அஜீஸ் காக்காவைத் தெரியாதவர்கள் யாரும் காயல் மாநகரில் இருக்க முடியாது. பெயர் பெற்ற மனிதர். கேரளாவிலும் சிலோனிலும் ஊர்ப் பிள்ளைகள் செய்து கொண்டிருந்த கல் வியாபாரத்தை ஊரிலேயே பட்டறை போட்டு வெட்டி, பாலீஷ் பண்ணிக் கொடுத்தவர்.

கல் வியாபாரம் என்றால் வைரம் வைடூரியம் போன்ற கற்கள். இதனால் உள்ளூரிலும் வேலை வாய்ப்பு அதிகரித்தது.

பெரிய நெசவுத் தெருவில் அவர்கள் வீடுதான் அந்தக் காலத்திலே பெரியது. இரண்டடுக்கு மச்சு வீடு.  காலமாற்றத்தால் குறைந்து வரும் தனிக்குடித்தனங்கள் பெருகி வரும் காலக்கட்டத்திலும்  தன் குடும்பம் வாய்க்கா வரப்பு சண்டைகளில் பிரிந்துவிடாமல் பார்த்துக் கொண்டவர். ஒருவருக்கு இன்னொருவர் அனுசரணையுடன் நடந்து கொள்ள, தான் வாழ்ந்த வாழ்க்கையின் மூலம் வழிகாட்டியவர்.

ஊர் முழுவதும் இருந்த வழக்கமான மணமகன் பெண் வீட்டில் தஞ்சம் புகுவதை அவருடைய காலத்திலேயே தைரியமாக எதிர்த்தவர். அவரைப் பார்த்து மாற்றம் அடைந்தோர் ஏராளம்.

பெண் கல்வி குறித்து முதலில் பேசியவர். அதுவரை பெண்களைப் படிக்க அனுப்பும் வழக்கம் இல்லாத காலக்கட்டத்திலேயே தன் மகள்கள் இருவரையும் பள்ளியில் படிக்க வைத்து மாற்றத்துக்கு வித்திட்டவர். குடும்பத்துக்குப் பின்னர் தான் மற்றதெல்லாம் என்பார்.

அவரின் பிள்ளைகள் இன்றும் ஒருவருக்கு இன்னொருவர் விட்டுக் கொடுத்து, மற்றவருக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே ஓடிவந்து நிற்பது,தேவையான தூரத்தைத் தந்து, தேவையற்ற நெருக்கத்தை விலக்கி என்று செம்மையாக வாழ்வதன் காரணம் அவர் வகுத்த பாதையில் அவர்கள் நடந்து கொண்டிருப்பதால்தான் .

அவர் இறந்த போது ஊரே கூடி அவருக்கு மரியாதை செலுத்தி, கண்ணீர் விட்டது. அவரது மய்யத்து தொழுகை நாலு ஜமாத்தாக நடந்தது என்று திண்ணைக்குத் திண்ணை கூடிப் பேசுவார்கள். அவ்வளவு கூட்டமாம். ஒருவர் இறப்பில்தான் அவர் வாழ்ந்த வாழ்க்கைத் தெரியும் என்பது எவ்வளவு உண்மை.

அவர் மூத்த மகன் சாகுல் ஹமீது, அவருக்குப் பின் வியாபாரத்தைத் தன் பெரிய மகனின் உதவியோடு எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் மருமகள் மஃபாஹிரா பெண்களுக்கான பொட்டிக் நடத்துகிறார். அதற்குக் காயல்பட்டினம் அல்லாமல் சென்னை, கோவையில் என்று மூன்று இடங்களில் கிளைகள் உள்ளன. அதில் தனிச்சிறப்பு என்னவென்றால் அதில் பணிபுரியும் அனைவரும் ஆசிட் வீச்சு, வன்கொடுமைகளுக்கு ஆளாகி மீட்கப்பட்ட பெண்கள், குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்கள்.

