கொஞ்ச நாள் முன்பு என் தோழியைச் சந்திக்க நேர்ந்தது. இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, “உனக்கு பிடிச்சது என்னென்ன?” என்றாள். எனக்குச் சில கணங்கள் பேச மறந்து போனது. அப்போதுதான் யோசிக்கத் துவங்கினேன். இத்தனை வருடங்களில் எனக்குப் பிடித்த லிஸ்டில் இருந்தவை என்னவென்று மறந்தே போயிருந்தது.

வாழ்க்கை அழகான மந்திரவாதி. நைச்சியமாக அது நமக்குப் பிடித்தவற்றைப் பறித்துக்கொண்டு, பிடிக்காதவற்றைக் கையில் திணித்துவிடுகிறது. பெண்களுக்குத் திருமணம் என்ற ஒன்று ஆனதும் தானாகவே பிடித்த விஷயங்கள் கைநழுவி விடுகின்றன. ஒரு பெண்ணுக்குப் பிறந்ததிலிருந்து எத்தனையோ பிடித்திருக்கும். திருமணம் ஆனதும் கணவன் ஆசைப்பட்டதைச் செய்யவே மனைவி பணிக்கப்பட்டிருக்கிறாள் என்ற ஒரு மாயை அறிவையும் மனதையும் மூடிவிடுகிறது.

பிடித்த நிற உடையை, பிடித்த ஆடையை மனைவி எடுக்க முடியாது. “உன் நிறத்துக்கு அந்த கலர் வேண்டாம். இந்த கலர்தான் நல்லாருக்கும்” என்பது விருப்பமாக, கொஞ்சலாக, ஆணையாக, காதலாக, அதட்டலாக எப்படியோ பெண்ணை ஆளுமைக்கு உட்படுத்துகிறது.

ஆடை மட்டுமல்ல. உணவு, புத்தகம், ரசனை என எல்லாவற்றிலும் பெண்களின் விருப்பங்கள் மாற்றம் பெறுகின்றன. மாற்றப்படுகின்றன. பிறந்ததிலிருந்து ஓடியாடி விளையாடும் பெண், பருவ வயதை அடையும் போது அவளது தாயாராலேயே ‘அடக்கப்’படுகிறாள். தெருவில் விளையாடத் தடை. அதுவும் பையன்களுடன் பேசவே கூடாதென்ற கட்டுப்பாடுகள். “இப்படி நில்… இப்படி நட… இப்படிச் சிரி…” என்று வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இயல்பைத் தொலைக்கிறாள்.

நிறையப் பேர் தங்கள் அம்மாவுக்கு உடை எடுக்க உடன் அழைத்துப் போவதில்லை. தங்களது தேர்வு அம்மாவுக்குப் பிடிக்கும் என்று தாங்களாகவே எடுத்து வந்து தருவார்கள். அம்மாவின் விருப்பங்களை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதேயில்லை. அம்மா நாம் தருவதை வாங்கிக்கொள்வார். ஆனால், அது அவருக்குப் பிடித்ததா என்று நமக்குத் தெரியாது. ஒரு முறை அவரையும் உடன் அழைத்துச் சென்று பாருங்கள். அந்த முகத்தில் தெரியும் புன்னகைக்கு ஈடே இருக்காது.

என் நெருங்கிய தோழிக்கு நீண்ட தூரப் பயணம் செல்வதில் ஆர்வம் அதிகம். மெல்லிய மழைத் தூறல் விழும்போது, காரில் இளையராஜா பாடல்களைக் கேட்டுக் கொண்டே செல்ல வேண்டும் என்று அடிக்கடி சொல்வாள். கல்யாணம் ஆனதிலிருந்து அது போன்றதொரு சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை அவளுக்கு.

இதாவது பரவாயில்லை. அவளது இன்னோர் ஆசைகூட இன்னும் நிறைவேறவே இல்லை என்று அங்கலாய்ப்பாள். நட்சத்திரங்கள் நிறைந்த இரவொன்றில், வானத்தை ரசித்தபடி மொட்டை மாடியில் படுத்து உறங்க வேண்டும் என்ற சின்ன ஆசைகூட நிறைவேறவில்லை. இவளுடைய கனவுகளை, ஆசைகளைப் புரிந்துகொள்ளும் விதமான துணை வாய்க்கவில்லை என்பதுதான் நிஜம்.

