அடுக்களை to ஐநா 15

“On behalf of world teachers, you are going to represent as a panelist at Brussels”- ப்ருஸல்ஸ் நகரில் நடைபெறவிருந்த கூட்டத்துல் உலக ஆசிரியர்களின் பிரதிநிதியாக நான் செல்லவிருப்பதாக உலகக் கல்வி அமைப்பின் செகரட்டரி ஜெனரலும், பிரசிடென்ட்டும் கைகுலுக்கிச் சொன்னார்கள். விஷயம் மூளைக்குப் போக மறந்து, பாதை மாறி பைபாசில எங்கெங்கோ  சுத்த, எப்படி ரியாக்ட் பண்ணனும்னு மூளை கட்டளையிடாததால், ‘பே’ னு  பதில் சொல்லாம முழிச்சிட்டு இருக்கேன்.

ஒரே நாளில் எத்தனை இன்ப அதிர்ச்சியைத் தான் இந்த பிஞ்சு(!) இதயம் தாங்கும்? ஒலிம்பிக்ல பி.வி. சிந்து ஜெயிச்சதும் அவரது கோச் பண்ணின மாதிரி ( கொஞ்சம் ஓவராத்தான் போறேனோ? பரவால்ல, போவம், போவம் )  ஒருங்கிணைப்பாளர் சசி மேம் உற்சாகத்தில் கட்டியணைத்து  உலுக்கி என்னை நிகழ்காலத்திற்குள் குதிக்க வைச்சாங்க. நம்மகிட்ட படிச்ச புள்ளங்க  நூத்துக்கு நூறு  வாங்கும் போது நமக்குள்ள  ஒரு பூரிப்பு   வரும்ல… அது போல நான் தேர்வானதில, அவங்களுக்கு அம்பூட்டு சந்தோசம். 

காக்டெயில் பார்ட்டில காபி கிடைக்காதுன்னு வெயிட்டர் கட் அண்டு ரைட்டா சொல்லிட்டதால, தலைவலி மண்டையை ஒரு பக்கம் பதம் பார்க்குது. வழக்கம்போல பெரியாளுகளுக்கு ஒரு வணக்கத்த வெச்சு, மறுநாள் ஊருக்குக் கிளம்புவதால் டாட்டா சொல்லிட்டு, அரக்கப் பறக்க அறைக்கு  ஓடினோம். உடைமாற்றி ஐந்து நிமிடத்தில் கிளம்பியாச்சு.

இன்றைக்கு அகில உலக கூட்டணியை  கலைச்சிட்டு,  நான், ஜாகூர், சசிமேம் மட்டும்  அவசரமா  ஆசியா லெவல்ல ஒரு அரசியல்  கூட்டணி போட்டுக்கிட்டோம். கடகடன்னு கிளம்பி…படபடன்னு நடந்து, மீண்டும் அதே டைம்ஸ் ஸ்கொயர் களேபரங்களை சடசடன்னு கடந்து எங்கயும் பராக்குப் பார்க்கக் கூடாதுன்னு முகத்துக்கு நமக்கு நாமே கடிவாளம் போட்டுகிட்டோம். வண்டி ஐந்தாவது அவென்யூல 33 மற்றும்  34 வது தெருவிற்கு நடுவில் இருக்கிற எம்பயர் ஸ்டேட் பில்டிங் கிட்ட வந்துதான் நின்னுச்சு. 

எவ்வளவு நாள் கனவு இது! ஐஸ்வர்யாராயும் , ப்ரசாந்த்தும் அழகழகான உடையில், “அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்”னு தொண்ணூறுகளில் அசைந்து அசைந்து ஆடும் போதே பார்க்கணும்னு  பேஏஏஏஏராசைப்பட்ட அதிசயம் கண்ணுக்கெதிரே சாதுவாய்  நிற்பதைப் பார்த்ததும் “ ப்ப்ப்ப்பே” …விஜய்சேதுபதி டயலாக்க  தன்னால வாய் உச்சரிக்குது ( “ஒனக்கு ஒலகம் பூரா சுத்தணும்னு தான் பேராசை…என்னவோ எம்பயர் ஸ்டேட் கட்டிடத்த மட்டும் தான கனவுன்னு பகுமானம் பண்ற”னு மூஞ்சில இடிச்ச மனசாட்சிய தூக்கி ஓரமா கடாசிட்டு)   டிக்கட் எடுக்க ஓடறோம்.

