மனித இனம் தோன்றி வழிபாட்டு முறைகள் வழக்கத்திற்கு வந்தபோதே மதங்கள் தோன்றி விட்டன. எந்த மதம் முதலில் வந்தது என்பது குறித்த வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லா மதங்களும் அன்பையே போதிக்கின்றன. இருந்தும் ஏன் இவ்வளவு வெறுப்பு விரவிக் கிடக்கிறது? இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று முரசறிவித்தாலும் மதக்கலவரங்கள் அதிகம் நடப்பதும் இங்குதானே?            

கடந்த டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம் குண்டப்புராவில் உள்ள பியூ அரசு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவித்துண்டு போன்ற உடைகளை அணிந்து வந்தனர். இதனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் வரவிடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்தது. இந்த விவகாரம் பெரிய அளவில் தீவிரமானதையடுத்து, “அமைதி, நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமான ஆடைகளை மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குள் அணிந்து வரக்கூடாது” என்று கர்நாடக கல்வித்துறை அறிவித்தது. அதைக் கண்டித்து கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.               

இந்த நிலையில், தற்போது முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரலாம் என பியூ கல்லூரி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மேலும், ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் தனி வகுப்பறையில் அமரவைக்கப்படுவர் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியிருக்கிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் இன்று நேற்றல்ல ஆதி காலத்திலிருந்தே விதிக்கப்பட்டு வருகின்றன.                 

அப்போதைய கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகள் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தன. கேரளத்தின் ஆண்டை பரம்பரையினர் கீழ்ச்சாதிகள் என்று சொல்லப்பட்ட சில குறிப்பிட்ட சாதியினரை ஆண், பெண் வித்தியாசமின்றி மேலாடை அணியத் தடை விதித்தனர். திறந்த மார்புடன் அவர்கள் இருப்பதுதான் அவர்கள் அளிக்கும் மரியாதை என்று வக்கிர எண்ணத்துடன் உத்தரவிட்டிருந்தனர். இதை எதிர்க்கும் துணிவின்றி, அவர்களும் உள்ளக் கொதிப்புடன் வேறுவழியின்றி கீழ்ப்படிந்து வந்தனர்.              

பார்ப்பனரல்லாத, கீழ் சாதிப் பெண்கள் தங்களின் மார்பகத்தை மறைக்குமாறு ஆடை எதுவும் அணியக் கூடாது எனவும், அப்படி ஆடை அணிந்தால் அதற்கு “முலை வரி” கட்ட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. முலை வரி கட்டினால், அப்பெண்கள் பார்ப்பனர் அல்லாதோர் முன்னிலையில் மேலாடை அணிந்து கொள்ளலாம். ஆனால் வரி கட்டி இருந்தாலும், நம்பூதிரிப் பார்ப்பனர்கள்முன் வரும்பொழுது திறந்த மார்போடுதான் வர வேண்டும் என்ற முறை நிலவி வந்தது. உடை விஷயத்தில் பெண்கள் அதிகம் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.             

உயர் சாதிப் பெண்கள் கூட வீட்டை விட்டு வெளியே வர நேர்ந்தால் பனங்குடை கொண்டு முகத்தை மறைத்துக் கொள்ளவும், மேலாடை அணிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால் அவர்களும் கூட நம்பூதிரி போன்ற உயர் சாதிப் பூசாரிகளின் முன்னிலையில் திறந்த மார்புடன் வரப் பணிக்கப்பட்டார்கள்.                   

இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட நாடார், ஈழவர் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்களுக்கு மார்பை மறைத்து சேலை அணிய உரிமை கோரிப் போராடத் தொடங்கினர். இது தோள் சீலைப் போராட்டம் எனப்பட்டது. 37 ஆண்டுகள் தொடர்ந்த போராட்டத்துக்குப் பிறகு திருவிதாங்கூர் அரசு அந்த சாதியைச் சேர்ந்த கிறித்தவ பெண்களுக்கு மட்டும் தோள் சீலை அணியவும், மார்பகங்களை மறைக்கவும் உரிமை அளித்தது.                  

நங்கேலி, ஓவியம் நன்றி: பிபிசி.

சேர்தலா என்ற கேரளக் கிராமத்தில் ஈழவச் சமுதாயத்தைச் சேர்ந்த நங்கேலி என்ற பெண் முலைவரி கட்ட மறுத்து மேலாடையும் அணிந்தாள். அரசாங்க அதிகாரிகள் அவளை மிரட்டி வரிவசூல் செய்ய முயற்சிக்கையில் சுய கௌரவம் மிகுந்த அவள் தனது இரண்டு மார்புகளையும் அரிவாள் கொண்டு அறுத்து, ஒரு வாழையிலையில் வைத்துக் கொடுத்துவிட்டு, அதீத இரத்தப் போக்கால் அங்கேயே சுருண்டு விழுந்து உயிர்துறந்தாள். வயலில் இருந்து திரும்பிய அவள் கணவன் சிறுகண்டன் அவள் இறந்த துக்கம் தாளாமல் தீப்பாய்ந்து மாண்டான். அன்றிலிருந்து அந்த இடம் ‘முலைச்சி பறம்பு’ என்றழைக்கப்படுகிறது என்று செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்தாலும் பெண்கள் மீதான ஆண்களின் ஈனப்பார்வையை நங்கேலி கதை நமக்குச் சுட்டுகிறது.            ‘கிறித்துவ மதத்திற்கு மாறினால், பெண்கள் குப்பாயம் போன்ற நீண்ட மேலாடை அணிந்து கொள்ளலாம்’ என ஆங்கில அதிகாரி ஜான் மன்றோ காலத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனால் எண்ணற்ற பெண்கள் மானம் காக்க மதம் மாறத் துவங்கினர்.          

