தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும் – 8

‘துபாய் மண்ணு  துபாய் மண்ணுன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்றேளே… இவாளுக்கு துபாய் மண்ண ஒரு தடவயாச்சும் காட்டினேளா’ன்னு என் மனசாட்சி என்னை வேதம் புதிது படத்துல வர்ற குடுமிக்கார தம்பி மாதிரி கன்னத்துல பளார் பளார்ன்னு அறைஞ்சது. பொங்கி வந்த வேதனையை பொடக்காலியில போட்டுட்டு பாலைவன ஆராய்ச்சியில இறங்கினேன்.

பொண்ணையும் மண்ணையும் அதிகமா நேசிச்சதே நம்ம தமிழன்டான்னு நினைச்சுட்டு, இந்த முறை நம்ம கூகிள் ஆண்டவர்கிட்ட போகாம நேரா சங்க காலத்துக்குள்ள பூந்தேன். தமிழ் நிலங்கள் ஐந்து வகைப்படும்னு அஞ்சாப்பு படிக்கும்போதே படிச்சிருந்தாலும், பாலை நிலமே இல்லாத இடத்தில் ஏன் பாலைத்திணை பாடி வெச்சாங்கங்கற கேள்வி எனக்கு இப்போதான் வந்துச்சு. தமிழ்நாட்டுல ஏது பாலைவனம்னு பார்த்தா, காடாகவும் இல்லாமல் மலையாகவும் இல்லாமல் இது ரெண்டுக்கும் நடுவில மழை இல்லாம இருந்த வறண்ட பூமியைத்தான் நம் முன்னோர்கள் பாலைன்னு சொல்லி வெச்சிருக்காங்க.

கரிசல்னா கரும்ப போடு, வண்டல்னா வெத்தலையைப் போடுன்னு மண்ணை விவசாயத்தோட மட்டுமே சம்பந்தப்படுத்தாம, மண்ணோட தன்மையை பொறுத்து அங்கே வாழுகிற  மக்களின் வாழ்வியலையும் வகைப்படுத்தி வெச்சிருக்கோம். அந்த வகையில ஒவ்வொரு மண்ணுக்கும் தனித்தனியா கடவுள், உணவு, தொழில், பறவைன்னு ஆயிரம் விசயங்களை அலசி ஆராய்ஞ்சிருக்கான் நம் முப்பாட்டன். ஆல்ரெடி கொங்கு நாடு, தொண்டை நாடு, பறம்பு நாடுன்னு ஆளாளுக்கு பங்கு போட்டுட்டு இருக்குற இந்த நேரத்துல தமிழ் நிலங்களைப் பற்றின ஆராய்ச்சியெல்லாம் வேணாம்ன்னு என் மனசு என்னை உசார் பண்ணிருச்சு.

படம்: சுபான் ஃபோட்டொகிராஃபி

சரி தமிழ்ப் பொண்ணு இப்போ பாலை மண்ணில இருக்கேனே பாலை மண்ணுக்கான குணம் என்னவா இருக்கும்னு பார்த்தா அது ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’னு ஒரு குண்டைத் தூக்கி போட்டிருச்சு. அதாவது ஒவ்வொரு நிலத்துக்கும் அந்த நிலத்தில இருக்குற தலைவன் தலைவி – அதாங்க புருசன் , பொண்டாட்டிக்குள்ள (காதலன், காதலி) இருக்குற காதல், ஊடல், பிரிதல் மாதிரியான உணர்வுகள பாடல்கள் வழியா சொல்லி வெச்சிருக்காங்க. நமக்கு வாய்ச்சது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் தானாம். ஒரு வகையில பார்த்தா அதுவும் சரிதான். அந்த காலத்துல தலைவன் போர்க்களத்திற்குப் போனால் தலைவி பிரிதல் துயர்ல வாடுறா. அதே மாதிரி இப்போதும் பொருள் ஈட்ட தலைவன் வெளிநாட்டுக்கு போனா பிரிதல் தானே?

சரி இவ்வளவு தூரம் வந்து விட்டோம் அழகு தமிழில் ஒரு பிரிதல் திணை பாடலை கேட்டு விடலாமா?

ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து

ஓரேர் உழவன் போலப்

பெருவிதுப்   புற்றன்றால் நோகோ யானே

ஓரேருழவனார் என்ற ஒரு புலவர் குறுந்தொகையில என்ன சொல்றாருன்னா, நல்ல மழை வந்து ஈரப்பதமா இருக்குற மண்ண அந்த ஈரம் காயுறதுக்கு முன்னாடி உழுதாகணும். ஆனால் தன்னிடம் இருக்கும் ஒரே ஓர் ஏரைக் கொண்டு அதை எப்படி உழுது முடிக்கிறதுன்னு கவலைப்படுற ஒரு உழவன் நிலை தான், பல மைல் தொலைவில் உள்ள தன் தலைவியைக் காணாது தவிக்கும் தலைவனின் மனநிலைன்னு சொல்றார்.