அவர்களுக்குத் தனியாக மருத்துவ கவுன்சிலிங் அளித்து அவர்களை மீட்டு, வேலைக்குப் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பும் அளித்து, சொந்தக் காலில் நிற்க வைக்கும் புரட்சிப் பெண்மணி. அதற்காகவே அவரைப் போல் சமூக அக்கறை கொண்ட சில பெண்களோடு இணைந்து ‘பிங்க் வாரியர்ஸ்’ என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அஜீஸ் காக்காவின் மகள்  ஹமீதும்மாள் திருமணமாகி காயாமொழியில் தன் மூன்று மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டு கணவருடன் கூட்டுக்குடும்பத்தில் வசித்து வருகிறார். ஆண் வாரிசு இல்லை என்று அவருக்கு வருத்தம் இருக்கிறது என்பது அவர் குடும்பத்து ஆண் பிள்ளைகளை நடத்தும் விதத்திலே தெரியும்.

மூத்தவரின் இரண்டாம் மகனையோ அல்லது தங்கை மகன்களில் ஒருவனையோ தத்து கேட்கும் ஆசை அவருக்கு ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், சந்தர்ப்பச் சூழல் அதற்குச் சாதகமாக இல்லை.

அடுத்தவர் ஹமீது சிராஜுதீன் நெடுங்காலமாகப் பிள்ளை இல்லாததால் மூத்தவரின் இரண்டாம் மகன் அப்துல்லாவைத் தன் மகன் போல் பாவித்து வளர்த்து வந்தார். பின் அல்லாவின் பெரும் கருணையால் அவருக்கு இர்ஃபான், இஃப்ரா என்கிற இரட்டையர்கள் பிறந்தனர். அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொழில் செய்து வருகிறார்.

இளையவர் ஆபிதா ஃபாத்திமாவின் நோய்வாய்ப்பட்ட கணவர் கோவிட் முதலாம் அலை வந்தபோது காலமானார். ஆனால், அவர் நான்கு மகன்களும் அதற்கு முன்பே தலை எடுத்துவிட்டனர்.

ராமநாதபுரத்தில் தந்தை நடத்தி வந்த ஹோட்டல் தொழிலை விரிவுப்படுத்தி  பஸ் ஸ்டாண்டில் முழுநேர டீக்கடை, மூன்று இடங்களில் புதிய ஹோட்டல்கள் என்று ஆளுக்கொன்றாகக் கவனித்துக் கொள்வதோடு,  ஒருவருக்கு இன்னொருவர் எப்போதும் ஒத்தாசையாக இருந்து கொள்வார்கள். 

இளையவன் மட்டும் இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை. ஆனால் படித்தவன் என்பதால் கடையின் கணக்கு வழக்குகளுக்கு அவன் எல்லா மூத்தவர்களுக்கும் உதவியாக இருக்கிறான்.‌

பேரக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதிலும், பிள்ளைகளை வழிநடத்துவதிலும் அவர் காலம் கழிகிறது. அவரைப் போலவே அவர் பிள்ளைகளும் அமைதியான குணம் படைத்தவர்கள். அவர் மருமகள்கள் மூவரும் ஒருவருக்கு இன்னொருவர் அனுசரித்து அன்புடன் நடந்து கொள்கிறவர்கள்.

எல்லா நல்லது கெட்டதுகளிலும் அவர்கள் நால்வர் மட்டுமல்ல , அவர்கள் பிள்ளைகளும் ஒன்றுகூடி  அன்பு பாராட்டுகின்றனர்.

இன்றும் கூடியிருக்கின்றனர்.

வெளியே அடித்துப் பெய்த அடைமழையை விஞ்சும் சத்தம் வீட்டுக்குள் கேட்டுக் கொண்டிருந்தது. மழை மட்டும் இல்லை என்றால் வாசலில் இந்நேரம் கண்டிப்பாக ஊர் கூடியிருக்கும்.

“குத்துக்கல்லாட்டம் விட்டத்த வெறிச்சிகிணு கீறியே. உங்க வாப்பாகிட்ட மன்னிப்பு கேளுடி” என்று சீறினார் அவள் மாயிம்மா.

அமைதி.

