தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும் பகுதி – 12
“இந்தப் பொறப்புத்தான் நல்லா ருசிச்சு சாப்பிடக் கிடைச்சது… அத நினைச்சுத் தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது….” இந்த பாட்டுல வருவது போல ஒரு சீன் இப்போ கற்பனை பண்ணிக்கலாம். ஏன்னா நாம இப்போ நிக்குறது தி கிரேட் துபாய் கிச்சன்ல. துபாய் வந்த புதிதில் நான் பயப்பட்ட மொதல் விசயம் ப்ளைட்டுக்குள்ள என்டர் ஆகுறது. ரெண்டாவது விசயம் என் வீட்டு கிச்சனுக்குள்ள என்டர் ஆகுறது.
என் சமயலறைத் துயரங்கள கொஞ்சம் கேளுங்க. ‘அண்டாக்கா கசம் அபூக்கா ஹுகும்’ன்னு அலிபாபா குகைக்குள்ள மந்திரம் சொல்லிட்டே போகணுமே, அது போல காலையில எழுந்ததுமே ‘பசிக்கும்ம்ம்ம்ம்ம்…கிச்சனுக்குள்ள போகணும்ம்ம்ம்ம்ம்… சமைக்கணும்ம்ம்ம்ம்ம்…’ன்னு எனக்குள்ள மந்திரம் சொல்லிகிட்டே இருப்பேன். சமைக்குற விசயம் என்னைப் பொறுத்தவரை செவ்வாய் கிரகத்துக்கு போயிட்டு வர்றது மாதிரி. விண்வெளிக்கு போறவங்களுக்கெல்லாம் மாத்திரை, சாக்லேட் மாதிரி உணவு தருவாங்களே, அதுபோல நமக்கெல்லாம் கிடைக்காதான்னு பல நாட்கள் யோசிச்சிருக்கேன்.
கடவுள்னு ஒருத்தர் இருந்திருந்து என் கண்ணு முன்னால வந்து நின்னா, ‘ஏன் சாமி மூணு வேளை சாப்பிடணும்னு மனுசன் தலையில கிறுக்குனீங்க’ன்னு கேட்பேன். எந்த டைரக்ஷன்ல போனாலும் எஸ்கேப் ஆகவே முடியாது, நாம சமைச்சு தான் ஆகணும்ன்னு உணர்ந்த பின்னாடி, ‘சமையல் என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா… இறக்குடா குக்கர’ன்னு குக் வித் கோமாளியா அவதாரம் எடுத்தேன். சூப்பர் மார்க்கெட் போய் கிச்சனுக்குத் தேவையான பாத்திரம், மளிகை, தட்டு முட்டு சாமான் எல்லாம் வாங்கி ஒரு வழியா கிச்சனை செட் பண்ணினேன். இந்த ஊர்ல எனக்குப் பெரிய தொல்லையா இருந்தது கேஸ் அடுப்பு. என்னோட அப்பார்ட்மெண்ட்ல ஏற்கனவே ஒரு பழைய அடுப்பு இருந்தது. அதுவே ஒரு மினி கிச்சன் மாதிரி கதவெல்லாம் வெச்சு இருந்துச்சு.
அந்த மாதிரி அடுப்பை என் வாழ்க்கையில ஃப்ர்ஸ்ட் டைம் பாக்குறேன். இந்த அடுப்பு பக்கத்துல நின்னு சமைக்கவா, இல்ல கதவ திறந்து உள்ள போய் சமைக்கவான்னு ஆச்சர்யமா பார்த்திருக்கேன். மேல நாலு பர்னர் கேஸ் அடுப்பு, கீழ ஓவன், அதுக்கும் கீழ குட்டி செல்ஃப்ன்னு பார்க்க அழகாத்தான் இருந்துச்சு. ஆனாலும் எனக்கு அதெல்லாம் ஒத்து வராதுன்னு அந்த குக்கிங் ரேஞ்ச (ஒரு வாரம் கழித்து அதோட பேரை கண்டு பிடித்தேன்) தூக்கி கடாசிட்டு நம்ம ஊரு மாடல் கேஸ் அடுப்பு வாங்கி பால் காய்ச்சி என் சமையலறைக்கு ஒரு திறப்புவிழா நடத்தினேன்.
