உடையும் பாலின பேதமும்- 2

ஆடை என்பது தட்பவெப்ப சூழலிலிருந்து உடலைக் காத்துக்கொள்ளவும், நுண்ணுயிரிகளின் தாக்குதல்களிலிருந்து எளிதில் ஒவ்வாமையடையும் உடல் உறுப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், மனிதன் அடைந்த நாகரீகத்தின் வளர்ச்சியாகும். இலைதளைகளில் புணர்ச்சி உறுப்புகளை மூடிய ஆதி மனிதர்கள், வேட்டையாடிய விலங்குகளின் தோலை லாவகமான உடுப்பாக இடுப்பில் அணிவதையும் குளிர்காலங்களில் உடல் முழுவதும் போர்த்திக்கொள்ளவும் கற்றுக்கொண்டார்கள்.

பால் வாடை நுகர்ந்து வரும் நுண்ணுயிரிகளிடமிருந்து முலைக்காம்புகளைப் பாதுகாத்துக்கொள்ள குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், பாலூட்டும் காலம் வரை மட்டும் மார்புப்பகுதிகளை மூடியுள்ளனர். மலர்களைக் கொய்து தலையில் சூடிக்கொள்வது, மாலையாக்கி கழுத்தில் அணிந்து கொள்வது போன்ற கலைவயப்பட்ட செய்கைகளனைத்திலும் ஆண்களும் ஈடுபட்டுள்ளனர்; பெண்களும் ஈடுபட்டுள்ளனர். ஆதி மனிதர்களின் கண்டுபிடிப்புகள் வளர்கையில், பூக்களுக்கு பதில் சுடுமண், இரும்பு, வெள்ளி, தங்கம் போன்றவற்றை நுட்பமாக வடிவமைத்து ஆபரணங்களாக்கி அணிந்து கொண்டனர்.

 இரு பாலினத்தாரும் நீளமாகக் கூந்தலை வளர்த்து பராமரித்துள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமான விதவிதமான சிகையலங்காரங்கள் சங்க காலத்தில் இருந்துள்ளன. அவரவர்க்குக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு அணிகலன்கள் உருவாக்கி காதிலும், கழுத்திலும் அணிந்துள்ளனர். வாசனைப்பொடிகள், நிறச்சாயங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தியுள்ளனர்.

பாலினப் பொதுமையில் இருந்த ஒப்பனை முறைமைகள் சிலவற்றை பெண்களை ஒடுக்க தந்தைமைய சமூகம் பயன்படுத்தியது. விரும்பினால் தலை மயிரை நறுக்கிக் கொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும் ஆண்களுக்கு மட்டுமே சுதந்திரம் அளிக்கப்பட்டது. கூந்தல் வளர்ப்பதென்பது பெண்களின் அடையாளமாக மாறியது. கணவனை இழக்கும் பெண்கள் மொட்டையடித்துக்கொள்ள வேண்டிய நிலை இருந்துள்ளதை

                   “கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி அல்லி உணவின் மனைவி” (புறநானூறு -250)   என்ற சங்கப் பாடல்வழி அறியமுடிகின்றது. மேலும் இப்பாடல் கணவனை இழந்த மனைவி வளையல்களை (குறுந்தொடி) கழற்றிய செய்தியையும் குறிப்பிடுகின்றது.

சிலம்பு கழிதல் நோன்பு/சடங்கு:

PC: Mathan Photography

சிலம்புகழி என்ற சடங்கு தந்தைமைய ஆதிக்கம் பரவலாக விரிவடைந்த சங்க காலத்தில் தோன்றியுள்ளது.  வயதுக்கு வந்ததும்  பெண் குழந்தைகளை கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் வரையிலும் வீட்டோடு வைத்துக் காவல் காக்கும் சூழல் இருந்துள்ளது. வேற்றின ஆண்களுடனோ, அல்லது ஒத்த இன ஆண்களில் தான் விரும்பும் ஆணுடனோ வாழ சுயமாகப் பெண்கள் முடிவெடுத்துவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டும், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை தந்தையர்களே தீர்மானிப்பர் என்பதை நிறுவிக் கொள்ளவும், வயது வந்த பெண்களை வீட்டோடு வைத்து உளவு பார்க்கும் செயலை “இற்செறிப்பு” என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

நடக்கப் பழகிய குழந்தைகளுக்கு கலகலவென ஓசையெழுப்பக்கூடிய கால் கொலுசுகளை அணிவித்துள்ளனர். குழந்தைகள் அங்குமிங்குமோடி விளையாடுவதை ஓசையை வைத்தே தாய்மார் குழந்தைகளையும் கண்காணித்துக்கொண்டு, தங்கள் பணிகளையும் இடையறாது செய்துள்ளனர். அதைப் போலவே, இற்செரிப்பிலிருக்கும் இளம் பெண்களுக்கு மிகுந்த ஓசையெழுப்பக் கூடிய கால்சிலம்புகளை அணிவிப்பது வழக்கமாகப் பின்பற்றப்பட்டுள்ளது.

