அடுக்களை டூ ஐ நா – 09

“வாம்மா மின்ன்ன்னல்”னு எல்லாரும் எதிர்பார்த்து உட்கார்ந்திருக்க, மிஷேல் ஒபாமா மின்னல் போல சுருசுருன்னு வந்து, பரபரன்னு தன்னுடைய உரைய முடிச்சி, சரசரன்னு கிளம்பிப் போயிட்டாங்க. அவங்க கிளம்பும் வரை விசிலடிச்சான் குஞ்சுகளும் ஓயவில்லை. மெயின் செக்மென்ட்ல தரமான கல்வி என்பது எது, அதை நாம் எவ்வாறு அடைய முடியும் என்ற தலைப்பின் கீழ் ‘நீயா நானா’ (விவாதம்) தொடங்கியது.

அவரவர் நாட்டு கல்விச் செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு , குரோஷியா, கினியா, துனிஷியா, அந்தோரான்னு உலக உருண்டைல பூதக்கண்ணாடி வைச்சி தேடினாலும், கண்ணுக்குத் தெரியாத (கொரோனா வைரஸ் போல) தக்கினியூண்டு நாட்டு பிரசிடென்ட் எல்லாம்கூட நல்லாத்தான் பேசினாங்க. பங்களாதேஷ், டென்மார்க், எத்தியோப்பியா, நார்வே இந்த நான்கு நாடுகளின் பிரதமர்களும் அமர்த்தலா பேச, சீனாவின் கல்வி அமைச்சர் தனது உரையில் உலக நாடுகளுக்காகவும், குழந்தைகளின் எதிர்கால கல்வி நலனுக்காகவும் உருகி வழிந்தார். (பேசுறதெல்லாம் நல்லாதாம்ப்பூ பேசறீக!!!! பிறகு உலகத்துக்கே வைக்கறீங்க பாருங்க ஆப்பூ…)

டென்மார்க் பிரதமர் ஹெலி தார்னிங், குழந்தைகள் மிக மோசமான, நிலையற்ற சூழலில் வளர்வதாகக் கூறி வருத்தப்பட்டு, டேனிஷ் அரசு, GPE ( Global partnership for Education) நிதி உருவாக்க ஆதரவு தருவதாகவும், 2015 முதல் ஒவ்வொரு வருடமும், 70 மில்லியன் அமெரிக்க டாலர் தருவதாகவும் சபையில் அறிவிக்க, கொரோனா கால நிவாரணநிதி கிடைத்த வேலம்மாள் பாட்டி போல அனைவரும் சந்தோசப்பட, சபை அதிர்ந்தது. அவர் அடுத்து சொன்ன விஷயம் தான் ஹைலைட்…200 ஆண்டுகளுக்கு முன்பே டென்மார்க்கில் கட்டாய தொடக்கக் கல்வித் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டு விட்டதாம். இந்தியாவில் 01/ 04/2010 ல் தான் RTE ( Right to Education – கட்டாயக்கல்வி) நடைமுறைக்கு வந்தது என்ற விஷயம் தேவையில்லாத ஆணியாய் நினைவுக்கு வந்து உறுத்தியது. 200 வருசமா பின்தங்கியிருக்கோம்???? இது கொஞ்சம் ஓவராயில்ல?

மொசாம்பிக் கல்வி அமைச்சர் பேசும் போது, அவரை பேச விடாமல் ஒரே கரைச்சல். காரணம் புரியாமல் “எ ன் ன டா வ ச ன மே பு ரி ய ல” னு விவேக் போல ஊமைப்படம் பார்த்திட்டு இருந்தோம். பெனின் ( அப்படி ஒரு நாடா!!!?) நாட்டு கல்வி அமைச்சர், குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க சிறிய நாடுகளுக்கு அனைத்து நாடுகளும் கை கொடுக்கனும்னு போற போக்குல ஒரு கோரிக்கை வைச்சி துண்டைப் போட்டுட்டு போனார். ஒரு வழியா உலகப் பெருந்தலைகள் எல்லாம் பேசி முடிச்சதும் , ஐநாவின் உலக திட்டங்களை உள்ளூர் வரைக்கும் லோக்கலா எடுத்துட்டு போற பார்ட்னர்ஸ் ( stakeholders) எறங்கி பூந்து வெளாண்டிட்டாங்க.

