ஆயிரம் பவுன் தங்கமும் விலையுயர்ந்த மகிழுந்தோடு அணிவகுக்கும் வாகனங்களில் நிரம்பி வழியும் பொருள்களும் என இரண்டு தலைமுறைகள் ஒரு தொழிலும் செய்யாமல் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான பொருள் வளத்தைச் சீராகக் கொடுத்து மகளுக்குத் திருமணம் நடத்திய நிகழ்வைப் புகழ்ச்சி மொழியில் செய்தியாக்கிய பிரதான ஊடகங்கள், கேரளாவை உலுக்கிய (வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட) விஸ்மயா விவகாரத்தைச் சோக மொழியில் செய்தியாக்கிய செயல் மரு வைக்காத சீர் முறையை நல்ல குணப்பாத்திரமாகவும் மரு வைத்த வரதட்சணையை தீய குணமுடைய பாத்திரமாகவும் காட்டுவது போல் இருந்தது.

மணவாழ்வின் பொருட்டு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ மணமகள் வீட்டாரிடம் மணமகன் வீட்டார் பொருளோ பணமோ கேட்கக் கூடாதென சட்டம் தெளிவாக வலியுறுத்துகிறது. ஆனால், ’வரதட்சணை என்பது மணமகன் வீட்டார் கேட்டு வாங்குவது; சீர் என்பது மணமகள் வீட்டாரே விரும்பித் தருவது’ என்றெல்லாம் வரதட்சணை பிரியர்கள் முழுப் பூசணிக்காயை உப்புமாவிற்குள் மூடி மறைக்க முயற்சி செய்வது போல் பிரதான ஊடகங்களும் நடந்துகொள்கின்றன.

வரதட்சணை என்ற வார்த்தைக்குப் பதில் சீர் என்ற வார்த்தையைப் போட்டு வெளிப்படையாக வரதட்சணைக் குற்றத்தில் குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.

குறைந்தபட்சம் கால் பவுனிலாவது தங்கத்தில் அணிகலன் செய்து, திருமண வயதுடைய பெண்களுக்கு அணிவிக்கும் வழக்கம் இன்று எல்லா சாதி மக்களிடத்தும் விரிவடைந்துள்ளது.

திருமணச் செலவு முழுவதையும் மணமகள் வீட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற வழக்கம் சில சாதிகளில் உண்டு. திருமணத்தின் பொழுது மணப்பெண்ணுக்கு நகையும் மணமகனுக்கு விலையுயர்ந்த பொருட்களும் வழங்கும் வழக்கம் சில சாதிகளில் உண்டு.

திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குச் செல்லும் மணமகளுக்குத் தாய் வீட்டுச் சீர் என்ற பெயரில் கட்டில், மெத்தை, சமையலுக்கான அண்டா, குண்டா பாத்திரங்கள் போன்றவை வழங்கும் வழக்கத்தைச் சில சாதிகள் கொண்டிருக்கின்றன.

புதுமணத் தம்பதிக்கு மணமகள் வீட்டிலிருந்து ஆடிச் சீர், தீபாவளிச் சீர், பொங்கல் சீர், சித்திரைச் சீர் போன்ற சீரை வழங்கும் வழக்கத்தைப் பல சாதிகள் பின்பற்றி வருகின்றன.

வளைகாப்பு நிகழ்வு நடத்துவதற்கான செலவையும் கருவுற்ற மகளின் மருத்துவப் பரிசோதனை செலவையும் பிரசவச் செலவையும் மணமகள் வீட்டாரே ஏற்க வேண்டும் என்ற வழக்கத்தைப் பல சாதிகள் பின்பற்றுகின்றன.

இது போன்று பல சீர்முறைகளைப் பெண்கள் சார்ந்து வேறுபட்ட வடிவங்களில் சாதியக் குடும்பங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன. சீர் முறைகள் அழகியலாக்கப்பட்டு, பண்பாட்டு வடிவங்களாக மக்களது வாழ்வியலோடு பயணித்து வந்துள்ளன. குற்ற உணர்ச்சி என்பதே இன்றி பண்பாட்டு பெருமிதமாகவும் பரம்பரை கௌரவமாகவும் வரதட்சணைக் குற்றம் சீர்முறையாக இன்று வளர்ந்துள்ளது.

