இன்றைக்கும் சில உயிரினங்கள் பால் வகையற்ற உயிரிகளாக இருக்கின்றன; அவ்வகை உயிரினங்கள் ஆண் மற்றும் பெண் என இரு பால் உறுப்புக்களை ஒருங்கே பெற்று இனப்பெருக்கம் செய்துகொள்கின்றன. பரிணாம வளர்ச்சியினால் பால் வேறுபாடு கொண்ட மனித உயிரினம் உள்பட பல விலங்கினங்கள், கருமுட்டையைப் பெண் உடலிலும் விந்தை ஆண் உடலிலும் கொண்டிருக்கின்றன. கருமுட்டையோடு விந்து இணைகின்றபோது இனப்பெருக்கம் நிகழ்கின்றது. கருமுட்டை மற்றும் விந்து இரண்டுமே இனப்பெருக்க செயல்பாட்டில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இனப்பெருக்க செயல்பாட்டின் போது கருமுட்டை ஆணிடமிருந்து வரும் விந்தில் தரமானதைத் தேர்தெடுத்து இணைசேர்கின்றது. ஆணிடமிருந்து மில்லியன் கணக்கில் வெளிப்படும் விந்தில் சொற்ப அளவே கருமுட்டை வரை நீந்திச்செல்கின்றன. கருமுட்டை வரை வந்தடைந்த ஆரோக்கியமான விந்துக்களிலிருந்து வீரியமிக்க விந்து ஒன்றை கருமுட்டை தேர்ந்தெடுத்து இணைசேர்த்துக் கொள்கின்றது. சில பாலூட்டி வகைப் பெண் விலங்குகள் பல முறை வேறு வேறு ஆண் விலங்குகளுடன் புணர்ந்து விந்துக்களை சேகரித்து வைத்து, இறுதியாக தரமான விந்துக்களைத் தேர்ந்தெடுத்து இணைசேர்த்துக் கருவாக்கிக் கொள்கின்றன.

இதுபோன்ற உண்மைகளை உணராத மற்றும் இனத்தூய்மை பேணுவதாகச் சொல்லி பெண்களை வீட்டோடு ஒடுக்கி வைத்திருந்த நம் முன்னோர்கள், ஆண்களிடமே குழந்தைகளை உருவாக்குவதற்கான பேராற்றல் இருப்பதாகக் கருதினர். அதன் தொடர்ச்சியாகத்தான் முன்னோர்கள் உருவாக்கிய இறை அடிப்படைவாதங்களில், ஆண்களை ‘படைக்கும் கடவுள்களாக’ நிறுவினர்.

cell

பெண்ணின் கருப்பை விரும்புகையில் இணைசேரும் ஆணின் விந்துவே குழந்தையாக உருப்பெறும் என்ற உண்மையை அறியாத முன்னோர்கள், ஆண்கள் விரும்பி பெண்ணுடன் கூடுகையில் ஆண்களின் குழந்தை படைக்கும் பேராற்றல், பெண்ணுடலில் பாய்ச்சப்பட்டு பெண்ணுடல் கருவை பத்து மாதம் வளர்த்து, குழந்தையைப் பிரசிவிக்கின்றதெனக் கருதியுள்ளனர். எனவே பெண்ணுடலை நிலத்தைப் போல உருவகித்துக்கொண்டனர். தங்கள் இனத்துக்குரிய பெண்களை தங்களது பரம்பரை சொத்துக்களாக வந்த நிலத்தைப் போல ஆண்கள் கருதிக் கொண்டனர்!

