தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும் பகுதி – 10

‘சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?’ இந்தப் பாட்டை எப்போ கேட்டாலும் ‘ ஹே வால்யூம கூட்டு… வால்யூம கூட்டு…’ என்று மனசு என்னை அறியாமல் ஊர்ப்பக்கமாக ஓடிவிடும். இந்தப் பாட்டு எந்த விஷயத்துக்குப் பொருந்துகிறதோ இல்லையோ பண்டிகை கொண்டாட்டத்துக்கு நூறு சதவீதம் பொருந்தும். பண்டிகை என்றால் நம் ஊருதான் கெத்து.

ஃப்ளாஷ்பேக் நம்பர் 1 : ஊர்ல இருக்கும்போது தீபாவளி சீசன் ஆரம்பிச்சதுமே துணி எடுக்குறேன் பேர்வழின்னு டவுன்ஹாலுக்குள்ள நுழைஞ்சு போத்தீஸ், சென்னை சில்க்ஸ்ன்னு முண்டியடிச்சு வியர்வைக் கூட்டத்துக்குள்ள சிக்கி சிதறி ஒரே ஒரு சுடிதார தூக்கிட்டு வருவேன். தீபாவளியன்னிக்கு காலேல ஊரே எந்திருச்சு டமால் டுமால்ன்னு பட்டாசு வெடிக்குற சத்தத்த கேட்டப்பறம் தான், நான் சாவகாசமா எழுந்து குளிச்சுட்டு, பேருக்கு நாலு பட்டாசு கொளுத்திப் போடுவேன். வீட்டுல வாங்கி வெச்சிருக்குற ஸ்வீட்டெல்லாம் தட்டு நிறைய அடுக்கி வெச்சுட்டு காலைல இருந்து சாயங்காலம் வரை டிவி முன்னாடியே குத்தவெச்சு உக்காந்து எஞ்சாய் பண்ணதெல்லாம், இங்க யாரும் இல்லாம தனியா நாலு சுவத்துக்குள்ள இருக்கும்போது கண்ணு முன்னால வந்து போகும். நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எங்க வீட்டுல பெருசா பண்டிகையெல்லாம் கொண்டாடுனது இல்லை. அப்பா சைக்கிள் கடை வெச்சிருந்ததால எங்க வீட்டுல நாங்க கொண்டாடியது ஆயுத பூசையும் தீபாவளியும் தான். ஃப்ளாஷ்பேக் ஓவர்.

