பொருள் 10

துருக்கியில் உள்ள அனடோலியா என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது சாடாலுயிக் (Catal Hüyük) என்னும் நகரம். பொயுமு 7000 முதல் 5650 வரை இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 5000 பேர் கொண்ட ஒரு மக்கள் குழு செழிப்பாக வாழ்ந்துவந்தது. விவசாயம், விலங்கு வளர்ப்பு, கம்பளி ஆடை உற்பத்தி ஆகியவற்றில் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள். நீண்ட பல பயணங்களை மேற்கொண்டு தங்களுக்குத் தேவைப்படும் பொருள்களைப் பெற்று, தங்களிடமிருந்ததை விற்று பண்டமாற்று முறையில் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அபாரமான கலைத்திறனும் அவர்களிடம் இருந்தது.

மண் வீடுகளில் மக்கள் குடியிருந்தார்கள். தேன்கூடு போல் ஒற்றை அறைகள் மட்டுமே காணப்பட்டன. ஏணி மீதேறி கூரை வழியாக இறங்கி உள்ளே செல்ல வேண்டும். உள்ளே ஓர் அடுப்பு இருக்கும். பக்கத்தில் ஒரு சூளை. சுவற்றின் கிழக்கு பகுதியையொட்டி தரைப்பகுதியில் படுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இடத்தில் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. அதற்குக் கீழே பெண்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். சில வீடுகளில் குழந்தைகளும் உடன் சேர்த்து புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பெண்களைப் புதைத்த குடியிருப்புகள் பல வழிபாட்டுக்கான இடங்களாக இருந்தன. அப்படி வழிபாட்டுக்காக உருவாக்கப்பட்ட இடங்களில் தனிக் கவனத்துடனும் கலைத்திறனுடனும் தீட்டப்பட்ட சுவரோவியங்கள் காணப்படுகின்றன. அதேபோல், விலையுயர்ந்த பல பொருள்களையும் இறந்துபோன பெண்களுடன் சேர்த்து வழிபாட்டு இடங்களில் புதைத்திருக்கிறார்கள்.

யார் இந்தப் பெண்கள்? அவர்களுடைய உடல்கள் மட்டும் ஏன் மரியாதையுடன் புதைக்கப்பட்டிக்கின்றன? ஏன் பெண்களின் சமாதிகள் மட்டும் வழிபாட்டு இடங்களாக மாற்றப்பட்டன? ஏன் அவர்களுடைய உடல்களோடு மட்டும் விலைமதிப்புமிக்க பொருள்கள் புதைக்கப்பட்டன? ஒரே வரியில் சொல்வதானால் அப்போதைய துருக்கியில் பெண்களே சமூகத்தில் முதன்மையானவர்களாக இருந்தார்கள். ஆண்கள், பெண்களுக்கு அடுத்த நிலையில் இருந்தனர்.

பிற்காலத்தில் ஹசிலார் என்னும் மற்றொரு துருக்கிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட புதைப்பொருள்களும் ஓவியங்களும் சிற்பங்களும் பெண்களுக்கு அப்போதைய சமூகம் கொடுத்திருந்த முக்கியத்துவத்தைத் தெளிவாக உணர்த்துகின்றன. தலைப்பின்னலுடன் கூடிய சிறுமிகள், குழுந்தையுடன் காட்சியளிக்கும் பெண்கள், வயதான பாட்டிகள் என்று ஒரு பெண்ணின் அனைத்துப் பருவங்களும் சிலைகளாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

செக்கோஸ்லாவாகியா, தெற்கு போலாந்து, மேற்கு உக்ரேன் உள்ளிட்ட பழங்கால ஐரோப்பிய நகரங்களில் நடத்தப்பட்ட புதைப்பொருள் ஆய்வுகள் இதே காலகட்டத்தில் இங்கெல்லாம் பெண்கள் செல்வாக்குடன் இருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. இங்கும் பெண்களைப் பிரதானப்படுத்தும் ஓவியங்களும் சிற்பங்களும் காணப்படுகின்றன. இங்கும் பெண்கள் புதைக்கப்பட்ட இடங்கள் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இங்கும் பெண்கள் வழிபாட்டுக்குரியவர்களே. பெண்களின் தனி ஓவியங்கள், விலங்குகளுடன் காணப்படும் பெண்கள், பாம்பு அல்லது பட்டாம்பூச்சியுடன் காணப்படும் பெண்கள் ஆகிய ஓவியங்கள் இங்கெல்லாம் காணப்படுகின்றன.

பாம்பு, பட்டாம்பூச்சி ஆகியவை மறுபிறப்பின் பிம்பங்களாகப் பார்க்கப்பட்டன. பெண்களையும் அவர்கள் அவ்வாறே கண்டிருக்கிறார்கள். ஒரு புழு எப்படிப் பட்டாம்பூச்சியாக மாறுகிறதோ அப்படியே பெண்ணும் மதிக்கத்தக்க ஓர் உயிராக வளர்கிறாள். பாம்பு தன் சட்டையை உரிப்பதைப் போல் பெண் தன் வாழ்வைப் புதிதாக கட்டமைத்துக்கொள்கிறாள்.

