“பெண்கள் ஏன் பயணம் போகணும்?” என்று கேட்டால், “பெண்கள் ஏன் பயணம் போகக் கூடாது?” என்று கேட்பேன். பெண்ணுக்கான வெளி வீடாகத்தான் இருக்கிறது. வேலைக்குப் போகும் பெண் என்றால் வீட்டுடன் அலுவலகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இதைத் தாண்டி இயற்கையை ரசிக்க, விதவிதமான நிலப்பரப்புகளைப் பார்க்க, புதிய மனிதர்களைச் சந்திக்க, வித்தியாசமான உணவுவகைகளை ருசிக்க, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள பயணம் அவசியம்.

பெண்ணுக்கான பயணம் என்றால், பெரும்பாலும் குடும்பத்துடன், உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போவதும், வழிபாட்டுத்தலங்களுக்கும் போவதுமாகத்தான் இருக்கிறது. ஆற்றுக்கோ அணைக்கட்டுக்கோ அருவிக்கோ மலைப்பிரதேசங்களுக்கோ காட்டுப் பகுதிகளுக்கோ போவது அரிதாகத்தான் இருக்கும். அப்படிப் போனாலும், வீட்டிலிருந்தே கட்டுச்சாதம் கட்டிக் கொண்டு போவார்கள். அல்லது அங்கு போய் சமைப்பார்கள். பயணத்திலும் சமையல் பெண்களை விட்டுப் பிரியாமல் உடன் வரும். எல்லாருக்கும் சோறு போடுவதிலும் சாப்பிட்ட பின் பாத்திரங்களைக் கழுவி வைப்பதிலுமே நேரம் போய்விடும். இந்த வேலைகளுக்கிடையே இயற்கையை ரசிக்கவும் ஆசுவாசமாக உட்காரவும் அவர்களுக்கு நேரமே கிடைக்காது. குடும்பத்துடன் எங்கு சென்றாலும், அம்மா, மனைவி ரோலை எடுத்துக் கொண்டு, குழந்தைகள், கணவனைக் கவனிப்பதும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், பணிவிடைகள் புரிவதும்தான் பெண்ணின் வேலையாக இருக்கிறது. யாரையும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாமல், தன்னை மட்டும் கவனித்துக் கொண்டு தன் விருப்பப்படி உண்டு, ஊர் சுற்றிப் பார்க்க விரும்பினால், பெண், தோழிகளுடன், நண்பர்களுடன் பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனியே பயணிக்க வேண்டும்.

செக்குமாடு போன்ற ஒரேவிதமான வாழ்க்கைமுறை தரும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் புத்துணர்ச்சி பெறவும் மனிதர்களுக்கு பயணங்கள் அவசியம். ஆண்களுக்குப் பயணம் என்பது மிக எளிதானது. நினைத்தால், நண்பர்களுடன் வண்டி எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார்கள். வீடு ? அதை அம்மாவோ மனைவியோ பார்த்துக் கொள்வார்கள். பெண்ணுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை. பெண்கள், முதுகுக்குப் பின்னால் வீடு என்ற கண்ணுக்குத் தெரியாத மூட்டையை எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மூட்டையை இறக்கி வைத்துவிட்டு, பேக் பேக்கை (backpack) மாட்டுவது அவ்வளவு எளிதல்ல.

முதலில் புகுந்த வீட்டினரிடம் அனுமதி வாங்க வேண்டும். “எதுக்காக இப்ப போறே?” “அவசியம் இப்ப போய்த்தான் ஆகணுமா?” “போ, வேண்டாம்னு சொல்லல, பையனுக்கு எக்ஸாம் வருது, யார் சொல்லிக் கொடுப்பா? எக்ஸாம் முடிச்சுட்டு போலாம்ல…” (அந்தப் பையன் எல்கேஜியோ யூகேஜியோதான் படித்துக் கொண்டிருப்பான்). “யாரு சமைக்கறது ?” “எங்க தங்கை வீட்டிலிருந்து கல்யாணத்துக்கு கூப்பிட வந்தாலும் வருவாங்க, நீ இல்லேன்னா எப்படி?” “அம்மா, எனக்கு சளிப்பிடிச்சிருக்கு, இப்ப போய் நீ டூர் போறேன்னு சொல்றே?” இப்படிக் கேள்விகளும் புகார்களும் நீண்டு கொண்டே போகும்.

