1910ம் ஆண்டு அண்டார்டிக்காவுக்கு ஒரு ஆராய்ச்சிக்காக செல்கிறார் ஜார்ஜ் முரா லெஞ்ச் என்ற அறிவியலாளர். அடிலெய் பென்குயின்களின் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து அலசியதில், பல பென்குயின்களுக்குத் தன்பாலீர்ப்பு வழக்கம் (Homosexual behaviour) உண்டு என்பதைக் கண்டறிகிறார். சேகரித்த மற்ற தரவுகளை எல்லாம் கட்டுரையாக எழுதி சர்வதேச இதழ்களில் பிரசுரித்துவிட்டு, அடிலெய் பென்குயின்களின் தன்பாலீர்ப்பு பற்றிய விவரங்களை மட்டும் தனிச்சுற்றுக் கட்டுரையாக எழுதி தெரிந்தவர்களிடம் தருகிறார். 

ஜார்ஜ் முரா லெஞ்ச் ஏன் இப்படி செய்தார் என்பதைப் புரிந்துகொள்ள பெரிதாக யோசிக்கவேண்டியதில்லை. அந்தக் காலத்தின் பாலினம் சார்ந்த மதிப்பீடுகள் அப்படிப்பட்டவைதானே! தனிச்சுற்றுக்காக பதிப்பிக்கப்பட்ட சில பிரதிகளில் ஒன்றே ஒன்று மட்டும் எஞ்சியிருந்ததால்தான் இந்த ஆராய்ச்சியே நமக்குத் தெரியவந்திருக்கிறது. 

தன்பாலீர்ப்பு கொண்டவர்கள், பால்புதுமையினருக்கு எதிராகப் பேசுபவர்கள், தங்களது பழமைவாத எதிர்ப்புகள் எல்லாம் தீரும்போது இறுதியாக இந்த வாதத்தை முன்வைக்கிறார்கள் – “இது இயற்கைக்கு எதிரானது, அது இயற்கை அல்ல, எந்த விலங்கும் இப்படிச் செய்வதில்லை”. 

டார்வினின் பரிணாமக் கொள்கை பற்றிய நமது புரிதலை மட்டும் வைத்துப் பார்த்தால், அது சரிதான் என்றுகூட சிலர் நினைக்கலாம். “பரிணாமத்தில் எல்லா அம்சங்களுமே ஒரு விலங்கின் இனப்பெருக்கத்துக்கு உதவுவதாகவே இருக்கிறது. அப்படியானால் அடுத்த தலைமுறையை உருவாக்க முடியாத தன்பால் ஈர்ப்பு இயற்கையில் இருக்க முடியாது” என்றுதான் யோசிக்கத்தோன்றும். விஞ்ஞானிகளில் பலரும்கூட அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் அடுத்தடுத்த ஆராய்ச்சிகளில் விலங்கினங்களில் தன்பாலீர்ப்பு அம்சங்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டன. 

லேசன் ஆல்பட்ராஸ்

ஸ்பைடர் குரங்குகள், ஸ்காரப் வண்டுகள், செங்கால் நாரைகள், சில வகை ஆலாக்கள், வரிக்குதிரைகள், சிங்கங்கள், ஜப்பானிய மக்காக் குரங்கு,  ஒருவகை பழந்தின்னி வவ்வால் போன்ற பல விலங்குகளில் தன்பாலீர்ப்புப் பண்பு உண்டு.  லெய்சன் ஆல்ப்டராஸ்  (Laysan Albatross) என்ற பறவை இனத்தில் 31% ஜோடிகள் பெண்களாலானவை! ஆண் பறவையுடன் இணைசேரும் பெண் பறவைகள், இன்னொரு பெண் இணையுடன் அந்த முட்டையை அடைகாத்துப் பாதுகாக்கின்றன. குஞ்சுகளையும் இவையே வளர்த்தெடுக்கின்றன!