இப்படியாக அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் எவ்வளவு சம்பந்தமோ அந்தளவுக்குச் சம்பந்தம் எனக்கும் பண்டிகைகளுக்கும். ஆனாலும் எனக்கு துபாய் வந்து உறவுகள் இல்லாம தனியா இருக்குற நிலைமை வந்ததும் நாமும் பண்டிகையெல்லாம் கொண்டாடினா என்னன்னு தோண ஆரம்பிச்சிருச்சு. சரி, நாமும் அப்பா மாதிரியே ஆயுத பூசையில இருந்து ஆரம்பிப்போம்னு ஆயுத பூசைக்கு காத்திருந்தேன். ஆயுத பூசை நெருங்கி வர வர, ‘அப்பா தான் சைக்கிள் கடை வெச்சிருந்தாங்க. பூசை போட்டாங்க. நாம எப்படிச் சம்பந்தமே இல்லாம ஆயுத பூசை வைக்குறது? ஸோ கல்விக் கண்ணான சரஸ்வதி அம்மாக்குப் பூசை வைக்கலாம்’ன்னு தீர்மானம் போட்டேன். படிக்குற காலத்துல புக்கெல்லாம் கொண்டு வந்து சாமி போட்டோ முன்னால வெப்போம். ஆனா, இப்போ சாமிகிட்ட வைக்கணும்ன்னா ‘பொன்னியின் செல்வன், Half GirlFriend’ தான இருக்கு. இதயெல்லாம் சாமி முன்னாடி வெச்சா சாமி சூலத்தை எடுத்து குத்துனாலும் குத்திரும்ன்னு சரஸ்வதி பூசைக்கும் ஒரு எண்டு கார்டு போட்டுட்டேன். இன்னும் கொஞ்ச நாள்ல தீபாவளி வரும்ல அதுல இருந்து ஆரம்பிக்கலாம்ன்னு முடிவு பண்ணேன். தீபாவளின்னா மொதல்ல புதுத்துணி எடுக்கணும். அதொண்ணும் பிரச்னை இல்ல, ஊர்ல இருந்து வரும்போதே எப்பவுமே பக்காவா ப்ளான் பண்ணி தீபாவளி, பொங்கல், ஆடி நோம்பி, பிறந்தநாளுன்னு எல்லாப் பண்டிகைக்கும் லிஸ்ட்டு போட்டு ட்ரெஸ் வாங்கிட்டு வந்திடுவேன். அடுத்தது விளக்குகளும் பூவும். அதானே பூ இல்லாம பண்டிகையா? துபாய்ல இருந்துட்டு பெருமாள் பூக்கடையத் தெரியலேன்னா நம்மள தமிழச்சி இல்லேன்னு சொல்லிருவாங்க. பெருமாள் பூக்கடை இங்க ஃபேமசோ ஃபேமஸ். அங்க போய் தீபத் திருநாளாம் தீபாவளிக்கேத்த மாதிரி பூ, விளக்கு எல்லாம் வாங்கிட்டு வந்திடலாம். நம்மூர்ல பண்டிகை காலம்ன்னா பொம்பிளைங்களுக்கு முக்கியமான விஷயம் சாணி பக்கெட்ட தூக்கிட்டு வீதி வீதியா போய் ராமராஜன் மாதிரி ‘செண்பகே செண்பகமே’ன்னு மாடுககிட்ட மணிக்கணக்கா பாட்டுப்பாடி, அது போடுற சாணிய அள்ளிட்டு வந்து வாசல் தெளிக்கணும். ஆமா எனக்கொரு டவுட்டு… அதெப்படி மாடுக எல்லாம் பண்டிகை காலத்துல மட்டும் அவ்ளோ சாணி போடுது? சரி, அந்தக் கவலையெல்லாம் எனக்கு இங்க இல்லை. இங்க மாடும் கிடையாது, சாணியும் கிடையாது. சாணி போட்டு வாசல் தெளிக்கும் பொன்னான வாய்ப்புக்கெல்லாம் இங்கே தேவை இல்லாததால சானிடைசர ஊத்தி அடச்சை… டெட்டால ஊத்தி வீடு தொடச்சு சுத்தப்படுத்தினா மட்டும் போதும். தீபாவளி சீசன் ஆரம்பிச்சதும் இந்தியர்கள் அதிகம் வசிக்குற பகுதிகளான பர்துபார், டெய்ரா துபாய் முழுசும் வர்ண விளக்குகளால் ஜொலிக்கும் வீடுகளைப் பார்த்தாலே இந்தியாவுக்குள்ளயே வந்திட்ட மாதிரி ஒரு ஃபீலிங் வந்திரும்.

