உடையும் பாலின பேதமும் -4

பனிப் பிரதேசங்களில் எடுக்கப்படுகின்ற பெரும்பாலான தமிழ்த் திரைபடங்களின் ரொமான்டிக் பாடல் காட்சிகளில் நடிக்கும் நடிகைகளுக்கான உடைகள், லேசானவையாகவும் குளிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய வசதியற்றதாகவுமே அமைகின்றன. குளிர் தேசங்களில் சேலையணிந்து நடிகைகளை நடிக்கச் செய்திருக்கும் படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான ஆடைகளை கதைக்கேற்றாற்போல் வடிவமைத்துத்தர ஆடை வடிவமைப்பாளர்கள் இருப்பார்கள். நம்மைப் போன்ற மக்களுக்குத்தான் ஆடை எதற்காக அணிகிறோம்? அதன் அறிவியல் பின்னணி என்ன? பருவநிலைக்கேற்ற ஆடைகள் எவை? போன்ற ஆடைத் தேர்வு குறித்த போதிய அறிவு இல்லையென நினைத்தால், ஆடை வடிவமைப்புத் துறையினருக்கும் ஆடைத்தேர்வு குறித்த போதிய அறிவு இல்லையோ என்ற எண்ணம் ஏற்படுகின்றது.

ஆண் பார்வையாளர்களது புரிதலற்ற அரைகுறை காமத்திற்கு தீனி போடும் நோக்கிலேயே நடிகைகளின் ஆடைகள் தொடர்ந்து தட்பவெப்ப சூழல்களைக் கருத்தில் கொள்ளாமல் வடிவமைக்கப்படுகின்றன. வலிமையான ஒன்றாக பெண்ணுடல் மாறிவிடக் கூடாது; மென்மையாகவும் கவர்ச்சிப் பொருளாகவுமே இருக்க வேண்டும் என்று ஆணாதிக்க சமூகத்தின் பொதுபுத்தி பார்த்துக்கொள்கின்றது. ஆண்களின் மதிப்பீடுகளே கவர்ச்சிக்கான எல்லைகளையும் தீர்மானிக்கின்றன.

பெண்களுடைய முலைகள் ஆண்களுக்குக் கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடியவை, ஆகையால் முலை வடிவம் தெரியும் ஆடைகளை அணியும் பெண்களைக் கண்டாலே வெள்ளம் போல் ஆண்களுக்குக் காமம் பெருக்கெடுத்தோடும் என்று நம்புபவர்கள் ஆண்கள். காமத்தின் பொருட்டு இவர்களோடு உடலைப் பகிர்ந்துகொள்ளும் காதலி அல்லது மனைவியின்பால் தூண்டுதலடைந்து எந்த அளவிற்கு அவர்களது காமத்தை திருப்திப்படுத்துகிறோம் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்கையில் உண்மையை அறிந்து கொள்வர்.

பெண்களின் உடைத் தேர்வுகளில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ஆண்கள் இதுவரை அனுபவித்த இன்பங்கள்தான் என்ன? இரண்டு மூன்று கணத்தில் அடி-பைப்பை அடித்துத் தண்ணீரை வரச்செய்வதைப்போல ஒரு காரியத்தை செய்து என்ன இன்பத்தை அடைகிறார்கள்? ‘ நான் ஆம்பளை, எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காமம் பெருக்கெடுத்தோடக்கூடிய குணத்தை உடையவன்’, போன்ற ஆதிக்க உணர்ச்சிகளைத் தாண்டி எந்த இன்பத்தைக் கண்டுவிட்டார்கள் ஆண்கள்? என்று யோசிக்கையில் இன்னும் பல புரிதல்கள் உண்டாகும்.

காமம் பெண்ணிடத்தில் கிளர்ந்தெழுந்து பகிரப்படுகையில்தான் காதல் பேரானந்தமாகி பூரணமடையும். காமத்தை பகிர்ந்துகொள்ளும் பொருட்டு இருவர் உடன்பட்டு பழகும் பொழுது ஒருவர் உறுப்பு இன்னொருவரைக் கிறங்கடிக்கச் செய்யும். கிறங்கடிக்கும் உறுப்புகள் இவை இவையென்ற திட்டவட்டமான வரையறைகளற்ற ஈர்ப்பாக அது வளரும். கால்விரல் நகம் கூட இன்பத்தை தூண்டும்.

சம்பந்தமே இல்லாத பெண்ணின் உடைக்குள் இருக்கும் உறுப்பின் வடிவம் ஆண்களது காமத்தைத் தூண்டும் என்ற பொதுப்புத்தி ஆணாதிக்கத்தால் உருப்பெற்ற ஒன்றே ஒழிய, இயற்கையின் நியதியல்ல.