இதனால் வெகுண்டெழுந்த நாயர்கள் 1822 ஆம் ஆண்டு கொத்தனாவிளை என்ற ஊரில் மதம் மாறிய கிறித்தவ நாடார் பெண்களின் ரவிக்கைகளைக் கிழித்து மரங்களில் தொங்க விட்டனர்.  சந்தை போன்ற பொது இடங்களில் ரவிக்கை அணிந்து, அதன் மேல் மெல்லிய துணியும் அணிந்து வந்த கிறித்துவ நாடார் பெண்களின் ரவிக்கையைக் கிழித்தும் , தாலியை அறுத்தும், நாயர் சமூகத்தினர் அவமானப்படுத்தத் தொடங்கினர். அப்படித் தாலி அறுக்கப்பட்ட அகத்தீசுவரத்திற்கு அருகிலுள்ள சந்தை, “தாலியறுத்தான் சந்தை” என்றே வழங்கப்படுகிறது.                

இப்படியாக வரலாற்றுக் காலத்திலிருந்தே எண்ணற்ற அடக்குமுறைகள் எளியவர்கள் மீது குறிப்பாகப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. இவற்றிலிருந்து மீண்டெழ எண்ணற்றோர் குரல் கொடுத்தனர்.

எனக்குத் தெரிந்த பாட்டி ஒருமுறை, “எங்க காலத்துல ஐயமாருங்களோ, மேல்சாதிக்காரங்களோ, பெரிய மனுஷங்களோ வந்தா முகத்தை மூடிக்கணும்.. இல்லேன்னா கையில் வெச்சிருக்கிற சாட்டை வாலை (வண்டி மாட்டை விரட்டப் பயன்படும் சிறு சாட்டை) வெச்சு அடிப்பாங்க..” என்றதும் அதிர்ச்சியாக இருந்தது. “கையில துண்டு ஏதும் வெச்சிருப்பீங்களா?..” என்றேன். “ம்க்கும்.. உடுதுணியே அம்மா சீலையைக் கிழிச்சுக் கட்டிருப்போம்.. இதுல துண்டு வேட்டி ஏது?.. உடுத்துன துணியை தூக்கி முகத்தை மூடிக்கணும்.. இல்லேன்னா பொட்டக்குட்டிக்கு இவ்வளவு திமிரானு அடிப்பாங்க..”, என்றார் வெற்றிலையை வாயில் குதப்பி கொண்டு. எத்தகைய காட்டுமிராண்டிக் காலகட்டத்தைத் தாண்டி வந்திருக்கிறோம் என்று நினைக்க நினைக்க மலைப்பாக இருந்தது.                 

ஹிஜாப் என்பதற்கு திரை என்று பொருள். ஹிஜாப் அணிவது அல்லாஹ்வின் கட்டளைகளில் ஒன்று என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இந்தத் துணியால் தலை மற்றும் கழுத்தை மறைக்க முடியும். அந்நிய ஆடவர்கள் மற்றும் குடும்ப ஆண்கள் முன்னிலையில் நடமாடும் ஒரு இஸ்லாமியப் பெண் இதைக் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும் என்பது அவர்கள் வழக்கம். இஸ்லாமிய சகோதரிகள் மட்டுமல்ல இந்துப் பெண்களும் (குறிப்பாக வட இந்தியப் பெண்கள்), கிறித்துவ சகோதரிகளும்கூட இந்தத் தலை முக்காட்டை அணிந்து வருகின்றனர். அது அவரவர் மத நம்பிக்கை. ஆனால் வலுக்கட்டாயமாக அணியச் சொல்லக் கூடாது. மேலும் வேண்டுமென்றே அவர்கள் ஒன்று செய்தால், நாங்களும் பதிலுக்குச் செய்வோம் என்ற வக்கிர மனதுடன் போட்டி போடக் கூடாது.

என் தோழியின் மகள் பயிலும் கல்லூரியில் ஆரம்பத்திலேயே எந்த மதச் சின்னங்களையும் வெளிப்படையாக அணியக் கூடாதென்று சொல்லியிருந்தார்கள். குறிப்பிட்ட கர்நாடகக் கல்லூரியில் அப்படி எதுவும் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்ததாகத் தெரியவில்லை.  ஒவ்வொருவரின் மத நம்பிக்கைகளையும் மதிக்கும் நாடுதான் உண்மையான மதச் சார்பற்ற நாடு. சிறுபான்மை மதத்தினர் மீது மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.  இது இந்துமதம் என்ற பெயரில் பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்க முயற்சிப்பது போல் இருக்கிறது.                 ஒரு தனிமனித சுதந்திரத்திற்குள் ஓரளவுதான் அரசாங்கம் நுழைய முடியும். மீறினால் அது சர்வாதிகார ஆட்சி என்று கொள்ளப்படும்.

சில இந்துத்துவ அமைப்புகள் இந்திய இறையாண்மையில் குழப்பம் விளைவிக்க நிறைய முயற்சிகளை எடுத்து வருகின்றன.பிறருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் ஒருவர் செய்யும் செயலை தடுக்க முயற்சிக்கக் கூடாது. ஹிஜாப், நிகாஃப், சாதர், பர்தா, புர்கா ஏதுவாக இருந்தாலும் அதை அணிவதா வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். வேண்டுமென்றே பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமின்றி தண்டிக்கப்படவும் வேண்டியவை.

படைப்பாளரின் கட்டுரையை வாசிக்க:

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.