தாய்ப்பால், ’திரவத் தங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் முதலில் தாய்க்குச் சுரக்கும் சீம்பால் (Colostrum) என்பது நோய் எதிர்ப்பு சக்திகள் தரக்கூடிய எதிரணுக்கள் நிறைந்தது. உலகைச் சந்திக்கும் குழந்தைக்கான முதல் கவசம் அது. வளரும் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துகள், எதிரணுக்கள், ஏன் போதுமான நீர்ச்சத்து வரை தாய்ப்பாலிலேயே கிடைக்கிறது என்று குழந்தை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மனிதர்கள் உட்பட ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இனங்கள் கொண்ட ’பாலூட்டிகள்’ வகுப்பில் உள்ள எல்லா விலங்குகளுமே குட்டிகளுக்குப் பால் கொடுக்கும் தன்மை கொண்டவை. ஆனால், குட்டிகளுக்குப் பால் தருவது என்பது பாலூட்டிகளுக்கு மட்டுமேயான தனி குணம் அல்ல. பரிணாம அடுக்கில் கீழே இருக்கும் சில விலங்குகளிலும் இந்தப் பண்பு காணப்படுகிறது! சிலவகை பறவைகள், முதுகெலும்பில்லாத பிற உயிரிகள், இவ்வளவு ஏன், மீன்களிலும் பூச்சிகளிலும்கூட இந்தப் பண்பு உண்டு!

செங்கால் நாரை

புறாக்கள், சக்கரவர்த்தி பென்குயின்கள், செங்கால் நாரைகள்/பூநாரைகள் (Flamingo) போன்ற சில பறவை இனங்கள், குஞ்சுகளுக்குப் பாலூட்டுகின்றன. இந்த பால் Crop milk என்று அழைக்கப்படுகிறது. குஞ்சுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிரம்பிய ஒரு வெள்ளை நிறத் திரவம். இது தாய் அல்லது தந்தைப் பறவைகளின் வாயிலிருந்து குஞ்சுகளுக்கு நேரடியாகத் தரப்படுகிறது. செங்கால் நாரைகளின் பாலில் காந்தாசாந்தின் என்ற ஒரு பொருள் இருப்பதால், அது ரத்தச்சிவப்பு நிறத்தில் இருக்கும்! குஞ்சுகளுக்கு ஊட்டச்சத்துகளோடு அழகான சிவந்த நிறத்தையும் தரும் உத்தி இது. இதனால் குஞ்சுகளுக்குப் பாலூட்டும் காலத்தில் தாய்ப்பறவைகள் தங்கள் நிறத்தை இழந்து வெளிறிப்போய்விடுகின்றன. பாலின் நிறத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் ’ரத்தத்தையே பாலா கொடுத்தேன்’ என்பது போன்ற வசனங்கள் இந்தப் பூநாரைகளுக்குத்தான் பொருந்தும்!

அமேசான் நதியில் வசிக்கும் டிஸ்கஸ் என்ற வகை மீன்களைப் பொறுத்தவரை, முட்டை குஞ்சு பொரிந்ததும் உடலின் மேல் தோலில் இருந்து பிசுபிசுப்பான பால் போன்ற திரவம் ஒன்று சுரக்கும். இது குஞ்சுகள் வளரும்போது 3 வாரம் வரை குஞ்சுகளுக்குப் புகட்டப்படும். பிறந்த குஞ்சுகளின் வயிற்றில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் எதுவும் இருக்காது என்பதால், இந்தப் பாலின்மூலம் அவை குஞ்சுகளின் உடலுக்குள் சேர்க்கப்படுகின்றன.

உறங்கிக்கொண்டேயிருக்கும் நோய் (African sleeping sickness) தொற்றைப் பரப்பக்கூடிய தெத்சி ஈக்கள் (Tsetse fly), குட்டி போடும் பண்பு கொண்டவை! இவற்றின் உடலுக்குள் கருப்பையில் லார்வா புழு வளரும்போதே பால் சுரக்கத் தொடங்கிவிடும். கருப்பைக்குள்ளிருந்தே இவை பாலூட்டுகின்றன. லார்வா வளர வளர, அதன் வளர்ச்சி நிலைக்கு ஏற்றவாறு பாலின் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும்! Diploptera punctata என்ற ஒரு வகை கரப்பான்பூச்சி இனமும் குட்டிகளை ஈன்று பால் தரும் பண்பு கொண்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விலங்குகள் அடுத்த தலைமுறைக்குப் பாலூட்டினாலும், பால் ஊட்டுவதற்கான சரியான உடல் அமைப்பு, பால் சுரப்பிகள், குட்டிகளிடம் பாலை சென்று சேர்ப்பதற்கான உறுப்புகள், சூழலுக்குத் தகுந்தவாறு இருக்கும் பாலின் தன்மை என்று எல்லாமே சரியாக அமைந்திருப்பது பாலூட்டிகளில்தான். 31 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சினாப்சிட் என்ற விலங்கில்தான் இந்தப் பண்பு சரியாகத் தோன்ற ஆரம்பித்தது என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். அதில் தொடங்கிய பரிணாம வளர்ச்சி, மிகவும் நுணுக்கமான தேவைகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க்கிறது.

