மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது, மனித இனத்தில் மட்டும்தான் பிரசவத்தின்போது சக மனிதர்களின் உதவி (Assisted Childbirth) தேவைப்படுகிறது. இது ஏன் நிகழ்கிறது என்பதை Obstretical dilemma என்ற கருத்தாக்கம் விவரிக்கிறது. நிமிர்ந்து இரண்டு கால்களால் மனித இனம் நடக்கவேண்டியிருந்ததால், பிறப்புப் பாதை (Birth canal) ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் விரிய முடியாத நிலை ஏற்பட்டது. பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் மூளை அளவு அதிகரித்ததில், மண்டையோட்டின் அளவும் அதிகரித்தது. ஆகவே, பெரிய தலை உள்ள குழந்தைகள் குறுகலான பிறப்புப் பாதை வழியாகப் பயணித்து வெளியில் வரவேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் மனித இனத்தில் சக மனிதர்களின் உதவி இருந்தால்தான் பிரசவம் வெற்றிகரமாக நடக்கும் என்ற நிலை வந்துவிட்டது.

இந்தக் கருத்தாக்கத்தில் உள்ள சில கூறுகளை விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், இதன் மையக்கருத்து பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில், பிற குரங்கினங்களோடு ஒப்பிடும்போது மனித இனத்தின் பிரசவம் மிகவும் விநோதமானதுதான். உதாரணமாக, பல குரங்கினங்களில், குட்டி பிறக்கும்போதே மூளை 45 முதல் 50% வளர்ந்திருக்கும். ஆனால், மனித இனத்திலோ பிறந்த குழந்தையின் மூளை கால் பங்கு (25%) மட்டுமே வளர்ந்திருக்கிறது. இந்த அளவுக்குக் குறைவான மூளை வளர்ச்சியும் தலை சுற்றளவும் இருந்தாலும் மனிதக் குழந்தையின் தலை, பிறப்புப் பாதையை அடைத்தபடிதான் பிரசவத்தின்போது முன்னேறுகிறது. விலங்கினங்களிலேயே மனித இனத்தின் பிரசவம்தான் மிகவும் ஆபத்தானது என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால், மனிதர்களையும் வியப்பில் ஆழ்த்துகிற, பார்ப்பதற்கு ஆபத்தாகத் தெரிகிற பிரசவங்களும் பேறுகால நடைமுறைகளும் விலங்கினங்களில் உண்டு.

முள்ளம்பன்றி

முள்ளெலிகளை (Porcupine/முள்ளம்பன்றி) எடுத்துக்கொள்வோம். இவை பாலூட்டி இனங்கள் என்பதால் குட்டி போடும் பண்பு கொண்டவை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், முள்ளெலிக் குட்டிகள், பிறக்கும்போதே உடல் முழுக்க முட்களோடு பிறக்கின்றன!

அது எப்படிச் சாத்தியம்? உடல் முழுவதும் கூரிய முட்களோடு குட்டி பிறந்தால் பிரசவத்தின்போதே உடல் புண்ணாகி தாய் முள்ளெலி பாதிக்கப்படாதா?

அங்குதான் இயற்கை ஒரு சின்ன ட்விஸ்ட் வைத்திருக்கிறது – பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக, கிட்டத்தட்ட நீண்ட முடிகளைப் போலவே இருக்கும். பிறந்த சில மணி நேரத்துக்குள் குட்டியின் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடும்! ஆகவே, பிறக்கும்போது தாய்க்கு எந்தக் காயமும் ஏற்படாது.

வேளா மீன்

வேளா மீன் (Saw fish) என்ற ஒரு சுறா இனம் உண்டு. மூக்கில் கூர்மையான ரம்பம் போன்ற ஓர் அமைப்புடன் இருக்கும் இந்த மீன்கள், வயிற்றுக்குள்ளேயே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துக் குட்டி ஈனும் பண்பு கொண்டவை. இந்த மீன்களின் குட்டிகள் பிறக்கும்போதே கூர் மூக்கு ரம்பத்துடன் பிறக்கின்றன. ஆனால், முள்ளெலிக் குட்டிகளைப் போலல்லாமல் பிறக்கும்போதே வேளா மீன்களின் ரம்ப அமைப்பு கடினமானதாக, கிழிக்கக் கூடியதாக இருக்கும்.

அப்படியானால் தாய்க்குப் பாதுகாப்பு?

வேளா குட்டிகள் பிறக்கும்போது இந்த ரம்பத்தைச் சுற்றி ஒரு தோல் போன்ற அமைப்பு இருக்கும். குட்டி பிறந்து கொஞ்ச நேரம் கழித்து இது தானாகக் கழன்று விழுந்துவிடும். வாள் போன்ற மூக்கு என்றாலும் அதை ஓர் உறையில் இட்டு வெளியில் அனுப்புகிறது இயற்கை!

