அடுக்களை டூ ஐ நா – 11

தெருவெங்கும் ஆங்காங்கே மியூசிக் ட்ரூப்ஸ் புரியாத பாஷைல பாடிக்கொண்டே மெலிதாக ஆடிக்கொண்டிருப்பதும், அழகழகான பெண்கள் மாடல்ஸ் போல ட்ராமா தியேட்டர் வாசலில் நின்னு ட்ராமா பார்க்க கூப்பிடுவதும் , ஏதேதோ டிஸ்கவுன்ட் கூப்பன் அங்கங்க கொடுத்திட்டு இருப்பதும், புதுசா திறந்த காஸ்மெட்டிக் கடையில மேக்கப் கிட் ப்ரீயா கொடுத்ததும், பர்ஃப்யூம் கடை வாசலில நின்னு போறவங்க, வர்றவங்க மேலெல்லாம் பர்ஃப்யூம் அடிப்பதும், கொகோ கோலா கம்பெனியிலிருந்து டெஸ்ட் ட்ரிங்க் அழகான பாட்டிலில் கொடுப்பதுமாக… ஏரியாவே கலகல…பளபள….சலசல….

இதெல்லாம் வாங்கக் கூட ஆளில்லை. சிரிச்சிக்கிட்டே மறுத்து, விலகிப் போறாங்க எல்லாரும். நாங்கல்லாம் , ஓசில கொடுத்தா வெசத்தக்கூட வாங்கிட்டு வந்து எதுக்காவது தேவைப்படும் னு பீரோல பதுக்கிவச்சிடுவோம்லே. எங்ககிட்ட ட்ரெயினிங் எடுங்க மக்கா…இவ்ளோ டீஜன்ட்டா இருந்தா என்னிக்கு முன்னேற?

கும்பக்கரை அருவிக்கு பொங்கி ஆர்ப்பரிச்சு வர்ற காட்டாத்து வெள்ளம் போல சந்தோச மனநிலையோட மக்கள் வெள்ளம் போயிட்டு இருக்கு. அந்த வெள்ளத்தில தம்கட்டி, தக்கைபோல் மிதந்து மிதந்து, 41 வது தெருவில ஒசந்து நிக்கற டைம்ஸ் டவரில் கரைசேர்ந்தோம். 47 மாடியாம், 724 அடி உயரத்தில் கர்வமா நிக்குது. முக்கியமான பெரிய பெரிய A டைப் ஆஃபிஸ்லாம் இங்கதான் இருக்காம். கேதரின்கிட்ட கதை கேட்டுட்டே சுத்தி சுத்தி பார்க்கறேன் . நாலு பேர் தான் நிக்கறோம், நாலு பேர் மிஸ்ஸிங். திடுக்னு ஆயிடிச்சி.

வீரபாண்டி திருவிழாவுல காணாமல் போன குட்டீஸை மைக் ல அறிவிப்பது போல பண்ணலாமா னு கூட ஒரு கணம் யோசிச்சோம். நாலு நாலு பேரா பிரிஞ்சிருக்கோம், இப்ப மிஸ் ஆனது நாங்களா…அவங்களா.. அவ்வ்வ்வ்வ் என்ன செய்யனு புரியல. இன்டர்நேசனல் ரோமிங் கொள்ளை விலை என்பதால் எல்லாருமே ஹோட்டல் வைபையை ஓசியில் பயன்படுத்திக் கொண்டிருந்ததால் செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியல. ஆனால் ஹோட்டலிலிருந்து கிளம்பும்போதே அந்த அழகான (!) ஆண் ரிஷப்சனிஸ்ட் எல்லாரிடமும் ஆளுக்கொரு ஹோட்டல் விசிட்டிங் கார்டும், மன்ஹட்டனில் எங்கு சென்றாலும் ஹோட்டல் வருவதற்கான வரைபடமும் கொடுத்திருந்ததால், சுற்றி முடித்து , எப்படியும் ஹோட்டலுக்கு வந்துடுவாங்கன்னு தேடலைக் கைவிட்டு, கூட்டத்தில் கரைந்தோம்.