அவர் வாப்பாவின் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு கைகளை அதன் நீண்ட மரக் கைப்பிடியில் வைத்து , வெடித்துப் பெய்து கொண்டிருந்த மழையைப் பார்த்தவாறு, முகத்தில் சலனமின்றி, இந்தக் களேபரமெல்லாம் வேறெங்கோ நடப்பது போல் அமைதியாக அமர்ந்திருந்தார் அவள் வாப்பா சாகுல் ஹமீது.

“ஓடி ஓடி உழச்சி இந்தக் குடும்பத்துக்காக ஓடாத் தேஞ்ச மனுசனுக்கு நீ காட்டுற விசுவாசம் இதுதானா?

உன் ரண்டு காக்காவகூடப் படிக்க அனுப்பாத மனுசன், நீ ஆசப்பட்ட ஒரே காரணத்துக்காகச் சொந்தபந்தம்லாம் வேண்டாம்னு தடுத்தும் கேளாம எல்லாரையும் எதுத்துகினு உன்னய பெரிய படிப்பு படிக்க வச்சி அழகு பாத்தவர இப்படித் தலகுனிய வைக்க எங்க இருந்துடி தைரியம் வந்துச்சு உனக்கு?”

‘இன்ஷா அல்லா, என் மவ பெரிய படிப்பெல்லாம் படிச்சு பெரிய ஆளாயி வருவா ஹமீதும்மா, அன்னைக்கு நீங்கெல்லாம் அவள பாத்து வாய்பிளந்து நிப்பீங்க. அவள சுலைமான் குடும்பமே பொண்ணு கேட்டு காத்தினுக்கீறாங்க. நான்தான் அவ படிப்புக்காக நிக்காஹ் தள்ளி போட்டுக்கீறேன். ‌அவளாவது நம்ப குடும்பத்துல படிக்கட்டும்மேனு உன் வருங்காலத்த நினச்சு கனவு கண்ட மனுசனுக்கு நீ காட்டுற ஈவு இதுதானா?”

மீண்டும் அமைதி.

அவளின் அண்ணன் மகள்கள் வீட்டின் நடுவில் இருந்த சுற்றுக்கட்டு முற்றத்தில் பெய்து கொண்டிருந்த மழை நீரில் காகிதக் கப்பலை மிதக்க விட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். 

அவள் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஒரு மழை நாளின் நினைவு அவளைக் கேட்காமலே எட்டிப் பார்த்தது. எத்தனை முறை தனக்குத் தானே சொல்லியிருப்பாள், அவள் ஆசை நிராசையாகத்தான் போகிறது என்று. அவள் கனவு பகல் கனவாகத்தான் போகிறது என்று. ஆனால், இந்த இதயம் அவள் பேச்சைக் கேட்காமல் அவனுக்காகத் துடித்தது.

தன்னை நம்பிப் படிக்க அனுப்பிய வாப்பாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்கிறோம் என்கிற எண்ணத்தை எப்படியோ மறக்க வைத்துவிட்டது இந்தப் பாழாய்ப் போன காதல். அதை இந்த மாயிம்மா இத்தனை தடவை சொல்லிக் காட்டத்தான் வேண்டுமா? ஏற்கெனவே அவள் இதயம் அவளைப் படுத்தும் பாடு போதாதா?

வாப்பாவுக்கு எதிரில் சற்றுத் தள்ளி நின்றிருந்த அவள் காக்கா ஏதோ சொல்ல வாயெடுக்கவும், அவள் மச்சி அவன் கைகளைப் பற்றி அமைதிப்படுத்துவதை மாயிம்மா பார்த்துவிட்டாள்.

