பொருள் 14 : கன்பூசியம் அன்று

கன்பூசியஸ் ஒரு சீனத் தத்துவ அறிஞர். பொயுமு 551-479 ஆண்டுகளில் அவர் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. உயர்ந்த அரசுப் பதவியைப் பெற வேண்டும் என்பதே கன்பூசியஸின் வாழ்நாள் கனவாக இருந்தது. அது இறுதிவரை நிறைவேறவேயில்லை. ஆனால், மரணத்துக்குப் பிறகு கன்பூசியஸின் சிந்தனைகள் மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்தி, சீன மக்களைத் தீயாகப் பற்றிக்கொண்டன. ஒரு மகத்தான தத்துவஞானியாகவும் வாழ்வியல் ஆசானாகவும் அவர் போற்றப்பட்டார். உலகின் தலைசிறந்த அறிஞர்கள், தத்துவஞானிகள் வரிசையில் கன்பூசியஸ் இன்றும் இடம்பெற்றுள்ளார்.

ஹான் வம்ச காலகட்டத்தை (பொயுமு 206 முதல் பொயு 220 வரை) முற்கால கன்பூசியஸ் யுகம் என்று அழைக்க முடியும். கன்பூசியஸின் மரணத்துக்குப் பிறகான இந்தக் காலகட்டத்தில்தான் அவருடைய சிந்தனைகள் சமூகத்தில் வலுவாக வேர்விடத் தொடங்கின. அமைதி நிலவ, குடும்பம் மகிழ்ச்சியுடன் நீடிக்க, அரசாட்சி நல்லவிதமாக நடக்க கன்பூசியஸின் சிந்தனைகள் உதவும் என்று மக்கள் உறுதியாக நம்பிய காலகட்டம் அது. வழி வழியாக, தலைமுறை தலைமுறையாக கன்பூசியஸின் சிந்தனைகள் மக்களிடையே கொண்டுசெல்லப்பட்டன. கன்பூசியஸ் வகுத்துக்கொடுத்த வாழ்வை வாழ்பவரே சரியாக வாழ்பவர் என்னும் கருத்தாக்கம் பலம்பெற்றது.

சீன சமூகத்தின் வழிகாட்டு நெறிகளாக கன்பூசியஸின் போதனைகள் திகழ்ந்தன. கன்பூசியஸ் தனி மனித ஒழுக்கத்துக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். பிறரை நேசி என்பதே அவருடைய சமூகத் தத்துவத்தின் அடிநாதமாக இருந்தது. இதை ‘ரென்’ என்று அவர் அழைத்தார். உன்னை மற்றவர்கள் எப்படி நடத்தவேண்டும் என்று விரும்புகிறாயோ, அப்படியே மற்றவர்களையும் நடத்து என்று அவர் கட்டளையிட்டார். அவருடைய அரசியல் சிந்தனைகளும்கூட தனி நபர்களையும் அவர்களுடைய ஒழுக்கங்களையும் மையப்படுத்தியே அமைந்திருந்தன. ஒரு தலைவர் அகந்தையில்லாமல் இருக்க வேண்டும், தன்னைப் பின்தொடர்பவர்களை மதித்து நடக்க வேண்டும், எளிமையாக இருக்க வேண்டும் என்று போதித்தார். சட்டம், அறம் இரண்டும் மனிதர்களுக்கு அவசியம் என்று வலியுறுத்தினார்.

கன்பூசியம் என்று இன்று நாம் அழைக்கும் கன்பூசியஸின் சிந்தனைத் திரட்டுகள் அவருடைய மாணாக்கர்களால் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை. சீன சமூகம் கன்பூசியத்தின் சாரத்தை எப்படி உள்வாங்கியிருந்தது என்பதை இனி பார்க்கலாம். ஆண்களும் பெண்களும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கன்பூசியம் தெளிவாக வகுத்து வைத்திருந்தது. அதன்படி, ஓர் ஆண் தன் பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். ஆனால், ஒரு பெண் தன் பெற்றோரை மதித்தால் மட்டும் போதாது; தன்னுடைய மாமனார், மாமியார், கணவன், அனைத்து ஆண் உறவினர்கள், தன் மகன்கள் என்று அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். ஒரு பெண் முதலில் தன் அப்பாவுக்கும் அடுத்து கணவனுக்கும் பிறகு மகன்களுக்கும் கட்டுப்பட வேண்டும். கவனிக்கவும், தன்னுடைய மகள்களையோ பெண் உறவினர்களையோ அவள் மதிக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை.

