சமீபத்திய பரபரப்புச் செய்தி சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து விஷயம் தான். ஊடகங்களுக்கும் முகநூல் கருத்தர்களுக்கும் சரியான தீனியாக அரைபடுகிறது. சமந்தா செய்தது சரியென்று ஒரு கூட்டம் ஆர்ப்பரிக்கையில், தவறென்று இன்னொரு கூட்டம் வறுத்தெடுக்கிறது. ஆனால், இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் சமந்தாவை மட்டுமே ‘டார்கெட்’ செய்கிறார்கள். இதற்குக் காரணம் அவரொரு பெண் என்பது மட்டுமே.

சில ‘முற்போக்கு’ எழுத்தாளர்கள்கூட சமந்தாவை ஏமாற்றுக்காரப் பெண் போலவும், இந்தப் பிரிவால் அவர் ‘நல்ல’ வாழ்க்கையை இழந்துவிட்டது போலவும் கூவுகிறார்கள். நல்ல வாழ்க்கை என்பதற்கு என்ன மாதிரியான அளவுகோலை இந்தச் சமுதாயம் வைத்திருக்கிறது?

பணக்காரக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்வது, நல்ல சம்பாத்தியம் உள்ள ஆணைக் கரம் பிடிப்பது, பெரிய கார், வெளிநாட்டில் தேனிலவு, ஆடம்பரமான வாழ்க்கை, குறையாத வங்கி இருப்பு… இவை மட்டுமே நல்ல வாழ்க்கையைத் தந்து விடுமா?

திருமணத்திற்குப் பிறகு நடிப்பீர்களா, வேலைக்குப் போவீர்களா, பிஸினெஸைத் தொடர்வீர்களா என்ற எல்லாக் கேள்விக்கணைகளும் எல்லா நேரங்களிலும் பெண்களை நோக்கி மட்டுமே எய்யப்படுகின்றன.

எத்தனை திருமணங்களில் ஓர் ஆணும் பெண்ணும் மனம் ஒன்றி மணம் முடிக்கிறார்கள்? அவரவர் குடும்பப் பின்னணி, செல்வம், செல்வாக்கு போன்றவை மூலமே இங்கு அறுதிப் பெரும்பான்மையான திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன.

இந்தியா போன்ற பழமைவாத நாடுகளில் பெண்களின் நிலை இன்னும் கீழாகவே இருக்கிறது. இன்னமும் சம உரிமையைக் ‘கேட்டுப் பெறும்’ நிலையில் தான் பெண்கள் இருக்கிறோம். இந்தியச் சமுதாயம் ஆணின் கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்பட்டது. அதனால் எந்த ஒரு சிக்கலையும் ஆணின் பார்வையிலேயே பார்க்கப் பழக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான் திருமணம் போன்ற ‘சென்சிட்டிவான’ விஷயத்தில் பெண்களைப் பலவீனமானவர்களாகக் கருதி அவர்கள் பொருளாதார பலம் பெறவும், பிற்காலத்திய வாழ்க்கையைப் பயமின்றி எதிர்கொள்ளவும், ஒருவேளை குழந்தைகள் இருந்தால் அவர்களின் வருங்காலத்தைக் கணக்கில் கொண்டும் ‘ஜீவனாம்சம்’ வழங்கப்பட்டது.

அதே நோக்கில் தான் சமந்தாவுக்கும் சைதன்யா குடும்பத்தினர் ஜீவனாம்சம் தர முன்வந்தனர். அதை வாங்குவதும் வேண்டாம் என்பதும் அவரது தனிப்பட்ட விருப்பம். அதை விடுத்து அந்தப் பணத்திற்காகத்தான் அவர் திருமணம் செய்துகொண்டார் என்று சிலர் பிதற்றுவதையும் பார்க்க முடிகிறது. எத்தகைய பிற்போக்குத் தனமான எண்ணம் இது?

திருமணத்திற்குப் பிறகு கணவரைவிட, சமந்தா தான் அதிகப் படங்களில் நடித்து வந்தார். அதனால் பொருளாதார ரீதியாக அவருக்குத்தான் வருமானம் அதிகம் என்று கொஞ்சம்கூட யோசனையின்றிப் பேசியிருக்கிறார் ஒருவர். நமது சமுதாயத்தில் எப்போதுமே பெண்களைவிட ஆண்களுக்குத்தான் சம்பளம் அதிகம். எனவே வேலைக்குச் செல்வதை மட்டுமே ஒரு பெண்ணின் பொருளாதார வளர்ச்சியாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

பெண்கள் அதிகம் வேலைக்குச் சென்றிராத காலகட்டத்தில் இயற்றப்பட்ட சட்டம் என்றாலும், படிப்பிலும் வளர்ச்சியிலும் முன்னேறிக் கொண்டதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தக் கால கட்டத்திலும் பெண்கள் நிலைமை 100% முன்னேற்றமடைந்து உள்ளதா என்பதே இப்போது நமக்கு முன்நிற்கும் ஆகப் பெரும் கேள்வி.

எத்தனை நெருக்கமான உறவாக இருந்தாலும் ஓர் எல்லைக்கு மேல் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை முழுவதுமாக நம்மால் அறிந்துகொள்ள இயலாது. சிரித்துக்கொண்டே ‘போஸ்’ கொடுக்கும் எல்லோரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் அதேபோல மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்களா என்று கேட்டால் இப்போது இருக்கும் தாம்பத்தியத்தில் நூறில் ஒன்றுகூடத் தேறாது என்பதே கசப்பான உண்மை.