திருமணம் ஆகும் போதே தனது ஆசைகளைப் புதைத்துவிட வேண்டும் என்பது தானே நமது இந்தியப் பெண்களின் ஆகப்பெரும் சாபம். பெண்களுக்கு என்று தனிப்பட்ட ரசனைகள் இருப்பதைக்கூட இந்தச் சமூகத்தில் ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கணவனின் வழியொற்றியே மனைவி நடக்க வேண்டும் என்று விதவிதமாக உருவேற்றி வைத்திருக்கிறார்கள்.

கன்றுக் குட்டியாகத் துள்ளிக்கொண்டிருந்தவளுக்குக் கால்கட்டு போட்டு, வாய்ப்பூட்டும் சேர்த்துப் போடப்படுகிறது. ஓர் ஆண் தனது திருமணத்திற்குப் பிறகும் எந்த விதமான மாறுதல்களும் இன்றி இயல்பான வாழ்க்கையைத் தொடரும்போது பெண்ணுக்கு மட்டும் அது வாய்க்காதது ஏனென்று எப்போதேனும் சிந்தித்திருக்கிறோமா?

பெரும்பாலான பெண்களின் நேரத்தை வீட்டு வேலைகள் கபளீகரம் செய்து விடுகின்றன. நாள் முழுவதும் இருக்கும் வேலைச்சுமைகளால் பெண்கள் தனக்கான நேரத்தை ஒதுக்க முடிவதில்லை. மெல்ல மெல்ல தனக்குப் பிடித்தவற்றை அவர்கள் மறந்து போய் விடுகிறார்கள். பிடித்த பாடலை ரசித்தால்கூட அந்தப் பாடலின் சூழல், அதில் நடித்த நடிகர், பாடகர் முதற்கொண்டு கணவனை உறுத்தாமல் இருந்தால்தான் ரசிக்க முடியும். இல்லையெனில் மனசுக்குள் முணுமுணுப்பதும் மறந்து போய்விடும்.

எல்லோரும் உதவியாளர் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால், வீட்டில் இருக்கும் அனைவரும் பெண்ணுக்கு உதவலாம். அவரவர் வேலையை அவரவர் பார்த்தாலே போதும். முக்கால்வாசி வேலை முடிந்துவிடும். பெண்களும் தனக்கென கொஞ்ச நேரம் ஒதுக்கி, தனது நண்பர்களுடன் அளவளாவலாம். பிடித்த இசையைக் கேட்கலாம். பிடித்த புத்தகத்தை வாசிக்கலாம். செய்ய ஒன்றுமில்லா விட்டாலும் படுத்துத் தூங்கலாம். இவையெல்லாம் நமக்குப் பிடித்த லிஸ்டைத் தக்க வைக்கும் சிறு முயற்சியே.

தனது நண்பர்களுக்காக ஓர் ஆண் நேரம் செலவழிக்கும் போது பெண் மட்டும் கணவன், குழந்தை இவற்றைத் தாண்டி சிந்திக்க இந்த ஆணாதிக்கச் சமூகம் விடுவதில்லை. ஆனால், பிடித்த உணவைக்கூட பெண்ணைச் சாப்பிட அனுமதிக்காத இந்தச் சமுதாயத்தில் பிடித்தவற்றை அனுபவிக்க மட்டும் எளிதில் இயலுமா என்ன?