கால்சிலம்பு எழுப்பக்கூடிய ஓசையை அப்பெண்ணைக் கண்காணிப்பதற்கான கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் முன் பெண்கள் அணிந்திருந்த மிகுந்த ஓசையெழுப்பக் கூடிய சிலம்புகளை அகற்றும் சடங்கே சிலம்புகழி சடங்காக இருந்துள்ளது. மணமகன் அளிக்கும் சிலம்பு, வளையைப் பெற்று, தாய்வீட்டு அணிகலன்களைக் கழற்றும் வழக்கமே சிலம்புக் கழீஇ என்று ஔவை துரைசாமி நற்றிணை உரையில் குறிப்பிடுகிறார். இச்சடங்குக்குப் பின் பெண்கள் மெல்லொலியெழுப்பும் சிலம்புகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

ஒற்றுத் தொழில், போர்த் தொழில், வணிகத் தொழில் செய்யும் ஆண்கள் தொழிலுக்குத் தொந்தரவாக இருக்கும் அணிகலன்களை விலக்கிக் கொள்ளவும், விரும்பிய அணிகலன்களை அணிந்து கொள்ளவும் சுதந்திரம் இருந்தது. வீட்டோடு  வாழ்க்கை  நடத்திய பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. திருமணமான பின்னர் பெண்கள் மங்கல அணிகலன் (தாலி) அணிந்து கொள்ள வேண்டும். கணவன் இறந்தால் ஆபரணங்கள் அணியக்கூடாது. வாசனைப் பொடிகள், மலர்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை தந்தை மைய சமூகம் தோற்றுவித்தது.

‘லாக்கரான’ பெண்கள்!

பெண்களுக்கு அணிவிக்கும் விலையுயர்ந்த ஆபரணங்களை வைத்து கல்வி கற்கவோ, வணிகம் செய்யவோ, நிலம் வாங்கவோ பெண்களுக்கு உரிமையில்லை என்பதால் கணவன் அவற்றை பயன்படுத்திக் கொள்வான். பொருள் வளம் செழிக்கின்ற போது பெண்களுக்கு அணிகலன்களைக் கொடுக்கும் ஆண்கள், பொருள்வளம் குன்றும் போதும், வேறொரு பெண்ணை அடைய விரும்பும் போதும் மனைவிக்கு அளித்த அணிகலன்களை பறித்தும் செல்வார்கள். ஏன் எதற்கு என்ற கேள்விகளையெல்லாம் கணவனிடத்தில் கேட்கும் உரிமையற்ற பெண்களை கணவன்மார்கள் சொந்த லாக்கர்களாக பயன்படுத்தியுள்ளனர்.

Photo by Aayush(gop) Rawat on Unsplash

சிலப்பதிகாரத்தில் கோவலன் உல்லாசமாக வேறொரு பெண்ணுடன் இருந்து செல்வத்தையெல்லாம் செலவழித்துவிட்டு, கண்ணகியிடம் வந்து அவளது காற்சிலம்பை விற்று புதிதாக வணிகம் தொடங்கி தொலைத்த செல்வத்தையெல்லாம் மீட்பதாகக் கதைப்பான் அல்லவா? அது போலத்தான் பெண்கள் அணிந்து கொள்ளும் ஆபரணங்களின் உரிமையும், பயனும் ஆண்களுக்கானதாக இருந்துள்ளது. ஆபரணங்கள் பெண்களுக்கு பெரிய அந்தஸ்த்தையெல்லாம் கொடுத்ததில்லை.

