ஒரு பெண்ணுக்கு இன்னின்ன அங்கங்கள் இன்னின்ன அளவுடன், தோற்றத்துடன் அமைய வேண்டும் என்று ஆதி ஆணாதிக்க புத்தி வகுத்து வைத்ததே ‘சாமுத்திரிகா லட்சணம்’. உச்சி முதல் பாதம் வரை அளவு, வடிவம் எல்லாமும் அளந்து வைத்தாற்போல் அமைந்திருக்க வேண்டுமாம். அதென்னவோ பெண் என்றாலே அவள் 36-28-36 என்பது ஆணின் மூளையில் திணிக்கப்பட்டிருக்கிறது.            

இப்படி அளவான, அழகான பெண்கள் தான் வாழத் தகுதி பெற்றவர்களா? இதர பெண்கள் தகுதியற்றவர்களா? முகநூலில் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவரது பதிவை இன்று காண நேர்ந்தது. நடிகை சாய்பல்லவியின் முக அழகை அங்குலம் அங்குலமாக வர்ணித்துள்ளார். யானைக்காது, கரடுமுரடான தாடை, மொந்தையான மூக்கு, அதுவும் மூக்குத் துவாரங்களின் வடிவங்களை எல்லாம் சொல்லி இறுதியில் “இவரைப் போய் அழகி என்கிறார்களே”, என முடித்திருக்கிறார். எவ்வளவு பிற்போக்குத்தனமான பேச்சு?

ஒரு நடிகை என்பதாலேயே, பொதுவெளியில் புழங்குகிறவர் என்பதாலேயே எல்லையற்ற உரிமை எடுத்துக் கொண்டு ஒருவரை அசிங்கமாக வர்ணிப்பது கண்டிக்கத்தக்க ஒன்று. சாய்பல்லவி ஒரு மருத்துவர். சிறந்த நடனக் கலைஞர். அற்புதமாக நடிக்கும் திறன் கொண்டவர். என்றாலும் விரைவிலேயே அழிந்து விடும் அழகைக் கொண்டே பிற்போக்குத்தனமான ஆண்களால் மதிப்பிடப்படுகிறார் என்பது எவ்வளவு வேதனையான விஷயம். 

அழகு என்பது ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வேறுபடுகிறது. உலக அழகி ஐஸ்வர்யாராய் கூட ஒருவரின் பார்வையில் அழகு குறைவாகத்தான் தெரிவார். இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக ஒருவரை உருவகேலி செய்து அவதூறாகப் பேசக் கூடாது. நமக்குப் பிடித்தால் ரசிக்கலாம். இல்லையெனில் அமைதியாக நகர்ந்து விட வேண்டும். அது அறமும்கூட.

அழகு என்பதற்கு எவ்வித இலக்கணமும் கிடையாது. பொக்கை வாய்க் கிழவியின் முகச் சுருக்கமும் அழகுதான். ஒற்றைப் பல்லுடன் சிரிக்கும் தெருவோரக் குழந்தையும் அழகுதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் அழகாக இருக்கும். லைலாவின் அழகை மஜ்னுவின் கண்களால் தானே காண வேண்டும்?

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம், ‘அழகான’ பெண்ணை மருமகளாகத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வையில் சிவந்த நிறமுடைய பெண்தான் அழகி. வந்த இடங்களை எல்லாம் தட்டிக் கழித்து ஒரு ‘அழகான’ பெண்ணைத் தேர்ந்தெடுத்தார்கள். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள். மகனும், மருமகளும் தனிக் குடித்தனம் போய்விட்டனர். இப்போது அழகு என்பதற்கு என்ன விளக்கம் சொல்ல முடியும்? உடல் அழகைப் பார்த்து பெண் தேடி, உள்ளத்து அழகைப் பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று நாளும் வருந்துகின்றனர்.

இளமை என்பது உடலுக்கு சில காலத்துக்குத்தான். ஆனால் உள்ளத்தின் அழகு இறுதிவரை நிரந்தரமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள பலர் மறுக்கிறார்கள். எல்லா வேலைக்கும் அழகான பெண்களே வேண்டும் என்றால் அழகு குறைந்த (அதாவது அவர்கள் பார்வையில்) பெண்கள் எல்லாம் இந்தப் பூமியில் வாழத் தகுதியில்லாதவர்களா என்ன?