மாடுகளிலேயே பசும்பாலுக்கும் எருமைப்பாலுக்கும் வேறுபாடு உண்டு என்று நாம் அறிவோம். குட்டிகளின் வளர்ச்சி வேகம், சுற்றியுள்ள சூழலின் வெப்பநிலை, வேட்டையாடிகளின் ஆபத்து என்று எல்லாவற்றுக்கும் ஈடு கொடுப்பதாக விலங்குகளின் பால் இருக்கிறது. சில அதீத உதாரணங்களைப் பார்க்கலாம்.

பசும்பாலில் 3-4% கொழுப்புச் சத்து உண்டு. அதோடு ஒப்பிட்டால் ஹூடட் சீல் (Hooded seal) என்ற கடல் பாலூட்டியின் பால் கிட்டத்தட்ட ஐஸ்கிரீமைப் போன்றது. இந்த விலங்கு தரும் பாலின் கொழுப்பு அளவு 61 சதவீதத்தையும் தாண்டும்! ஒரு நாளைக்கு ஒரு சீல் குட்டி 7 லிட்டருக்கு மேல் பாலைக் குடிக்கிறது! தொடர்ந்து பால் குடிக்கும் குட்டியின் எடை 22 கிலோ கூடுவதால், நான்கே நாட்களில் எடை இரட்டிப்பாகிவிடுகிறது! அடுத்த இரண்டு மூன்று நாட்களிலேயே திட உணவு உண்ணத் தயாராகும் குட்டி, தாயிடம் பால் குடிப்பதையும் நான்கு நாட்களில் நிறுத்திவிடுகிறது.

ஏன் இத்தனை வேகம்? கொழுப்புச்சத்து நிறைந்த இந்த ஐஸ்கிரீம் பாலின் தேவை என்ன?

ஹூடட் சீல்

ஹூடட் சீல் வகை பாலூட்டிகள், பனிப்பிரதேசமான ஆர்டிக் கடற்பகுதிகளில் பனித்தகடுகள்மேல் வசிக்கின்றன. இங்கு உள்ள உறையவைக்கும் வெப்பநிலையில் தாக்குப் பிடிக்கவேண்டுமானால், குட்டிகளின் உடலில் ஒரு கொழுப்புப் படலம் இருக்கவேண்டியது அவசியம்.தவிர, பனித்தகடுகள் உடைந்துவிட்டால், குட்டிகளும் தாயும் பிரியும் ஆபத்தும் அதிகம். ஆகவே, நான்கே நாட்களில், வாழ்நாளுக்குத் தேவையான மொத்த கொழுப்பையும் ஊட்டச்சத்தையும் தாய்விலங்கு தந்துவிடுகிறது.

கறுப்பு காண்டாமிருகங்கள் உலகிலேயே மிகக்குறைந்த அளவில் கொழுப்புச்சத்துக் கொண்ட பாலைச் சுரக்கின்றன. பாலில் உள்ள கொழுப்புச்சத்து ஒரு சதவீதத்துக்கும் குறைவு – 0.21% மட்டுமே! இவற்றின் இனப்பெருக்கச் சுழற்சி மிகவும் மெதுவானது என்பதால், குட்டிகளைப் பொறுமையாக வளர்த்தால் போதுமானது. ஆகவே குறைந்த கொழுப்புச்சத்து இருக்கும் பால் இருந்தாலே குட்டிகள் வளர்ந்துவிடுகின்றன. வளர்ச்சி விகிதம் குறைவாகவும், அதிக நாட்கள் பால் குடிப்பவையாகவும் குட்டிகள் இருக்கும்போது, அவற்றுக்குத் தேவையான கொழுப்பும் புரதமும் குறைவுதான் என்கிறது 2013இல் வெளிவந்த ஓர் ஆய்வு.

உலகிலேயே மிகவும் இனிப்பான பால் எந்த விலங்குடையது என்று விஞ்ஞானிகள் தேடிப் பார்த்தார்கள் – 14% சர்க்கரை அளவோடு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது டாமர் வாலபி என்ற ஒருவகை கங்காரு. ஆனால், மற்ற விலங்குகளில் இருப்பதுபோல் இதில் உள்ளது சுக்ரோஸ் வகை சர்க்கரை அல்ல. சில விநோதமான சாக்கரைடுகள் இந்தப் பாலில் காணப்படுகின்றன. இதற்கான காரணம் என்ன என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகிறார்கள். வாலபிகளின் குட்டிகள் வயிற்றுப்பைக்குள் வளர்கின்றன என்பதால் கிருமித் தொற்று ஏற்படாமல் இருக்க இந்தப் பால் உதவலாம் என்று சொல்லப்படுகிறது.

