பயணங்கள் எப்போதுமே குதூகலம் தருபவை. ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகரும் போது புதிய அனுபவங்கள், புதிய முகங்கள், புதிய உணவுகள் என்று எல்லாமே புதிதாகத் தோன்றும். ஒரே சூழ்நிலையில் இருந்து மூச்சு முட்டும் வாழ்க்கையில் சிறிது நேரம் இளைப்பாறல் தந்து வாழ்வைப் புதுப்பிப்பவை பயணங்கள் தாம்.

பயணங்கள் இன்றி உலகம் இல்லை. சக்கரம் கண்டறியப்பட்டு, பயணங்கள் செல்லத் தொடங்கிய பின்னர் தாம் உலகம் என்ற ஒன்று அறியப்படத் தொடங்கியது. பல்வேறு நாடுகள் கண்டறியப்பட்டன. பலவிதமான நாகரிகங்கள் வெளிப்பட்டன. மனிதர்களின் வித்தியாசமான வாழ்க்கை முறைகள் தெரியவந்தன.

ஆனால், இந்தப் பயணங்கள் ஆண்களுக்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்ட ஒன்றானது இந்த ஆணாதிக்கச் சமுதாயத்தின் ஆகப்பெரும் சாபம். பெண்கள் குழுவாகவோ அல்லது தனியாகவோ பயணிப்பது சாத்தியப்படாத ஒன்றாகவே இருந்தது. இப்போதுதான் பெண்கள் வெளி உலகில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் பெண்களின் பயணங்கள் முன்வாசலுக்கும், அடுக்களைக்குமாகவே முடிந்து போனது. அதன் பின்னான வெளியுலகப் பயணம் என்பது இறுதிப் பயணம்தான். இது மிகையாகச் சொன்னதில்லை. நிறையப் பெண்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள். இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் வீட்டு வேலைக்கும் சமையல் வேலைக்கும் மட்டுமே என்றிருந்த ஒரு காலமும் இருந்தது. நான்கு சுவர்களுக்குள் மட்டுமே பெண்களின் வாழ்க்கை இருந்தது. அவர்களுடைய தனித்திறமைகள், ஆளுமைத்திறன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் பாங்கு, அவர்களுடைய சிந்தனை ஓட்டம் இவை எதுவுமே வெளிவராமல் அந்தச் சுவர்கள் தடுத்துக்கொண்டன. இதனால் அவர்களது அகவோட்டம் குறுகியே இருந்தது. யாரோ ஒருவரைச் சார்ந்தே இருக்கும் சாறுண்ணிகளாக இருந்தனர் பெண்கள்.

பெண்கள் மேற்கொள்ளும் பயணங்கள் அநேகமாகக் குடும்பத்துடனான பயணங்களே. அலுவலகப் பயணங்கள் என்பவை பணிபுரியும் பெண்களுக்கு மட்டுமே சாத்தியம். அதுவும் எல்லோராலும் நிச்சயமாகப் பயணிக்க முடியாது. பெண்கள் பயணிப்பதை நினைப்பதே நிறைய ஆண்களுக்கு ஜீரணிக்க இயலாத ஒன்று. பொதுவெளியில் புழங்குவது என்பது பொதுவாகவே பெண்களுக்கு எட்டாக்கனிதான்.

மூச்சடைக்கும் இறுக்கமான சூழலில் இருந்து விடுபடவே பெண்கள் பயணிக்க விரும்புகிறார்கள். ஆனால், அத்தகைய பயணங்கள் அவர்களின் குடும்பத்தினரோடும், நண்பர்கள் குடும்பத்தினரோடும் மட்டுமே சாத்தியப்படுகின்றன. நட்புகளோடு ஒரு பயணத்தை அவள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் மூன்று பெண்கள் குடும்பத்தைத் தவிர்த்துவிட்டு புது இடத்துக்குப் பயணித்து, மூன்று நாட்கள் ரசித்து வாழும் காட்சி மிகவும் ரகளையானவை.

ஆசுவாசப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் பயணங்கள் அத்தகைய இளைப்பாறலைத் தருகிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பயணங்களுக்கு முந்தைய, பிந்தைய ஏற்பாடுகள் அதிகப்படியான பணிச் சுமையையே தருகிறது. பயணத்திற்கு முன்பு என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்று யோசித்து எடுத்து வைக்கும் பொறுப்பு பெண்ணையே சேர்கிறது. ஒன்றை மறந்தாலும் அவளது தலைதான் உருள்கிறது.

ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களைக் காலி செய்ய வேண்டும். மின் சாதனங்களை, சிலிண்டரை மறக்காமல் ஆஃப் பண்ணிவிட்டு வரவேண்டும். எல்லாம் செய்து முடித்துவிட்டுக் கிளம்பினாலும் கதவைப் பூட்டினோமா என்ற சந்தேகத்துடனேயே அந்தப் பயணத்தை அவள் கழிக்க வேண்டும்.

