ஆம், இன்றைக்கும் பெண்களுக்குத் தந்தைப் பெரியாரும் அவரது கருத்துகளும் தேவைப்படுகின்றன. பெரியாரைப் போல, தன் காலத்தை மீறி தீர்க்கதரிசனத்துடன் பெண்ணுரிமைக் கருத்துகளைத் தெளிவாகப் பேசியவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு, பெண் அடிமைத்தனத்தைப் பற்றியும் அதிலிருந்து விடுபடுவது பற்றியும் அவர் கூறிய கருத்துகள், அவரது 143ஆவது பிறந்த நாளான இன்றைக்கும் (17.09.2021) பொருத்தமாக இருக்கின்றன. இந்த 80 ஆண்டு காலமாகப் பெண்கள் நிலையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் இருந்தாலும், அடிப்படையான பெண்ணடிமைத்தன கருத்தாக்கங்கள் அப்படியேதான் இருக்கின்றன என்பது கசப்பான உண்மை.

பெரியாரின் ’பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் பெண்ணடிமைத்தனத்தின் அடிப்படையைச் சுருக்கமாக, தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆணாதிக்கத்தின் ஆணிவேர் வரை சென்று, அவர் ஆராய்ந்திருக்கிறார். பெண்ணின் விடுதலைக்கு எதிரானவற்றைக் கடுமையாக விமர்சித்து, நிராகரித்திருக்கிறார்.

அணணாவுடன் பெரியார் Pic: wikipedia

பெரியார் குறிப்பிட்ட ’கற்பு’ என்ற கருத்தாக்கம் இன்றுவரை மாறவில்லை. இந்தக் ’கற்பு’ என்ற சொல்லை நேரடியாக நாம் பயன்படுத்தாவிட்டாலும், பொதுபுத்தியில் இது ஆழமாகப் பதிந்திருக்கிறது. ’கற்பு’ என்ற ’ஒழுக்க அளவுகோல்’ ஏன் ஆணுக்கு இல்லை என்று சாடிய பெரியார், அது பெண்ணுக்கு மட்டுமே பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார். இந்தக் கருத்தாக்கத்தை, பல்வேறு வழிமுறைகளில் எல்லா மதங்களும் தூக்கிப் பிடிக்கின்றன. இதை எளிய மக்களிடம் பதிய வைக்க புராணங்களும் இதிகாசங்களும் காப்பியங்களும் கட்டுக்கதைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

`கற்புக்கரசி’ கதைகளும் கண்ணகி சிலையும் இன்றும் கொண்டாடப்படுகின்றன. ’கற்பு’ என்பது பெண்ணின் உடல் சார்ந்த தூய்மை என்றும், அதை இழந்துவிட்டால் அவள் உயிர் வாழக் கூடாது என்றும் மிகத்தவறாக மூளைச்சலவை செய்யும் மதங்களும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களும் இன்றைக்கும் பெண்களுக்குத் தொடர்ந்து அநீதி இழைக்கின்றன. இதனால் நமது பெண்கள், அடுத்த தலைமுறைப் பெண்கள் உட்பட அடையும் மன உளைச்சல் சொல்லில் அடங்காதது. இந்த ’ஒழுக்க’ கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலும், ’நிரூபிப்பதிலும்’ ’கடந்து போக எத்தனிப்பதிலுமே’ பெண்ணின் ஆயுள் முடிந்து விடுகிறது. தம் கட்டுப்பாட்டில் உள்ள பெண்களைக் ’கற்போடு’ கட்டிக்காப்பதில் குறியாக இருக்கும் ஆணாதிக்கச் சமுதாயத்தில் அடுத்த பெண்களை வன்புணர்வு செய்வது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

காதலைப் பற்றி பெரியாரின் கருத்துகள் மிக யதார்த்தமாக, புரட்சிகரமாக இருக்கின்றன. ’அன்பு, ஆசை, நட்பு என்பனவற்றின் பொருளைத் தவிர, வேறு பொருளைக் கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை, ஆண்-பெண் சம்பந்தத்தில் இல்லை’ என்று அழுத்தமாக எடுத்துரைக்கிறார். ’உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண்-பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து, காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தியில்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்க வேண்டும்’ என்று கூறுவது பிரமிக்க வைக்கிறது. ’ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவற்றைப் பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்றும் மூன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்ப்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது’ என்று ஆணித்தரமாக உரைக்கிறார்.