கொரோனா நோய் பரவ ஆரம்பித்துவிட்ட 2020 தொடக்கத்தில் நம் இந்திய அரசு மார்ச் மாதம் திடீரென லாக்டவுன் அறிவிப்பு செய்தது. துபாயிலிருந்து பல மைல்களுக்கப்பால் இருக்கும் தன் உறவுகளை சென்றடைய முடியாமல் இங்கேயும், இந்தியாவில் இருந்து உறவுகளை அழைத்துக் கொள்ள முடியாமல் துபாயிலும் அரசின் ஒற்றை விமானத்துக்காய்த் தவித்த தலைவனின் நிலையை ஒப்பிட ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பாடல் எழுதிவைத்த தமிழனை உலகம் போற்றத்தானே செய்யும்?

படம்: சுபான் ஃபோட்டோகிராஃபி

“உனக்கென்னப்பா வெளி நாட்டில இருக்கே…”, என்று யாரேனும் சொல்லும்போது, இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு சிறு புன்னைகையை மட்டுமே நான் பரிசளிக்கிறேன். என் சோகக் கதையை விடுங்க…. வாங்க நாம பாலைவனத்துக்குள்ள போலாம்.

என்னதான் பாலைவனத்துக்குள்ள இருக்கேன்னு சொன்னாலும் நிசமான பாலைவனத்த பார்க்கணும்ன்னா வண்டி கட்டிக்கிட்டு ஒரு மாமாங்க நேரம் பயணிக்கனும். டீ குடிக்குறதுக்காக ஊட்டிக்கும், மிருகத்தைப் பார்க்க பரம்பிக்குளத்துக்கும் ஜங்கிள் சஃபாரி போன பரம்பரையான(!) எனக்கு, முதல்முறையா டெசர்ட் சஃபாரி (Desert Safari) போற பயணம் த்ரில்லிங்கா தான் இருந்தது. “நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே”ன்னு எஃப் எம் ல பாட்டைத் தவழ விட்டுட்டுப் பறந்தோம். 

பார்க்குற வழியெல்லாமே பாலைவனம் போலவே இருந்தாலும் இந்த டெசர்ட் சஃபாரி போறது ஒரு இன்டீரியர் பாலைவனம். கிட்டத்தட்ட கடலுக்குள்ள போறது மாதிரின்னு நினைச்சுக்கலாம். பாலைவனத்துக்குள்ள போயிட்டா சுத்திலும் மணல்மேடுதான். கிழக்கால , மேக்கால தெரியாது. இப்படி பாலைவனத்துக்குள்ளாற போறதுக்கு நம்மகிட்ட இருக்குற காரெல்லாம் எடுத்துட்டு போனா செல்லாது செல்லாதுன்னு சொல்லி உள்ள விட மாட்டாங்க. நிறைய டூரிஸ்ட் கம்பெனிகள் இதுக்காக தனியா செயல்படுது. அவங்க சொல்ற இடம் வரைக்கும் நம்ம காரை கொண்டு போய் நிறுத்திடணும்.

அப்புறமா டொயோட்டா லேண்ட் குரூஸர்(Land Cruiser), ஹம்மர்(Hummer), நிசான் பேட்ரோல்(Patrol) மாதிரியான வண்டிகள் (இப்படி வகை வகையா கார் இருக்குன்னே எனக்கு இங்க வந்து தான் தெரியும்) ஹரி பட ஷூட்டிங் மாதிரி சும்மா சர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர் டமால்ல்ல்ல்ல் டுமால்ல்ல்ல்ல்ன்னு மணல் மேட்டுல டைவ் அடிச்சுட்டு கிடக்கும்.

டியூன் பேஷிங் (Dune Bashing) பண்றதுக்காகத்தான் டெசர்ட் சஃபாரி வர்றதே. அப்படின்னா என்னன்னா மணல்மேட்டுல நாம போற கார் ‘அலுங்குற குலுங்குற’ன்னு பாட்டெல்லாம் பாடாமயே, எகிறிக் குதிச்சு பாலைவன மணலெல்லாம் அள்ளித் தெளிச்சு காரை குளிப்பாட்டும். இதென்ன பிரமாதம் நம்மூர் ரோடுல…. அப்படின்னு நான் ஏதாச்சும் சொன்னேன்னா நீங்க என்னை அந்நிய நாட்டு கைக்கூலின்னு சொல்லிருவீங்க. ஸோ நாம இப்போ டியூன் பேஷிங் மட்டும் போகலாம் வாங்கோ!  