தங்கள் இனத்தைச் சேர்ந்த ஆண்களின் வாரிசுகளை மட்டுமே பெண்கள் ஈன்றெடுக்க வேண்டுமென மறைமுக விதிகளை விதித்துக்கொண்டனர். வேறு இனத்தைச் சேர்ந்த ஆண்களின் வாரிசுகளைத் தங்கள் இனப் பெண்கள் ஈன்றெடுப்பதை தங்கள் இனத்தின் புனிதத்திற்கு ஏற்பட்ட பெருத்த அவமானமாகக் கருதியுள்ளனர். அதே சமயம், தங்கள் இன ஆண்களின் வாரிசுகளை வேறு இனப் பெண்கள் ஈன்று தருவதை ஏற்றுக்கொண்டனர். வேற்றினத்தின் நிலத்தை தங்கள் இனத்தவர்கள் ஆக்கிரமித்து பயிர் செய்து பாதுகாப்பதன் மூலம் அந்நிலத்தைத் தங்களுக்குரியதாக ஆக்கிக் கொள்வது போல், பிற இனப் பெண்களிடம் தங்கள் இனத்தின் வாரிசுகளை ‘விதைப்பதன்’ மூலம் அப்பெண்களும் தங்கள் இனத்துக்குரியவர்களாக மாறிவிடுவதாகக் கருதினர்.

ஆண்களிடமுள்ள குழந்தை படைக்கும் ஆற்றலில் மட்டுமே இனத்தின் குணம் இருப்பதாகவும், அதை ஆண்களிடமிருந்து உடலுறவின் மூலம் பெற்று வளர்த்தெடுக்கும் பெண்களினால் குழந்தைகளின் இனத்தூய்மை மாறிவிடாது என்றும் கருதியுள்ளனர். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான குறியையும், அதிலிருந்து வெளிப்படும் விந்துக்களையும் இனத்தின் குணங்களைத் தாங்கியுள்ள வீரத்தின் அடையாளங்களெனக் கருதிப்போற்றியுள்ளனர். அதே சமயம் பெண்களின் இனப்பெருக்க உறுப்பான புணர்புழையை ஒரு விளைநிலத்தை போன்று கருதியுள்ளனர். அந்த நிலத்தைத் தங்கள் கையில் வைத்திருப்பதை பெரும் கௌரவமாகவும் கைவிட்டுப்போவதை இனத்திற்கு ஏற்பட்ட பெரும் அவமானமாகவும் நிறுவியுள்ளனர்.

இனத்தின் புனிதத்தை பெண்களின் புணர்புழையுள் வைத்தனர். தங்கள் இனத்தின் ஆண்கள் புணரும்பொழுதே அப்புனிதம் பேணப்படுவதாகவும் கருதியுள்ளனர். இனம் என்ற பாகுபாட்டு நிலை மேலும் வளர்ந்து, சாதிகளாகவும் சமயங்களாகவும் உருமாறிய போது, இனத்தின் தூய்மைவாதம் சாதித் தூய்மைவாதமாகவும், மதத் தூய்மைவாதமாகவும் மாறியது.

இனத்தூய்மையின் பெயரில் தோன்றி வளர்ந்த ஆணாதிக்கம் சமூகத்தில் அடுத்தடுத்து தோற்றுவித்த சாதி, மதம் போன்ற ஆதிக்கங்களின் புனிதங்களையும் பெண்களின் உடலில் பூசியது. அதனுடைய நீட்சியைத்தான் “எங்களுக்கு மண்ணும் பொண்ணும் ஒண்ணு” என்ற வாதத்தை மையமாகக் கொண்டியங்குகின்ற இன்றைய கலை இலக்கிய படைப்புகளிலும் நாம் பார்த்துக்கொண்டுள்ளோம்.

சாதியினால் பெண்களுக்கு எந்த விதத்திலும் நன்மை ஏற்பட்டதே இல்லை; சாதியம் பெண்களுக்கு இழைத்த கொடுமைகளே ஆணவப்படுகொலைகளின் முன்வடிவங்களாகும்.

குழந்தைத் திருமணம், கருக்கொலை, பெண் சிசுக்கொலை போன்றவைகள் சாதி பெண்களுக்குச் செய்த கொடுமைகளில் முக்கியமானவை.

பெண்ணாகப் பிறக்கின்ற குழந்தைகள் வளர்கையில் எதாவது வகையில் சுய அறிவு அடைந்து இயற்கை உண்டாக்கும் காதலால் வேறு சாதி / சமய ஆண்களுடன் இணைந்துவிடக் கூடாது என்பதில் வெறியோடு இருந்த ஆதிக்க சாதியினர், தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணம் முடித்து வைக்கும் மிக மோசமான வழக்கத்தை பின்பற்றத் தொடங்கினர்.

