தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும் பகுதி – 9

ஃபாரின்னு சொன்னதும் எல்லாருக்குமே மனசுல ஓடுவது சீட்டுக்கட்டு மாதிரி அடுக்கி வைக்கப்பட்ட உயரமான கட்டிடங்கள்தாம். கட்டிடங்கள் எப்போதுமே ஒரு ஊரோட அடையாளமாகவேதான் பார்க்கப்பட்டிருக்கு. நியூயார்க்னா டைம்ஸ் சதுக்கம், சிட்னினா ஓபரா ஹவுஸ், பாரிஸ்னா ஈஃபில் டவர்னு கண்ணை மூடிட்டு ஒப்பிப்போம். ஒரு நகரம் வளர்ந்து வருவதற்கான அடையாளமே அங்கு எழுப்பப்படுற கட்டிடங்கள்தாம்.

ஐம்பதுகள்ல கட்டப்பட்ட சென்னையின் முதல் ஸ்கைஸ்கிராப்பரான (skyscraper) எல்.ஐ.சி கட்டிடம் சென்னையோட அழிக்கவே முடியாத வரலாற்றுச் சின்னமா மாறிப்போனது. ‘மெட்ராஸ் போனா அண்ணா சமாதி, எம்.ஜி.ஆர் சமாதி, எல்.ஐ.சி கட்டிடம் எல்லாம் பாக்கணும்’னு நான் சின்னப் பொண்ணா இருக்கும்போது அம்மா சொன்னது இப்போ கூட நியாபகம் இருக்கு.

சென்னை வாடையே தெரியாத எனக்கு துபாயில திரும்பின பக்கமெல்லாம் நிக்குற ஸ்கைஸ்கிராப்பர்ஸ பார்த்து மலைத்துப் போவது ஒண்ணும் தப்பில்லைதானே? கோவை டூ துபாய்னு ஸ்டெரெயிட்டா பாயிண்டு டூ பாயிண்ட் பஸ் மாதிரி வந்து இறங்கின எனக்கு இங்க உள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் எப்போதுமே பிரமிப்பைத்தான் கொடுத்திருக்கு. அதென்ன சொல்லுவாங்க… ‘பட்டிக்காட்டான் முட்டாய் கடையைப் பார்த்த மாதிரி’ன்னு… அதேதான்!

டவுன்டவுன்(Downtown)க்குள்ள கார் நுழையும்போதே மனசு சிலிர்க்க ஆரம்பிச்சிரும். ‘அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்… ராராராராராரா… ராராராராராரா…’ன்னு மனசுக்குள் வைரமுத்துவின் வரிகள் ஒலிக்க ஆரம்பித்துவிடும். ஒவ்வொரு கட்டிடமும் ஒவ்வொரு விதமான அழகு. சிலது முழுசும் கண்ணாடி போர்த்தி பார்ப்பதையெல்லாம் பிரதிபலிச்சிட்டு இருக்கும். சிலது காதலனைப் போல் பக்கத்து கட்டிடத்தை கட்டிப்பிடிச்சுட்டு நிக்கும்.சிலது பாம்புத்தோல் போர்த்தினது மாதிரி இருக்கும். சிலது எப்போ வேணாலும் டமால்னு கீழ விழுந்திடுமோங்கறா மாதிரி கொஞ்சம் சாஞ்சுட்டு நிக்கும். சிலது உடம்பெல்லாம் முறுக்கேறிப் போன பயில்வானைப் போல இருக்கும். போட் வடிவில், டால்பின் வடிவில், முட்டை வடிவில்னு ஒவ்வொண்ணும் ஒவ்வோர் அழகுல கண்ணைக் கொள்ளை அடிக்கும்.

ஆரம்பத்துல எனக்கும் கட்டிடங்கள் மேல பெரிய ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. ‘என்ன இருந்தாலும் இயற்கைக்கு முன்னாடி செயற்கை வெறும் தூசு’ன்னு சாதாரணமாத்தான் கடந்திருக்கேன்.இப்படி மனசுக்கு பொய்க்காரணம் சொன்னாலும் தாஜ்மஹால் என் கனவு இடமாக இருந்திருக்கேன்னு யோசிக்கும்போது, என்னதான் இயற்கை நமக்கு அழகை அள்ளி அள்ளித் தெளித்தாலும் மனித இனம் உருவாக்கும் அளப்பரிய செயலுக்கு மனம் மயங்கத்தான் செய்யும்னு எனக்குத் தோண ஆரம்பிச்சிருச்சு.

