பா. மைதிலி

துரைசாமி – ராஜலட்சுமி தம்பதியின் இளைய மகள் என் அம்மா மீனா குமாரி என்ற பிரேமா. மிகச் சிறிய வயதிலேயே தாயை இழந்தவர். கடைக்குட்டி என்பதால் தாத்தாவின் செல்லப்பிள்ளை. அதனால் அம்மா கேட்கும் எதையும் மறுக்காமல் வாங்கிக் கொடுத்துவிடுவாராம் தாத்தா. மானாமதுரையில் செல்வமும் செல்வாக்கும் பெற்ற குடும்பம் என்றாலும் ஆச்சி என்ற ஒருவர் இல்லாததால் வீட்டை நிர்வகிப்பதில் கஷ்டப்பட்ட குடும்பம். வீட்டைப் பார்த்துக்கொள்வதற்காகவே விஜயாம்மாவின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. விஜயாம்மாவுக்குத் திருமணம் ஆன பிறகு, ராதா பெரியம்மா, மோகன் மாமாவின் தாயில்லாத குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு அம்மாவிடம் வந்தது. அதனால் படிப்பைக் கைவிட வேண்டியதாகிவிட்டது.

வசதியான வீட்டில் பிறந்து வளர்ந்த அம்மாவை ஏனோ வசதி குறைவான அப்பா பாண்டிக்குத் திருமணம் செய்து வைத்தார் தாத்தா. பங்களா போன்ற வீட்டில் வசித்த அம்மா, ஓர் அறையும் சமையலறையும் கொண்ட சிறிய வீட்டில் வாழ்க்கையை ஆரம்பித்தார். வருமானம் குறைவு என்றாலும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார் அம்மா.

அந்தக் காலத்தில் திருமணம் ஆன உடனே குழந்தை உண்டாகவில்லையென்றால் அது ஏதோ பெரிய குற்றம் போல் குத்திக்காட்டிக்கொண்டிருப்பார்கள். அம்மாவும் அதையெல்லாம் சந்திக்க வேண்டியிருந்தது. விசேஷ வீடுகளுக்குச் சென்றால், ‘பிள்ளை இல்லாத பிரேமா கிட்ட வேலையைச் செய்யச் சொல்லுங்க’ என்று உறவினர்கள் சொல்வார்களாம். வருத்தத்தோடு வேலைகளைச் செய்துகொண்டிருப்பாராம் அம்மா.

திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணனைப் பெற்றெடுத்தார் அம்மா. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான் பிறந்தேன். ‘நீங்கள் இருவரும் நான் பெற்ற பிள்ளைகள் என்றாலும் அண்ணன் பிள்ளைகளுக்கும் அக்கா பிள்ளைகளுக்கும் பிறகுதான் நீங்கள்’ என்று அம்மா அடிக்கடி சொல்லும்போது எனக்குப் பொறாமையாக இருக்கும்.

அப்பா வியாபாரத்தை விட்டுவிட்டு, கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக மாறினார். கட்சி கொடுக்கும் ஊக்கத்தொகையை வைத்துக்கொண்டு, நான்கு பேர் வாழ்க்கை நடத்துவது மிகவும் கஷ்டமான, சவாலான காரியம். வீட்டின் நிதிநிலையைச் சமாளிக்கும் விதத்தில் பனை ஓலையில் பொருட்களைச் செய்து கொடுக்க ஆரம்பித்தார் அம்மா.

வீட்டில் பொருளாதாரச் சூழல் இப்படி இருந்தாலும் அப்பாவைத் தேடி வரும் தோழர்களுக்கு காபி, லெமன் ஜூஸ், உணவு என்று கொடுத்துக்கொண்டேயிருப்பார். அதேபோல் வீட்டுக்கு உறவினர்கள் வந்தாலும் அவர்கள் மனம் நிறையும்படி சாப்பிட வைத்துதான் அனுப்புவார்.

விஜயாம்மா வீட்டுக்குச் செல்வதென்றால் அம்மாவுக்கு சந்தோஷமாகிவிடும். ஒரு வாரத்துக்கு முன்பே ஏதாவது பலகாரம் செய்ய ஆரம்பித்துவிடுவார். வற்றல், வடகம் போன்றவற்றைத் தயார் செய்துவிடுவார். இடியாப்பம் மாவு, புட்டு மாவு, பிஞ்சுக் கத்தரிக்காய் எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். அக்கா வீடு என்றாலும் அம்மா வீட்டுக்குச் செல்வதுபோல் மனத்துக்கு அத்தனை நிறைவாக இருக்கும் என்பார் அம்மா.