1938-ல் வெளியான மாதர் மறுமணம் இதழில் 1 வயதுக்கும் குறைவான விதவைப் பெண்களாக மெட்ராஸ் மாகாணத்தில் 1511 பச்சிளம் பெண் குழந்தைகள் இருந்துள்ளனர் என்று குறிப்பிடுகின்றது. இந்தக் குறிப்பிலிருந்து நம்மவர்கள் எவ்வளவு கண்மூடித்தனமாக குழந்தைத் திருமணங்களை நடத்தியிருப்பார்களென்பதைப் புரிந்துகொள்ளலாம்.

pinterest

சாதியம் வரதட்சணைப் பண்பாட்டை தீவிரமாகக் கொண்டியங்கிய காலகட்டத்தில், பெண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையை வளர்த்து ஆளாக்கி, கேட்கின்ற வரதட்சணையைக் கொடுத்து சுயசாதி ஆணுக்கு முதல் தாரமாகவோ ஐந்தாம் தாரமாகவோ கட்டிக் கொடுப்பதன் மூலம்தான் குடும்ப மானம் காக்கப்படும்…கேட்கின்ற வரதட்சணையைக் கொடுக்க முடியாத சூழலில், சுயசாதி ஆண்களால் நிராகரிக்கப்படுகின்ற பெண்கள் இயற்கையின் முடிவால் வேறு சாதி ஆண்களுடன் காதலுற்றுவிட்டால் குடும்ப மானமும், சாதி கௌரவமும் சாம்பலாகிவிடும் என்று கருதிய ஆதிக்க சாதியர்கள், கர்ப்பிணிப் பெண்களின் கருவில் வளர்வது பெண் குழந்தை என்று தெரிந்தாலே மருத்துவர்களின் உதவியோடோ அல்லது கை வைத்திய முறையிலோ கருக்கொலை செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர்.

கருக்கொலையில் தப்பித்துப் பிறக்கின்ற பெண் சிசுக்களைக் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வதும் இன்னொரு மரபாக இருந்துள்ளது. பெண்சிசுக்கொலையை நிகழ்த்துகின்ற போது குழந்தையை ஈன்று தள்ளிய தாயின் உளவியல் எப்படித் துடித்திருக்கும் என்றும் நாம் பார்க்க வேண்டும். சுயசாதியில் மாப்பிள்ளை பார்த்துக் கட்டிக்கொடுக்கும் தந்தை, “கணவன் எத்தனைக் கொடுமை செய்தாலும் பொறுத்துக்கொள்; வாழாவெட்டியாக பிறந்தவீட்டிற்கு வந்துவிடாதே”, என்று சொல்லி கைவிடும் பெண், குடும்ப வன்முறை, கணவனின் வன்புணர்வு, உளவியல் ஒடுக்கம், ஊட்டச்சத்துப் பாற்றாக்குறை என அனைத்தையும் தாங்கிக் கொண்டு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். இவை தந்த வலியோடு, அழுகின்ற குழந்தைக்கு இரத்தத்தைப் பீச்சியடிக்க முடியுமா, பாலைப் பீச்சியடிக்க முடியுமா என்று வறண்டு வாடிக் கிடக்கும் காம்புகள் புத்துயிர் பெறுவதற்குள், பிறந்த பெண் குழந்தையைக் குடும்பத்தார் கொலை செய்வதை அறிகையிலும், காண்கையிலும் பெண்கள் அடைந்திருக்கும் வேதனையை எனக்கு எப்படிப் பதிவு செய்வது என்று தெரியவில்லை.

wikipedia

அத்தனை ரணங்களுக்குப் பின்னும் தன் குழந்தையைக் கொன்ற குடும்பத்தில் அப்பெண் வாழ்ந்தாக வேண்டும்; கொலைகாரக் கணவன் புணர்வதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அதே ரணத்துடன் அவனுக்கு இன்னொரு சிசுவைப் பெற்றுக்கொடுக்கவும் வேண்டும்; இதில் எதாவது ஒன்று குறையினும் கணவனுக்கு இன்னொரு மனைவியைத் தேடித் தருவதில் சாதியக் குடும்பம் கவனம் செலுத்தத் தொடங்கிவிடும்.