தீபாவளின்னா விடிய விடிய கண்ணு முழிச்சு லட்டு புடிக்கணும்ங்கற ஆத்தா காலத்து பழக்கமெல்லாம் எனக்கு இருந்ததில்லை. ஊர் முழுக்க ஸ்வீட் கடைகள் நமக்காகத்தான திறந்து வெச்சிருக்காங்க. அவங்களுக்கு நாம தான ஆதரவு கொடுக்கணும். என்ன நான் சொல்றது? தீபாவளி சமயத்துல நிறைய ஸ்வீட் கடைகள் அழகழகான ஸ்வீட் பாக்ஸஸ்ல லட்டு, ஜிலேபி, மக்கன் பேடா, காஜூ கட்லின்னு நம்மூரு ஸ்பெஷல் அயிட்டங்கள வெச்சிருப்பாங்க. ஸோ கடையில போய் எப்பவும் வாங்குற ஸ்வீட் வாங்கிட்டு வந்து அதுக்கு ‘தீபாவளி ஸ்வீட்னு பேர் வெச்சு பக்கத்து வீட்டுக்கெல்லாம் சப்ளை பண்ணிருவேன். எப்பவும் சமைக்குற சாப்பாட்டோட சேர்த்து கூடவே ஒரு அப்பளமும் சக்கரைய அள்ளி பாலுக்குள்ள போட்டு பாயசம்ன்னு பேர் வெச்சி அதையும் பண்ணிட்டா ஜோரான தீபாவளி விருந்து ரெடியாகிரும். இங்க சாப்பாட்டுக்கு ஆகுற செலவவிட அதைப் பரிமாறுறதுக்கு வாங்குற இலையோட விலை ரொம்ப காஸ்ட்லி. ஆனாலும் வருசத்துக்கு ஒரு முறை தானேன்னு ரெண்டே இலையை ஐம்பது ரூபா கொடுத்து வாங்கி வெச்சிருப்பேன். தீபாவளிக்குக்கூட நாம ஆக்குற சோறே தான் சாப்பிடணுமா? முடியாதுடா சாமின்னு நினைச்சா நிறைய இந்தியன் ரெஸ்டாரன்ட்ஸ் தீபாவளி ஸ்பெஷல் சாப்பாடுகள் நமக்காகச் சமைச்சு தருவாங்க. வாழை இலையோட அவங்க தர்ற ஒரு கல்யாண சமையல் சாப்பாட்ட ஆர்டர் பண்ணுங்க, ஆனந்தமா இருங்க. இப்படியாக விருந்து சாப்பாடு சாப்பிட்டுட்டு சன் டி.வி ப்ரோக்ராம பார்த்து தீபாவளிய வீட்டுக்குள்ளயே முடிச்சு… ‘ஏய், நிறுத்து நிறுத்து… என்ன தீபாவளின்னுட்டு பட்டாசு எங்கேம்மா’ன்னு தான கேக்குறீங்க. இங்க பட்டாசு விற்பனைக்கும் பட்டாசு வெடிக்கவும் தடைச்சட்டம் இருக்குது. இப்படித் தடை இருந்தா நமக்கு அதை மீறணும்ன்னு ஒரு ஆசை வந்திரும்ல. யெஸ்… பேசிக்கலி இட் ஈஸ் அ ஹியூமன் மென்ட்டாலிட்டி யு நோ!

சில தமிழ்க்கடைகள்ல கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம் மாதிரி வெளிய சத்தமே கேக்காத பட்டாசுகள் கிடைக்கும். டான் பில்லா அஜீத் மாதிரி அதை யாருக்கும் தெரியாம சீக்ரெட் வாட்சப் மெசேஜ் அனுப்பி வாங்கிட்டு வந்து வீட்டுக்குள்ளயே யாருக்கும் தெரியாம வெடிச்சுக்கணும். ஆயிரம் தான் இருந்தாலும் பட்டாசில்லாத தீபாவளியான்னு மனசு கலங்க வேண்டிய அவசியமில்லை. ‘உங்களைத்தான வெடிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்கோம். ‘நாங்க இருக்கோம்’ ன்னு கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரம் மாதிரி துபாய் அரசாங்கமே பல இடங்கள்ல வாணவேடிக்கை நடத்துவாங்க. அங்க போய் விடிய விடிய வேடிக்கை பார்த்துக்கலாம். இதுல என்ன பியூட்டின்னா நான் ஊர்ல இருக்கும்போதே மாடில ஏறி நின்னு எல்லாரும் உடுற பட்டாசைத்தான் வேடிக்கை பார்த்திருக்கேன். பக்கத்து வீட்டுப் பையன் அவன் வீட்டு மாடில நின்னு ஐயாயிரம் ரூவாய்க்கு வாங்கின ஒத்த பட்டாசை பாட்டில்ல வெச்சு சொய்ங்க்ன்னு விடுவான். அது மேல போய் டமால்ன்னு வெடிச்சு அழகழகா பூ போல விரியுது. பார்க்க அவ்ளோ அழகு. நான் பார்க்குறதயே தான் அவனும் பார்க்குறான். பாவம் அவனுக்கு ஐயாயிரம் ரூவா செலவு. எனக்கு ஐயாயிரம் ரூவா மிச்சம். அம்புட்டுதேன்.

