ஒரு இருபது நாட்கள் முன்பு என் காக்கா (அண்ணன்) மகளுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அவள் ஜெர்மனியில் ஆசிரியராகப் பணிபுரிபவள். பேறுகால உதவிக்கு மச்சியும் (அண்ணி) காக்காவும் ஒருமாதம் முன்னர் ஜெர்மனிக்குச் சென்றிருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் பொறியாளராக பணிபுரிபுரியும் என் லாத்தா மகளுக்கு பெண்குழந்தை அங்கேயே தான் பிறந்தது. இதைப்போல் இன்று ஏரலின் பெண்கள் பலருக்கும் அவரவர் இடங்களில், வெளியூர்களில்தான் பேறுகாலம் நடக்கிறது. இது இன்று சாதாரண நிகழ்வாக ஆகிவிட்டதுதான். இருப்பினும் வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு நாள் பிந்தியதெனக் கேள்வியுற்றால் இங்கிருக்கும் பெற்றோர்களுக்கு மனம் தவிக்கத் தொடங்கிவிடும், ஒன்றும் செய்து கொடுக்க வழியில்லாமல் இப்படி தூரமாய் இருக்கிறோமே என… தங்கள் பெண்கள் குழந்தை உண்டானதிலிருந்து பேறுகாலம் முடிந்து ஒரு மாதம் வரைக்கும் அவர்களைத் தங்கம் என்று தாங்கி தாலத்தில் வைத்து ஏந்தி விடுபவர்களாயிற்றே ஏரல்காரர்கள்!
முதல் நான்கு மாதங்கள்கள் வரை பெரும்பாலும் பிள்ளைக்கு தலைசுற்றலும் வாந்தியுமாய்தான் கழியும். நாங்கள் இந்த மசக்கையை ‘பிள்ளை கோட்டி போடுறா’ என்போம். பிள்ளை கணவன் வீட்டில் இருந்தால் மாமியாரிடம் அனுமதி வாங்கி தாய் வீட்டுக்குக் கூட்டி வந்து ஒரு மாதமோ பத்திருபது நாளோவைத்துக் கொள்வதுண்டு. இப்போது பொதுவாக எதனையும் விரும்பி உண்ணத் தோன்றாது. ‘எது மனம் கொள்ளுதோ அதைத் திங்கட்டும்’ என விட்டு விடுவோம்.
ஐந்தாம் மாதம் தொடங்கியதும் ‘கோட்டி’ தெளிந்து விடும். இப்போது தாய்மருந்தான இஞ்சியைத் தட்டிச் சாறெடுத்து சமபங்கு தேனை லேசாகச் சூடுபடுத்தி அதனுடன் எப்போதுமே வீடுகளில் இடித்து வைத்திருக்கும் அலுப்பு மருந்துப் பொடி கலந்து கொடுப்போம். இது முதல் இஞ்சி. இதைப்போல் ஏழாம் மாதத்திலும் ஒன்பதாம் மாதத்திலுமாக இன்னும் இரண்டு இஞ்சிகள் உண்டு.
இந்த ஐந்தாம் மாதத்திலிருந்து பிள்ளைக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு உற்றாரும் உறவினரும் வகைவகையாய் பண்டங்களும் உணவுகளும் வாங்கியும் சமைத்தும் கொண்டுவந்து தருவார்கள். ஐந்தாவது மாத முடிவில் சுத்தமான கலப்படமில்லாத கோரோசனை (கோரோசனை என்பது பசு மாட்டின் பித்தப்பையில் இருந்து எடுக்கப்படும் பித்தம் ஆகும்) நாட்டு மருந்துக் கடைகளில் சொல்லி வைத்து வாங்கி, ஒரே ஒரு தடவை மட்டும் பாலில் கோரோசனை கலந்து கொடுப்போம்.
