1.
அன்பிலாச் சொல்

ஓர் அஞ்சலிக் கட்டுரை எழுத நேரமில்லை
ஒரு வாழ்வு ஐந்து வரிகளில் சுருங்குகிறது
கண்ணீர் கரகரத்த குரல்
சபையைத் தன் வசமாக்குகிறது

அடைந்த துக்கமெல்லாம்
தலைவலியும் வாந்தியுமாய்
அன்றையப் பொழுதை அரற்றுகிறது

நாம் எப்போது

வேலைகள் இல்லாமலிருந்தோம்
வாழ வேலையற்றிருந்தபோதும்
வெள்ளக் காடாக
வேலைகள் நம்மைச் சூழ்ந்திருந்தன

எதற்குதான் நமக்கு நேரமிருந்தது
ஐந்து கவளத்தை

ஒன்றேயாக ஆக்கி விழுங்கினோம்

எப்போதுதான் நாம் நமது அன்பை
முழுதாகத் தந்தோம்
நான் உன்னைக் காதலிக்கிறேன்

என்பதைக் கூட ‘நா.உ.கா’ என்றோம்

என்றுதான் நம் மனதைத் திறந்தோம்
தட்டித் தட்டிப் பார்த்துவிட்டுத்தான்
எல்லோரும் சென்று சேர்ந்துவிட்டார்கள்

மழை முற்று முழுதாக
அற்றுப் பொழிய
மலை எப்போதும்
சொற்களற்று இறுகியிறுகி…

பி.கு:
நேரமற்றோரால் வாசிக்கப்படாமலிருக்க எழுதப்பட்டது.

2.

எங்கள் வீட்டில்

ஏதோ ஒன்று இருக்கிறது

சாமியறையின் குறுகிய மூலையில்

கனத்த இருளாகப் படர்ந்து

எங்களையே பார்த்தபடி

என்றோ ஒரு நாள் தானறியாமல்

ஏதோவொரு வேண்டுதல்

அதனிடம் தோன்றிவிட

அது எங்களைக் காக்கும் பொறுப்பை

ஏற்றுக் கொண்டது

ஹௌஸ் ஓனர் வீட்டை

இடித்துக் கட்டுவதாகச் சொன்ன மறு வாரத்தில்

ஊரெல்லாம் கொரானாவைக் கொண்டு வந்து

வீடு மாறுவதன் துன்பம்

தள்ளிப் போனது

பொதுத் தேர்வெழுத விரும்பாத மகளுக்கு

அனைவரும் தேர்ச்சி என்கிற

அறிவிப்பைக் கொண்டு தந்தது

அதை மதித்து

அதனிடம் கேட்டுக் கொண்டால் போதும்

இயலாததையும்கூட

செயலாக்கித் தந்தது

ஒரு முறை ஒரேயொரு முறை

அதனிடம் பேச மறந்த

சொல்ல நினைவற்றுப்போன

எதார்த்தமான கணத்தை

மன்னிக்க மறுத்து வாழ்வின்

மறக்க முடியாத துர் கனவாக்கித் தந்தது

பிறகெல்லாம் தலைகீழ்

காரில் மஞ்சள் தீற்றிய

மகரிஷி வித்யா மந்திர் ஆட்டோக்காரர்

மார் வலி வந்து படுத்த படுக்கையானார்

அநியாயமாக வேலை செய்த

நாகம்மாவிற்கு வயிற்று வலி வந்து

வேலைக்குப் போவதையே நிறுத்திவிட்டார்

ஓய்வற்று பரபரத்துக் கொண்டிருந்த

எனக்குப் பார்க்கப் பார்க்க

ஒரு விபத்து நிகழ்ந்து

ஓய்வான ஓய்வு கிடைத்தது

எல்லாவற்றிற்கும் காரணம்

நான் அதிகாரத்தில் வேலையை விட்டு

அனுப்பிய யாரோ

எலுமிச்சம்பழம் உருட்டி விட்டதாக

சக அலுவலர் சொல்கிறார்

வீட்டில் ஒரு மூலை மட்டுமே

இடமாகக் கொண்டிருந்த அதுவோ

இப்போது எங்கும் சுற்றுகிறது

தூங்கி விழிக்கையில்

கயிறற்ற உத்தரத்தில் தொங்குகிறது

சிலசமயம் கழுத்தைத் திருப்ப விடாமல்

எனக்குப் பின்னால்

எங்கும் வியாபித்திருக்கிறது

நான்

நினைத்த நினைவை

அழிக்கத் தெரியாமல்

அது எப்போதும் என்னை

வெறித்திருக்கிறது

Cute parrot in cage on white background illustration

3.

ஓருறவின் புதிர்மை என்பது
ஏழு கடல்கள் தாண்டி 

ஏழு மலைகளும் தாண்டி 

கிளியின் உயிராக இருப்பது
பறவையின் தனிச்சையைக்
கூண்டுக்குள் அடைப்பது

மூச்சுக் காற்றாக இருப்பது
நிஜமாவென சோதிக்க
உதடு குவித்து ஊதியதில்
வெளிச்சமணைந்து
உலகையே மறையச் செய்வது

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.