வாழ்க்கையில் ஒருவரை மட்டும் காதலிப்பது, அவரையே இணையாக ஏற்று வாழ்வது என்பது எல்லாருக்கும் சாத்தியம் இல்லை. ஒரு சிலருக்கு மட்டும் அப்படி அமையலாம். பலருக்கு அமையாமல் போகலாம். அதற்காக திரும்ப காதல் வரக் கூடாது என்ற விதி ஏதும் இல்லை. காதல் திரும்ப வரலாம், ஒரு முறை மட்டுமல்ல, பலமுறை. ஏதேனும் ஒரு காதலுறவு கல்யாணம் வரை போகலாம். இது யதார்த்தமானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. இது பெண் ஆண் இருபாலருக்கும் பொருந்தும். என்றாலும், ஆணுக்குத் திரும்ப காதல் வருவதை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் சமுதாயம், பெண்ணுக்கென்று வரும்போது அப்படி நடந்துகொள்வதில்லை. தேவையற்ற கேள்விகள் கேட்டு, அவளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி, மனதளவில் அவளை ஆயுள்தண்டனை கைதியாக்குகிறது.

ஒரு பெண்ணும் ஓர் ஆணும் காதலிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். சில காலத்திற்குப் பிறகு அவளுக்கு அவனைப் பிடிக்காமல் போய்விடலாம்; அவனுடன் இணைந்து வாழ்வது ஒத்து வராதெனத் தோன்றலாம்; அவனைப் பிரிய நினைக்கலாம். இதெல்லாம் இயல்பானது. ’பிடித்திருக்கிறது’ என்று சொல்ல எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு உரிமை, ’பிடிக்கவில்லை, பிரிந்துவிடலாம்’ என்று சொல்வதற்கும் பெண்ணுக்கு உண்டு. இல்லை, வேறு ஏதாவது காரணத்தால் காதல் கைகூடாமல் போகலாம், இருவரும் பிரிய நேரிடலாம்.

காதல் கைகூடாததால், ஆண் தாடி வளர்ப்பதையும், தண்ணி அடிப்பதையும், சோகமாகத் திரிவதையும் பார்த்துப் பரிதாபப்படும் பொதுப்புத்தி, பெண்ணுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தையும், அவள் சோகத்தையும் பெரிதாக அங்கீகரிப்பதில்லை. அதுவும், பெண் தன் விருப்பத்தின் பேரில், காதலித்த ஆணை வேண்டாம் என்று சொன்னாலோ, பிரிய முடிவெடுத்தாலோ, முதலில் அந்தக் காதலனாலேயே அதை ஒப்புக்கொள்ள முடியாது. தன் ’ஆண்மை’க்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாக, தான் ’அவமானப்படுத்தப்பட்டு விட்டதாகக்’ கோபப்படுகிறான். சுற்றியிருப்பவர்களும், ’திமிர் பிடிச்சவ’, ’அவனுக்கு என்ன குறைச்சல்னு வேணாம்னு சொல்லிட்டுப் போறா’, ’பாவம் அந்தப் பையன். ஆனாலும் ஒரு பொம்பளப் புள்ளைக்கு இவ்ளோ திமிர் கூடாது’ என்றெல்லாம் அந்தப் பெண்ணைத்தான் குறை கூறி, அந்த ஆணுக்காகப் பரிதாபப்படுகின்றனர். காதலி வேண்டாமென்று சொல்லிவிட்டதால் காதலனுக்கும் சோகம் இருக்கும்தான், வருத்தம் இருக்கும்தான், அதையெல்லாம் தாண்டி, இது அந்தப் பெண்ணின் உரிமை, அதை மதிக்க வேண்டும் என்ற புரிதலுடன், கண்ணியமாக விலக வேண்டும். அதை விட்டுவிட்டு, மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு தன் முன்னாள் காதலியைத் தூற்றுவதும், இழிவுபடுத்துவதும், பழிவாங்க நினைப்பதும் அப்பட்டமான உரிமை மீறல். தோழர்கள் இதை உணர வேண்டும்.

