அன்பு கார்ல்,
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று கிடைத்த உன் கடிதத்திற்கு ஆயிரம் நன்றிகள்! என் அன்பான நேசமிகு கார்ல், நான் எவ்வளவு நாட்களாக உன்னிடமிருந்து தகவல் வரும் என்று ஆவலுடனும் காத்திருந்தேன் தெரியுமா? அந்த நாட்களில் என் இதயம் நம்பிக்கை குறைந்து, ஏங்கித்தவித்தது. ஒவ்வொரு மணித்துளியும் பயத்துடனும் கவலையுடனும் முடிவில்லாமல் நீண்டது. உன் கடிதங்கள் மட்டும்தான் எனக்கு ஒளிதரும் விளக்குகள். அன்பு கார்ல், அடிக்கடி இப்படி ஒளிதந்து எனக்கு மகிழ்ச்சியளிக்கும்படி வேண்டுகிறேன். ஆனால், அது நீண்ட காலம் தேவைப்படாது, ஏனெனில் என் அன்பு அம்மாவின் உடல் நலம் ஓரளவு நல்ல நிலைக்கு வந்துள்ளது. எனினும் அவர் நோயிலிருந்து மீள்வது சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் அனைவரும் நம்பிக்கையுடன் அவர் நரம்புத்தளர்ச்சியிலிருந்து மீட்சியடைவார் என்று நினைக்கிறோம். அவர் தன் பலத்தையும் மனோதிடத்தையும் திரும்பப் பெற்றுவருகிறார். நான் எந்த விளைவையும் சமாளிக்கவும், மோசமான நிலமையை எதிர்கொள்ளவும் தயாராகி, என்னையே நான் தேற்றி வருகிறேன். ஆனாலும் என் மனம் இந்த வசந்தகால இன்பத்துக்காகவும் பெருமகிழ்ச்சிக்காகவும் துள்ளிக்குதிக்கிறது. இது ஒரு விநோதமான விஷயம். நாம் விரும்பும் ஒருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. ஒருவரின் ஒவ்வொரு திசுவிலும் ஒன்றிவிட்டு, அவரது வாழ்க்கை பாதிக்கப்படும் போது, அந்தத் திசுக்கள் எல்லாம் ஒரேயடியாக அறுந்துவிட்டது போல்தான் ஆகிவிடுகிறது. இப்பொழுது வியாதியிலிருந்து மீண்டு வருவதாகவே எண்ணுகிறேன். ஆனால், அது வேகமான பலனை எட்ட வேண்டும்.
என் அம்மா மேல் கொண்டிருக்கும் அன்பாலும் அவரின் ஆசீர்வாதத்தாலும் இணைந்த நம்பிக்கையாலுமே சாத்தியம். இந்த நிகழ்வு விரைவாக நடந்தால் மட்டுமே நான் மீண்டும் வருவது எளிதாகி, உன்னோடும் நம் குழந்தைகளோடும் இணைவது நிகழும் என் அன்பே.
என் அன்பு கார்ல் எதிர்பார்க்கவே இல்லை, நம் கடிதங்கள் ஒரே நேரத்தில் ஒன்றையொன்று கடந்து வந்திருந்தாலும், உன் கடிதத்தில் என் கடிதத்திற்கான பதில் எல்லாமே இருந்தது. என் மனம் நிம்மதியின்றி, சந்தேகத்துடன் இருந்த காரணங்களுக்கெல்லாம் அதில் தகுந்த விளக்கமும் பதிலும் அதுவும் என் கடிதம் கிடைக்கும் முன்பே தெளிவாக்கப்பட்டிருந்தது.
ஒரே ஒரு முக்கியமான கேள்வி. ஆடைகள் தைப்பவர், தயாரிப்பாளர்களில் ஒருவருடைய கட்டணம் குறித்து உன் கருத்துக்காகக் காத்திருக்கிறேன். அதையும் விரைவில் எதிர்பார்க்கிறேன். என் இனிய இதயமே, உன் அன்பான கடிதத்தைப் படிக்கும்போதெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நினைத்து, உன் கனிவான அன்பால் நான் மிகவும் ஆறுதல் அடைந்ததாக உணர்கிறேன். ஆனால், என் இதயம் இங்கே தங்குவதா அல்லது புறப்படுவதா என்ற உறுதியான முடிவுக்கு வர இயலாமல் தவிக்கிறது. அநேகமாக நான் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் புறப்படலாம். கோலோன் வரை வெயிட்மைர் என்கூட வரலாம். ஸ்கிலிச்சரும் பிரெஸ்ஸல்ஸுக்குப் போக இருப்பதாக நேற்று சொன்னார். அவர் எனக்காக அங்கு சரியான நேரத்தில் இருக்கும்படி அவர் பயணத்தை அமைத்துக்கொள்வார். ஃபிடில் ஸ்டிக். ஸ்டவுட் சார் இவர்களிடமிருந்து ஒரு முடிவும் வரப்போவதில்லை. அநேகமாக நாம் பிரேயருடன் தான் சேர்ந்து கொள்ள வேண்டும்.