டியூன் பேஷிங்ல சிறப்பு என்னன்னா காருக்குள்ள இருந்து ரசிக்குறத விட அப்படிக்கா பல்டி பக்குற கார்களை வெளியே இருந்து வேடிக்கை பார்க்குறது தான் அழகா இருக்கும். நாம தான் வேடிக்கை பார்க்கவே நேர்ந்துவிட்ட சமூகமாச்சே. அப்படியெல்லாம் பேசி தப்பிக்க முடியாது, பணம் கொடுத்தாச்சு போய்த்தான் ஆகணும்னு நம்மளை வந்து கூப்பிடுவாங்க. மனசு என்னதான் தைரியமா இருந்தாலும் காருக்குள்ள ஏறும்போது ஒரு பயம் வயித்துல புளியை கரைக்கும். ஆனாலும் வடிவேலு மாதிரி ‘நானும் ரவுடி தான்’னு தெகிரியமா ஏறி உக்காந்துட வேண்டியதுதான்.

பொட்டல் வெளியில அப்படி என்ன வேடிக்கை பார்க்க முடியும்னு நாம யோசிக்கவே முடியாத அளவுக்கு அங்க நிறைய  சமாச்சாரங்களை வெச்சிருக்காங்க. ஈவ்னிங் சஃபாரி, மார்னிங் சஃபாரி, ஓவர்நைட் சஃபாரின்னு நம்ம வசதிக்கு ஏத்த மாதிரியான பேக்கேஜ் செலெக்ட் பண்ணிக்கலாம். பயணத்தில வர்ற ஆட்களைப் பொருத்து திரில் அதிகமா இருக்கும். எக்ஸைட்மெண்ட் நிறைய வேணும்னா அதுக்கேத்த மாதிரி வயித்துக்குள்ள அட்ரீனலின் பெருக்கெடுக்குற மாதிரியான சம்பவங்களெல்லாம் சாதாரணமா நடக்கும். ‘அய்யோ அம்மா என்னை வுட்டுடுங்கோ’ன்னு சொன்னாலும் விடாம நம்மளுக்கு இன்ப அதிர்ச்சிய கொடுத்துட்டே இருப்பாங்க.

ரெண்டு மூணு மணல் மேட்டுல கார் ஏறி குதிச்சுதுன்னா, நம்ம எக்சைட்மெண்ட் எல்லாம் காணாம போயிரும். அண்ணா கொஞ்சம் மெதுவா ஓட்டுறீங்களான்னு கேக்கவும் முடியாது. அப்படியே நாம சொன்னாலும் அவங்க கண்டுக்கப்போறது இல்ல. குடுத்த காசுக்கு சிறப்பான சம்பவத்தை செய்து முடிச்சிருவாங்க. இந்த மாதிரி அட்ரீனலின் அதிர்ச்சியெல்லாம் மனசு தாங்காதுன்னு முடிவு பண்ணோம்னா அதுக்கு தனியா ஈவ்னிங் சஃபாரி இருக்கு. கார்ல போய் மணல் மேட்டுல பண்ற அல்ட்டி, பல்ட்டி சீனெல்லாம் அதுல இல்ல. வெறுமனே டெசர்ட்ட வேடிக்கை பார்த்துட்டு அற்புதமான அரேபியன் ‘மாண்டி’ பிரியாணிய சாப்பிட்டுட்டு வந்திடலாம். அவ்ளோதானான்னு நினைக்காதீங்க, அரேபியன் மெஹந்தி, ஈவ்னிங் டேன்ஸ் எல்லாம் இருக்கு… ஓடாதீங்க.