குட்டிகள் அம்மாவைக் காயப்படுத்திவிடுமோ என்று வேளாக்களும் முள்ளெலிகளும் பயமுறுத்துகின்றன. இன்னொருபுறம் பிரசவத்தின்போது தாயால் குட்டிக்கு ஆபத்தா என்றும் மனிதர்களை வியக்கவைத்த ஒரு விலங்கும் உண்டு.

ஒட்டகச்சிவிங்கி

16 முதல் 18 அடி உயரம் வரை வளரக்கூடிய ஒட்டகச்சிவிங்கிகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. ஒட்டகச்சிவிங்கியின் குட்டிக்கும் நீண்ட கழுத்து உண்டு என்பதால், உட்கார்ந்தபடி பிரசவித்தால் கழுத்தெலும்பு உடைந்துவிடும். ஆகவே தாய் ஒட்டகச்சிவிங்கி நின்றுகொண்டே குழந்தையைப் பிரசவிக்கிறது. தாயின் கருப்பையிலிருந்து குட்டியின் கால் முதலில் வெளியில் வரும். 60 நிமிடங்கள் நீடிக்கும் பிரசவம் முடிந்து முழுவதுமாக வெளியில் வரும் குட்டி, அம்மாவின் இடுப்பு உயரத்திலிருந்து அப்படியே கீழே விழவேண்டியதுதான்!

பிறந்த அந்த முதல் நொடியில் 6.5 அடி உயரத்திலிருந்து குட்டி கீழே விழுகிறது! ஐயையோ என்று பதறுவதற்கு முன் ஒரு சின்னத் தகவல் – இப்படி விழுவதுதான் ஒட்டகச்சிவிங்கிக் குட்டிக்கு நல்லதாம். விழுகிற வேகத்தில் கருசவ்வுப் பை முழுவதுமாகக் கிழிந்து தொப்புள் கொடியும் அறுபடுகிறது. இல்லாவிட்டால் அதுவே குட்டிக்கு ஆபத்தாகிவிடும். உயரத்திலிருந்து விழுந்தாலும் அதிர்ச்சியை மீறி வெறும் இருபதே நிமிடங்களில் ஒட்டகச்சிவிங்கிக் குட்டி நடக்கத் தொடங்கிவிடுகிறது!

சினைமுட்டைகளோடு உயிரணுக்கள் கலந்த பிறகும்கூட, ’இப்போ குழந்தை பெத்துக்க முடியாது, சரியான நேரம் வரட்டும்’ என்று தள்ளிப்போடும் விலங்கினங்கள்உண்டு! சினைமுட்டை கருவுற்ற பின்பும், ஒரு குட்டியாக அந்த முட்டை வளர்ச்சியடையாமல், அப்படியே அழிந்தும் போகாமல் பேறுகாலத்துக்கு ஒரு Pause பட்டனைத் தட்டி அப்படியே நிறுத்திவைக்கும் ஆற்றல் கொண்டவை இந்த விலங்குகள். சுற்றியுள்ள சூழலோ உடல்நிலையோ உடலில் உள்ள கொழுப்போ சரியாக இல்லாதபோது இவை பேறுகாலத்தைத் தள்ளிவைத்து, கருவுற்ற முட்டையை உடலுக்குள்ளேயே வைத்துக்கொள்கின்றன. குட்டி போட சரியான சூழல் வந்த பிறகு அவை பேறுகாலத்தைத் துவக்கி வைத்துக் குட்டி போடுகின்றன. இது diapause அல்லது delayed pregnancy என்று அழைக்கப்படுகிறது. சில வகை கரடிகள், சில நீர்நாய் இனங்கள், பேட்ஜர், ஆர்மடில்லோ (Armadillo) ஆகிய சிறு பாலூட்டிகளுக்கு இந்தப் பண்பு உண்டு. இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்தே கரு உருவானாலும், பிறக்கும் குட்டிக்கு எந்த மரபணுக் கோளாறும் ஏற்படுவதில்லை.

ஆர்மடில்லோ

’கஜகர்ப்பம்’” என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்போம். 22 மாதங்கள் நீளும் யானைகளின் பேறுகாலத்தைக் குறிக்கும் சொல் அது. பிறக்கும் யானைக்குட்டிகள் 100 கிலோ எடை கொண்டவை என்பதால், அவ்வளவு பெரிய உருவம் வளர்வதற்கு இந்த நீண்ட காலம் தேவைப்படும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால், அதைவிடப் பெரிய குட்டிகள் போடும் கடல்வாழ் பாலூட்டிகளுக்கு இத்தனை காலம் தேவைப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டும் விஞ்ஞானிகள், இந்த நீண்ட பேறுகாலத்துக்கு ஹார்மோன்கள்தாம் காரணம் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஏன் இந்த ஹார்மோன்கள் இவ்வாறு இயங்குகின்றன என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஃப்ரில்ட் சுறா