விஸ்மயா தற்கொலை ஏற்படுத்திய அதிர்வை அடுத்து கேரள இளம் பெண்கள் வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்ற வாசகங்களை வீடுகளில் ஒட்டியும் சமூக வலைத்தளங்களில் படங்களைப் பதிவேற்றியும் வரதட்சணைக்கெதிரான பரப்புரையை மேற்கொண்டிருந்தனர். விஸ்மயாவின் மரண வேதனையிலிருந்து தொடங்கப்பட்ட பரப்புரைப் படங்களின் கீழே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள், ’வரதட்சணை கொடுக்கலைன்னா ஏற்றுக்கொள்கிறோம் அதேபோல ஆண்களிடமும் வெல் செட்டில்டா? வீடு இருக்கா? மாதச் சம்பளம் லட்சமா என்றெல்லாம் கேட்கக் கூடாது என்ற தோரணையில் வாசகங்களையிட்டுப் பெரிதாக எதையோ சாதித்து விட்டதைப் போல ஆண்கள் சமூக வலைத்தளங்களில் இழிவாகப் பகிர்ந்துகொண்டிருந்தனர்.

வெல் செட்டில்டா? மாதச் சம்பளம் எவ்வளவு? சொந்த வீடு இருக்கா என்றெல்லாம் மணமகனிடம் எதிர்பார்ப்புகளை வைப்பது தவறென்ற புரிதல் ஆண்களுக்கு ஏற்பட்டிருப்பதில் தவறொன்றும் இல்லை. ஆனால், அத்தகு ஆண்களுக்குக் கூடுதலான புரிதலை ஏற்படுத்தவும் வேண்டியுள்ளது. மணமகள் தரப்பில் மணமகனுக்கான தகுதிகளை வகுக்கக் கூடிய இடத்தைப் பெரும்பாலும் தந்தைமார்களே ஆக்கிரமித்துக்கொள்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

’திருமணத்திற்குப் பின் பெண்கள் பணிக்குச் செல்லக் கூடாது.’ ’சம்பாதிக்கிற திமிரில் பெண்கள் கணவனுக்குக் கீழ்படியாமல் சுயராஜ்ஜியம் செய்யவார்கள்.’ ’திருமணத்திற்குப் பின் ஐடி துறைகளில் பணியாற்றுவது, ஆன் சைட் செல்வது, நைட் ஷிஃப்ட் பார்ப்பது போன்றவையெல்லாம் குடும்பப் பெண்களுக்கு ஒத்துவராத பணிகள், எனவே பெண்கள் திருமணத்திற்குப் பின் பணியிலிருந்து விலகி கணவனுக்கும் குடும்பத்திற்கும் ஊழியம் செய்ய வேண்டும் என்றெல்ல்லாம் கண்டிஷன்களை மணமகள்கள் மீது மணமகன் வீட்டார்கள் வைப்பதும் தவறான ஒன்று என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

பெண்கள் பணிக்குச் செல்லக் கூடாது என்று மணமகன் தரப்பில் கண்டிஷன் வைக்கப்படுமானால் சோற்றுக்கு என்ன செய்வது என்று யோசிக்கையில்தான் மணமகள் வீட்டார் மணமகனின் சம்பளத்தின் மீது பார்வை செலுத்துகின்றனர் என்பதையும் புரிந்துணர வேண்டும்.

ஆண்தான் சம்பாத்தியக்காரன், ஆணுக்குக் கீழ்தான் குடும்பமும் சமூகமும், பொருளீட்டும் ஆண்தான் தலைவன், குடும்பத் தலைவனுக்குக் கீழ்படிந்துதான் பெண்கள் நடக்க வேண்டும் போன்ற ஆணாதிக்கக் கட்டமைப்புகளில் இருந்து ஆண்கள் தங்களைத் தாங்களே வெளியேற்றிக்கொள்கையில் யாரும் யாருடைய சம்பளத்தையும் தகுதியாகக் கருத வேண்டிய சூழல் வாய்க்காது.

