மனிதன் சைகை மொழி கடந்து தனது உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த உரையாடலைக் கண்டறிந்தான். மிருகங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள சிற்சில வித்தியாசங்களில் உரையாடலும் ஒன்று. சைகையிலிருந்து ஓசைக்கு முன்னேறி மொழியைக் கண்டடைந்து, உரையாடலில் வளர்த்தார்கள் முன்னோர்கள்.           

உறவுகளை வளர்க்க உதவிய பேச்சு, அதே வேகத்தில் பிரிக்கும் வேலையையும் செய்கிறது. எத்தனையோ அரசியல் அமைப்புகள் பேச்சின் மூலமே பொது மக்களைக் கவர்ந்து ஆட்சி அமைத்தனர். இந்தியாவின் குடும்ப அமைப்பே உறவுகள் சிதைந்து போகாமல் கட்டிக் காத்துக் கொண்டு இருக்கிறது என்று பண்பாட்டுக் காவலர்கள் அழுத்தமாக நம்புகின்றனர். ஆனால் அத்தகைய குடும்பங்களில் அதுவும் இந்தியக் குடும்பங்களில் உரையாடல் எந்தளவு உயிரோட்டமாக இருக்கிறது?             

“என் வண்டி சாவி எங்கே?..”           

 “இன்னிக்கு என்ன சமையல்?..” 

“என் ஷர்ட்டை அயர்ன் பண்ணி வெச்சியா?..”               

“ஷூ பாலீஷ் போட்டியா?..”

இதுதான் ஒரு மனைவியிடம் அதிகபட்சமாக கணவனின் பேச்சு.   

“படிச்சீங்களா?..”, “ஹோம் வொர்க் செஞ்சாச்சா?..”, “டெஸ்ட்ல மார்க் எவ்ளோ எடுத்திருக்க?..” இதெல்லாம் தான் குழந்தைகளிடம் பேச்சு.               

இப்படிக் கேள்விகளால் மட்டுமே ஒரு உரையாடல் நிகழ்த்துகிறார்கள் நம் இந்திய ஆண்கள் என்பது வருத்தமான ஒன்று. எத்தனை கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் இதையும் தாண்டிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பது மில்லியன் இல்லை ட்ரில்லியன் டாலர் கேள்வி.           

அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள் தானே உறவை வலுப்படுத்தும்? உரையாடலே இல்லாத கேள்விகளுக்கு வரும் பதில்கள் மட்டும் எப்படி ஒரு உறவை வலுவாக்கும்? எத்தனையோ நாட்கள் ஆத்மார்த்தமான உரையாடல்கள் இல்லாமல் வெற்று நாட்களாக வீணாகக் கழிந்து வருகின்றன என்பதை ஏன் இந்த ஆண்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

படித்த புத்தகம், மனதில் நின்ற ஒரு கவிதை, பிடித்த உணவு, செடியில் அரும்பிய சிறுமலர், மழை நேரத் தேநீர், பக்கத்து வீட்டுக் குழந்தையின் புன்னகை, மழை பொழியத் தயாராகும் மேகம், புல்லின் நுனியில் வைரத்துணுக்காய் மின்னும் பனித்துளி, அலுவலகத்தில் வெற்றிகரமாகச் செய்த வேலை என்று பேசவும், கேட்கவும் எத்தனையோ விஷயங்கள் உண்டு. ஆனால் எத்தனை பேர் ஒரு அரைமணி நேரமாவது ஒதுக்கி துணையிடம் பேசுகிறார்கள்? பேசினாலே பிரச்சினை வரும் என்று முகம் பார்க்கத் தவிர்க்கும் ஆட்கள் தான் இங்கு அதிகம்.                  