சில சில கடைகளில் நின்று விண்டோ ஷாப்பிங் செய்து , ஒருசில பொருட்களின் விலை கேட்டு , மிடில் கிளாஸ் மாதவிகளாய் அவரவர் நாட்டு ரூபாய்க்கு கன்வர்ட் செய்து பார்த்துவிட்டு, கம்முனு இருந்திட்டோம். ஒரு பட்டாளமே வழியனுப்பி வைச்சிருக்காங்க. சாப்பிடக் காசு இருக்கோ இல்லியோ, எல்லாருக்கும் ஏதாவது வாங்கிட்டுப்போகலனா நம்ம இமேஜ் என்ன ஆவறது? முடிவில் அகில உலக வழக்கப்படி அமெரிக்கக் கொடி போட்ட கீ செயினும், சுதந்திர தேவி சிலையும், ஃப்ரிட்ஜ்ல ஒட்டற மேக்னடிக் ஸ்டிக்கரும் வாங்கியாச்சி.

நடக்க நடக்க தாமஸ் ராய்ட்டர் பில்டிங் ( உலக அளவில் முக்கிய சர்வேக்களை எடுக்கும் செய்தி நிறுவனம்) , “தி நியூயார்க் டைம்ஸ்” பத்திரிக்கை ஆபீஸ், எம் டிவி நெட்ஒர்க்ஸ்னு நாம அப்பப்ப செய்தித் தாளிலும், தொலைக்காட்சியிலும் கேள்விப்பட்ட பெயர்களெல்லாம் விஸ்வரூபம் எடுத்து கட்டிடங்களாய் கண் முன்னால் நிக்குது.

எல்லா முக்கிய நிறுவனங்களும் இங்க துண்ட போட்டு உட்கார்ந்திருப்பதால் அமெரிக்காவின் மிகப் பெரிய வர்த்தக, நிதி ஆதார கலாச்சார மையமாக மன்ஹட்டன் பார்க்கப்படுது. அதுமட்டுமல்ல, ஐக்கிய அமெரிக்காவின் தலைமையகமும் இங்கதான் இருக்கு. அதனால் உலகத்தையே பாதிக்கக் கூடிய மிக முக்கிய அமெரிக்க முடிவுகள் மன்ஹட்டன் மூளைகளிலிருந்து தான் உருவாகுதுன்னு சொல்லலாம்.

மன்னா – ஹாடா என்ற பெயர் தான் நாளடைவில் மன்ஹட்டனா மாறியிருக்கு. 1609 லயே மாலுமி ராபர்ட் ஜூயட்டின் குறிப்புப் புத்தகத்தில் மன்னா ஹாடா என்ற பெயர் தான் திரும்பத் திரும்ப பயன்படுத்தப் பட்டு வந்திருக்காம். மன்ஹட்டன்ங்கற லெனாபி சொல்லுக்கு பல குன்றுகளைக் கொண்ட தீவுன்னு அர்த்தமாம். ஆனால் இப்ப குன்றுகள் இருக்கறா மாதிரியே தெரியல…நல்லவேளை மேரி கேதரின் எங்க மிஸ்ஸிங் டீம் (!)ல இருந்ததால இப்படி நெறய விஷயங்களை தெரிஞ்சிக்க முடிஞ்சது.

ஊர்ந்து ஊர்ந்து 42 வது தெருவிற்குள் நுழைய, ஹார்ட் ஆப் மன்ஹட்டன்ல, உலகப்புகழ் வாய்ந்த மேடம் துசாட் ( Madame Tussaud’s) மெழுகு மியூசியம் கண் முன்னே கண்ணடித்தது . ஒரு காலத்தில உலகம் சுற்றும் பயணப்பிரியர்களுக்கு இலண்டன்ல இருக்குற துசாட் மியூசியம் பார்க்கறது ஒரு கனவாகவே இருந்திச்சு.. முதல் மெழுகு கண்காட்சி லண்டன்ல 1884லேயே தொடங்கப்பட்டது. இப்ப 20 நாடுகள்ல அதோட ப்ரான்ச்சைஸ் இருக்கு. அதில் ஒண்ணாகத்தான், 2000 த்தில மன்ஹட்டன்ல திறந்திருக்காங்க. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள்னு உலகை உலுக்கும் வரலாற்று நாயகர்களின் உருவங்களை அச்சு அசலாக மெழுகில் வார்த்து வைத்திருப்பார்கள்.