அப்போதைய சமூகம் இப்படித்தான் கருதியிருக்க வேண்டும் என்கிறார்கள் மேற்படி சிற்பங்களையும் ஓவியங்களையும் ஆராய்ந்த ஆய்வாளர்கள். சில பெண்கள் மட்டும் ஏன் வழிபடத்தக்கவர்களாக மாறினார்கள் என்பதற்கு அவர்கள் அளிக்கும் விடை, குறிப்பிட்ட அந்தப் பெண்கள் பூசாரிகளாக இருந்திருக்க வேண்டும் என்பதுதான்.

சயீர் என்னும் ஆப்பிரிக்கப் பகுதியில் (இன்று காங்கோ) வசித்த புட்டி என்னும் பழங்குடிக் குழுவின் வாழ்வியலை ஆராய்ந்த மானுடவியலாளர்கள் அவர்களிடையே நிலவிய ஒரு விசித்திரமான வழக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஒரு குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, தாய் தனது குழந்தையை அதன் தந்தையிடம் ஒப்படைப்பார். தந்தை அந்தக் குழந்தையை வாங்கி மடியில் வைத்துக்கொள்வார். பிறகு தன் மார்போடு சேர்த்து அந்தக் குழந்தையை அணைத்துக்கொள்வார். பசியில் வாடும் குழந்தை பால் தேடி தந்தையின் மார்பை ஆராயத் தொடங்கும். அங்கு பால் கிடைக்காது என்பது தெரிந்ததும் ‘எமா’ என்று பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பிக்கும். எமா என்றால் அம்மா. உடனே தந்தை தன்னுடன் வைத்திருக்கும் வேறு உணவை எடுத்து குழந்தைக்குப் புகட்ட ஆரம்பிப்பார். அப்படிச் செய்யும் ஒவ்வொருமுறையும் ‘எபா’ ‘எபா’ என்று அவர் சொல்வார்.

தாய் மட்டுமல்ல, தந்தையும் முக்கியம் என்பதை ஒரு குழந்தைக்கு உணர்த்துவதற்காகவே இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். பசி என்றால் தாய் மட்டுமல்ல, தந்தையும் கவனித்துக்கொள்வார்; ஒரு தாயால் மட்டுமல்ல, ஒரு தந்தையாலும்கூட அன்பாக இருக்க முடியும் என்பதை அந்தக் குழந்தை உணர வேண்டும் என்று புட்டி சமூகம் விரும்பியிருக்கிறது. குழந்தை மட்டுமல்ல, தந்தைக்கும்கூட இந்தப் புரிதல் அவசியம் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும். இன்னொன்றையும் கவனிக்கலாம். ஆண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆண்களோடு சேர்த்து பெண்களும் அப்போது நினைத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த ஏற்பாடு சாத்தியமாகியிருக்கிறது.

ஆப்பிரிக்காவாக இருந்தாலும் சரி, ஐரோப்பாவாக இருந்தாலும் சரி. வரலாற்றுக்கு முந்தைய தொன்மையான சமூகங்களில் பெண்களுக்குச் சிறப்பான இடம் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஆண்களை இரண்டாவது பாலினமாகக் கருதி ஒதுக்கியதில்லை. ஆண்களை ஒடுக்குவதற்கான தத்துவ, அரசியல், சமூகக் கோட்பாடுகள் எதையும் பெண்கள் உருவாக்கவும் இல்லை. அது அவர்களுடைய நோக்கமாக இருந்ததில்லை. தங்களுடைய அதிகாரத்தைக் கொண்டு தங்கள் வாழ்வையும் சுற்றத்தாரின் வாழ்வையும் மேம்படுத்துவதில்தான் அவர்கள் கவனம் செலுத்தினார்கள்.

பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆண்களாலும்கூட இதே போல் இருந்திருக்க முடியும். தங்களுக்குக் கிடைத்த அதிகாரத்தை ஒடுக்கும் கருவியாக அல்லாமல் ஆக்கப்பூர்வமான கருவியாக அவர்களால் பயன்படுத்தியிருக்க முடியும். அதிகாரத்துடன் திகழ்ந்த பெண்கள் ஆண்களை நடத்தியதைப் போலவே அவர்களும் பெண்களை நடத்தியிருக்க முடியும். ஆனால், ஏனோ அது சாத்தியப்படவேயில்லை. அதனால்தானோ என்னவோ, ஆதிகாலப் பெண்களின் கரங்களில் குவிந்திருந்த அதிகாரம் இன்றும் கம்பீரமாக பளிச்சிடுகிறது.

படைப்பாளர்:

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.