இங்குள்ள கட்டிடங்கள் பார்ப்பதற்கு அதியற்புதமாகவே இருந்தாலும், நாமெல்லாம் அங்க போய் பார்க்க முடியுமான்னா அது பெரிய கேள்விக்குறிதான். மிகப்பெரிய வணிக வளாகங்களும், ஐந்து நட்சத்திர விடுதிகளுமே அதிகமாக துபாயை ஆக்கிரமித்து இருக்கும்.டவுன்டவுன் பக்கமா போனோமா வெளியே நின்னு போட்டோ புடிச்சு இன்ஸ்டாகிராம் பக்கத்துல அப்லோட் பண்ணமான்னுதான் இருக்க முடியும்!

நூற்றி ஐம்பது மீட்டருக்கும் அதிகமான உயரம் உள்ள கட்டிடங்கள் கொண்ட நகரங்களின் வரிசையில் உலகிலேயே நாலாவது இடமும், வளைகுடா பகுதிகளில் முதல் இடமும் வகிக்குது துபாய். வளைகுடா பகுதியாக இருப்பதால், பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகளுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால், இங்கு இருக்கும் ஸ்கைஸ்கிராப்பர்ஸ் எல்லாமே அசால்ட்டா ஐம்பது மாடிகள் வரை இருக்கும். ஏறக்குறைய அனைத்துமே முன்னூறு மீட்டருக்கும் அதிகமான உயரங்கள். இப்படியான கட்டிடங்கள் எல்லாமே நான் நீன்னு போட்டி போட்டுக்கொண்டு ஏதாவது ஒரு புதுமையை புகுத்தி தன்னை மற்ற கட்டிடத்தில் இருந்துவேறுபடுத்திவிடும். அப்படி செய்துவிடும் பட்சத்தில் அதில் அதிக பொருட்செலவும் உழைப்பும் இருப்பதால் அது ‘உலகிலேயே முதல் முறையாக’ என்று பெயர்பெற்றுவிடும். MENA (Middle East and North Africa) என்று சொல்லப்படும் இந்த பகுதிகளில் அதிகமான கின்னஸ் ரெக்கார்டுகளை வைத்திருப்பதும் அமீரகம் தான்.

நாமெல்லாம் கடல்லயோ, ஆத்துலயோ, குளத்துலயோதான ஸ்விம்மிங் பண்ணுவோம். இங்க தரைமட்டத்தில இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் அடி உயரத்தில் நீச்சல்குளம் கட்டி நீச்சலடிக்கிறார்கள். கேட்டா அதான் த்ரில்லிங்கா இருக்காம். அட்ரெஸ் பீச் ரெசார்ட்(Address Beach Resort)ன் இரட்டைக் கோபுரங்களுக்கு நடுவில் எழுபத்தி ஏழாவது மாடியில் கிட்டத்தட்ட முன்னூறு அடி நீளமும், அறுபது அடி அகலமும் கொண்ட இன்ஃபினிட்டி நீச்சல்குளம் (Infinity Swimming Pool) கின்னஸ் சாதனைகளுள் ஒன்று. வானத்திலும் சேராமல், கடலிலும் சேராமல் இரண்டிற்கும் நடுவில் நீச்சலடித்து ஓர் அற்புத அனுபவத்தைப் பெறலாம். புள்ளகுட்டி இருந்தா அவங்களை வீட்டுலயே விட்டுட்டு வந்திடணும். பெரியவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. அதை விட முக்கியமான விஷயம் நீச்சல் தெரிஞ்சிருக்கணும்!

நடிகர் கவுண்டமணி ஒரு படத்துல லாட்டரி டிக்கெட் அடிச்சதும், ’இந்த தெரு என்ன விலை’ன்னு கேட்டு காமெடி பண்ணுவார். அது போல இவங்களும் உலகத்துல இருக்குற பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் ஓரம் கட்டும் விதமாக பல ஸ்கைஸ்கிராப்பர்களை நாடெங்கும் அள்ளித் தெளிச்சிருக்காங்க. பாரிஸ் நகரத்தின் பைசா சாய்ந்த கோபுரம் இன்றும் உலக அதிசயமாக திகழ்கிறது. அடித்தளத்தில் ஏற்பட்ட சிறு கோளாறால் ஒரு பக்கமாக சாய்ந்த கோபுரம் பின்னர் சரி செய்யப்பட்டது.

