அடுக்களை டூ ஐநா  –  14

ஒருவழியாக  பல கேள்விகளுக்கு  படபட சிவகாசிப் பட்டாசாய் பொரிந்தும், சில கேள்விகளுக்கு நமுத்துப் போன சீனப் புஸ்வாணமாய் அடக்கி வாசிச்சும் கேள்வி பதில்  செசனுக்கு எண்ட் கார்டு போட்டாச்சு . “எங்க கருத்தில் எவ்வளவு பிழை இருக்கிறதோ, அதற்கு ஏற்ப பொற்காசுகளை குறைச்சுக்கிட்டு எங்களை விட்டாப் போதும்  நியாயமாரே…” என்று தருமியாய் புலம்பிய  எங்க மைன்ட் வாய்ஸ், நல்ல வேளை யாருக்கும் கேட்கல.  ஆனாலும் வடிவேலு போல கெத்தா,  “இத்தாப்பா…பிரச்சனைகளை கேட்டீங்க, சொல்லிட்டோம் ..இப்போ நாங்க என்னா செய்யணும்?  பிரச்சினைகளுக்கு சொல்யூசன்   சொல்லுங்க”ன்னு பந்தை அவங்க பக்கம் திருப்பியாச்சு.

UFT ( United Federation of Teachers)  தலைவரும், நியூயார்க் சிட்டி மேயருமான டி பிளாசியோ ( Di Blasio)  மேடையேறியவுடன் ‘மேயர்  ஏதோ முக்கியமாக பேசுவார்’னு எதிர்பார்த்தா அனைவரையும் வரவேற்று,  நியூயார்க் நகரக் கல்வியின் வரலாறை ரெண்டே வரில  பேசிட்டு பொசுக்குனு  கிளம்பிட்டாரு. மைக் கையில கிடைச்சதும், குறஞ்சது முக்கால் மணி நேரம் ‘அன்பானவர்களே, தாய்மார்களே…மற்றும் நம் உறவினரே’ அப்டின்னு நீ…ட்டி முழக்கும் நம்ம ஊரு கவுன்சிலருங்க முகமெல்லாம் கண்ணு முன்னாடி வந்துட்டு போச்சு. அவரைத் தொடர்ந்து,  யூனிசெஃப்பினுடைய கல்விக்கான  தலைவர் ஜோ போர்ன், சிரி சிரி சிரி சிரி சிரீஈஈஈனு   பாடிக்கிட்டே வந்தாங்க.  கல்வியில்  சமத்துவத்தைக் கொண்டு வருவதிலுள்ள  சவால்களைப் பற்றியும்,  கல்வியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்களை  கல்வியின்பால் ஈர்ப்பதில் ஆசிரியர்களின் பங்கு  குறித்தும் பேசினாங்க.

இனம், பால், சமூக, பொருளாதாரக் காரணங்கள்  மற்றும் உடல்சார் காரணங்களால் தனிமைப்படுத்தப்படும், ஒதுக்கப்படும் குழந்தைகளையும், பொதுக்கல்விக்குள் அவர்களைக்  கொண்டுவரும் அவசியம் குறித்தும்  சிரிச்சிக்கிட்டே அவர் பேசியது அழகு.

உலகக் கல்வி  அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் டேவிட் எட்வர்ட்ஸ் அடுத்த  பேனலைத்  துவக்கினார். “கல்வி –  2015ஐ நோக்கியும் , 2015க்குப் பிறகும்” என்ற தலைப்பில்,  ‘நீயா நானா’ கோட் கோபிநாத் போல  இயல்பா நடந்துகிட்டும், உட்கார்ந்தும், தூண்டிவிட்டும், கொளுத்தி  போட்டும்   நெறியாளுகை செய்து அவையை கலகலப்பாக்கினார். ஐநா-வுக்கான யுனெஸ்கோ பிரதிநிதி விபெக் ஜென்சன்,  உலகக் கல்வி பிரசார இயக்கத்தின்  தலைவரான கேமிலா,  கல்விக்கான குளோபல் பார்ட்னர்ஷிப்பின் சி.இ.ஓ. அலீஸ் ஆல்ப்ரட், தேசிய கல்விக் கழகத்தின் லில்லி எஸ்கல்சென் நாலு பேர்ட்டயும், “நீங்க இதைப்பத்தி இன்னாபா சொல்றீங்கோ? 2015க்குப் பிறகு தரமான கல்வி கொடுப்பதில் உள்ள சவால்களை எப்படி சமாளிக்கப் போறீங்கோ?”ன்னு டேவிட் கிடுக்கிப்பிடி போட்டார்.

பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகளை முன்வைத்து  ‘சமாளிபிகேஷன்ஸ்’ செஞ்சாலும் இவங்க பேசியதிலிருந்து  ஒரு சுவாரஸ்யமான ப்ளாஷ்பேக் கதை  கெடச்சது. 2000ம் ஆண்டு ஏப்ரல் 26, 27, 28 தேதிகளில்  மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள செனகல்ங்கிற நாட்டோட  தலைநகர்  தக்கார்ல,  ஐநா அமைப்பின் அமைதிப் பரம்பரையைச் சேர்ந்த 180   நாடுகளின்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி சார்ந்த தேசியத் தலைவர்கள்,  குஸ்தி போடாம  கெட் -டு-கெதர் போட்டு , உலகக் கல்வி மன்றத்தை  ( World Education Forum) அமைக்கறாங்க.    2015க்குள் அடைய வேண்டிய கல்வி இலக்குகள்னு  ஆறு இலக்குகளை அந்த 180 நாட்டு தலைவர்களும் கூடிக்  கூடிப்பேசி  ஒண்ணு சொன்னாப்புல  முடிவெடுத்துருக்காங்க.

முன்பருவக் கல்வி, 2015க்குள் கட்டாய இலவசக் கல்வி, வாழ்க்கைக் கல்வி அளித்தல், அனைத்து நாடுகளிலும் 2015க்குள் கல்வியறிவு பெற்றோர் சதவீதத்தை மேலும் 50 சதவீதம் உயர்த்துதல், பாலின வேறுபாட்டை பள்ளிகளில் வேரறுத்தல்,  சிறப்பான கற்றல் விளைவுகளை அடைதல்  அப்படிங்கற அந்த ஆறு இலக்குகளையும்  அடைஞ்சே தீருவோம்னு  மீசையை முறுக்கி, சூடங்கொளுத்தி,  சபதம் எடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கிட்டாங்களாம். 

அந்த  இலக்குகளின் தற்போதய நிலை, மற்றும் எதிர்வரும் 2015ஆம் ஆண்டில் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்துமாகத்தான் இந்த நாலு பேரும்  கதைச்சாங்க.

இந்த தக்கார் இலக்குகளை குறி வைச்சுதான்  இந்தியாவில் சர்வ சிக்‌ஷா அபியான் (SSA) என்ற மகா  திட்டம் தொடங்கப்பட்டது, உலக வங்கியிடமிருந்து பணம்  கொட்ட, மத்திய அரசும்  மாநில அரசும் தங்கள் பங்குக்கு நிதி ஒதுக்க, சாகப் பொழைக்கக் கிடந்த பல அரசு பள்ளிக் கட்டிடங்களுக்கு அதுக்குப் பிறகுதான்  உயிர் வந்துச்சு!

பொம்பளங்கன்னாலே வாய் நீளம்னும், உலக அறிவே இல்லாதவங்கன்னும்  மீம்ஸ் போடறவங்களயும்,  லூசுப் பொண்ணாவே பெண்களை காட்டுற தமிழ் சினிமா இயக்குநர்களையும்   இங்க கூட்டிட்டு வந்து காட்டணும். பெரிய பெரிய பொறுப்புகள்ல எல்லாம்  பெண்கள் உட்கார்ந்து எவ்ளோ அறிவாளிகளா, புள்ளிவிபரத்தோட, சமூக அக்கறையோட  பேசறாங்கன்னு!!!