’சொந்த வீடு இருக்கான்னு பொண்ணு வீட்டில் கேட்கிறாங்க’ என்ற ஆண்களின் அடுத்த பரிதாபக் குமுறலுக்கு வருவோம். திருமணமான பின் மணமகள் கணவன் வீட்டில் தஞ்சமடைய வேண்டுமென்ற ஆதி நிலவுடமைக் கட்டமைப்பு வழக்கத்தை இன்றைய ஜனநாயகக் கட்டமைப்புக் காலத்திலும் பின்பற்றுவது பொருத்தமில்லாத ஒன்று. வாடகை வீடுடைய மணமகன் சொந்த வீட்டைக் கொண்டிருக்கும் மணமகள் வீட்டில் திருமணத்திற்குப் பின் வசிப்பது ஆண்மைக்கே இழுக்கான ஒன்று என நினைக்கும் ஆணாதிக்கச் சூழலில் மணமகனுக்குச் சொந்த வீடு இருக்கா என்று கேட்பதில் நியாயம் இருப்பதாகத்தான் தோன்றுகின்றது.

ஆணாதிக்கக் கட்டமைப்பு தவறானது என்று ஆண்கள் உணர்ந்து சமத்துவம் நோக்கி சரிகையில் வேண்டுமானால் சொந்த வீடு இருக்கா என்று மணமகன் மீது வைக்கப்படும் டிமாண்டுகளும் தவறானது என்ற நிலைக்கு வரலாம்.

மணமகன் கைநிறைய சம்பாதிக்க வேண்டுமென மணமகள் தரப்பு கண்டிஷன் போடுவதைப் போல் சமையலில் கைப்பக்குவம் கொண்டவளாக மணமகள் இருக்க வேண்டுமென்று மணமகன் தரப்பிலிருந்து போடப்படும் கண்டிஷனும் தவறானதென்பதை ஆண்கள் உணர வேண்டும். மணமகன்களின் சம்பளத்தின் மீது மணமகள் தரப்பில் டிமாண்டுகளை வைக்காமல் இருப்பதற்கும் மணமகள்கள் பணிகளுக்குச் சென்று பொருளாதாரச் சுயசார்புடன் ஆளுமைமிக்கவர்களாகத் தங்கள் துறையில் மிளிருவதற்கும் இடையூறுகளாகப் பெண்கள் மீது மட்டுமே சுமத்தப்படுகின்ற அன்றாட வீட்டுப் பணிகள் அமைந்துவிடுகின்றன.

’நான் ஆம்பளை, சம்பாதிப்பது மட்டுமே எனது வாழ்வியல்’ என்ற கட்டமைப்புக்குள் அம்மாவோ மனைவியோ சகோதரியோ வடித்துக் கொட்டும் உணவுகளை உண்டு, துவைத்து மடித்து எடுத்துவரும் உடைகளை உடுத்தி, தினமும் துப்புரவு செய்த அறையில் உறங்கி பழக்கப்பட்ட ஆண்களுக்குப் பணியில் கவனம் செலுத்தி, சம்பள உயர்வு பெற்று, சார்ந்திருக்கும் துறையில் சாதிப்பது இயல்பான ஒன்றாக அமைகின்றது. ஆனால், பெண்கள் தொழிலகத்தில் 8 மணிநேரம் உழைத்துவிட்டு, வீட்டுப் பராமரிப்பிலும் ஈடுபட வேண்டியுள்ளதால் உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சோர்வடைந்து விடுகின்றனர். இதனால் திருமணமான பெண்கள் பலர் பணியின் மீது கவனம் செலுத்துவதற்குச் சிரமம் அடைகின்றனர். இப்படியான சூழலை உருவாக்கித் தரும் ஆண் மைய சமூகத்தை நாம் அழித்தொழிக்காமல் அப்பாக்களும் அண்ணன்களுமே குடும்பப் பொருளாதாரச் சுமையைச் சுமக்கின்றனரென வருந்தி பயனொன்றுமில்லை.

திருமணத்திற்குப் பின்பு பணிகளுக்குச் செல்லும் பெண்கள் பணியில் முழுமையான கவனம் செலுத்திட அன்றாட வீட்டுப் பணிகளில் ஆண்களும் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.