சீனப் பெருஞ்சுவர் மாதிரி நீளமான க்யூ…….. 86வது மாடி வரை செல்ல 30 டாலரும், 102வது மாடி வரை செல்ல 42 டாலரும்னு வெளியிலிருந்த போர்டு சொல்ல,   அவசர அவசரமா மனசுக்குள்ள  “ இங்கி பிங்கி பாங்கி”  போட்டு நம்ம  நிர்மலாக்கா மாதிரி தப்புத்தப்பா  பொருளாதாரக் கணக்குப்  பார்த்திட்டு 102 மாடின்னு முடிவு பண்ணி, 42 டாலரைக் கொடுத்தாச்சு. உள்ள நுழைஞ்சதும் கைடு போல ஒருத்தர் வந்து, “ ஆ…. கத கேளு கத கேளு
சுவையோட சுகமாக எம்பயர் ஸ்டேட் பில்டிங் உருவான கத கேளு”ன்னு   ஆரம்பிக்க, சுவாரஸ்யம் கூடியது. 

1920 க்கு பிறகு நியூயார்க்கின் பொருளாதாரம் இந்திய பெட்ரோல் விலை போல சடசடன்னு உயருது. திடீர்னு நிறைய பணக்காரர்கள் உருவாகுறாங்க.  புதுப் பணக்காரனுக்கு ஏதாவது செஞ்சி  ஊருக்குள்ள தன்னோட கெத்தைக் காட்டணும்னு நெனைப்பு வரும்ல? அதுபோல உலகிலேயே  உயரமான கட்டிடத்தைக் கட்டி அமெரிக்காவோட கெத்த இந்த உலகத்துக்கே காட்டணும்னு  ரெண்டு பெருநிறுவனங்களுக்குள்ள கடும் போட்டி. அந்தப் போட்டியில பிறந்தது தான் எம்பயர் ஸ்டேட் பில்டிங். 

கிரைஸ்லர் கார்ப்பரேசன் உரிமையாளர் வால்டர் கிரைஸ்லரும் , ஜெனரல் மோட்டார்ஸ் உரிமையாளர் ஜான் ஜேகப் ரஸ்கோப்பும், ‘ நான் பெரியவனா நீ பெரியவனா’ன்னு   போட்டா போட்டி போட்டு ஆளுக்கொரு கட்டிடத்தை கட்டுறாங்க. ரஜினியும், ராதாரவியும் போட்டி போட்டு  ஏலம் எடுக்கறா மாதிரி  50 மாடி , 60 மாடி,  80 மாடின்னு  உயர்த்திகிட்டே போக…..  கடைசில  102 மாடி ஒரு தரம் 102 மாடி ரெண்டுதரம் , 102 மாடி மூணுதரம் னு மணியடிச்சு  ஜெயிச்சதென்னவோ எம்பயர் ஸ்டேட் ஓனர் தான்.   ‘ஆர்ட் டெக்கோ’ என்ற அன்றைய புகழ் பெற்ற  கட்டிட வடிவமைப்புல,  ஷ்ரீல், லாம்ப் மற்றும் ஹேர்மன் ஆகிய மூணு பேரும் வடிவமைக்க,  மொத்தம்  1454 அடி உயரக் கட்டிடத்தை 1930ல  ஆரம்பிச்சி, பதினோரு மாசத்தில கட்டி முடிச்சாங்க. 

1931 மே மாதம்  1 ம் தேதி  கட்டிடத்தை திறந்தாச்சு. 1933 ல இங்க  எடுக்கப்பட்ட  ‘கிங்காங்’ படம், இந்தக் கட்டிடத்தின் பெருமையை உலகமெல்லாம் கொண்டு சேர்த்திடிச்சு.

1970 ல உலக வர்த்தக மையம் கட்டுற வரைக்கும் இதுதான் உலகின் உயரமான கட்டிடம்ங்கற பெத்த பேரோட இருந்திச்சு. ஆனால் போகப்போக,  ‘அண்ணாத்தே ஒத்து’னு  இந்தக் கட்டிடத்தை தூக்கி சாப்பிடறா மாதிரி  படா படா கட்டிடமெல்லாம்  உலகம் பூரா வந்தாச்சு. 

இப்ப, நியூயார்க்கின் ஒன்பதாவது பெரிய கட்டிடமாகவும், உலகின் 49 வது பெரிய கட்டிடமாகவும் இருக்கு எம்பயர் ஸ்டேட் பில்டிங். ஆனா இப்பவும் உலகப் புகழ்பெற்ற கட்டிடம் எதுன்னு கேட்டா எம்பயர் ஸ்டேட் பில்டிங்னு தான் கூகுள் அண்ணே சொல்றாரு.  இவ்ளோ காச செவ்வழிச்சு கட்டின மனுசன், பெயர் வைக்க சோம்பல் பட…நியூயார்க்கின் செல்லப் பெயரான எம்பயர் ஸ்டேட்ங்கற பெயரிலேயே அழைக்கப்பட்டது.  ஆரம்பத்தில பல அடுக்குகள், ‘ கோவாலு’ கூட இல்லாமல்  சந்திரமுகி பங்களா  போல  காலியாகவே இருந்ததால், ‘ எம்ட்டி ஸ்டேட் பில்டிங்’னு நம்ம ஆளுங்க கிண்டலடிச்சிருக்காங்க. 