இப்போது பெண்ணுக்கு வருவோம். ஏதோ ஒரு காரணத்தால், அவள் பிரியும் முடிவு எடுத்திருந்தாலும், அந்த முடிவால் அப்பெண்ணுக்கும் சோகம் இருக்கும், கனவுகள் கலைந்த வருத்தம் இருக்கும். எல்லோரும் மோசமாகப் பேசுவார்கள் என்று அறிந்திருந்தும், அந்தப் பெண் பிரிய முற்படுகிறார் என்றால் அவளுக்கென்று பிரச்னைகள் இருக்கும், காயங்கள் இருக்கும், நியாயங்கள் இருக்கும். அதை எல்லோரிடமும் சொல்ல முடியாது, சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவள் முடிவை மதிக்காமல், அவளைத் தூற்றுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது. இதன் விளைவாக, மன உளைச்சலுக்கு ஆளாகி, தனக்குள் புழுங்கி, டிப்ரஸனுக்குப் (depression) போகும் பெண்கள் இங்கு அதிகம். மற்றவர்கள் இழிவுபடுத்துவது ஒரு புறம் என்றால், காலங்காலமாக ஆணாதிக்கச் சமுதாயம் செய்த மூளைச்சலவையால், தான் ’நல்ல பெண் இல்லையோ?’, ’கற்புள்ள பெண் கிடையாதோ?’, ’குடும்பத்துக்கு ஏற்ற பெண் அல்லவோ?’ என்றெல்லாம் தன்னையே விமர்சித்து, காயப்படுத்திக் கொள்கிறாள் அந்தப் பெண்.

மனதளவில் பெண்ணுக்கு ஏற்படும் காயங்கள் காலப்போக்கில்தான் ஆறும். ’நீ இப்படியே இருக்கக் கூடாது, உனக்கேற்ற துணையைத் தேடிக் கொள், கல்யாணம் பண்ணிக்கொள்’ என்று குடும்பத்தினரும் நண்பர்களும் சுற்றியிருப்பவர்களும் அட்வைஸ் பண்ண ஆரம்பிப்பார்கள். அவள் தன்னைச் சரிப்படுத்திக் கொள்வது எளிதான காரியமில்லை. ’திரும்பவும் காதலிக்கத்தான் வேண்டுமா?’, ’அவனும் முன்பு பார்த்தவனைப் போல் இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?’, ’அவனுக்கும் எனக்கும் ஒத்து வருமா? அவன், என்னோட பழைய காதலை எப்படி எடுத்துக்கொள்வான்?’, ’சுற்றியுள்ளவர்களும் நண்பர்களும் என்ன சொல்வார்கள்? என்னைத் தப்பாக நினைப்பார்களா?’ என்றெல்லாம் சந்தேகங்களும் பயங்களும் குழப்பங்களும் வரும். அதிலிருந்து மீண்டு, இன்னோர் ஆணைத் தேர்ந்தெடுப்பது, காதலிப்பது என்பது பெண்ணுக்கு அவ்வளவு எளிதான காரியமில்லை. குற்றவுணர்வும் தன்னைப் பற்றிய விமர்சனங்களும் அவளைப் பாடாய்படுத்தும்.

இந்த நிலையில் உள்ள பெண்களைப் பரிவுடன் அணுக வேண்டும். எந்தத் தீர்ப்பும் எழுதாமல், முன்முடிவு கண்ணாடி போட்டுக் கொள்ளாமல் அவர்களுடன் உரையாடுவது முக்கியம். ’இதில் எந்தத் தப்பும் இல்லை. உன் வாழ்க்கை, உன் முடிவு, உன் உரிமை கண்ணம்மா. எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் வாழ்க்கையை எதிர்கொள். நேசமான இணையுடன் வாழ முடிவு செய்துவிட்டால், அதில் ஏற்றத்தாழ்வுகள் வரத்தான் செய்யும். அதற்குப் பயந்து கொண்டு நேசிக்காமல் இருந்தால், இணையைத் தவிர்த்தால், இழப்பு உனக்குத்தான். நம்பிக்கையுடன் முயற்சி செய். நாலு பேருடன் பழகிப்பார். உனக்கு ஏற்ற அருமையான இணையர் கிடைப்பார்’ என்று நமது அன்பான பெண்களுக்கு, தோழிகளுக்குச் சொல்ல வேண்டும். நம்பிக்கையளிக்க வேண்டும். ’வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் காதல் வரும். அது முடிந்து விட்டால், இன்னொரு காதலுக்கு இடமேயில்லை’ என்று வரும் சினிமா வசனமெல்லாம் வறட்டுத்தனமானது, அன்புசூழ் யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்து வராது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும்.

