சமீபத்திய பேசுபொருளாக மாறியிருப்பது பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான்- கிரண்ராவ் இருவரும் இணைந்து வெளியிட்ட விவாகரத்து அறிவிப்புதான். பதினைந்து ஆண்டுகள் இணைந்த வாழ்க்கைப் பயணத்தில் இனி தம்பதியராகச் சேர்ந்து பயணிக்க இயலாது.. நண்பர்களாகத் தொழில்ரீதியாகச் சேர்ந்து பணியாற்றுவோம் என்றும், துணைப் பெற்றோராக மகனை வளர்ப்பதில் உள்ள பங்களிப்பை இருவருமே நிறைவேற்றுவோம் என்றும் நாகரீகமாக அறிவித்துள்ளார்கள்.

wikipedia

அவர்கள் விவாகரத்து முடிவை எடுத்தது சரியா? தவறா? என்பதல்ல நமது வாதம். அது அவரவர்களின் தனிப்பட்ட குடும்ப சூழ்நிலை மற்றும் மன விருப்பம் உள்ளிட்ட காரணங்களால் எடுக்கப்படுவது. அதை வெளியிலிருந்து விமர்சிப்பது, அநாகரிகமான செயல்.

‌ முந்தைய காலங்களை விட இப்போது விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான முக்கிய காரணங்களாக சகிப்புத்தன்மை இன்மையும், விட்டுக் கொடுத்துப் போகும் மனப்பான்மையின்மையும் தான் முன்வைக்கப்படுகின்றன. எல்லாத் திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக இருப்பதில்லை. எல்லாத் தம்பதியரும் மனமொத்து இருப்பதில்லை. வேப்பம்பழத்தில் இருப்பது போல மெல்லிய கசப்புத் தன்மையுடன் தான் இருக்கிறார்கள். என்றாலும் எல்லோரும் விவாகரத்து செய்து கொள்வதில்லை.

மனிதர்கள் தோன்றிய காலந்தொட்டே ஆண்-பெண் உறவு சிக்கல்கள் நிறைந்ததாகத்தான் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒருவர் இன்னொருவர் மீது ஆளுமையை ஏற்படுத்த முயற்சிப்பதுதான் பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகின்றது. நமது இந்தியத் திருமணங்கள் மிகவும் விநோதமானவை. யாரென்றே தெரியாத இருவரை ஊரும், உறவுகளும் சேர்ந்து ஒரு கயிற்றின் முனையில் புனிதமான(?) பந்தத்தை ஏற்படுத்தி, அன்றைய இரவே இருவரையும் தனியறைக்குள் அனுப்பும் அளவுக்கு மிகவும் குரூரமானவை.

ஒருவருடைய ரசனை இன்னொருவருக்கு இருக்காது. என்றாலும் பெரும்பாலும் பெண்ணே தன் கணவனின் ரசனைக்கு ஒத்துப் போவதற்கு பழக்கியிருக்கிறாள். அப்போதுதான் குடும்பம் சீராகச் செல்லும் என்ற சப்பைக் காரணத்தால், அந்தப் பெண் தனது விருப்பங்களை வெளியிடுவதற்குக் கூட யோசித்து யோசித்து காலப்போக்கில் ரசனை, விருப்பம் ஏதுமின்றி ஒரு வாழ்க்கை(?)க்குப் பழகி விடுவாள். அதுதான் தியாகம் என்று அவளே நம்பும் அளவுக்கு அவளது மூளை கலாச்சார சலவைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

பெரும்பாலான விவாகரத்து முடிவுகள் தனக்கோ அல்லது இணைக்கோ இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்படுவதால் தான் எழுகின்றன. தன்னுடைய அல்லது இணையுடைய பாலியல் தேவைகள் நிறைவேறாத போது, அல்லது அதீத பாலியல் ஆர்வம் (இன்றைய காலகட்டத்தில் இது கொஞ்சம் கடினம்தான்), பொருளாதாரப் பற்றாக்குறை, அன்பான அனுசரணையான பேச்சு இல்லாமை என்று பல காரணங்களாலும் ஏற்படுகின்றன. சில வேறுசுவை தேடிச் செல்லும் விதிவிலக்கு(?)களாகவும் அமைந்து விவாகத்தை விவாதமாக மாற்றுகின்றனர்.

இப்போதெல்லாம் பிரிந்து செல்பவர்கள், உறவை நண்பர்களாகத் தொடர்கிறார்கள். நட்பு என்ற உறவுக்கு கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாத காரணம்தான் நண்பர்களை நாம் அதிகமாக விரும்புவதன் உளவியல் காரணி என்று நினைக்கிறேன். கணவன் மனைவி என்ற உறவின் நிர்ப்பந்தம் தான் பிரிவுக்கான முக்கியமான காரணி. எதையும் வெளிப்படையாக, அடுத்தவர் என்ன நினைப்பாரோ என்ற தயக்கத்துடன் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பின்னாமல், மனதில் பட்டதையும், விருப்பங்களையும் சகஜமாக வெளிப்படுத்தும் உறவில் தான் சிக்கல்கள் பெரும்பாலும் எழுவதில்லை.

