அடுக்களை டூ ஐ நா – 12

அவ்ளோ பெரிய மீட்டிங் ஆரம்பிக்க ஆகப்பெரிய சாஸ்திர சம்பிரதாயங்களெல்லாம் இல்லை. “வி.ஐ. பி வரணும், தூங்கி எழுந்துட்டார், பல்லு விளக்கிட்டார், குளிச்சிட்டார், சாப்பிட்டார், சில மணித்துளிகளில் வந்திடுவார்” னு சாயந்தரம் ஆறு மணிக்கு வர்ற வி.ஐ.பி க்கு காலை பத்து மணியிலிருந்து காத்திருக்கும் கூட்டமுமில்ல. “ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழிவிடுங்கோ, வழிவிடுங்கோ”, எனக் கட்டியங்கூறும் அலப்பறையும் இல்ல. நிறைகுடங்கள் என்னிக்கு தளும்பியிருக்கு? எந்தவித சம்பிரதாய அறிவிப்புகளுமின்றி, அஜெண்டாவுல இருந்தபடி சரியா ஒரு மணிக்கு வீடியோ ஓட ஆரம்பித்தது. “ஃப்ரம் சிட்னி டூ நியூயார்க்” பெயரைப் பார்த்ததும் , “மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி” படத்தைப் போல ரொம்ப சுவாரஸ்யமா (!) இருக்கும்னு குஜாலாயிட்டேன்.

உலகக் கல்வி அமைப்பின் ‘தரமான கல்விக்காக ஒன்றுபடுவோம்’ என்ற இன்றைய நிகழ்விற்கான நோக்கமே, 2015 ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றப்படவிருக்கும் கல்வி தொடர்பான வளர்ச்சி இலக்குகளை வரையறுக்கும் போது ,” இதுதான் உலக நிலைமை பார்த்துச் செய்யுங்க”, என ஐநா உறுப்புகள் மற்றும் வாக்களிக்கவிருக்கும் உறுப்புநாடுகளின் கவனத்திற்கு கொண்டுசென்று, இலக்குகள்மீது கணிசமான செல்வாக்கை ஏற்படுத்துவதே. அது தொடர்பான நிகழ்ச்சித்தொகுப்பே இந்த வீடியோ. ஐந்து கண்டங்களிலும், “ தரமான கல்விக்கு ஒன்றுபடுவோம்” என்பதன் பிரச்சார நிகழ்வுகளைக் குறிக்கும் ஒரு கல்விப்பயணமாக, பார்க்க ஜாலியாகத்தான் இருந்திச்சு.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற பேரணி, இந்தியாவில் டில்லியில் நடைபெற்ற பேரணி நிகழ்வுகள், கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற கருத்தரங்கு, பெல்ஜியத்தின் ப்ரசல்ஸ் பார்லிமென்ட்டில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வு, அர்ஜென்டினாவில் ப்யூனோஸ் ஏர்ஸில் நடைபெற்ற ஒரு நாடக நிகழ்வு , இறுதியாக நியூயார்க்கில் ஐநா பொது அவையில் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவர்கள் முன் படைக்கப்பட்ட, கொடுக்கப்பட்ட அறிக்கை மற்றும் இன்றைய இறுதி நிகழ்வு என விரிந்தது அந்த வீடியோ. கூடு விட்டு கூடு பாய்வது போல ஐந்து கண்டங்களையும் பாய்ந்து பாய்ந்து சுற்றி வந்தது போல இருந்துச்சு.

ஐந்து நிமிடத்தில் வீடியோ முடிய, ஐ.நா. விற்கான அர்ஜென்டினாவின் பிரதிநிதி மரியா கிறிஸ்டினா, “வாங்கண்ணா வணக்கம்ண்ணா”னு வந்தவங்களை வரவேற்க, உலகக் கல்வி அமைப்பின் தலைவர் சூசன் ஹாப்குட் தரமான கல்வியை நோக்கி என்ற பொருளில் பேசி முடிக்க, பேனலிஸ்ட் ஆன எங்களை மேடைக்கு அழைக்கும் அந்தநேரம் வந்தே விட்டது. பலத்த கைதட்டல்களுக்கிடையே மேடையேறிய எங்களைப்பார்க்க கோவில் திருவிழாவிற்கு நேர்ந்து விட்ட பலியாடுகள் போல மனசுக்குள் ஒருகணம் தோன்றி மறைந்தது. (ம்மேமே……என தலையாட்டிக் கொண்டே) மேடையேறினோம். ப்ளாஷ் வெளிச்சமழை கொஞ்சம் கூச்சமாகக் கூட இருந்தது. எல்லாம் ரெண்டு நிமிசம் தான்.

