நாதிரா எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாள் என்று அவளுக்கே தெரியாது. மெதுவாக உணர்வுபெறத் தொடங்கினாள். திடுக்கிட்டு விழித்த அவள் வீட்டை நோக்கி ஓடினாள்.

உம்மா . . .” அடிபட்ட காட்டு விலங்கின் தீனமான ஓலமாகக் குரல் வெளிவந்தது.

என்னாச்சி நாதிரா?” கலவரத்தோடு ஃபாத்திமா சமையலறையிலிருந்து வெளிவருவதற்குள் நாதிரா தன்னறைக்குள் சென்றுவிட்டிருந்தாள். கட்டிலின்மீது நிலை குலைந்து விழுந்து அழுதுகொண்டிருந்த மகளைப் பார்த்து ஃபாத்திமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. நாதிரா எழுந்து நின்று ஒருநொடி கண்ணைக் கசக்கியவாறே ஃபாத்திமாவைப் பார்த்தாள்.

உம்மா, பாப்புவை எடுத்துட்டு மாமி பொறப்பட்டுப் போயிட்டாங்க.” நாதிரா தேம்பியவாறே இதயம் பிளந்துபோகும்படி அழுதுகொண்டே சொன்னதும் சற்று நேரம் ஃபாத்திமாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

கட்டிவைத்த துணிமணிகளின் மூட்டை அப்படியே இருந்தது. படிப்படியாக அவருக்குப் புரிந்தபோது அவர் மகளைக் கட்டிக்கொண்டு வென்று அழத் தொடங்கினார். ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்ளும் நிலையில் யாரும் இல்லை. இருவருடைய இதயங்களுக்குள்ளும் எரிமலை வெடித்து, அந்நெருப்புக் குழம்பிலேயே இருவரும் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தனர்.

மஹமத்கான் அன்று காலை ஃபாத்திமா வளர்த்து வந்த ஆட்டுக்கடாவை விற்பதற்காகத் தமக்கு அறிமுகமான ஒருவரின் வீட்டுக்குப் போயிருந்தார். வரும்போது பிற்பகலாகி விட்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் நெடுந் தொலைவு நடந்திருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தார். ஆட்டுக்கடாவிற்குத் தான் எதிர்பார்த்திருந்த விலையும் கிடைக்காமல் பொறுமையிழந்து வீட்டிற்கு வந்திருந்தார். ஃபாத்திமா சமையல்கூடச் செய்யாமல் வீட்டிற்குள் ஒரு மூலையில் பேயறைந்தவரைப்போல உட்கார்ந்திருந்தார். திண்ணையில் நாதிராவைக் காணவில்லை. பீடித்தட்டு எங்கோ ஒரு பக்கம் விழுந்துகிடந்தது. பீடியிலைகள் காற்றுக்குப் பறந்து அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. இதைப் பார்த்த கானுக்குக் கோபம் மேலும் பற்றிக்கொண்டு வந்தது.

இந்தப் பொண்ணுக்கு கொஞ்சங்கூடப் பொறுப்பேயில்ல. பீடி எலைங்கள இப்பிடி எறச்சு வீணாக்கினா அதுங்கள ஈடுகட்றவங்க யாரு? அந்த ஏஜென்ட்டு எம்மேல நெருப்பாப் பாய்வானே?” என்று முனகிவிட்டு, ”நாதிராஎன்று உரக்க அழைத்தார்.

வீட்டின் உள்ளே கடும் அமைதி மண்டிக்கிடந்தது.

இவ எங்க போனா?” என்று கர்ஜித்துக்கொண்டு மஹமத்கான் வீட்டுக்குள் காலடி வைத்தார். மூலையில் அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்த ஃபாத்திமா கண்ணில் பட்டார். கான் கோபத்தில் கத்தினார் : ”என்ன, எதுக்கு இப்பிடி ஒக்காந்திருக்கிறே? யாராவது செத்துப் போயிட்டாங்களா? அந்தப் பீடி எலையெல்லாம் காத்துக்குப் பறந்துபோயிட்டிருக்குது. நீங்க தாயும் மகளும் உள்ளெ என்ன பண்றீங்க?”

