இந்தக் கட்டுரை People’s Archive of Rural India (PARI) இணையதளத்திலிருந்து சிறப்பு அனுமதி பெற்று, Her Stories இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆக்கம்: PARI.

படங்கள், மூலக்கட்டுரை: எம்.பழனிக்குமார், இணைந்து எழுதியவர்: அபர்ணா கார்த்திகேயன், தமிழில்: நிவேதிதா லூயிஸ்.

எஸ். முத்துப்பேச்சி அமைதியாக தனது கஷ்டங்களைப் பட்டியலிடுகிறார். தன் வாழ்க்கைக்காக அவர் நிகழ்த்தும் கரகாட்டம் என்ற பாரம்பரியக் கலை வடிவத்தை நிகழ்த்த, இரவு முழுவதும் நடனமாட திறமையும், உடல் வலிமையும் அவருக்குத் தேவைப்படுகிறது. ஆனாலும்கூட, இந்தக் கலைஞர்கள் பெரும்பாலும் மோசமானவர்களாகவும், களங்கப்படுத்தப்பட்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள்; சமூகப் பாதுகாப்பற்றவர்களாகவும் உள்ளனர். 44 வயதான முத்துப்பேச்சி இந்தத் தடைகளை எல்லாம் தாண்டியுள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட, முத்துப்பேச்சி ஒற்றைப் பெற்றோராக தனித்து நின்று, தனது வாழ்க்கைச் செலவுகள் அனைத்தையும் நிர்வகித்து, தனது இரண்டு மகள்களையும் அந்த வருமானத்தில் திருமணமும் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால், அதன்பின், கோவிட் -19 தாக்கியது.

கொரோனா வைரஸைப் பற்றி பேசும்போது அவளுடைய குரல் கோபத்திலும் வேதனையிலும் துடிக்கிறது. “பாழாய்ப் போன கொரோனா” , என்று நோயை சபிக்கிறார். “பொது நிகழ்ச்சிகள் இல்லாததால் வருமானம் இல்லை. எனது மகள்களிடமிருந்து பணம் வாங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ”

“அரசாங்கம் கடந்த ஆண்டு 2,000 ரூபாய் உதவித்தொகை அறிவித்தது”, என்று சொல்கிறார் முத்துப்பேச்சி. ” ஆனால் எங்கள் கைக்கு ஆயிரம் ரூபாய் தான் வந்து சேர்ந்தது. இந்த ஆண்டு மதுரை ஆட்சியரிடம் நாங்கள் முறையிட்டோம், ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை”, என்று சொல்கிறார். 2020ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழக அரசு மாநில நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு, இரண்டு முறை ஆயிரம் ரூபாய் வழங்கியது.

தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து, மதுரை மாவட்டத்தில் சுமார் 1,200 கலைஞர்கள் வேலை இல்லாமல் போராடி வருவதாக பிரபல கலைஞரும், நாட்டுப்புறக் கலை வடிவங்களின் ஆசிரியருமான மதுரை கோவிந்தராஜ் கூறுகிறார். 120 கரகாட்டக் கலைஞர்கள் அவனியாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கின்றனர். அங்கு மே மாதம் முத்துபேச்சியையும் இன்னும் சிலரையும் நான் சந்தித்தேன்.

பெரும்பாலும் கிராமப்புற நடன வடிவமான கரகாட்டம் கோயில்களில் மத விழாக்களிலும், கலாச்சார நிகழ்வுகளிலும், திருமணங்கள் போன்ற சமூக விழாக்களிலும், இறுதிச் சடங்குகளிலும் நடத்தப்படுகிறது. பெரும்பாலான கரகாட்டக்கலைஞர்கள் ஆதி திராவிட சாதியைச் சேர்ந்த தலித்துகள். அவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக இந்தக்கலையையே சார்ந்து இருக்கிறார்கள்.

கரகாட்டம் என்பது பெண்கள் மற்றும் ஆண்கள் இரு பாலரும், தலையில் சமநிலையான ‘கரகம்’ எனப்படும் கனமான அலங்கரிக்கப்பட்ட பானையுடன் நிகழ்த்தும் குழு நடனமாகும். பெரும்பாலான கரக நிகழ்ச்சிகள் இரவு 10 மணி முதல் அதிகாலை 3 மணிவரை விடிய விடிய நிகழ்த்தப்படுகின்றன.

வீட்டுக்குள் சமைக்க இடம் இல்லாததால், வீட்டின் முன் சமைக்கும் ஏ. முத்துலட்சுமி, அவனியாபுரம்

கரகக் கலைஞர்களின் வழக்கமான வருமானத்தின் பெரும்பகுதி கோயில் திருவிழாக்கள் மூலம் கிடைக்கும். இந்த விழாக்கள் வழக்கமாக பிப்ரவரி முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெறுவதால், கலைஞர்கள் தங்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் வருவாயை கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் சேர்த்துவைத்துச் செலவு செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள், அல்லது வேறு வழியின்றி கடன்வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.