அந்தக் காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்த காரணத்தால் ஒருவரின் முக வாட்டத்திலேயே பெரியவர்களோ அல்லது மற்றவர்களோ பிரச்சினை என்னவென்று கண்டறிந்து அதற்கேற்ப அறிவுரை வழங்கி முளையிலேயே பிரச்னையைக் கிள்ளி எறிந்தனர். ஆனால் இன்றைய தனிக்குடித்தனத்தில் பிரச்னைகளைப் பகிர்ந்து கொள்ள ஆட்களின்றி எது சீரியஸான பிரச்னை?.. எது சாதாரணமான பிரச்னை?..என்று பிரித்துக் கண்டறிய முடியாமல், சிறிய விஷயங்களைக் கூட பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதாக்கிப் பார்க்கிறார்கள்.

அதுவுமின்றி இன்றைக்கு நிறையக் குடும்பங்களில் ஒற்றைக் குழந்தை மட்டுமே இருப்பதால் தேவைப்படுபவற்றையும், தேவையில்லாதவற்றையும் பெற்றவர்கள் வாங்கிக் கொடுத்துப் பழக்கி விடுகிறார்கள். இல்லையென்ற சொல்லை இன்றைய தலைமுறை கேட்பதில்லை. சிறிய தோல்விகளைக் கூட ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லை. அதே மனப்பான்மையுடன் இணையை அணுகும் போதுதான், பிரச்னை வெடிக்கத் தொடங்குகிறது.

Photo by Eric Ward on Unsplash

ஒவ்வொருவரும் தமது இணை மாறவேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். தாமும் மாற வேண்டும் என்று நினைப்பதில்லை. எல்லோருமே நூறு சதவிகிதம் திருப்திகரமாக இணையிடம் நடந்து கொள்ள முடியாது. ஒவ்வொருவரும் அடுத்தவரை அவரது குறையுடன் ஏற்றுக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உறவு ஓரளவு சீராகச் செல்லும்.

திருமணம் என்பது தனிமனிதப் பிரச்சினை என்பதுபோல விவாகரத்தும் தனிமனித சுதந்திரம் தான். அதில் அநாவசியமாக மூக்கை நுழைத்து கருத்து சொல்லும் உரிமை பெற்றவர்களுக்கே கிடையாது. ஒருவரது திருமண வாழ்க்கை கசப்பாக இருக்கும் பட்சத்தில் அந்த உறவிலிருந்து வெளியேறி விடுவதே நல்லது. அடுத்தவர் என்ன நினைப்பார்கள்?.. சமுதாயம் எப்படி நோக்கும்?.. என்றெல்லாம் தேவையின்றி சிந்தித்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளக் கூடாது.

சமீபத்தில் இறந்த கேரளப் பெண் விஸ்மயாவின் துர்மரணத்தை இதுபோன்ற வறட்டுக் கௌரவம் பார்க்கும் பெற்றோர் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மூச்சுத் திணறும் திருமண வாழ்க்கையிலிருந்து ஒருவரை ஆசுவாசப்படுத்தும் சாளரமாக விவாகரத்து அமையவேண்டும். யாரையும் எதிர்பார்க்காமல் தனது உழைப்பால் தனது வாழ்வைத் தானே கட்டமைக்கும் தைரியத்தைப் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தியத் திருமணங்களில் பெரும்பாலும் (இல்லை..முழுக்க முழுக்க) ஆண் தனது பெற்றோரைக் கவனித்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளைச் செய்யவும், இரவில் தனது படுக்கையறைத் தேவைகளுக்கு ஒரு வடிகாலாகவுமே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். நீங்கள் இல்லையென்று சொன்னாலும் அதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களிடத்தில் கேட்டுப் பாருங்கள். “அம்மாவைப் பாத்துக்கணும்..”, “அம்மாவால வீட்டுவேலை செய்ய முடியலை..அதான் சீக்கிரம் கல்யாணம்..” இப்படியான பதில்கள் தான் வருகிறது.

என்னுடைய நெருங்கிய உறவினர் மகனுக்கு சமீபத்தில் பெண் பார்த்தார்கள். அந்தப் பெண்ணிடம் பையனைப் பிடித்திருக்கிறதா? என்று கேட்டதற்கு, “அம்மா, அப்பாக்கு ஓ.கே.னா எனக்கும் சம்மதம்..” என்றாள். பையனிடம் கேட்டதற்கு, “வீட்டில் எல்லோருக்கும் சரின்னா.. எனக்கும் சரி..” என்றான். வாழ்வின் இறுதிவரை(?) வரப்போகும் உறவு, கூடவே பயணிக்கும் ஒரு இணையைத் தேர்ந்தெடுப்பதில்கூட இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெளிவில்லை. ஒரு பழரசம் அருந்தும் நேரத்தில் திருமணத்தை முடிவு செய்கிறார்கள்.