பைசா கோபுரத்தைப் போலவே வேண்டுமென்றே சாய்வாக ஒரு கட்டிடத்தை எழுப்பலாம் என்று மலேசியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் முயற்சி செய்திருக்கின்றன.ஜெர்மனியில் இருக்கும் சுர்ஹுஸ்ஸென் சர்ச் (Suurhusen Church) 2010 வரையிலும் உலகிலேயே சாய்வான கட்டிடமாக கின்னஸில் இடம் பிடித்திருந்தது. அதிலும் அமீரகம் முன்னோடியாக கிட்டத்தட்ட 18 டிகிரி சாய்வாக ஒரு கட்டிடத்தை எழுப்பி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. அபுதாபியில் உள்ள கேப்பிடல் கேட் டவர் (Capital Gate Tower) நூற்று அறுபது மீட்டர் உயரத்தில் 18 டிகிரி மேற்குப்புறமாக சாய்ந்து இருப்பதுதான் இப்போதைய உலகின் மிகவும் சாய்ந்த கட்டிடம்.

உலகிலேயே உயரமான ஹோட்டலும் துபாயில்தான் இருக்கிறது. 488 மீட்டர் உயரத்தில் ஹாங்காங்கில் உள்ள ரிட்ஸ்-கார்ல்டன்(Ritz-Carlton) ஹோட்டல்தான் உலகிலேயே உயரமான ஹோட்டல். இருந்தாலும் அதில் சில குடியிருப்புகளும், வர்த்தக நிறுவனங்களும் இருப்பதால் துபாயில் உள்ள தி கிவோரா ஹோட்டல் (The Gevora Hotel) தான் உலகிலேயே உயரமான ஹோட்டல் என்று பெயர் பெற்றிருக்கிறது. எவ்ளோ உசரத்துல இருந்து சாப்பிட்டா என்ன அதே வயிறுதானே!

சிலருக்கு உயரமான இடத்துக்குச் சென்று வாழ்க்கையைப் பார்ப்பது ஒரு கிரேஸ்தான் போல. என் தோழி ஒருவரின் மகன் அவர் காதலிக்கும் பெண்ணை நியூயார்க்கில் உள்ள உயரமான கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று புரபோஸ் செய்த கதையை என்னிடம் சொல்லி மகிழ்ந்திருக்கிறார். உயரங்கள் செல்வது மனிதனின் ஜீனில் அழிக்க முடியாத பகுதியோ என்று தோன்றுகிறது.

இவ்ளோ பில்டப்போட நான் இப்போ நின்னு செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பது எங்கேன்னா உலகிலேயே உயரமான புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) கட்டிடத்தின் முன்னால்தான். கீழே இருந்து கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து மலைத்துப்போய் நின்னுட்டு இருந்த எனக்கு ‘நாம இந்தக் கட்டிடத்துக்குள்ள போலாமா’ன்னு என் கணவர் கேட்டதும் ‘இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே’ன்னு குஷியாகிட்டேன். உலகிலேயே உசரமான இடத்துக்கு உங்களைக் கூட்டிட்டு போறேன் வாங்க! எங்களுக்கு டிக்கெட் உண்டு உங்களுக்கு டிக்கெட்டெல்லாம் இல்ல… அட சும்மா வாங்க!!!

கிஸா கிரேட் ப்ரமிட்(Giza Pyramid), ஈஃபில் டவர் பாரிஸ்(EiffleTower), எம்பயர் ஸ்டேட் பில்டிங் நியூயார்க்(Empire State Building), பெட்ரோனஸ் டவர் மலேசியா (Petronas Tower), சி.என் டவர் டொரொன்டோ (CN Tower), எல்லாத்தையும் விட புர்ஜ் கலிஃபா உயரமானது .829.8 மீட்டர் (கிட்டத்தட்ட 2,800 அடி) உயரத்தில் 160 தளங்களின் வெளிப்புறம் முழுவதும் அலுமினியம் மற்றும் கண்ணாடித் தகடுகளால் போர்த்தப்பட்டு ஒரு மாபெரும் வைரக்கல் மின்னிக் கொண்டிருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். இதோட உயரத்தைக் கம்பேர் பண்ணணும்னா, புர்ஜ் கலிஃபாவின் 124-வது மாடியில் பாரிஸின் ஈஃபிள் டவரோட அடித்தளத்தை வெச்சோம்னாகூட, அப்பவும் புர்ஜ் கலிஃபாதான் உயரமான கட்டிடமாக இருக்குமாம். யம்மாடியோவ்!