ஏழாம் மாத ஆரம்பத்தில் சிறுவிழாவாக உறவினர்கள் கூடி, கணவன் வீட்டில் இருக்கும் பெண்ணுக்குப் பட்டுடுத்திப் பூச்சூடி கைநிறைய வளையல்போட்டுத் தாய் வீட்டுக்கு அழைத்து வருவோம். தாய்வீடு வந்த சில நாள்களில் அவளுக்கு வாய்வுக் கஞ்சி போட்டுக் கொடுப்போம். புழுங்கலரிசி, வெள்ளைப்பூண்டு, சின்ன வெங்காயம், வெந்தயம், சீரகம், முருங்கைக்கீரை எல்லாம் சேர்த்து நன்கு குழைய வேகவைத்து, தேங்காய்ப்பால் குளிரச் சேர்த்து நெய்யில் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, ஏலம், பட்டை தாளித்து செய்யப்படுவது வாய்வுக்கஞ்சி.
இதற்குத் தொட்டுக் கொள்ள தேங்காய், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, புளி, பூண்டு வறுத்து அரைத்தத் துவையலும் உண்டு. கருப்பட்டி கடித்துக்கொண்டும் குடிக்கலாம். கணவன் வீடு உள்ளூர் எனில் அவர்களுக்கும் சேர்த்துப் போட்டு, பெரிய தூக்குவாளி நிறைய தாய்வீட்டிலிருந்து கொடுத்துவிட வேண்டும்.
இரு நாள்கள் அடுத்தடுத்து போட்டுக் கொடுக்கவேண்டும் (முதல்நாள் வாயுவைக் கலைக்க; இரண்டாம் நாள் கலைந்த வாயுவை அமர்த்த). கஞ்சி போட்ட சில நாட்களிலேயே ஏழாம் மாதம் முடிவதற்குள் இரண்டாவது இஞ்சியைத் தட்டிக் கொடுத்து விடுவோம். ஏழாம் மாத இறுதியிலிருந்து இரவில் சோறைத் தவிர்த்து எளிதில் ஜீரணமாகும் ஏதேனும் பலகாரம்தான் இரவுணவு (வயிற்றில் பிள்ளை பருத்துவிடும், பிரசவம் கடினமாகி விடும் என்பதால்). இச்சமயத்தில் வாய்ப்புள்ளவர்கள் ஓரிரு தடவை பாலில் குங்குமப்பூ கலந்து கொடுப்பதுண்டு.
ஒன்பதாவது மாதம் தொடங்கியதும் நீர்க்குடிநீர் குடிப்பது தொடங்கும். ஓமம், வாயுவிளங்கான், சுக்கு, குறுந்தட்டிவேர், பெருஞ்சீரகம், பூண்டு எல்லாவற்றையும் நன்கு தட்டிப்போட்டு கருப்பட்டி சேர்த்துக் கொதிக்க வைத்து, தினந்தோறும் மாலை வேளைகளில் பேறுகாலம்வரை தொடர்ந்து குடிக்க வேண்டும் (நன்கு சிறுநீர் பிரிந்து கால்,உடல் வீக்கம் இல்லாமலிருக்க). இடையில் ஒருதடவைக்கு இந்த நீர்க்குடிநீரில் புதிதாய்க் கடைந்த பசு வெண்ணெய் கலந்து கொடுப்போம் (அடிவயிற்றில் அடியெடுத்து வைக்க முடியாமல் தாக்கி வலியைக் கொடுக்கும் அண்ட வாயு அகல).
அப்புறம் ஒன்பதாம் மாதம் பிறந்து பத்து நாட்கள் ஆனதிலிருந்து தினமும் இரவு படுக்கச் செல்லுமுன் குறுக்கிலிருந்து சூடாக வெந்நீர் ஊற்றிக் கொள்ள வேண்டும், பேறுகாலத்தை எளிதாக்கும் என்பதற்காக. ஒன்பதாவது மாத இறுதியில் மூன்றாவது இஞ்சியைத் தட்டிக் கொடுத்து விடுவோம்.
ஒன்பது மாதங்களும் நிறைந்து பத்தாவது மாதம் பிறந்து விட்டால், இன்னொரு முறை வாய்வுக் கஞ்சி போட்டுக் கொடுப்பதுண்டு… ஏழாம் மாதத்தைப்போலவே இரண்டு நாள்கள் தொடர்ந்து. ஆனால் இம்முறை கணவர் வீட்டுக்குக் கஞ்சி அனுப்ப வேண்டியதில்லை. இரண்டாவது கஞ்சி போட்டுக் கொடுத்த உடனேயோ அல்லது இரண்டொரு நாட்களிலேயோ பெண்ணுக்கு வலி ஏற்பட்டு பேறுகாலம் ஆகிவிடுவதுமுண்டு.