கூட்டுக்குடும்பத்து மாமியார் மாதிரி ரோசனை பண்ணி, ரோசனை பண்ணி ஐ நா திட்டங்களை வடிவமைச்சாலும் ,அதை முறையா செயல்படுத்தி திட்டத்தை அசால்ட்டா ஜெயிக்க வைக்கறதோ, இல்ல எதிர்த்திட்டம் போட்டு கவுக்கறதோ சர்வதேச அளவில் இயங்கக் கூடிய இந்த மாதிரி மருமகள்கள் கையில்தான் இருக்கு. நாடுகளின் ஒத்துழைப்பு, உலக வங்கியின் உதவி, உள்ளூர் வளங்கள் இந்த மூணையும் சரியான விகிதத்தில் கலந்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு, சிறப்பான செயல்பாடுகள் ப்ளஸ் தொடர் கண்காணிப்பு ரெண்டையும் தேங்காய்ப்பூ போல தூவி விட்டா திட்டத்திற்கான அருமையான வெற்றி தயார்!

இந்த சூத்திரத்தை கைவசப்படுத்தத் தெரிஞ்ச UNFPA ( United Nations Fund for Population Activities), GEFI (Global Education First Initiative ), ஐ நா பெண்கள் அவை, UNDP ( United Nations Development Programme), உலகக் கல்வி அமைப்பு, உலக கல்வி செயல்பாட்டு அமைப்பு, உலகக் கல்வி பார்ட்னர்ஷிப் ஆகியவற்றின் தலைவர்கள் களத்தில் இறங்கி சிக்ஸர் தூக்கினர். உலகக் கல்வி அமைப்பின் தலைவர் சூசன் ஹாப்குட் பேசும் போது, நாங்களும் உணர்ச்சிவசப்பட்டு விசிலடிக்கலாமானு யோசிச்சி, பிறகு டீச்சர்ங்கற இமேஜ(!) மெயின்டெயின் பண்ணி, கைதட்டி உற்சாகமூட்டினோம். எப்படி அரசாங்கத் திட்டங்களின் வெற்றியும், தோல்வியும் அதிகாரிகள நம்பி இருக்கோ, அதுபோல ஐ நாவின் திட்டங்களின் வெற்றியும் இத்தகைய அமைப்புகளைப் பொறுத்து தான் இருக்கு.

நம்ம தெருவுக்கு ரோடு போடறதுல இருந்து, அனைவருக்கும் கல்வி, ஸ்வச்ச பாரத்னு எந்தத் திட்டம் வந்தாலும் அதுக்குப் பின்னாடி ஐ நா மற்றும் உலக வங்கியோட கண்ணுக்குத் தெரியாத ஆதிக்கமோ, ப்ரஷரோ இருக்கும். அது பில்லியனில் பணம் கொழிக்கும் உலகளாவிய அரசியல். ‘ஸ்வச்ச பாரத் அபியான்’ திட்டத்தில நாடெங்கும் பதினோரு கோடி டாய்லெட் கட்டியதற்காக, நம்ம பிரதமருக்கு குளோபல் கோல் கீப்பர்( Global goal keeper Award ) விருது ஐ நாவால் வழங்கப்பட்டது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்(!!!) டூ ப்ளஸ் டூ ப்ளஸ் டூ இஸ் ஈக்குவல் டூ டுட்டுடூ….. புரிஞ்சவுங்க பிஸ்தா….

உலகத்தில அம்புட்டு ‘தலை’களும் ( பிரதமர்கள்/ அதிபர்கள்) ஆம்பளைகளாக இருக்க, இதுபோன்ற அமைப்புகளில் 100 சதம் மீனாட்சி ஆட்சிதான். ஆனா, அரசியலில் பொம்பளங்க தலையெடுக்க விடாமல் அத்தினி நாடுகளிலும் எப்படி அரசியல் பண்றாங்க பாருங்க? “ நாங்களும் வருவோம், எப்ப வருவோம், எப்படி வருவோம்னு தெரியாது, ஆனா வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவோம், பார்த்துக்கிடுங்க”. சுருக்கஞ் சுருக்கமா எல்லாரும் பேசி முடிக்க, Education First என்ற இந்த ஹை லெவல் அமர்வுக்கு என்ட் கார்டு போட்டாச்சு.