ஃப்ளாஷ்பேக் நம்பர் 2 : சின்ன வயசுல நான் இருந்த கிராமத்துல கிறிஸ்துமஸ் பண்டிகையும் பொங்கல் பண்டிகையும் ஒண்ணா ஊர் கூடித்தான் செய்வாங்க. மார்கழி மாசம்ன்னா விநாயகர் மட்டும் வரமாட்டார், கூடவே ஜீசஸும் பொறந்து வருவார். தம்மாத்தூண்டு சர்ச்சுக்கு நாலு நாளா பேப்பர் கட்டிங் பண்ணி டெக்கரேஷன் செய்வாங்க. அத வேடிக்கை பார்க்கவே ராத்திரி முழுக்க சர்ச்சுல கிடப்போம். கிறிஸ்துமஸ் இரவுக்குக் கிளம்பும் போது நல்லா வயிறு முட்ட சாப்பிட்டுட்டு, ஸ்வெட்டர், மப்ளர் எல்லாம் போட்டுட்டு சர்ச்சுக்கு ஓடிருவேன். இரவு முழுசும் ‘பெத்தலையில் பிறந்தவரை போற்றித் துதியும் மனமே’ ன்னு பாடத் தொடங்கி, கரெக்ட்டா மணி பன்னெண்டு அடிக்கும்போது முழுத் தூக்கத்துக்குப் போயிருவேன். எல்லாரும் பாடுற ஜெபப் பாடல் சத்ததுல கண்ணை முழிச்சு தத்தித் தடுமாறி வீடு வந்திருக்கேன். கிறிஸ்து பிறக்கும்போது தூங்கிட்டோமே இந்த வருசம் நல்லா படிப்போமான்னு பயந்து நடுங்கின நாட்களெல்லாம் நினைச்சா சிரிப்பா வருது. மனசுல அதிகம் துக்கமோ சந்தோசமோ இருந்தா புலியகுளம் அந்தோணியார் சர்ச்சுக்குப் போறது என் வழக்கம். சர்ச்சுக்குப் போற வழி குறுகலான சந்துகளா இருக்கும். அதில் பெட்டி பெட்டியாய் வீடுகள். அங்கு இருக்கும் அனைத்து வீட்டு வாசல்லயுமே கிறிஸ்துமஸ் ஆரம்பிக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடில இருந்தே சின்னதா ஸ்டார் கட்டி, கூடவே நேட்டிவிட்டி சீன்னு சொல்லுற கிறிஸ்து பிறப்பைக் குறிக்கும் குடில் வைத்து இருப்பாங்க. ஒவ்வொரு குடிலோட ஸ்டைலும் ஒவ்வொரு விதமா இருக்கும். ஒருத்தர் வீட்டுல பெரிய பறவைக் கூண்டுக்குள்ள குடில் வெச்சிருந்தது இன்னும் என் கண்ணு முன்னாடி நிக்குது. எனக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அது மாதிரி குடில் கட்டி வைக்கணும்ன்னு ரொம்ப நாள் ஆசை. ஆனா, அப்பாவுக்கு அதெல்லாம் புடிக்காது. மத சம்பந்தமான எந்த அடையாளமுமே வீட்டில வெச்சிருக்க அவர் விட மாட்டார். நிற்க! ஃப்ளாஷ்பேக் ஓவர் ஓவர்.

