அழைக்கப்படுகிறார். இவர், ஏற்கனவே ஸ்பானிஷ் அரசிடமிருந்து டெக்சாஸில் நில மானியம் பெற்றிருந்த, அமெரிக்க தொழிலதிபர் மோசஸ் ஆஸ்டின் என்பவரின் மகன். 

1830 இல் மெக்ஸிகோ அரசு, அமெரிக்காவில் இருந்து அமெரிக்கர்கள், இங்கு வந்து குடியேறுவதற்குத் தடை விதித்தது. அவர்களுக்கு, சுங்க வரி விதித்தது. அடிமை முறையை ஒழித்தது. இதனால் அடிமைகள் பலரை விலைக்கு வாங்கி வைத்திருந்த டெக்சாஸ் அமெரிக்கர்களுக்கு பெரிய சிக்கல் உருவானது. இந்த காலகட்டத்தில், மெக்ஸிகோ அரசு, டெக்சாஸ் பகுதியை, கோஹுயிலா (Coahuila) என்ற மெக்ஸிகோ மாநிலத்தின் ஒரு பகுதியாக மாற்றியது.

அமெரிக்க குடியேற்ற மக்கள், டெக்சாஸ் ஒரு தனி மெக்சிகன் மாநிலமாக மாற வேண்டும்; பழைய சலுகைகள் அனைத்தும் வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

1835 ஆம் ஆண்டில், மெக்சிகன் அரசாங்கம் ஒரு கூட்டாட்சி முறையியிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியதும், எல்லைப் பகுதியான மெக்சிகன் டெக்சாஸ் உட்பட பல மெக்சிகன் மாநிலங்களில் வன்முறை வெடித்தது. அக்டோபர் 2, 1835 அன்று தொடங்கிய டெக்சாஸ் புரட்சியில், டெக்சாஸின் கோன்சாலஸ் அருகே, டெக்ஸியன் மக்களுக்கும் மெக்சிகன் வீரர்களுக்கும் இடையில் போர் மூண்டது. 

அந்த ஆண்டின் இறுதியில், டெக்சியன் படை, மெக்சிகன் வீரர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றியது. 

டெக்ஸியன் வீரர்கள், அலமோ மிஷனில், ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்தினர். பிப்ரவரி 23, 1836, மெக்ஸிகோ அரசு அலமோவை முற்றுகை இட்டது. மார்ச் 2, 1836 அன்று, டெக்சியர்கள் மெக்சிகோவிலிருந்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர். 

மெக்சிகன் படை மார்ச் 6 ம் தேதி தாக்குதலை நடத்தியபோது முற்றுகை முடிவுக்கு வந்தது. பல பொதுமக்கள் தப்பிப்பிழைத்த போதிலும், கிட்டத்தட்ட அனைத்து அலமோ பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர்.

டெக்சாஸ் மக்களுக்கு, அமெரிக்காவுடன் இணையும் விருப்பம் இருந்த போதிலும், அமெரிக்கா இணைப்பை விரும்பவில்லை. இதனால், டெக்சாஸ் பிரிட்டனுடன் இணைந்து கொள்ள விரும்பியது. பிறகு அமெரிக்கா தனது கொள்கையை மாற்றிக் கொண்டது. 1845 டிசம்பரில், டெக்சாஸ் அமெரிக்காவின் மாநிலமாக மாறியது.

இவ்வாறாக பல ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட டெக்சாஸ், இப்போது இருக்கும் அமெரிக்க கொடியுடன் சேர்த்து, ஆறு வகையான கொடிகளைப் பயன்படுத்தி உள்ளது.

இவ்வாறாக  அலமோ மிஷனரி,  டெக்சாஸ் வரலாற்றில் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.

அலமோ (Alamo) தவிர கான்செப்ஷன் (Mission Concepción), சான் ஓசே (Mission San Jose), சான் யுவான் (Mission San Juan), எஸ்படா (Mission Espada) என ஐந்து மிஷனரிகள் உள்ளன. ஸ்பானிஷ் மொழியில் எப்பொழுதுமே ;J’ உச்சரிக்கப் படுவதில்லை. நமது ஊரில் (Joseph) என்பதை  யோசேப்பு என கூப்பிடுவது போல தான் அவர்களின் உச்சரிப்பு இருக்கும். அதனால் ஓசே, யுவான் என தான் அவர்கள் உச்சரிப்பார்கள். 

அனைத்து மிஷனரிகளும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் (UNESCO World Heritage Site) என்ற பெருமை பெற்றுள்ளன. 

அனைத்தும், ஸ்பானிஷ் கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. சுண்ணாம்பு கலவையால் கோவில்கள் மற்றும் தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நம் ஊரில் பழைய கால வீடுகளின் மேற்பகுதியில் கட்டை குத்தியிருப்பது போல இவர்களும் கட்டை குத்தியிருக்கிறார்கள். கட்டை குத்துதல் என்பது பழைய மேற்கூரை முறை.

கட்டை குத்துவதற்கென சிறு செங்கல் உண்டு. அந்த செங்கலில் சுண்ணாம்பு காரையைப்  பூசி, கட்டைகளுக்கு இடையில் ஒட்டுவர். உடனே ஒட்டிக் கொள்ளும். கட்டடத்தின் மேல் பகுதியில் செங்கல் கப்பியுடன் (துண்டு செங்கல்) காரையைப் பயன்படுத்தித்  தளம் அமைப்பர். அத் தளத்தின் மேற்பரப்பில் ஓடுகளைப்  சுண்ணாம்பால் ஒட்டுவர். இந்த முறையில் தான் கட்டடங்கள் கட்டப் பட்டுள்ளன. குத்தியிருக்கும் கட்டை சில இடங்களில் நன்கு இழைக்கப் பட்டிருக்கின்றன. சில இடங்களில் பட்டையை மட்டும் உரித்து விட்டு அப்படியே கட்டியிருக்கிறார்கள்.