துபாய்ல இருக்கேன்னு தெரிஞ்சதும் என்னை அதிகம்பேர் கேட்டது ‘என்னம்மா ஒட்டகப்பால் குடிச்சியா’ன்னு. இந்த ஆதாம் ஏவாள் காலத்து ஜோக்குக்கெலாம் ஏதோ அப்போ கேக்குற மாதிரி சிரிச்சதெல்லாம் பழைய கதை. ஒட்டகத்தை நான் எங்க பார்த்தேன். அது வ. உ. சி பார்க்குல சின்ன வயசுல அப்பா கைய புடிச்சுட்டு போய் பார்த்தது. நிலைமை இப்படியிருக்க, நான் நின்னுட்டு இருந்த இடத்துக்கு பக்கத்துல புஸு புஸு ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. பாலைவனக் கப்பலான சாட்ஷாத் அந்த ஒட்டகமேதான். ஒட்டகம் என் உசரம்தான் இருக்கும்னு நினைச்சுட்டு இருந்திருக்கேன். அடங்கப்பா என்னா உசரம் இருக்குது. உடம்பெல்லாம் கலர் கலரா துணி போட்டுக்கிட்டு என்னை விட அழகா இருந்துச்சு. அதோட வாயெல்லாம் அழகான பல்வரிசை, சிரிச்சுகிட்டே எங்கிட்ட ,‘வாயேன் ஒரு ரவுண்டு போலாம்’ன்னு சொல்ற மாதிரியே இருந்துச்சு. அஃப்கோர்ஸ் டார்லிங் இங்க வந்ததே உன் மேல சவாரி பண்றதுக்குத்தான். ஆனா இதுமேல எப்படி ஏறுறது? பாக்குறதுக்கே அம்சமா இருக்கான்… அடிச்சு புடிச்சு அவன் மேல ஏறி ஒரு சவாரி அடிச்சேன்.

என்னதான் லட்ச ரூபாய் கார்ல போனாலும் உன் மேல் பயணம் பண்றதுதான் எனக்கு புடிக்கும்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டேன். அப்புறம் என்ன அதே பாட்டுத்தான்… ‘சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது’. அதுல பாருங்க ஒட்டகத்துமேல போகும்போது ‘சிகப்பு லோலாக்கு’ மட்டும் குலுங்காது டோட்டல் பாடியே குலுங்கும். ஏய் கொஞ்சம் வேகமாத்தான் நடயேன்னு சொல்ல தோணும். ஆனா பாவம் அதுக்கு என்ன தெரியும்? ரஃபான ஸ்கின்னோட சாஃப்ட்டான மனசோட பாலைவனத்துல சுத்துற வாயில்லா ஜீவன் அது. அசரடிக்குற வெய்யில்ல ஒரு ஒட்டகச் சவாரி முடிஞ்சதும் நம்மள அங்க இருக்குற டெண்ட்ல இறக்கி விட்டுடுவாங்க.

அங்கு போடப்பட்டிருக்குற அழகான டென்ட்டுகள்ல பலவகையான ஆக்டிவிடீஸ் பண்ணலாம். பெண்களுக்கு அழகான அரேபியன் மெஹந்தி, அரேபியன் ஸ்டைல் ட்ரெடிஷனல் காஸ்டியூம் போட்டு அழகா போஸ் குடுத்து போட்டோ எடுத்துக்கலாம். இவங்க தேசியப் பறவையான ஃபால்கான் (Falcon) அப்சர்வேஷன் இருக்கு. கூடவே சில மணல் விளையாட்டுகளும் இருக்கு.

‘திங்ஸ் டு டூ’ லிஸ்ட்டுல அடுத்து தான் முக்கியமான கட்டம். ஆறு மணி நேர பேக்கேஜ்ல அசரடிக்குற வெய்யில கூட பொருட்படுத்தாம அலைஞ்சு திரிஞ்சு எல்லா ஆக்டிவிட்டீஸூம் முடிச்சுட்டு, அக்கடான்னு வந்து டென்ட்ல செட்டில் ஆகிடலாம். மனசை குளிர்விக்கும் திண்டுக்கல் ரீட்டா டேன்ஸ் இங்க இல்லாததால, எகிப்து நாட்டோட ஃபேமசான பெல்லி டான்ஸும்(Belly Dance), டனோரா டேன்ஸும் (Tanora Dance) ஆடுவாங்க. பொண்ணுங்க அரைகுறை ஆடையில இடுப்ப வளைச்சு நெளிச்சு ஆடுறது உண்மையாவே நல்லா தான்  இருக்கும். ஆனாலும் தளபதி விஜய் பொண்ணுங்க கூட சேர்ந்து அயிட்டம் டேன்ஸ் ஆடுனாலே கொதிச்சுப்போற எனக்கு இந்த பெல்லி டேன்ச பார்த்ததும் ஆத்திரம்  பொங்கி எழுந்துச்சு. ஆனா பொங்கி எழுற மனசை புகைவிட்டு ஆத்திக்கோங்கன்ற மாதிரி இருந்தது அங்க இருந்த ஹூக்கா/ஷீஷா(Hookah/Shisha) ன்னு சொல்ற ஒரு வகையான போதை வஸ்து நிரப்பப்பட்ட குடுவை.