மர்லின் மன்ரோ முதல் சன்னிலியோன் வரை, சச்சின் முதல் உசேன் போல்ட் வரை, ஒபாமா முதல் மோடி வரை நெருங்க முடியாத பிரபலங்களின் மெழுகு உருவங்களின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து ஆசையைத் தீர்த்துக் கொள்ள கட்டணம், கிட்டத்தட்ட நம்ம ஊர் காசுக்கு 3000 ரூபாய். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தான் திறந்திருக்கும் என்பதால் எங்களுக்கு பார்க்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனாலும் வாசலில் நின்ற பெயர் தெரியாத மெழுகுபொம்மையுடன் போட்டோ எடுத்து நாங்களும் மேடம் துசாட் பார்த்திட்டோமேனு தம்பட்டம் அடிச்சிக்க ஆவணப்படுத்திக்கிட்டோம்.

சாத்தூரில் கிளம்பியது முதலான நீண்ட பயணம், நேரமாற்றத்தினால் ஏற்பட்ட ஜெட்லாக், ஓய்வில்லாத தொடர் வேலைகள் எல்லாம் சேர்ந்து, கொஞ்சமாவது ரெஸ்ட் கொடும்மா தாயீன்னு உடம்பும், மூளையும் கெஞ்ச, அறைக்கு திரும்ப முடிவு செய்து நடக்கத் தொடங்கினோம். “ நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது….பனியும் படர்ந்தது. தனிமை தனிமையோ…கொடுமை கொடுமையோ” நினைவுக்கு வர, வாலியின் பாடலில் இருந்த பனி மட்டும்தான் உண்மை, நகரின் உறக்கமும், தனிமையும் கவிஞரின் கற்பனைதான். எப்போ நகரம் உறங்கும்னு தெரியல. தூங்கா நகரம்ங்கற பெயர்ப் பொருத்தம் சரியாத்தான் இருக்கு. காலை ஒன்பரைக்கு ஹோட்டல் லாபியில் மீட் பண்ண வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் தூங்கப் போனோம்.

காலையில பளபளன்னு கிளம்பி ( இன்னிக்கு நம்ம ப்ரோகிராம்ல?)சொன்ன நேரத்துக்கு ஆஜராகியாச்சு. உலகக் கல்வி அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பேட்ரிக் ரோச் எங்களுக்கு ஒரு மாதிரி வகுப்பே எடுத்தார். எப்படி பேசணும், பேனலிஸ்டா இருக்கும் போது எப்படி நடந்து கொள்ளணும், கேள்வி பதில் செஷனில் எப்படி கேள்விகளை ஹேண்டில் செய்யணும்னு கிளிப்பிள்ளைக்கு சொல்றா மாதிரி தெளிவா விளக்கிட்டார். ஏனெனில், “வகுப்பறைகளில் தரமான கல்வியை வழங்குவதில் உள்ள பிரச்சினைகள்” குறித்து நாங்கள் பேசியபின் அதற்கான தீர்வுகளை தரப்போவது ஐ நா தொடர்புடைய படா படா ஆள்கள். அதனால் ஏகப்பட்ட புரோட்டாகால்ஸ். 36 வயதினிலே ஜோதிகா போல எப்பவேணா மயக்கம் வரலாம் ஃபீலிங் நமக்கு.