திருமணத்திற்குப் பிறகு சமந்தா படுகவர்ச்சியாக நடித்து வந்தார் என்பதே பெரும்பாலானோர் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அப்படிப் பார்த்தால் திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் எப்படி வேண்டுமானாலும் இருந்துகொள்ளலாம் என்ற ஒரு வாதம் தானே அதில் தொக்கி நிற்கிறது. திருமணமான எத்தனையோ நடிகர்கள் மிக வயதான பின்புகூட, இளம் வயதுப் பெண்களுடன் ஆபாசமாக நடிப்பதை ஒரு பொருட்டாகவே கருதாத இந்தச் சமுதாயம், திருமணமான ஒரு பெண் கவர்ச்சியாக நடிக்கும்போது மட்டும் மனம் துடித்துப் பதறுகிறதே அது ஏன்?

கல்யாணம் ஆனபின் அந்தப் பெண் அவளது கணவனின் உடைமை என்றுதானே நம்மவர்கள் சொல்கிறார்கள். அசையாத அஃறிணைப் பொருட்களுக்கு உள்ள மதிப்பு தானே அந்தப் பெண்ணிற்கும் இருக்கிறது. அப்போது இதில் எங்கே மகிழ்ச்சியாக வாழ முடியும்? ஒருவரையொருவர் ‘கைமீறாமல்’ அடக்க முயற்சிக்கும் மல்யுத்தம் தானே இந்தத் திருமணங்கள்?

திருமணத்திற்குப் பிறகும் நடிப்பதற்கு என் கணவரும் அவரது குடும்பத்தினரும் சுதந்திரம் கொடுத்துள்ளனர் என்று ஒரு நடிகை சொல்லும்போதே அது உண்மையான சுதந்திரமா என்ற கேள்விதான் எழுகிறது. ஓர் ஆண் நடிகர் திருமணத்துக்கு பிறகு இயல்பாகப் படங்களில் நடித்து வரும்போது நடிகையர் மீது மட்டும் இத்தகைய கேள்விகள் எழுவது ஆபாசமான ஒன்றாக ஏன் கருதப்படுவதில்லை?

திருமணத்திற்குப் பிறகும் நடிப்பேன் என்று சமந்தா சொன்னதற்கு சம்மதித்த பின்னர் தானே சைதன்யா மணம் புரிந்திருப்பார்? இப்போது வேண்டாமென்பதற்கு இந்தச் சமுதாயம் தந்த அழுத்தமும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா? திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சியாக நடிக்கிறார், இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை, கணவன் இருக்கும் போது தனியாக வசிக்கிறார் என்றெல்லாம் இந்தச் சமுதாயத்தின் வக்கிர சிந்தனைக்கும் அருவருப்பான பார்வைக் கோணத்திற்கும் உட்பட்டுகூட சைதன்யா இந்த முடிவை எடுத்திருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

அதில் சம்பந்தமின்றி, தேவையின்றித் தனது ஆணாதிக்கக் கருத்துகளை மட்டுமே ஏற்றிக் கருத்துச் சொல்லி, ஒட்டுமொத்தப் பெண்களையும் கேவலப்படுத்துவது போலத்தான் பொது வெளியில் பல பதிவுகள் உலா வருகின்றன. இந்தச் சமுதாயம் எவ்வளவு மோசமான நிலையில் சீழ் பிடித்திருக்கிறது என்பது இந்த விவாகரத்து விவகாரம் மூலம் தெரிய வருகிறது.

சமந்தா – சைதன்யா பிரிவுக்கு எத்தனையோ தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் அவர்கள் வெளியில் எல்லோருக்கும் சொல்லி, தங்கள் பக்க நியாயத்தைத் தெரியப்படுத்தி கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லாத ஒன்று. இந்தச் சமுதாயத்தில் இன்னும் எத்தனையோ விஷயங்கள் முன்னேறாமல் இருக்கின்றன. எத்தனையோ சிறிய பிரச்னைகூடச் சரிசெய்ய முடியாத நிலையில் கிடக்கின்றன. தங்களைச் சுற்றியிருக்கும் தேவையில்லாத ஆணிகளை அகற்றி, உருப்படியாகச் செய்ய எத்தனையோ வேலைகள் உள்ளன.

மனித மனம் மிகவும் புதிரானது. நிலையான கற்பிதங்களாக எதையும் உறுதிப்படுத்த அதனால் இயலாது. கற்பிதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். இதுதான் உண்மை. இந்த எளிய உண்மையைப் புரிந்துகொள்ளத்தான் யாராலும் இயலுவதில்லை.

ஒருவருடைய வாழ்க்கையை நாம் வெளியிலிருந்து மட்டும் பார்த்து எதையும் சொல்ல முடியாது. அவருடைய வாழ்வை அவரிடத்தில் இருந்து நாம் வாழ்ந்து பார்த்தால்தான் அதிலுள்ள பிரச்னைகள், சிக்கல்கள் என்னவென்று புரியும். அது யாராலும் இயலாத காரியம். அதனால் எல்லோருக்கும் இயன்ற ஒரு காரியம் என்னவென்றால், வாயை இருகரங்களாலும் பொத்திக்கொண்டு அவரவர் வேலையைப் பார்ப்பது தான்!

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.