துபாய் வந்ததும் நான் தனிக்காட்டு ராணி ஆகிவிட்டேனே. இனிமேல் என்னை யார் கேள்வி கேக்கப் போறாங்க. அதுனால என்னோட வீட்டுல ஜீஸஸ் பிறப்பை வரவேற்க குடில் தயாரிக்கலாம்ன்னு முடிவு பண்ணேன். கிராஃப்ட்ஸ் செய்யுறதுல கொஞ்சம் இன்ட்ரஸ்ட் இருந்ததால, அமேசான் டெலிவரில வந்த அட்டைப் பெட்டிய வெட்டி ஒட்டி குடிலா மாத்தினேன். கூடவே மாட்டுக் கொட்டகை அமைக்கத் தேவையான பொருளெல்லாம் ஃபைவ் திர்ஹாம் ஷாப்ல போய் வாங்கி வந்து இடுப்பொடிய அமோகமா டெக்கரேஷன் பண்ணியாச்சு. கூடவே ஒரு கிறிஸ்துமஸ் மரம், டெக்கரேஷன் லைட் எல்லாம் வாங்கியாச்சு. சூப்பரா குடில் அமைச்சாச்சுன்னு துள்ளிக் குதிக்கப் போன தருணம்தான் எனக்கு ஒரு திடுக்கிடும் உண்மை தெரிய வந்தது. குடிலுக்கு சென்டர்ல வைக்குற குழந்தை ஏசு பொம்மை வாங்கலையேன்னு. ‘கடைசில மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டனே’ன்னு குழந்தை ஏசுவைத் தேடி கடை கடையா ஏறி இறங்கினேன். தூண்லயும் துரும்புலயும் இருக்குறவர் எங்க தேடியுமே கிடைக்கல. ஆட்டுக்குட்டி பொம்மை கிடைக்கலைன்னு ஒரு ஒட்டகத்தை வெச்சு அட்ஜஸ்ட் பண்ணேன். ஆனா, ஜீசஸுக்கு வேற யாரைக் கொண்டு அட்ஜஸ்ட் பண்ண முடியும்ன்னு மனசு ரொம்ப ஃபீல் ஆகிருச்சு. குடிலைக் கலைச்சிடலாம்ன்னு முடிவு பண்ணினப்போ தான் இன்னும் ஒரே ஒரு கடை தான் பாக்கி இருக்கு, அங்கேயும் போய்ப் பார்த்திருவோம்ன்னு மனசுக்குள் ஒரு பட்சி சொல்லுச்சு. ‘தெருவின் கடைசி வீட்டில் தான் உனக்கான கதவு திறக்கும்’ன்னு யாரோ ஒரு மகான் (!) சொன்னத மனசுல நினைச்சுட்டு ஓட்டமா கடைக்கு ஓடினேன். ரெண்டு மாடி ஏறி இறங்கி கடை முழுக்க அலசியும் அந்தக் கதவு திறக்கலைன்னு மனம் நொந்து திரும்பும்போது, கீழ் தளத்தில் ஒரே கூட்டமா இருந்ததைப் பார்த்து நின்னேன். பழக்கதோஷத்துல கூட்டத்துக்குள்ள புகுந்து எட்டிப் பார்த்தா ஏதோ ஆஃபர் போட்டிருந்தாங்க. நமக்கு எதுவும் செட்டாகலேன்னு திரும்பினப்போ தான் அந்த அரிய பொருள் என் கண்ணுக்குத் தென்பட்டது. ஜீசஸ், அவர் அம்மா மேரி, அப்பா ஜோஸப்கூட சேர்ந்து மாட்டுத் தொழுவத்துல ஜாலியா படுத்திருக்குற அற்புத சொரூபம் ஒரு அட்டைப் பெட்டி முழுசும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் ‘கோடான கோடி நன்றி யேசப்பா’ன்னு மனசுக்குள் சொல்லிவிட்டு அவரைக் கையில தூக்கிட்டு பில்லிங்க் செக்ஷனுக்கு ஓடினேன். என் துபாய் வாழ்க்கையிலேயே விலை என்னன்னு பார்க்காம நான் வாங்கின முதல் பொருள் இதுதான். அப்புறமென்ன குழந்தை ஏசுவோட என் குடில் வர்ண விளக்குகளால் ஜொலித்தது. கிறிஸ்துமஸ், நியூ இயர்ன்னு ரெண்டு பண்டிகை முடியும் வரைக்கும் குடில்கூடச் சேர்ந்து தினமும் ஃபோட்டோஷூட் தான். கிறிஸ்துமஸ் அன்று பக்கத்து வீட்டுக் குழந்தைகளையெல்லாம் அழைத்து, கேக் பரிமாறி, கிறிஸ்துமஸை என் விருப்பம் போல் கொண்டாடியது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். இருந்தாலும்… ராத்திரி முழுக்க முழிச்சிருந்து கிறிஸ்து பிறப்பை ஊர் சர்ச்சில் தூங்கி வழிந்துகொண்டே கொண்டாடும் சுகம் இதில் இல்லை.

