கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.

தமிழில்: சி.சு. சதாசிவம்

7

இப்படியே மாதங்கள் பல உருண்டன. ஒருநாள் மஹமத்கான் படகுத் துறையின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது அங்கு வாழைத்தோட்ட ஜப்பார் வந்தான். ஊர்க்காரனான அவன் கானுக்குத் தெரியாதவனல்ல. இருவரும் உலக விவகாரங்களைப் பேசத் தொடங்கினர்.

எதையெதையெல்லாமோ பேசிக் கடைசியில் ஜப்பார், “பாருங்க, கான் அண்ணே , உங்க மகளை இப்பிடியே இன்னும் எவ்வளவு நாளைக்கு வீட்டிலேயே வச்சிகிட்டிருப்பீங்க ?” என்றான்.

அப்படின்னா?” கானுக்கு அடிமுடி எதுவும் தெரியாமல் விழித்தார்.

அப்படின்னா…” என்று சற்று இழுத்த அவன் மெதுவாகச் சொன்னான். ”அப்படின்னாஇன்னும் ஒண்ணுமில்ல, எப்பிடியோ ரஷீத் கொழந்தைய எடுத்துகிட்டுப் போயிட்டான்அவன் இனிமே உங்க மகளைக் கூப்பிட்டுக்கப் போறானா என்ன? வயசுப் பொண்ண இன்னும் எவ்வளவு நாளைக்குன்னுதான் ஊட்டுலயே வச்சுக்கிட்டிருப்பீங்க?”

அப்படீன்னா நீ என்னா சொல்றே? நான் அவள கூப்பிட்டுட்டுப் போயி அவன் ஊட்டுல உட்டுட்டு வரணும்ன்றீயா?” மஹமத்கானின் கண்கள் சிவக்கத் தொடங்கின. மூச்சுக்காற்று வேகமாக வரத்தொடங்கிற்று. உணர்ச்சி வசப்பட்டு நெஞ்சு மேலும் கீழுமாக ஏறியிறங்கத் தொடங்கியது.

கான்பாய்! அப்பிடியில்ல; நான் சொன்னதுஉங்களுக்குப் புரியல. நீங்க அவங்கிட்டேயிருந்து அவள தலாக்பண்ணிட்டு வந்துட்டா அவள வேற யாருக்காவது கண்ணாலம் கட்டிக் குடுத்துடலாமேன்னேன்?” மேற்கொண்டு தன் திட்டத்திற்கு அடிப்போட்டான் ஜப்பார்.

இப்போது கானின் ஆத்திரம் அடங்கிப் போய்விட்டது. ஒருவிநாடி. ஜப்பாரின் முகத்தையே உற்றுப் பார்த்தார். ”அப்படீன்னா உனக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்கிறாங்களா?” என்று மெதுவாகக் கேட்டார் கான்.

அதான் நம்ம புதுவூட்டு சலீம் இருக்கிறாருயில்லேஅவரு நேத்து எங்கூட மணிப்புரத்துக்கு வந்திருந்தார். இப்பிடியே போயிகிட்டே பேச்சுவாக்குல எங்கிட்ட இந்த விசயத்தைக் கேட்டார். அவரோட மொதல் பொண்டாட்டி விசயந்தான் உங்களுக்கே தெரியுமே? எப்பவும் வியாதிதான். ஊடு நெறைய இருக்கிற புள்ளைங்கள பாத்துக்கிறதுக்கு யாரும் இல்ல. உங்க மக தலாக் எதுனா வந்திருக்குதான்னு எங்கிட்ட கேட்டாங்க, எனக்குத் தெரியாதுன்னு சொன்னேன். ‘நீ ஒருவாட்டி. மஹமத் கான் கிட்டக் கேட்டுப் பாருன்னு எங்கிட்ட சொன்னாங்க.”

