நா காக்க!!

நான் பள்ளியில் படிக்கும்போது, எங்கள் வீட்டுக்கு பின்புறமிருந்த வீட்டில் ஒரு குடும்பம் இருந்தது . அவர்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் அவர்கள் என்ன பேசினாலும் எங்கள் வீட்டின் கூடம் வரை கேட்கும். அந்த வீட்டு மூத்த பெண்ணிற்கு 11 வயதிருக்கும். அந்த சிறுமியை அம்மா என்ன பெயரிட்டு அழைத்தாலும் கேட்க சற்று காட்டமாகத்தான் இருக்கும். ” பொட்டக் கழுத, முண்டை, மூதேவி, செவிட்டு நாயே, ஏய் நாயே, பொட்டை நாயே…”

அந்த சிறுமியின் பெயர் சொல்லி அவள் அம்மா ஒரு நாளும் கூப்பிட்டு பார்த்ததில்லை. “ஏய் பொட்டை குடத்த பாத்து தூக்குடி. நீ விழுந்தாகூட பரவாயில்ல, குடத்த ஒடச்சுடாத” – இப்படித்தான் அந்த பெண்ணின் அம்மா பேசுவார். இத்தனை வருடங்கள் கழித்தும் இந்த வார்த்தையை இன்னும் என்னாலேயே மறக்க முடியவில்லை. தினம் தினமும் கேட்டுக் கொண்டிருந்த அந்த சிறுமியின் கதி என்ன ஆகியிருக்கும்?

தினம் தினம் காதில் கேட்க முடியாதபடி நாராசமாகத் திட்டுவார். அடி தர்மத்துக்கும் விழும். நாங்கள்கூட நிஜமாகவே அவர் பெற்ற பிள்ளைதானா என யோசித்திருக்கிறோம்.

ஆனால், அந்த அம்மா மற்றவர்களிடம் பழகுவதைப் பார்த்தால், அது அவர் இப்படி செய்வாரா என யோசிக்க வைக்கும். எங்களையெல்லாம் பார்த்தால் அன்பாக அழகாக பேசுவார். மிக டீசண்டாகத்தான் உடை உடுத்துவார். படித்தவர். அவருடைய கணவரும் நல்ல அரசு உத்தியோகம். அவரும் இதைத் தவறென தட்டிக் கேட்டதில்லை.

அந்த சிறுமியும் அம்மாவுடைய வசவுகளுக்கிடையே வளர்ந்தாள். பட்டப் படிப்பு முடிக்கும் நேரம் அவள் முழுமையாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தாள். பின் ஒரு மன நலக் காப்பகத்தில் சிகிச்சை கொடுத்து வந்தனர்.

இதே போல இன்னொரு குடும்பத்தையும் மிகச் சமீப வருடங்களுக்கு முன், என் கண்ணெதிரே பார்த்தேன். அவர்கள் வீட்டிலும் பாதிக்கப்பட்டது மூத்த பெண்தான். பாட்டு, படிப்பு என பல பரிசுகள் வாங்குவாள். அவளின் அப்பா வேறோர் இடத்தில் வங்கியில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இந்தப் பெண் செய்யும் சின்ன தவறுக்குக்கூட அவளுடைய அம்மா திட்டும் வார்த்தைகள் நம்மையே அதிர வைக்கும். அப்படியான அமிலம் தெறிக்கும் வார்த்தைகள்.

பள்ளி முடிந்து வந்து முகம், கை, கால் கழுவாமல் இருந்தால் பெற்றோர் திட்டலாம், தவறில்லை. ஆனால், மிக மோசமாக “மு…. தரித்திரம் புடிச்சவ, நீ மூளியாத்தான் இதோ இந்த படிக்கட்டுலேயே உக்காந்திருப்ப.. உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாதுடி…சனியன் எனக்கு வந்து வாச்சிருக்கே…” – இப்படித்தான் என் கண் முன்னே அந்த பெண்ணைத் திட்டுவார்.

“ஆன்டி ஏன் இப்படில்லாம் திட்றீங்க? நீங்களே உங்க பொண்ணை இப்படிச் சொல்லலாமா?” எனக் கேட்டதுக்கு, ” ஒரு நாள்னா பரவாயில்ல. டெயிலியும் எத்தனை தரம் சொல்றது” என மீண்டும் அசிங்கமாகத் திட்ட ஆரம்பித்தார். அந்த பெண் படிக்கட்டிலிருந்து அசையவே இல்லை.