ஆனால் தொற்றுநோய் அவர்களின் இந்த வரையறுக்கப்பட்ட வருமான ஆதாரங்களை பாதித்துள்ளது. அவர்களின் நகைகள், மற்றும் அவர்களின் வீடுகளில் உள்ள மதிப்புமிக்க எல்லாவற்றையும் அடகு வைத்துள்ள இந்தக் கலைஞர்கள் இப்போது படபடப்புடனும், கவலையுடனும் உள்ளனர்.

முப்பது வயதான எம். நல்லுத்தாய், “கரகாட்டம் மட்டும் தான் எனக்குத் தெரியும்”, என்று சொல்கிறார். அவர் பதினைந்து ஆண்டுகளாக கரகாட்டம் ஆடிவருகிறார். “இப்போதைக்கு, என் இரண்டு குழந்தைகளும் நானும் ரேஷன் அரிசி, பருப்பை சாப்பிடுகிறோம். ஆனால் எவ்வளவு காலம் எங்களால் இப்படி தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு ஒவ்வொரு மாதமும் 10 நாட்கள் வேலை தேவை. அப்போதுதான் நான் குடும்பத்திற்கு உணவளிக்கவும், குழந்தைகளின் பள்ளி கட்டணத்தை செலுத்தவும் முடியும்”, என்று கூறுகிறார்.

தனியார் பள்ளியில் படிக்கும் அவரது குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 40,000 ரூபாய் கட்டணம் அவர் செலுத்தவேண்டும். அவர் தனது தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என்று அவரது குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று அவர் கூறுகிறார். நல்ல கல்வி கிடைத்தால், தன் குழந்தைகளுக்கு வாழ்க்கையை அமைக்க இன்னும் சில வாசல்கள் திறக்கும் என்று அவர் நம்பினார். ஆனால் அந்த நம்பிக்கையை தொற்றுநோய் தகர்த்துவிட்டது. “எங்கள் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதே இப்போது எனக்கு கடினமாக உள்ளது”, என்கிறார்.

கரகாட்ட நடனக் கலைஞர்கள் ஒரு திருவிழாவில் ஆடினால், 1,500 முதல் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கமுடியும். இறுதிச் சடங்குகளில் நிகழ்ச்சி நடத்தச் சென்றால், இந்தத் தொகை குறைவாகவே உள்ளது. அங்கு அவர்கள் பெரும்பாலும் ஒப்பாரி பாடுகிறார்கள். இதற்குப் பொதுவாக ரூ. 500-800 வரை கிடைக்கும்.

தொற்றுநோய் காலத்தின் ஒரே வருமானமாக இறுதிச் சடங்குகள்தான் இருந்தன என்று 23 வயது ஏ. முத்துலட்சுமி கூறுகிறார். அவர் கட்டுமானத் தொழிலாளர்களான தனது பெற்றோருடன், அம்பேத்கர் நகரில் 8 x 8 அடி அறையில் வசிக்கிறார். தொற்றுநோய்களின் போது அவர்களில் யாரும் அதிகம் சம்பாதிக்கவில்லை, நாடடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது சிறிது ஓய்வு கிடைத்தாலும், கரகாட்டக் கலைஞர்களுக்கான வருமானம் குறைந்துபோனது. கோவில் திருவிழாக்கள் நடந்தபோது வழக்கமாகக் கிடைத்ததை விட, கால் அல்லது மூன்றில் ஒரு பங்கு வருமானமே கிடைத்தது.

மூத்த நடனக் கலைஞரான ஆர். ஞானம்மாள், 57, நிகழ்வுகளின் திருப்பத்தால் மனச்சோர்வடைந்திருக்கிறார். “நான் மிகவும் விரக்தியடைந்திருக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார். ” சில நேரங்களில் செத்துப்போய்விடலாமா என்று கூட எனக்குத் தோன்றியிருக்கிறது…”, என்கிறார்.

ஐந்து பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் மூத்த கலைஞர் ஆர். ஞானம்மாள் பலருக்கு கரகம் கற்றுத்தந்திருக்கிறார்

ஞானம்மாளின் மகன்கள் இருவரும் இறந்துவிட்டனர். அவரும், அவருடைய இரண்டு மருமகள்களும் சேர்ந்து, அவரது ஐந்து பேரக்குழந்தைகளை உள்ளடக்கிய தங்கள் வீட்டைப் பராமரிக்கிறார்கள். அவர் இப்போது கூட தன் இளைய மருமகளுடன் கரகாட்ட நிகழ்ச்சிகள் செய்கிறார். தையல்காரரான அவரது மூத்த மருமகள், அவர்கள் இல்லாத நேரத்தில் வீட்டை நிர்வகிக்கிறார்.

திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அவர்களை மும்முரமாக வைத்திருந்தபோது, ​​சாப்பிடக்கூட நேரமில்லை என்று எம். அழகுப்பாண்டி, 35, கூறுகிறார். “ அப்போது ஆண்டுக்கு 120 முதல் 150 நாட்கள் வேலை இருந்தது”, என்கிறார் இவர்.

அழகுப்பாண்டிக்கு கல்வி கிடைக்கவில்லை என்றாலும், அவரது குழந்தைகள் படிக்க ஆர்வமாக உள்ளனர் என்று அவர் கூறுகிறார். “என் மகள் கல்லூரியில் படிக்கிறாள். அவள் பிஎஸ்சி கணினி அறிவியல் படிக்கிறாள்”, என்று சொல்கிறார். இருப்பினும், ஆன்லைன் வகுப்புகள் இருப்பதையும் உறிஞ்சிவிடுகின்றன என்று அவர் கூறுகிறார். “நாங்கள் பணத்திற்காக போராடும்போது, முழு கட்டணத்தையும் செலுத்துமாறு வற்புறுத்தப்படுகிறோம்.”

அவரது அத்தை ஒரு பிரபலமான கரகக் கலைஞராக இருந்ததால், கரகம் ஆடவந்த டி.நாகஜோதிக்கு (33) உடனடியாக சமாளிக்கவேண்டிய சிக்கல்கள் அழுத்துகின்றன. கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததிலிருந்து, தன் வருமானத்தை அவரே நிர்வகித்து வருகிறார். “என் குழந்தைகள் 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் உள்ளனர். அவர்களுக்கு உணவளிப்பதே எனக்குக் கடினமாக இருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

நாகஜோதியால் பண்டிகைக் காலங்களில் 20 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஆடமுடியும். அவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், மருந்துகளை எடுத்துக் கொண்டபின் தொடர்ந்திருக்கிறார். “என்ன நடந்தாலும் நான் நடனமாடுவதை நிறுத்த மாட்டேன். நான் கரகாட்டத்தை நேசிக்கிறேன், ”என்று அவர் கூறுகிறார்.

இந்தக் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை, தொற்றுநோய் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. அவர்கள் தங்கள் கனவுகளை மெய்ப்பிக்கும் இசைக்காகவும், தற்காலிக மேடைகளுக்காகவும் பணத்திற்காகவும் காத்திருக்கிறார்கள்.

“நாங்கள் இந்த வேலையை விட்டு வெளியேற வேண்டும் என்று எங்கள் குழந்தைகள் விரும்புகிறார்கள்,” என்கிறார் அழகுப்பாண்டி. “எங்களால் அது முடியும், ஆனால் அதற்கு அவர்கள் கல்வி பெற்று நல்ல வேலை பெறவேண்டும்”, என்கிறார்.

கரகத்துடன் அழகுப்பாண்டி, தன் குழந்தைகள் கரகம் ஆடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கிறார்
கரகக் கலைஞர் உமா மற்றும் அவர் கணவர் பறைக் கலைஞர் நல்லுராமன்
ஆடும் வாய்ப்பு இல்லாததால், கலைஞர் ஒருவர் வீட்டுப் பரணில் உறங்கும் பறை மற்றும் மேளம்
வேலை இல்லாததால் கடன் வாங்கியிருக்கும் நல்லுத்தாய், பணமின்றி தன் குழந்தைகள் படிப்பைத் தொடர முடியுமா என்ற கலக்கத்தில் இருக்கிறார்
கரகம் தன் மதிப்பை இழந்திருப்பதாகச் சொல்லும் எஸ்.முத்துப்பேச்சி, உடுமாற்று இடம் கூட இப்போது கலைஞர்களுக்குத் தரப்படுவதில்லை என்று சொல்கிறார்
12 வயதில் கரகம் ஆடத்தொடங்கிய டி. நாகஜோதி
29 வயது கரகக்கலைஞர் எம். சூரியதேவி, அவருக்கு பறை இசைக்கும் கணவர் வி. மகாலிங்கம், சரியான வருமானம் இல்லாமல் தன் குழந்தைகளைத் தாய் வீட்டுக்கு வளர்க்க அனுப்பியதாகச் சொல்கிறார்; தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இப்போது குடும்பத்துக்கு உதவிவருகிறது.
அவனியாபுரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கரகக் கலைஞர் எஸ். தேவி, சிறுவயது முதலே ஆடிவருகிறார்.

பாரி ஆன்லைனின் முந்தையக் கட்டுரையை இங்கு வாசிக்கலாம்: