ஆப்கானிஸ்தானின் நவீன அரசியல் வரலாறு எனக் கருதப்படும் காலம் 1933லிருந்து தொடங்குகிறது. இந்த ஆண்டு நவம்பர் 8 மன்னர் நாதிர் ஷா படுகொலை மிக முக்கியமானதொரு வரலாற்று நிகழ்வு. இவரைக் கொலை செய்தது ஹசாரா மாணவர்கள். இந்தக் கொலையானது, ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மை இனமான ஹசாரா இனக்குழுவின் அதிருப்தியையும் அவர்கள் ஆட்சி அதிகாரங்களில் புறக்கணிப்பட்டதையும் வெளிப்படுத்தியது.

ஆப்கானிஸ்தானின் அரசியல் எப்போதும் பஷ்டூன் இனத்தவராலே ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. பஷ்டூன்கள் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளனர். ஷியா பிரிவைச் சேர்ந்த பஷ்டூன் துரி பழங்குடியினரைத் தவிர, பஷ்டூன்கள் சுன்னி முஸ்லிம்கள்.

ஆப்கானிஸ்தானின் இன ரீதியான நம்பகமான தற்போதைய தரவுகள் இல்லை. இருப்பினும் கணக்கெடுப்புகள் மக்கள்தொகையின் சில தோராயமான மதிப்பீடுகளை சுட்டிக்காட்டுகின்றன. எவ்வாறாயினும், முந்தைய மதிப்பீடுகள் மக்கள்தொகையை பஷ்டூன் 42 சதவீதம், தாஜிக் 27 சதவீதம், ஹசாரா 9 சதவீதம், உஸ்பெக் 9 சதவீதம், துர்க்மேன் 3 சதவீதம், பலுச்சி 2 சதவீதம், பிற குழுக்கள் மீதமுள்ள 8 சதவீதம் என்பதாக மதிப்பிடப்படுகின்றது. இந்த இனக்குழுக்களில் பெருந்தொகையான மக்கள் ஷியா, சுன்னி முஸ்லிம்கள். மிகக் குறைந்த அளவில் சீக்கியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்களும் அடங்குவர்.

பல பழங்குடியினர், குலங்கள், சிறிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் இன்னும் ஒரு பழங்குடி சமூகமாகவே உள்ளது. இன, கலாசார வேறுபாடுகளுக்கு நிலப்பரப்புக்களினதும், அப்பகுதிகளின் பண்பாடுகள், விழுமியங்கள், காலநிலைகளினதும் மாறுபாடு கணிசமாகப் பங்களிப்புச் செலுத்துகின்றன. உயர்ந்த மலைத் தொடர்கள், தானிய வயல்கள், சமவெளிகள், பாலைவனங்களால் நாட்டின் நிலப்பரப்பு பன்முகம் பெறுகின்றது.

நாட்டின் மக்கள் தொகை பல தேசிய சிறுபான்மையினரின் இருப்புடன் அதன் இருப்பிடத்தைப் பிரதிபலிக்கிறது. முக்கிய இனக்குழுக்கள் நாடு முழுவதும் சிதறிக்கிடக்கின்றன. பெரும்பான்மை குழுவான பஷ்டூன்கள் முக்கியமாக தெற்கிலும் தென்கிழக்கிலும் குவிந்துள்ளனர், ஆனால் மாநிலம் முழுவதும் வாழ்கின்றனர். தாஜிக்கர்கள் முக்கியமாக வடக்கு, வடகிழக்கு, காபூல் பகுதியில் வாழ்கின்றனர். ஹசாராக்கள் மையத்திலும் (ஹசராஜத்) காபூலிலும் வாழ்கின்றனர்; வடக்கில் உஸ்பெக்ஸ்; மேற்கில் அய்மாக்; வடமேற்கில் துர்க்மென்ஸ்; மேற்கிலும் தென்மேற்கிலும் பலுச்சிகள்; கிழக்கில் நூரிஸ்தானிஸ்.

இவ்வாறு பல இனங்களாலும் பழைமைவாதச் சிந்தனைகளாலும் பிளவுண்டிருந்த ஒரு தேசம் தங்களைப் பற்றிச் சிந்திப்பதற்கான இடைவேளையைக்கூடப் பெறமுடியாதபடி தொடர்ச்சியான ஆக்கிரமிப்புச் சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது வரலாற்றின் மிகப் பெரிய துரதிருஷ்டம்.

பிரித்தானியப் பேரரசினால் பேரழிவுக்கு உள்ளாகியிருந்த ஆப்கான் நாட்டின் சுதந்திரம் முழுமையான சுதந்திரமாக இருக்கவில்லை. அது மீண்டும் ரஷ்யாவின் பிடியில் விழுந்தது. ஆப்கான் நாட்டில் நடந்த போர்களின் வரிசையில் சோவியத்தினால் அந்நாட்டில் நிகழ்ந்த பிளவுகள் குறித்து அதிக கவனயீர்ப்பு இல்லாதிருப்பது ஆச்சரியமளிக்கின்றது. பெரும்பாலான விமர்சகர்கள் ஆப்கானின் அரசியலை அமெரிக்காவின் படையெடுப்பிலிருந்தே நோக்குகின்றனர். ஆப்கானிஸ்தானின் அமெரிக்காவுடனான ராஜதந்திர உறவுகள் 1922இல் தொடங்கியிருந்தபோதும், 1941இல் பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கும்வரை – ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஆர்வமற்ற ஒரு நாடாக இருந்தது.

1991இல் சோவியத் யூனியனின் சரிவு நூற்றாண்டின் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வுகளில் ஒன்று. ரோமானிய சாம்ராஜ்யத்தைப் போலவே, சோவியத் ஒன்றியத்தின் முறிவும் சில உள், வெளிநாட்டு காரணிகளால் ஏற்பட்டது. ரோமானியப் பேரரசு போலல்லாமல், சோவியத் பேரரசு திடீரெனச் சரிந்தது. பெரும்பாலான அறிஞர்களை ஆச்சரியப்படுத்தும் சோவியத் யூனியனின் முறிவுக்கு கோர்பச்சேவின் தலைமைத்துவமும் அமைப்பு ரீதியான காரணிகளே பிரதானம் எனத் தற்போதைய விளக்கங்கள் குறிப்பிடுகின்றன. இந்த விளக்கங்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த போரின் முக்கியப் பங்களிப்பில் கவனம் செலுத்தவில்லை. சாம்ராஜ்ய முறிவுகளும் ஆட்சி மாற்றங்களுமே போருக்கான முக்கியமான காரணிகள் என்று கருதுகின்றவர்களில் பலர், சோவியத் யூனியனின் முறிவுக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த போர் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது என்ற வாதத்தை மறந்துவிடுகின்றனர்.

ஆப்கானில் ரஷ்யாவின் போர் சோவியத் அரசியலை நான்கு வலுவான வழிகளில் பாதித்தது:

1. கருத்து விளைவுகள்: இது பேரரசாக இருந்து கொண்டு வெளிநாடுகளில் தலையிடுவதற்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதன் செயல்திறன் பற்றிய தலைவர்களின் கருத்துகளை மாற்றியது.

2. ராணுவ விளைவுகள்: இது செம்படையைக் கேவலப்படுத்தியது. கட்சிக்கும் ராணுவத்திற்கும் இடையில் பிளவை உருவாக்கியது. செம்படை ராணுவம் வெல்ல முடியாதது என்பதாக நிரூபித்தது.

3. சட்டபூர்வமான விளைவுகள்: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டவர் அல்லாதவர்கள் நடத்திய ரஷ்யப் போராகக் கருதியதால், சுதந்திரம் கோருவதற்கான பொதுவான காரணத்தை இது வழங்கியது.

4. பங்கேற்பு விளைவுகள்: இது அரசியல் பங்கேற்பின் புதிய வடிவங்களை உருவாக்கியது, கிளாஸ்னோஸ்டுக்கு முன்பு பத்திரிகை / ஊடகத்தை மாற்றத் தொடங்கியது. குறிப்பிடத்தக்க சிவில் அமைப்புகளை உருவாக்கியது.