கல்வியுரிமையிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களின் நிலை வளர்ந்துள்ள இன்றைக்கும்கூட, வரதட்சணையாகவோ சீராகவோ மாப்பிள்ளை வீட்டாரின் மறைமுக நிர்பந்தங்களினால் தங்க நகைகளை அணிந்து கணவன் வீட்டில் நுழையும் பெண்களால், நகைகளை தங்கள் கல்விக்காகவோ வணிகத்திற்காகவோ அடகு வைத்துவிட முடியாது. தந்தை சம்மதிக்க வேண்டும், அந்த நகையை வாங்க துளி கூட உழைப்பைத் தராத நேற்று வந்த மாமனார், கணவன் உட்பட சுற்றத்தார்கள் பேசி முடிவு செய்து சம்மதிக்கையில்தான் அந்த நகைகள் அடகுவைக்கப்பட்டு பெண்களின் படிப்பு செலவிற்கோ வணிகத்திற்கோ பயன்படும்.

ஆனால் கணவனுக்கு ஒரு தேவையென்றால் மனைவியின் சம்மதம் கூட இன்றி அந்நகைகள் அடகுவைக்கப்பட்டு பணமாகி கணவனுக்கு பயன் தரும். விலையுயர்ந்த ஆபரணங்களை அணிவதை பெண்கள் கௌரவமெனக் கருதினாலும்கூட பயன்பெறுவது ஆண்களுகாகத்தான் இருக்கின்றனர்.

விழா நாள்களில் ஆண்கள் விலையுயர்ந்த ஆபரணங்களை முன்பு அணிந்துள்ளனர். அணிந்தாலும் அணியாவிட்டாலும், ஆணை மங்கலம் பொருந்தியவனாகவே சமூகம் நடத்தியுள்ளது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சுமங்கலிப் பெண்கள் ஆபரணங்கள் அணிந்து ஒப்பனை செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள் விரும்பினாலும், ஒப்பனை செய்துகொள்ளவோ, அணிகலன்கள் அணியவோ உரிமை மறுக்கப்பட்டது.

துணிகளின்  உற்பத்தி பெருகி, பரவலாக அனைவரும் உடை அணியும் சூழல் உருவான பின்பு, ஆண்கள் தங்களது தொழிலுக்கும் வெப்ப நிலைக்கும் ஏற்றவாறு உடையணிந்து கொண்டனர். ஆண் குறியை மட்டும் மூடியவாறு உடையணிவது, துறவறமேற்றால் அதையும்கூட மறைக்காமல் உடைகளையும் துறப்பது என எல்லா வகையிலும் ஆண்கள் தங்களது தேர்வை மையமாக வைத்து ஆடைகளையும், அணிகலன்களையும் அணிந்துள்ளனர். ஆனால் பெண்களின் உடை என்பது தட்பவெப்ப சூழலையெல்லாம் மையமிடாததாக, உடலை முற்றிலும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டுமென ஆண்வயப்பட்ட சமூகம் வலியுறுத்தியுள்ளது.

காமம் என்பது என்ன என்று இயற்கையின் வழி ஆய்ந்தறியாமல், ஆதிக்கக் கண்ணோட்டத்தோடே அனைத்தையும் அணுகிய ஆண்கள், “மூடாத பூவுக்குள் என்றும் தேனில்லை”, என்று  எல்லா நேரத்திலும் பார்த்துப் பார்த்து சலிப்படையாமல் விரும்பும் பொழுது மட்டும் திறந்தெடுத்து கிளர்ச்சிப்படுத்திக்கொள்ள பெண் உடலை முழுமையாக மூடி வைத்துக்கொள்ள வேண்டுமெனக் கூறியது.  “ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள் மட்டுமே”,  என்று சமூகம் பொதுவாக காமத்தைப் பற்றிக் குறிப்பிடும். ஆனால் இது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய ஒன்று.

ஆசையும் மோகமும் பெண்ணுக்கு மெனோபாஸ் வரை மாதாமதம் தோன்றக்கூடிய ஒன்றாகும். அதை ஆண்களின் தேவையாகப் பார்ப்பதால்தான் இங்கு எல்லா பிரச்சனைகளும் தீர்த்து வைக்கமுடியாதபடி வளர்ந்து நிற்கின்றன.

மூடிவைத்தால் சரியாகிவிடுமா?

பெண்களால் ஆண் குழந்தைகள் அனுபவிக்கின்ற பாலியல் வன்முறைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவெளிகளில் ஆடையின்றி சுதந்திரமாகச் சுற்றும் ஆண்களால், அறைகுறை ஆடையோடு விளம்பரம், திரைப்படங்களில் நடிக்கும் ஆண்களால், பக்தியும் தெய்வீகமும் கலக்க வேண்டிய இடத்தில் மார்பகங்களைக் கவர்ச்சியுடன் காட்டித்திரியும் ஆண்களால், பெண்கள் கிளர்ச்சியடைந்து தன்னிடம் சிக்கும்  ஆண் குழந்தைகளிடம் பெண்கள் அத்துமீறுகிறார்கள் என்று புரிந்து கொண்டால் தீர்வு கிடைக்குமா? 