மஹமத்கானுக்கு இப்போது எல்லாம் புரிந்தது. புது வீட்டுச் சலீமை ஊரில் யாருக்குத்தான் தெரியாது? அவருக்கு பம்பாயில் பெரிய ஓட்டல் ஒன்று இருப்பதாக எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். ‘ஊரில் புதிதாகக் கட்டியிருக்கும் பெரிய வீடு, ஊருக்கு வெளியே சந்திரகிரி ஆற்றைத் தொட்டாற்போல பெரிய பாக்குமரத் தோட்டம் ஒன்று, நஞ்சைபுஞ்சை நெலம், சொத்துபத்து என்று வேண்டியளவுக்கு இருந்தன. அவரது பெரிய மகன், தன் பெண்ணைவிடச் சற்றுப் பெரியவனாகவே இருக்கலாம். இப்போது அவன் பம்பாயில் இருக்கிறான். பெண்டாட்டி பிள்ளைகள் இருந்தால் தான் என்ன? உடுத்தவும் உண்ணவும் என்றைக்கும் குறையே ஏற்படாது. தன் மகள் பீடி சுற்ற வேண்டிய தேவையில்லை. தன் குடும்பத்துக்கும் அவரே அவ்வப்போது செலவுக்குக் கொடுப்பார். எதற்காகவும் யோசிக்க வேண்டியதே இல்லை. வயது மட்டும்தான் சற்று அதிகம். அவருக்கு ஏறக்குறையத் தன்னுடைய வயது இருக்கலாம். இருந்தால் என்ன? நாதிரா என்ன சின்னக் குழந்தையா ? வரப்போகும் ஹஜ் மாதத்திற்கு அவளுக்கும் 17 ஆண்டுகள் முடியப் போகின்றதே. அதுவுமில்லாமல் ஒரு முறை திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயும் ஆனவளுக்கு வேறு எந்த மாதிரிக் கணவன் கிடைப்பான்?
யோசனையில் மூழ்கியவராய்ப் பேச்சற்று உட்கார்ந்திருந்தார் மஹமத்கான்.

பாருங்க கான்பாய், நல்லா யோசனைப் பண்ணிப்பாருங்க. உங்களுக்குப் பின்னால உங்க பொண்ணுக்கும் ஒரு வழியாகணும் இல்ல? நான் வர்றேன் என்று சொல்லிக்கொண்டே ஜப்பார் எழுந்து தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டான்.

கான் அங்கேயே துறைக்குப் பக்கத்திலிருந்த பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையை முடித்துக்கொண்டு, ‘வீட்டுக்குப் புறப்பட்டார். ஜப்பார் சொன்னவை அவரின் சிந்தனையில் வலுவாக வேறூன்றி நின்றன. வீட்டுக்கு வந்து எதுவும் பேசாமல் உணவை முடித்துக் கொண்டு படுத்துவிட்டார்.

மறுநாள் காலை விரைவாக எழுந்து தேநீர்சிற்றுண்டி முடித்துக் கொண்டு மணிபுரத்திற்குப் போகும்போது உடுத்தும் கைலியை உடுத்திக்கொண்டார். வெள்ளைத் தொப்பியின் மேல் முண்டாசைத் தலைக்குச் சுற்றிக்கொண்டு குடையைக் கையில் எடுத்துக் கொண்டதும் ஃபாத்திமா கேட்டார்.

நீங்க மணிப்புரத்துக்குப் போறீங்களா?”

ஹும், உனக்கு எதுனா வாங்கிட்டு வரணுமா?”

நாதிராவுக்கு உடுத்திக்கிற சேலையெல்லாம் கிழிஞ்சி போயிருக்குது. அவளுக்கொரு சேலை வாங்கிட்டு வாங்க. அப்பிடியே நம்ம கன்னுகுட்டிக்கி ஒரு கயிறு வாங்கிட்டு வாங்க…’’

ஹும் சரி…” என்று முனகிக்கொண்டே மஹமத்கான் புறப்பட்டார். அவர் மணிப்புரம் நகரை அடைந்த போது நடுப்பகல் பன்னிரண்டு மணி ஆகியிருந்தது. நேராக ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டுத் தேநீர் குடித்தார், அங்கிருந்து நேராக ரஷீதின் கடைக்குச் சென்றார்.
எதிர்பாராவிதமாக மாமனார் வந்ததைப் பார்த்து மருமகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஒருநொடி தத்தளித்துப் போய்விட்டான். பின்பு சமாளித்துக் கொண்டு, முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டு, “வாங்க மாமா, ஒக்காருங்கஎன்று அன்போடு அழைத்தான்.

ஆனால், அவர் வெளியே நின்று கடையில் வேறுயாரும் இல்லையென்று உறுதிப்படுத்திக்கொண்டு, ”நான் ஒக்கார்றதுக்கு வரலைஎன்று உரக்கச் சொன்னார். இதைக் கேட்டதும் ரஷீத் ஏதோ உணர்ந்தவனாகப் பதில் சொல்லாமல் இருந்தான்.

நான் இல்லாதப்போ என் வீட்டுக்கு வந்து கொழந்தையைத் திருடிட்டு வந்துட்டாளே உங்க அம்மா, உங்க ரெண்டு பேருக்கும் வெக்கமாயில்ல?” கானின் குரல் மெதுவாகச் சூடேறிக்கொண்டே வந்தது.