இதே மாதிரி ஒரு பொது அவையில், 1961 ல் நம்ம நேரு மாமா அட்டகாசமா பொளந்துகட்ட, அவையில் அத்தனை பேரும் எழுந்து நின்று கைதட்டியதை ( Standing ovation) சகாக்களிடம் அளந்து விட்டு பெருமை பீற்றிக் கொண்டேன்.

‘இன்னிக்கு வரைக்கும் வேற யாருக்கும் standing ovation கிடைக்கலியாக்கும் னு’ நான் பேசப்பேச எல்லாருக்கும் காதுல புகை வர்றதை பார்க்க சிரிப்பா வந்திச்சு. கதைச்சி, கதைச்சி …..மற்றொரு பாதையின் வழியே அந்த சேம்பரிலிருந்து ஐ நாவின் தலைமைச் செயலக கட்டிடத்திற்கு பக்கத்தில வந்தாச்சி. எங்க கிட்டயிருந்து அடாவடியா பறிமுதல் செஞ்சதயெல்லாம் மற்றொரு ஏழு அடி 120 கிலோ பீம்பாய் ஈஈஈ யென திருப்பிக் கொடுக்க, காணாததைக் கண்டா மாதிரி பிடிங்கிக்கிட்டோம். ‘ஆபிசரய்யா உங்களுங்கு சிரிக்கவெல்லாம் தெரியுமா? அடடா… ஐ நா பயண வரலாற்றில் மொதமுறையா ஒரு பீம்பாய் சிரிக்கறத பார்த்துட்டேன்’.

செல்போனை பார்த்த பெறகு தான், பாட்டிலைப் பார்த்த குடிமகன் போல கைநடுக்கமெல்லாம் குறைஞ்சு இயல்பு நிலைக்குத் திரும்பினோம். ஆனால் என்ன பிரயோசனம்…..இங்க போட்டோ எடுக்கக் கூடாது, அங்க போட்டோ எடுக்கக் கூடாதுன்னு ஆயிரத்தெட்டு ரெஸ்ட்ரிக்சன்ஸ். “ஐ நா சபையை பார்த்தோம்னு ஊருக்குள்ள நம்ப வைக்கணும்னா ரெண்டு போட்டோ வேணும்யா, இல்லாட்டா ஒரு பய நம்ப மாட்டான்”னு அனுமதித்த இடத்தில் மட்டும் ஒண்ணு ரெண்டு கிளிக்.

தலைமைச் செயலகம், பொது அவை, கான்ப்ரன்ஸ் ஏரியா, நூலகம்னு நாலு பகுதிகளா இருக்கு ஐ நா. இதில் ஐ நா என்று தட்டியவுடன் நம் கூகுளண்ணன் காட்டும் பெரிய கட்டிடம் தான் தலைமைச் செயலகம். இது 39 மேல் மாடிகளையும் தரைக்குக் கீழே 3 கீழ் தளங்களையும் கொண்டது. 550 அடி உயரத்தில் அலுமினியம், கண்ணாடி மற்றும் மார்பிளால் கட்டப்பட்ட முகப்பு, பளபளனு கண்ணு கூசுற அளவுக்கு மின்னுது. இதை டிசைன் பண்ண சர்வதேச வல்லுநர்களிடமிருந்து 45 டிசைன்ஸ் பெறப்பட்டதாம். சீப் ஆர்க்கிடெக்ட் வாலஸ் கே. ஹாரிசன் தலைமையில் ப்ரெஞ்ச ஆர்க்கிடெக்ட் லீ கார்பூசியா, பிரேசிலைச் சேர்ந்த ஆஸ்கர் நியமியா னு மூன்று பேர், இவர்களுக்குப் பின்னால ஒரு பெரும் ஆர்க்கிடெக்ட் , டிசைனர்ஸ் கூட்டமே வேலை பார்த்திருக்காங்க.

