உடையும் பாலின பேதமும் – 3

பெண்களது நிர்வாணப் புகைப்படங்களை/வீடியோக்களை வைத்துக் கொண்டு மிரட்டி சம்பந்தப்பட்ட பெண்களிடம் பணம்/நகை பறிப்பது; கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு கொள்வது; சம்பந்தப்பட்ட பெண்ணின் தோழிகளை இழுத்து வரச் செய்து மோசடி செய்வது போன்ற கொடுஞ்செயல்களில் ஆண்கள் ஈடுபட்டுவருவதை, தொடர்ந்து பார்க்க முடிகின்றது.

பெண்களுடைய புகைப்படங்களை நிர்வாணப் புகைப்படங்களாக மார்ஃபிங் செய்து மிரட்டும் ஆண்களிடம், அப்பாவிப் பெண்கள் அடிபணிந்து கிடக்க வேண்டிய சூழல் இங்கு நிலவுகின்றது. இதுபோன்ற பிரச்சனையில் சிக்கியுள்ள பெண்கள் பிரச்சனையை குடும்பத்தோடு பகிர்ந்து கொண்டால் குடும்பத்தினர் அப்பெண்களை ஆறுதல்படுத்தி துணைநிற்க வேண்டும்.
ஆனால் நம் ஊர்க் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆற்றுப்படுத்தி ஆதரவாக நிற்காமல், பிரச்னை பெரிதாவதற்குள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு வகையில் மேலோட்டமாக சரிசெய்துவிட்டு, உடனுக்குடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் படிப்பை/பணியை பாதியில் நிறுத்தி திருமணம் செய்து வைத்துவிடுகின்றன.

எல்லாவற்றையும் அறிந்து திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் எதிர்காலத்தில் அப்பெண்ணை, ” அப்பவே நீ அப்படித்தான? நீ யோக்கியமாக இருந்தால் நிர்வாணப் புகைப்படம் எப்படி அவனுக்குக் கிடைத்திருக்கும்?“, என்று கூறி வாழ்நாள் முழுக்க உளவியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்த வழிவகை செய்துவைக்கின்றன. இணையதளங்களில் நிர்வாணப் புகைப்படங்கள் வெளியாகும் பட்சத்தில், “இது என்னுடைய புகைப்படமன்று”, என்று பாதிக்கப்பட்ட பெண்கள் மறுப்புத் தெரிவிப்பதற்குக்கூட இடமளிக்காமல் குடும்ப உறவுகள், ” அய்யோ குடும்ப மானத்தை போக்கடிச்சிட்டாளே! கௌரவம் போச்சே“, என்று புலம்பத் தொடங்கிவிடுவார்கள்.

2016ம் ஆண்டு தன் மார்ஃப் செய்யப்பட்ட படங்கள் ஃபேஸ்புக்கில் வெளியானதை அடுத்து தற்கொலை செய்துகொண்ட சேலம் வினுப்ரியா (20) எழுதிய இறுதிக் கடிதம். ‘என்னை ஒரு செக்கண்ட் நம்புங்கள்’ என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

குடும்பம் தன்னோடு நிற்காது, தனக்கான ஆறுதலையோ நீதியையோ தராது என்ற நிலையை உணர்ந்துகொள்ளும் பெண்கள், நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டும் ஆண்களிடமிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள, தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பெண்களை மிரட்டுவதற்கு ஆண்கள் பெண்களின் உடலையே கருவியாகயாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். பெண்களின் உடல் பெண்களுக்கே சுமையாக்கப்பட்டுள்ளது. புராணங்கள், தொன்மங்கள் போன்றவை பெண்ணுடலை கீழானதாகவும், தீட்டுக்குரியதாகவும் ஏற்கனவே கட்டமைத்து வைத்திருக்கின்றன.