மசாலா பொருட்களெல்லாம் நம்ம ஊர்ல இருந்து பண்டமாற்று முறையில் வாங்கிட்டு வந்து வெச்சுப்பேன். பண்டமாற்றுன்னா இங்க இருந்து சென்ட் பாட்டில், ஹேண்ட் பேக், மேக்கப் செட்டுன்னு மூட்டை கட்டிட்டு இந்தியாவுக்கு போவோம். திரும்ப வரும்போது சாம்பார்தூள், மிளகாய்த்தூள், இட்லிப் பொடின்னு மூட்டை கட்டிக்கிட்டு வந்திருவோம். ஆனாலும் கூட இங்கே கிடைக்கும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மாதிரியான மசாலாப் பொருட்களுக்கு தனி மவுசு உண்டு.
ஒரு முறை கல் உப்பை ஊரில் இருந்து எடுத்துட்டு வரும்போது கஸ்ட்டம்ஸ்ல நிப்பாட்டி வெச்சுட்டாங்க. ஆபீசர் என்னைப் பார்க்க, நான் அவரைப் பார்க்க… அயன் சூர்யா மாதிரி, ‘திஸ் ஈஸ் ஹவ் யு ட்ரீட் இண்டியன்ஸ்’ ன்னு திமிறி எழுந்த மனசை ‘அமைதி அமைதி’ ன்னு சொல்லி அடக்கிட்டு, ‘சார் திஸ் ஈஸ் ஜஸ்ட் சால்ட் சார். ஷல் ஐ ஓப்பன் சார்’ ன்னு பம்மிகிட்டு பதில் சொல்லிவிட்டு வந்திருக்கேன். அந்த சம்பவத்திற்குப் பிறகு ‘நான் உப்பை பண்டமாற்று செய்வதில்லை’ என்று என் குலதெய்வம் முன் சத்தியம் செய்துவிட்டேன்.
தமிழ்நாட்டுப் புளி கிடைக்காம நான் பட்ட துயரங்களெல்லாம் உங்களுக்கு சொன்னாப் புரியாது. இங்கு தமிழ் பொருட்கள் கிடைக்கும்ன்னு ‘அமீரகத்தில் ஒரு தமிழகம்’ என்ற பேர்ல ஒரு கடை என் வீட்டுக்குப் பக்கத்தில் வந்துச்சு. ‘அய்யய்யயோ ஆனந்தமே’ன்னு இப்போதெல்லாம் அடிக்கடி அங்கே போய் கம்மர்கட், சுக்குமிட்டாய், தேன்மிட்டாய், இலந்தவடை என்று வாங்கி வாங்கி முழுவதுமாக 90’s கிட்டாகவே மாறிவிட்டேன்.
அடுத்த முக்கியமான விசயம் காய்கறி வாங்க வண்டி கட்டிகிட்டு சூப்பர் மார்க்கெட்டுக்கு போறது. கருவேப்பில தீர்ந்து போனா ஓடிப்போய் வாங்குறதுக்கு பக்கத்து தெருமுக்குல அண்ணாச்சி கடையெல்லாம் கிடையாது. எப்போதுமே கவனமா இருந்து, எல்லா பொருளும் வாங்கி வெச்சுக்கணும்.
அப்படியும் மிஸ் ஆன சில நாட்களில் கருவேப்பிலை இல்லாமயே சமைப்போம்னு ஆரம்பிச்சது பின்னாளில் பருப்பு இல்லாத சாம்பார், தேங்காய் இல்லாத சாம்பார், காய் இல்லாத சாம்பார்ன்னு வளர்ந்து வளர்ந்து சாம்பார் இல்லாத சாம்பார் அளவுக்கு முன்னேறிடுச்சு.
வாங்க இப்போ சூப்பர் மார்க்கெட் போய் பொருட்கள் வாங்க சொல்லித்தாரேன். பால் மற்றும் பால் பொருட்கள்னு இங்கிலீஸ்ல போர்டு வெச்சிருப்பாங்க. உள்ள போனா பால், தயிர், மோர்,வெண்ணெய்,நெய்னு ஒவ்வொண்ணுக்கும் பத்து பிராண்டுக்கும் மேல வெச்சிருப்பாங்க. எந்த பிராண்ட் எடுக்குறதுன்னு தெரியாம திரு திருன்னு முழிச்சப்போ கடையில வேலை பார்க்கும் ஃபிலிப்பினோ ஹெல்பர் பொண்ணு பக்கத்துல வந்து, ‘யெஸ் மேம். மே ஐ ஹெல்ப் யூ’ன்னு கேட்டுச்சு.