“வீட்டைக் கட்டி பாரு , கல்யாணத்தை முடிச்சுப் பாரு” னு தம்மாத்துண்டு விஷயத்துக்கே கிறுகிறுத்து போயிடறோம். நாலு ரூம கட்டறதுக்கு, வீட்டில் இருக்கிற நாலு பேருக்கு ஏழு ஒப்பினியன் ; அம்பானி வீடு மாதிரி கட்டணும்னு ஆசைப்பட்டுத் தொடங்கி, கடைசில அவர் வீட்டு அடுக்களை அளவு கூட நம்மால கட்டமுடியாதுங்கற உண்மை உறைக்கும் போது, சில பல லட்சங்கள் கடனாளியாகி முழிச்சிட்டு இருப்போம். உலகத்துக்கே சொந்தமான ஒரு கட்டிடத்தை கட்டணும்னா எவ்ளோ பிரச்சினைகள், கோபதாபங்கள், கருத்துக்கள். ஆரம்பத்தில, தனிப்பட்ட சுதந்திரமான நகரமாக ( Independent City) ஐ நா இருக்கணும்னு தான் கனவு கண்டாங்க எல்லாரும். ஆனால் கட்டத் தொடங்கிய பிறகு அனுமார்வால் போல பிரச்சினைகள் தொடர, நான்கு கான்ட்ராக்ட் கம்பெனிகளிடம் வேலை கொடுக்கப் பட்டது.

நல்லவேளை, பிள்ளையார் பிடிக்க குரங்கா வராம, யானையாகவே வந்து ஒரு வழியா கட்டடம் உருவாயிடிச்சி. 1948 ல் அடிக்கல் நாட்டி, 1952 ல் புதுமனை புகுந்தாச்சு. இலட்சக் கணக்கான சர்வதேச ஆபிசர்கள் இங்க வேலை பார்க்கிறார்களாம். “ம்ம்ம்ம் நாம ஒரு அப்ளிக்கேஷன போட்டா என்ன?”னு மனசுக்குள்ள ஒரு குட்டிசாத்தான் எட்டிப் பார்க்குது. வாடகைக்குக் குடியிருக்கிற வீட்டை எல்லாம் விலைக்கு வாங்க நினைக்கற டெனன்ட் மாதிரி, ஒருநாள் போனா போகுதுன்னு சுத்திப் பார்க்க அனுமதி கொடுத்தா, அங்கயே ஆபிசராகணும்னு ஆசை வந்திடிச்சி.

கட்டிடத்துக்கு முன்னால் ஒரு அழகான வட்ட வடிவிலான நீரூற்றுடன் கூடிய நீர்தேக்கம் பார்க்கவே கண்ணைப் பறிக்குது. இதை அமைப்பதற்கு, அமெரிக்கக் குட்டீஸ்களிடம் உண்டியல் காச ஆட்டய போட்டு சிறு சிறு நிதியாக திரட்டி 50000 அமெரிக்க டாலர்கள் கொடுத்தாங்களாம். (பச்சப் புள்ளகள சைக்கிள் வாங்க சேத்து வைச்சது கூட பொறுக்கலியாப்பா?) தண்ணிக்குள்ள போடப்பட்டிருந்த வெள்ளை க்ரஷ்டு மார்பிள் மற்றும் கருப்புக் கூழாங்கற்கள் கிரேக்க நாட்டு தீவுகளில் ரோட்ஸ் ( Rhodes beach) பீச்சில், அங்க காத்து வாங்க வந்த(?) பெண்களும், குழந்தைகளுமா சேகரிச்சு பரிசா கொடுத்தாங்களாம். ரோட்ஸ் கடற்கரை தண்ணி கிரிஸ்டல் மாதிரி சுத்தமா, அம்புட்டு அழகோட ஐரோப்பாவிற்கே பெருமை சேர்க்கிற கடற்கரையாம்.

மொத்தம் 21 நாடுகள் இது போல ஐ நா வை அலங்கரிக்க ரொம்ப ரொம்ப ஸ்பெஷலான பொருளா கொடுத்து அசத்தியிருக்காங்க. அங்க இருக்கிற ஒவ்வொரு அலங்காரத்திற்குப் பின்னாடியும் இப்படி ஒரு செய்தியும், மிக நுட்பமான சிறப்புமிக்க பன்னாட்டு பொருட்களின் கலவையுமாக கலந்து கட்டி கவர்ந்திழுக்குது இந்த பன்னாட்டு கட்டிடம். அடுத்ததாக190 வருடங்கள் பழமையான நியூயார்க் யுனிவர்சிட்டியை நோக்கி …….

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!