அவளுடைய மதிப்பெண்ணுக்கு நல்ல பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்து, சேர்ந்தும் விட்டாள். ஆனால், ஒரு நாள் அவளுடைய கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தது. வகுப்பில் இருக்கும்போது திடீரென வீறிட்டு கத்தியபடி வராண்டாவில் ஓடியிருக்கிறாள். “அதன்பின் மனநல மருத்துவரிடம் காண்பித்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாள். அந்த வருட படிப்பையே விட வேண்டியிருந்தது. அவளுடைய முதல் வருட மதிப்பெண்களைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் எல்லாம் அவள் வீட்டிற்கே வந்து அவளை மீண்டும் படிக்கச் சொல்லக் கேட்டனர். ஆனால், அவள் மறுத்துவிட்டாள்.

அதற்குப் பிறகு அவளை வேறொரு டிகிரி படிப்பில் சேர்த்தனர். ஆனால், அவளோ ஆர்வமில்லாமல் ஏனோ தானோவென இருக்கத் தொடங்கினாள். எல்லாவற்றிலும் அரியர் வைத்து எதிலும் நாட்டமில்லாமல் மந்தமாக மாறினாள். சில நேரம் நன்றாகவும் சில நேரம் மனரீதியாகப் பாதிக்கப்பட்டும் நடந்து கொள்வாள். இவையெல்லாம் என் கண் முன்னேயே நடந்தது. இன்று வரை அவள் மனநலத்திற்காக சிகிச்சையும் மாத்திரைகளும் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறாள்.

நன்றாகப் படித்து இந்நேரம் நல்ல வேலையில் இருக்க வேண்டிய பெண்ணை அவளின் அம்மாவின் வார்த்தைகளே கொன்றுவிட்டிருந்தது. ஒன்று போலவே நடந்த முந்தைய பத்தியில் சொன்ன பெண்ணிற்கும், இந்த பெண்ணிற்கும் ஒரே நிலைமைதான் உண்டானது. இருவருமே மனநிலை பாதிக்கப்பட்டார்கள்.

இதுபோல ஆண் பிள்ளைகளிடம் கண்டிப்பு என்ற பெயரில் கொடூரமாக நடந்த அப்பாக்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஓர் அப்பா பிள்ளைகள் தவறு செய்தால் அவர்களை மரத்தில் கட்டி வைத்து, சுற்றிலும் சர்க்கரைத் தண்ணீர் ஊற்றி விடுவார். அந்தப் பிள்ளைகள் எறும்பு கடித்து கேவி கேவி அழும் வரை இது தொடரும். ஒவ்வொருமுறை ஒவ்வொரு தண்டனை. ஒரு முறை பெல்டால் அடிப்பது, இன்னொரு முறை வெயிலில் சுடுமணலைக் குவித்து முட்டிபோட வைப்பது என தண்டனைகள் கொடூரமாக இருக்கும். இப்படி சிறிய தவறுக்குக்கூட கடும் தண்டனை கொடுத்தால்தான், வளரும் பிள்ளைகள் ஒழுக்கமாக வளரும் என அவர் மண்டைக்குள் ஏதோ ஒரு ஞானம் வந்திருக்கிறது பாருங்கள். அந்த பிள்ளைகள் அப்பாவுக்குத் தெரியாமல் தவறுகளை மறைக்கக் கற்றுக்கொண்டு, திருட்டுத் தனம் பழகி, அவர்களை இன்று வரை திருத்த முடியாமல் ஒவ்வோர் இடத்திலும் ஏமாற்றி, ஊரார் வீடு தேடி வந்து அடிக்கும் வரை இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்க்க முடியாமல் அவர்களின் அப்பா போய் சேர்ந்துவிட்டாலும், இந்தக் குற்றங்களுக்கு கண்டிப்பு என்ற போர்வையில் நடந்து கொண்ட அவரும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இன்னொரு குடும்பம். பையன் நல்ல புத்திசாலி, மிக நன்றாக படிக்கக் கூடியவன். ஆனால், அந்த அப்பாவுக்கு பேராசை. எப்பவும் பையன் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். சிரித்து விளையாடக் கூடாது. நண்பர்களுடன் பேசக் கூடாது. அப்படி நடந்துகொண்டால் உடனே டேபிளை உடைப்பது, டிவியை உடைப்பது எனச் செய்வாராம். ஒருமுறை அடுத்த நாள் பத்தாவது பரீட்சைக்கு படிக்க வேண்டிய புத்தகத்தை கோபத்தில் கிழித்து அருகிலிருந்த சாக்கடையில் போட்டுவிட்டார். அந்தப் பையன் பொறியியல் படிப்பு முடித்து வேலைக்குச் சேர்ந்தும் வேலையை விட்டுவிட்டான். போதை வஸ்துக்கு அடிமையானதுதான் காரணம். அந்த அப்பாவே என்னிடம் வருத்தப்பட்டு சொல்லியிருக்கிறார். நான்தான் என் பிள்ளையைக் கெடுத்துவிட்டேன். ஒழுக்கம் ஒழுக்கம் என்று சொல்லியே அவன் வாழ்க்கையை கெடுத்துவிட்டேன் என சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். இப்போது அவர் அவனுக்காக என்ன செய்தாலும், அவன் கேட்கும் நிலையில் இல்லை. தன் மனம் போன போக்கிலேயே இருக்கிறான். இவர்களை அடிப்படையாக வைத்துதான் ’பச்சை விளக்கு’ என்ற சிறுகதையை சில வருடங்கள் முன் எழுதினேன்.