ஒரு வழியாக மீண்டு வந்து, மறுபடியும் காதலித்து, தனக்கேற்ற இணையைத் தேர்ந்தெடுத்து, கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று பெண் அறிவிக்கும் போது, அதற்கு இந்த ஆணாதிக்கச் சமுதாயம் ஆற்றும் எதிர்வினையில், வன்மமும் பெண் வெறுப்பும் சரிவிகிதத்தில் இருப்பது கசப்பான உண்மை. பெற்றோர் பார்த்து செய்யும் ஏற்பாட்டுத் திருமணமாக இருந்தால்கூட, ’எப்படியோ ஒரு ஏமாந்த பையனைப் பிடிச்சு, வரதட்சணை குடுத்து, அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் குடுக்குறாங்க’ என்ற அநாகரிக கமெண்ட்டோடு நிறுத்திக் கொள்வார்கள். ஆனால், அந்தப் பெண் திரும்பவும் ஓர் ஆணைக் காதலித்து, கல்யாணம் செய்துகொள்கிறாள் என்றால், ’இவளப் போய் யார் காதலிச்சா?’, ’இவளோட பழைய விஷயம் அவனுக்குத் தெரியுமோ, தெரியாதோ?’

’இவனோடயாவது ஒழுங்கா இருந்தா சரிதான்’, ’அந்தப் பையன் பாவம்’ என்றெல்லாம் காதுபடவே பேசுவார்கள். இன்விடேஷனை நீட்டும் பெண்ணை மனசார வாழ்த்துவதை விட்டுவிட்டு, ’கல்யாணமே பண்ண மாட்டேன்னு நினைச்சேன்’ என்று நகைச்சுவையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, அப்பெண்ணின் மனதைப் புண்படுத்துபவர்களை என்ன சொல்வது? இவர்கள் யாரும், அந்தப் பெண்ணின் கடினமான காலகட்டத்தில் உடன் இருந்து உதவியிருக்க மாட்டார்கள்.

இதற்குப் பின்னால் இருப்பது, ’அது எப்படி நீ மறுபடியும் காதலிக்கலாம்? கல்யாணம் பண்ணிக்கலாம்? காலங்காலமா கட்டமைச்சிருக்கிற ’கற்பு’ங்கற கருத்தாக்கம் என்னாகிறது?’ என்ற ஆணாதிக்க பொதுப்புத்திதான். ’பெண் காதலிச்சாலே தப்பு, அதை உடைச்சிட்டு மறுபடியும் காதலிச்சா, கல்யாணம் பண்ணினா பெரிய தப்பு’ என்ற கண்ணுக்குத் தெரியாத விலங்கால் நமது பெண்கள் அனைவரும் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அதை உடைக்காதவாறு பொதுச் சமூகமும் மதங்களும் ஜாதியக் கட்டமைப்பும் ஊடகங்களும் பார்த்துக்கொள்கின்றன.

அன்புத் தோழியரே, காதலியுங்கள், அது தோல்வியுற்றால் மீண்டும், மீண்டும் காதலியுங்கள். இந்தச் சமுதாயம் ஆணாதிக்கமானதுதான். ஆனால், பெண்ணைச் சக தோழியாக மதிக்கும், அவள் உரிமைகளைப் பற்றிய புரிதல் உள்ள ஆண் தோழர்கள் இங்கு பலர் இருக்கிறார்கள். உங்கள் மனத்தடையை உடைத்தால், நம்பிக்கையுடன் முயற்சித்தால், உங்களுக்கேற்ற அற்புதமான இணையர் கிடைப்பார். அப்படி முயற்சித்து, ஏற்ற இணையைத் தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக வாழும் பல தோழிகளே இதற்கு சாட்சி. வாழ்தல் இனிது தோழியரே!

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.