பிறகு சீரியஸாகி ஃபார்ம்க்கு வந்திட்டேன். ( எவ்வளவோ பார்த்திட்டோம், இதை ஒரு கை பார்த்திட மாட்டோமா….என்ன??) உலகக் கல்வி அமைப்பினுடைய செயற்குழு உறுப்பினர், பேட்ரிக் ரோச் இந்த ஓபன் டிஸ்கசனை தொடங்கி வைத்து , ‘உலகம் முழுவதிலும் வகுப்பறையில் பிரச்சினைகளை சந்திக்கும் ஆசிரியர்களின் ஒரு சோறு பதமாக இங்கு வந்திருக்கும் எங்களின் வகுப்பறைக் கதைகளைக் கேட்கவே நாங்கள் கூடியிருக்கிறோம்னு’ சொன்னதும் ரொம்பப் பெருமையாக இருந்தது.

நம்ம ஊர்ல , கல்வி தொடர்பான எந்த முடிவுகளையும் எடுக்கவோ , புதிய கற்றல் முறைகளை அறிமுகப் படுத்தவோ, புதிய கல்விக்கொள்கைகளை வரையறுக்கவோ, ‘குளிர்சாதன அறை அதிகாரிகளே’ முடிவெடுப்பதோடு, அவற்றை நடைமுறைப் படுத்துவதில் எழும் வகுப்பறைச் சிக்கல்களை எடுத்துக்கூறக்கூட ஆசிரியர்கள் அனுமதிக்கப் படுவதே இல்லை என எத்தனை நாட்கள் ஏங்கியிருக்கிறோம், புலம்பியிருக்கிறோம்.

ஆனால் இங்கு எங்களையும் மதிச்சு, எங்க பிரச்சினைகளை காது கொடுத்து கேட்க எங்களை மேடையில் விட்டு, ஐநா, யுனெஸ்கோ, யூனிசெப், உலகவங்கி போன்ற பெருந்தலைக்கட்டுகளெல்லாம் கீழே உட்கார்ந்திருக்காங்க!

டோகோ

முதலில் டோகோ -வைச் சேர்ந்த கொசக்சி பசப்புகழ் (அய்யோ பயத்தில நாக்கெல்லாம் வழுக்குதே அது நண்பன் பட விஜய் பேருல்ல??) இல்லயில்ல… க்பாசகோ புல்ச்செரி ( Ms. Kpassagou Pulcherie) அழைக்கப்பட, அவர் பிரெஞ்சில் பேசத் துவங்கினார். ஐநா- வின் அலுவல் மொழிகளான சைனீஸ், அராபிக், ஆங்கிலம், ப்ரெஞ்ச், ரஷ்யன், ஸ்பானிஷ் என ஆறு மொழிகளில் நமக்கு வசதியான மொழியில் பேசலாம்.

அவர் பேசறதை ஊமைப்படம் போல பார்க்க ஆரம்பிச்சு, நல்லவேளை மொழிபெயர்ப்பாளர்கள் புண்ணியத்தில படத்துக்கு உயிர்வந்தது. டோகோ என்பது மேற்கு ஆப்ரிக்காவில் இருக்கக் கூடிய எட்டு மில்லியன் மக்களைக் கொண்ட எறும்பு சைஸ் நாடு. ஆறு வருசம் கட்டாயக் கல்வி என்பதால் 81.3 சதவீதம் ஆரம்பக் கல்வி சேர்க்கை இருக்குதாம். ஆசிரியர் பற்றாக்குறையும், அதிக அளவிலான மாணவர் இடைநிற்றலையும், உள்கட்டமைப்பு வசதியின்மையும் வகுப்பறைச் சிக்கல்களாகக் கூறினார்.