கட்டிடத்தின் உச்சிக்குப்  போக 1860 படிகள்.  நடந்தே போகலாமாம். பக்கத்திலிருந்த ஜாகூர், “ மேம் படி வழியா போகலாமா?”னு கேட்க,  “யோவ்….நாங்க பழனி முருகனை பார்க்கறதுக்கே ரோப் காருக்கும், ட்ரெயினுக்கும் அல்லாடுற ஆளுக, கம்முனு வா”, என ஒரு அரட்டலைப் போட, அமைதியானான்.  ஆயிரம் ஜன்னல் வீட்டைப் போல இது  6500  ஜன்னல் கொண்ட கட்டிடம்.  இந்த ஒரு கட்டிடத்துக்கு மட்டுமே  தனியான  பின்கோடை  அஞ்சல்துறை கொடுத்திருக்கு. இக்கட்டிடத்தை நவீன ஏழு அற்புதங்களில் ஒன்றாக அமெரிக்கன் சொசைட்டி ஆப் சிவில் இன்ஜினியர்ஸ் அறிவிச்சிக்கிட்டாங்களாம். (தானா மெச்சிக்குமாம் தவிட்டு கொழுக்கட்டை, அதா மெச்சிக்குமாம் அரிசி கொழுக்கட்டை கதையால்ல இருக்கு?)

இப்படி இப்படியாக அந்த கைடு  கட்டிடத்தோட அருமை பெருமையெல்லாம் சொல்லிமுடிக்க, அலைஅலையாய் கடந்து போகும் மக்கள் வெள்ளத்தில  நாங்களும்  சங்கமிச்சிக்கிட்டோம். முதல் தளம் முழுவதும் ஆர்ட் கேலரி போல ஓவியங்கள். கட்டிடம் தொடர்பான நிகழ்வுகள், செய்திகள் ஆங்காங்கே வைச்சிருக்காங்க.

நாம் ஹால்  நடுவில் நிற்க நம்மைச் சுற்றிலும் பில்டிங் கன்ஸ்ட்ரக்‌ஷன் வீடியோ பிரம்மாண்டமாய் ஓடுது. வீடியோ போலவே தெரியல, உண்மையிலேயே வெளியே ஆட்கள் வேலை பார்ப்பது போலவே உயிரோட்டமா இருக்கு. இதேபோல் ஒவ்வொரு அறையிலும் வெவ்வேறு வீடியோக்கள். கட்டிடத்தைச் சுற்றிப் பார்க்க வந்த வி.ஐ.பிக்கள்,  இந்தக் கட்டிடம் இடம் பெற்றுள்ள திரைப்படங்கள் ( 90 படங்களாம்..ஆத்தாடியோவ்!) , 1945 ல் 50 வது மாடியில் விமானம் மோதிய நிகழ்வு என கண்களுக்கு ஒரு விருந்தே கிடைத்தது. 

முடித்துவிட்டு,  லிப்ட் இருக்கும் ஏரியாவுக்குப் போக ,  மொத்தம்  73 லிப்ட் இருந்தது. வரிசையில்  நுழைய அங்கும்  எப்படி லிப்ட் கட்டப்பட்டதென்ற  காட்சிகள் வீடியோவாய்  விரிந்தது. அமெரிக்கர்கள் ஒரு வரலாற்றை அப்படியே  சித்தரிப்பதில் வல்லவர்கள்னு  கேள்விப்பட்டிருக்கிறேன். அவங்க தொல் சின்னங்களைக் காப்பதும், ஆவணப்படுத்துவதும்  வேற லெவல்! நம்ம ஊரில் இரண்டாயிரம் வருச பழமையான நினைவுச்சின்னம்கூட  பராமரிப்பின்றி கிடக்க, அதையும் எப்பவாவது தேடி வர்ற வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்கிட்ட, ‘கைடு’ங்கற பேர்ல நம்ம ஆட்கள், அவங்களா உருவாக்குன சொந்தக் கதைகளை அள்ளிவிட்டுட்டு இருக்காங்க.  இவங்க தொண்ணூறு  வயசு கட்டிடத்திற்கு என்னா வரலாற்றுப் பூச்சு கொடுக்கறாங்கடா சாமி.  