இதைக் கேட்டதும் ஃபாத்திமா வென்று குரலெழுப்பி அழத்தொடங்கி விட்டார். சற்று நேரங்கழித்துத் தேம்பிக்கொண்டே மெதுவாக நடந்ததெல்லாவற்றையும் கணவனுக்குத் தெரிவித்தார். கடைசியில்,
ஒரு நாளைக்கில்லேன்னாலும் ஒரு நாளைக்கு சமாதானமாயிடுவீங்க. எம் பொண்ணு நிம்மதியா அவ புருசன் வீட்டுக்குப் போயிடுவான்னு நான் இது வரைக்கும் நம்பியிருந்தேன். நீங்க இவ்வளவு அடம் புடிப்பீங்கன்னு நான் நெனைக்கவேயில்லை. கொழந்தையை எடுத்துகிட்டுப் போனபின்னால அவங்க இவளக் கூப்பிட்டுக்குவாங்களா? இனிமே இவ தன் புருசன மறந்துட வேண்டியதுதான். பெத்த பொண்ணு தலையில் நீங்களே கல்லைத் தூக்கிப் போட்டுட்டீங்களே?” என்று அடக்கி வைத்திருந்த ஆத்திரம் தீர கணவனுக்கு எதிராக என்றுமே பேசியறியாத ஃபாத்திமா அழுது கொண்டே இவ்வளவையும் பேசி முடித்தார்.

இதைக் கேட்டதும் மஹமத்கானின் கோபம் இருந்த இடம் தெரியாமல் இறங்கிவிட்டது. சிறிது நேரம் அவரால் எதுவும் பேச முடியாமல் ஊமையைப் போல் நின்றுவிட்டார். அவருக்கும் இது சற்றும் எதிர்பாராததாக இருந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார். பிறகு தன்னுடைய வேதனையை அடக்கிக்கொண்டு நடந்து போனது ஒன்றும் பெரிய சங்கதியில்லை என்பதைப் போல உரக்க, ”போனாப் போகட்டும். அவன் புள்ளை நமக்கெதுக்கு? அவன் ‘தலாக்’ குடுத்துட்டா, எம்மகள நான் இன்னொருத்தனுக்கு ‘நிகாஹ்’ பண்ணிக் குடுத்துட்டுப் போறேன்” என்று உளறினார்.

அவர் பார்வையில் பெண் என்பவள் மன உணர்வுகள் எதுவுமில்லாத, நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு பிறவி. தகப்பன், கணவன், கடைசியில் தன்னை வைத்துக் காப்பாற்றப் போகும் மகன் இவர்கள் எப்படிச் சொல்கிறார்களோ அப்படியே கேட்டுக்கொண்டு, விழுந்துகிடக்க வேண்டியவள். அவருடைய கணிப்புப்படி குழந்தை, ரஷீ தினுடையது. அதன் பொறுப்பும் ரஷீதினுடையது. அந்தக் குழந்தையைக் காசு வாங்காமல் தாங்கள் இவ்வளவு நாட்களும் வளர்த்ததே பெரியது. குழந்தைக்கும் நாதிராவுக்கும் அதிகத் தொடர்பு எதுவும் இல்லை.