என் கொழந்தையத்தானே நாங்க எடுத்துட்டு வந்தோம்?” அவனுக்கும் மெதுவாக கோபம் வரத் தொடங்கியது. அவனுக்கு மாமனாரிடம் இருந்த மரியாதை என்றோ போய்விட்டிருந்தது.

”சரி, உன் புள்ளைய நீ எடுத்துட்டு வந்துட்ட இல்ல, அப்போ எம்மகளுக்குத் தலாக்குடுத்துடு என்றார்.

என்னது?” தன் காதுகளையே நம்பாமல் கேட்டான் ரஷீத்.

என் மகளுக்குத் தலாக்குடுத்துடுன்னேன்.” இன்னும் உரக்கச் சொன்னார்.

ஸ்சொல்றத மெதுவா சொல்லுங்க. இங்க அக்கம்பக்கத்துக் கடைக்காரங்களுக்கு கேக்கப் போவுது.”

நீ என் மகளுக்குத் தலாக் குடுக்கிறியா இல்லியா?”

நான் குடுக்கலேன்னா என்ன பண்ணுவீங்க?” மருமகனுக்கும் பிடிவாதம்.

என்னெ என்ன அவ்வளவு கையாலாகாதவன்னு நெனச்சிக்கிட்டியா? எங்கவூரு ஆளுங்கள கூப்பிட்டுட்டு வந்து ஒதச்சி உங்கிட்டயிருந்து தலாக் சொல்ல வைப்பேன்.”

கடையின் முன்னால் சச்சரவு ஏற்பட்டு ஜனங்கள் சேர்ந்துவிட்டால் ரஷீதுக்கு அவமானமாகப் போய்விடும். அதனால் அவன் தன் உணர்வுகளை அடக்கிவைத்துக் கொண்டு அமைதியான குரலில், ”நீங்க அவ்வளவு தூரம் போகத் தேவையில்லை. பொண்ணுங்களுக்குப் பஞ்சம்ன்னா நெனச்சிகிட்டீங்க? உங்க மகளவிட்டா எனக்கு வேற பொண்ணே கெடைக்க மாட்டாளா? ஆனா, ஒண்ணு. உங்க மக இதுக்குச் சம்மதிக்கிறாளான்னு தெரியணும்? சொல்லுங்க, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிட்டா போதும். தனக்கு தலாக் வேணுமுன்னு அவ சொல்லியிருக்கிறாளா?” என்று கேட்டான்.

மஹமத்கான் ஒரு விநாடி யோசித்தார். தான் பேசாமலிருந்துவிட்டால் தன்னுடைய திட்டமெல்லாம் தலைகீழாகப் போய்விடும். ஒருமுறை தலாக் கைக்குக் கிடைக்கட்டும், அதற்குப் பிறகு எதைவேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

அவ சொல்லாமலா நான் கேக்கறேன்? நீ எப்போ கொழந்தைய தூக்கிட்டு வந்தியோ அன்னைக்கே அவ மனசு முறிஞ்சு போச்சி. இனிமே அந்தப் புருசன் எனக்கு வேணான்னு அவளே எங்கிட்ட சொன்னதனாலதான் வந்தேன்.” கான் சற்றும் கூச்சப்படாமல் தயக்கமில்லாமல் இதைச் சொன்னார்.

ஷீதுக்குத் தலைமீது இடி விழுந்தது போலிருந்தது. முகம் வெளுத்துப் போயிற்று. தன்னை ஒரு விநாடியும் பிரிந்திருக்க முடியாத நாதிரா, தன் அன்பான மனைவி, தன் குழந்தையின் தாய், தனக்கு எல்லாமாயிருந்த நாதிரா இன்று ஒரே பேச்சில் தன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டாளா? தன்னை வெறுத்துப் புறக்கணித்து விட்டாளா? குழந்தையைப் பார்க்காமல் தனக்கே வேதனையாக இருந்தது என்னமோ உண்மைதான். ஆனால், பாப்புவைக் கொண்டுவர அது மட்டுமே காரணமில்லையே ! குழந்தையில்லாமல் அவளால் வாழ முடியாது என்றும், குழந்தைக்காக அவள் தந்தை அவளைத் தன்னிடம் அழைத்துக்கொண்டு வருவார் என்றும் எண்ணித்தான் தான் குழந்தையைக் கொண்டு வந்தது. தான் பாரூவை அனுப்பியபோது அவள் வராமல் போனது தன் கோபத்தைக் கிளறிவிட்டது. தான் மிகையாகவே நடந்து கொண்டது உண்மைதான். ஆனால், அவள் தனக்குக் கணவனே வேண்டாமென்று சொல்லலாமா? பெண் புத்தியே அவ்வளவு தான். கண்பார்வையிலிருந்து மறைந்தால் போதும் கணவனும் வேண்டாம் ; குழந்தையும் வேண்டாம். அவளுக்கே தான் தேவையில்லாதபோது தனக்கு மட்டும் அவளே வேண்டுமென்ற பிடிவாதம் எதற்கு? ஊரில் பெண்களுக்கா பஞ்சம்?