பேசின களைப்பு தீர எல்லாருக்கும்  ஒரு சின்ன  பிரேக் கொடுக்கப்பட்டது. ஸ்கூல் மணியடித்ததும் ஓடற பசங்க போல முண்டியடிச்சிக்கிட்டு வெளியேறினோம். ஆனால்  ஒரு வாய்  சாயா கூட  நிம்மதியாகக் குடிக்கவிடாமல், பார்வையாளர்கள்  எங்கள் ஒவ்வொருவரையும்  சுற்றிச் சூழ்ந்து  அன்-அஃபிஷியல் கேள்விகளால்   திணறடித்தனர். பெரும்பாலான கேள்விகள் மெயின் டாபிக்கை விட்டுட்டு பைபாஸ்ல போய்  கலாச்சாரம், பழக்கவழக்கங்கள்,  அணிந்திருந்த சேலை  எனச் சுற்றி சுற்றி வந்தது.

அனைத்தையும் சிரித்து சமாளித்து திரும்ப,  ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்களுடைய  சிறப்பு ஆலோசகர் அமினா மொகம்மது  ( ஐநா முழுக்க  மதுரை  ஆட்சி தான் போல!)  உலகளாவிய கல்வி இலக்குகளை  ஐநா பொதுச்சபையில் உருவாக்கப் போவது குறித்தும்,  அனைத்து நாடுகளின் கல்விப் பிரச்சனைகளும்  அச்சமயத்தில் கணக்கில் எடுத்துக்  கொள்ளப்பட்டு, அதற்கேற்ப செயல்பாடுகள் உருவாக்கப்படும்  என்றும்  விளக்கினார். அவர் பேச்சை முடிக்க, உலக ஆசிரியர்களின் சார்பாக  நிகழ்ச்சி தொகுப்புகள்  மற்றும்  எங்களது கருத்துகள் அடங்கிய கோப்புகள்  ஓர் அழகிய மரப்பெட்டகத்தில் வைத்து, ஐநா-வுக்கு ( presentation from the world’s  teachers  to the United Nations) அளிக்கும் நிகழ்வு ஒரு சடங்கைப் போல நிகழ்த்தப்பட்டது. 

ட்ராபிக் நெருக்கடில கார்ல வர்ற  முதலமைச்சர்ட்ட பாதுகாவலர்களை தள்ளிவிட்டு  ஓடிப் போய் மனுக்கொடுத்து ப்ரேக்கிங் நியூஸ்ல  வருவோம்ல…. அது போல மனு கொடுக்கிறதுக்குத் தான் இம்பூட்டு சம்பவம். உலகக் கல்வி அமைப்பின் தலைவர் சூசன் ஹாப்குட்  இதை வழங்க, அனைவரும் எழுந்து நிற்க, ப்ளாஷ் மழை கொட்ட , ஐநா-வின் சார்பில் அமினா பெற்றுக்கொண்டார். ஒரு வழியா நம்ம கருத்தும் எழுத்து வடிவில்  ஐநா-வுக்கு போயிடுச்சுப்பா.  ஐநா-வுக்கே  மனுக்கொடுத்த ஆசிரியப் பரம்பரையாக்கும் நாங்கன்னு இனி சொல்லிக்கலாம்!!! 