அல்லது உடல் முழுதையும் போர்த்திக்கொண்டுதான் ஆண்கள் வெளியில் வரவேண்டுமென மங்குனித்தனமாக கட்டுப்பாடுகள் கொண்டுவருவதன் மூலம் ஆண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட முடியுமா?

இந்தக் கேள்விகளையெல்லாம் ஆண்களே ஆற அமர யோசித்து பதில் காணுங்கள். கைலியை முட்டி வரை மடித்துக் கட்டாமலும், இடுப்பின் எடுப்பான வடிவம் பெண்களின் கண்களில் பட்டுவிடாமலும் இருக்க, ‘கோவில்’ பட வடிவேலுவின் கூடை உடையை இடுப்பில் கட்டிக்கொண்டும் அடக்க ஒடுக்கமாக இருந்து, ஆண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் ஆண்களை நாம் கேட்டுக்கொள்ள முடியுமா?

பெண்ணுடல் என்பது கணவன் மட்டும் பார்க்க வேண்டிய கணவனின் சொத்து என்ற நோக்கில் பெண்ணுடல்கள் ஆடையால் மூடப்பட வேண்டும் என்பது பண்பாடாக வளர்ச்சி பெற்றது. இந்த பொருள்கெட்டப் பண்பாட்டை பின்பற்றிவரும் சமூகத்தின் வாயில் உதித்த பாடல் வரிகள்தான், “கணவன் மட்டும் காணும் அழகை கடைகள் போட்டு காட்டுறியே” என்பன. ‘முழுசா மூடியிருக்கணும்’, என்பது பெண்கள் ஆடை வடிவமைப்பின் மூலமானது.

பெண்களின் ஆடைகளில், கலைநயத்தின் அழகியல் வண்ண வண்ணமாகக் குவிந்திருக்க வேண்டும் என்றானது. வெறுமையான ஆடைகள் விதவைகளின் சீருடையாகக் கருதப்பட்டது. கணவனை இழந்த பின்னும் வண்ண உடைகளை உடுத்தும் பெண்களை நடத்தைக் கெட்டவர்களாக சமூகம் ஒடுக்கியது. இதே சமூகம் மனைவியை இழக்கும் ‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ கொண்ட ஆண்களுக்கு இன்னுமோர் இளமைகொண்ட பெண்ணை மணமுடித்து வைத்து அழகு பார்த்தது என்பது வேறுகதை.

ஆண் மயிலை பெண்ணுடன் ஒப்பிடலாமா?

பெண்ணுடைகள் கலைநயம் கலந்து ‘நீளமாக’ வளர்ந்தது. நீண்ட தோகை கொண்ட கண்கவரும் அழைகையும் நடையையும் கொண்ட ஆண் மயிலைத் தூக்கி வந்து, பெண்ணின் சாயலில் ஒப்புமை செய்ய நினைக்காத ஆண் கவிஞரே இல்லாத அளவு கவிதைகள் குப்பைகளாகச் சேர்ந்தன. ஆண்கள் விரும்பக்கூடிய பெண்களின் கண்களை கயல்மீன்களென புகழ்ந்து கவிதை எழுதித் தள்ளிய சமூகம், ஆண்களால் விரும்பப்படாதக் கண்களையும் பெண்ணுடலையும் உருவக்கேலி செய்து நகைச்சுவை இன்பமென மகிழ்ந்தது.

ஆண்களின் உடை நேர்த்தி என்பது பண்பாட்டு அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு தேவைக்கேற்ப மாறிக் கொள்ளக் கூடியவைகளாகவும் கலை, அழகியலென இல்லாமல் தொழில் நோக்கானவைகளாகவும் வளர்ச்சியடைந்தன. ஆண்கள் வேட்டிதான் எங்கள் பண்பாடென்று எல்லா நாளும் அணிந்து கொள்வதில்லை. பள்ளி மற்றும் கல்லூரியில் பணியாற்றும் ஆண் ஆசிரியர்கள் வேட்டியை பண்பாட்டு அலுவல் உடையாக அணிந்துகொள்ள முன்வருவதில்லை.