“சம்சுங்குறதால அவன் பெண்சாதிக்குக் கட்டுப்பட்டு அமைதியாக்கீறான். இதுவே அப்துல்லாவோ இர்ஃபானோ இங்க இருந்திருந்தா இந்நேரம் நடக்குறதே வேற” என்று அவளின் மச்சியைப் போகிற போக்கில் ஜாடை போட்டுப் பேசினாள். தன் மாமியே தன்னை அதிர்ந்து இதுநாள் வரை ஒன்றும் சொல்லாத போது,  அவள் கணவனின் மாயிம்மா வந்து இங்கு அதிகாரம் பண்ணுவது மஃபாகிராவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

அவள் சுலைமான் தெருவைச் சேர்ந்தவள் என்பதற்காகவா, இல்லை பெரிய படிப்பு படித்துவிட்டு பெண் சுதந்திரம், புர்கா அணிவது எல்லாம் ஒருவிதத்தில் பெண் அடிமைத்தனம் என்று சொல்லி குரானில் விதிக்கப்பட்ட கட்டளைகளை மீறி அதை அணியாமல் தான்தோன்றித்தனமாக இருப்பதாலா?

சொந்தமாகத் தொழில் நடத்துவதாலா, அதற்காக அடிக்கடி வெளியூர் பயணிப்பதலா? இல்லை, ஆண்கள் கூடியிருக்கும் இடத்தில் சரிசமமாக நின்று பேசுவதாலா, இரண்டு பெண் குழந்தைகளுக்குப் பின் ஆண் வாரிசைப் பெற்றுத் தராமல் குடும்பத்தில் யாரையும் கேட்காமலே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டதாலா, எதனால் அவருக்கு அவளைக் கண்டாலே ஆகவில்லை என்று  இத்தனை வருடங்கள் ஆகியும் விளங்கவில்லை.

அதை நேரடியாகச் சொன்னால் அவள் பதிலுக்குப் பதில் பேசி விடுவாள் என்று அவருக்கும் தெரியும். அவர் அதை ஜாடைமாடையாகத்தான் குத்திக் காட்டுவார். அவள் செய்யும் வேலைகள் அனைத்திலும் குறை கண்டுபிடிப்பதோடு, அவ்வப்போது அமைதியான தன் கணவனை அவள் தன் கைப்பாவையாக ஆட்டுவிப்பதாக எல்லாரும் கூடும் இடங்களில்  ஜாடைமாடையாக பேசுவது அவளுக்குக் கோபத்தை உண்டு பண்ணும்.

“நான் ஏதோ ஓடி வந்தவ கணக்கா உங்க மாயிம்மா எனக்கு இத்தினி கரச்சல் குடுக்குறாளே, நான் நேர்வழியில ஊரு சனம் எல்லாம் கூடி நிக்காஹ் செஞ்சி வந்தவதான். அதுக்கு உண்டான மரியாதை குடுக்க சொல்லுங்க” என்று அவரை எதிர்த்துப் பேச எத்தனிக்கையில்…

“பெரியவங்கன்னா கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க ஹிரா. நம்ம அதெல்லாம் கண்டுக்காம வுட்ரணும்” என்று அவள் கணவன் சொல்லும் வார்த்தைகள் உண்மைதான் என்று அவன் சொல்லும் போது தோன்றும். எப்போதாவது வரும் அவரிடம் போய் ஏன் மல்லுக் கட்டிக்கொண்டு நிற்பானேன் என்று நினைத்து அவள் விலகிச் சென்றாலும் அவர் வேண்டுமென்றே சண்டை இழுப்பார்.

அவர் மீது அவள் கோபத்தை நேரடியாகக் காட்ட முடியாததால் அதைத் தன் பிள்ளைகள் மீது காட்டினாள்,

“ரிஹானா, அஃப்ரி போதும் மழைல விளாண்டது. உள்ள போய் பாத்திமா பாட்டி கிட்ட சாயா வாங்கிக் குடிங்க” என்று விரட்டினாள். அவள் மாமாவின் பெரிய தங்கையின் குணத்துக்கு நேர் எதிர் சின்னவர். அதிர்ந்து ஒரு வார்த்தைப் பேசாதவர்‌, மிகுந்த அன்புடன் எல்லாரிடமும் பழகும் குணம் கொண்டவர். ஆயிஷா பார்க்க மட்டுமல்ல குணத்திலும் அவரைப் போலத்தான் என்று பல முறை நினைத்திருக்கிறாள்.