அடுத்துப்பேசிய சூசன் ஹாப்குட்,  தன்னோட பங்குக்கு இன்னொரு ப்ளாஷ்பேக் போனாங்க….எத்தினி ப்ளாஷ்பேக்????  1990ல்  உலக நாடுகள் அனைத்தும் தாய்லாந்திலுள்ள ஜாம்ட்டியன் என்னுமிடத்தில்  ஒன்று கூடி  ‘2000ம் ஆண்டிற்குள்   தொடக்கக் கல்வியை அடைதல் மற்றும்  கல்லாமையை ஒழித்தல்’  என்பதை குறிக்கோளாகக் கொண்டதையும்  பின் 2000ஆம் ஆண்டில்  தக்காரில் வேர்ல்ட் எஜுகேஷன் போரம் அமைந்ததையும்  அங்கு  ‘மில்லினியம் டெவலப்மென்ட் கோல்ஸ்’ (Millennium Development goals- MDG) உருவாக்கப்பட்டு அதை  அடைவதற்கான கால இலக்காக  2015  வரையறுக்கப்பட்டதையும் சொன்னாங்க.

ஆனால் இன்றைக்கும்  MDGயில் உள்ள கல்வி சார்ந்த இரண்டு குறிக்கோள்களையும்  அடையமுடியாத சூழலையும்,  இந்த நிலை தொடர்ந்தால் 2086 க்குள்கூட நம் பாவப்பட்ட பெண்குழந்தைகள் கல்வியறிவு பெற முடியாது என்ற  புள்ளி விபரக் குண்டையும்  அவையில் போட்டு அதிரவைத்தார்.

உலக அளவில் 57 மில்லியன் குழந்தைகள் ( அதில் 53 சதவீதம் பெண்கள்) மற்றும் 69 மில்லியன் வளரிளம் பருவத்தினர் இன்னும் பள்ளிக்கூடம் பக்கம் காத்து , வெயில், மழை, புயல், சுனாமிக்குக்கூட  ஒதுங்காதவர்களாம். 774 மில்லியன் மக்கள்  (இவர்களில்  மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்) கல்வியறிவு பெறாதவர்களாம்.  

மொத்தத்தில்  ‘அனைவருக்கும் கல்வி’ (Education For All) மற்றும் MDG இரண்டும் முடிக்கப்படாத  அஜண்டாவாக  நிற்கிறது என்ற நிதர்சனத்தை  பட்டவர்த்தனமாக போட்டுடைத்தார். நம்ம வீட்டில்  நாலு பேருக்கு போடற ப்ளானே பப்பரப்பான்னு ஃப்ளாப் ஆயிடுது, இத்தனை பில்லியன் மக்களுக்குப் போடற ப்ளான்க்கு   எவ்ளோ முயற்சி தேவைப்படும், அதில் எத்தனை  ஓட்டை இருக்கும்னு  நினைச்சிக்கிட்டேன். 

அடுத்த இலக்கை ஐநா வகுக்கும் போது  சிறப்பு மாணவர்களையும் , பெண்குழந்தைகளையும்  கருத்தில் கொண்டு வரையறுக்க வேண்டும் என்பதையும் உலகக் கல்வி அமைப்பின் சார்பாக ஐநாவிடம் கொசுறு  கோரிக்கையாக வைச்சாங்க.  இறுதியாக, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கல்விக்கான ஐநாவின்  சிறப்புத்தூதர் கார்டன் ப்ரௌன் தேர்தல் பொதுக்கூட்டத்தில்  கடைசியாகப் பேசும் ஸ்டார் பேச்சாளர் போல  ஆடியன்ஸைக் கவர்ந்தார். 

‘அனைவருக்கும் தரமான கல்வி’ என்ற  இலக்கை அடைய கற்றலில் தொழில்  நுட்பங்களைக்  கையாளுதல், சமூக உணர்வு கொண்ட  கல்விமுறை, சிறப்புக் குழந்தைகளை கவனத்தில் கொள்ளுதல்,  மாணவர் ஆசிரியர் உறவுமுறை , சம வாய்ப்புகளுக்கான இடைவெளியைக் ( opportunity gap)  குறைத்தல், கல்விக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அதிகரித்தல் என  ஒரு இடத்தில நிக்காம, எம்ஜிஆர் போல மேடை முழுக்க  வாக்கிங், ஜாகிங், ஜம்ப்பிங்  என சகல யுக்திகளையும் பயன்படுத்தி  தனது பேச்சை சுவாரஸ்யப்படுத்தினார்.