பண்டிகைன்னா மதம் மட்டுமில்லை, நாங்க ஸ்டேட்டே மாறுவோம். ஏன்னா துபாயோட டிசைன் அப்படி. வீட்டுக்குத் தண்ணி கேன் போடுறவர்ல ஆரம்பிச்சு ஆபீஸ் மானேஜர் வரைக்கும் எல்லாம் மலையாள சேட்டன்கள் தான். அப்படியிருக்க கேரளாவோட ஸ்பெஷல் பண்டிகையான ஓணம் கொண்டாடாம விட்டுடுவோமா என்ன? பொண்ணுங்க தான் எப்பவுமே இந்திய ஒருமைப்பாட்டை கரெக்ட்டா கடைபிடிக்குறவங்க. எப்படின்னு கேக்குறீங்களா? எங்ககிட்ட பஞ்சாப் பாட்டியாலா பேண்ட் இருக்கு, மைசூர் சில்க் சேலை இருக்கு, கேரளாவோட முண்டு சேலை இருக்கு, அவ்வளவு ஏன் ஆந்திராவோட உப்படாவையும் தெரிஞ்சு வெச்சு கட்டுறோம். அதுனால ஓணம் ஒண்ணும் புதிதில்லை எங்களுக்கு. அத்தப்பூக் கோலமிட ஆசையிருந்தாலும் இந்த ஊர்ல பூ வாங்குற காசிருந்தா கேரளாவுக்கே போய் ஓணம் கொண்டாடிடலாம்னு நினைப்பு வந்ததும், கேரளா முண்டு சேலை எடுத்துக் கட்டுனோமா, மலையாளத் தோழிகளுக்கு ‘ஓண ஆஷம்ஷகள்’ன்னு ஒரு வாட்சப் குறுஞ்செய்தி அனுப்பினோமான்னு அமைதியா கடந்திடணும். ஓணம் வர்றதுக்கு ஒரு வாரம் முன்னால இருந்தே ஓட்டல் விளம்பரங்கள் வீடு தேடி வரும். பப்படம், உப்பேரி, இஞ்சி கறி, மாங்கா கறி, நாரங்கா கறி, பச்சடி, எல்லிஷேரி, அவியலு, சோறு, பருப்பு கறி, சாம்பாரு, புளிச்சேரி, கிச்சடி, மோரு, கூட்டுக்கறி, பாலாடப்பிரதமன் , பழப்பிரதமன்… இன்னும் பல. என்ன நாக்குல எச்சை ஊறுதா? இப்படியாக இருபத்தைந்து வகையான அயிட்டங்களோட ஓண சதயா சாப்பாட்டை மகாபலிச் சக்ரவர்த்தி புண்ணியத்தில் ஆர்டர் பண்ணி, சாப்பிட்டு ஓணத்தைக் கடந்திருவேன். பண்டிகைன்னா விதவிதமா சாப்பிடணும்ன்னு கண்டுபிடிச்ச மனித இனத்துக்கு ஒரு ஜே!

ஃப்ளாஷ்பேக் நம்பர் 3 : எங்க கிராமத்துல தைப்பொங்கல் அன்னிக்கு ஊரே ஒண்ணுகூடி வெட்டவெளியில வெய்யில்லயும் மழையிலயும் பனியிலயும் காய்ந்து உக்காந்து இருக்குற விநாயகர் கோயில்ல (இப்போ பெரிய கோவிலா இருக்கு) ஊர்ப்பொங்கல் வைப்போம். சித்தப்பா, மாமா என்று யாராவது வாங்கிக் கொடுக்கும் புதுத்துணியைப் போட்டுக் கொண்டு (அதுவும் தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்தது), எதிர்வீட்டுக் கோலத்தைவிட ஒரு இன்ச்சாவது பெரிசா ஒரு கோலம் போட்டு விட்டு, விநாயகர் கோயிலுக்கு ஓடி விடுவேன். சூரியனுக்குப் பொங்கல் வைத்து படைத்துவிட்டு, குட்டீஸ் எல்லாருக்கும் தனியா இலையில் வைத்து பொங்கல் தருவாங்க. அதுக்காகவே காத்திருந்த மாதிரி கை பொருக்க முடியாத சூடான பொங்கலை வாங்கிட்டு சன் டி.வியில் நடக்கும் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்க நண்டு சிண்டு எல்லாருமா சேர்ந்து பக்கத்து வீடுகளுக்கு ஓட்டமா ஓடுவோம். கோயில்ல இருந்து கொண்டு வந்த பொங்கல், சுண்டல் தான் அன்னிக்கு முழுசும் எங்களுக்குச் சாப்பாடு. ‘கரும்பு, பொரி கடலை வேணுமா’ என்று பக்கத்து வீட்டு அக்கா பார்மாலிட்டிக்குக் கேட்டால்கூட யோசிக்காம ‘கொடுங்க அக்கா’ என்று எல்லா ஸ்நாக்ஸையும் சாப்பிட்டு விட்டு அவங்களுக்கு முடிந்த அளவு தொல்லை கொடுத்திருக்கோம். ஃப்ளாஷ்பேக் ஓவர் ஓவர் ஓவர்.