ஹூக்காவோட வரலாறு பாத்தீங்கன்னா எல்லாம் நம்ம இந்தியா தான். முகலாயப் பேரரசுகளின் காலத்தில் அக்பரோட அமைச்சரவையில இருந்த அபு பத் கிலானி என்ற பாரசீக மருத்துவர் கண்டுபிடித்ததுதான் ஹூக்கா புகைக்கும் வழக்கம்.

அங்கிருந்து மெதுவாக அது பாரசீக வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளுக்கு வெகுவாகப் பரவிவிட்டது. சிகெரெட்டுல புகையிலையை எரிச்சு வர்ற புகையை ஊதுறோம். பல அடுக்குகளா இருக்குற இந்த ஹூக்கா / ஷீஷா உபகரணத்துல புகையிலையை வெப்பமாக்கி (மேல் அடுக்கு)பின்னர் ஆவியாக்கி அந்த புகையை அதில மாட்டியிருக்கிற குழாய் வழியா உள்ளே இழுக்குற மாதிரி வடிவமைச்சிருப்பாங்க. பார்க்கவே அழகா இருக்கும். ஆனாலும் எல்லாரும் அதே குழாய் வழியா சுவாசிக்குறதால அது கொஞ்சம் ஆபத்துதான். கொரோனா காலத்துல விமானத் தடைக்கு முன்னால இவங்க தடை பண்ணினது ஹூக்கா ஊதுவதைத்தான். ஃபன்னி ஃபெல்லொஸ்!

பேகம் ஜான் படத்துல வித்யாபாலன் சும்மா ஸ்டைலா ஹூக்கா ஸ்மோக் பண்ற சீன் பாக்கும்போது இதே போல ஹூக்காவ நான் வாழ்நாள்ல பார்ப்பேன்னு கூட நினைச்சதில்லை. ஆசையா அது பக்கத்துல போய் ஒரு பொக்கிஷத்தை பாக்குற மாதிரி பார்த்துட்டு இருந்தப்போ தான் அந்த பொல்லாத மனசு, ‘நீ ஒரு டீட்டோட்டலர்…. நீ ஒரு டீடோட்டலர்…..’ ன்னு என் காதோரமா ரகசியமா சொல்லுச்சு.  

படம்: சுபான் ஃபோட்டொகிராஃபி

எதுவுமே கிடைக்கலேன்னாலும் கடைசியா நாம செட்டில் ஆகுறது சோறு தான். சக்கரை சேர்க்காம கொஞ்சம் கசப்போட ஏலக்காய் மணமணக்கும் சூடான கஹ்வா டீ (Gahwa Tea) அரபு நாட்டோட ஸ்பெசல். கூடவே கொஞ்சம் ஃப்ரஷான பேரீச்சம் பழமும். என்ன அவ்ளோதானான்னு பயப்படாதீங்க. அது வெறும் ஸ்டார்ட்டர் தான். ஒரு இளம் செம்மறி ஆட்டுக்குட்டிய சின்ன சின்ன பீஸா வெட்டி, கூடவே ரெண்டு கிலோ அரிசி, இஞ்சி, பூண்டு, தக்காளி, வெங்காயம், மிளகு, மசாலா எல்லாம் கலந்து வைக்குற மாண்டி பிரியாணி தான் ஹைலைட்டு. இத சாப்பிடறதுக்கே இங்க வர்ற ஆட்கள் கூட உண்டு. அதோடு சேர்த்து சிரியாவோட நேஷனல் உணவு வகையான குப்பாஹ்(Kubba) னு சொல்லுற கறியும், சில வகையான தானியங்களும், வெங்காயமும் சேர்த்து பண்ணுற கோலா உருண்டை மாதிரியான டிஷ், அரேபியன் இறால், ஒட்டக சூப்பு கலந்த ஒரு சுவையான டின்னர் கிடைக்கும்.

நாங்க வேகனிசம்னு மூஞ்சிய தொங்கப் போட்டுக்க வேணாம். அவர்களுக்கும் தனியா குப்பூஸ் முதல் ஹம்மூஸ் வரை, பன்னீர் முதல், பீன்ஸ் வரை பல வகையான சைவ உணவு வகைகள் அடுக்கப்பட்டிருக்கும். தேவையானதை அள்ளிப் போட்டு இரவு நட்சத்திரங்களை ரசித்தபடியே உணவு உண்ணும்போது, கண்ணும் மனசும் வயிறும் நிறைஞ்சு இருக்கும். நிறையலையா? இன்னோர் ரவுண்டு வரலாம்…..

பயணங்கள் தொடரும்

தொடரின் முந்தைய பகுதியை வாசிக்க:

படைப்பாளர்:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.