இப்போது அல்லாஹ்வுடைய உதவியினால் ஒன்பது மாதங்களும் நிறைந்து விட்டன. பிள்ளைக்கு கர்ப்பகாலத்தில் செய்ய வேண்டிய முறைமைகளையும் செய்தாயிற்று. இனி எப்போது வேண்டுமானாலும் பேறுகாலம் நிகழலாம் என்று அமைதியாக அவனுடைய பார்வைக்காகக் காத்திருக்க வேண்டியதுதான். எங்க வாப்புமா நிறைமாத சூலிக்காக வேண்டுவது போல் “வாய்த்தண்ணி கொப்புளிச்சாப்புல பிள்ள வெளிய வந்து தாய்வேற பிள்ளை வேற ஆக்கி வை யா ரப்பு ரகுமானே” என வேண்டிக்கொண்டு…
மருத்துவமனைக்குச் செல்வது, மருத்துவரிடம் காட்டுவது, சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது, வழக்கப்படியான பரிசோதனைகள், ஸ்கேன்கள் என்று கருவுற்ற பெண்களுக்குக் கட்டாயமான எதையுமே தவிர்க்காமல் செய்து கொண்டு முன்னோர்களின் பழக்கங்களையும் விடாது தொடர்கின்றோம் இன்றளவும்.
அப்போதெல்லாம் வெளிநாடு என்பது கொழும்புதான். கொழும்பிலிருந்து வீட்டு ஆண்மக்கள் ஊருக்கு வந்து விட்டால் அது ‘கொழுப்பாளு வந்த வீடு’. எப்போதும்போல இருக்கும் வீடுகள் அப்படி கொழும்பாளு வந்து விட்டால் தடபுடல் படும். கல்யாண வீடும் அப்படித்தான். இந்த இரண்டுக்கும் இணையாக இன்னொரு வகையில் அமர்க்களப்படுகிற வீடென்றால் அது ‘பிள்ளை பெத்த’ வீடுதான். இந்த பிள்ளை பெத்த வீட்டுக்கென ஒரு முகம் உண்டு. அந்த முகத்துக்கெனத் தனியொரு மணமுமுண்டு.
அணியாரத் துண்டுகள் காயும் மணம், இஞ்சி தட்டிய மணம்; உள்ளிப்பாலும் காயமும் மொளவாணமும் காய்ச்சிய மணம்; புதிதாய் தாயானவள் மஞ்சளும் எண்ணெயும் சீயக்காயும் தேய்த்து நீராடிய மணம்; இவை எல்லாவற்றுக்கும் மேல் தாய்ப்பாலும் பாலூட்டிய மணம் வெளித் தெரிந்துவிடக்கூடாதெனப் பூசப்பட்ட பவுடரும் சேர்ந்து மணக்கும் பச்சைப் பிள்ளை மணம்; இவை எல்லாம் கலந்து கவிந்த வாசனையோடிருக்கும் ‘பிள்ளை பெத்த வீடு’.