ஒரு பெண், தன் கணவன் இறந்துபோனாலும் அவன் நினைவுகளுக்கு உண்மையாக பயபக்தியுடன் இருக்க வேண்டும் என்கிறது கன்பூசியம். அவள் வேறு திருமணம் செய்துகொள்ளக் கூடாது. தேவைப்பட்டால் தற்கொலை செய்துகொள்ள அவளுக்கு உரிமை இருக்கிறது. தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணுக்கு சமூகம் மேலதிக மரியாதையைச் செலுத்தும். மற்றபடி, தன் வாழ்வை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அவள் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. எந்த லட்சியத்தையும் கனவையும் வரித்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. தன் குழந்தைகளை ஒரு பெண் வளர்த்தெடுக்கலாம். வீட்டில் உள்ள பணியாளர்கள் மீது அதிகாரத்தைச் செலுத்தலாம். இவை போக வேறு இடத்தில் அவள் அதிகாரம் செல்லுபடியாகாது. வீட்டில் உள்ள ஆண்களோ சமூகத்தினரோதான் அவளுடைய மற்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவார்கள். அவர்களுக்கு அவள் அடங்கி நடந்தாக வேண்டியது அவசியம்.

ஐந்து அடிப்படை உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கிறார் கன்பூசியஸ். முதலாவது உறவு ஓர் ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையிலானது. இரண்டாவது, தந்தைக்கும் மகனுக்குமான உறவு. மூன்றாவது, அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையிலான உறவு. நான்காவது இரண்டு நண்பர்களுக்கு இடையிலானது. இறுதியாக, ஓர் அரசருக்கும் அமைச்சருக்கும் இடையிலான உறவை அவர் குறிப்பிடுகிறார். இந்த ஐந்து உறவுகளில் முதலாவதில் மட்டுமே பெண் இடம்பெற்றுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ரோசாலிண்ட் மைல்ஸ். தந்தைக்கும் மகளுக்குமான உறவு, தாய்க்கும் மகளுக்குமான உறவு, இரண்டு தோழிகளுக்கு இடையிலான உறவு ஆகியவற்றை கன்பூசியம் பொருட்படுத்தக்கூடவில்லை.

குழந்தைகளைக் கவனித்துக்கொள்வது, வீட்டைக் கவனித்துக்கொள்வது ஆகியவை பெண்களின் அத்தியாவசியக் கடமைகள். தியாகம் செய்ய எந்நேரமும் ஒரு பெண் தயாராக இருக்க வேண்டும். தன் கணவனுக்காக, மகன்களுக்காக, பெற்றோருக்காக, சமூகத்துக்காக அவள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும். வழிபாடுகள், சடங்குகள் ஆகியவற்றை நிறைவேற்றும் பொறுப்பும் அவளையே சேரும். பெண்களை கன்பூசியஸ் நிச்சயம் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கவில்லை என்பதை அவருடைய சிந்தனைகளை ஆராயும் எவரொருவரும் கண்டுகொள்ளலாம். ஓரிடத்தில் கன்பூசியஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘அற்ப மனிதர்களும் பெண்களும் பழகுவதற்குக் கடினமானவர்கள். அவர்களுடன் நெருங்கிச் சென்றால் அவர்கள் உங்களை அவமரியாதை செய்வார்கள். விலகிச் சென்றால் கசப்பை ஏற்படுத்துவார்கள்.’

கன்பூசியஸும் அவர் மாணாக்கர்களும்

கன்பூசியஸ் மட்டுமல்ல, அவர் பெயரால் தங்களை கன்பூசியர்கள் என்று அழைத்துக்கொண்ட பிற்காலச் சிந்தனையாளர்களும் வரலாற்றாசிரியர்களும்கூட பெண்கள் குறித்து இதேபோன்ற கருத்துகளைத்தான் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் மெரிலின் பிரெஞ்ச். அவர்கள் வரலாற்றையும் பண்டைய இதிகாசங்களையும் ஆவணங்களையும் கன்பூசியத்தின் வழியில் திருத்தியெழுதினார்கள். பெண்களைச் சமூகத்தின் கீழ் அடுக்கில் தள்ளும் பணியை அவர்கள் செவ்வனே மேற்கொண்டனர். அதற்கு கன்பூசியஸின் பெயரைச் சொல்லி நியாயமும் கற்பித்தனர்.