அதேபோல அவளது தந்தை, ‘உனக்கு இந்தக் கணவன் வேண்டாம்; நான் உன்னை வேறு கணவனுக்குக் கட்டி வைக்கிறேன்’ என்றால் அதையும் அவள் முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். கணவன்-மனைவி உறவு என்பதும் அவ்வளவு தான். ‘ நான் மனைவியை விட்டுவிட்டேன் ‘ என்று மூன்றுமுறை சொல்லிவிட்டால் முடிந்துபோயிற்று. அந்த நேரத்திலிருந்து அவன் யாரோ, அவள் யாரோ. ஆனால், பெண்ணுக்கு இந்தச் சலுகை கிடையாது. அவன் கொடுத்த துணிமணிகள், பொருட்கள் ஏதாவது இருந்தால் அவற்றை உடனே அவன் வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டால் முடிந்தது. அதன்பிறகு மூன்றரை மாதங்கள் கழிந்ததும் அவள் வேறொருவனைத் திருமணம் செய்துகொள்ளலாம். இந்த மூன்றரை மாதங்கள் எதற்காகவென்றால் அந்தக் கணவனால் அவளுக்கு ஏதாவது கரு உருவாகி இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்குத்தான்.

ஆகையினால் மஹமத்கானுக்கு இது எதிர்பாராததாக இருந்தாலும் நடக்கக் கூடாத ஒன்று நடந்துபோய் விட்டதாகப் படவில்லை. இது ஊரில் நாள்தோறும் நடைபெறக் கூடியதுதான். அவரைப் பொருத்தவரையில் இதில் அவமானப்படுவதற்கோ வருத்தப்படுவதற்கோ ஒன்றுமேயில்லை. ஒருவேளை ரஷீத் தலாக்கொடுத்துவிட்டால் தான் என்ன? இன்னொருவனைத் தேடினால் ஆயிற்று. யாரும் கிடைக்காமலா போய்விடுவார்கள். மனைவி குழந்தைகளிருப்பவர்கள் என்னமோ உடனடியாகவே கிடைத்துவிடுவார்கள். அப்படிப்பட்ட யாராவது ஒருத்தருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டால் போயிற்று. இதுதான் அவரின் எண்ணம்.

ஆனால், நாதிரா மட்டும் படுத்த இடத்திலிருந்து எழவே இல்லை. தான் அவ்வளவு அன்பு செலுத்திய கணவனும் தன் தாயைப் போலக் கருதிவந்த மாமியாரும் தன்னை இவ்வாறு வஞ்சித்து விட்டார்களே? இனி யாரைத் தான் நான் நம்புவது? தான் அவர்களுக்கு என்ன கெடுதல் செய்தோம்? என்ன தவறைச் செய்தோம்? ஒருநாளும் கணவனை, அதை வாங்கிவா இதை வாங்கிவா என்று தொல்லைப்படுத்தியதே இல்லை. மாமியாரையும்கூட என்றுமே மனம் நோகச் செய்ததில்லை. காலையில் எழுந்து தான் பச்சைத் தண்ணீரில் குளித்தாலும், மாமியாருக்கு மட்டும் தொழுகை செய்வதற்கும் கைகால்கள் கழுவுவதற்கும் வெந்நீர் காய்ச்சிக் கொடுத்துவந்தாள். மாமியாரின் துணிகளையும் தானே துவைத்துக் கொடுத்து வந்தாள். காவள்ளியின் அந்தத் தோட்டம், அந்த வீடு, அதில் வாழ்பவர்களுக்காக அவள் தன் உயிரையே வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருந்தாள். ஆனால், அவளுடைய உயிர் யாருக்கும் தேவையாக இருக்கவில்லை. ரஷீதுக்கு மனைவியாக இவளில்லாவிட் டால் இன்னொருத்தி வருவாள். ஒருத்தி என்ன நான்கு பேரை வேண்டுமானாலும் அவன் திருமணம் செய்துகொள்ளலாம். குர்ஆனில் அப்படித்தானே சொல்லியிருக்கிறது? அதையாரும் கேள்வி கேட்கவே முடியாது.