இவை நேரடியான கேள்விகள் என்றால் மறைமுகமாகக் குறை சொல்வதும் நடக்கும். “புருஷனையும் குழந்தைகளையும் தவிக்க விட்டுட்டு, ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தப் போறாளாம். இது குடும்பப் பொண்ணுக்கு அழகா ? எல்லாம் சம்பாதிக்கற திமிர்.” “அப்படி என்ன டூர் போயே ஆகணுமா, அந்தப் பணத்தைப் பொண்ணு கல்யாணத்துக்கு சேத்து வைக்கலாம்ல, இங்க பணம் கொட்டியா கிடக்கு?” என்றெல்லாம் உறவுகள் போகிற போக்கில் விமர்சனம் செய்யும். எல்லாவற்றையும் கடந்து, கணவனுக்கு, குழந்தைகளுக்கு, மாமியார் மாமனாருக்கு, சமையல் உட்பட எல்லா வேலைகளுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு, நிமிர்ந்தால் அடுத்த சுற்று விசாரணைகள் வரும். “யாரோட போறே? ” “எப்படிப் போறே? ” “எங்கே தங்கப் போறீங்க?” “போற இடம் பாதுகாப்பா இருக்குமா?” இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, உடன் வருபவர்களின் போன் நம்பர்கள், தங்குமிட முகவரி எல்லாவற்றையும் தந்துவிட்டுத்தான் பஸ்ஸோ ட்ரெயினோ ஏற முடியும்.

புரிதல் உள்ள இணையர் என்றால் அவ்வளவு பிரச்னை இல்லை. வீட்டை, குடும்பத்தைக் கவனித்துக்கொள்வார். ஆனால், பணிபுரியும் பெண் என்றால் அலுவலகங்களிலும் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். பயணத்திற்காக லீவ் கேட்கும் போது, “என்னது! கணவரை, குழந்தைகளை விட்டுட்டுப் போறீங்களா?” “பாவங்க அவர்” “நீங்க ஃப்ரெண்ட்ஸோட ஜாலியாப் போயிடுவீங்க, வீட்ல அவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க…” என்றெல்லாம் ஆணாதிக்கப் பொதுப்புத்தி முதலைக் கண்ணீர் வடிக்கும். ஆண்கள் டூர் போகும் போது இதே நாவுகள், “ஃப்ரெண்ட்ஸோட போறே, ஜாலிப்பா!” “நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க” என்று வாழ்த்தி அனுப்பும்.

சில நேரங்களில், ’இவ்வளவு போராடிப் பயணம் போய்த்தான் ஆகணுமா?’ என்று பெண்களுக்குத் தோன்றுவதுண்டு. குடும்பம், அலுவலகம், சுற்றி உள்ளோர் என்று மொத்த சமூகமும், பெண் (தோழிகளுடனோ, தனியாகவோ), பயணம் போவதை ஏன் எதிர்க்கிறது? பெண் என்பவள் ஆணின், ஆணாதிக்கச் சமுதாயத்தின் தேவைகளை நிறைவேற்றத்தான் கடமைப்பட்டிருக்கிறாள். வீடு தான் அவள் வெளி. அதனைத்தாண்டி அவள் செல்லக் கூடாது. அலுவலகம் செல்கிறாள்; பணம் சம்பாதிக்கிறாள் என்றால் அந்தப் பணமும் குடும்பத்திற்குத்தான் செலவு செய்யப்பட வேண்டும். தனக்கென்று அவள் பெரிதாக விருப்பங்கள் வைத்திருக்கக் கூடாது. குடும்பத்தைப் பாதிக்காமல் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அவளின் விருப்பம், வீட்டை, பெண்ணால் வீடு அனுபவிக்கும் வசதிகளை, பாதிக்கிறது என்றால் அதற்கு தடைபோடப்படும்.

பெண், தன் குடும்பத்துடன் இல்லாமல், தோழிகளுடனோ தனியாகவோ பயணம் போவதால் அவள் செய்யும் வீட்டு வேலைகளுக்கு – சமையல் உட்பட – பாதிப்பு வருவது ஒருபுறம் என்றால், மறுபுறம், அவளுக்கு வரையறுக்கப்பட்ட வெளியிலிருந்து விடுபட்டு, புறவெளி உலகிற்குள் காலடி எடுத்து வைக்கிறாள். இது ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அவளது உலக அறிவு கூடும், புதிய மனிதர்களை, நிலப்பரப்புகளைப் பார்ப்பாள், வெளியுலகைப் பற்றி நிறைய தெரிந்துகொள்வாள், அவளது தன்னம்பிக்கை அதிகரிக்கும், தன் நிலையைப் பற்றிச் சிந்திக்கக்கூடும், அடிமைத்தனத்தை உணரக் கூடும், கேள்வி கேட்கவும், தனது உரிமைகளைப் பெறவும் வாய்ப்பிருக்கிறது. இத்தகைய ’ஆபத்தான விளைவுகள் நேரக்கூடும்’ என்பதால் ஆணாதிக்கப் பொதுபுத்தி பயப்படுகிறது. பெண் குடும்பத்துடன் பயணம் போவதுதான் ’பாதுகாப்பு’ என்று முடிந்த அளவில் வேப்பிலை அடித்துக் கொண்டே இருக்கிறது. குடும்பத்துடன் போகும் போது, வீட்டுப் பொறுப்புகளும் உடன் வருவதால், பெண்ணுக்கு வெளியுலகைப் பற்றி எதுவும் தெரியாமல், ’பத்திரமாக’ப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்தச் சவால்களை எல்லாம் கடந்து, பெண்கள் பயணம் போகத் துவங்க வேண்டும். வெளியில் வேலைக்குப் போகும் பெண்கள், வெளியில் வேலைக்குப் போகாமல் வீட்டை கவனித்துக்கொள்ளும் பெண்கள் என்ற இருதரப்பினரும்தான். தோழிகளுடன் இணைந்து குழுவாகப் போகலாம். தனியாகவும் பயணிக்கலாம். எப்படிப் பணத்தைச் சேர்ப்பது என்பது அவரவர் சாமர்த்தியம். பயணத்திற்காக, அவரவர் வழியில் பணத்தைத் திரட்டலாம். சம்பாதிக்கும் பெண் தனது வருவாயில் ஒரு தொகையை ஒதுக்கலாம். சம்பாதிக்காதவர்கள், குடும்பத்தினரிடம் பேசி பணத்தை வாங்கலாம். சேமிக்கத் துவங்கலாம். எங்கே போவது, எப்படிப் போவது என்று ஏற்கெனவே பயணித்த அனுபவமிருப்பவர்களிடம் கேட்டுத் திட்டமிடலாம்.