சாதியம் இது போன்ற கொடுமைகளைத்தான் பெண்களுக்குச் செய்துள்ளது. சாதியம் பெண் குழந்தையெனப் பிறந்தாலே கொன்று குவித்திருக்கின்றது. இதையெல்லாம் உணராமல்தான் சில பெண்கள் இன்று சமூக வளைதளங்களில் சாதிப் பெருமைகளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

சாதியத்தை கொண்டாடுகின்ற பெண்கள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள்; சாதியம் எந்த அளவிற்கு அவர்களை முட்டாளாக்கி வைத்திருக்கின்றது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இனம், சாதி, மதம் போன்றவற்றால் எவ்வகைச் சிறப்பையும் பெறாமல் அவற்றின் பெயராலே ஒடுக்கப்படும் பெண்களின் உடலை இனம், சாதி, மதம் போன்றவற்றை அடுத்தத் தலைமுறைகளுக்குக் கடத்தும் ‘கடத்தியாக’ ஆண்கள் பயன்படுத்திவருகின்றனர். தன் சாதியைக் கடத்தக்கூடிய கடத்தியாக பயன்படாத பெண்களை(சுயசாதிக்கணவனின் வாரிசை கருவாக்கிக் கொள்ள இயலாமல் உள்ள பெண்களை) ‘மலடி’ என்று சாதியக்க குடும்பங்கள் தூற்றுவது போல் வஞ்சிப்பது போல் கேவலமான குடும்ப அமைப்பை வேறெங்கும் பார்த்துவிட முடியாது.

சாதியர்கள் கொண்டாடிக்கொள்ளும் விழாக்களிலும், திருமணம் போன்ற சடங்கு நிகழ்வுகளிலும் குழந்தைப்பேறில்லாத பெண்களை ஒதுக்குவதென்பது தொடர்ந்து நடைபெறுகின்றது. சாதிய வாரிசுகளைப் பெற்றுத்தரும் இயந்திரமாக சாதியம் பெண்களை நடத்தி வருகின்றது. பெண்களின் யோனி இனத்தூய்மைக்கான இடமாகப் பார்க்கப்பட்ட கி.பி-யின் தொடக்கத்திலிருந்தே பெண்களின் யோனி மற்றும் கருப்பையின் தேவைகளை ஒடுக்குவதற்கான தந்திரங்களும் தோற்றுவிக்கப்பட்டுவிட்டன.

TimesNow

பெண்கள் சுயவிருப்பின்படி வேறு இனத்தவனோடு கூடிவிடக்கூடாது என்பதற்காக தந்தை மைய சமூகம் கட்டிவிட்ட கதைகளான, “பெண் என்பவள் காமமற்றவள்; பெண்ணிடத்திலிருந்து அளவு கடந்த அன்பு மட்டுமே பெருக்கெடுக்கும்” போன்றவற்றை சாதியமும் பரப்புரை செய்கிறது. திருமணமான பெண்கள் குழந்தைப்பேறு வேண்டி நவீன மருத்துவத்தை அணுகுகையில் மருத்துவ நிபுணர்கள் கூட பெண்களின் காமத்தையோ, அதை கையாளும்/உணரும் முறைகளையோ பெண்களுக்கு அறிவுறுத்தத் தவறி விடுகின்றனர். “எந்தெந்த நாளில் உடலுறவு வைத்துக்கொண்டால் குழந்தை உருவாகும்” என்று மட்டுமே பெரும்பாலும் ஆலோசனை வழங்கிவருகின்றனர்.

இனமும் சரி, சாதியமும் சரி ஆண் குறியை உயர்த்திப்பிடித்த அதே அளவு பெண்ணுறுப்பை ஒடுக்கி வந்திருக்கின்றன. சாதியின் பெயரால் நடத்தப்படாமல் மறைமுகமாக சாதித்தூய்மைக்காக பெண்ணை ஒடுக்கியும் கொன்றும் வந்த சாதியில் ஊறிப்போன சமூகம், சாதியைக் கடத்தும் கடத்தியாக செயல்பட மறுத்து வேறு சாதி ஆண்களைக் காதலிக்கின்ற பெண்களை சாதியின் பெயரால் நேரடியாகவே கொலைசெய்யத் துணிகின்றது.