சமூகத்தின் வாயிலாகவும், பற்றாக்குறையான உணவுப் பழங்கங்களாலும் தங்கள் உடலை பலவீனமானதாகப் பெண்கள் உணர்கிறார்கள். நிர்வாணப் புகைப்பபடங்களை வைத்து மிரட்டும் ஆண்களின் ஆதிக்க உணர்வுகளைக் கண்டிக்காத சமூகத்தில், தன்னை பலவீனமாக உணரும் பெண்கள், பெண்ணாகப் பிறந்ததையே சாபமெனக் கருதும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

போர்னோகிராஃபி படங்களில் நிர்வாணமாக நடிக்கும் பெண்களை கொச்சைப்படுத்தி வசைபாடும் சமூகம், நிர்வாணமாக நடிக்கும் ஆண்கள் குறித்து வாய்திறப்பதில்லை.

நிர்வாணமாக நடிக்கும் ஆண்களை நோக்கி, “என்ன மனுசன்டா, வாழ்றான் பாரு, கொடுத்து வச்சவன், உடம்பெல்லாம் மச்சம் இருக்கும் போல“, என்ற பெருமிதக் கருத்துக்களையே பெரும்பாலும் முன்வைக்கின்றது. ஆனால் பெண்களை, காசுக்காக உடலை விற்கக்கூடியவர்களென்று வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் கொச்சைப்படுத்திவிடுகின்றது.

vox

பாலியல் தொழிலாளர்களையும் சமூகம் இதே கண்ணோட்டத்தோடுதான் அணுகுகின்றது. காசுக்காக வெட்கமே இல்லாமல் உடம்பை விற்கிறவர்களென்று பெண் பாலியல் தொழிலாளர்களை இழிவுபடுத்துகிறது. அதே சமயம், கிகோலோ போன்ற தளங்களில் பாலியல் தொழிலாளர்களாகப் பதிவு செய்து இயங்கும் ஆண்களைக் கண்டுகொள்வதில்லை. மாறாக ஆண் பாலியல் தொழிலாளரை நாடும் பெண்களை நோக்கி, “கையில பணம் வந்திட்டா பொம்பளைங்க என்ன வேணாலும் பண்ணுவாங்க, ரொம்ப மோசமானவங்க”, என்று இழிவுபடுத்துகின்றது.

முழுமையாக மூடியிருந்தாலும், நிர்வாணமாக இருந்தாலும், எப்படி இருந்தாலும், பெண்ணுடல் ஆண்களின் காமத்தை தூண்டக்கூடியது என்ற மூட நம்பிக்கையை ஆண்வயப்பட்ட சமூகம் போலியாக கட்டமைத்து வைக்கின்றது.

அதன் பொருட்டே ஆண்கள் வயது வேறுபாடின்றி, உடை வேறுபாடின்றி டயப்பர் அணிந்த பச்சிளம் பெண் குழந்தை முதல் முழுதும் மூடியபடி உடையணிந்திருக்கும் பெண் வரை அத்துமீறுகின்றனர். “அரைகுறை ஆடையைப் பார்த்தால் ஆண் கிளர்ச்சியுற்று அத்துமீறத்தான் செய்வான்; இது ஆணின் பிறவி குணம், இதுதான் இயற்கை, அறிவியல்..” என்று ஆண்களின் அத்துமீறல்களுக்கு அறிவியலை அழைத்து வந்து தெருவில் விடுவது நகைச்சுவையின் உச்சம் எனலாம். அத்துமீறுவதை தந்தைமைய சமூகம் தொடங்கி, அங்கீகரித்து, இயல்பாக்கியிருக்கின்றதே ஒழிய பெண்ணுடலை பார்த்தால் ஆண் அத்துமீறுவான் என்பது இயற்கையின் விதியல்ல. மேலும் இது அறிவியல் உண்மையும் கிடையாது. ஆதிக்க உளவியலால் ஆண்கள் செய்யும் அராஜக நடத்தைகளின் வெளிப்பாடே ஆகும்.