தாயைக் கவனிக்கவும் தொட்டியடியைக் காத்துக் கிடக்கவும் மூமாக்களுக்கும் வாப்புமாக்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை அன்று. பேறுகாலத்துக்குப் பின் தாயின் உடல் நலம் பேணுவதில் அவர்கள் காட்டும் சிரத்தை என்னை எப்போதும் வியப்பிலாழ்த்தும். இன்ன மருந்து, இப்படிச் சேர்ப்பது, இப்படிச் செய்வது, இப்படிக் கொடுப்பது என்ற ஒழுங்குகளை எல்லாம் வேலை மெனக்கிட்டு கண்டும்பிடித்து கடைபிடிக்கவும் செய்திருக்கிறார்களே என்று யோசிப்பேன்…
வீட்டுப் பெண் கருவுற்று ஒன்பது மாதங்கள் ஆகிய பின், ஒரு நல்ல நாளில் தேவையான நாட்டுமருந்துப் பொருள்களை அவற்றுக்குரிய அளவுகளோடு எடுத்துக் காயவைத்து, பேறுகால மருந்துகளான சோற்றுப்பொடி காயப்பொடி இரண்டையும் திரித்து வைத்துக் கொள்வார்கள். கொத்தமல்லி, சதகுப்பை, சோற்றுப் பட்டை, வெந்தயம், மஞ்சள், மிளகு, சீரகம், சாலிவேர் போன்ற மருந்துகள் சேர்ந்தது சோற்றுப்பொடி. காயப் பொடி என்பது இருபத்தோரு மருந்துகள் சேர்வது. இதோடு சூப் செய்வதற்கும் மொளவாணம் (மிளகு ஆணம்) காய்ச்சுவதற்கும், மிளகாய் தவிர்த்த மல்லி, சீரகம், பெருஞ்சீரகம்,கசகசா, மஞ்சள் சேர்த்த மசாலாப் பொடியும் தயாராகிவிடும்.
சுகப் பிரசவம் ஆன உடனேயே பிள்ளை பெற்றுக் களைத்திருப்பவளுக்குக் குவளை நிறைய இஞ்சி தட்டி தேன்கலந்து தருவதில் இருந்து தொடங்கும் அவர்கள் பத்தியமும் கவனிப்பும். வீட்டிலேயே பிரசவம் நிகழ்ந்த காலங்களில் பேறுகாலத்துக்கு மருத்துவச்சியை கூப்பிட்டு விடும்போதே இஞ்சி தட்ட அம்மியைக் கழுவவும் தொடங்கிவிடுவார்கள். எங்க ம்மா நான்காவதாக என்னைப் பெறும்போது அம்மியில் இஞ்சி தட்டிப் பிழிந்து தயாராக வைத்துவிட்டு, வெளியே பேசிக் கொண்டிருந்த என் வாப்புமாவை அழைத்து “மாமி குடிமகளுக்குச் சொல்லிவுடுங்க” எனச் சொன்னதாக நாங்கள் கேட்டிருக்கிறோம். பின்னர் மருத்துவமனைகளில் பிரசவம் நடந்தபோதும் அங்கு எடுத்துச் சென்று இஞ்சி கொடுப்பதற்கும் தடையிருந்ததில்லை.
எனக்குத் தலைப் பிரசவம் தூத்துக்குடியில் இருந்த சாரா நர்சிங்ஹோமில் ஆனபோது ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு இஞ்சி வந்து சேர்ந்தது, ஒரு சிறுதுண்டு அடுப்புக்கரியும் கூடைக்குள் வைக்கப்பட்டு. அன்றைக்கு ஏதாவது உணவுப் பொருள்களை தெரு தாண்டி கொடுத்துவிடுவதென்றாலே கண்டிப்பாக ஒரு துண்டு அடுப்புக்கரியையும் வைத்துதான் அனுப்புவார்கள்.
அடுப்புக்கரித் துண்டு வாசனையை ஈர்த்துக் கொள்ளும் என்ற உண்மையை வாசனையைப் பின்தொடரும் எச்சிப்பிசாசை ஏமாற்ற பயன்படுத்திக் கொண்டார்கள் போலும்! இப்போது ஸ்விக்கி மூலமும் ஸொமேட்டோ மூலமும் எங்கிருந்தெல்லாமோ உணவுகள் வந்திறங்கிய வண்ணம் இருப்பதால் எச்சிப்பிசாசுகள் சலிப்படைந்து விட்டனவோ என்று தோன்றும் எனக்கு! சரிசரி பிள்ளை பெற்றவளை அப்படியே விட்டுவிட்டு பிசாசுக்குப் போய்விட்டோமே! திரும்பி விடுவோம்.