கன்பூசியஸ்தான் இந்தக் கருத்துகளையெல்லாம் சொன்னார் என்பதற்கு என்ன ஆதாரம் என்னும் கேள்வி பலமுறை எழுப்பப்பட்டுவிட்டது. அவருடைய பெயரைப் பயன்படுத்தி அவருக்குப் பிறகு வந்தவர்கள் உள்புகுந்து பெண்களுக்கு எதிரான கருத்துகளை கன்பூசியத்தில் புகுத்திருக்க முடியுமல்லவா? ஆம், அது சாத்தியம்தான். ஆனால், இத்தகைய இடைச்செருகல்களை அன்றைய சீனாவில் எந்தவொரு கன்பூசியஸின் மாணவரும் எதிர்க்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக கன்பூசியஸ் எதையும் சொல்லிவிடவில்லை என்பது உண்மையானால் இத்தகைய கருத்துகளை அவர்கள் போராடி நீக்கியிருக்க வேண்டுமல்லவா? இவை கன்பூசியத்தைக் களங்கமடையச் செய்யும் என்று அவர்கள் தீவிரமாக வாதிட்டிருக்க வேண்டுமல்லவா? ஏன் செய்யவில்லை?

கன்பூசியஸுக்குப் பிறகு புகழ்பெற்ற மற்றொரு சீனத் தத்துவஞானி மென்சியஸ். அவர் மனித சுபாவத்தைப் பற்றி மிக உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள், அவர்களிடம் நல்ல பண்புகள் குடிகொண்டிருக்கின்றன என்றார் மென்சியஸ். தங்களைச் சரியான வழியில் வளர்த்துக்கொண்டால் ஆண்கள் முனிவர்கள் ஆகலாம் என்கிறார் அவர். எல்லோரும் நல்லவர்கள் என்னும்போது ஏன் ஆண்கள் மட்டும் முனிவர்கள் ஆகலாம்? பெண்கள் ஆகக் கூடாதா? ஆகக் கூடாது என்று மென்சியஸ் சொல்லவில்லை; ஆகலாம் என்றும் அவர் சொல்லவில்லை. கன்பூசியத்தின் ஆதாரப் பிரச்னையே இதுதான். அது பெண்களைப் பொருட்படுத்தவேயில்லை. அவ்வாறு பொருட்படுத்தி விவாதிக்கும் ஒரு சில இடங்களிலும்கூட அது பெண்களைத் தாழ்வாகவே மதிப்பிடுகிறது.

பொருள் 15 : கன்பூசியம் இன்று

கன்பூசியஸும் அவர் உருவாக்கிய உலகமும் மறைந்துவிடவில்லை. இறந்து 2500 ஆண்டுகள் கடந்தபிறகும் ஏதோ ஒரு வடிவத்தில் கன்பூசியஸ் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். சீனா கடந்தும் பரந்து விரிந்துள்ளது அவருடைய செல்வாக்கு. ‘சீனா, கொரியா அல்லது ஜப்பானைச் சேர்ந்த ஒருவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் முதலில் கன்பூசியஸை நாம் புரிந்துகொண்டாக வேண்டும்’ என்கிறார் Confucius and the World He Created என்னும் நூலை எழுதிய மைக்கேல் ஷுமான். கன்பூசியஸ் வகுத்தளித்த வழியில்தான் இன்றைய சீனாவும் பெருமளவில் சென்றுகொண்டிருக்கிறது என்கிறார் இவர்.

குறிப்பாக, சீனாவின் கிராமப்புறங்களில் கன்பூசியஸின் தாக்கம் ஆதிக்கம் செலுத்துவதை இன்றும் ஒருவர் காணலாம். ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் இப்போதும் அவர்கள் பின்வருமாறுதான் சொல்வார்கள். ஒரு நல்ல பெண் தன் கணவனுக்குக் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். எல்லா வீட்டு வேலைகளையும் முகங்சுளிக்காமல் செய்ய வேண்டும். வீட்டில் எடுக்கப்படும் முடிவுகளில் தலையிடக் கூடாது. சமையல் அவளுடைய பொறுப்பு. வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களுக்குச் சலிக்காமல் அவள் சமையல் செய்ய வேண்டும், பரிமாறி மகிழ வேண்டும். அதே நேரம், எக்காரணம் கொண்டும் அவர்களோடு சரிசமானமாக அமர்ந்து உண்டுவிடக் கூடாது. அவர்கள் உண்டு முடித்தபிறகு தனியே ஓரிடத்தில் ஒதுங்கிச் சாப்பிட வேண்டும். இதை உணர்த்தும்படியாக, ‘பெண்கள் மேஜையில் அமர்வதில்லை’ என்றொரு சொலவடை சீனாவில் புழக்கத்தில் இருக்கிறது.