அன்னப்பறவை

சில வகை அன்னப்பறவைகளில் 20% ஜோடிகள் ஆண்களாலானவை. முட்டையிட்ட பிறகு பெண் பறவைகளை விரட்டிவிட்டுகிற சில ஆண்பறவைகள், ஆண் இணையுடன் முட்டையை அடைகாக்கின்றன. ஒட்டகச்சிவிங்கிகளின் இணைசேரும் நிகழ்வுகளில் 90%, ஒருவகை காட்டெருமையில் 50% இணைசேர்தல் நிகழ்வுகள் ஒரே பாலினத்துக்குள் நடப்பவையே. பாட்டில்மூக்கு ஓங்கில்களிலும் பொனோபோ குரங்குகளிலும் சமூகப் பிணைப்புக்காக தன்பால் இணைசேர்தல் நிகழ்வுகள் நடக்கின்றன என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ஆண் பென்குயின்கள் தாங்கள் வளர்க்கும் குஞ்சுடன்

சிட்னி அக்வாரியத்தில் உள்ள ஸ்ஃபென், மாஜிக் என்ற இரு ஆண் பென்குயின்கள் பழகத் தொடங்கின, அடிக்கடி இணைசேர்ந்தன. எப்போதும் ஒன்றாகவே இருக்கத் தொடங்கின.  ஊழியர்கள் ஒரு பரிசோதனை முயற்சியாக, வேறு ஒரு பென்குயின் ஜோடியால் கைவிடப்பட்ட முட்டை ஒன்றை இந்த ஜோடியிடம் கொடுத்தார்கள். ஆண்-பெண் கொண்ட ஜோடியைப் போலவே வேலையைப் பங்கிட்டு முட்டையைக் கண்ணும் கருத்துமாக இவை அடைகாத்தன. குஞ்சு பொரிந்ததும் அதையும் பாசத்தோடு வளர்த்தன!

450 உயிரினங்களில் ஒரே பாலினத்துக்குள் நடக்கும் இணைசேரல் நிகழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இவை எல்லாம் தன்பாலீர்ப்பு மட்டுமே கொண்ட விலங்குகள் (Homosexual animals) என்று சொல்லிவிடமுடியாது. தன் பாலினத்தோடு இணைசேர்ந்துவிட்டு அவ்வப்போது எதிர்பாலினத்தோடும் இவை இணைசேர்கின்றன என்பதால், இவற்றை இருபாலீர்ப்பு கொண்ட விலங்குகள் (Bisexual animals) என்றுதான் வகைப்படுத்த முடியும். பன்முகப் பால்பண்பு கொண்ட விலங்குகளுடன் (Intersex) இணைசேரும் விலங்குகளும் உண்டு. 

தன்பாலீர்ப்பு மட்டுமே கொண்ட விலங்குகள் உள்ள இனம் உண்டா?

செம்மறியாடுகள்

வீட்டு விலங்குகளாக வளர்க்கப்படும் செம்மறியாடுகளில் 8% தன்பாலீர்ப்பு கொண்டவை. இந்த 8% ஆண் செம்மறிகள், பெண் ஆடுகள் இருந்தாலும் ஆண்களுடனே இணைசேர விரும்புகின்றன.  சாம்பல்கால் வாத்து என்ற ஒரு இனத்தில், 15% ஆண் விலங்குகள் தன்பாலீப்பு கொண்டவை.

ஒருகாலத்தில் இதுபோன்ற இணைசேரல் நிகழ்வுகளையும் பாலீர்ப்புப் பண்புகளையும் விதிவிலக்குகளாக மட்டுமே விஞ்ஞானிகள் வகைப்படுத்தினார்கள். 1991ல் ப்ரூஸ் பாகெமிஹிலிஸ் என்ற அறிவியலாளரின் “Biological Exuberance” என்ற புத்தகம் வெளிவந்தது. அது விலங்குகளிடையே இந்தப் பண்புகள் எந்த அளவுக்குப் பரவலாக இருக்கின்றன என்பதைப் பட்டியலிட்டது. அதன்பிறகு அறிவியல் உலகம் இந்தப் பண்பை கவனிக்கத் தொடங்கியது என்றாலும், “டார்வினின் முரண்” (Darwin’s paradox) என்ற ரீதியில்தான் இந்தப் பாலீர்ப்புகள் அணுகப்பட்டன. அதாவது, டார்வின் சொன்ன கருதுகோளின்படி, இது நடக்கக்கூடாது, ஆனாலும் இது நடக்கிறது என்றே விஞ்ஞானிகள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