பெண்களை ஒடுக்கி ஆள்வதெற்கென ஆணாதிக்க சமூகம் வகுத்த கவர்ச்சி, கற்பு போன்றவற்றையெல்லாம் சமத்துவத்தை விரும்புகின்ற பெண்கள் சகித்துக் கொண்டு இனியும் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.
உடை என்பது நம் தேவை; நம் விருப்பம். உடலுக்கு சவுகரியத்தை ஏற்படுத்தக் கூடிய உடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள தயக்கம் காட்ட வேண்டாம்.

Woman dressed in hippie clothes illustration

‘ஒல்லியாக இருந்திருந்தால் எந்த உடையை வேண்டுமானலும் அணிந்திருக்கலாம்; முலைகள் சற்று பெருக்காமல் இருந்திருந்தால் துப்பட்டாவைக் கட்டியழ வேண்டி இருந்திருக்காது’ என்று பருமனாக இருக்கும் பெண்கள் தாழ்வு மனப்பான்மையால் வருந்தத் தேவையில்லை. உங்களது உடலை நீங்கள்தான் முதலில் ரசிக்க வேண்டும்; கொண்டாட வேண்டும். ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதும்; பருமனாக இருப்பதும் இயல்பான ஒன்றுதான். உங்களுக்குப் பிடித்தமான உடைகளை நீங்கள் விரும்பும் வண்ணம் அணிந்து கொள்ளப் பழகுங்கள்; கிண்டல் கேலிகளைப் புறக்கணியுங்கள்.

Woman photo created by rawpixel.com – www.freepik.com

உங்களால் சவுகரியமாக உணர முடிகிறதென்றால் ப்ரா அணிந்து கொள்ளுங்கள். வடிவம், காம்புகள் வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்ச உணர்வோடு ப்ராக்களை அணிய வேண்டாம். ப்ரா அணியவில்லை என்றால் முலைகள் தொங்கிவிடுமென்று வரும் அறிவுரைகளையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம். நெற்பயிர்கள் கனிந்தால் தொங்குவது இயல்புதான். ப்ராவைப் போல உங்களை அசௌகரியமாக உணரச்செய்யும் உடைகளைத் தவிர்க்க தயக்கம் காட்டாதீர்.

பொட்டு வைப்பது, பூச்சூடுவது, அணிகலன்கள் அணிவது, நீண்ட நெடும் கூந்தலைப் பராமரிப்பது போன்றவற்றிலெல்லாம் உங்களுக்கு விருப்பமில்லையெனில், தவிர்த்துவிடுங்கள். உங்களுக்கு விருப்பமுண்டு எனில் எத்தனை வயதில் வேண்டுமானாலும் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
“ஆன்டியாகிட்ட உனக்கெதுக்கு மேக்கப், கிழவி வயசுல மினிக்கிட்டு இருக்கா பாரு” என்றெல்லாம் வரும் கேலி கிண்டல்களுக்கு செவிசாய்க்காமல் உங்கள் விருப்பத்திற்காவும் மகிழ்விற்காகவும் வாழப் பழகுங்கள்.

படித்துணர்ந்து பெற வேண்டிய ஞானத்தை நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் என்பார்கள்; ஆரோக்கியமான உணவு மற்றும் உடலுறவால் நலமூட்டப்பட வேண்டிய கர்பப்பையை கால் விரலில் மிஞ்சி அணிவதன் மூலம் பேண முடியும் என்பார்கள்; இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளைப் பின்பற்ற வலியுறுத்துகின்ற குடும்ப உறவுகளையும் தனி நபர்களையும் கேள்விக்குள்ளாக்குங்கள்.

பெண்கள் முடியை வெட்டிக் கொள்ளலாம்; மொட்டை அடித்துக் கொள்ளலாம்; மொட்டை அடிப்பது என்பது துக்கமான ஒன்றை வெளிப்படுத்துவதற்கான அலங்கோலக் குறியீடல்ல; கோடை வெயில் காலங்களில் மொட்டையடித்துக்கொள்வது சிறப்பான ஒன்று.

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான ஆடை வடிமைப்புகள் போதுமான அளவு சந்தைக்கு வருவதில்லை. ஆடை வடிவமைப்புத் துறைக்குள் நுழைகின்ற பெண்கள் ஆடைகளை வடிவமைக்கையில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவான வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளி பாடத் திட்டங்களில் பாரம்பரிய உடை குறித்த அறிமுகம் மட்டுமே அதிகப்படியாக இடம்பெறுகின்றன. அதையும் தாண்டிய உடை சார் கல்விக்கான தேவை நம்மிடத்தில் இருக்கின்றது.

தட்பவெப்ப சூழலுக்கேற்ற ஆடைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கான புரிதலைக் கல்வி பெண்களுக்கு நல்கும். பெண்களின் சுதந்திரமான ஆடைத் தேர்வுகளில் மூக்கை நுழைத்து ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ஆண்களுக்கு ஆடைத் தேர்வு பற்றிய கல்வி மிக மிக அவசியமான ஒன்றாகும். ஆண்களின் காமத்தைக் கட்டுப்படுத்த பெண்கள் உடை அணிவதில்லை என்ற உண்மையை பள்ளிப் பருவத்திலிருந்தே ஆண்களுக்கு கற்பிக்க வேண்டிய தேவையுள்ளது.