85 மாடியையும் சில நிமிடங்களில்  வேகமாக லிஃப்ட் கடக்க, காது அடைக்குது. இந்த 85 அடுக்கையும் அலுவலக பயன்பாட்டுக்காக வாடகைக்கு விட்ருக்காங்க. கிட்டத்தட்ட 1000 தொழில் நிறுவனங்கள் 2,10,000 பணியாளர்களைக் கொண்டு இங்க இயங்கிக்கிட்டு இருக்கு. லிப்ட் நேரா 86வது மாடில நம்மைக் கொண்டு போய் விடுது. இங்கதான் அப்சர்வேட்டரி டெஸ்க்னு சொல்ற  உள்புற மற்றும் வெளிப்புற பார்வையாளர் மேடை இருக்கு. அங்கும் நிறைய ஓவியங்கள். உள்புற தளத்திலிருந்தும் கண்ணாடி வழியே வெளியே பார்க்கலாம். 360 டிகிரி கோணத்தில சுத்தி சுத்தி நியூயார்க்கை மட்டுமல்ல, அமெரிக்காவையே பார்க்கலாம். உள்ளிருந்து ஒரு ரவுண்ட்  பார்த்துட்டு திறந்தவெளிக்குப் போனோம்.

நம்ம வீட்டு மொட்டைமாடி போலத்தான். அடடடடா…..என்ன ஒரு காட்சி. நாங்க போன நேரம் இரவு எட்டு மணி இருக்கும் என்பதால் சரியான  குளிர். அவ்வளவு உயரத்தில காற்று ஆளைத் தூக்குது. காற்றை எதிர்த்து கால்களை தரையில்  இறுகப் பற்றி சமாளித்து நிற்க வேண்டியிருந்தது் . மிகப்பெரிய அமெரிக்கன் கொடி காற்றில் பறக்குது. ஒரு சமயத்தில் சராசரியாக வருடத்திற்கு முப்பது தற்கொலைகள் நடந்ததால இப்ப சுற்றிலும்  கம்பி வேலி போடப்பட்டிருக்கு.

தூரத்தில் ஆறு தெரிந்தது. கான்கிரீட் காடுகளாய் கட்டிடங்கள். தரையில் புள்ளி புள்ளியாய் ஓடும் கார்கள். புரூக்ளின் பிரிட்ஜ், சென்ட்ரல் பார்க், சுதந்திரா தேவி சிலை, நியூ ஜெர்ஸி, பென்சில்வேனியா, மாசாசூட்ஸ்னு பாதி அமெரிக்காவை இங்கிருந்தே பார்க்கமுடியுது. விண்வெளியிலிருந்து பூமியைப் போர்ப்பது போல ஒரு பீலிங் வந்தது. ( ஸாரி, கொஞ்சம் ஓவர் தான்….. பொறுத்துக்கோங்க) ஒளிவெள்ளத்தில அமெரிக்காவே ஜெகஜோதியா மின்னுது. நியூயார்க்கின் காதல் உலகை பார்க்கணும்னா இங்க வந்தா போதும்.  எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆங்காங்கே ஜோடிகள் மெய்மறந்து உலகம் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாம  லிப்லாக்ல பிஸியா  இருக்காங்க. நாகரிகம் கருதி பார்வையை திருப்பினாலும், எல்லாப்பக்கமும்  இதே காட்சிகள். ரசித்துப் பார்த்து முடித்து ( அய்யோ…. அமெரிக்காவின் செயற்கை அழகைச் சொன்னேன்)  லிப்டில் ஏற,  சில நொடிகளில்  102 வது மாடியில் நாங்கள்.   

86 வது  மாடிக்குமேலே இருக்கக் கூடிய 16 தளங்கள் கலை அலங்கார வடிவமைப்பு கோபுரங்கள் தான். 16 மில்லியன் எல்.இ.டி விளக்குகள்  புண்ணியத்தில ச்ச்சும்மா  தகதகதகன்னு  மின்னுது.  தரையிலிருந்து சீலிங்வரை எல்லாப் பக்கமும் கண்ணாடியிலான  சுவர்கள். அங்கு கண்ணாடி அறைக்குள்ளிருந்து மட்டுமே  360 டிகிரி கோணத்தில் அமெரிக்காவை பார்த்துக்கலாம். வெளியே போக அனுமதியில்லை.  564 மில்லியன் டாலர் மதிப்புள்ள கட்டிடத்தை ஆசைதீர பார்த்துவிட்டு, கொடுத்த  42 டாலருக்கு வொர்த்து தான்னு(!) பேசிக்கிட்டே வெளியேறினோம். 

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!