2004-ம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டு, ஆறு வருடம் கழித்து, 2010-ம் ஆண்டு திறக்கப்பட்டு உலக வரலாற்றில் மிக உயரமான கட்டிடமாக இடம் பிடித்திருக்கிறது புர்ஜ் கலிஃபா. 124-வது மாடியில் 452 மீட்டர் உயரத்துல At the Top அப்சர்வேஷன் டெக் (Observation Deck)னு மக்கள் பார்வைக்கான இடம் திறக்கறாங்க. 2011-ம் ஆண்டு சீனாவில் உள்ள கேனான் டவர்ல (Canon Tower) 488 மீட்டர் உயரத்துல அவங்க ஒரு அப்சர்வேஷன் டெக் போட்டுடறாங்க. பின்னர் அதுதான் உயரமான அப்ஷர்வேசன் டெக்கா மாறிடுது. அதுனால ஷாக்கான ஷேக்குக 2014-ல மறுபடியும்148-வது மாடியில SKY லெவல்னு 555 மீட்டர் உயரத்துல இன்னோர் அப்சர்வேஷன் டெக் போட்டுடறாங்க. அப்பவும் சீனாக்காரன் விடலயே. 2016ல்சீனாவின் ஷாங்காய் டவர்ல (Shanghai Tower) 561 மீட்டர் உயரத்தில மறுபடியும் ஒரு அப்சர்வேசன் டெக் போடறாங்க. அதை மிஞ்சுவதற்கு இவர்கள் இன்னும் ஒரு உயரமான கட்டிடத்தையே கட்டினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லே!

கட்டிடத்துக்குள்ள நுழைஞ்சு ஃப்ளைட் செக்கிங் மாதிரி எல்லாத்தையும் முடிச்ச எனக்கு ஒரே கேள்வி என்னன்னா அவ்வளவு உயரத்துக்கு போறதுக்கு லிஃப்ட்ல எவ்வளவு நேரம் பிடிக்கும்கறதுதான்.பழனிக்கே பாதயாத்திரை போன பரம்பரை… ‘நான் மாடிப்படிகளில் ஏறித்தான் வருவேன்’னு அடம் பிடித்தால் 2909 படிக்கட்டுகள் இருக்குன்னு தகவல் கிடைச்சது. ஆனாலும், படிக்கட்டுகள் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாதுன்ற தகவலும் கிடைச்சது. நாலு மாடி இருக்கற கட்டிடத்துக்கு லிஃப்ட்டுல போனாலே அரை நிமிஷம் ஆகிருது. 124 மாடி ஏறுறதுக்கு மருதமலை ஏறுற மாதிரி அரை நாள் ஆகும்னு நினைச்சுட்டே லிஃப்ட்ல ஏறினேன்.

லிஃப்ட்ல ஏறுனதும் லைட்முழுசும் ஆஃப் ஆகி சுத்தியுள்ள லிஃப்ட் சுவர் முழுக்க ஒரு ரிதமிக் மியூஸிக் சேர்ந்த அனிமேஷன், கூடவே மேல் தளத்துக்கு ரீச் ஆகும் நேரத்துக்கான கவுன்ட் டவுனும் ஆரம்பிச்சது. 59… 58… 57…. … … … 38…25…… …என்னமோ எவரெஸ்ட்டு ஏறுற மாதிரி உடம்பெல்லாம் சிலிர்த்து, இதயம் படக் படக்னு துடிச்சு, கால் தரையிலே இல்லாதது போல வானில் பறந்து, மேலே ஏற ஏற காது அடைச்சு, கண்ணு சொக்கி… ‘வால்பாறை மலை உச்சி ஏறும்போது கூட நான் வாந்தி எடுத்ததில்லை. இப்படி ஒரு மார்டன் லிஃப்ட்டுல என் மானத்தை வாங்கிடாத’ன்னு என்கிட்ட நானே ஸ்டிரிக்டா சொல்லிக்கிட்டேன்.