பெரிய கண்ணாடியும், வெளுத்த தோலும், குட்டிக் கண்ணுமா கொஞ்சிக் கொஞ்சி பேசிச்சு. எனக்கு தோல் தான் கருப்பு, நான் இங்கிலீஸ் நல்லாவே பேசுவேன்னு, ‘மே ஐ ஹேவ் அ சீஸ்’ ன்னு நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஸ்டைலு காட்டினேன். அதுக்குப்போய் அந்தப் பொண்ணு ‘ஸ்ப்ரெடபிள் ஆர் நான் ஸ்ப்ரெடபிள் சீஸ், சால்ட்டி சீஸ், மொஸரல்லா சீஸ், ஃபேட்டா சீஸ், விச் ஒன் யூ வான்ட்‘ன்னு அடுக்கிட்டே போகுது. யம்மா! யம்மா! கொஞ்சம் வெயிட் பண்ணுமா. ‘ஐ வான்ட் சீஸ் ஒன்லி’ன்னு சிம்பிளா முடிச்சாலும் , விடாம ‘தானிஷ், துர்க்கிஸ், ஈஜிப்தியன் ஆர் அவைலபிள். விச் ஒன் மேம்’ ன்னு மறுபடியும் ஒரு லிஸ்ட்டு….. எனக்கு சீஸே வேணாம் ஆள விடுங்கடான்னு இங்கிலீஸ், விங்கிலீஸ் ஸ்ரீதேவி மாதிரி தெறிச்சு ஓடிருக்கேன்.
இங்குள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளின் காய்கறி செக்ஷனே ஒரு பெரிய கோயம்பேடு மார்க்கெட் மாதிரி இருக்கும். எகிப்து வெங்காயம், பாகிஸ்தான் உருளை, ஜோர்டான் தக்காளின்னு உலக மேப்ல இருக்குற நாடுகள் முழுசும் காய்கறியிலயே கண்டுபுடிக்கலாம். பேசிக்கலி கோயமுத்தூர்காரங்களுக்கு மீனெல்லாம் வகை பார்த்து வாங்கத் தெரியாது. மீன் வாங்கினோமா, கொழம்பு வெச்சோமான்னு போயிருவோம். ஆனா இங்க மீன் வாங்குறதுக்குள்ள நான் பட்டபாடு பெரும் பாடு.
ஒவ்வொரு முறை மீன் வாங்கலாம்ன்னு போகும்போதும், கூகிளாரிடம் கேட்டுவிட்டு ஆங்கில மொழிபெயர்ப்புடன் தான் போவேன். மச்சாவதாரத்திற்கு இங்கே ‘சுல்தான் இப்ரஹீம்’ என்ற பெயராம். இதைப் போன்ற பல டிஸ்கவரிகள் செஞ்சிருக்கேன்.
‘ஃப்ரோசன் உணவு சாப்பிட்டா ஆயுசு குறைஞ்சிரும்…ஆண்மை குறைஞ்சிரும்…கண்ணு தெரியாது…பக்கவாதம் வந்திரும்….’ இந்த மாதிரியான வாட்சப் மருத்துவர்களின் பார்வார்டு மெசேஜ்கள் வரும்போது பக்குன்னு இருக்கும். இங்க கிடைக்குற மாமிசம் எல்லாமே ஃப்ரோசன் தான். அத வாங்கிட்டு வந்து நான் ஒரு வாரம் ஃப்ரீசர்ல வெச்சு சமைப்பேனே.
ஆரம்பத்துல பயமா இருக்கும். இப்பொழுதெல்லாம் பழகிவிட்டது. சூடான் மட்டன் மேல எனக்கு ஒரு கண்ணு இருக்கு. ஆடு எல்லா நாட்டுலயுமே ஆடு தான. வாங்கி சமைச்சுப் பார்க்கணும். இப்படித்தான் ஒருமுறை யுரோப்பியன் காளான்னு ஒண்ணு வாங்கிட்டு வந்து சமைச்சு சாப்பிட்டேன். யாதும் ஊரே யாவரும் கேளிர்!