பிள்ளை பிறந்த மூன்றாவது நாள் மருத்துவமனையிலிருந்து திரும்பிய உடன் பிடிகாயம் எனத் தருவார்கள். இந்தப் பிடிகாயம் கர்ப்பப்பையை நன்கு சுத்தம் செய்யுமாம். வேப்பங்கொழுந்து, பெருங்காயம், கருப்பட்டி மூன்றையும் சம அளவில் அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி நல்லெண்ணெய் அல்லது நெய்யில் உருட்டி விழுங்கிவிட வேண்டும். மென்றால் வாயெல்லாம் ஒட்டும். பிசுபிசுப்பின்றி விழுங்க ஏதுவாகத்தான் எண்ணெயோ நெய்யோ… இதை விழுங்கி முடித்துவிட்டு சூடாக வெந்நீர் அல்லது கடுங்காப்பி குடித்துக் கொள்ளலாம். அந்தக் கடுங்காப்பி சலுகை மட்டும் இல்லாவிட்டால் அந்த உருண்டைகளை விழுங்கும்போது ‘இந்த மாயத்துக்குப் பிள்ள பெக்காம இருந்துருக்கலாம்’ என்றுதான் நினைப்பு ஓடும்!
தாய்க்கு நன்கு பால் ஊற, ஐந்தாவது நாள் உள்ளிப் பால் கொடுப்பது வழக்கம். தாய்க்கு சிசேரியன் நடந்திருக்கும் எனில், ஒரு வாரம் கழித்து அல்லது ஒன்பதாவது நாள் கொடுக்கிறோம். பூண்டு உரித்து, இஞ்சிச்சாறில் வேகவைத்து, மசித்து, வெந்தயமும் அரிசியும் அரைத்துச் சேர்த்து, அதோடு முட்டை, தேங்காய்ப்பால், கருப்பட்டி, பேறுகாலத்துக்கென திரித்த காயப்பொடி எல்லாம் கட்டி தட்டாமல் சேர்த்துக் கலந்து, அடுப்பிலேற்றி, கைவிடாமல் கிளற வேண்டும். இதற்கிடையில் சின்னவெங்காயம் நிறைய உரித்து அரிந்து நெய்யில் பொரித்து, பொரிந்த வெங்காயத்தை அள்ளிவிட்டு அந்த நெய்யை மட்டும் அடுப்பில் கொதித்துக்கொண்டிருக்கும் மருந்தில் ஊற்றிக் கிளற வேண்டும். நன்கு கெட்டியானதும் இறக்கினால் உள்ளிப்பால் தயார். சொல்வதை இரண்டு வரிகளில் சொல்லிவிட்டாலும் காய்ச்சி இறக்க நாள் முழுதும் வேண்டும். ஏனெனில் இந்த உள்ளிப்பால், காயம் இரண்டும் நல்ல சுவையும் சத்தும் மிகுந்தவை. அதனால் வீட்டில் உள்ள எல்லோருக்குமே தருவார்கள்.
அதோடு மருமகன், சம்பந்தி, பெண்ணின் கொழுந்தன், நாத்தனார் இப்படி முக்கிய உறவுகளுக்கும் பிள்ளையையும் தாயையும் பார்க்க வரும் நெருங்கிய சொந்தங்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். அதனால் பெரிய சட்டி நிறைய மருந்து காய்ச்சுதல் நடக்கும். அதற்குத் தகுந்தவாறு வேலைகளும் அதிகமிருக்கும்.
இனி ஏழாம் நாள் தாய்க்கு எண்ணெய் தேய்த்து முழுவாட்டுதல் நடக்கும். அன்றைக்குக் காலையிலேயே எலும்பு சூப் போட்டு அதில் பத்திய மருந்து கலந்து வாய்க்குடிநீர் என்று கொடுத்து விடுவார்கள். அதைக் குடித்துவிட்டு குளிக்க ரெடியாக வேண்டும். தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், மிகக் கொஞ்சமாக விளக்கெண்ணெய் மூன்றையும் கலந்து முக்கூட்டு எண்ணெய் என உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை தேய்க்க வேண்டும். அடுத்து அரைத்த மஞ்சளைத் தலையைத் தவிர உடல் முழுதும் தேய்க்க வேண்டும். பெண்ணின் மூமா/ வாப்புமா, ‘நீ தேக்கிறியா ஒழுங்கா இல்ல நான் தேச்சு விடவா’ என்று கூடவேதான் நிற்பார்கள்.