உருவக்கேலி ஒருவரின் எல்லாத் திறமைகளையும் முடக்கிப்போட்டுவிடும். எனக்குத் தெரிந்த ஒரு பெண் நன்றாக ஆடத்தெரிந்தவர். ஆனால் அவரது தூக்கிய பற்கள் குறித்த பிறரது கிண்டலால் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. உருவத்தை வைத்து கிண்டல் செய்பவர்கள் போகிற போக்கில் பேசி விட்டு போய் விடுகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்டவர்களுக்குள் அந்த வார்த்தைகள் ஏற்படுத்தும் ஆறாத ரணங்களைப் பற்றி யாரும் அறிவதும் இல்லை. தெரிந்து கொள்ள அக்கறையும் இல்லை.             

Photo by Alexander Krivitskiy on Unsplash

ஒருவருடைய நிறமும், அழகும் அவரவர் பெற்றோரின் மரபணுக்களைப் பொறுத்ததே. இதைப் புரிந்து கொள்ளாமல் அழகுக்கு இலக்கணம் வகுத்த மூடர்களையும், அவர்களை இன்னும் பின்பற்றும் முட்டாள்களையும் என்னதான் சொல்வது?             

கறுப்பு நிறமும், பிரசவமோ இன்ன பிற காரணமோ பெருத்த வயிறும், குட்டை முடியும், குண்டு உடலும் அவமானமல்ல. அதற்கு பெண்கள் காரணமும் அல்ல. எந்நேரமும் அடுத்தவர்கள் பார்வைக்காக சிறுத்த இடையும், நீளக்கூந்தலும், ஒட்டிய வயிறையும் அளவு கூடாமல் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கமுடியாது. அதையும் தாண்டிய சாதனைகள் எத்தனையோ இருக்கின்றன.          

பெண்ணை அழகு என்ற வட்டத்துக்குள் அடைப்பவர்கள் ஆணாதிக்க சிந்தனையைத் தனக்குள் கொண்டு வளர்ந்த பெண்கள்தான். என் தோழியின் மகள் மாநிறமாக இருப்பாள். தோழியின் மாமியார் நல்ல கறுப்பு. ஆனால் அவரே தன் பேத்தியை நிறம் குறைவு என்று தொடக்கூட மாட்டார். பேத்தியின் அறிவார்ந்த சிந்தனையோ, படிப்பில் அவளது உயர்வோ அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்ப மாட்டார். இத்தகைய பெண்கள் தான் உண்மையிலேயே பெண்ணின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிறார்கள்.           

விளம்பரங்களில் கூட எஜமானியாக வரும் பெண் ‘பளிச்’சென்றும், உதவியாளராக வரும் பெண்ணைக் கசங்கிய சேலையில், கறுப்பு நிறமாகவும் காட்டும் போக்கு இருக்கிறது. ஏன் சிவப்பான பெண் வீட்டு வேலைக்கு செல்ல மாட்டாரா? இல்லை கறுப்பான பெண்தான் எஜமானியாக இருக்க முடியாதா? சிவப்புக்கு கறுப்பு அடிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத்தானே இத்தகைய விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன.

புறத்தோற்றத்துக்கு கொடுக்கும் மரியாதையை விட அகத் தோற்றத்தின் அழகை முதலில் கண்டறிந்து மரியாதை கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான அழகு.              

அந்த முகநூல் பதிவு சாய்பல்லவி என்ற தனி மனுஷியை மட்டும் அவமானப்படுத்தவில்லை. இவ்வாறான பகடி தன் சொந்த வீட்டுப் பெண்கள்கூட அன்றாடம் சந்திப்பதே என்ற புரிதல் இல்லாத ஆண்களைத்தான் இந்தப் பதிவு தோலுரித்துக் காட்டுகிறது. இதைப் பெண்கள் யாரும் அவமானமாக எடுத்துக் கொள்ளத்தேவையில்லை. பக்குவமில்லாத இது போன்ற பதிவுகளைப் புறக்கணித்து, மேல் தோலில் அமர்ந்த தூசியைப் போலத் தட்டி விடுவதே அதற்கு நாம் தரும் பதிலடி. 

படைப்பாளரின் மற்ற கட்டுரை:

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.