நாகலட்சுமி

உங்களுக்குத் தெரிந்த பிரபலம் யார் என்று கேட்டால் எல்லாரும் ஒரு சினிமா நடிகரையோ ஒரு கிரிக்கெட் வீரரையோ ஓர் அரசியல்வாதியையோ சொல்லலாம். ஆனால், நீங்கள் சொல்கிற அந்தப் பிரபலம் உங்க ஏரியாவில் இருக்கிற மூன்று வயது குழந்தைக்கோ எண்பது வயது பாட்டிக்கோ தெரியுமா என்று கேட்டால், தெரிந்திருப்பது சந்தேகம்தான்.

குழந்தைக்கும் பாட்டிக்கும் தெரிந்த ஒரு பிரபலத்தோடுதான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்தப் பிரபலம் என் அம்மா ரமணி. என் அம்மா ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்யும் செவிலியர். எங்கள் ஊரிலிருக்கும் பெரும்பாலான மக்களுக்கு அம்மாவைத் தெரியும்.

மதுரையிலிருந்து 2 மணி நேரத்தில் எங்கள் ஊருக்கு வந்துவிடலாம். ஆனால், தெரு முனையிலிருந்து எங்கள் வீட்டுக்கு அம்மா வருவதற்குக் குறைந்தது 3 மணி நேரமாவது ஆகிவிடும்! அம்மா பிரபலம் என்பதால், எதிரில் வருகிற ஒவ்வொருவரும் அம்மாவிடம் குறைந்தது 5 நிமிடங்களாவது பேசிவிட்டே செல்வார்கள்.

’காய்ச்சல் மாத்திரை கொடுங்க. பாப்பாவுக்குத் தடுப்பூசி எப்போ போடணும்? மாசமா இருக்கிறவங்க செக்-அப் எப்போ வரணும்? ’ இப்படி ஒவ்வொருவரும் ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்க, அம்மா விளக்கமாகப் பதில் சொல்ல, நேரம் போவதே தெரியாது.

வேலைக்குச் சேரும்போது அம்மாவுக்குக் குறைவான சம்பளம்தான். அப்போதும் எங்கள் பகுதியில் உள்ளவர்கள் யாராவது பணத்துக்காகக் கஷ்டப்பட்டால், அவர்களுக்கு உதவி செய்ய ஓடுவார் அம்மா. ’தேவைப்படுகிறவர்களுக்கு உதவுவதற்குப் பணக்காரர்களாகவோ அதிகாரியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. மனம் இருந்தால் சாதரணமானவர்களால்கூட உதவ முடியும்’ என்பதை எனக்குச் சிறிய வயதிலேயே புரிய வைத்தவர் என் அம்மாதான்.

எங்கள் வீட்டுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எல்லாம், ’ரமணி அம்மா இருக்காங்களா? ரமணி அக்கா இருக்காங்களா? ’ என்றுதான் கேட்பார்கள். யாரும் ரமணி சிஸ்டர் இருக்கிறார்களா, ரமணி நர்ஸ் இருக்கிறார்களா என்று கேட்க மாட்டார்கள். ஊருக்கே அம்மாவாக இருப்பவர் என் அம்மா. ஆனால், அவருக்கு ஒரே ஒரு பெண் நான் மட்டுமே.

மக்களுக்கு நேரடி சேவையில் ஈடுபடுகிறவர்களைப் பலரும் தங்கள் வீட்டுப் பெண்ணாக, உறவாக மதிக்கப்படுகிற ஏராளமான ரமணி அம்மாக்களில் என் அம்மாவும் ஒருவர் என்பதில் எனக்குப் பெருமை!

படைப்பாளர்

நாகலட்சுமி 
வயது 24; சொந்த ஊர் ராஜபாளையம்.
 தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளர் ஆக இரண்டு வருடங்களாக சொந்த ஊரில் பணிபுரிகிறேன். சிறு வயதில் இருந்தே கதை,கவிதைகள் எழுதுவதில் விருப்பம். கல்லூரி இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளேன்.  சில தமிழ் இணைய பக்கங்களில் கவிதை, கதை எழுதி உள்ளேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு her stories தளத்தில் என் அம்மா குறித்து எழுதியது பெருமகிழ்ச்சி.