பெண்களுக்கான கல்வியை மறுத்துப் பயின்று எல்லாத் துறைகளிலும் ஆண்கள்தான் சிறப்பாக பணியாற்றக்கூடியவர்கள் என்ற போலி பிம்பத்தை பெண்களுடன் போட்டியே போடாமல், கட்டமைத்துக் கொண்டவர்கள் ஆண்கள். ஆனால் அவர்கள் அறிவுக்கு நமது ஊர் வெப்பநிலைச் சூழலில், அதுவும் கோடை காலத்தில், மிகவும் இறுக்கமான ஜீன்ஸ் பேன்ட்களை அணிவது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல என்பது தெரியாமல் இருப்பது வேடிக்கையே!

2019ம் ஆண்டில் தமிழ்நாட்டின் அரசு சார்பில் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், முதல்வர் உள்பட அமைச்சர்கள் அணிந்திருந்த கோட் சூட் உடைகளை கேலி செய்தது அன்றைய நாளின் ட்ரெண்டாக இருந்தது. இவையெல்லாம் உடை நாகரீகத்தின் மீதான நமது அறிவின்மையைக் காட்டுகின்றன.

இந்திய ஒன்றியம் போன்ற பிற்போக்கான நாடுகளின் தலைவர்கள் “பெண்களின் உடையில்தான் ஆண்களின் ஒழுக்கம் உள்ளது”, என்பது போன்ற நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகின்றனர். தலைவர்களின் கருத்துக்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அக்கருத்துக்களே பொது புத்தியாய் நீடித்து நிற்கின்றன. உடை மற்றும் உடைத் தேர்வு குறித்த அடிப்படைக் கல்வி குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகின்ற பொழுது, பொதுப் புத்தியின் போலி அடிப்படைகள் மாறும்.

இவையெல்லாம் ஆண்களுக்கான உடைகள், ஆண்கள் மட்டுமே அணிய வேண்டும்; இவையெல்லாம் பெண்களுக்கான உடைகள், பெண்கள் மட்டுமே அணிய வேண்டும் என்ற விதிகளிலிருந்தெல்லாம் விடுபட்டு உங்களுக்கு வசதியான, விருப்பமான உடைகளை உடுத்தி மகிழுங்கள்.
ஆண்கள் பெண்களின் உடைகளையும், பெண்கள் ஆண்களின் உடைகளையும் மாற்றி மாற்றி அணிந்து கொள்கையிலும்; பெண்களுடைய நிர்வாணம் இயல்படைகின்ற பொழுதும் பாலீர்ப்பு என்பது இல்லாமலே போய்விடுமோ என்ற குழப்பம் பலருக்கு ஏற்படுகின்றது. பாலினம், பாலீர்ப்பு போன்றவைகள் அனைத்தும் மூளையின்பால் தோன்றக் கூடியவை என்ற புரிதலுக்கு நாம் வருகையில், தேவையில்லாத குழப்பங்கள் நம்மிடத்தே தோன்றாது.

வெள்ளையும் சொள்ளையுமாய் உடை உடுத்துபவர்கள் நல்லவர்கள், அழுக்கான மற்றும் கந்தலான உடை உடுத்தும் விளிம்பு நிலை மக்கள் மோசமானவர்கள் என்று மதிப்பிடுவதைப் போல கண்ணியமான உடை, கண்ணியமில்லாத உடையென்று பெண்களின் ஆடை சுதந்திரத்திற்கும் வரையறை வகுக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். கண்ணியம் என்பது நடத்தைகளின் வழி மதிப்பிடப் பட வேண்டிய ஒன்று என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆடை சுதந்திரம் என்பது தனிப்பட்ட மனிதர்களின் தேர்வுகளையும் உள்ளடக்கியது. எனவே பெண்களின் ஆடைச் சுதந்திரத்திற்கு வரையறை வகுக்க எவராலும் முடியாது. உடை நாகரீகம் காலத்திற்கும் சூழலிற்கும் ஏற்ப மாறக்கூடிய ஒன்று. ஆணாதிக்க பாரம்பரியத்திலிருந்து பொருளாதாரச் சுதந்திரமடைகின்ற பெண்கள், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் ஏதுவான உடைத் தேர்வையும் வாழ்வியலாக்கிக் கொள்வது காலத்தின் தேவையாகும். பெண்களுக்கான சுதந்திரம் ஆடைகளில் மட்டுமா? எனக் கேட்பவர்களும் உண்டு. பெண்களுக்கான சுதந்திரத்தின் தேவை எல்லாவற்றிலும் இருப்பதைப் போல் ஆடையிலும் இருக்கின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கட்டுரையின் முந்தைய பகுதி:

படைப்பு:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.