சில வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு செய்தி. கணவர் மட்டுமே பேசுவார். அவர் பேசத் தொடங்கியதும், மனைவி எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே விட்டுவிட்டு அவரருகில் அமர்ந்து கவனிக்கத் தொடங்குவாராம். அவர்கள் பக்கத்து வீட்டார், “நள்ளிரவு தாண்டியும் கணவர் பேசிக்கொண்டிருப்பார். இவர் உம் கொட்டிக் கொண்டிருப்பார்..” என்று தெரிவித்திருந்தார்கள். அந்தப் பெண்மணியிடம் கேட்டதற்கு, “சில சமயங்களில் விடிகாலை மூன்று மணிக்குக்கூட என்னை எழுப்பிப் பேசுவார். நான் தூங்காமல் கேட்டுக் கொண்டிருப்பேன்..”, என்று சொன்னார்.

அப்படி என்னதான் அவர் பேசுவார் என்றால் அவர் படித்த விஷயங்கள், கேட்ட செய்திகள் என்றெல்லாம் பேசுவாராம். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் பேச அவர் வாய்ப்பு தரவேயில்லை. அதைக் குறிப்பிட்டுக் கேட்டதற்கு, “எனக்கு வெளியுலக விஷயங்கள் எல்லாம் தெரியாது.. அதனால் தெரியாத விஷயங்களை அவர் எனக்கு சொல்லுவார்.. அவர் பேச ஆரம்பித்தார்.. நான் கேட்க ஆரம்பித்தேன்..” என்றிருக்கிறார்.

இது ஆரோக்கியமான உரையாடலா என்றால் நிச்சயம் இல்லை. வெளியுலகம் தெரியாத மனைவிக்கு அதைத் தெரிவித்து, அவரையும் வெளியே அழைத்துச் சென்று காண்பித்து, கற்பித்து உரையாடலில் அவரையும் பங்கேற்க விட்டிருந்தால், அவர் ஒரு நல்ல கணவர் என்று சொல்லலாம். ‘நான் பேசுவேன்.. நீ கேட்டே ஆகவேண்டும்’, என்ற இரகசிய ஆதிக்கம் அங்கு இருந்திருக்கிறது. இது புரியாமல் அந்தக் கட்டுரையை எழுதியிருந்தவர், ‘எல்லாப் பெண்களும் இவர் மாதிரி இருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகளே வராது’ என்று அவரது ஆணாதிக்கக் கருத்தை ஏற்றி எழுதியிருந்தார். அந்தப் பெண்ணின் நிலை குறித்து இரக்கப்படத்தான் முடிந்தது.            

Photo by Kelly Sikkema on Unsplash

உரையாடல் என்பது கொடுக்கல், வாங்கல் என்பதாக அமைய வேண்டும் என்பதை அந்தக் கட்டுரை மறைமுகமாக உணர்த்தியிருந்தது. தம்பதியினருக்குள் இருக்கும் புரிதலை அவர்களுக்குள் இருக்கும் ஆரோக்கியமான உரையாடலே தெரிய வைக்கிறது. பேசவும் கேட்கவும் பொதுவான விஷயங்கள் எவ்வளவோ உண்டு. அவ்வாறு பேசாமல் வெறும் இயந்திரமயமான உரையாடல் நடக்கும் இடத்தில், நாளடைவில் அதுவும் சலித்துப் போய் விடும்.               

உறவுகள் நம்மிடம் பேசுவது கூடக் கேள்விகளாகவே அமைகிறது. “என்ன சம்பளம்?..”, “வீடு வாங்கியாச்சா?..” இப்படித்தான் இருக்கிறது. அதையும் தாண்டி பேசினால் அது நூற்றுக்குத் தொண்ணூறு அடுத்தவர்களைப் பற்றிய ‘காஸிப்’பாகத்தான் இருக்கிறது. கேட்டால் “வேறென்ன பேச?..” என்று அதையும் கேள்வியாகத்தான் திருப்புகிறார்கள்.                  