சம்பளத்தை வைத்து மணமகனைத் தீர்மானிப்பது தவறெனக் குமுறும் ஆண்கள், சமைப்பது பெண்களின் கடமையல்ல என்பதைப் புரிந்துணர வேண்டும். சம்பளத்தையும் சொந்த வீட்டையும் மணமகனுக்குரிய தகுதியாக வைப்பதால் எங்களுக்குச் சுயசாதியில் மணப்பெண்களே கிடைப்பதில்லை என வருந்தும் ஆண்கள் சாதியை விட்டு வெளியில் வந்து பெண்களைத் தேட முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் பெண் கிடைக்கவில்லையெனில் உடனே கழுதை கெட்டா குட்டிச்சுவரு என்ற கணக்காக மீண்டும் சம்பளத்தையும் சொந்த வீட்டையும் மணமகனுக்குரிய தகுதியாக வைப்பதால்தான் எங்களுக்குப் பெண் கிடைப்பதில்லை என்று குமுறத் தொடங்காதீர்கள்.

வரதட்சணை கொடுமையை எதிர்கொள்ள பயந்து பிறக்கின்ற பெண் குழந்தைகளை கொலை செய்யச் செய்த உங்கள் முன்னோர்களின் செயலை எண்ணிப்பாருங்கள். ’முன்னோர்களொன்றும் முட்டாள்களில்லை’ என்ற நமத்துப் போன பெருமைகளிலிருந்து விலகி, ஆணாதிக்கம் கொண்டு முன்னோர்கள் வழிவகுத்துள்ள வாழ்வியல் பிழைகளைக் கேள்விக்குள்ளாக்கி சீர்திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

குறைந்து வரும் பெண்களின் பிறப்பு விகிதம் குறித்து சிந்தித்துப் பாருங்கள். பெண்களின் மீது கட்டவிழ்க்கப்படுகின்ற ஆணாதிக்க வன்முறைகளும் ஒருவகையில் உங்களுக்கு மணப்பெண் கிடைக்காமல் போனதற்குக் காரணமாகியுள்ளன என்ற உண்மையை உணருங்கள். உங்களை ஒண்டிக்கட்டையாக நிற்க வைத்திருக்கும் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தோடு இனியும் உலகத்தையும் பெண்களையும் பார்க்காதீர்கள்.

தன்னுடைய தாய் பெற்றுவந்த சீர்வரிசைகளில் வளர்ந்து, தன்னுடைய மனைவிவழி வரும் சீர்வரிசைகளில் மகிழ்ந்து கொழித்த ஆண்கள் அண்ணனாகவும் தம்பியாகவும் இருந்து சகோதரிகளுக்குச் சீர்வரிசை கொடுப்பதற்காகவே உழைத்துத் தேய்ந்து போனதாகக் கூறி, குடும்பத்தின் பொருளாதாரப் பொறுப்புகள் ஆண்களை நசுக்குவதாக உணர்ந்து, பொருளாதாரத்திலுள்ள பாலினப் பாகுபாட்டை வெறுக்கும் ஆண்கள் குழந்தைப் பருவந்தொட்டே தான் விளையாடவும் இடை நில்லாமல் கல்வி கற்கவும் தொழில் தொடங்கவும் தனக்கு உறுதுணையாக இருந்த குடும்பம் தன்னோடு பிறந்த அக்காளுக்கும் தங்கைக்கும் உறுதுணையாக நிற்காமல் போனது ஏன் என்று குடும்ப அமைப்பை கேட்டிருக்க வேண்டும்.