அப்படியே பழங்கள் செக்ஷனுக்குப் போனோம்னா எல்லா கலர்லயும் வகைவகையான பழங்கள எடுத்துக்கலாம். பக்கத்துல வர்றவங்க ட்ராலியில கிடக்குற பழங்களையெல்லாம் ஓரக்கண்ணாலயே பார்த்துட்டு அதயே நானும் காப்பியடிச்சு (தொட்டில் பழக்கம்) அள்ளிப் போட்டிருக்கேன். ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சுன்னு ‘அள்ளு.. அள்ளு.. அள்ளு.. அள்ளு.. தள்ளு தள்ளு வண்டிய தள்ளு’ன்னு அள்ளிப் போட்டு ஒரு மினி பழமுதிர்ச்சோலையையே வாங்குவேன்.
சில பழங்கள எப்படி சாப்பிடணும்னு கூடத் தெரியாது. அவகாடோன்னு ஒரு பழத்த வாங்கிட்டு வந்து அப்படியே கட் பண்ணி ஜூஸ் போட்டுக் குடிச்சு…. உவ்வ்வேவே…….. இப்படி ஏராளமா தாராளமா வளைகுடா மருமகளா இருந்த நான் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் நாட்டுப் பொண்ணா மாறி, இப்போவெல்லாம் கையில் லிஸ்ட்டு இல்லாம சூப்பர் மார்க்கெட் பக்கமே போறதில்லை.
முதல்முறை சூப்பர் மார்க்கெட் வந்தப்போ எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம் இருக்கு. சுத்தியும் பராக்குப் பார்த்துட்டே நகர்ந்துட்டு இருந்தப்போ குட்டி குட்டி பிளாஸ்ட்டிக் பாக்ஸஸ்ல காய்கறிகள் பேக் பண்ணி வெச்சிருந்தத பார்த்தேன். கேரட், வாழைத்தண்டுன்னு சில காய்கறிகள் கட் பண்ணி ரெடி டூ குக் ன்னு பேக் பண்ணி வெச்சிருப்பாங்க.
ஒவ்வொரு அயிட்டமா பார்த்துட்டு வந்த எனக்கு ஒரு பாக்ஸ்ல வெச்சிருந்தத ஒரு பொருளைப் பார்த்து பேரானந்தம் வந்திருச்சு. முதன்முதலா பெத்த குழந்தைய கையில துக்குற மாதிரி, கண்ணெல்லாம் கலங்கி எமோஷனலா அந்த பொருள கையில எடுத்தேன். அய்யோ! உலகமே என் கைக்குள்ள வந்துச்சு. அது வேற ஒண்ணும் இல்ல. தேங்காய் தான் ! தேங்காய ஒடைச்சு, துருவி அழகா அத பேக்கெட் பண்ணி வெச்சிருக்காங்க. அடச்சீ! தேங்காய்க்கா இவ்வளவு பில்டப்புன்னு யோசிக்கிறீங்களா. என் பக்கத்துல வந்து காதைக் காட்டுங்க. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன். எனக்கு தேங்காய் உடைக்கத் தெரியாது. எப்பவுமே நான் தேங்காய் உடைச்சதில்ல.
பலமுறை முயன்று தோற்றுவிட்டேன். தனியா சமைக்கணும்னு ஒரு நிலமை வந்தப்போ நான் பயப்பட்டதே ‘எப்படி நாம தேங்காய் உடைக்கப் போறோம்’ன்னு தான். அப்போ எனக்கு இந்த பிளாஸ்ட்டிக் பேக்கெட்ல இருந்த தேங்காய் துருவல் வரம் தானே! சட்டினி வேணுமா டக்குனு எடுத்தோமா, அரைச்சோமான்னு, பொறியலா கடைசியில அள்ளி பூ போல தூவினோமான்னு.. ச்ச… வெரி சிம்பிள்.. இதே போல தேங்காய் நம்ம ஊர்லயும் பேக் பண்ணி வந்திருச்சு. வாங்கி யூஸ் பண்ணலாம். இட் ஈஸ் அ டைம் சேவர்….. சுலபமா கிடைக்குறதில்லேன்னா மாவு பேக்கெட் பிஸினஸ் மாதிரி தேங்காய் துருவல் பிஸினஸ் கூட பண்ணலாம். சமையலை சுலபமாக்கும் ஐடியாக்களின் டிப்போ நானு!
