நமக்கு மிகவும் பரிச்சயமான ஒரு திரைப்பாடல் வரி, ‘யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!’ இவ்வரிகளைக் கேட்க மிகச் சாதாரணமாகத் தெரிந்தாலும் நுட்பமான ஆழமான வார்த்தைகள்தாம்.

நான் யோகா பயின்றுகொண்டிருந்த காலம்… என் வகுப்புத் தோழர்கள் பலரும் மருத்துவர்கள், வக்கீல்களாக இருந்தார்கள். ஒருநாள் வகுப்பு முடிந்து நான் வீடு செல்ல, என் தோழி ஒருவர் நண்பரின் காரில் சென்றுவிடலாம் என்றார். வேறு ஒரு தோழியும் இணைந்துகொண்டார். கார் ஓட்டி வந்த நண்பர் வேறு ஒரு மாநிலத்தில் நீதிபதி. பேசிக்கொண்டே சென்றுகொண்டிருந்தோம். என் தோழி திடீரென்று சுய சாதிப் பெருமையைப் பேச ஆரம்பித்தார்.

‘என்னைப் போய் சிறுபான்மையினர் என்று நினைத்து விட்டீர்களே, நான் இந்த வகுப்பைச் சேர்ந்தவள்’ என்று குறிப்பிட்ட வகுப்பைச் சொல்லி மகிழ்ச்சியாகக் குதூகலமாகச் சிரித்தாள். அதற்கு அந்த நீதிபதி ‘நாயில்கூட ஜாதி உண்டு. நாய் வளர்த்தால்கூட நான் ஜாதி நாயைத்தான் வளர்ப்பேன்’ என்று கூறிக்கொண்டு வந்தார். அவர் தீர்ப்பளிக்கப் போகும் அல்லது ஏற்கனவே தீர்ப்பளித்த வழக்குகளை நினைத்தால் இப்போதும் மனம் பதைபதைக்கிறது.

சாதி, மதம், ஆட்சி, அதிகாரம், பணம், பதவி என நல்ல கட்டமைப்பு கொண்ட சூழலில் உள்ளவர்கள் அனைவருமே சௌக்கியம்தானோ என்று எனக்குத் தோன்றுகிறது. அடிப்படையில் ஒரு நல்ல இடத்தில் அமர்ந்துகொண்டு மற்றவர்களை அல்லது சமூகக் கட்டமைப்பில் கீழ்நிலையில் உள்ளவர்களை நலமா என்று கேலி செய்யும் மனிதர்களைப் பற்றித்தான் பேசுகிறேன்.

‘நாயா பொறந்தாலும் பணக்கார வீட்ல நாயா பொறக்கணும்’ என்று கூறும் என் தோழியின் நினைவு வருகிறது. சில வீட்டுப் பிராணிகளுக்குக்கூட பிரத்யேகமாகத் தனி உணவு, உடை, இருப்பிடம் என்று சகலமும் இருக்க, பல மனிதர்களுக்கோ இங்கு வீடே இல்லை. மூன்று வேளை உணவும் இல்லை. அடிப்படை வசதிகள்கூட இல்லை.

அம்பேத்கர் Pic: wikipedia

‘தன்னை உயர்ந்தவனாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் மனநோயாளி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படியெனில் இங்கு வாழும் மனிதர்கள் பலரும் மனநோயாளிகள் தாம். சாதி, மதம் என்ற ஏற்றத்தாழ்வு ஒருபக்கம் என்றால் அரசியல் பின்புலம், அதிகாரம் என்ற மமதை மற்றொரு வகையான ஏற்றத்தாழ்வை உண்டாக்கி வைத்திருக்கிறது.

ஒன்றுமில்லாமல் பிறந்த மனிதன் காலத்தின் கோலத்தில் எதையெல்லாமோ தன்னுடையதாக்கி விட்டான். அவன் கூறுபோட்ட பூமியின் மிச்சம் கிடைக்காதவன் நிலமற்றவன். தனக்கென ஒரு சொந்த கூட்டைக் கட்டிக்கொள்ள இயலாதவன் வீடற்றவன். உறவுகளோடு பொருந்தி வாழ இயலாமல் போனவன் உறவுகளற்றவன். உடல் நலத்தைப் பேணிக் காக்க இயலாதவன் உடல்நலமற்றவன். மனநலம் குன்றியவன் மனநலமற்றவன். இப்படி எத்தனை அற்றவர்கள் இருக்கிறார்கள் இவ்வுலகில்!. இவர்கள் எல்லோரும் காலத்தின் வேகத்தில் ‘இருக்கும் இடத்தில் இருக்கத் தெரியாதவர்களா?’

இந்த உலகைக் கொஞ்சம் முன்னோக்கிப் பார்த்தால் பக்தி, கடவுள் -இவையெல்லாம் இல்லாத காலங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், அப்போதும் மனிதனே மனிதனை வதை செய்துதான் வாழ்ந்திருக்கிறான். இப்போது பக்தியும் கடவுள் நம்பிக்கையும் மேலோங்கி இருக்கிறது. இப்போதும் மனிதனை மனிதன் வதை செய்துகொண்டுதானே இருக்கிறான்?