பிறகு சூடாக வெந்நீர் ஊற்றிக் கொண்டதும், பிசுபிசுப்பெல்லாம் போக சீயக்காயும் தேய்த்துக் குளிக்க வேண்டும் (இப்போதெல்லாம் பிள்ளைகள் சீயக்காய்க்குப் பதில் ஷாம்பூவிற்கு மாறிவிட்டார்கள்).
தாய்க்குத் தலைமுழுவாட்டிய அன்று மதிய உணவு மருந்துச் சோறு. ஏற்கனவே இடித்து அரைத்துத் தயாராக இருக்கும் சோற்றுப் பொடியோடு, தேங்காய்ப்பால், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்துச் சோறாக்குவதுதான் மருந்துச் சோறு.சோறு ஆக்கி இறக்கிய பிறகு, சின்ன வெங்காயமும் முட்டையும் நல்லெண்ணெயில் வதக்கி மருந்துச் சோறோடு கலந்து விடுவார்கள். சாப்பிடச் சுவையாக இருக்கும். இதற்குத் தொட்டுக் கொள்ள மீன் /உப்புமீன் ஆணம் துணைக்கறி. எங்க ஊரில் பேறுகால சமயத்தில் கருவாடு அவ்வளவாகச் சேர்ப்பதில்லை. அதிகமும் மீன் /உப்பு மீன்தான். சாப்பிட்ட பின் கட்டாயம் வெற்றிலை போடச் சொல்வார்கள். உணவு செரிக்கும்;பால் குடிக்கும் குழந்தைக்கும் நல்லது என்று. இதே முறைமைகள்தான் பதினைந்தாவது, இருபத்தோராவது நாள் முழுவாட்டும்போதும் நடக்கும்.
இனி பதினைந்தாவது நாளிலிருந்து ஒரு மாதம் வரை காலையும் மாலையும் காயம் கொடுக்க வேண்டும். அதற்காக சட்டிக் காயம் காய்ச்சி இறக்கும் வேலையில் இறங்கிவிடுவார்கள் மூமாவும் வாப்புமாவும். சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, வெந்தயம் இப்படி இருபத்தியோரு வகை மருந்துகள் சேர்த்த காயப் பொடி ஏற்கனவே இடித்து அரைத்து வைத்திருப்பார்கள். கருப்பட்டி, தேங்காய்ப்பால், முட்டை, காயப் பொடி, பூண்டு, பேரீத்தம்பழம், முந்திரி, பாதாம் விழுது எல்லாம் சேர்த்துக் காய்ச்சி, சின்னவெங்காயம் பொடியாக அரிந்து நெய்யில் பொரித்து, நெய்யை மட்டும் வடித்து காயத்தோடு கலந்து கிளறி முடிப்பார்கள். பிள்ளை பெற்றவள், கர்ப்பப்பையும் குறுக்கும் இழந்த பலத்தை மீண்டும் பெறுவதற்கு இந்த காயத்தை அவசியம் சாப்பிட்டாக வேண்டும். காயமும் எல்லோருக்கும் பகிரப்படுமாதலால் அவ்வளவு பூண்டு உரிப்பது, அத்தனை தேங்காய் துருவி அரைத்துப் பால் பிழிவது, கருப்பட்டி இளக்குவது, காய்ச்சுவது என வேலையும் சிரமமும் அதிகமிருக்கும். வேலை குறுக்கொடிந்துவிடும் பெண்களுக்கு.
இந்த ஒரு மாதமுமே புளியும் மிளகாய்க் காரமும் சேர்க்காத உணவுதான் தாய்க்கு. மிளகு, பூண்டு, மல்லி, சீரகம் சேர்த்த மொளவாணத்தில்தான் மீனோ முட்டையோ சமைப்பது. பிள்ளை பெற்றவளுக்குப் பெரும்பாலும் மீன்/ இறைச்சி /எலும்பு சூப் இப்படித்தான் தருவது வழக்கம். சாம்பார், புளிக்குழம்பு, ரசம், தயிர், மோர் இதெல்லாம் பிள்ளை பெற்றவளுக்குத் தரும் வழக்கமில்லை.