நகரங்களிலும்கூட பெண்கள் ஆண்களுக்குச் சமமாக அங்கீகரிக்கப்படுவதில்லை. இன்றும் பல கருத்தரங்குகளில் மையமான இடங்களில் பெண்கள் அமர்த்தப்படுவதில்லை. இதை ஆண்கள், பெண்கள் இருவருமே ஒரு சமூக யதார்த்தமாக ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்று தெரிகிறது. இதற்கான வேர்களை கன்பூசியஸிடம் தேடிச் செல்லும் சிலர், அவருடைய சிந்தனைத் திரட்டுகளில் இரண்டு இடங்களில் மட்டுமே பெண் என்னும் சொல் நேரடியாக இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஒரு சமூகத்தில் நிலவும் மதிப்பீடுகளுக்கு ஒரே ஒருவரைக் காரணம் காட்ட முடியாது என்பது உண்மைதான். ஒரு தனி நபரால் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்துவிட முடியாது என்பதும்கூட உண்மைதான். ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் சிந்தனைகள் காலப்போக்கில் சமூக மாற்றத்தால் பலவீனமடைவதையும் பழைய கருத்தாக்கங்கள் உடைபட்டு புதியவை தோன்றுவதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், சில மதிப்பீடுகள் எவ்வளவு காலம் மாறினாலும், எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும் தலைமுறைகள் பல கடந்து உயிர்த்திருக்கின்றன. கடவுள் நம்பிக்கை, சடங்குகள், திருமண முறை, வர்க்க வேறுபாடுகள் போன்றவற்றைச் சமூகம் இன்றளவும் கடைபிடித்து வருவதைப் பார்க்கிறோம். ஆண் குறித்தும் பெண் குறித்தும் சமூகம் கொண்டிருக்கும் பார்வையையும்கூட இந்த வரிசையில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது.

ஏன் இவற்றையெல்லாம் சமூகம் கெட்டியாகப் பிடித்துவைத்திருக்கிறது என்பதற்கான விடை, இந்த ஏற்பாடு இப்போதும் வசதியாக இருக்கிறது என்பதுதான். கன்பூசியஸ் உண்மையில் என்ன சொன்னார் என்பது முக்கியமல்ல; கன்பூசியம் என்னும் பெயரில் இன்றும் சீனா கடைபிடிக்கும் சில வழக்கங்கள் இப்போதும் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்பதுதான் முக்கியமானது. எப்போதோ இறந்துபோன கன்பூசியஸின் மீது பழியைப் போட்டுவிட்டு பெண்களை இளக்காரமாகப் பார்ப்பது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது. கன்பூசியஸ் சொல்லியிருக்கிறார், எனவே நீ எனக்குச் சமமானவள் அல்ல என்று ஒரு பெண்ணைப் பார்த்துச் சொல்வது ஆண்களுக்கு வசதியாக இருக்கிறது. கன்பூசியஸ் வழியில் நட, அடங்கிஒடுங்கி இரு என்று ஒரு பெண்ணுக்கு அறிவுறுத்துவது அவர்களுக்கு உகந்ததாக இருக்கிறது.

எனவே சீன ஆண்கள் கன்பூசியத்தை இன்றும் தாங்கிப் பிடிக்கிறார்கள். அது பெண்களுக்கு எதிரான சித்தாந்தம் அல்ல என்று சிரமப்பட்டு வாதிடுகிறார்கள். அது எக்காலத்துக்கும் பொருந்தும் வாழ்க்கை நெறி என்று நிரூபிக்க முயல்கிறார்கள். அந்தப் பரிதாபகரமான முயற்சிகள் சிலவற்றை இனிப் பார்க்கலாம். அற்ப மனிதர்களும் பெண்களும் பழகுவதற்குக் கடினமானவர்கள் என்று கன்பூசியஸ் உண்மையில் சொல்லவேயில்லை; அவர் சொல்லவந்தது பெண் குழந்தைகளைத்தான் என்கிறார் ஓர் ‘கன்பூசிய ஆய்வாளர்.’ சரி, அப்படியானால் குழந்தைகள் தொல்லை தருபவர்கள் என்று பொதுவில் சொல்லியிருக்கலாமே. எதற்காகப் பெண் குழந்தைகள் என்று குறிப்பாகச் சொல்ல வேண்டும்? குழந்தைகளில்கூட ஆண் குழந்தைகளைவிடப் பெண் குழந்தைகள் அதிக இம்சை கொடுப்பவர்களா?