‘மனிதன் என்றுமே விடுதலையை நாடுவதாகச் சொல்ல முடியாது. அப்படி விடுதலையை வேண்டியவனாக இருந்தால் வீடு என்ற ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பானா? ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்குத் தப்ப விரும்புகிறான் என்று வேண்டுமானாலும் சொல்லலாம்’ எனும் எழுத்தாளர் க.நா.சு அவர்களின் வார்த்தைகள் சிந்திக்க வேண்டியவை.

பெரியார் Pic: wikipedia

இருக்கும் இடத்தில் இருந்துகொண்டும் அதாவது சுகபோக வாழ்வில் இருந்துகொண்டும் சாதி, பணம், அரசியல் பின்னணி என்று மிகப் பெரிய இடத்தில் இருந்துகொண்டும் எளிய மனிதர்களுக்காகத் தன் வாழ்நாள் முழுக்க உழைத்த மனிதர்களும் இருந்திருக்கிறார்கள். செல்வச் சீமானின் மகனாகப் பிறந்தும் இவ்வாணாதிக்கச் சமூகத்தில் ஓர் ஆணாகப் பிறந்தும் எளிய சாமானிய மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட சமூகத்துக்காக, பெண்களுக்காகத் தன் வாழ்க்கை முழுவதும் போராடிய ஐயா பெரியாரை இவ்விடத்தில் நினைவுகூராமல் இருந்துவிட முடியாது. திராவிடர்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் போராடி, ஆரிய மாயை போன்ற நூல்களின் வழியாகத் தனது ஆரிய எதிர்ப்பை நிலைநாட்டிய பேரறிஞர் அண்ணாதுரையையும் நினைவு கூரவேண்டும்.

காலம் சிலரை செளகரியமான இடத்தில் வைத்திருக்கலாம். அவ்விதம் சுகமான, பிரச்னைகளற்ற இடத்தில் இருப்பவர்கள் எளியவர்களை அரவணைத்துக் கொண்டுதானே போக வேண்டும்! அதுதானே தலைமைப் பண்பு!

நமக்கான இடத்தை நாம்தான் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். படிப்பதற்கான எந்தச் சாத்தியமும் இல்லாத ஒரு கிராமத்தில் இருந்துதான் நம் அரசியலமைப்பின் தந்தை உருவானார். சிறிய மீனவக் குடும்பத்தில் பிறந்துதான் மாபெரும் தலைவரானார் அப்துல் கலாம். ஒரு கட்டுப்பாடான இஸ்லாமிய பின்னணியில் இருந்துதான் புரட்சிகரமாக உருவானார் மலாலா. தான் வாழும் சாதிய சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்தானே நம் மகாகவி பாரதி! பாரதி அளவிற்குப் பாரதிதாசனை இன்னும் ஏற்றுக்கொள்ளாத கொடுஞ் சாதிய சமூகம்தானே நம்முடைய சமூகம்!

தன் உரிமைக்காக, தன்மானத்திற்காக இம்மண்ணில் போராடிய, போராடும் ஒவ்வொரு மனிதனும் தலைவனே!

பாகுபலி திரைப்படத்தில், எதிரிகளின் எண்ணிக்கையும் பலமும் அதிகமாக இருக்கும் சூழலில் பிற வீரர்களுக்கு அரசன் அறிவுரை கூறுவான். மரண பயத்தைப் போக்குவான். எது மரணம் என்று வரும் அச்சொற்றொடர்களைப் போல, நாமும் எது வாழ்வு என்பதைக் கற்றுக்கொள்ள நம்மிடையேயும் பல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சமதர்மமும் சமத்துவமும் கொண்ட எல்லா இடமும் மனிதன் வாழ்வதற்கான இடங்கள்தானே.

பாடகர் டி.எம்.கிருஷ்ணா ஒரு பேட்டியில், ’நீங்கள் உங்கள் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளிவரும்போது இந்த வாழ்க்கையை உங்களால் புரிந்துகொள்ள இயலும்’ என்றார். அப்படியாயின் நாம் பாதுகாப்பு வளையத்துக்குள் இல்லையென்றாலும் அது குறித்து இனி கவலை வேண்டாம் அல்லவா? பூக்களமோ போர்க்களமோ வாழ்ந்து பார்த்து விடுவோம்.

பாதுகாப்பு வளையத்திற்குள் அமர்ந்துகொண்டு இவ்வுலகைப் பார்க்கும்போது நாமும் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போலத்தானே கர்வமாக உணர்கிறோம். நல்ல குடும்ப அமைப்பில் இருந்துகொண்டு உறவுச் சிக்கலில் உள்ளவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம்? தனியாக வாழும் பெண்களை இந்தச் சமூகம் நேர்மையோடு பார்க்கிறதா? மூன்றாம் பாலினத்தவர்களை மரியாதையோடு நடத்துகிறோமா? நம் பாதுகாப்பு வளையத்தை உடைக்கும்போது, உடைத்துவிட்டு வெளிவரும்போது இவர்களின் நிலையும் ஒருவேளை நமக்குப் புரியக்கூடும்.

‘இருக்கும் இடத்தில் இருப்பவர்கள்’ மட்டுமல்ல எல்லா இடங்களிலும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் மனிதர்கள் வாழ்வது தானே பொற்காலம்! அப்படிப்பட்ட காலத்தை நாம் எட்டப் போவது எப்போது?

கதைப்போமா?

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.