ஆனால், உலகிலேயே நீண்ட பேறுகாலம் கொண்ட விலங்கு என்ற பட்டத்தை யானைகளிடமிருந்து தட்டிப் பறித்திருக்கிறது ஃப்ரில்ட் சுறா (Frilled shark) என்ற மீன் இனம். இதன் சராசரி பேறுகாலம் 42 மாதங்கள், அதாவது 3.5 வருடங்கள்! ஆழ்கடல் இனம் என்பதால் இந்தச் சுறாவின் பொதுவான வளர்சிதை மாற்றம் மெதுவானது என்றும், சராசரியான ஒரு குட்டியை ஈனுவதற்கே இதற்கு மூன்றரை ஆண்டுகள் தேவைப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இன்னும் பல ஆழ்கடல் இனங்களின் இனப்பெருக்க முறைகள் நமக்குச் சரியாகத் தெரியாது என்பதால், எதிர்காலத்தில் ஃப்ரில்ட் சுறாவையும் மிஞ்சும் விலங்குகளை நாம் கண்டறியலாம்!

மனிதக் கரு

இதெல்லாம் சரிதான். கர்ப்பகாலத்தில் மனிதத் தாய்களுக்கு வித்தியாசமான உணவுகளை உண்ணும் ஆசை வருவது, விரைவில் சோர்ந்து போவது, வாந்தி போன்ற பல அறிகுறிகள் ஏற்படுகின்றன. பேறுகாலத்தில் பிற விலங்குகளும் வாந்தி எடுக்குமா? மாங்காயும் சாம்பலும் தின்னுமா?

பேறுகாலத்தில் விலங்குகள் சோர்ந்து போகுமா இல்லையா என்பதைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால், பெண்விலங்கு சோர்ந்து போய் அமர்ந்துவிட்டால் அதற்கு உணவு கிடைக்காது, தவிர வேட்டையாடிகளுக்கும் அது எளிய இலக்காக மாறிவிடும் என்பதால் பேறுகால முழு ஓய்வுக்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

பூனை முதலிய பல வீட்டு விலங்குகள் பேறுகாலத்தின்போது தனிப்பட்ட சில உணவுகளை மட்டுமே விரும்பி உண்கின்றன (Pregnancy cravings) என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்குக் காட்சியகங்களில் இருந்த சில வகைக் குரங்குகள் பேறுகாலத்தின்போது தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்ததாகப் பணியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், பேறுகாலத்தின்போது விலங்குகள் வாந்தி எடுப்பது இதுவரை எங்கும் ஆவணப்படுத்தப்படவில்லை. அது மனிதர்களுக்கே உள்ள தனிப்பண்பாக இருக்கிறது.

2000ல் வெளிவந்த ஓர் ஆய்வுக்கட்டுரையில், மனிதர்களின் பேறுகாலத்தின்போது தாய்மார்கள் வாந்தி எடுப்பது ஒருவகை பாதுகாப்பு வழிமுறை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கும் சில ஆபத்தான உணவுகளைத் தாய்மார்கள் சாப்பிடாமல் இருப்பதற்காக இந்தப் பண்பு பரிணாம வளர்ச்சியில் உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. விலங்குகள் பொதுவாகவே ஆபத்தான உணவுகளிலிருந்து விலகி இருப்பதால் அவற்றுக்கு இது தேவைப்படாமல் இருக்கலாம்.

மனிதர்களாக இருந்துகொண்டு இந்த விலங்கின் பிரசவம் சுலபம், இந்த விலங்கின் பேறுகாலம் கடினம் என்றெல்லாம் நாம் வகைப்படுத்திவிட முடியாது. மாஸ்டர் திரைப்படத்தில் வரும் ’ஆஸ்ட்ரிச் முட்டை தெரியுமா?’ வசனம் நினைவுக்கு வருகிறது. நிறைமாத கர்ப்பத்துடன் தளர்ந்த தாய்மார்களை ’கடுஞ்சூல் மகளிர்’ என்று குறுந்தொகை குறிப்பிடுகிறது. மனிதனோ விலங்கோ சூல்கொண்ட எல்லா இனங்களுக்கும் பேறுகாலம் என்பது உடலை வருத்தும் அனுபவம்தான்.

இவை எல்லாமே சுவாரஸ்யமான பேறுகாலங்கள்/பிரசவங்கள் என்றாலும், கிட்டத்தட்ட ஆணுறுப்பு போன்ற அமைப்பு கொண்ட ஓர் உறுப்பு வழியாகக் குட்டி ஈனும் இந்த விலங்கு மிகவும் ஆச்சரியமானது எனலாம். பிரசவம் மட்டுமல்ல, இந்த விலங்கின் சமூக அமைப்பும் குரலும்கூட விநோதமானதுதான். அது என்ன விலங்கு?

(தொடரும்)

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.