சின்ன வீடு போதும். குளிர்காலத்தில் யாருக்குமே பெரிய அளவில் அறை வேண்டியதில்லை. இந்தக் காலத்தில் நாம் எட்கரை ஏதாவது ஒரு குழந்தைகள் விடுதியில் சேர்த்து விடுவதுதான் நல்லதென்று அம்மா நினைக்கிறார். இது செலவு குறைவானதுதான். பின்பு என் வேலைகள் எல்லாம் மேல் தளத்தில் முடித்த பின்பு, நான் மறுபடியும் கீழே வந்துவிடலாம். நீ எந்தத் தொந்தரவும் இன்றி நிம்மதியாக கனவில் மூழ்கலாம், தூங்கலாம், படிக்கலாம், எழுதலாம். கீழே உள்ள குழந்தைகளின் சத்தம் கேட்காமல் அடைக்கப்படுவதால், உன் மேல்தள வேலைக்குப் பாதிப்பு இருக்காது. எனக்கும் வேலைகள் ஓய்ந்த பிறகு நானும் உன்னுடன் சேர்ந்துகொள்ள வசதியாக அந்த அறையை எப்போதும் நேர்த்தியாகப் பராமரிக்கலாம். மேலே உள்ள மற்ற இரண்டு அறைகள் நமக்கு உபயோகம் இல்லை. கூடிய விரைவில் நாம் வசிக்கும் அறையில் நல்ல கனப்பு அடுப்பையும் திரைகளையும் அமைத்துவிடுவோம். அதுகூட பிரேயரின் பொறுப்புதான். யாரும் கனப்பு ஏற்படுத்த முடியாத அறைகளை வாடகைக்குவிடப் போவதில்லை. மேலும் சமையல்காரர் பிராக்ரெட்டை நாம் சரியாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாம் மறக்க வேண்டிய, காலியான சமையல் மேஜை போல் ஆகிவிடக் கூடாது. நம் தேவைகள் என்ன என்பதை நான் கவனித்துக்கொள்கிறேன். இந்த ஏற்பாடுகளை இங்கு உள்ளது போலவே அங்கும் செய்துவிடலாம். இப்போது இங்கு வந்து என்னைச் சந்திப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
கோலோனில் ஒரு நாள் முழுவதும் சென்றுவிடுவதால், விமானத்தில்தான் பயணிக்க வேண்டும். மறுநாள் லீகிற்குப் பயணிக்க வேண்டும். எனினும் ரயில் பயணத்தை மாறி மாறித்தான் மேற்கொள்ள வேண்டும். அதிரும் இந்தப் பயணமும் மகிழ்ச்சியில்லாத பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே என் பயணம் பற்றிய முழுத் தகவல்களையும் பின்பு தெரிவிக்கிறேன். ஏழைகளின் அடிமை தேசம் போல் பிரெஸ்ஸல்ஸ் ஆகிவிடப் போகிறது. ஏங்கெல்ஸ் தனியாக வந்தாரா அல்லது இணையுடனா?
குழந்தை ஜென்னியும் என் அருகிலேதான் இருக்கிறாள். அவளும் தன் அப்பாவுக்கு ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறாள். ஏனெனில் அவரைப் பற்றித்தானே அவள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் பேசும் வார்த்தைகள் மிகவும் இனிமையானவை.
திருமதி வார்ப்ஸ் அவளுக்கு அழகான நீல வண்ண ஃப்ராக் கொடுத்துள்ளார். ஒவ்வொருவரும் குழந்தையைப் பார்த்து, அவளே நகரத்தின் பேச்சாகிப் போனதில் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். அதனால் தினமும் அவளைப் பார்க்க மக்கள் வந்துவிடுகிறார்கள். அவளுக்கு மிகவும் விருப்பமானவர் விளக்கைச் சுத்தம் செய்ய வருபவர்தான். அவர்தான் இவளைத் தூக்க வேண்டும் என அடம்பிடிப்பாள்.
எட்கரிடம் சொல், வுல்லன் காலுறைகள் எல்லாம் வலதுபுறம் உள்ள பெரிய பெட்டியில் அலமாரியில் உள்ளது என்று. ஜன்னலுக்குக் கீழே அல்ல. குழந்தைகளின் துணிகளைக் குடைந்தால் அவன் நிச்சயம் கண்டுபிடிக்கலாம்.
உன் புத்தகம் எழுதி முடிக்கும்போது ஏதும் பிரளயம் உண்டாகிவிடக் கூடாது. ஏனெனில் அதன் வெளியீட்டை எதிர்பார்த்து நான் மிகவும் ஆவலுடன் உள்ளேன். மேலும் இதைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் உன் அம்மாவுடன் ஏற்பட்ட திடீர் சந்திப்பு பற்றியும் நாம் நேரில் சந்திக்கும்போது பேசுவோம்.
இந்த விஷயங்களை எழுதுவதைவிட, நேரில் பேசிக்கொள்வதுதான் நல்லது. விடைபெறுகிறேன் இனிய இதயமே. என் அன்பை எட்கரிடமும் மற்றவர்களிடமும் தெரிவி. விரைவில் பதில் எழுது. நீ எழுதுவது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும்.
உன்
ஜென்னி
படைப்பாளர்:
சோ.சுத்தானந்தம்
ராமநாதபுரம் மாவட்டம் பூசேரி கிராமத்தில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியலாளராக வாழ்க்கையைத் தொடங்கி, தொழில்முறைப் பயணமாக இந்தியா முழுவதும் சுற்றியவர். பல நிறுவனங்களை உருவாக்கியவர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். அறிவொளி இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். எல்.ஐ.சி. முகவர்களுக்கான லிகாய் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராகவும், இவ்வமைப்பின் முதல் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டவர். அரசியல் வாழ்க்கையில் காங்கிரஸ்காரராக இருந்து, பின்னால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டவர்.