அதிகாலை எழுந்து உணவு சமைப்பது, துவைப்பது, துப்புரவு செய்வது போன்ற குடும்பத்தின் அன்றாடப் பணிகளில் பங்கெடுப்பது; பெற்றெடுக்கும் குழந்தையைக் குளிப்பாட்டுவது, மலம் கழித்தபின் கழுவிவிடுவது, சீராட்டி தாலாட்டி, சோறூட்டி உறங்க வைப்பது போன்ற குழந்தை வளர்ப்பு பணிகளில் பங்களிப்பது; வயது முதிர்ந்த குடும்ப உறவினர்களை (பாட்டி, தாத்தா, அம்மா அப்பா) பராமரிப்பதில் பங்கெடுத்துக்கொள்வது; முதுமையில் தவிக்கும் அம்மா மற்றும் பாட்டிமார்களைக் குளிப்பாட்டுவது; உடல் காயங்களுக்கு மருந்து போடுவது; மருந்துகள் கொடுப்பது போன்ற பணிகளனைத்திலும் ஆண்கள் பங்கெடுக்கின்ற போது, பெண்ணுடலைப் பார்த்தாலே ஆண்களுக்கு காமம் வழிந்தோடும் என்ற சமூகத்தின் பொதுபுத்தி தவறானது என்பதை ஆண்களால் உணர முடியும்.

freepik

குழந்தைப் பராமரிப்பைப் போலவே வயதானவர்களைப் பார்த்துக்கொள்வதும், பெண்களுக்கே உரிய கடமையாக இருந்து வருகின்றது. இது சமநிலையடைந்த வயது முதிர்ந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பெண்களுக்கு மகன்கள்/பேரன்கள் பணிவிடை செய்வது என்பது பரவலாக்கப்படும் போதும், அக்காக்கள் தம்பிமார்களை நீராட்டி சீராட்டி வளர்ப்பது போல் அண்ணன்மார்கள் தங்கைகளை நீராட்டி சீராட்டி வளர்ப்பது விரிவாக்கப்படுகின்ற போதும், ஆண்களுக்கே உரிய பொதுப்பார்வைகள் மாற்றமடையும். பெண்ணுடல் மீதான ஆண்களின் காமவெறிப் பார்வை திருத்தமடைந்து இயல்பான ஒன்றாகக்கூடும்.

பெண் நிர்வாணமாகவே இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவள் அனுமதியின்றி அவளைத் தொடுவதும் புணர்வதும் தவறு. அப்படிச் செய்வது மனிதத் தன்மையற்ற செயல். ‘ஆண்களே வந்து புணர்ந்து செல்லுங்கள்’, என்று உணர்த்த பெண்கள் சுதந்திர உடைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை. பெண்களின் ஆடை சுதந்திரம் என்பது அவர்களுடைய தனிப்பட்ட வசதியையும், தட்பவெப்ப சூழலையும் உள்ளடக்கிய உடைத் தேர்வாகும் என்பதை சமூகம் உணர்ந்து நாகரீகத்துடன் நடந்துகொள்ளப் பழக வேண்டும்.

வெளியில் சென்று வரும் அல்லது அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்பும் ஆண்கள் வீட்டில் நுழைந்தவுடனேயே, மேலுடுப்புகளை கழற்றி எறிந்து தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வது போல், பெண்களை சுதந்திரமாக ஆசுவாசப்படுத்திக் கொள்ள வீடுகள் அனுமதிப்பதில்லை. குடும்பங்கள் பெண்களுக்கென வீடுகளுக்குள்ளான நிறைய வரைமுறைகளை வகுத்து வைத்திருக்கின்றன. சில குடும்பங்கள் பெண்களை வீடுகளுக்குள்ளும் துப்பட்டா அணிய வற்புறுத்துகின்றன.