சமீபகால ஆராய்ச்சிகள் இந்தக் கருதுகோள்கள் பலவற்றை அடித்து உடைத்திருக்கின்றன. “டார்வினின் முரண் என்று சொல்வதே தவறு. இந்தப் பாலீர்ப்புப் பண்பு டார்வின் சொன்ன Fitnessக்கு எதிரானது என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? விலங்குகளின் இனப்பெருக்க வெற்றி என்பது எப்படிப்பட்டது என்று நம்மால் அளந்துவிட முடியுமா? ஒரு விலங்கு இனப்பெருக்கம் செய்யவில்லை என்ற ஒரே காரணத்துக்காக அந்த இனத்தின் தொடர்ச்சிக்கு அது உதவவில்லை என்று எப்படி சொல்ல முடியும்?” என்று பல பரிணாமவியலாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தன்பால் அல்லது இருபால் ஈர்ப்புப் பண்புகள் ஒரு இனத்தின் வலுவுக்கு (Fitness) உதவுகின்றன என்பதைத் தற்போதைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. சமூக விலங்குகளாக இருக்கும் இனங்களில், ஒரே பாலினத்தைச் சேர்ந்த ஜோடிகள், கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அது அந்த இனத்துக்குப் பெரிதும் உதவுகிறது. இருபால் ஈர்ப்புத் தன்மையில் உள்ள நெகிழ்வு, மரபணுவுக்கு வலு சேர்க்கிறது. எதிர்பால் விலங்குகளுடன் இணை சேர்ந்துவிட்டு தனக்குப் பிடித்த இணையுடன் முட்டையை அடைகாக்கும் விலங்குகளில், பெற்றோரின் ஆதரவும் அரவணைப்பும் குஞ்சுகளுக்குக் கிடைத்துவிடுகிறது. சமூகப் படிநிலைகளைக் கொண்ட இனங்களில், இந்த இணைசேரல் நிகழ்வுகள் ஒருவகையான பிணைப்பைத் தருகின்றன.

பல்வேறு பாலினங்கள் மீது ஈர்ப்பு கொண்ட நெகிழ்தன்மையே ஆதிப்பண்பாக (Ancestral trait) இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. அந்த அடிப்படையில் பார்த்தால், இயற்கையில் முதலில் தோன்றியது அனைத்துபாலீர்ப்பு (Pansexuality) தான். எதிர்பாலீர்ப்பு என்கிற தற்போதைய வழக்கம், காலச்சக்கரத்தில் மிக சமீபத்தில் தோன்றியிருக்கவேண்டும்! அப்படியானால் எது இயற்கை? எது இயற்கைக்கு எதிரானது?! 

“இயற்கைக்கு எதிரானது”…. “டார்வினின் கொள்கைக்கு எதிரானது”…. “டார்வின் சொன்னது இது அல்ல”… “இந்தப் பாலீர்ப்புக்கும் சில பயன்கள் உண்டு”… “இது இயற்கைதான்” என்று கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பண்புகளைப் பற்றிய உண்மைக்கு அருகில் வந்து நின்றிருக்கிறது அறிவியல் உலகம். ஆண் விலங்குகள் பெண் விலங்குகளைக் கவர்வதையும் இணைசேர்வதையும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிய அறிவியலாளர்கள், இவற்றைப் பற்றிப் பேசவே தயங்கினார்கள்.

எதிர்பாலீர்ப்பே வழக்கமானது/இயல்பானது என்பது போன்ற மனநிலை (Heteronormativity), விக்டோரியன் தூய்மைவாதம், மதக் கட்டமைப்புகள், சமூகத்தில் இதுபோன்ற பாலீர்ப்புகள் பற்றி நிலவிக்கொண்டிருந்த கருத்துக்கள் ஆகியற்றால் பாலீர்ப்பு பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் நடக்கவில்லை. அப்படியே நடந்தாலும் அவை வெளிப்படையாக விவாதிக்கப்படவில்லை. பண்டைய அறிவியலாளர்களிடையே இதுபோன்ற விஷயங்களைப் பற்றிய முகச்சுளிப்பே அதிகம் என்பதால் இந்த ஆராய்ச்சிகள் வெளிச்சத்துக்கு வரவே பல தசாப்தங்களாகிவிட்டன. 

