விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் பிறந்தநாள் இன்று!

1961. ஜூலை 1. ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற இடத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. அரசாங்கப் பள்ளியில் படித்தார். அப்போது ஜே.ஆர்.டி. டாடாவின் விமானம் ஓட்டும் திறனைப் பார்த்து, விமானம் ஓட்டும் ஆர்வம் வந்தது. பள்ளிப் படிப்பு முடித்தவுடன் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் படிப்பில் (விமானம் ஊர்தியியல்) சேர்ந்தார். பொறியியல் பட்டம் பெற்றவுடன் உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். 

ஜுன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரின் அறிமுகம் கிடைத்தது. 1983-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அடுத்த ஆண்டு முதுகலைப்பட்டம் பெற்றார் கல்பனா. அவருடைய ஆர்வமும் உழைப்பும் தீவிரமாயின. மேலும் ஒரு முதுகலைப்பட்டம் பெற்றார். 1988-ம் ஆண்டு விண்வெளி பொறியலில் டாக்டர் பட்டம் வாங்கினார். நாசாவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. விமானம், க்ளைடர்கள் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கவும், ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார்.   

freepressjournal

1995-ம் ஆண்டு விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார் கல்பனா. அடுத்த ஆண்டே அவருடைய கனவு, லட்சியம் நிறைவேறுவதற்கான  வாய்ப்பு கிடைத்தது. கொலம்பியா விண்வெளி ஓடம் குகூகு-87ல் பயணம் செல்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் குழுவில் ஆறு விண்வெளி வீரர்கள் இருந்தனர். 

1997, நவம்பர் 19 அன்று கொலம்பியா விண்வெளி ஓடம் கிளம்பியது.  15 நாள்கள், 16 மணி நேரங்கள், 35 நிமிடங்கள் இந்தப் பயணம் நீடித்தது. டிசம்பர் மாதம் 5ந் தேதி பத்திரமாக பூமியை வந்தடைந்தது.  இந்தப் பயணத்தில் பல பரிசோதனைகளும் ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டிருந்தன. கல்பனாவின் புகழ் எங்கும் பரவியது.

203ம் ஆண்டில் மீண்டும் கல்பனாவுக்கு ஒரு வாய்ப்பு. குகூகு-107 கொலம்பியா ஓடம் ஜனவரி 16ல் கிளம்பியது. இதுவும் 15 நாள்கள், 22 மணி நேரம், 20 நிமிடங்கள் பயணம் செய்து, பூமியை நோக்கித் திரும்பியது. 2003, பிப்ரவரி 1 அன்று விண்வெளி ஓடம் வெடித்துச் சிதறியதில் கல்பனாவின் உயிர் பிரிந்தது. 

picryl

40 வயதில் மறைந்து போன கல்பனா, தன் வாழ்நாளில் 31 நாட்களை விண்வெளியில் செலவிட்டிருக்கிறார்.  விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாவின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்!

உங்கள் கனவுகளே உங்கள் வெற்றிக்கு பாதையாய் அமையும்!

கல்பனா சாவ்லா

கட்டுரையாளரின் மற்ற படைப்பு:

சஹானா

எழுத்தாளர், பத்திரிகையாளர்.