முந்தைய பகுதியில் எழுதிய என் தோழி வாழ்க்கை போல, பாதை மாறி எப்படியோ போக வேண்டிய நேரத்தில் சரியான தருணத்தில் அழகான பாதையை கண்டெடுக்க உதவிய பெற்றோர் ஒருபக்கம், நன்றாக வர வேண்டிய பிள்ளைகளை நாசமாக்கிய பெற்றோர்கள் இன்னொரு பக்கம் என தராசு போல சுட்டிக் காட்டிய இந்தk காலத்திற்கு நான் நன்றி சொல்வேன். என் பிள்ளைகளை வளர இவற்றைத்தான் நான் உதாரணமாக்கிக் கொள்கிறேன்.

அம்மாவோ அப்பாவோ, பிள்ளைகளிடம் பேசும் வார்த்தைகள் எத்தனை முக்கியமானவை. அவர்களுக்கு ஆயிரம் பிரச்னைகள் சங்கடங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றை நம்மைவிட எளிய, நம்மிடம் சிக்கிக் கொண்ட குழந்தைகளிடம் காண்பித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம். மனித மனமே அப்படித்தானே.. தன்னை விட எளிய மனிதர்களிடம் கோபத்தையோ வீரத்தையோ காண்பிக்க முயலும். ஏனென்றால், அவர்கள்தான் நம்மை எதிர்க்க மாட்டார்கள். அடங்கிப் போவார்கள். ஆனால், நாம் என்ன விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடை செய்ய வேண்டும்? பயிர் வளர்வதற்கு அவகாசமோ, பொறுமையோ நம்மிடம் இருப்பதில்லை. உடனேயே வளர்த்து அறுவடை செய்தாக வேண்டும் என்கிற அவசரம்.

ஒரு கணிப்பொறிகூட புரொகிராம் செய்யப்படவில்லையென்றால் எதற்கும் பயன்படாது. ஆனால் பெற்றோர் தாங்கள் நினைப்பதை பிள்ளைகள் உடனே எந்த மேஜிக்காவது செய்து நிகழ்த்த வேண்டும்.

தோழியின் மகள் நீட் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருந்தாள். அவளின் 12வது வகுப்புத் தோழி ஒருத்திக்கு ஜர்னலிஸம் படிக்க வேண்டுமென ஆசை. அப்பாவோ அவள் மருத்துவம் படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார். அவள் வகுப்பில் எடுக்கும் சுமாரான மதிப்பெண்களை பார்த்து திட்டியும், அறிவுரையும் சொல்லி இறுதியில் அவளுடைய காலிலேயே விழுந்துவிட்டாராம். மகளுடைய காலை பிடித்து கெஞ்சியபடி, ’எப்படியாவது நீ மருத்துவம் படிச்சு டாக்டராயிடு.அப்பதான் ஊர்ல மதிப்பாங்க’ எனச் சொல்லியிருக்கிறார். அந்தப் பெண்ணும், ’நம் அப்பா காலில் எல்லாம் விழுகிறாரே’ என தன்னால் முடிந்தவரை முயற்சி எடுத்து தீவிரமாகப் படித்தும் பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க முடியவில்லை.