அந்த நொடி என் மனசில் ஒரு விஷயம் உதிச்சுது. சமீபமா எவரஸ்ட்டு ன்னு ஒரு படம் பார்த்திருந்தேன். அதில் எவெரெஸ்ட் மலை ஏறுபவர்களும், அவர்கள் எதிர்கொள்கிற துயரங்களும், செல்லும் வழியிலேயே இறந்துவிட்டால், அவர்களை அங்கேயே விட்டுவிட்டு வருவது பற்றிய ஞாபகங்கள் ஒரு நிமிஷம் கண் முன்னே வந்துச்சு. அப்படி எந்தக் கஷ்டமும் படாம பெரிய உயரத்தைத் தொடுவது சாதாரண மனிதனுக்குக் கூட எளிதாகி விட்டது. இந்த தொழில்நுட்பம் செய்யும் மாயம்தான் என்ன? 10 மீட்டர்ஸ் பெர் செகண்ட் (10 m/s) வேகத்துல உலகிலேயே வேகமான லிஃப்ட்ல பயணிக்கிறேன்கற இன்னொரு சாதனையோட சரியா ஒரு நிமிஷம் கவுன்ட் டவுன் முடிஞ்சதும் லிஃப்ட் கதவு திறக்குது.

அந்தப் பக்கம் ‘வெல்கம் டூ அட் த டாப்’ (At the Top)ன்னு ஒரு செவத்த பொண்ணு வாயெல்லாம் பல்லா சிரிச்சு வரவேற்றாங்க. வாவ்… வந்தாச்சு உலகிலேயே உயரமான இடத்துக்கு வந்தே வந்தாச்சு. சீ லைஃப் ஈஸ் ஸோ சிம்பிள். ‘அதுக்காக எவெரெஸ்டு ஏறுவதும் இதுவும் ஒன்றல்லடி’ என்று கலவையான எண்ணச் சிதறல்களுடன் லிஃப்ட்டில இருந்து வெளியே வந்த எனக்கு முழுசும் கண்ணாடியால ஆன அந்த நீண்ட காரிடார் அற்புதக் காட்சியா இருந்தது. மெதுவா நடந்து அப்சர்வேஷன் டெக்கின் ஓரத்துக்குச் சென்று அங்கிருந்த கண்ணாடி வழியாக கீழே பார்த்தேன்.

மனித இனம் எப்பொழுதுமே பறப்பதற்கு ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தன்னால் பறக்க முடியாத போதும் இயந்திரத்தின் துணையைக் கொண்டாவது மனிதன் பறப்பதை கண்டுபிடித்து பல உயரங்களை அடைந்திருக்கிறான். அடையவே முடியாத எல்லையில்லாத வானம் எப்போதுமே மனிதனுக்கு ஆச்சர்யமான விஷயம்தான். உயரத்தில் இருந்து கீழே பூமியைப் பார்க்கும்போதுதான் ‘நான்’ என்பது எவ்வளவு அற்பம் என்பதும் புரிகிறது.

‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற ஒரு கூற்று உள்ளது. அதே போல ஆப்பிள் மரத்தின் கீழே படுத்திருந்த நியூட்டன் வரலாறு ஆனான். இயற்கை எப்போதுமே மனிதனின் தேடலுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறது. உலகிலேயே உயரமான கட்டிடத்தை எழுப்புவது என்ற முடிவுக்குப் பின் அதன் வடிவமைப்புக்கும் ஒரு சின்ன பூதான் உதவியிருக்கிறதுன்னு சொன்னா நம்புவீங்களா? ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தைச் சேர்ந்த அட்ரியன் ஸ்மித் (Adrian Smith) என்ற ஆர்க்கிடெக்ட் புர்ஜ் கலிஃபாவின் வடிவமைப்பாளர். ஸ்பைடர் லில்லி (Spider Lily) என்ற அழகான ஒரு பாலைவன மலரை ரெஃபரன்ஸாக வைத்துத் தான் உலகிலேயே உயரமான கட்டிடத்துக்கு வரைபடம் தீட்டினார். மேலிருந்து பார்க்கும்போது மலரின் நடுவில் நாம் நிற்பது போலவும், அதன் அழகான இதழ்கள் கீழே உள்ள பல அடுக்குகள் கொண்ட மாடியின் சுவர்களாகவும் அப்படி ஒரு கொள்ளை அழகு. ஆறு இதழ்கள் கொண்ட மலரில் மூன்று இதழ்கள் மட்டும் இருப்பது போன்ற வடிவமைப்புடன் புர்ஜ் கலிஃபா வெளிப்புறம் முழுக்க அலுமினியத் தகடுகளால் மின்னிக் கொண்டிருக்கிறது.