இந்தியா

அடுத்ததாக ‘ரெமாடெவி ரத்னாசமி’ என வழக்கம் போல எனது பெயரைக் கடித்துக் குதற, நிதானமாகத் தொடங்கினேன். எனக்கு நமது அரசால், டில்லியிலிருந்து கொடுக்கப்பட்ட அறிவுரையின்படி… “இருக்கூஊஊஊ……ஆனா இல்ல…..” போலத்தான் பேசணும்.. பிரச்சனைகளை சொல்லணும்….ஆனா முழுசா சொல்லக்கூடாது. காரணம் இந்திய மதிப்பை பொதுவெளியில் காப்பாத்துற பெரும்பொறுப்பு இன்னிக்கு எங்கிட்ட. இந்தியக் கல்விமுறை பத்தி எடுத்துக்கூறி , இந்தியாவில் பொதுப்பள்ளியும், தனியார் பள்ளியும் 7:5 என்ற அளவில் உள்ளதையும், ஐந்து வகையான கல்விபாடத்திட்டங்கள் இருப்பதையும் கூற அனைவர் முகத்திலும் வியப்பும், கேள்விக்குறியும் தோன்றியது. ( இதத்தான் சிஸ்டம் சரியில்லன்னு சிலர் சொல்றாங்களோ ??)

அதே போல ஆரம்பக் கல்வியில் 95 சதவீதமாக இருக்கும் மாணவர் சேர்க்கை, உயர்கல்விக்குச் செல்லும்போது 25 சதவீதமாக குறையும் மாயத்தையும் எடுத்துச்சொல்லிட்டு, இந்தியா சுதந்திரம் அடைந்த போது 1947 ல் 12 சதவீதமாக இருந்த கல்வியறிவு பெற்றோர் சதவீதம் இன்று 74 சதவீதமாக உயர்ந்திருப்பதைக் கூறிய போது கைதட்டல் கேட்டது. வயதுவந்தோரில் கல்வியறிவு பெறாதோர் எண்ணிக்கை 287 மில்லியன் என்பதையும், அதாவது உலகின் மொத்த கல்வியறிவு பெறாதோரில் 37 சதவீதம் என்ற எண்ணிக்கையில் உலகில் முதல் இடத்தில் இந்தியா இருப்பதையும் கொஞ்சம் வெட்கத்துடன் ஒத்துக் கொண்டேன்.

நான் சந்தித்த வகுப்பறைச் சிக்கல்கள், பெண்குழந்தைகள் இடைநிற்றலுக்கான காரணங்கள் , ( பொருளாதாரம், பாலினப் பாகுபாடு, சாதீய அமைப்புமுறை) இடைநிற்றலைக் குறைப்பதற்கான பரிந்துரைகள் ( எல்லாம் பேஸ்டு ஆன் காசு, பணம் துட்டு மால் தான்.!!) மற்றும் கிராமப்புறங்களில் பெண்குழந்தைகளுக்கு வீட்டிலும், சமூகத்திலும் உள்ள பிரச்சினைகள் என எனக்குத் தெரிந்த செய்திகளை பொறுமையுடன் , ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும் என்ற அளவில் சொல்லி முடித்தேன். வாவ்…….எக்சலன்ட்… எக்சலன்ட் ஸ்பீச் டெலிவர்டு பை அ க்யூட் ( நோட்பண்ணிக்கோங்க!!) லேடி, ப்ரம் இந்தியான்னு பேட்ரிக் ரோச் மேலும் பல மானே, தேனே பொன்மானே போட்டு பாராட்ட பாராட்ட, செம கைதட்டல்கள் வேறு.( சாமி சத்தியமா, மெய்யாலுந்தான் , நம்புங்க!!!)

நைஜீரியா

அடுத்ததாக, நைஜீரியாவின் ஒசிங்குவா அபியோலா, நைஜீரியாவின் கல்வி அமைப்பு 1 – 6 – 3 – 3 – 4 அதாவது 1வருடம் முன் ஆரம்பக் கல்வி 6 வருடம் ஆரம்பக்கல்வி 3 வருடம் ஜூனியர் செகன்டரி, 3 வருடம் சீனியர் செகன்டரி – 4 வருடம் கட்டாய பிரதேசக் கல்வி என விளக்கினார். இந்த சிஸ்டம் சைனாவிலும், ஜெர்மனியிலும் செயல்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற சிஸ்டமாம். ஆனாலும் நைஜீரியாவில் 10 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கூடம் பக்கம் மழை, வெயில், காத்தடிச்சாக்கூட ஒதுங்கினது இல்லியாம். இந்தப் புள்ளிவிபரத்துடன், உலகில் முதலிடத்தில இருக்கும் நைஜீரியா, அரைகுறையாக படித்தவர்களாலும், 60 மில்லியன் எழுத்தறிவில்லாத நைஜீரியர்களாலும் நிரம்பியிருக்கிறதாம். படித்த, தகுதிமிக்க மாணவர்களுக்கோ கடுமையான கல்விக்கட்டணத்தால் தனியார் யுனிவர்சிட்டிக்குள் நுழையவே முடியாமல், கல்விக்கு எண்ட் கார்டு போட வேண்டிய நிலையாம்.