பயணத்திலும் அவள் புது இடங்களைப் பார்ப்பது அரிது. உடன் வருவோரின் தேவைகளைக் கவனித்துக்கொள்ளவே அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி தனது சகோதரர் குடும்பங்கள் இரண்டு மூன்றுடன் சேர்ந்து ஓர் உல்லாச சுற்றுலா சென்றிருக்கிறார். சமையல் பொருட்களைக் கையோடு எடுத்துக் கொண்டு, சென்ற இடங்களில் எல்லாம் இவரும், இவருடன் வந்த சகோதரர்களின் மனைவிகளும் சேர்ந்து மூன்று வேளையும் சமைத்திருக்கிறார்கள். வெளியில் எங்கும் சாப்பிடவில்லை என்று பெருமை பொங்கச் சொன்னார்.

“மூணு நேரமும் சமைச்சீங்கன்னா நீங்க எப்போ சுத்திப் பாத்தீங்க?” என்றேன். “எங்கக்கா பாக்க? சமைக்க, சாப்பிட, பாத்திரம் கழுவன்னு வேலை நிறைய்ய… அப்புறம் அடுத்த இடத்துக்குப் போகும்போது அடுத்த வேலை சமையல் பத்திப் பேசுவோம். ஏதோ கிடைச்ச நேரத்துல லேசா பாத்தோம். ஆம்பளைங்களும் குழந்தைகளும் போய் சுத்திட்டு வருவாங்க. அதுக்குள்ள சமைச்சு வைக்கணும். இடையில டீ குடிக்கணும்னாகூட ஆளுக்கு ரெண்டு பஜ்ஜி போட்டுத் தரணும். பத்து நாளு போனதே தெரியல” என்றார் ஏக்கம் தொனிக்க.

“இதுக்கு நீங்க பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்” என்றேன் ஆதங்கத்துடன். ஆமாமென்று தலையசைத்தார். எனக்கு ஏனோ அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ கதையைப் படித்தது போலவே இருந்தது.

கன்னியாகுமரியின் சூரிய உதயம், அஸ்தமனம், கடலலைகளின் குளுகுளுப்பு, பாதம் தழுவிய நுரைப்பூக்கள், அடியில் இருந்த மணலின் குறுகுறுப்பு, கடல் பேசும் பாஷை இவற்றில் ஒன்றையும் ரசிக்காமல் சமையலே கதி என்றிருந்திருக்கிறார். இதுபோல எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுடனிருக்கும் ஆண்கள் ருசிக்குச் சாப்பிடாமல், பசிக்கு மட்டுமே சாப்பிட்டிருந்தால் அவருக்கும், அவர் குடும்பத்து இதர பெண்களுக்கும் இது உண்மையிலேயே உல்லாசப் பயணமாக அமைந்திருக்கும் அல்லவா?

பயணம் முடிந்த பின்தான் பணிச்சுமை இன்னும் அதிகரிக்கும். அழுக்குத் துணிகளைத் தரம் பிரித்து துவைத்து, இஸ்திரி போட்டு அடுக்கி வைத்து என்று எக்கச்சக்க வேலை பெண்களை மட்டுமே பிழிந்தெடுக்கும். இதனாலேயே நிறையப் பேர் பயணத்தை விரும்புவதில்லை. ஆண்களும் இந்த ‘க்ளீனிங்’ வேலையைப் பகிர்ந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

மதங்களும் பெண்கள் பயணிப்பதை ஊக்குவித்ததே இல்லை. தனியே பயணம் செய்வது பாவம் என்றே போதிக்கின்றன. எங்கு சென்றாலும் ஆண்களின் துணையுடனே செல்ல, அதுவும் கணவனோ தந்தையோ அல்லது சகோதரனோ உடன்வர வேண்டும் என்றே பணிக்கிறது. ஆப்கானிஸ்தானில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 72 கி.மீ. துாரத்துக்கு மேற்பட்ட பயணத்தின்போது ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த ஆண், நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும். முழு உடலையும் மறைக்கும் ஆடைகளை அணிந்தால் மட்டுமே பெண்கள் பயணம் செய்ய முடியும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது எத்தகைய பிற்போக்குத்தனமான கருத்து.

பயணம் என்பது பெண்களுக்கும் பொது. இதை யாரும் புரிந்துகொள்ள முன்வருவதில்லை. பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்று முனகினாலும், அருகே இருக்கும் இடத்திற்குச் சிறு பயணத்தையாவது தனியே மேற்கொள்ளப் பழக்க வேண்டும். அப்போது தான் பயணிக்கும் பாதையின் குறுக்கே வரும் இன்னல்களும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளும் அவர்களுக்கும் கைவரப்பெறும். பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறும் பெண்களே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்.

பயணங்கள் வெறும் ஊர்சுற்றல் கிடையாது. அவை நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் பல உண்டு. இயன்றவரையில் பயணிப்போம். இயலாத நிலையில் பயண அனுபவங்களை அசை போடுவோம். பயணத்தின் மூலம் பெற்ற அனுபவங்களை அடுத்தவருக்குக் கடத்துவோம். பயணத் திட்டங்களில் குடும்ப ஆண்களையும் இழுத்துக்கொள்வோம்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.