எவ்வளவு அழகான நாட்களைக் கடந்திருக்கேன்னு படித்து முடித்து வேலைக்காக நகரத்திற்குள் நுழைந்த பிறகு உணர்ந்திருக்கேன். நகரம் விட்டு இப்போது வேறு தேசமே வந்துவிட்டேன். திரும்பின பக்கமெல்லாம் வீடுகளை விட மசூதிகள் அதிகமா இருக்குற நாட்டுக்கு வந்துட்டு பால் காவடி, பன்னீர்க் காவடின்னு ஆசைப்பட்டா, வடிவேலு சொல்லுற மாதிரி ‘சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு’. ஆடி மாசம் கூழ் ஊத்துறது, பங்குனி மாசம் பாத யாத்திரை போறதுன்னு நான் எதுவுமே பண்ணாட்டியும்கூட ஊரே சேர்ந்து அமர்க்களப்படும். அந்த நாட்களை ரசித்ததெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகும். அதுவும் மாரியம்மன் பண்டிகையின் போது… சரி விடுங்க, துபாய் கதை பேசலாம் வாங்க. பொங்கல்ன்னா கோலம் தானே ஸ்பெஷல். ‘வாசலே இல்ல…. இதுல கோலம் வேறயா’ன்னு ஒரு கோலமாவு கோகிலாவோட அசரீரி கேட்டதைப் பொருட்படுத்தாம கோலம் போட்டே தீரணும்ன்னு முடிவு பண்ணேன். எனக்குக் கோலமே போட வராதுன்னாலும் என் பக்கத்து வீட்டுக்கோலத்தைவிடப் பெருசா ஒண்ணு போட்டாத்தான் எனக்கு பொங்கலே பொங்கும். இப்படி இருந்த எனக்கு அபார்ட்மெண்டில் எங்கே பெரிய கோலம் போடுவதுன்னு ஒரே துக்கமா வந்துச்சு. கோலம் பெருசா போடுறது இருக்கட்டும், மொதல்ல கோலப்பொடி எங்க கிடைக்கும்ன்னு அலசணுமேன்னு என் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தேன். சில நல்ல நண்பர்களின் உதவியோடு சார்ஜாவில் ‘பொங்கலுக்குத் தேவையான அனைத்தும் இங்கு விற்க்கப்படும்’ன்னு போர்டு மட்டும் மாட்டப்படாத ஒரு கடையைக் கண்டுபிடித்து பொங்கல் பாத்திரம், விளக்கு, மஞ்சள், கரும்பு என்று எல்லாத்தையும் ஒரு வாரத்துக்கு முன்னாடியே வாங்கி வந்துட்டேன் (மஞ்சளையும் கரும்பையும் ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்திவிட்டேன். கவலை வேண்டாம்!) . ஒரு சின்னக் கோலப்பொடி பொட்டலம் நூறு ரூவாய். இப்படி எதுக்கெடுத்தாலும் ஷாக் ஆகாம கேக்குற விலையைக் கொடுத்து கலர் கலரா கோலப்பொடி வாங்கிட்டு வந்துட்டேன். நம்மூர் பெண்களெல்லாம் ஊரிலிருந்து வரும்போதே கோலப்பொடி வாங்கிக் கொண்டுவருகிறார்கள் என்ற தகவல் பின்னாளில் தெரிந்தது. நம்மூர் பெண்கள் கில்லாடிகள்.

பொங்கலன்று வீட்டு வாசல்ல சின்னதா ஒரு கோலமும் கோலப்பொடி நிறைய மிச்சம் இருந்ததால வீட்டுக்குள்ள பெருசாவும் கோலம் போட்டபின்னாடி தான் என் மனசே நிறைஞ்சது. அபார்ட்மெண்ட் வாசல்ல கோலம் போட்டுட்டு இருக்கும்போது பக்கத்து வீட்டு (நாட்டு) சிரியா பொண்ணு வந்து பார்த்துட்டு ‘வாட் ஈஸ் திஸ்’ன்னு கேட்டுச்சு. ‘திஸ் ஈஸ் அவர் ட்ரெடிஷனல் ஃபெஸ்டிவல்’ன்னு காலர தூக்கி விட்டுட்டேன். கோலத்தையே ஆச்சரியமா பார்த்துச்சே, ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டெல்லாம் பார்த்திருந்தா என்ன பண்ணிருக்கும்?

ஊர் கூடிப் பொங்கல் வைக்க முடியாவிட்டாலும் நண்பர்களுடன் சேர்ந்து பண்டிகை கொண்டாடலாமே என்று தோன்ற பொங்கல் விழாவை நண்பர்களோட சேர்ந்து கொண்டாடலாம்ன்னு முடிவு பண்ணேன். நண்பர்களின் பொங்கல் விழா பக்கத்துல இருக்குற பார்க்கில் என்று தகவல் வந்தது. கூடவே கயிறு இழுப்பது, பானை உடைப்பது மாதிரியான நம் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும். கரும்பு தின்னக் கூலியா? ‘சம்முவம்… விட்றா வண்டிய’ என்று பார்க்கிற்க்கு கிளம்பினோம். இங்கு நண்பர்கள் வட்டம் பெரிசா இல்லாதவங்ககூட சில தமிழ் எஃப்.எம்ல பொங்கல் விழா, கோலப் போட்டின்னு வெச்சு அதிரடி ஹிட் கொடுப்பாங்க. அங்கே போய் கலந்துக்கலாம்.

விறகு அடுப்பு, மண்பானைன்னு எதுவும் இல்லாம கேஸ் அடுப்புலயும் கைக்கு கிடைக்குற பாத்திரத்துலயும் பொங்கல் வெச்சு, அதை பேப்பர் தட்டுல சாப்பிடறதும் ஒரு தனி அனுபவம் தான். கடையில் இருந்து வாங்கிட்டு வந்த சாப்பாட்ட நண்பர்களோட சேர்ந்து சாப்பிட்டு கிட்டத்தட்ட ஒரு ஊர்பொங்கல இங்கேயும் கொண்டாடியாச்சு. ‘இனி விளையாட்டுப் போட்டிகள் இனிதே ஆரம்பம்’ன்னு எங்க குழுத் தலைவர் எல்லாருக்கும் விதவிதமான போட்டி வெச்சு யார் மனசும் கோணாதபடி அனைவருக்கும் பரிசு கொடுத்து எங்களை மகிழ்விப்பார். கடல் கடந்தாலும் பாரம்பரியம் மாறாம குழந்தைகளுக்குத் தனியா பிஸ்கட் கடிக்குறது மாதிரியான விளையாட்டுகளும் நடந்தேறும். எல்லாத்தையும்விட மிக முக்கியமான விஷயம் ஆண்கள், பெண்கள் எல்லாருமே சேலை, வேஷ்டி கட்டிக்கிட்டு, மணக்குற மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துக் கொண்டு தூக்கிச் சொருகின சேலையோட கயிறு இழுக்குற போட்டியிலெல்லாம் கலந்துக்கறது உண்மையாவே அமீரகத்தில் ஒரு தமிழகம் தான்.

நிழல் வேண்டும்போது மரம் ஒன்று உண்டுபகை வந்தபோது துணை ஒன்று உண்டுஇருள் வந்தபோது விளக்கொன்று உண்டுஎதிர்காலம் ஒன்று எல்லோர்க்கும் உண்டுஉண்மை என்பது என்றும் உள்ளதுதெய்வத்தின் மொழியாகும்நன்மை என்பது நாளை வருவது நம்பிக்கை ஒளியாகும்புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காகதோழா ஏழை நமக்காக…”

என்ற வாலியின் வரிகளில் பித்தாகும் என் மனம். சாதி, மத சாயத்தைக் கழுவிட்டு மனித இனமாக ஒன்றுகூடி பண்டிகைகளைக் கொண்டாட ஆசையா? என் துபாய் இல்லத்திற்கு வாருங்கள்.

வாழ்க்கையைக் கொண்டாடலாம்!

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.