சாதிவெறிபிடித்த பெற்றோர்களே பெற்ற மகளைக் கொலை செய்கின்றனர் அல்லது கூலிப்படையை ஏவி கொலை செய்கின்றனர். மகளைக் கொல்வது, மகள் விரும்பியக் காதலனைக் கொல்வது போன்றவையெல்லாம் சாதியப் பெற்றோர்களுக்கு சாதரணமானவையாகப் படுகின்றன. பெற்றோர்களுக்கு சாதிதான் கௌரவம். அவர்கள் மகளிடத்தில் காட்டும் அன்பும், அரவணைப்பும் எதுவரையென்றால் பிஸ்கட்டைத் தின்றுவிட்டு வாலாட்டும் நாயைப் போல பெண் குழந்தைகள் பெற்றோர் சொல்லுக்கு தலையாட்டும் வரைதான். அவர்களின் முடிவுகளுக்கு தலையாட்ட மறுக்கின்ற மறுநொடியே தலையைத் துண்டாக்கக்கூட தயங்க மாட்டார்கள்.

சாதியின் பலத்தை அதிகரிக்க சாதி வாரிசுகளைப் பெற்றெடுக்கிறார்கள். சாதிக்காக பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகளால், சாதிக்கு ஆபத்து நேருமெனில் அக்குழந்தைகளைக் கொன்று புதைப்பதற்கு பெற்றோர்கள் ஒருபோதும் தயங்குவதுமில்லை. சாதியம் இத்தனை ஆண்டுகளில் மகளைக் கொல்லத் துடிக்கும் சாதி வெறியிலூறிய தந்தையர்களோடு கைக்கோத்து நிற்கும்படி தாய்மார்களையும் உருவாக்கியிருக்கின்றது.

கட்டி வந்த சுய சாதிக் கணவன் ஊரைக் கொளுத்தினாலும், பிற பெண்களை வன்புணர்ந்தாலும் பொறுத்துக்கொள்ளும் மனைவியே சாதியத்தின் ஆகச்சிறந்த பெண் என்ற பாடத்தை சாதியம் பெண்களின் மூளையில் புகுத்தியுள்ளது. பத்து மாதம் சுமந்து பெற்ற மகளைத் தன் கணவன் கொலை செய்தாலும் கூட, கணவனின் பாதத்தை வணங்கிக்கிடக்கும் அளவுக்கு சுயஅன்பற்றவர்களாக/கருணையற்றவர்களாக சாதியக் குடும்பங்கள் பெண்களை உருவாக்கியுள்ளன.

pinterest

சாதியத்தாலும் இன்ன பிற அடிப்படைவாதங்களாலும் பெண்களின் உளவியலில் புகுத்தப்பட்டுள்ள ஆணாதிக்கத்தை அடிவருடும் பண்புகள் அனைத்தும், பெண்விடுதலையை சாத்தியப்படுத்துவதற்குத் தடையாக அமைகின்றன. வீடு, பணியிடம் என எல்லா இடங்களிலும் பெண்களை ஒடுக்கி ஆதிக்கம் செலுத்திவிட்டு, சாதி ஆதிக்கங்களுக்கு எதிராக குரல்கொடுப்பதால் இங்கு எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

ஒவ்வொருவரும் தங்கள் மீது படிந்துள்ள ஆணாதிக்கம், சாதியம் போன்ற எல்லா அழுக்குகளையும் ஒரு சேரக் கழுவியெறிகையிலேயே சமத்துவம் இங்கு சாத்தியப்படும். ஆணவப்படுகொலைகள் ஒழிய சாதியத்தோடு சேர்ந்து பெண்ணொடுக்க மரபும் தரைமட்டமாக்கப்படவேண்டும்.

முற்றும்.

கட்டுரையின் முந்தைய பகுதி:

படைப்பு:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.