அரைக்கால் முழுக்கால் பேண்ட்களை பெண்கள் தனியறைக்குள் அணிந்து கொள்ளலாம்; ஆனால் ஹாலுக்கு வருகையில் அல்லது அண்ணன், தம்பி உறவினர் வீட்டுக்கு எதேச்சையாக வருகையில், பேண்டுகளுக்கு மேலே பாவடை அணிந்து கொள்ள வேண்டும். நைட்டி அணியும் இல்லத்தரசிகள் துப்பட்டா போட வேண்டும். டீ சர்ட் அணிந்தால் துப்பட்டா போட வேண்டும்‘, என யோனிக்குப் பூட்டுப் போடுவதைத் தவிர எல்லாவற்றையும் குடும்பங்கள் வலியுறுத்துகின்றன. இது போன்ற வரைமுறைகளனைத்தும் பெண்களை காமக் கண்களால் வன்புணரும் ஆண்களை சமூகம் வீட்டிற்குள்ளேயே அண்ணனாகவும், அப்பாவாகவும், தம்பியாகவும், மகனாகவும், மாமனாராகவும் வளர்த்து வைத்திருக்கின்றது என்பதைத்தான் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. பெற்ற தகப்பனாலேயே பாலியல் வன்முறைக்குள்ளாகும் சிறுமிகள் குறித்து வரும் செய்திகள் இவற்றை உறுதிபடுத்துகின்றன.

வீட்டின் அன்றாடப் பணிகளை ஆற்றுவது பெண்களுக்கே உரிய கடமையென குடும்பங்கள் கட்டாயப்படுத்தி வழிவழியாக வலியுறுத்துவதால், ஆண்கள் வீட்டுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. தமிழ்நாட்டின் வெப்பச் சூழலில் அறை வெப்பநிலையை விடக்கூடுதலான வெப்பம் பரப்பும் சமையலறையில் இறுக்கமான மற்றும் கூடுதலான உடைகளை அணிந்து ஒட்டு மொத்தக் குடும்பத்துக்கும் சமைக்கும் பெண்களின் உடலுக்கான விடுதலையை, உடையிடமும் உளவியல் விடுதலையை சமையலறையிடமுமா கேட்க முடியும்?

குடும்பங்களும் அவற்றின் குப்பை வரைமுறைகளும்தான் திருத்தப்பட வேண்டும்.

depositphotos

நமது நாட்டுக் குடும்பங்கள் அன்பின் அடையாளங்களென ஊர்ப் பெருமை பேசுபவர்கள் ஒன்றை உணர வேண்டும். நமது குடும்பங்கள் ஆணாதிக்கத்தால் அஸ்திவாரமிடப்பட்டு, சாதியாலும், மதத்தாலும் சுவரடைக்கப்பட்டு, கூரைகள் வர்க்கத்தால் வேயப்பட்டு, பெண்களைச் சுரண்டிப்பிழியும் கூடாரங்களென்பதை உணர்ந்து சீர்திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தையே சிதைத்துத்தான் இங்கு சமத்துவத்தை ஏற்படுத்த முடியுமென்ற நிலை வலுவாகும்.

வீடுகளுக்குள் அறைக் கதவுகளையும், சன்னல்களையும் மூடாமல் ஏதுவான உடைகளை பெண்கள் அணிவது கூட சிக்கலான காரியமாக உள்ளது. பெண்கள் குளிப்பதை திருட்டுத்தனமாக வீடியோவாக பதிவு செய்து மிரட்டும் ஆண்கள் சூழ்ந்த சமூகத்தில் பெண்களின் உடல்கள் உடைகளால் சிறைவைக்கப்படுகின்றன.

பெண்களின் சுதந்திரமான உடைத்தேர்வுகள் ஆண்களின் காமத்தைத் தூண்டக்கூடியது என்று கூறும் ஆண்களைப் புறக்கணிக்க வேண்டும். இது போன்ற ஆதிக்கக் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற கலை இலக்கியப் படைப்புகளுக்கெதிரான விமர்சனங்கள் ஏற்பட வேண்டும்.

பெண்ணுடல் ஆபசமானதோ கீழானதோ அல்ல; பெண்ணின் நிர்வாணம் அவமானத்துக்குரியதும் அல்ல.

நிர்வாணப் புகைப்படங்களை வைத்து மிரட்டும் ஆண்களது அத்துமீறல்களுக்கான தீர்வை, பெண்களின் ஆடை சுதந்திரத்தில் தேடாமல், ஆணாதிக்க உளவியலை சிதைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தொடரும்…

கட்டுரையின் முந்தைய பகுதி:

படைப்பு:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.