வாங்க மசூதிக்குப் போகலாம்.” தணிந்த குரலில் ரஷீத் சொன்னவுடன் கானுக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு விரைவாக அவன் ஒப்புக்கொள்வான் என்று அவர் எண்ணவேயில்லை.

இருவரும் பள்ளிவாசலுக்கு வரும்போது பிற்பகல் தொழுகைக்கான நேரம். இருவரும் தொழுகை செய்தனர். எல்லோரும் பள்ளிவாசலிலிருந்து போன பின்பு, மாமனாரும் மருமகனும் மௌல்வியின் அருகில் வந்தனர்.
ரஷீதே முதலில் பேச்சைத் துவக்கினான்.

மௌல்வி சாஹிப், நான் என் மனைவிக்குத் தலாக்குடுக்கலாம்னு வந்தேன்.”

ஏன்? தலாக் குடுக்கறதுக்கு இப்போ என்ன ஆயிடுச்சி?” அமைதியாகக் கேட்டார் மௌல்வி.

அவ என்னக் கேக்காமலே என் வீட்டிலேருந்து அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டா. இப்பேர் ஆறு மாசமா அங்கேயேதான் இருக்கிறா. இதுவரைக்கும் ஒரு தடவகூட எங்கிட்ட வரல. அதனால அவ எனக்கு வேணாம்.”

பாருப்பா, என்னமோ பொம்பள புத்தி, தெரியாம போயிட்டா. இவ்வளவு சாதாரண காரணத்துக்கெல்லாம் ’தலாக்குடுத்துடலாமா? ஒருமுறை பிரிஞ்சுபோயிட்டா திரும்பவும் கூடறது கஷ்டம். நல்லா யோசன பண்ணிப் பாரு.”

ஆனால், அவன் எண்ணிப் பார்ப்பதற்கு அதில் எதுவுமேயில்லை. மஹமத்கானே சொன்னார்.

இல்ல மௌல்வி சாஹிப், இதுல யோசன பண்றதுக்கு எதுவும் இல்ல. இவன்கூட வாழறதுக்கு எம் பொண்ணுக்கு விருப்பமில்ல. இதுல சும்மா நாள் கடத்துறதுல என்ன பிரயோஜனம் ?”

இதற்கு மேலும் சொல்வதற்கு மௌல்விகளுக்கு எதுவும் தோன்றவில்லை.

நான் என் பெஞ்சாதி நாதிராவை தலாக் ஒண்னு, ரெண்டு, மூணு முறை சொல்லி அவள விடுதலை பண்ணட்டேன்.” கடைசிச் சொற்களைச் சொல்லும்போது அவனின் குரல் சற்று நடுங்கிற்று. மௌல்விகள், கான் மற்றும் அங்கிருந்த வேறு இருவர் இதற்குச் சாட்சிகளாயினர்.

Muslim men praying in Tashahhud posture

ஆயிற்று. இனிமேல் நாதிராவுக்கும் ரஷீதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 105 ரூபாய் மஹரை ரஷீத் கடையிலிருந்து கொண்டுவந்து மாமனாரின் கையில் கொடுத்தான். வரதட்சிணைப் பணத்தை அவன் திருப்பித் தந்திருக்க வேண்டும். ஆனால், பெண்ணைச் சேர்ந்தவர்களே ‘தலாக்’ கேட்டிருப்பதால் அதைத் திருப்பித்தர வேண்டியதில்லை. அவன் கொடுத்த நகைகள் மற்றும் அவன் வாங்கித்தந்த துணி-மணிகள் ஏதாவது இருந்தால் நாளைக்குத் திருப்பித் தந்துவிட்டால் போயிற்று.

எல்லோரும் தத்தம் வீடுகளை நோக்கிப் புறப்பட்டனர். மஹமத்கான் ரஷீத் கொடுத்த பணத்திலிருந்து பேட்டைக்கடையில் மகளுக்குத் தேவையான துணிமணிகளை வாங்கிக் கொண்டார்.

நாதிராவின் வாழ்க்கையில் இன்னோர் அத்தியாயமும் இவ்வாறு முடிந்தது.

(தொடரும்)

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.