அம்பேத்கருடன் பெரியார் Pic: wikipedia

காதலால் பெண்ணுக்கு ஏற்படும் நிர்ப்பந்தங்களுடன் பொருத்திப் பார்த்தால் இந்தக் கூற்றின் உண்மை புரியும். காதல் என்ற பெயரால், பெண்ணின் சுதந்திரத்தைப் பறிப்பதும், அவள் மீது ஆதிக்கம் செலுத்துவதும், அவளின் அடிப்படை உரிமைகளை மீறுவதும் இன்றும் நடக்கிறது. மறுபுறம், தன் மேல் விருப்பம் இல்லாத பெண்ணை, காதல் என்ற பெயரில் கட்டாயப்படுத்துவதும், மறுக்கும் பெண் மீதும் ’ஆசிட்’ வீச்சும், கொலை செய்யும் வன்மமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

கல்யாணத்தைப் பற்றி பெரியார் இவ்வாறு கூறுகிறார்: ’நமது கல்யாணத் தத்துவம் எல்லாம் சுருக்கமாய்ப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதில் இல்லை. அவ்வடிமைத்தனத்தை மறைத்துப் பெண்களை ஏமாற்றுவதற்கே சடங்கு முதலியவை செய்யப்படுவதோடு, அவ்விதக் கல்யாணத்திற்குத் தெய்வீகக் கல்யாணம் என்பதாக ஒரு அர்த்தமற்ற போலிப் பெயரையும் கொடுத்துப் பெண்களை வஞ்சிக்கின்றோம்.’ இன்றும் இந்த நிலை மாறவில்லை. வரதட்சணைக் கொடுமையும் குடும்ப வன்முறை வழக்குகளும் பெரியாரின் கருத்தை மெய்ப்பிக்கின்றன. பெண்ணை அடிமையாகக் கருதி தானமாக அளிக்கும் சடங்குகளும், அவளின் சுயமரியாதைக்கு இழுக்கான மந்திரங்களும், அவள் கீழ்படிதலுடன் நடக்க வேண்டும் என்னும் உறுதிமொழியும், அவள் தன்னை முழுவதும் போர்த்திக் கொண்டு கணவன் முகத்தைக்கூடப் பார்க்காமல் மணந்து கொள்ளும் முறையும், மதங்களின் பெண்ணடிமைத்தனத்தை இன்றும் பறைசாற்றுகின்றன. இவை எதுவும் இந்தத் தலைமுறைப் பெண் மாண்புடன் வாழ வழி செய்யவில்லை.

’கல்யாண விடுதலை’ என்று விவாகரத்து பற்றியும் பெரியார் பேசுகிறார். மனைவிக்கும் கணவனுக்கும் ஒத்துவரவில்லை என்றால் இருவரும் பிரிந்துவிடுவதற்கு விவாகரத்து சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார். இன்று விவாகரத்து சட்டங்கள் இருந்தாலும், கல்யாணத்திற்கு ’தெய்வீக’ அந்தஸ்து தரப்பட்டிருப்பதாலேயே, பிறர் என்ன சொல்லுவார்களோ என்று பயந்துகொண்டு, படித்த பெண்கள்கூட, அடித்து உதைத்து கொடுமைப்படுத்தும் கணவனைச் சகித்துக்கொண்டு வாழ்கிறார்கள். சிலர் கொல்லம் விஸ்மயா போல உயிரையே இழக்கிறார்கள். விவாகரத்து செய்ய நினைக்கும் பெண்ணை, குடும்பமும் சுற்றியிருப்போரும் சமுதாயமும் ’உன் பெற்றோரை எண்ணிப் பார்த்தாயா? குழந்தையை நினைத்துப் பார்த்தாயா? அது அப்பா இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படும்’ என்று வேறு பிளாக்மெயில் செய்கிறார்கள். படித்த, வேலையில் இருக்கும் பெண்ணுக்கே விவாகரத்து, பல நெருக்கடிகளையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும் போது வேலையில்லாத பெண்ணின் நிலை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. விவாகரத்து பல பெண்களுக்கு எளிதான காரியமாக இல்லை, இந்த 2021லும்கூட.