பாகிஸ்தான்

கேட்கக் கேட்க நாமெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியில் பிறந்திருப்பதாகத் தோன்ற, ஹமாரா பாரத் தேஷ் மேல ப்யார் பெருக்கெடுத்து ஓடியது. அடுத்து , பாகிஸ்தானின் ஜாகூரின் முறை – பாகிஸ்தானின் மலைப்பாங்கான பகுதியில் கல்வியறிவு பெற்ற பெண்கள் 9.5 சதவீதம் தானாம். நைஜீரியாவிற்கு அடுத்து உலகில் இரண்டாவது பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கொண்ட நாட்டில், ஆண் பெண் சமத்துவ இடைவெளியில் ( Gender gap) இரண்டாவது மோசமான நாடாம். ம்ம்ம் அதான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ( 2012அக்டோபர்ல) மலாலாவை வெச்சி செஞ்சீங்களேப்பானு நெனைச்சிகிட்டேன்.

பெல்ஜியம்

பெல்ஜியத்திலிருந்து வந்த டேவிட், பவர்பாயிண்ட்லாம் போட்டு பகுமானம் பண்ண, “ தொரை படம்லா காட்டுதே “ன்னு ஆச்சர்யப்பட்டோம். அமெரிக்காவின் கேதரின் பேச்சும் சிறப்பு, ரெண்டு பேரிடமும் பெரிசா கம்ப்ளெயிண்ட் இல்ல.

லெபனான்

லெபனானின் ரியாட் அவரது நாட்டு அலுவல் மொழியான அரபு மொழியில் பேசினார். ஆறு வயது முதல் பதினான்கு வயது வரை கட்டாயக் கல்வியாம். 2013 ல் World Economic Forum எடுத்த ஆய்வின்படி கல்வித்தரத்தில் உலகில் பத்தாவது இடத்தையும், அறிவியலிலும் கணிதத்திலும் 5 வது இடத்தில் இருக்காம். ம்ம்ம்ம். சமூகம் பெரிய இடம் போல….அவர்களது ஒரே பிரச்னை, பல காலமாக சண்டை நடந்து கொண்டிருக்கும் பக்கத்து நாடான சிரியாவிலிருந்நு சாரை சாரையாக படையெடுத்து வரும் சிரிய அகதிகளுக்கு கல்வி கொடுக்க முடியாமல் தடுமாறுவது மட்டுமே.

இப்படியாக நாங்கள் எங்கள் சொந்தக் கதைகளை கொஞ்சம் சோகத்துடனும் நிறைய எதிர்பார்ப்புகளுடனும் புலம்பித்தள்ள, பல்வேறு முக பாவனைகளுடன் கேட்டுக் கொண்டார்கள். ஐநாவின் அடுத்த இலக்குகளை வரையறை செய்யும் போது நாங்கள் பேசியதையெல்லாம் கருத்தில் எடுத்துக்குவாங்களாம்…கேட்கவே ரொம்ப்ப்ப்ப பெருமையா இருந்திச்சு.

மொத்தத்தில நாங்க பேசினதில தெரிஞ்சிக்கிட்டது என்னனா, கல்வியைப் பொறுத்த வரை அமெரிக்காவும், ஐரோப்பாவும் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைனு’ வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க, ஆப்ரிக்க நாடுகள் அய்யோ பாவமாய் பஞ்சத்தில் தத்தளிக்க, ஆசிய நாடுகள் கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலனு கெத்த விட்டுக் கொடுக்காமல் பேலன்ஸ் பண்ணிட்டு, மிடில் க்ளாஸ் வாழ்க்கை வாழறதை பார்க்க முடிஞ்சது.

எல்லாரும் பேசி முடிச்சதும் கேள்வி பதில் செசன்….. ஆம் நீங்கள் யூகிப்பது சரிதான் மக்கழ்ழே…‘ பேசிய எழுவரில், அதிகப் படியான கேள்விகளைச் சந்தித்த வீராங்கனை என்ற பெரும்பேறைப் பெற்றாள் ரமாதேவி என்பதை தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் யுவர் ஆனர்.’……….

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!