Eastern Cottontail Rabbit என்ற முயல் இனத்தின் பாலில் 15% புரதம் காணப்படுகிறது. இவை குட்டிகளைத் தனியே விட்டுவிட்டு உணவு தேடப் போகும் வழக்கம் கொண்டவை. ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே குட்டிகளுக்குப் பாலூட்டுகின்றன என்பதால், அந்த நீண்ட இடைவெளியைச் சமாளிக்க இந்தப் புரதங்கள் உதவலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

குட்டியின் அளவு பெரிது என்றால், அது குடிக்கும் பாலின் அளவும் அதிகம்தானே!உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கிலத்தின் பால் சுரப்பிகள் மிகப்பெரியவை. நீலத்திமிங்கிலத்தின் பாலில் 35 முதல் 50% வரை கொழுப்புதான். நீலத்திமிங்கிலத்தின் குட்டி ஒரு நாளைக்கு 200 லிட்டர் பால் குடிக்கிறது! ஆறு மாதம் வரை இவை பால் குடிக்கின்றன என்பதால், ஆறு மாதத்தில் ஒரு நீலத்திமிங்கிலக் குட்டி சராசரியாகக் குடித்த பாலின் ஆற்றல் என்பது, 200 பேர் ஓர் ஆண்டு முழுவதும் சாப்பிடுவதால் வரும் ஆற்றலுக்குச் சமம்! வளர்ந்துவரும் குட்டி தானாகவே திட உணவு தேடத் தொடங்கும்போது, கொஞ்சம் கொஞ்சமாகப் பாலில் உள்ள கொழுப்புச்சத்தும் குறைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஸ்பெர்ம் திமிங்கிலம்

திமிங்கிலங்களின் பால் என்று சொல்லும்போது நமக்கு ஒரு கேள்வி எழலாம் – தண்ணீருக்குள் இருக்கும் பாலூட்டிகள் எப்படிப் பால் தருகின்றன? பெரும்பாலும் பனித்தகடுகளின்மேல் நேரத்தைக் கழிக்கும் பாலூட்டிகளுக்குப் பிரச்னையில்லை. ஆனால், தண்ணீருக்குள் இருக்கும் பாலூட்டிகளைப் பொறுத்தவரை, பால் என்பது நீரில் உடனே கரையாமல் இருக்கவேண்டும், ஆகவே அவை அதிகம் கொழுப்புச்சத்துள்ள பாலையே சுரக்கின்றன. சரியாகப் பால் குடிக்கும்வண்ணம் குட்டிகளுக்கு உதடு கிடையாது என்பதால், பாலைக் குட்டிகளின் வாய்க்குள் கொண்டு சேர்க்கும்விதமாகவே பெண்விலங்குகளின் பாலூட்டும் உறுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன!

நீர்யானை

நீர்யானைகளின் கதை சற்றே விநோதமானது. இவை நீருக்குள் குட்டிகளை ஈனுகின்றன. குட்டியை ஈன்ற பிறகு தாய்விலங்கு குட்டியை நெட்டித் தள்ளி நீரின் மேற்பரப்பில் சுவாசிக்க வைக்கிறது. சுவாசித்து முடித்த பின்பு நீர்யானைக் குட்டிகள் தாங்களாகவே நீருக்குள் நீந்திப் போய் தாயிடம் பால் குடிக்கின்றன!

வரிக்குதிரை

மனிதர்களின் தாய்ப்பாலோடு எல்லா விலங்குகளின் பாலையும் ஒப்பிட்ட விஞ்ஞானிகள், வேதியியல் கூறுகளை மட்டும் வைத்துப் பார்த்தால், மனிதர்களின் பாலும் வரிக்குதிரைகளின் பாலும் ஒரே தன்மையுடன் இருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் பால் கூறுகள் ஒரே மாதிரியாக இருக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், மனிதர்களுக்கும் வரிக்குதிரைகளுக்கும் இடையில் 9.5 கோடி ஆண்டுகள் இடைவெளி உண்டு. அப்படியானால் இந்த ஒற்றுமை எப்படிச் சாத்தியமானது?