இன்னும் ஒரு க்ரூப் இருக்கிறது. தேவையில்லாத ‘ஓவர் டாக்கிங்’கால் நல்ல இணையை இழந்து விடுகிறது. அவர்களைப் புரிந்து கொள்கிறேன் பேர்வழி என்று சில சந்திப்புகளிலேயே அதிகமான, தேவையற்ற பேச்சால் எதிர்பாலரை எரிச்சலடைய வைத்து விடுகிறார்கள்.

OLYMPUS DIGITAL CAMERA

இந்தத் திருமண உறவென்பது நத்தையிடம் வித்தை கற்றுக் கொள்வதைப் போன்றது. எப்படியென்றால் நன்கு கூர்மையான ஒரு ப்ளேடில் ஒரு நத்தையால் தனது உடலைக் கிழித்துக் கொள்ளாமல் நடந்து செல்ல முடியும். திருமண பந்தமும் அப்படித்தான். எந்தச் சேதாரமும் இல்லாமல் நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இன்னொரு தோழியின் உறவினர் மகள் ஒருமுறை விவாகரத்து செய்யப் போவதாக வீடே அமளிதுமளிப்பட்டது. விசாரித்ததில் அந்தப் பையன் வெளியில் எங்கும் அழைத்துச் செல்வதில்லை என்றும், பூ வாங்கித் தருவதில்லை என்றும், இவள் கர்ப்பமான செய்தியைக் கேட்டு சினிமாவில் வருவது போல் தூக்கிச் சுற்றவில்லை என்றும் புகார் வாசித்திருக்கிறாள். அந்தப் பையனிடம் விசாரித்ததில் தனது வருமானம் குறைவாக இருப்பதால் தேவையற்ற செலவுகளை குறைத்திருப்பதாகவும், உலகத்தில் திருமணமான பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிசயம் இல்லையென்றும், இனிவரும் செலவுகளைச் சமாளிக்கும் யோசனையில் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் சார்பாகப் பேசப்போன அவளின் தாய்மாமன் இறுதியில் இருவருக்கும் அட்வைஸ் செய்து திரும்பியிருக்கிறார். திரைப்படங்கள் பார்த்து விட்டுத் திருமணத்தில் அந்தப் பெண் கொண்டிருந்த அதிகப்படியான எதிர்பார்ப்புகள் தான் இங்கு பிரச்சினைக்கு முக்கிய காரணம்.

திருமணம் என்பது ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை அழிக்கும் விதமாக இருக்கக் கூடாது. தனது இணையின் வளர்ச்சிக்குக் கை கொடுத்து உதவி செய்யாவிடினும், தடை போடாமலிருக்கும் திருமணங்களே வெற்றி பெறுகின்றன. ஒருவர் வளர்ச்சியில் இன்னொருவர் மகிழும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றையும் மீறிப் பிரிவது என்று முடிவு செய்து விட்டால், அது புரிதலுடன் கூடிய பிரிவாக இருப்பது மிகவும் நல்லது. பரஸ்பரம் மனக்காயங்கள் ஏதுமின்றிப் பிரிவது சிறந்தது. விவாகரத்து செய்தவர்களிடம் காரணங்கள் கேட்டு அடுத்தவர்கள் குடைச்சல் கொடுக்காதிருக்கும் அடிப்படை நாகரிகத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். விவாகரத்து செய்த பெண்களைப் புருவம் உயர்த்தி கேள்விக் குறியோடு பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மறுமணம் எப்போது என்ற அதிமுக்கியமான(?) கேள்வியைக் கேட்கக் கூடாது. ஆக மொத்தம் அவர்களின் அந்தரங்கத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.

ஒரு பிரச்சினையிலிருந்து தப்பித்து வந்தவர்களை அடுத்த பிரச்சினைக்குள் நாம் தள்ளிவிடக் கூடாது. திருமணம், விவாகரத்து போன்ற தனிப்பட்ட விஷயங்களை பொது விஷயங்களாக்கக் கூடாது.

அந்தக் காலத்தில் பெண்கள் படிக்காத காரணத்தால், பொருளாதார சுதந்திரமின்மையால் இதுபோன்ற முடிவுகளை எடுக்கத் துணியாமல் இருந்தார்கள். இப்போதைய பெண்கள் படித்து, பணிக்குச் செல்வதால் எந்தவிதக் கொடுமையையும் சகித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றில்லாமல் துணிந்து முடிவெடுக்கிறார்கள். அவர்களது வலியை அவர்களால் தான் உணரமுடியும். விவாகரத்து செய்த ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் பொதுவில் நாம் விமர்சனம் செய்வதைத் தவிர்ப்போம். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பதை நாம் உணர வேண்டும். அவரவர் பாதையில் அவரவர் பயணம்.

கட்டுரையாளரின் முந்தைய கட்டுரை:

படைப்பு:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபியில் தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துக்களை எழுதவே கனலி என்ற புதிய புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.