ஆனால் பெண்களின் அலுவல் உடையாக சேலையே தொடர்கின்றது. கல்யாணம் காதுகுத்து என்று ஆடிக்கு ஒருமுறை, அமாவசைக்கொருமுறை ஆண்கள் அணியும் வேட்டிகளில்கூட ஒட்டிக்கொள்ளும் வசதியும், பாக்கெட் வசதியும் வந்துவிட்டது. அலுவலுடையாக பெண்கள் நாள்தோறும் அணியும் புடவைகளில் பாக்கட் வருவதற்குள் மூச்சுவாங்கிவிட்டது. இன்றளவும் ரெடிமேடாகத் தைக்கப்பட்ட சேலைகள் மலிவான விலையில் சந்தைப்படுத்தப்படவில்லை. உடை வணிகம் என்பது ஆண்களுக்கு வளைந்து கொடுப்பதாக வளர்ந்துள்ளது. பெண்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து விடுகிறது.

நாசாவுக்கே இந்த நிலை?

அவசரக் காலங்களில் பயன்படுத்தப்படுகின்ற ஆடை வடிவமைப்புகளும் சரி, பொதுவான துறைசார் ஆடை வடிவமைப்புகளும் சரி, ஆண்களை முன்மாதிரியாகக் கொண்டே பெரும்பாலும் வடிவமைக்கப்படுகின்றன. பெண் சார்ந்த வடிவமைப்புகள் சந்தைக்குத் தாமதமாகவே வருகின்றன. கோவிட்-19 தீவிரமாகப் பரவிய தொடக்க காலத்தில் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்ட கவச உடைகள், பெண்களுக்கு தோதுவாக இல்லையென உலகம் முழுவதிலுமுள்ள மருத்துவத் துறையில் பணியாற்றிய பெண்கள் குரலெழுப்பினர். 2019 ஆம் ஆண்டு பெண்களை மட்டும் விண்வெளிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த  நாசா விண்வெளி மையம், தேர்ந்த உடைகள் கிடைக்காததால் தற்காலிகமாக திட்டத்தையே நிறுத்தி வைத்தது. இப்படி பெண்களுக்கான ஆடை வடிவமைப்பு நீண்ட காலமாகவே பின்தங்கியுள்ளது.

வேட்டியை விடுத்து எதை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளும் ஆண்கள்,  சேலையுடுத்துவது எங்களுக்கு வசதியாய் இல்லை என்று கூறும் பெண்களை நோக்கி, ” பண்பாட்டை புண்படுத்துகிறார்கள்; கலாச்சாரத்தைக் காற்றில் பறக்க விடுகிறார்கள்; ஓ என் தாய்க்குலமே தமிழ் சமூகம் சீரழிகிறதே”, என்று கதறத் தொடங்கி விடுவார்கள் என்பது வேடிக்கை!

லிப்ஸ்டிக் ஆணுக்கானது இல்லையா?

Photo by henri meilhac on Unsplash

கலை, அழகியல் நிறைந்த ஆடையும், அணிகலன்களும் பெண்களுக்கே உரியன என்று தப்புக் கணக்கு போட்டுள்ள சமூகம், நெயில் பாலிஷ், மருதாணி, லிப்ஸ்டிக் போன்றவற்றை நேர்த்தியாகப் பயன்படுத்த விரும்பும் ஆண்களை, “அவனா நீ” என்று பகடி செய்து ஆண்களின் உடலைக் கலையின்பால்  திரும்பவிடாமல் பார்த்துக் கொள்கின்றது.

 சமூகம் பெண்ணுடலை இரண்டாம் தரப்பாலினமாகப் பாகுபடுத்தி இழிவுசெய்வதைப் போல, இதுகாறும் பெண்கள் பயன்படுத்தி வந்த உடைகளையும் தாழ்ச்சிக்குறியவையாக காட்டுகின்றது. ஆண்களை உட்சபட்சமாக  இழிவுபடுத்த, ‘ பொண்டாட்டி சேலை நாலு வாங்கிக் கட்டிக்கோ,  நைட்டிய வாங்கிப் போட்டுக்கோ, உனக்கெல்லாம் எதுக்கு வேட்டி?’, என்று கூறி பெண்ணுடைகளை தாழ்ச்சிக்குறியதாக்குவது வழக்கமாகிவிட்டது.

சமூகத்தில் ஒரு பெண்ணை மானபங்கம் செய்வதற்கும், பெண்ணின் ஆடைகளே கிழிக்கப்படுகின்றன. ஆண்களை அவமானப்படுத்துவதற்கும், பெண்களின் ஆடைகளையே இழுத்து வருகின்றனர். இதில் எந்த வேறுபாடும் இல்லை!

-தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.