சரியா பதினோரு மணிக்கு, எந்நேரமும் அழுதுவிடத் தயாராய் இருக்கும், முதல் நாள் ஒண்ணாப்பு போற பிள்ளைகள் போல திக் திக் மனசோட கிளம்பினோம். என்னதான் உள்ளூர்ல மைக் கெடைச்சா, லோக்கல் அரசியல்வாதி போல பொளந்து கட்டினாலும், இப்ப புஸ், புஸ்சுனு காத்துதான் வரும்போல இருக்கு. CONVENE என்ற கூட்ட அரங்கில், Greenough Hub என்ற அறையில் தான் இன்றைய நிகழ்வு. நியூயார்க்கின் மிகப் பெரிய கருத்தரங்க அரங்காம். அரங்கை அடைந்தவுடன் வெல்கம் லஞ்ச். வழக்கம் போல கண்களுக்கு மட்டுமே விருந்தாக(!) அமைந்தது.

ஐக்கிய நாடுகள் சபை, “தரமான கல்விக்கு ஒன்று படுவோம் ( Unite for quality education – Better education for a better world)” என்ற முழக்கத்துடன் முன்னெடுத்து வந்த தொடர் நிகழ்விற்கான உச்சநிகழ்வே இன்று நடக்கவிருப்பது. இந்தியா ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டி , குறிக்கோள்களை வரையறுத்து, அதை ஐந்து ஆண்டிற்குள் முடிக்க முயற்சிப்பது போல, 2000 ம் ஆண்டில், ஐக்கியநாடுகள் சபை உலக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக “8 மில்லினியம் டெவலப்மென்ட கோல்களை ( MDG – மில்லினியம் வளர்ச்சி இலக்குகள் )” உருவாக்கி அவற்றை 2015 க்குள் நிறைவேற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கியது.

உலக நாடுகளெல்லாம் MDG இலக்கை அடைய உறுதி எடுத்துக்கொண்டன. அந்த 8 MDGSல் இரண்டு குறிக்கோள்கள் நேரிடையாக கல்வியுடன் தொடர்புடையவை. குறிக்கோள் 2 – 2015க்குள் உலகில் உள்ள அத்தனை குழந்தைகளும் தரமான ஆரம்பக் கல்வியை முடித்தல். குறிக்கோள் 3 – பள்ளிகளில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டல். இந்த இலக்குகளைத்தான் அடைய முடியவில்லையென முந்திய நாள் ஐ நா பொதுச்சபையில் அத்தனை நாட்டுத்தலைவர்களும் வேதனைப்பட்டனர்.

உலகக் கல்வி அமைப்பு ஏற்கனவே கல்வி தொடர்பான பிரச்சாரங்களை, செயல்பாடுகளை 170 நாடுகளில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதால், கல்வியுடன் தொடர்புடைய இந்த இரண்டு குறிக்கோள்களையும் கையில் எடுத்துக்கொண்டு, ஐ நா, யூனிசெப், யுனெஸ்கோ மற்றும் உலக வங்கியின் உதவியுடன் பல்வேறு கருத்தரங்குகள், தொடர் பயிற்சிகள், பள்ளிகளில் களச் செயல்பாடுகள், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள், தேவைப்படும் நேரங்களில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என தொடர்ச்சியாக இயங்கி வந்தது. ஐ நாவின் பதினைந்து ஆண்டு கால குறிக்கோள்களுக்கான காலவரையறை அடுத்த ஆண்டுடன் (2015) முடிவடைவதால், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு எல்லா உலக நாடுகளும் தயாராகி வருகின்றன.

இந்த செப்டம்பர் 23,24,25 மூன்று நாட்களும் அந்த தொடர்ச்சியான முன்னெடுப்பில் தத்தம் நாடுகளின் பங்கையும், தற்போது தங்கள் நாட்டின் கல்வி நிலையையும் பகிர்ந்துகொண்டு, இந்த பிரச்சாரத்தை முடித்து வைத்து அடுத்த நடவடிக்கையை கையில் எடுக்கின்றன. சரியாக ஒரு மணிக்கு அவரவர் இருக்கைக்கு வர நிகழ்வு தொடங்கியது.

தொடரும்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

ரமாதேவி ரத்தினசாமி

எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!