இப்படியாக முருங்கைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், கேரட் பொரியல்ன்னு எனக்குத் தெரிஞ்ச அயிட்டங்களா மொதல்ல சமைக்க ஆரம்பிச்சேன். நானே சமைச்சு சாப்பிட ஆரம்பிச்ச பின்னாடி தான் ருசின்னா எப்படி இருக்கும்ன்னு புரிய ஆரம்பிச்சது. சிலபல சொதப்பல்களுக்குப் பின்னாடி, “ஓக்கே! சாப்பிடலாம்” என்ற அளவுக்கு முன்னேறிவிட்டேன். அவ்ளோதான் அதோட கிச்சன் சேப்டர் ஓவர். நாம இன்னும் பிரமாதமா சமைக்கணும், விதவிதமா சமைக்கணும்னு ஆரம்பத்துல ஒரு கியூரியாசிட்டி இருந்தாலும் நான் அதை வளர்த்துக்கல. ஒரு மணி நேரத்துக்கு மேல கிச்சன்ல நிக்குறது என்னமோ எரிமலை உச்சிமேல நிக்குற மாதிரி தோணிரும். சமையல் மேல வெறுப்பு கிடையாது. இப்பொழுதும் அருமையாக சமைப்பவர்களைப் பார்த்தால் அட.. சூப்பர்ன்னு சொல்லுவேன். அது அவரவர்களின் விருப்பம் சார்ந்தது. பட் இட் ஈஸ் நாட் மை கப் ஆஃப் டீ.
ருசியா சாப்பிடணும்னா இந்த ஊர்ல ஹோட்டல்களுக்கு பஞ்சமே இல்லை. சைனீஸ், இட்டாலியன்ன்னு பல வகையான உணவுகள் இப்பொழுதெல்லாம் எல்லா ஊரிலும் கிடைக்கிறது. வாரம் ஒரு முறை நூடுல்ஸ், பாஸ்தான்னு நானும் சிறிது மாறிப் போனேன். இருந்தாலும் வார விடுமுறைன்னா ஹோட்டல் செல்வது கட்டாய விதிகளில் ஒன்று. அரபு நாட்டுக்கு வந்துட்டதால அரபு உணவுகள் ஏதும் சாப்பிடப்போறது கிடையாது. நாம எங்க போனாலும் இட்லி கிடைக்குமான்னு தேடுற கூட்டமாச்சே.
ஒரு முறை ஊருக்கு தனியா ட்ராவல் பண்ண வேண்டி இருந்துச்சு. ஏர்போர்ட்ல இருக்குற ஹோட்டல்ல இட்லிய வாங்கிட்டு வரேன்…எதிர்ல வந்த ரெண்டு மலையாளி பசங்க ‘இதடா. ஞான் பரைஞ்சல்லோ. இது இட்டிலி’ன்னு என்னைப் பார்த்து கமெண்ட் அடிச்சு சிரிச்சானுங்க. ‘உனக்கு புட்டும் , கடலையும் கிடைக்கலயா’ன்னு கேக்க தோணுன மனது, அழகான ஆண்கள் என்பதால் அவர்களை மன்னித்து விட்டது. இப்போ ஏன் அது நியாபகம் வருதுன்னா, உணவு அவரவர் விருப்பம் சார்ந்தது. சின்ன வயசுல இருந்து சாப்பிட்டு பழகின உணவுல பெரிய அளவு மாற்றம் மனித குலத்திற்கு பெரிதும் சவாலான ஒண்ணுன்னு நான் நினைக்குறேன்.