“குட்டிகளின் வளர்ச்சி, சூழல் எல்லாவற்றையும் பொறுத்துதான் பாலின் தன்மை அமையும். ஆகவே விலங்குகளின் பரிணாம இடைவெளியை மட்டும் கவனித்து இதை முடிவெடுக்க முடியாது” என்று விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள். தண்ணீர்ச்சத்து அதிகமாக இருக்கும் தாய்ப்பால், மனிதக் குழந்தையின் வளர்ச்சி விகிதத்துக்கு உதவுகிறது என்று தெரிவிக்கிறார்கள். வரிக்குதிரைக் குட்டிகளின் வளர்ச்சி விகிதம் வேறு என்றாலும், அவை இருக்கும் வறண்ட சூழலுக்குத் தகுந்தவாறு பாலின் தண்ணீர் விகிதம் இருக்கிறது என்று குறிப்பிடுகிறார்கள். சில விலங்குகளைப் பொறுத்தவரை, பிறந்த குட்டிகளின் மூளை வளர்வதைவிட உடல் வேகமாக வளர்ந்து வலுப்பெறுவது அவசியமாக இருக்கும். அப்போதுதான் வேட்டையாடிகளிடமிருந்து விரைவில் தப்பிக்க முடியும். மனிதர்களுக்கு அந்தப் பிரச்னை இல்லை. அதனால்தான், சராசரியான கால்நடைக் குட்டிகள்கூட மனிதக் குழந்தையைவிட நான்கு மடங்கு வேகமாக எடை கூடுகின்றன!

பரிணாம வளர்ச்சியில், பாலூட்டி விலங்குகளின் பாலூட்டும் உறுப்புகள், சுரப்பிகள், பால் உருவாகும் விதம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்த அதே நேரம், கருவுற்ற முட்டையின் மஞ்சள் கரு அளவில் குறையத் தொடங்கியது. முழுமையாக வளர்ச்சியடையாமலேயே குட்டிகள் வெளியில் வந்தால் போதுமானது என்ற நிலை ஏற்பட்டது. இது பேறுகாலத்தை மாற்றியமைத்தது. குட்டிகள் ஓரளவு வளர்ந்த பிறகு முழுமையான பல் அமைப்பு வந்தால் போதும் என்ற தளர்வும் கிடைத்ததால், தாடை எலும்புகள் வலுவடையாமல் குட்டிகள் பிறக்கத் தொடங்கின. வருங்காலத்தில் முளைக்கப் போகும் பற்களுக்கு அடையாளம் வைக்கும் விதமாகவும் உணவு உண்ண ஏதுவாகவும் பால் பற்களோடு குட்டிகள் பிறந்தன. பரிணாம வளர்ச்சியில் பாலூட்டும் பண்பும் இருவகை பற்கள் என்ற பண்பும் பின்னிப் பிணைவது இப்படித்தான்!

உராங்குட்டான்

சிலவகை பாலூட்டிகளைத் தவிர எல்லாப் பாலூட்டிகளுக்கும் இருவகைப் பற்கள் உண்டு. சீல் போன்ற பாலூட்டிகளில், கருப்பைக்குள்ளேயே பால் பற்கள் உதிர்ந்து பெரிய பற்கள் முளைத்துவிடும். பல்லுள்ள திமிங்கில இனங்களுக்கு இருவகைப் பற்கள் என்ற பண்பு கிடையாது.

இந்த ஒரு கேள்வியையும் கேட்டுவிடலாம்.

விலங்குகள் தங்கள் குட்டிகளுக்கு மட்டும்தான் பால் கொடுக்குமா?

சிங்கம் போன்ற பல சமூக விலங்குகளில், கூட்டத்தில் இருக்கும் குட்டிக்கு எந்தப் பெண் விலங்கு வேண்டுமானாலும் பால் தரும். கைவிடப்பட்ட திமிங்கிலக் குட்டிகளைத் தத்தெடுத்துப் பாலூட்டி வளர்க்கும் பெண் திமிங்கிலங்கள் உண்டு.

பாலூட்டிகளின் பரிணாம வளர்ச்சியில் தாய்விலங்குகள் குட்டிகளுக்குப் பாலூட்டுவது என்ற பண்பு ஒரு முக்கியமான பாய்ச்சலாகப் பார்க்கப்படுகிறது. தாயிடமிருந்து பால் குடிக்கும் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மூளை வளர்ச்சிக்கான வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் சென்று சேர்ந்துவிடுகின்றன. குட்டிகளை ஈன்ற பின்பு அவற்றுக்குப் பாலூட்டவேண்டியிருப்பது தாய்விலங்குகளிடம் கூடுதல் ஆற்றலைக் கோருகிறது என்றாலும், இந்தப் பண்பு இருப்பதாலேயே குறைவான எண்ணிக்கையில் குட்டிகளை ஈன்றாலும் பாலூட்டிகளால் தங்கள் இனத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடிகிறது.

பாலின பேதமே இல்லாத நுண்ணுயிரிகளின் உலகம் எப்படிப்பட்டது? பாலின மரபணுக்களின் பரிணாம வளர்ச்சி எப்போது, ஏன் ஏற்பட்டது?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.