பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர். அறிவாளி. சிறந்த எழுத்தாளர். பேச்சாளர். பெண்கள், தொழிலாளர்கள் உரிமைகளுக்காகப் போராடியவர். முதலாளித்துவம், அணு குண்டு, உலக யுத்தம் போன்றவற்றை எதிர்த்தவர். பொதுவுடைமை கருத்துகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.

1880ம் ஆண்டு ஜூன் 27 அன்று அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் பிறந்தார் ஹெலன். அப்பா ஆர்தர் கெல்லர். அம்மா கேட். எல்லா பெற்றோரையும் போலவே ஹெலனின் ஒவ்வொரு செயலையும் அம்மாவும் அப்பாவும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். ஒன்றிரண்டு வார்த்தைகளைப் பேச ஆரம்பித்திருந்தபோது ஹெலனுக்கு வயது 19 மாதங்கள். திடீரென்று தாக்கிய காய்ச்சல், ஹெலனின் பார்வையையும் கேட்கும் திறனையும் பறித்துக்கொண்டது. ஹெலனின் உலகம் இருண்டு போனது. பார்க்கவும் முடியாமல், கேட்கவும் முடியாமல், தான் நினைத்ததைச் சொல்லவும் முடியாமல் குழந்தை ஹெலன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார். மென்மையான ஹெலன் முரட்டுக் குழந்தையாக மாறினார். கடினமான காலகட்டங்கள்.

ஹெலனுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒருபக்கம் பெற்றோரைத் துயரத்தில் ஆழ்த்தியது; இன்னொரு பக்கம் பாதிப்பால் ஏற்பட்ட ஹெலனின் நடவடிக்கைகள் நிம்மதியைத் தொலைத்தன. எத்தனையோ மருத்துவம் பார்த்தும் போன பார்வை திரும்பக் கிடைக்கவில்லை. ஆனால், தங்கள் கண்மணியை எப்படியாவது மேலே கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவர்களுக்குள் இருந்துகொண்டே இருந்தது.

ஹெலனுக்கு ஆறு வயதானபோது, அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் காது கேளாதவர்களுக்குச் சிறப்புப் பள்ளி ஒன்றை நடத்தி வருவது குறித்து தகவல் கிடைத்தது. ஹெலனை அவரிடம் அழைத்துச் சென்றனர். கிரஹாம்பெல் ஆன் சல்லிவன் என்ற ஆசிரியரை அறிமுகம் செய்து வைத்தார். அந்தச் சந்திப்புதான் ஹெலனின் வாழ்கையையே உச்சத்துக்குக் கொண்டு செல்லப் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்காது.

கூர்ந்த அறிவும் பொறுமையும் கொண்ட ஆன் சல்லிவன், ஹெலனை நெருங்குவதற்குச் சில வாரங்கள் பிடித்தன. படிப்படியாக ஹெலனைப் புரிந்துகொண்டார். பார்க்கும் சக்தியும் கேட்கும் சக்தியும் இல்லாதவர்களுக்குத் தகவல் பரிமாறுவது எவ்வளவு பெரிய சவால் என்பது ஆனுக்குத்தான் தெரியும். குடும்பத்தினருடன் பழகாமல், ஹெலனைத் தனிமைப்படுத்தி, தான் சொல்வதைப் புரிந்துகொள்ள வைக்க முயற்சி செய்தார்.

ஹெலன் கெல்லருடன் ஆன் சல்லிவன், biography.org

தண்ணீருக்குள் ஹெலனின் ஒரு கையை வைத்து, மற்றோர் உள்ளங்கையில் வாட்டர் என்று எழுதி காட்டினார். இப்படிச் செய்தபோது ஹெலன் விஷயத்தைப் புரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார். ஆனுக்கு நம்பிக்கை வந்தது. நிறைய வார்த்தைகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். தான் தேடிக்கொண்டிருந்த நட்பு ஆன் சல்லிவன் என்பதை உணர்ந்துகொண்ட ஹெலன், அவர் மீது அன்பும் மரியாதையும் செலுத்த ஆரம்பித்தார். இருவருக்கும் நல்ல புரிதல் உருவானது.