இன்னோரிடத்தில் ஒரு சம்பவம் வருகிறது. வூ என்னும் மன்னர் ஒருமுறை கன்பூசியஸிடம் சொல்கிறார். ‘என்னிடம் பத்து அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திறமை வாய்ந்தவர்கள். நீங்களே பாருங்கள்.’ கன்பூசியஸ் அவர்களைப் பார்வையிடுகிறார். பிறகு பின்வருமாறு சொல்கிறார். ‘உங்கள் அமைச்சர்களில் ஒருவர் பெண். எனவே பத்து திறமைசாலிகள் என்று நீங்கள் குறிப்பிட முடியாது. ஒன்பது பேர் என்றுதான் சொல்ல வேண்டும்.’ வூ மன்னர் கன்பூசியஸைக் காட்டிலும் மேலானவராக இதில் வெளிப்படுகிறார் அல்லவா? தன்னுடைய அவையில் ஒரு பெண்ணை நியமித்திருந்ததோடு ஆண்களுக்குச் சமானவராக அவரையும் மதிப்பிட்டிருந்தது பெரிய விஷயம் அல்லவா? ஆனால், மகத்தான சிந்தனையாளரும் தத்துவஞானியுமான கன்பூசியஸ் ஏன் அந்தப் பெண் அமைச்சரை ஒரு பொருட்டாகக்கூட கருதவில்லை?

இதற்கும் சிலர் முட்டுக்கொடுக்கிறார்கள். என் அமைச்சரவையில் எத்தனை திறமைசாலி ஆண்கள் இருக்கிறார்கள் என்பதே மன்னரின் கேள்வி. அதற்கு, ஒன்பது பேர் என்று கன்பூசியஸ் பதிலளித்தார்; இன்னொருவர் பெண் என்பதால் அவரைக் கணக்கிடவில்லை என்கிறார்கள் கன்பூசியவாதிகள். ஆனால், இந்த வாதம் அபத்தமாகயிருக்கிறது. எதற்காக ஓர் அரசர் இப்படியொரு விநோதமான கேள்வியை ஒரு தத்துவஞானியிடம் எழுப்ப வேண்டும்? அவருடைய கணக்கிடும் திறனைப் பரிசோதிப்பதற்காகவா?

கன்பூசியஸ் பெண்களை இழிவாகப் பார்க்கவில்லை; பெண் பணியாளர்களைத்தான் அவ்வாறு பார்த்தார் என்னும் விளக்கத்தைக்கூட கொடுத்துப் பார்த்துவிட்டார்கள். அப்படியானால் ஏன் ஆண் பணியாளர்களையும் பெண் பணியாளர்களையும் அவர் வேறுபடுத்திப் பார்த்தார் என்னும் கேள்வியை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.

ஆக, கன்பூசியஸைக் காப்பாற்றுவது அல்ல, பெண் பற்றிய அவர் பார்வையை மூடிமறைப்பதே இத்தகையோரின் நோக்கமாக இருக்கிறது. அதுவே உண்மையைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ‘இவ்வளவு ஆராய்ச்சியெல்லாம் தேவையேயில்லை; ஆண்களும் பெண்களும் சமம் என்று கன்பூசியஸ் கருதவில்லை. அவ்வளவுதான்’ என்கிறார் ஜின்யான் ஜியாங் என்னும் நவீன ஆய்வாளர். பெண் வீட்டைக் கவனித்துக்கொள்ள வேண்டும், ஆண் நாட்டை என்பதே கன்பூசியத்தின் இலக்கணம். ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்பதே அதன் அடிப்படை உண்மை. இதை ஒருவராலும் மூடி மறைத்துவிடமுடியாது என்கிறார் ஜியாங்.

கன்பூசியத் தத்துவம் இன்றளவும் ஆண்களுக்குத் தேவைப்படுகிறது என்பதாலேயே கன்பூசியஸைப் பாதுகாக்கும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதனால்தான் கன்பூசியத்தை வெவ்வேறு பார்வைகளில் விதவிதமான அர்த்தங்களைக் கொடுத்து அவர்கள் விளக்க முற்படுகிறார்கள். எப்படியாவது கன்பூசியத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார்கள்.

சீனர்களின் இந்தத் துடிதுடிப்பையும் ஏக்கத்தையும் விருப்பத்தையும் உலகம் முழுதிலுமுள்ள பல ஆண்கள் பகிர்ந்துகொள்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். பெண் குறித்த அவர்கள் பார்வை எல்லை கடந்ததாக, மதம் கடந்ததாக, மொழி கடந்ததாக இருக்கிறது. அவர்கள் எல்லோருக்கும் கன்பூசியஸ் தேவைப்படுகிறார். எனவே அவர் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். நாம் வாழ்வது கன்பூசியஸ் உருவாக்கிய உலகத்தில்தான்.

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.