அறிவியல் உலகில் இது நிஜமாகவே நடந்திருக்கிறது என்றாலும் வெளிப்படையாக இதை எழுதுவதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. அறிவியலுக்கு எதிரான மனநிலையும் போலி அறிவியல் மீதான கவனமும் பரவியிருக்கிற இந்த சூழலில் அறிவியல் உலகில் ஏற்பட்ட ஒரு சறுக்கலைப் பேசுவது சிக்கலானது என்பதை உணர்ந்தேயிருக்கிறேன். ஆனாலும் பால்புதுமையினருக்கெதிரான மனநிலையில் இதுபோன்ற ஆரம்பகட்ட ஆராய்ச்சிகளும் பங்கெடுத்திருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தற்போதைய அறிவியலாளர்கள் இதை மிகவும் கவனத்துடன் அணுகுகிறார்கள். விலங்குகளில் உள்ள பாலீர்ப்பை பற்றி எழுதும்போது, எந்த வகையிலும் மனிதர்களோடு ஒப்பிட்டு அந்தப் பண்புகளை எழுதுவதில்லை என்பதில் கவனத்தோடு இருக்கிறார்கள். “இது வழமை/ இது வழமை அல்ல” என்பதை முடிவெடுப்பது அறிவியலின் வேலை அல்ல என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் சொல்லப்போனால் அறிவியல் ஆராய்ச்சிகளின்மீது அந்தந்த காலகட்டம் மற்றும் சமூக மரபின்மீது இருந்த தாக்கத்தையும் அவர்கள் வெளிப்படையாக அங்கீகரித்து, இதுபோன்ற மரபுகளைத் தூக்கிப் பிடித்து அறிவியலைக் குறுகிய பார்வையோடு அணுகிய அறிவியலாளர்களை மறுதலிக்கிறார்கள். “மானுட விடுதலைக்கு எதிரானது என்றால் அந்த அறிவியலையும் கேள்வி கேட்கவேண்டும்” என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

“வரலாற்று ரீதியாக அறிவியலைக் கட்டுப்படுத்திய சில அனுமானங்கள், மரபுசார்ந்த வழமைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட்டால் பரிணாம அறிவியலில் எத்தனையோ புதிய விஷயங்களைக் கண்டறியலாம். அதற்கு நாம் தயாராகவேண்டும். அறிவியலையே நாம் அறிவியல் பார்வையோடு அணுகிப் பார்க்கவேண்டும். அதிலிருக்கிற பிரச்சனைகளைக் களையவேண்டும் பல்வேறு துறை அறிஞர்களோடு இணைந்து நாம் செயல்படவேண்டும்” என்று 2019ல் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரையில் எழுதுகிறார்கள் அம்பிகா காமத் உள்ளிட்ட விஞ்ஞானிகள். 

இயற்கையைப் பொறுத்தவரை பால்பண்பு என்பதும் பாலீர்ப்பு என்பதும் நாம் வைத்திருக்கிற ஆண் -பெண் இருமைக்குள் அடங்கிவிடுகிற, எளிமையான ஒரு பகுப்பு அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வானவில்லைப் போல பல்வேறு நிறங்களில் அது வெளிப்படுகிறது. இயற்கையையே இன்னும் முழுவதுமாக புரிந்துகொள்ளாத மனித இனம், “இது இயற்கையானது அல்ல” என்று அறிவிப்பது எத்தனை விசித்திரமானது?!

இனப்பெருக்க முறைகளும் இதுபோன்ற பன்முகத்தன்மை கொண்டவையே. முட்டை போடுகிற விலங்குகள்/குட்டி போடுகிற விலங்குகள் என்ற இருமைக்கு அப்பால் இனப்பெருக்க முறைகள் உண்டா? பெருவிலங்குகளிலும் இது காணப்படுகிறதா?

பேசுவோம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.