மத்தியானம் சாப்பிடாமக்கூட கிளம்பி வந்த எனக்கு பசியே மறந்து போச்சு. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உள்ளேயே இருக்கலாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன அங்கேயே ஒரு வசதியான இடமா பார்த்து தரையிலேயே உக்கார்ந்துட்டேன்.

பார்வையாளர்களுக்கு அனுமதி உள்ள இடத்தில் இஸ்லாத்தின் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் வடிவமான மாஷ்அராபியா (Masharabia) என்ற கட்டிடக்கலையை புகுத்தியிருக்காங்க. மேல் தளத்தில் இருக்கும் பகுதியை கொஞ்சம் நீட்டி பால்கனிபோல அமைத்து முழுவதும் மரத்தால் மூடிவிடுவது அரபுக் கட்டிடக்கலையில் உள்ள வழக்கம். உள்ளே இருப்பவர்கள் வீதியை வேடிக்கை பார்க்கலாம். ஆனால், வெளியே உள்ளவர்கள் யாரும் அவர்களை பார்க்க முடியாது. இதுபோன்ற பழமையும் புதுமையும் தாங்கி நிற்கும் கட்டிடங்கள் துபாய் முழுவதும் இருப்பது தனிச்சிறப்பு. பல்வேறு நாடுகளையும் கலாசாரத்தையும் கொண்டவர்கள் இதை வடிவமைச்சதால இந்த பில்டிங் முழுசுமே பல்வேறுபட்ட கலை வடிவங்களை அங்கங்கே வைத்துள்ளார்கள்.

‘World Voices Fountain’ என்று பல்வேறு மொழி மற்றும் குரல்களை உள்ளடக்கிய குரல் பதிவுகள் அடங்கிய நீரூற்று கட்டிடத்தின் உள்ளே நுழையும்போதே நம்மை வரவேற்கும். கரீம் ரஷித் என்ற எகிப்திய ஆர்க்கிடெக்ட் உருவாக்கிய இயற்கையாக கிடைக்கக்கூடிய கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட எவல்யூட்ஸ் (Evolutes) கலை வடிவம், இயற்கைப் பூச்சுக்களால் பூசப்பட்டு பிரதிபலிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். இந்த கலை வடிவத்தில் உள்ள ஒவ்வொரு ரிங்க் ஸ்டரக்ச்சரும் எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்றே கணிக்க இயலாமல் பார்வையாளர்களுக்கு காட்சி தரும்.

மாலை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கண்ணாடி ஜன்னலின் வெளியே என் கண் முன்னே தூரத்தில் சூரியன் மறையும் காட்சியில் மூர்ச்சை அடையாமல் நிமிர்ந்து அமர்ந்த எனக்கு உடம்பு சில்லென்று உணரத் தொடங்கியது. தரை மட்டத்தில் உள்ள வெப்பநிலையை விட மேலே 6 டிகிரி வெப்பம் குறைவாக இருக்குமென்பதால் அப்படி இருந்தது போல. நறுமணங்களுக்குப் பெயர்போன இத்தேசத்தில் நான் அமர்ந்திருந்த அந்த இடமும் புதுவித நறுமணம் வீசத் தொடங்கியது. கூடவே அரேபியன் சுலைமானி டீயின் மணமும் சேர்ந்து கொண்டது. அங்கிருந்த அனைவருக்கும் டீயும் வழங்கப்பட்டது.

டீயைச் சுவைத்தபடியே மேலிருந்து கீழே பார்த்தால் ‘துபாய் ஃபவுன்டெய்ன்’ காட்சி ஆரம்பமானது. ஒரு நாளில் பதிமூன்று முறை நடக்கும் துபாய் ஃபவுன்டெய்ன் ஷோ (Dubai Fountain) உலகிலேயே உயரமான ஃபவுன்டெய்ன் என்று அதிசயங்களில் ஒன்றாக ஆட்டம் போடுகிறது. பலவித வண்ணங்களுடன் கீழே நடக்கும் ஃபவுன்டெய்ன் டான்ஸை மேலே இருந்து பார்க்கும் போது இன்னும் கொள்ளை அழகு!