இங்கு வந்து பல வருடங்கள் கடந்து விட்டாலும் கூட அரபுநாட்டு உணவு வகைகளை நான் அதிகம் சுவைத்ததில்லை. தெருவோர வடை போண்டா மாதிரி இங்கே அரேபியன் டம்ப்ளிங்ஸ் கிடைக்கும். மாவை உருண்டையாக்கி எண்ணெயில் போட்டு சுட்டு எடுத்து, பின்னர் அதன் மேல் ஸ்வீட் சிரப் ஊற்றிக் கொடுப்பார்கள். ரொட்டின்னா நமக்கு மைதா ரொட்டி, கோதுமை ரொட்டி என்று ரெண்டு வகை தான் தெரியும். ஆனால் இங்கே ரொட்டியே முன்னூறு வகையா அடுக்கி வெச்சிருப்பாங்க. குப்பூஸ்ன்னு ஒரு வகையான ரொட்டி இங்க பேமஸ். அதுக்கு தொட்டுக்க ஹூம்மூஸ்ன்னு கொண்டைக்கடலைய அரைச்சு பண்ணின சட்னி கிடைக்கும் பாருங்க. அமேஸிங் டேஸ்ட்.
வெள்ளை ரவையில பண்ணின பஸ்பூஸா ஒரு சுவையான இனிப்பு பதார்த்தம். ஒரு துண்டு எடுத்து வாயில போட்டா அதோட தித்திப்பு ஒரு நாள் முழுசும் மனசுல நிக்கும். அதே வெள்ளை ரவையை வெச்சு பண்ணுற கேசரிக்கு நோ சொல்லிட்டு பஸ்பூசாக்கு யெஸ் சொல்ற அளவுக்கு நான் தேச விரோதியா மாறிவிட்டேன். ஒவ்வொரு வகையான உணவு வகைகள் வாங்கும்போதும் அதன் வரலாறை கூகிளாண்டவரிடம் கேட்பேன். துருக்கியின் ஓட்டோமான் பேரரசில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பக்லாவா என்ற இனிப்பு வகை அடடா! என்று சொல்ல வைக்கும். பொடிச்சுப் போட்ட நட்ஸ் கூட தேன் சேர்த்து, மேலே மைதாவால் லேயரிங்க் செய்யப்பட்டு ஓவனில் சுடப்படும் பேக்கரி வகையான பக்லாவா என்னோட பெஸ்ட் சாய்ஸ். ரோமானியர்கள், எகிப்தியர்கள், அரேபியர்கள், துருக்கியர்கள் போன்றோரின் வரலாற்று சிறப்பான இனிப்புகள், மாமிச உணவுகள் அதிகம் கிடைக்கும்.
ஃபலாஃபெல், ஷவர்மா, பீஃப் கெபாப் , மட்டன் கெபாப் மாதிரியான அசைவ உணவுகள பார்த்தாலே ‘அண்ணே! ஒரு ப்ளேட் கொடுங்க’ன்னு ஆட்டோமெட்டிக்கா வாய் கேட்டுடும். கூடவே நட்ஸ், உலர் பழங்கள் ஹ்ம்ம் மறக்காம ஒரு ப்ளேட்ல பேரீச்சம்பழம்னு சாப்பிட்டா கொஞ்சம் எலைட் ஃபீல் ஆகிறும். இதெல்லாம் தாண்டி மான் பிரியாணி, முயல் பிரியாணி, ஒட்டக பிரியாணின்னு பிரியாணிகளின் தேசத்தில் மணக்கும் உணவு வயிறை நிரப்பும்.
பல இனக்குழுக்களை உள்ளே வெச்சருக்குற துபாய் மாதிரியான சிட்டியில எங்க திரும்பினாலும் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ற ரெஸ்டாரண்டுகள் குவிந்து கிடக்கும். பாகிஸ்தானி, காபூல், இந்தியன், சைனீஸ் என்று திரும்பும் இடமெல்லாம் ரெஸ்டாரண்டுகள் தான். சிம்ரன் ஆப்பக்கடை (இப்போது இல்லை) முதல், “The Rajinism” ரெஸ்டாரண்ட் வரை இங்கே விதவிதமான ரெஸ்ட்டாரண்டுகள் பலவிதமான நாடுகளின் அபாரமான மெனுக்களோடு நாவிற்கு சுவை கொடுக்கும்போது, வெங்காய சாம்பார் வைப்பதே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.
தொடரும்…
தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:
படைப்பாளர்:

சாந்தி சண்முகம்
கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.