கோவில்களில் அந்த கால கட்டத்தைச் சார்ந்த விளக்குத் தண்டு, சரவிளக்கு, கோவில் பூசை தொடர்பான பொருள்கள் பலவும் அப்படியே இருக்கின்றன. கோவில் பூச்சுகளில் உள்ள, அந்த காலகட்ட ஓவியங்கள் சிறிது பொலிவு குறைந்து இன்னமும் இருக்கின்றன. 

குடியிருப்புப் பகுதியில் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் இருக்கின்றன. அவர்கள் பயன்படுத்திய நீர்ப்பாசன முறை,  போன்றவை இன்னமும் நடைமுறையில் உள்ளன. கிணறுகள் மூடப்பட்டு உள்ளன.

மிஷனரிகள் மிகப்பெரிய வளாகமாக இருக்கின்றன. புல்வெளியும், செடிகளும், மரங்களுமாக மிகவும் செழிப்பாக, அழகாக இருக்கிறது. மரங்கள் பெரும்பாலும் சிறுசிறு இலைகள் மற்றும் ஊசி இலைகள் கொண்ட மரங்களாக உள்ளன. ஊசி இலை கொண்ட மரங்களும், தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு வேப்ப மரங்கள் போல் அடர்த்தியாக இருக்கின்றன. கிளைகளின் நடுவே சிறு பறவை கூடு மாதிரி அமைப்பு இருக்கிறது. அது பூவா அல்லது காயா என தெரியவில்லை. 

ஒவ்வொரு மரத்திலும் நம் கண்ணுக்குத் தெரியாத அளவில் ஏதோ ஒரு உயிரினம் வாழ்கிறது. சிறு பறவையாகவோ, வண்டாகவோ, பூச்சியாகவோ இருக்கலாம். அதன் ஓசை மிகச்சிறந்த இசை அமைப்பாளர் அமைத்த இசை போல அவ்வளவு இனிமையாக இருக்கிறது. முதலில் நான் செயற்கையாக இசை ஒலிபரப்புகிறார்கள் என்று தான் நினைத்தேன். பிறகு ஒவ்வொரு மரத்திலும் அதே இசை கேட்டபின் தான் அது செயற்கையானது அல்ல என தெரிந்தது.

செடிகள் என எடுத்துக் கொண்டால், எனக்கு 80களின் மழைக்கால தென் நெல்லைப் பகுதியை நினைவு படுத்தியது. மழைக்காலத்தில் முளைத்து வளரும் காட்டுச் செடிகள், குப்பை கீரை, மணத்தக்காளி என நமக்குத் தெரிந்த பல செடிகள் தரையில் நெருக்கமாக வளர்ந்துள்ளன. சிறு சிறு மணிகள் போன்ற வடிவில் பூக்கும் கொடிகள், கொன்றை மரம் போன்ற பூக்கள், காய்கள் கொண்ட குத்துச் செடிகள் என எனக்கு எங்கள் வட்டாரத்தை மழை காலத்தில் பார்த்தது போன்ற உணர்வே ஏற்பட்டது. 

அதே போல நாமும் நமது ஊரை மீட்டுருவாக்கம் செய்ய முடியுமா என்ற சிந்தனை வந்தது.

மிஷனரிகள் போக இங்கு பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் முதன்மையானது கேண்டெலரியா மற்றும் குவாடலூப் என்று அழைக்கப் படும் சான் பெர்னாண்டோ கதீட்ரல் (San Fernando Cathedral, also called the Candelaria and Guadalupe). இது 1738 மற்றும் 1750 க்கு இடையில் கட்டப்பட்டது. அமெரிக்காவின் பழமையான கதீட்ரல்களில் இதுவும் ஒன்று. 

13 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காஸ்டிலின் மூன்றாம் ஃபெர்டினாண்ட் என்பர் நினைவாக சான் பெர்னாண்டோ கதீட்ரல் என அழைக்கப் படுகிறது.  

இதன் பீடம் தங்கத்தால் ஆனது. 1759 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினின் மன்னரான சார்லஸ் III அளித்த திருமுழுக்கு (ஞானஸ்நான) தொட்டி இன்றும் உள்ளது. இது கதீட்ரலில் உள்ள மிகப் பழமையான வழிபாட்டு சின்னம். நகரின் மையப் புள்ளியைக் குறிக்கும் சிலுவை ஒன்றும் இங்கு தரையில் சிறுகுறிப்புடன் பதிக்கப்பட்டுள்ளது.

1836 ஆம் ஆண்டு, அலோமோ போரின் போது,  மெக்ஸிகன் ஜெனரல், இந்த  ஆலயத்தின் கோபுரத்தில் தான், தனது  கொடியை ஏற்றி முற்றுகையைத் தொடங்கினார். 

செப்டம்பர் 13, 1987 அன்று, போப் இரண்டாம் ஜான் பால் கதீட்ரலுக்கு வந்ததன் நினைவாக அவரது சிலையும் இங்கு உள்ளது.

சான் ஆன்டோனியோவின் மற்ற சுற்றுலா இடங்கள் குறித்து இன்னும் சுற்றுவோம்.

பயணிப்போம்..

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.