பயணம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல. நான் நாற்பது வயதில்தான், தனியாகவும் தோழிகளுடன் சேர்ந்தும் பயணம் போக ஆரம்பித்தேன். புரிதல் உள்ள இணையரும் குடும்பமும் இருந்தாலும், ஏதோ ஒரு மனத்தடையும் தேவையற்ற குற்றவுணர்வும் எனக்கு இருந்தது. அதைக் கடந்து பயணம் போக ஆரம்பித்து, இன்று வரை போய்க் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பயணமும் புத்துணர்ச்சியளிக்கிறது. ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுக்கிறது. மனிதர்களைப் புரிய வைக்கிறது. வெளிமனிதர்களை மட்டுமல்ல, குடும்பத்தினரையே புரிந்துகொள்ள பயணம் உதவுகிறது. பயணத்தின் போது, நமக்கு நெருக்கமானவர்களுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி (space) பல விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவர்களின் மீதும் நம்மீதும் நேசம் பெருகுகிறது.

தனித்துச் சென்ற பயணங்கள், எனது சுயப் பரிசோதனைக்கு மிகவும் உதவியிருக்கின்றன. இந்தப் பயணங்களுக்குப் பிறகு, வெகு நாட்களாக நான் தள்ளிப் போட்ட பல விஷயங்களைச் செய்து முடித்திருக்கிறேன். அந்த விஷயங்கள் மீதான எனது பயத்தைக் கடக்க பயணங்கள் உதவின என்று பிறகுதான் புரிந்து கொண்டேன்.

தோழிகளுடனான பயணங்கள், அவர்களுடனான எனது நட்பை வலுப்படுத்தின. என்னை மேம்படுத்த உதவின. அவர்களைப் புரிந்து கொள்ளவும், என்னை சரிசெய்து கொள்ளவும் பயணங்கள் பயன்பட்டன. மலையேற்றப் பயணங்களின் போது, தோழிகள் அளித்த ஊக்கத்தினால் எளிதாக நடந்தேன், மலையேறினேன். மலைகளில், காடுகளில் எதிர்பாராமல் சந்தித்த சவால்களை, அவர்களுடன் உற்சாகமாகவும் மகிழ்ச்சியுடனும் எதிர்கொண்டேன். குடும்பத்துடன் செல்லும் போது செய்யத் துணியாத பேராசெய்லிங் (Parasailing), ராக் கிளைம்பிங் (Rock climbing) சாகசங்களையும் செய்தது குதூகலமான அனுபவங்கள்.

பயணங்கள் நமது ஆளுமையைச் செறிவூட்டுகின்றன. மனஅழுத்தங்களிலிருந்து விடுவிக்கின்றன. நமது சுயத்திற்குப் புதிய பரிமாணங்களை அளிக்கின்றன. பரவசமூட்டுகின்றன. உங்களைப் புரிந்து கொள்ள, உலகைத் தெரிந்துகொள்ள, வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வாழ, பயணம் போங்கள் பிரியமான தோழியரே! பயணம் போகும் பெண்களுக்கு வாழ்த்து கூறி, மகிழ்ச்சியுடன், நம்பிக்கையுடன் அனுப்பி வையுங்கள் அன்புத் தோழர்களே, பெண்களுக்கு தம்மைப் பார்த்துக்கொள்ளத் தெரியும்.

படைப்பாளர்:

கீதா இளங்கோவன்

‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.