குழந்தைகளின் மீது உரிமை, அதிகாரம், பொறுப்பு எல்லாமே தந்தைக்குத் தான். ஆண் குழந்தையானால் ஏழு ஆண்டுகள் வரையும் பெண் குழந்தையானால் 14 ஆண்டுகள் வரையிலும் தாயோடு இருக்கலாம். ஆனால், ஆண்டுக் கணக்கையெல்லாம் யார் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். தமக்கு எப்போது வசதியோ அப்போது அழைத்துக்கொண்டு போய்விடுவார்கள். (பெண் குழந்தைகளை மட்டும் அப்படி அழைத்துக்கொண்டு போவது குறைவு) இல்லாவிட்டால் அந்தக் குழந்தைகளுக்குச் செலவுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று இசுலாமிய சமயம் சொல்கிறது. அதற்காக, ஒருமுறை ‘தலாக்’ கொடுத்து விட்டால், அல்லது அதற்கும் முன்பே முடிந்த அளவுக்கு விரைவாகத் தாயையும் குழந்தைகளையும் பிரித்துவிடுவார்கள். இதில் யாருக்கும் எந்தக் குறைபாடும் தெரிவதேயில்லை. ஆனால், கைக்குழந்தையாக இருந்தால் மட்டும் எல்லோரும் சற்று வருத்தத்தை வெளிப்படுத்திக்கொள்வார்கள். ”ஐயோ, கொழந்தை ரொம்பச் சின்னது” என்று. அவ்வளவுதான். நான்கு நாட்களுக்குள்ளாகவே எல்லோரும் இதையெல்லாம் மறந்துவிடுவார்கள். அழியாத ஒரு காயம் பட்டு அதிலிருந்து என்றென்றைக்குமாகக் குருதி கொட்டிக் கொண்டிருப்பது தாயின் இதயத்திலிருந்து மட்டும்தான்.

நாதிராவின் வேதனையும் அவ்வாறே ஆயிற்று. பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தையைத்தானே அவள் மாமியார் எடுத்துக்கொண்டு போனது? மார்பில் பால்கட்டிக் கொண்டு மறுநாள் அவளுக்குப் பொறுக்கமுடியாத வலியெடுக்கத் தொடங்கியது. மறுநாள் இரவுக்குள் அவளுக்குக் காய்ச்சலும் குளிரும் தொடங்கிவிட்டன. அவளையறியாமல் அவளுடைய கை ஏதாவது மார்பின் மீது பட்டுவிட்டால், வலியினால் துடித்துப்போய் விடுவாள். இந்த வலியையும் மீறி மகனை நினைத்து அவள் அழுதுகொண்டேயிருந்தாள்.

இரண்டு மூன்று நாட்களில் உடல் நோய் குணமாயிற்று, மார்பில் பால் வற்றிப்போய் மார்புவலியும் குறைந்து போயிற்று. மனநோய்க்கு மட்டும் மருந்தே இல்லாத காரணத்தால் அந்த நோய் மட்டும் அப்படியே அவள் மனதில் நின்று நிலைத்துவிட்டது.


முன்போலவே நாட்கள் கழிந்தன. ஃபாத்திமா பசு. ஆடு, கோழி என்று பின்னால் திரிந்துகொண்டிருந்தார். தோட்டத்தில் பாதியை விற்றுவிட்டதால் விற்பதற்கு என்று இப்போது முன்போல தேங்காயோ தென்னங்கீற்றுகளோ கிடைப்பதில்லை. தென்னையோலைகளை இப்போது ஃபாத்திமா ஒருத்தியே உட்கார்ந்து கொண்டு முடைவார். பசும்பாலையும் வீட்டிற்கே யாராவது வந்து வாங்கிக்கொண்டு போவார்கள்; முன்னைவிடச் சற்று அதிகமாகவே பாலில் நீரைக் கலந்துவிடுவார். ஒரே வேறுபாடு என்னவென்றால் முதலில் ஜமீலா பீடி சுற்றிக்கொண்டிருந்த இடத்தில் இப்போது நாதிரா உட்கார்ந்துகொண்டு பீடி சுற்றிக் கொண்டிருக்கின்றாள். சுற்றிய பீடிகளை அவளின் தந்தை கடைக்குக் கொண்டுபோய்க் கொடுத்து விட்டு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார். இரவு கடைசித் தொழுகைக்குப் பிறகு எல்லோரும் சாப்பிட்டுவிட்டுப் படுப்பார்கள்.