தன்னைவிடவும் நன்றாகப் படித்த தங்கையின் படிப்பை நிறுத்தியது ஏன்? வீட்டின் மூத்த மகளின் கல்வியை நிறுத்தி, தன்னைப் படிக்க வைத்தது ஏன்? படிப்பை நிறுத்தாமல் அக்காவைப் படிக்க வைத்தாலும் தன்னுடைய தட்டில் இருக்கும் உணவைவிட மூத்தவளான அக்காவின் தட்டில் உணவு குறைவாக வைக்கப்பட்டது ஏன்? நான் படிப்பை முடித்த போது நல்ல வேளையில் சேர வேண்டுமென விரதம் அனுசரித்த அம்மா, அக்கா படிப்பை முடித்த போது நல்ல வரன் கிடைக்க வேண்டுமென அக்காவையும் சேர்த்துக்கொண்டு விரதமிருந்து பிரார்த்தனை செய்தது ஏன் என்றெல்லாம் அண்ணனாகவும் தம்பியாகவும் இருந்த ஆண்கள் யோசிக்க வேண்டும்.

பாலின இடைவெளிதான் சமூகத்தின் அதிகப்படியான பிரச்சனைக்கு காரணமாக இருந்து வருகின்றது. எனவே பாலின சமத்துவம் பற்றிய புரிதல் ஆண்களிடம் ஏற்பட வேண்டும். பெண்களின் மோகம் அந்நிய நாகரீகங்களின் மீது சென்றுவிட்டதால் விவசாயம் பார்க்கின்ற ஆண்களுக்கும் கிராமத்தில் வசிக்கும் ஆண்களுக்கும் மணமகள்கள் கிடைப்பதே இல்லையென்று வருந்தும் ஆண்கள் ஒன்றை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இயற்கை வளம் பசுமையாகவும் செழிப்பாகவும் உள்ளது என்ற அழகியலைத் தாண்டி கிராமங்களில் ஆணாதிக்கமும் சாதிய ஆதிக்கமும் பசுமையாகவும் செழிப்பாகவும் இன்றளவும் நீடித்து வருகின்றன. அறமற்ற ஆணாதிக்கமும் சாதிய ஆதிக்கமும் உடைபடாத கிராமங்களை ஆராய்ந்து பார்த்தால் பெண்கள் வாழத் தகுதியில்லாத இடங்களாகத் தென்படும்.

பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் பெருமைக்குப் பெற்று எருமைக்குக் கட்டிக் கொடுத்தோம் என்றில்லாமல் பெண் குழந்தைகளைப் பாலினச் சமத்துவத்துடன் வளர்த்து சுயசார்புடையவர்களாக ஆக்க வேண்டும். சொத்தின் சமபங்கை மகளுக்குப் பெயரளவில் கொடுத்து விட்டு, அச்சொத்தை நிர்வகிக்கின்ற பொறுப்பை மருமகனிடம் ஒப்படைக்கும் வழக்கத்தைப் பெற்றோர்கள் கைவிட வேண்டும்.

பெண்கள் பெற்றோரையும் மற்றோரையும் நம்பாத பொருளாதாரச் சுயசார்புடையவர்களாக மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கான உரிமைகளைப் பேசும் அடிப்படைச் சட்டங்களை கற்றுணர்ந்து வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கலை இலக்கியப் படைப்புகள் காட்டுவது போல் பாதிப்புக்குள்ளாகும் பெண்களைக் காக்க சாமியும் பேயும் வராது; சட்டமும் அரசு அமைப்பும்தான் வரும். எனவே சட்டத்தை அணுகும் வழிமுறைகளைப் பெண்கள் நன்கு அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களுக்குத் தேவைப்படும் கூடுதலான சட்டங்களையும் அரசுக் கட்டமைப்பையும் உருவாக்க, பெண்கள் அரசியல் வெளிக்குப் பரவலாக வரவேண்டும். குடும்பப் பராமரிப்புப் பணிகளில் ஆண்கள் முழுமையாகப் பங்கெடுப்பதாலும் சமூக அரசியல் பணிகளில் பெண்கள் முழுமையாகப் பங்கெடுப்பதாலுமே கடலளவு சமத்துவத்தை கட்டியெழுப்ப முடியும். ஆண் – பெண் உறவுச் சிக்கலில் உள்ள சிக்கல்களுக்கு சமத்துவமே தீர்வாகும்.

படைப்பாளர்:

கல்பனா

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவராக உள்ளார். மலசர் பழங்குடிகளின் சமூகப் பண்பாட்டு இயங்கியல் என்னும் பொருண்மையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டுவருகிறார். சர்வதேச ஆய்விதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.