அப்படி வீட்டுச் சத்தம் வெளியில் தெரியாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவள், ஒருநாள் அவளை நம்பி கூறிய விஷயம் முதலில் அவளுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதை இன்று வரை தன்னைக் கட்டியவனிடம்கூடச் சொல்லாமல் ரகசியமாகத் பாதுகாத்து வந்தாள். அதற்கு முக்கியக் காரணம்,  முன்கோபியான அவள் புருஷனின் தம்பிகள்தாம். நல்ல வேளையாக இந்த விஷயம் வெளியான நேரம் அவர்கள் ஊரில் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

அவள் புருஷனோ மாமாவோகூட என்றேனும் ஆஷாவைப் புரிந்துகொண்டு அவள் காதலை ஏற்றுக் கொள்ளச் சிறிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த முரடர்களுக்குத் தெரிந்தால் அந்த பையனையும் , ஆயிஷாவையும் கண்டம் துண்டமாக வெட்டிப் போடக் கூடத் தயங்காத ஈவு இரக்கமற்றவர்கள்.

மற்றவர்களைக் காட்டிலும் அருகில் வசிக்கும் ஒரே காரணத்தால் முன்பெல்லாம் அடிக்கடி தன் மகள்களோடு வந்து தங்கி இருந்துவிட்டு, தன் கஷ்டத்தைக் காரணம் காட்டி அடிக்கடி பணம் வாங்கிச் செல்லும் தன் மச்சியின் சுயநலத்தையும் பொறாமை குணத்தையும் குறித்து மரியத்துக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அயிஷா பிறந்த வீட்டில் உதிரப் போக்கில் பாடுபட்டு இனி தான் பிழைத்தால் மறுபிறவி என்று கிடந்த காலத்தில் எந்த ஓர் அருவருப்பும் காட்டாமல் மாதக்கணக்கில் தன்னை அருகிலிருந்து பார்த்து தேற்றியதோடு, பிள்ளைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்டார் என்கிற காரணத்தால் அந்த மச்சி மீது அவருக்கு ஒருவித மரியாதை கலந்த அன்பு உண்டு.

புருஷனின் பதின்வயதிலே அவர்கள் உம்மா இறந்து விட, அந்த ஸ்தானத்தில் இருந்து வீட்டை நிர்வாகம் செய்து வந்த தன் பெரிய தங்கச்சியின் சொல்லுக்குத் தன்னை கட்டியவர் மறுபேச்சு பேச மாட்டார் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

அந்த மச்சியின் சதிக்குத் தன் ஒரே மகளின் வாழ்வை பலி கொடுக்க மனமில்லாமல், தன் போக்கில் மகளை விடவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக எந்த முடிவுக்கும் வரமுடியாமல் ஓர் ஓரமாக நின்று விசும்பிக் கொண்டிருந்த அயிஷாவின் உம்மாவைக் காட்டி, “அந்த மனுசியோட கண்ணீருக்கும்கூட உன் மனசு இறங்கலயா? உன் மனசுல என்ன கல்ல வச்சா படச்சான் அந்த நாகூர் ஆண்டவன்?” என்று கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகாய்ப் பொரிந்து தள்ளினாள். அவள் எந்தப் பதிலும் அளிக்காமல் அமைதி காப்பது அவர் கோபத்தை மேலும் தூண்டியது.

இனியும் அவளிடம் பேசிப் பயனில்லை என்று தோன்றியது. இதற்கு எதற்கும் பதில் பேசாமல் அமர்ந்திருந்த காக்கா மீதும் கோபம் வந்தது. ஆனால் அதை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டார்.

தன்னை மட்டும் சற்று கஷ்ட ஜீவனம் பண்ணுகிறவனுக்கு கட்டிக் கொடுத்ததால் அதுவரை ராணியாக வளர்ந்தவர், தன் கணவருடன் சேர்ந்து அவர் நடத்திய செருப்புக் கடையில் வியாபாரம் செய்ய வேண்டிய சூழல் வந்தது அவர் மனதை ஒரு பெரிய முள்ளாக அறுத்துக் கிழித்தது.