ஒரு நாள் மஹமத்கான் பீடிக்கட்டுகளைக் கொண்டு போய் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தவர், ஃபாத்திமா மீது ஆத்திரத்தோடு எரிந்துவிழத் தொடங்கினார். அவர் நாதிராவை நேருக்குநேராக அதட்டுவதில்லை.
அடியே உம் மகளுக்கென்னாயிப் போச்சு? சுத்தின பீடிங்கள்ளே பாதிக்குப் பாதி சரியாயில்லேன்னு அந்த ஏஜன்ட்டு வீசியெறிஞ்சிட்டான். கெடைச்ச காசெல்லாம் நஷ்ட ஈட்டுக்குச் சரியாப் போயிடிச்சுன்னு புடிச்சிக்கிட்டான். இனிமே சாப்பாட்டுக்கு என்னா பண்றது? மனசவச்சி பீடிய சுத்தறதுக்கு இவளுக்கு என்னா?”

இந்த நெலைமையிலே பீடி சுத்தறதுலே அவ மனசு எப்பிடிப் போவும்? கொழந்தைய எடுத்துட்டு போனதிலேருந்து அவ சைத்தான் புடிச்சவளைப்போல நடந்துக்கிறா. ஒரொரு நேரத்துல சாப்பாட்டையே மறந்துடறா. நான் கூப்பிடப் போனா என்மேல எரிஞ்சிவுழறா. அல்லா என்னெ எப்பத்தான் கூப்பிட்டுக்கப் போறானோ?” என்று சொல்லிவிட்டு, ”பாருங்க, உங்களுக்கொண்ணு சொல்றேன். உங்களுக்குப் புண்ணியமாப் போவுது, அவள கூட்டிப்போயி காவள்ளியிலே உட்டுடுங்க.” கெஞ்சும் குரலில் ஃபாத்திமா வேண்டிக்கொண்டார். முன்பே கோபத்தினால் கொதித்துக்கொண்டிருந்த கானுக்கு, நெருப்பில் நெய்யை ஊற்றியது போலாயிற்று.

என்ன சொன்னே, அவள காவள்ளியில் கொண்டு போய் விடணுமா? எனக்கு என்ன புள்ளைங்க ஏராளமா கெடக்குறாங்களா? என் பேரன அவங்க திருடங்களைப் போல வந்து திருடிட்டுப் போனாங்களே? அவன் ஆம்பளையாயிருந்தா என் முன்னால் வந்து கொழந்தைய எடுத்துகிட்டுப் போயிருக்கணும். இல்லன்னா எம் பொண்டாட்டிய அனுப்பிடுங்கன்னு கேட்டிருக்கணும். உஹும், அவ்வளவு தைரியம் அவனுக்கேது? இப்போ அப்பேர்பட்டவன் ஊட்டு வாசலுக்கு என் மகளக் கூட்டிட்டு போய் விடணுமா? உனக்கு என்னா பயித்தியமா புடிச்சிருக்குது?” அவருடைய அதட்டலான. பேச்சுக்கு ஃபாத்திமா மௌனமாகிப் போனார்.

அவரும் எண்ணிக்கொண்டார். ‘குழந்தையை எடுத்துக் கொண்டு போகும்போது தனக்காவது ஒரு பேச்சு சொல்லிவிட்டுப் போயிருக்கலாமேஎன்று. அவர்களின் குழந்தை. நாங்களென்ன தடுத்திருப்பமா? அல்லது மருமகளை அனுப்பி வை என்று தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமில்லையா? பாவம், பெண் எவ்வளவு ஆசையோடு துணி மணிகளைக் கட்டிவைத்தாள்; இல்லை, இவர்கள் யாரும் மனிதர்களே இல்லை. ஒரு பெண்ணின் இதயத்தை, ஒரு தாயின் வேதனையைப் புரிந்துகொள்ள முடியாத இவர்கள் என்ன மனிதர்கள் ?’

(தொடரும்)

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.