இப்படி இருப்பதை வைத்து நிறைவாக வாழ்ந்துகொண்டிருந்த அம்மாவின் வாழ்க்கையில் அப்பாவின் மறைவு பெரும் இடியாக இறங்கியது. சொத்தும் இல்லாமல் சொற்ப வருமானமும் இல்லாமல் குடும்பத்தை எப்படி நடத்துவது? கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒரு தொகை கொடுத்தார்கள். அதிலிருந்து கிடைத்த வருமானத்துடன் வீட்டிலிருந்து கூடைகளைப் பின்ன ஆரம்பித்தார். நேரம் காலம் பார்க்காமல், உண்ணாமல் உறங்காமல் வேலைகளைச் செய்துகொண்டேயிருப்பார்.

”நான் படிச்சு, ஒரு வேலைக்குப் போயிருந்தால் இவ்வளவு கஷ்டப்பட மாட்டோம். அதனால பெண்கள் கண்டிப்பா படிக்கணும். வேலைக்குப் போகணும். கணவனாக இருந்தாலும் கைநீட்டி காசு கேட்கும் நிலையில் இருக்கக் கூடாது. பெண்ணுக்கு சுயமரியாதை ரொம்ப முக்கியம். அதனால் உன்னைக் கஷ்டப்பட்டாவது படிக்க வச்சிடுவேன். ஒரு வேலைக்குப் போகணும்ங்கிற எண்ணத்தோட ஒழுங்கா படி” என்று சொல்லிக்கொண்டேயிருப்பார் அம்மா.

நான் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்த காலகட்டம் மிகவும் துயரமானது. செலவு இரண்டானது. தனிமையில் இருந்த அம்மா, தான் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு எனக்கு ஹாஸ்டலுக்குப் பணம் கட்டியிருக்கிறார். நான் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பிறகுதான் அம்மாவுக்குக் கஷ்டம் குறைய ஆரம்பித்தது.

மகள் மைதிலி திருமணத்தில் மாப்பிள்ளை சிவா, மகன் சுரேந்தருடன் பிரேமா

அக்கா வீட்டிலும் அண்ணன் வீட்டிலும் என்ன விசேஷம் என்றாலும் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். அம்மாவின் சமையல் அருமையாக இருக்கும் என்று எல்லோரும் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அம்மாவின் மீன் குழம்புக்காகத் தேடி வருபவர்கள் அதிகம்.

அம்மா எதையும் ஆசைப்பட்டுப் பார்த்ததில்லை. மிக எளிமையாக இருப்பார். தனக்கான மருந்துச் செலவைக்கூட என்னைச் செய்ய விடமாட்டார். தனக்கான உதவித் தொகையில் மருந்துச் செலவு போக, மீதி இருக்கும் பணத்தைச் சேமித்து, மகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் ஏதாவது செய்துகொண்டேயிருப்பார்.

பேரன் ஆதனுடன் பிரேமா

எனக்கு அப்பாவாகவும் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பவர் அம்மா. யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார். படித்தது எஸ்எஸ்எல்சி என்றாலும் எனக்குத் தெரியாத பல விஷயங்கள் அம்மாவுக்குத் தெரிந்திருக்கும். மருத்துவம் படிக்காத வீட்டு வைத்தியர், சமையல் கலை படிக்காத நல்ல சமையல் கலைஞர், குறைவாக இருந்தாலும் நிறைவாகச் செய்வதில் கர்ணன், பாசம் வைப்பதில் கோடீஸ்வரர், கடின உழைப்புக்கு உதாரணமாக இருப்பவர் என்று அம்மாவைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அம்மாவை நான் பார்த்துக்கொள்வதாகச் சொல்வார்கள். ஆனால், அம்மாதான் எங்களைப் பார்த்துக்கொள்கிறார். உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்திருக்கும் அம்மாவின் உழைப்பைக் குறைத்து, அக்கறையாகப் பார்த்துக்கொள்வதே நான் அவருக்குச் செய்யும் நன்றி.

படைப்பாளர்:

பா. மைதிலி. பள்ளி ஆசிரியர்.