ஒரு பெண் தினமும் சமைப்பதை எப்போது தன் விருப்பத்திற்குச் செய்ய இயலுகிறது? கணவனுக்கு, குழந்தைகளுக்கு, வீட்டுப் பெரியோருக்கு என்று பார்த்துப் பார்த்து சமைத்து இறுதியில் எஞ்சுவதில் தான் தனது வயிற்றை நிரப்பிக்கொள்கிறாள். மனம் நிறைவதில்லை. தனக்குப் பிடித்த உணவைக்கூட மற்றவர்கள் விரும்பாத காரணத்தால் சமைப்பதில்லை பெண்கள். பிடித்த உணவு வகைகூட நாளாவட்டத்தில் மறந்து வெந்ததை, மிஞ்சியதைத் தின்று வாழ்க்கையைக் கழிக்கும் மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு வளரிளம் பருவத்தில் எத்தனையோ பிடித்தங்கள் இருக்கும். எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு மாலை இளம் வெயிலில் தார்ச்சாலையில் வெற்றுக் கால்களோடு நடக்கப் பிடிக்கும். மழை பொழியும் நேரத்தில் தூறலை ரசித்தபடி தேநீர் அருந்தப் பிடிக்கும். ஆனால், இப்போதெல்லாம் மழை பெய்யும் நேரத்தில் சூடாக வடை, பஜ்ஜி, தேநீர் என்று எல்லோருக்கும் தயாரித்து விட்டு தனக்கான கோப்பையுடன் அமரும் போது தேநீரில் ஆடை படிந்திருக்கும். சாப்பிட்டு முடித்ததும் சமையலறை பாத்திரங்களைக் கழுவி அடுத்த வேளை சமையலுக்கு ஆயத்தமாக்க வேண்டும். ’மழை பார்ப்பது மறந்தே போச்சுடி…’ என்றாள் ஒருநாள் வறண்ட புன்னகையுடன்.

இன்னொரு தோழி காலை எழுந்ததும் சூடான காபியோடு புதிய பேப்பர் வாசனையை நுகர்ந்தபடி செய்தித்தாளை மேய்ந்து விட்டுத்தான் அடுத்த வேலை ஆரம்பிப்பாள். திருமணத்திற்குப் பிறகு கணவருக்குக் குளிக்க டவல் கொடுப்பதிலிருந்து அவரது ஷூக்களை பாலீஷ் போட்டுப் பளபளப்பாக்குவது வரை வரிசை கட்டிய வேலைகளில் இப்போதெல்லாம் செய்தித்தாளை அடுக்களை அலமாரிக்கு விரிப்பதற்கு மட்டுமே எடுப்பதாக வருந்தினாள்.

இந்த உலகத்தில் காண்பதற்கும் ரசிப்பதற்கும் எத்தனையோ இருக்கின்றன. ஆண்களுக்கு மட்டுமே அத்தனையையும் ரசிக்க வாய்த்திருக்கிறது. ஆனால், அவர்கள் முழுமையாக அந்தச் சூழலை அனுபவிப்பதில்லை. பெண்களின் விருப்பங்கள், ரசனைகள் ஒரு பொருட்டாகக்கூட மதிக்கப்படுவதில்லை. சில ஆண்கள் விதிவிலக்குகளாக இருக்கலாம். ஆகப் பெரும்பான்மையான ஆண்கள் இயல்பாகப் பெண்களை முடக்கி விடுகிறார்கள். இது தவறென்று அறிவு உணர்த்தினாலும், மனம் தனது பணிகளைச் செய்யத்தான் பெண்களை ஏவுகிறது.

காலங்காலமாகத் தனது விருப்பங்களை, பிடித்தங்களை மறந்து வாழவே பெண்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்களும் முக்கியக் காரணம். சர்க்கஸ் ‘ரிங் மாஸ்டர்’ மாதிரி கையில் கலாச்சாரம் என்னும் சாட்டையை எடுத்து சொடுக்கியே அடுத்த தலைமுறையைப் ‘பழக்குகிறார்கள்’.

பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்களாய்க் கட்டமைக்கப்பட்டுள்ள இந்தச் சமுதாயத்தில் அவர்களின் மனவிருப்பங்களுக்கெல்லாம் ஏது இடம்? வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆவலோடு இருந்த எத்தனையோ பெண்கள், சிறகுகள் ஒடிக்கப்பட்டு கூண்டுகளில் கிடக்கின்றனர்.

ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் அவ்வப்போது சிறு பயணங்கள் (பிக்னிக்) சென்று தங்களை அடுத்து வரும் நாட்களுக்காகப் புத்துணர்வூட்டிக் கொள்கின்றனர். ஆனால், பெண்கள் இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில்தான் இன்னும் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

வாழ்க்கை இனிமையானது. கிடைக்கும் நேரத்தில் அதை ரசிக்கலாம். அதற்கு ஆண், பெண் என்ற பேதங்கள் தேவையில்லை. ஆண்களுக்கு எவ்வளவு உரிமை இந்த உலகத்தில் உள்ளதோ அதே அளவு உரிமை பெண்களுக்கும் உண்டு. இதை ஆண்கள் மறந்தாலும் அதை அவர்களுக்கு நினைவுபடுத்தி பெண்கள் தங்களுக்கான உரிமைகளை இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களது கணவன், குடும்பத்தைத் தாண்டி எதையும் சிந்திப்பதும், செய்வதும் பாவம் என்று நமது மரபணுக்களில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. தனக்கென ஏதாவது செய்து கொண்டாலே ஒருவிதக் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகும் விதமாகவே நமது பெண்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போதுதான் அதிலிருந்து மெல்ல மீளும் யோசனை தோன்றியிருக்கிறது. அது மெல்ல மெல்ல எல்லாப் பெண்களுக்கும் பரவும் காலம் வெகுதொலைவில் இல்லை.

பரபரக்கும் இந்த வாழ்விலிருந்து சற்றே ஆசுவாசிக்க நமக்கே நமக்கான நேரத்தை நாம்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்தச் சிறு இளைப்பாறல் தான் நாள் முழுவதும் நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளைச் சிறு முறுவலுடன் அலட்சியமாகக் கடக்கும் தெளிவையும் தைரியத்தையும் அளிக்கும்.

சரியான திட்டமிடலுடன், வீட்டில் உள்ளவர்களையும் இல்லப் பணிகளில் ஈடுபடுத்தி, பணிகளை இயல்பாகப் பகிர்ந்து செய்தால் எதுவுமே சுமையாகாது. நிறைய நேரம் மிச்சமாகும். அதிகாலைப் புல்லின் நுனியில் வைரத்துணுக்காக மின்னும் பனித்துளி, வேப்பங்கிளையில் ஒன்றையொன்று துரத்தி விளையாடும் அணிற்பிள்ளைகள், உணவுத் துண்டை மல்லுக்கட்டி இழுத்துச் செல்லும் எறும்புகள், அலகால் அழகாக உரசிக்கொள்ளும் சிட்டுக்குருவிகள், வானில் பருத்திப் பொதியாய் வெடித்துச் சிதறியிருக்கும் வெண்பஞ்சு மேகங்கள் என பார்க்கவும் ரசிக்கவும் எத்தனையோ இருக்கின்றன. நாமும் தான் அவற்றை அனுபவிப்போமே! என்ன குறைந்துவிடப் போகிறது?

Cheerful Casual Young Woman Celebrating

மழை பெய்தால் நல்ல இஞ்சித் தேநீரை மிடறு மிடறாக விழுங்கிக்கொண்டே மெல்ல ரசிப்போம். தேனருந்தும் பட்டாம்பூச்சியின் சிறகுகளில் உள்ள வண்ணங்களின் சேர்க்கையை வரைய முயற்சிக்கலாம்.

பிடித்த இசையைக் கேட்கலாம். நடனம் ஆடலாம். உடற்பயிற்சி செய்யலாம். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம். நமக்கான அந்த நேரத்தில் முழுக்க முழுக்க நாமே நிரம்பலாம். அந்த உலகத்தில் அடுத்தவரை நுழைய விடாதீர்கள். ’எனக்கே எனக்கான நிமிடங்கள் அவை’ என்று அழுத்திச் சொல்லுங்கள். இருக்கும் ஒரு வாழ்க்கையை இனிமையாக வாழ்வோம். நமக்குப் பிடித்தவற்றை அனுபவிக்க அடுத்தவரின் அனுமதியைக் கேட்கத் தேவையில்லை.

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.