அடுத்து பேசுவதைப் புரிந்துகொள்ள பயிற்சியளித்தார் ஆன். பிறர் பேசும்போது ஹெலனின் கையை உதடுகள் மீது வைத்து, புரிந்துகொள்ளப் பழக்கினார். பத்து வயதானபோது ஹெலன் காது கேளாதவர் பள்ளியில் சேர்ந்து, பேசுவதற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டார். அத்துடன் பிரெயில் மூலம் படிக்கும் முறையையும் டைப்ரைட்டரைக் கையாளும் விதத்தையும் கற்றுக்கொண்டார். பிரெயில் மூலம் ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஜெர்மன், கிரேக்கம் போன்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார் ஹெலன்.

எல்லோரும் படிக்கும் பாடங்களைப் பார்வையற்ற, காது கேட்காத ஹெலன் படிப்பது குறித்து வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. முக்கியஸ்தர்கள் பலரும் ஹெலனைச் சந்தித்தனர். அவரின் செயல்பாடும் அறிவுக்கூர்மையும் கண்டு வியந்தனர். அப்படி அறிமுகமான பிரபலங்களில் ஒருவர் பிரபல எழுத்தாளர் மார்க் ட்வைன். ஹெலனும் மார்க் ட்வைனும் நண்பர்களானார்கள்.

மார்க் ட்வெய்ன் மற்றும் ஹெலன் கெல்லர், 1909. twitter

‘பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதர்கள் இருவர். ஒருவர் நெப்போலியன், இன்னொருவர் ஹெலன் கெல்லர்’ என்று சொன்னார் மார்க் ட்வைன்.

நண்பர் மூலம் ஹெலன் கெல்லர் கல்லூரியில் படிப்பதற்கும் ஏற்பாடு செய்தார் மார்க் ட்வைன். ஹெலனுடன் கல்லூரிக்குச் சென்று அருகில் அமர்ந்துகொண்டு பாடங்களை விளக்கினார் ஆன் சல்லிவன்.

ஆன் மற்றும் அவரின் வருங்காலக் கணவர் ஜான் மசி உதவியுடன் ஹெலன் தன் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அப்போது அவருக்கு வயது 21. 1904-ம் ஆண்டு 24 வயதில் தன்னுடைய பட்டப் படிப்பை முடித்தார் ஹெலன். உலகிலேயே கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் பார்வையற்றவர் ஹெலன்!

ஜான் மேசியுடன் ஹெலனும், ஆனும், 1905. afb.org

1905இல் ஆனும் ஜானும் திருமணம் செய்துகொண்டனர். இருவருமே ஹெலன் மீது அக்கறை செலுத்தினர். ஜான் மசி மூலம் பொதுவுடமை, அரசியல் போன்ற விஷயங்களை அறிந்துகொண்டார் ஹெலன். சில ஆண்டுகளில் ஆனுக்கும் ஜானுக்கும் பிரிவு உண்டானது. ஆன் ஹெலன் மீது முழு கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.

இப்போது உலகத்தை நன்கு புரிந்துகொண்டிருந்தார் ஹெலன். இனி மற்றவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடிவு செய்தார். அரசியல், தொழிலாளர்கள் பிரச்னைகள், பெண்கள் உரிமைகள், குடும்பக் கட்டுப்பாடு, ஏழ்மை, அணு குண்டுக்கு எதிர்ப்பு, முதல் உலகப் போரில் அமெரிக்காவின் பங்கேற்புக்கு எதிர்ப்பு என்று பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதினார். நிறைய கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். சார்லி சாப்ளினிடம் பொதுவுடமை கருத்துகளை விவாதித்தார்.

சார்லி சாப்ளினை முதல்முறை தொட்டு உணரும் கெல்லர், Carly Jyll

மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார் ஹெலன். மாற்றுத் திறனாளர்களுக்கான பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களுக்காக நிதி திரட்டினார். புத்தகம் எழுதினார். உரைகள் நிகழ்த்தினார். தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மிகப் பெரிய உந்துசக்தியாகத் திகழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஓர் அமைப்பை அவரே ஆரம்பித்து, சிறப்பாக நடத்தினார்.

Helen Keller and Anne Sullivan
biography.com, ஆனுடன் கெல்லர்

ஹெலனும் ஆன் சல்லிவனும் சேர்ந்து பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். ஜப்பானுக்குப் பலமுறை பயணம் மேற்கொண்டதால், ஜப்பானியர்களின் விருப்பத்துக்குரியவராக மாறினார் ஹெலன்.