ஆண்கள் எப்போதுமே பெண்களை விட சிறந்த பேச்சாளர்கள் கிடையாது. மூன்று வயது ஆண் குழந்தையைவிட, அதே வயதுள்ள பெண் குழந்தை அதிகச் சொற்களைத் தெரிந்து வைத்திருக்கும். பேச்சு வரும்போதுகூட பெண் குழந்தைகள்தான் சீக்கிரம் பேச ஆரம்பிக்கிறார்கள். 

ஆண்கள் இடது மூளையையே அதிகமாக உபயோகிக்கின்றனர். அது பேச்சு மையம் கிடையாது. ஆனால் பெண்களுக்கு இடது மூளையின் முன்புறத்திலும், வலது மூளையின் குறிப்பிட்ட சிறிய இடத்திலும் பேச்சுத்திறன் மையங்கள் இருக்கின்றன. மூளையின் இரண்டு புறங்களிலும் பேச்சுத்திறனுக்கான மையங்கள் இருப்பதால், பெண்கள் சிறந்த பேச்சாளர்களாக இருக்கிறார்கள். ஆண்கள் பேச்சை தகவல் தெரிவிக்க மட்டுமே உபயோகிக்கின்றனர். ஆனால் பெண்கள் நட்பையும், உறவையும் வளர்க்க பேச்சைப் பயன்படுத்துகின்றனர்.               

மன அழுத்தத்திலோ, மன உளைச்சலிலோ இருக்கும் பெண் நிறுத்தாமல் பேசுகிறாள். ஆனால் அதே சூழலில் இருக்கும் ஆண் வாயைத் திறக்க மறுக்கிறான். ஒரு பெண் தனக்குள்ள பிரச்னையை வெளியே சொல்லி புலம்புவதன்மூலம், ஒரு தற்காலிக வடிகால் தேடித் கொள்கிறாள். ஆனால் ஆண் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு மருகுகிறான். இந்த மாறுபட்ட உளவியல் கொண்டவர்களைத்தான் இயற்கை ஒன்று சேர்த்து வைத்து வேடிக்கை பார்க்கிறது.  இதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட தம்பதியினரிடையே அதிகமான பிரச்னைகள் எழுவதில்லை.     

குழந்தைகளிடம் படிப்பு தவிர்த்த உரையாடலை பெரும்பாலான பெற்றோர்கள் நிகழ்த்துவதில்லை என்பது கசப்பான செய்தி. அவர்களது சின்னஞ் சிறு உலகத்தில் நாம் கேள்வி தவிர்த்த உரையாடலை நுழைக்கப் பழக வேண்டும். வாழ்வில் பார்க்கவும், அனுபவிக்கவும் எத்தனையோ உள்ளன. அதைப் பற்றியெல்லாம் அறிவுரை தோரணையிலோ, அதிகாரத் தொனியிலோ சொல்லாது, இயல்பாகப் பேசுவோம். அதைவிட முக்கியம் குழந்தைகளின் மனதில் இருப்பவற்றை அவர்களைப் பேச வைத்துத் தெரிந்து கொள்ள முயல்வோம். எது நல்லது? எது அல்லது? என்பதை எளிமையாக, இனிமையாக எடுத்துரைப்போம். கேள்விகளை எதிர்கொள்ள அவர்களுக்குக் கற்றுத் தருவதோடு நாமும் கற்றுக் கொள்வோம்.       

கணவன் மனைவி உரையாடல் வெறும் கேள்வி பதில்களாக இல்லாமல் சிறிது நேரமாவது இயல்பாக, மனப்பூர்வமாக இருந்தால் வாழ்வு இனிமையாகக் கழியும். தன் இணைக்கு ஒன்றும் தெரியாது என்ற எண்ணமிருந்தால் அதைத் தூரத் தள்ளிவிட்டுப் பேசத் தொடங்குவோம். திருமண வருடங்களைக் கொண்டாடுவதைவிட திருமண வாழ்க்கையை நிறைவாகக் கொண்டாடுவதே ஆரோக்கியமான தாம்பத்தியம்.

கட்டுரையாளரின் மற்ற படைப்பு:

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.

மேலும் படிக்க…