பொருளாதார வசதிக் குறைவு என்றாலும் தாய்க்கு மட்டும் 100 கிராம் கறி எடுத்தோ, அல்லது வெறும் எலும்பு மட்டும் வாங்கி சூப் வைத்தோ, சாளை மீன் போல விலை மலிவான மீனைக் கொஞ்சமாக வாங்கி ஆணம் வைத்தோ, ஒன்றுக்கும் வழியில்லை எனில், ஒரு முட்டையை உடைத்து ஊற்றி மொளவாணமாவது காய்ச்சியோ கொடுத்து விடுவார்கள். அதேபோல
இந்த உள்ளிப்பால், காயம் முதலான மருந்துகளும் வசதியைப் பொறுத்து தாய்க்கு மட்டுமே போதுமான அளவிலாவது உருண்டு பிரண்டு எழுந்து செய்து கொடுத்து விடும் குடும்பங்கள் உண்டு.
ஒரு மாதம் வரை இப்படிப் பக்குவங்களெல்லாம் முடிந்ததும், பிள்ளைப்பேற்றின் உதிரப் போக்கு நின்றதும், ‘நாற்பது முழுகுதல்’ என்ற ஒரு வழமை உண்டு. தலைக்கு எண்ணெய், சீயக்காய்/ஷேம்பூ தேய்த்து , உடல் முழுதும் மஞ்சள் தேய்த்து, வெந்நீரில் முழுக்காடிய பின் அன்றைக்கென புதுச் சேலை ஒன்று எடுத்து உடுத்திக் கொள்ளச் செய்வார்கள். வீட்டில் தொழுகைப்பாய் விரித்து, அதன் முன் ஒரு சிறு விளக்கை ஏற்றி வைத்திருப்பார்கள். புதுச் சேலையைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு நடந்துவந்து ஏற்றப்பட்டிருக்கும் விளக்கின் முன் கண்விழிக்க வேண்டும். பிறகு இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ள வேண்டும். இந்த விளக்கு ஏற்றுதல் அதில் கண்விழித்தல் என்ற பழக்கம் மட்டும் இப்போது அறவே இல்லாது போயிற்று.
அன்றைக்கு பால்ச்சோறு ஆக்கி அக்கம் பக்கம் கொடுத்து விடுவதுண்டு. பச்சரிசி, பாசிப்பருப்பு குழைய வேகவைத்து, வெல்லப்பாகும் தேங்காய்ப்பூத் துருவலும் சேர்த்துக் கிளறி, நெய்யில் முந்திரி திராட்சை வறுத்துக் கொட்டும் சர்க்கரைப் பொங்கலைத்தான் பால்ச்சோறு என்போம். இந்த நாளிலிருந்து இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவாள் பெண்.
இப்படித் தாய்க்கான பக்குவமும் கவனிப்பும் ஒரு புறத்தில் என்றால் குழந்தைக்கு நேரத்துக்குப் பசி அமர்த்த தாயிடம் எடுத்துக் கொடுப்பது, அதற்குத் தண்ணீர் ஊற்றுவது, அரை கழுவுவது, அணியாரத் துணி மாற்றுவது, உரைமருந்து உரசிப் புகட்டுவது, தூங்கப் போடுவது (இருப்பதிலேயே கடினமானது இதுதான்) இதெல்லாமும் இன்னொரு புறம் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கும், மூமா என்ற புதுப் பதவியை அடைந்து விட்ட மூத்த தாயினால்.
இந்தப் பக்குவங்களை எல்லாம் முற்ற முழுக்க இன்றும் கடைபிடிக்க வாய்ப்புள்ளவர்கள் செய்கிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் பெரும்பாலும் முயற்சிக்கிறார்கள். அதோடு சிசேரியன் நடந்து விடும்போது அதற்கெனத் தேவைப்படும் சில பக்குவங்களோடு இவற்றையும் முடிந்த அளவு விட்டுவிடாமல் சேர்த்துக் கொள்கிறார்கள்.
படைப்பாளர்
ஜமீலா
54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.
வாழ்த்துகள் 🤝💐🤝அழகான பதிவு. கடந்த காலத்தை கண்முன் தந்து விட்டது.