அதில் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மூத்தவர் செய்த எல்லா உதவிகளும் நன்மைகளும் கடலில் போட்ட காயமாக அவர் மனதிலிருந்து காணாமல் போனது.

மேலும் ஆண் வாரிசு இல்லாததால் தன் கணவனும் அவன் குடும்பத்தினரும் அவரை இளம் வயதில் நடத்திய விதம் தந்த வலி என்று எல்லாம் சேர்த்து அவரை ஒரு மாதிரியான கடுமையான மனுஷியாக மாற்றியிருந்தது.

இதற்கெல்லாம் ஒருவிதத்தில் தன் காக்காவும் காரணம் என்று அவர் மனதில் வரித்திருந்ததன் காரணமாக அவர் மீது காழ்ப்பில் இருந்தது குடும்பத்தில் யாருக்கும் தெரியாது.

சிறுவயதிலே சவுதியில் சென்று தொழில் செய்து பெரிய பணக்காராகி இருந்த மூத்தவரின் தோஸ்து சுலைமான் காக்காவின் மகன் ரஃபிக்கு ஆயிஷாவைப் பெண் கேட்கிறார்கள் என்று அறிந்த போது அவள் மனம் சுனாமி வந்த கடலாகக் கொந்தளித்தது. அதைத் தடுக்க என்ன வழி என்று யோசித்தவளுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்ததாக ஆயிஷாவின் காதல் சங்கதி மகிழ்ச்சி அழித்தது.

இதுதான் சந்தர்ப்பம் என்று சென்னையில் கறிக்கடை வைத்திருக்கும் அவர் கணவனின் லாத்தா மகனுக்கு ஆயிஷாவைக் கட்டி வைக்க சதித்திட்டம் தீட்டினாள்.

ஏற்கெனவே கெட்ட சகவாசத்தில் குடி, சூது என்று வழிமாறிப் போய்க் கொண்டிருந்தவன், கல்யாணம் கட்டினால் நல்ல வழிக்கு வந்து விடுவான், ஆயிஷாவின் வாப்பாவும் எல்லா உதவியும் செய்து கொடுப்பார் என்று அவனின் உம்மாவை மூளைச் சலவை செய்து சென்னையிலிருந்து வர வரவழைத்து, கையோடு அழைத்துக் கொண்டுதான் வந்திருந்தார். தந்திரமாகத் தன் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தினார்.

“நம்ப பொண்ணு ஊர் மேஞ்சிக்கிறான்னு சுலைமான் காக்கா வூட்ல தெரிஞ்சா நமக்குத்தான் அசிங்கம். அதுக்குப் பேசாம நம்ம அஷ்ரஃப்புக்குக் காதும் காதும் வச்ச மாதிரி அயிஷாவை‌க் கட்டிக் குடுத்துட்டாதான் இன்னா? ஓடியாடி கைநிறைய சம்பாதிக்கிறான்,  ஆளும் நல்ல போல்ட்டாக்கிறான், இன்னா படிப்பு தான் ஏறல, படிச்சதுங்கெல்லாம் நம்ப மானத்த சந்தி சிரிக்க தான வச்சினுக்கீதுங்க” என்று அயிஷாவையும் மஃபாஹிராவையும் ஒரு நக்கல் பார்வை பார்த்தார்.

ஆனால் இன்று அவரை விடுவதாயில்லை, ஒருகை பார்த்துவிட வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தவளாக வாய் திறந்த மஃபாஹிராவுக்கு மட்டுமல்ல அங்கு இருந்த அத்தனை பேருக்கும் அயிஷா அளித்த பதில் அதிர்ச்சியில் வாயடைக்க வைத்தது.

மீண்டும் ஒரு நெடிய அமைதி . மழை மட்டுமே தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. 

சாய்வு நாற்காலியும் இனி தான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று சோர்ந்து அமர்ந்தது, ஒரு பேரமைதியில்…

(தொடரும்)

படைப்பாளர்:

பொ.அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.