ஆப்கானிஸ்தானில் புதிய சிவில் அமைப்புகள் பல தோற்றம் பெற்றது இக்காலப் பகுதியிலேயே நடந்தது. பழமைவாத குடிகளும் இனக்குழுக்களும் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலாதிக்கத்தை விரும்பவில்லை. எதிர்த்துச் செயற்படுவதற்கான அமைப்புகள் தோற்றம் பெற்றன.

சோவியத் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட மிக மோசமான முடிவுகளால் நிகழ்ந்த ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு சோவியத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக மட்டுமிருக்கவில்லை. ஆப்கானிஸ்தானைச் சிதைத்தது. ரஷ்யாவிற்கு எதிராக மூன்றாம் உலகின் அணுகுமுறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக சோவியத்துகள் வளரும் நாடுகளைத் தங்கள் சுதந்திரத்தைப் பராமரிக்க ஆதரிப்பதாக போதிக்கின்றனர். இருப்பினும், சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, ​ரஷ்யா நம்பகமான நட்பு நாடு அல்ல என்பதை மக்கள் விரைவில் கண்டறிந்தனர். சோவியத்துகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அதே வழியில் அவர்கள் எந்த நாட்டையும் ஆக்கிரமிக்க முடியும். ஆப்கானிஸ்தானின் ஆக்கிரமிப்பு சோவியத் குடியரசுகளுக்கும் சோவியத் அரசாங்கத்திற்கும் இடையில் மீளமுடியாத உள் மோதல்களை ஏற்படுத்தியது. சோவியத் அரசின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வகித்த மிகைல் கோர்பச்சேவ், ஆப்கானிஸ்தானிலிருந்து செம்படை வெளியேற உத்தரவிடும் நிலைப்பாட்டை எடுத்தபோது ​​படையெடுப்புக்கான பொருளாதார, ராணுவ வளங்கள் வடிகட்டப்பட்டிருந்தன. ஆப்கான் மக்களுக்கு அன்பளிப்பாக உள்நாட்டு மோதல், ராணுவ மோதல், பொருளாதார நெருக்கடி, நிலையற்ற அரசியல் பிரக்ஞை என்பவற்றை ரஷ்யா விட்டுச் சென்றது.

Soviet Troops in Afghanistan

ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகளின் ஆக்கிரமிப்பு என்பது நீண்டதும் துயரமானதுமான வரலாற்றுப் பக்கங்களைக்கொண்டிருக்கிறது. இதன் தொலைவு வெளியிலிருந்து கவனிப்பதைவிடவும் ஆழமானது. பாரசீக வளைகுடாவின் கனிமங்களை ஆக்கிரமிப்பதற்கான ஒரு நுழைவாயிலாக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவது மட்டுமே சோவியத்தின் நோக்கம். ஆனால், சோவியத்தின் நோக்கத்தினை முற்றிலும் தவறாகக் கணக்கிட்டதற்குக் காரணம், ஆப்கானிஸ்தான் சோவியத் தலைவர்களைக் கம்யூனிஸம் என்ற கண்ணாடி வழியாகக் காண்பதற்கு முற்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்பிற்கும் முற்றிலும் வேறான ஒரு முகத்தை அப்போது ரஷ்யா கொண்டிருந்தது. ஏற்றுக்கொள்வதற்கு மட்டுமே ஆப்கான் அப்போது அனுமதிக்கப்பட்டது. வேறு தெரிவுகள் இருக்கவில்லை.

இன்னொரு புறம் சோவியத்துகளுக்கு ஆப்கானிய கலாச்சாரம் தெரிந்திருக்கவில்லை. சமூகத்தையும் பழமைவாதக் கலாச்சாரத்தையும் சமாளிப்பதற்கு அவர்களால் முடியவில்லை. ஆப்கானிஸ்தானினுள் அமெரிக்கா ஊடுறுவியபோதும் இதே சவாலை எதிர்கொண்டது.

ஆப்கானியர் தமது மதம், நாடு, தம் பழைமை, தம் முன்னோர்கள் இவற்றிற்கு மேலாக எதொன்றையும் பெருமிதமாகக் கருதவில்லை. இந்த நாட்டு மக்களின் தனித்துவம் காரணமாகவே வெளிநாட்டுச் சக்திகள் எவற்றினாலும் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை.

தொடரும்…

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.