உலகிலேயே உயரமான கட்டிடம் கட்டிட்டு அங்க ஒரு ஹோட்டல், லைப்ரரி, ரெசிடென்ட்ஸ்.,. இப்படியெல்லாம் வெச்சுட்டா அதுவும் ஆட்டோமேட்டிக்கா சாதனைப் பட்டியல்ல இடம்பிடிச்சிருது. ஆமாம்… உலகிலேயே உயரமான லைப்ரரி, ரெசிடென்ட்ஸ், ஹோட்டல்னு இதோட லிஸ்ட்டு ரொம்ப பெருசு. இதுனால நான் சொல்ல வர்றது என்னன்னா பெரிய காரியங்களில் நாம கவனம் வெச்சோம்னா கூடவே சின்னதும் தொடர்ந்து வந்திரும். என்ன நான் சொல்றது சரிதானே!

சுமார் 12,000 தொழிலாளர்களை வைத்து எழுப்பப்பட்ட இக்கட்டிடம் சிவில் துறைகளிலும் பல சாதனைகள் செஞ்சிருக்கு. ஒரு லட்சம் யானைகளின் எடை அளவு கொண்ட கான்கிரீட் கலவையை மேலே உயர்த்தும் வெர்ட்டிகிள் கான்கிரீட் பம்பிங் (Vertical Concrete Pumping) டெக்னிக்குடன், கான்கிரீட் கலவையை அதிக உயரத்திற்கு எடுத்துச் சென்ற முதல் கட்டிடமும் இதுதான்.

தனி மனித முயற்சிகளாக இங்கே பல உலக சாதனைகள் நடக்கின்றன. உயரமான பேஸ் ஜம்பிங்க், ஸ்கை டைவிங்க், ஃப்ரெஞ்ச் ஸ்பைடர்மேன்னு அழைக்கப்படுற அலைன் ராபர்ட் (Alain Robert) புர்ஜ் கலிபா முழுவதும் வெளிப்புறத்திலே ஸ்பைடர்மேன் போல எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் 12 மணி நேரத்துல வலம் வந்திருக்கார். பார்வையற்ற எஸ்ரெஃப் ஆர்மெகன் (Esref Armagan) என்ற ஓவியர் புர்ஜ் கலிஃபாவின் மாடல் மினியேச்சரை தொட்டு உணர்ந்து தத்ரூபமாக அதை ஓவியம் தீட்டி இருப்பார். இப்படி இதன் சாதனைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

இதன் மற்றுமொரு வரலாற்றுச் சிறப்பு – புத்தாண்டு பிறக்கும்போது நிகழ்த்தப்படும் வானவேடிக்கை. கட்டிடம் முழுவதும் வண்ண வண்ணப் பட்டாசுகளால் கட்டிடம் முழுதும் வெடித்துச் சிதறும் ஒளிப்பிம்பங்களின் அற்புதக் காட்சியைக் காண்பதற்கு உலகம் முழுவதிலும் இருந்து பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டவுன்டவுனுக்கு வந்து குவிகிறார்கள்.

இந்த நிமிடம் மட்டுமே என்னோடு சேர்ந்து இந்தக் கட்டிடத்தில் 35,000-க்கும் அதிகமானவர்கள் இருக்கலாம். சரியான தெரிவுநிலை கிடைக்கப்பெற்றால் புர்ஜ் கலிஃபாவின் மேல் தளத்தில் இருந்து பார்க்கும் போது ஈரானின் துறைமுகமே தெரியுமாம். காற்று மாசில்லாத கொரோனா கால லாக்டவுனில் ஒரு வேளை எவரெஸ்ட் சிகரமே கூடத் தெரிந்திருக்கலாம்… யார் கண்டது!

இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் ஜன்னலோரத்தில் குத்துக்காலிட்டு, இருட்டில் தங்கமாக ஜொலிக்கும் இரவு நேர துபாயைப் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கும் இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்தான். இன்று என் பிறந்த நாள். இந்த நாளில் நான் கண்டு ரசிக்க இதைவிட வேறென்ன வேண்டும்? உலகிலேயே அதிகம் பேரால் புகைப்படம் எடுக்கப்பட்ட கட்டிடமும் இதுதானாம். அப்புறம் என்ன துபாய் பக்கம் வந்தீங்கன்னா புர்ஜ் கலிஃபா முன்னே நின்னு மறக்காம போட்டோ புடிச்சிருங்க!

சிறகடிக்கலாம்!

பயணங்கள் தொடரும்

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.