வைக்கம், கேரளாவில் பெரியார் Pic: wikipedia

விவாகரத்து செய்துகொண்ட பெண்ணோ ஆணோ தன் விருப்பத்திற்கேற்ப மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் பெரியார் கூறுகிறார். கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பிரகடனம் செய்யும் அவர், குழந்தைத் திருமணங்களால் பருவமடையாமலே ’விதவைகளாகும்’ குழந்தைகளின் கொடுமையான நிலை பற்றி வருத்தத்துடன் விவரிக்கிறார். குழந்தைத் திருமணங்களை நாம் இன்னும் முழுமையாக ஒழிக்கவில்லை என்பதையும், கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் செய்வது இன்றும் கடினமான செயல் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

’சாதாரணமாகவே கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்குச் சிறிதும் தேவை இல்லாததேயாகும். இவ்விரண்டு வார்த்தைகளின் தத்துவங்களும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்களின்மீது சுமத்தப்படாமலும், ஆண்கள் அதற்காகப் பயப்படவோ அவமானப்படவோ கட்டுப்பட்டிருக்கவோ இல்லாமல் இருப்பதும், அதைப் பற்றி லட்சியம் செய்யாமையுமே ஆகும்’ என்ற பெரியாரின் கூற்றின்படி தான் இன்றைக்கும் ஆணாதிக்கப் பொதுப்புத்தி இயங்குகிறது.

“பெண் அடிமை என்பதற்கு உள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே மிகவும் முக்கியமான காரணம் என்பது நமது அபிப்பிராயம். ஆதலால், பெண்கள் தாராளமாகவும் துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக் கிளர்ச்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமும் அவசரமான காரியமுமாகும்’ என்று பெரியார் சொல்லி கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பின்பும், இந்தியாவில் 12.8% பெண்கள் பெயரில் தான் சொத்து இருக்கிறது.

“கர்ப்பத்தடையின் அவசியத்தைப் பற்றி நாம் கருதும் காரணங்களுக்கும் மற்றவர்கள் கருதும் காரணங்களுக்கும் அடிப்படையான வித்தியாசமிருக்கின்றது. அதாவது பெண்கள் விடுதலையடையவும், சுயேச்சை பெறவும் கர்ப்பத்தடை அவசியமென்று நாம் கூறுகின்றோம். மற்றவர்கள், பெண்கள் உடல் நலத்தை உத்தேசித்தும், நாட்டின் பொருளாதார நிலையை உத்தேசித்தும், குடும்பச் சொத்துக்கு அதிகம் பங்கு ஏற்பட்டுக் குறைந்தும், குலைந்தும் போகாமல் இருக்கவேண்டுமென்பதை உத்தேசித்தும் கர்ப்பத்தடை அவசியமென்று கருதுகிறார்கள்” எவ்வளவு தெளிவான கருத்து! பெண்களின் மீது எவ்வளவு அன்பு இருந்தால் பெரியார் இவ்வாறு சிந்திருப்பார்!

’உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போக வேண்டும்’ என்று பெரியார் சொன்னதை, ’பெரியார் கர்ப்பபையை எடுத்துவிடச் சொன்னதாகச்’ சிலர் தவறாகப் புரிந்துகொண்டு விமர்சிக்கிறார்கள். ’நீ என்ன முறையைப் பின்பற்றினாலும் சரி, பிள்ளை பெற்றுக்கொள்ளாதே; அப்போதுதான் முழுவிடுதலை சாத்தியம்’ என்பதுதான் அவர் சொன்னதன் பொருள். பெண்ணானவள், குழந்தை பெற்றுக்கொண்டு வாழ்வதற்கு ஆணைச் சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கிறது. ஆணுக்குக் ’குழந்தை பெறும் வசதி’ இல்லாததால் பெண்ணைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. ஆக, பெண் இல்லாமல் ஆணால் வாழ முடியும், ’குழந்தை வேண்டும்’ என்று விரும்பும் பெண்ணால் ஆணில்லாமல் அது சாத்தியமில்லை. இங்கு தான் ஆணின் ’ஆண்மை’ என்ற கற்பிதத்திற்கு உருவம் அளிக்கப்படுகிறது. ’பார்த்தியா, நான் இல்லாமல் உனக்குக் குழந்தை கிடைக்காது’ என்ற ஆணவத்தில் பெண் ஆட்டுவிக்கப்படுகிறாள், அடிமைப்படுத்தப்படுகிறாள். இதைத்தான் அவர் குறிப்பிட்டார். ஜாதிப்பெருமை, மதப்பெருமை, இனப்பெருமை, குடும்ப கவுரவம், ஊர் கவுரவம், நாட்டு கவுரவம் என்று எல்லா வெற்றுப் பெருமைகளும் பெண்ணின் கர்ப்பையில் தான் குடியிருக்கின்றன. அந்தக் கர்ப்பபையின் கதவை அடைத்துவிட்டால், ஆணாதிக்கச் சமுதாயத்தால் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாப் ’பெருமை’களையும் ஏறக் கட்டிவிடலாம்.

Pic: wikipedia

இன்றும் பெண் உடல் மீது அவளுக்கு உரிமையில்லை, அதற்குக் குடும்பமும் ஜாதியும் மதமும் ஆணாதிக்கச் சமுதாயமும் அரசாங்கங்களும் தான் உரிமை கொண்டாடுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் கர்ப்பைதான். ’நான் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன்’ என்று ஒரு பெண் முடிவு செய்துவிட்டால், அவள் உடல்மீது யாராலும் உரிமை கோர முடியாது. இதையும் கருத்தில் கொண்டுதான் பெரியார் ’குழந்தை பெற்றுக்கொள்ளாதே’ என்றார். அப்படியென்றால் மனித இனம் விருத்தியாகாதே, அழிந்துவிடுமே என்ற கேள்வி வந்தபோது, ’அதைப் பற்றிப் பெண்ணுக்குக் கவலையில்லை. இன்றைய பெண்ணைப் பற்றியும் அவளது கொடுமையான நிலை பற்றியும் நீ கவலைப்படாத போது, மனித இனத்தைப் பற்றிப் பெண் ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்று பதிலளித்தார். என்ன தெளிவு, பெண் மீது பேரன்பும் பெருங்கருணையும் கொண்டவர்களாலேயே இப்படிச் சிந்திக்க முடியும்.

அன்புத் தோழியரே, உங்கள் நிலையைப் பற்றி, இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள பெரியாரின் எழுத்தையும் கருத்துகளையும் படியுங்கள். ’ஏன் ஆண் இப்படி நடந்துகொள்கிறான்? ஏன் பெண் அடிமைத்தனத்துடன் இருக்கிறாள்? இருவரின் நிலையில் மதங்களின் பங்கு என்ன? எப்படி அவை ஆதிக்கம் செலுத்துகின்றன? ஏன் ஜாதிவெறி தலைவிரித்தாடுகிறது? இவற்றுக்குப் பின் உள்ள அரசியல் என்ன?’ எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும். பின் செயல்பாட்டில் இறங்க முடியும். நமது அடுத்த தலைமுறை பெண் குழந்தைகளுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் பெரியாரைப் பற்றிச் சொல்லிக் கொடுப்போம். புரிதலுள்ள, ஆரோக்கியமான, சமத்துவமான சமுதாயத்தை முன்னெடுப்போம்.

நிறைய அன்பும் நன்றியும் பிறந்த நாள் வாழ்த்துகளும் ஆசானே!

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.