அந்தப் பெண்ணை சாப்பிடக் கூட விடாமல் சர்வ காலமும், ’இப்படி செய்துவிட்டாயே’ எனத் திட்டிக்கொண்டே இருந்திருக்கிறார். அந்த பெண் என் தோழியின் மகளிடம் சொல்லி அழுதிருக்கிறாள். மருத்துவம் மீது அவ்வளவு ஆசை வைத்திருக்கிற அவரே டாக்டராகியிருக்கலாமே. இவர்களின் கௌரவத்துக்காக பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உலை வைப்பதெல்லாம் வன்முறையில் வராதா? பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும்; நல்ல வேலையில் இருக்க வேண்டும் என்பது எல்லா பெற்றோர்களுக்குமான ஆசை. தவறில்லை. ஆனால், நாம் நினைத்தையே படிக்க வேண்டும் என்பது பேராசையல்லவா?

என்னால் அறுதியிட்டுக் கூற முடியும். மிக மோசமான, அதீதக் கண்டிப்புடன் வளரும் பெரும்பாலான பிள்ளைகளின் மன உளவியல் நன்றாக இருப்பதில்லை. வன்மத்துடன் வளர்கிறார்கள் அல்லது தீய வழியில் போகிறார்கள். அதே கொடூர எண்ணத்துடன் மற்றவர்களை நடத்துகிறரகள். அதுவும் இல்லையெனில் மன நிலை பாதிப்படைகிறார்கள்.

அது போலவே இன்னொரு எல்லை அதீத செல்லம் கொடுப்பது. தவறு செய்தால் பிள்ளைகளுக்கு அதை தவறு என்றுகூட உணர்த்த மாட்டார்கள். பிள்ளைகள் தவறு செய்தால் அவற்றை மறைத்து அப்படியெல்லாம் அவன்/ள் செய்யவே இல்லையே என அந்த பிள்ளைகள் முன்னேயே சொல்வார்கள். அதைக் கேட்டு வளரும் பிள்ளை எப்படி வளரும்?

என் வீட்டருகே இருந்த இளம்பெண் சில வருடங்கள் முன்பு பத்தாவது முடித்துவிட்டு பி.யூ. காலேஜில் சேர்ந்தாள். பதினாறு வயதிலேயே கட்டுப்பாடுகளற்ற கல்லூரி வாழ்க்கை முறை. அப்போது அவள் பகிர்ந்த விஷயங்கள் மிக அதிர்ச்சியாக இருந்தன. அவள் வகுப்பு மாணவிகள் பலரும் கஞ்சா அடிப்பதாகவும், எல்லா வகையான குடிகளையும் சுவைத்துப் பார்த்ததாகவும் சொல்வாள். இவள் இவளுடைய தோழிகளிடம் ஏன் இந்த வயதிலேயே இதெல்லாம் செய்கீறீர்கள் எனக் கேட்டதற்கு, “இந்த வயதிலேயே அனுபவிக்காமல் பின் எந்த வயதில் அனுபவிப்பதாம்? வாய்ப்பு கிடைக்கும்போதே இவையெல்லாம் அனுபவித்துவிட வேண்டும்” எனச் சொல்லி இவளையும் அவர்களைப் போலச் செய்ய வற்புறுத்துவதாகவும் சொல்லி புலம்பினாள். இந்த வயதில் அனுபவித்தால் பிறகு அந்தந்த வயதில் மற்றதை அனுபவிக்க வாழ்க்கையே இல்லாமல் போய்விடும் என உணர்த்துவது பெற்றோர்களின் பணி அல்லவா?

மிகச் சிறிய வயதில் இப்படியெல்லாம் செய்வதை பெருமையாகவோ புரட்சியாகவோ நினைப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் த்ரில் என்ற பெயரில் தவறுகளைச் செய்வது வீட்டிற்கு சிறிதும் எப்படி தெரியாமல் இருக்கும்? என் பிள்ளைகளை நண்பர்களைப் போல் நடத்துகிறேன் என அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டிக்காமல் இருப்பதும் விளையாட்டாக எடுத்துக் கொள்வது எதில் போய் முடியுமென்றால் பொள்ளாச்சி போன்ற சம்பவங்களை சொல்லலாம். அந்த அம்மா தன் மகன் எப்படியான தவறு செய்திருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்ளாமல் அவனுக்கு ஆதரவாகப் பேசும் வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறதல்லவா? தவறு எங்கிருந்து துளிர் விட்டிருக்கிறதென்று?