1916ஆம் ஆண்டு ஆன் சல்லிவனின் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போது ஹெலனுக்கு உதவி செய்ய பீட்டர் ஃபாகன் என்பவரை ஜான் மசி நியமித்தார். மிக விரைவாக ஹெலனுடன் கருத்துகளைப் பரிமாறும் கலையைக் கற்றுக்கொண்டார் பீட்டர். இருவரும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். காரியதரிசியாக மட்டுமின்றி, பீட்டர் சிறந்த மனிதராகவும் இருந்தார். அதுவரை ஆண்களிடம் நெருங்கிப் பழகி இல்லாத ஹெலனுக்குப் பீட்டரின் அன்பு புதிய உணர்வைத் தந்தது. இருவரும் விரைவில் காதலர்களானார்கள்.

ஹெலன் கெல்லர் காதலித்த பீட்டர் ஃபாகன், leonardcline.blogspot.com

ஆனால், அந்தக் காலக்கட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் திருமணம் செய்துகொண்டால், மற்றவர்களைப் போல சாதாரணமாக வாழ்க்கையை நடத்த இயலாது என்ற கருத்து சமூகத்தில் நிலவி வந்தது. இந்தக் கருத்தை ஹெலனின் பெற்றோரும் ஆன் சல்லிவனும்கூடப் பிரதிபலித்தனர். இதனால் அந்தக் காதல் நீடிக்கவில்லை.

மாற்றுத்திறனாளிகளும் பிறரைப் போல் எல்லா வேலைகளையும் செய்யமுடியும். உலகில் வாழும் அனைத்து மனிதர்களும் சமமானவர்களே என்று பேச்சிலும் எழுத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்காகப் போராடினார் ஹெலன்.

ஆன் சல்லிவன் உடல்நிலை அடிக்கடி மோசம் அடைந்ததால் பாலி தாம்சன் என்பவர் ஹெலனுக்கு ஆனுக்கும் உதவியாளராகச் சேர்ந்தார். 1919ஆம் ஆண்டு ஹெலனின் வாழ்க்கை டாகுமெண்டரியாக எடுக்கப்பட்டது. அதில் ஹெலன் நடித்தார். ஏற்கெனவே பார்வை குறைபாடு இருந்த ஆன் சல்லிவனின் கண்கள் முழுமையாகப் பார்க்கும் சக்தியை இழந்தன. 1936ஆம் ஆண்டு கோமாவில் இருந்த தன் அருமை ஆசிரியரின் கைகளை, ஹெலன் பிடித்துக்கொண்டிருந்தபோது ஆன்னின் உயிர் பிரிந்தது. 49 ஆண்டு கால நட்பு, உறவு மறைந்து போனதில் மிகவும் வேதனை அடைந்தார் ஹெலன்.

இந்தியா வந்த போது சேலை அணிந்து ரசித்த ஹெலன் கெல்லர், WNYC

1946ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டு வரை அசுரத்தனமாக வேலை செய்தார். 39 நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டார். ஆசியாவில் மேற்கொண்ட பயணத்தின் போது இந்தியாவுக்கு வந்தார். நேரு, தாகூர் போன்றவர்களைச் சந்தித்தார். அப்போது ஹெலனின் வயது 75. இந்தப் பயணங்களில் அற்புதமான, உத்வேகமான உரைகளை நிகழ்த்தினார். பெரிய மனிதர்களைச் சந்தித்தார். நிதிகளைத் திரட்டினார்.

பாலி தாம்சனுடன் ஹெலன், flickr

1960-ல் பாலி தாம்சன் மறைந்தார். மீண்டும் ஹெலனுக்குத் துயரமான பிரிவு.

ஓயாமல் சிந்தித்துக்கொண்டும் வேலை செய்துகொண்டும் இருந்த ஹெலனின் உடல் நிலை பாதிப்படைந்தது. வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டார். 1968-ம் ஆண்டு ஜூன் 1 அன்று, 88 வயதில் தூங்கிக்கொண்டிருக்கும்போதே ஹெலனின் உயிர் பிரிந்தது. ஹெலனின் அன்புக்குரியவர்களான ஆன் சல்லிவன், பாலி தாம்சன் நினைவிடங்களுக்கு நடுவே ஹெலனின் அஸ்தி வைக்கப்பட்டது.

’மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றிகொண்டு வாழும் வாழ்க்கை’ என்று ஹெலன் சொல்வார். ஆம், இதைச் சொல்ல ஹெலனைத் தவிர வேறு யார் பொருத்தமாக இருக்கமுடியும்?

படைப்பாளரின் மற்ற கட்டுரை:

சஹானா

எழுத்தாளர், பத்திரிகையாளர்.