2015 ஆம் ஆண்டிற்கு பிறகான கல்வி இலக்குகளை நிர்ணயிக்கும்போது இன்றைக்கு ஆசிரியர்கள் கூறிய கருத்துக்களும் ( நாங்க தான்…நாங்களேதான்), உலகக் கல்வி அமைப்பின் செயல்பாடுகளும் கருத்தில் கொள்ளப் படும் என்றும், இந்தியாவில் பெண்குழந்தைகளுக்கு  இழைக்கப்படும் அநீதிகள் குறித்தான ரெமாவின் கருத்துகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும் அதற்கான சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும்  எனவும் அவர் கூற,  வாவ்…..மகிழ்ச்சியில் அரை மயக்கத்துக்குப் போனேன்.

கைத்தட்டல் எங்கோ  தூஊஊஊரத்தில் கடலுக்குள் கேட்டது.  ‘ஐநா போய் என்ன கிழிச்ச’னு யாரும் கேட்டா, சொல்லிக்கறதுக்கு இது போதும் தானே? பொதுவாக பெரிய பெரிய ஆட்கள் பேசும் போது, எழுதி வைத்ததை (எழுதிக் கொடுத்ததை!!!) மட்டுமே உணர்ச்சிகளே இல்லாம வாசிப்பாங்க. ஆனால் இவர், எந்த பிட்டு பேப்பரும் இல்லாம சரளமாக மனதிலிருந்து பேசினார். மாணவர்களுக்கு நாம் அளிக்கும் தரமான கல்வி மட்டுமே வேலைச் சந்தையில் அவர்கள் நுழைவதற்கான என்ட்ரி பாஸ் என்பதை இவரும் பதிவு செய்தார்.

கல்வி என்பது மனித உரிமை; இது பொதுநிதியால் வழங்கப்படவேண்டும்; குறைந்த பட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதம் ஒதுக்கப்பட வேண்டும்; தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை; அவர்களுக்கு பணிக்காலம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் ஆலோசனையாக வைத்து விட்டு, பலத்த கைதட்டல்களுடன் ( standing ovation) இறங்கினார்.

உலகக் கல்வி அமைப்பின் பொதுச் செயலாளர் ப்ரெட் வீ லீவன் (நல்லவேளை, ப்ளாஷ்பேக் ஏதுமின்றி) நன்றியுரை கூற…இப்படியாக உலக சரித்திரத்தில்(!) இடம்பெற வேண்டிய ஒரு நிகழ்வு நிறைவுபெற்றது. அனைவரும் கலைந்து  காக்டெயில் பார்ட்டிக்கு நகர, கடமையை முடித்து விட்ட மனம் ஊர் சுற்ற   அவசரப்படுத்த, சசி மேம்  ஓடிவந்து கட்டிப் பிடித்து வாழ்த்துகள் கூற…ஏராளமானோர் கைகுலுக்க ஃப்ளையிங் ப்ளையிங் தான். “காக்டெயில் பார்ட்டியில் காபியெல்லாம்  கிடைக்காதா பாஸ்”, என வெயிட்டரிடம் சீரியஸாய் நான் விசாரித்துக் கொண்டிருக்க, சூசன் ஹாப்குட்டும் , பரெட் வீ லீவனும் அருகில் வந்து கைகுலுக்கி வாழ்த்தினர்.

2015 மே மாதம் பெல்ஜியத் தலைநகர் ப்ரூஸ்ல்ஸில் நடைபெறவிருக்கும்  இன்றைய நாளின் தொடர் நிகழ்வின் பேனலில் கலந்து கொள்ள,  உலக ஆசிரியர்களின் சார்பில் இந்த எழுவரிலிருந்து நான் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்ல…சின்ராசை கையில் பிடிக்கவே முடியவில்லை! அத்தனை குஷி!

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பாளர்:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!