என்னை பொறுத்தவரையில் பிள்ளைகளைக் கண்காணிப்பது அவசியம். மறைமுகமாகவோ, நேரடியாகவோ அவர்களுக்குத் தெரியாமல் செய்வது பிள்ளைகளைச் சந்தேகப்படுவதாகாது. அவர்களின் நடத்தைகளை அறிய உதவும். நமக்கு நம் பிள்ளைகள் எல்லாரும் நல்லவர்கள் எனில் எப்படி இத்தனை குற்றங்கள் நாட்டில் நடக்கும்?

என் தோழி இப்படித்தான்… அவளுடைய 16 வயது மகளின் இன்ஸ்டா மற்றும் வாட்ஸப் மெசேஜுகளை அவ்வப்போது ரகசியமாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். அப்போது ஒருவனுடைய மெசேஜ் மட்டும் அடிக்கடி உறுத்திக்கொண்டே இருந்தது. அந்தக் குறிப்பிட்ட ஒருவன் என்ன மெசேஜ் அனுப்பினாலும் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் அவன் நிர்வாணப் புகைப்படம் ஒன்றை கேட்டிருக்கிறான். அந்தச் சிறுமி அவன் விளையாட்டாகக் கேட்பதாக நினைத்து அவனுடைய மெசேஜை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாள். உடனே அவள் மகளை அழைத்து சராமாரியாகத் திட்டிருக்கிறாள். “அம்மா எனக்கு தெரியாதா… நான் என்ன அப்படியெல்லாம் கொடுத்துடுவேனா? அவன் லூஸு மாதிரி கேட்கிறான்” என அசட்டையாகச் சொன்னதும், ’அவன் கேட்ட விஷயம் எத்தனை பெரிய க்ரைம்’ எனச் சொல்லி அவனுடைய அணுகுமுறையும் நடத்தையும் எதிர்காலத்தில் கொண்டுவரும் பின்விளைவுகளைச் சொல்லியிருக்கிறாள். அதன் பின்தான் அந்த சிறுமியும் இதன் தீவிரத்தை உணர்ந்திருக்கிறாள்.

பிள்ளைகள் சரி தவறு என அவர்களுடைய அனுபவத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கூற்றில் நானும் உடன்படுகிறேன். ஆனால், என்ன மாதிரியான விஷயம் என்பதும் முக்கியம். பெண்களை எப்படி நடத்த வேண்டும்? பெரியவர்களிடம் எப்படிப் பேச வேண்டும்? தெரியாதவர்களை எப்படி அணுக வேண்டும்? இவற்றில் வீட்டிலுள்ள பெரியவர்களின் பங்கு இல்லாமல் ஒரு தலைமுறை வளர சாத்தியமிருக்காது. சும்மா சொல்லவில்லை… பிள்ளை வளர்ப்பு பெரிய கலை என்று!

எனக்குத் தெரிந்த பையன் ஒருவன் கோபம் வந்தால் தன்னுடைய அலைபேசியை உடைத்துவிடுவான். அவர் அப்பா அவனுக்கு அன்பாக அறிவுரை கூறி இன்னொரு அலைபேசியை வாங்கித் தருவார். பப்ஜி விளையாடும் போது அவருடைய அப்பா இடைஞ்சலாகப் பேசினால், அவரைக் கண்டபடி திட்டுவான். அவர் தலையில் அடித்துக் கொண்டு போய்விடுவார். இவ்வளவுதான் அவருடைய எதிர்ப்பு. அவர் இப்படி நடந்துகொள்வது சரியா?

பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வளையம் போட்டு ஸ்பூன் ஃபீடிங் செய்துகொண்டே இருந்தால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் அப்படியே செய்ய வேண்டியிருக்கும் அல்லவா? எங்கு கண்டிக்க வேண்டுமோ அங்கு செய்வதில்லை. எங்கு அன்பாக நடந்து கொள்ள வேண்டுமோ அங்கு அன்பாக நடந்து கொள்வதில்லை.

கண்டிப்பு என்ற பெயரில் தொட்டதெற்கெல்லாம் அதிகமாகக் கோபப்படுவதும், தவறு செய்யும்போதெல்லாம் பரவாயில்லை என கண்டுகொள்ளாமல் அளவுக்கு அதிகமாகச் செல்லம் கொடுப்பதும் இரு எல்லைகள். இரண்டுக்கும் நடுவில் நிற்பதற்குத் தெளிவு தேவை. அந்த மாதிரியான பெற்றவர்களைப் பெற்ற பிள்ளைகள் பாக்கியசாலிகள்!

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

ஹேமி கிருஷ்

பெருந்துறையைச் சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய  'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில், இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.