இஸ்லாமிய இயக்கம் என்பது மூன்று சிந்தனையாளர்களின் கருத்துகளால் ஆக்கப்பட்டதாயிருக்கிறது. அவர்கள் அபுல் ஹசன் அலி நடவி (1913-1999), அபுல் அலா மவ்துடி (1903-79), சையது குத்ப் ( 1906-66) ஆகியோர். இவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தங்களது முக்கிய படைப்புகளை எழுதினர். குர்ஆனின் அடிப்படையில் எழுதப்பட்ட இவர்களது கருத்துகள் சமூகம், அரசின் அம்சங்களை உள்ளடக்கியது. இவர்கள் அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதையே முக்கிய குறிக்கோளாகக் காண்பித்தனர். இஸ்லாமியர்கள் மற்ற புரட்சியாளர்களைப் போலவே இயக்க அரசியலில் அதிகாரத்தில் அக்கறை கொண்டவர்கள். அவர்களின் பார்வையில், அல்லாஹ்வே இறையாண்மையின் ஆதாரம். அல்லாஹ்வின் கட்டளைகள் இஸ்லாத்தின் சட்டங்கள். தேசியவாதம், தாராளமயம், ஜனநாயகம், முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம் போன்ற மதச்சார்பற்ற கருத்துகள் எதுவும் நிராகரிக்கப்படுகின்றன. சையது குத்ப் கூறியது போல் இஸ்லாம், ”மனித குலத்தின் அனைத்து வியாதிகளுக்கும் முழுமையான சிகிச்சையை அதன் தனித்துவமான வழியில் தேர்ந்தெடுத்துள்ளது”.

அபுல் ஹசன் அலி நடவி pic: quranwahadith.com

இஸ்லாமியர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத வழிகளில் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். ஏனென்றால் சிந்தனையாளர்களின் கருத்துப்படி, இஸ்லாமிய எழுச்சிக்கு முன்பு மத அறியாமை (ஜாஹிலிய்யா) உலகில் நிலவியது. மற்றப் புரட்சியாளர்களைப் போலவே இஸ்லாமியர்களும் அரசை சீர்திருத்தக் கருவியாகவே கருதுகின்றனர். அபுல் அலா மவ்துடி, “அரசின் செயல்பாட்டுக் கோளம் முழு மனித வாழ்க்கையுடனும் இணைந்துள்ள அளவிற்கு உலகளாவிய சித்தாந்தம்” என்று முன்மொழிகின்றார். அத்துடன் உலகளாவிய அரசு குர்ஆன், சுன்னா (முஹம்மது நபியின் கூற்றுகள்) ஆகிய இஸ்லாத்தின் அடிப்படைச் சிந்தாந்தங்களில் நிறுவுவதே அதன் நோக்கம் என்பதையும் வலியுறுத்துகிறார். மவ்துடியின் எழுத்துகளில் இது ‘இஸ்லாமிய அரசு’ என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் சையது குத்பின் எழுத்துகளில் இது ’இஸ்லாமிய ஒழுங்கு’ என்று குறிப்பிடப்படுகிறது. இரண்டும் மனிதகுலத்தின் செயல்பாடுகளுடன் இணைந்துள்ளன. சையது குத்பின் பார்வையில், இஸ்லாமிய புரிதலில் உள்ள மதம் நவீன பயன்பாட்டில் காணப்படும் ஒழுங்கு என்ற சொல்லுக்கு ஒத்ததாக இருக்கிறது.

அபுல் அலா மவ்துடி பார்வையில் இஸ்லாமிய அரசு, ’இஸ்லாத்தின் சித்தாந்தத்திலும் அதன் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் இறைவனின் சட்டத்திலும் நம்பிக்கை கொண்டவர்களால் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.’ இஸ்லாமிய சித்தாந்தத்தின் மீதான நம்பிக்கை மட்டும் ஒரு முஸ்லிம் அரசு நடத்துவதற்கு போதாது. இஸ்லாமிய அரசின் நிர்வாகிகள், இந்தச் சட்டத்தை கடைப்பிடிப்பதற்கும் அமலாக்குவதற்கும் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர்களாக இருக்க வேண்டும், அவர்கள் அதன் சீர்திருத்த திட்டத்துடன் உடன்படுவதோடு முழுமையாக அதன் உணர்வைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்” என்கிறார். மேலும், “இந்தத் திட்டத்தை யார் ஏற்றுக்கொண்டாலும், அவர் எந்த இனம் அல்லது நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், இஸ்லாமிய அரசை நடத்தும் சமூகத்தில் சேரலாம். ஆனால், அதை ஏற்காதவர்களுக்கு அரசின் அடிப்படைக் கொள்கையை வடிவமைப்பதில் எந்தக் கையும் இருப்பதற்கு உரிமை இல்லை. அதாவது, இஸ்லாமிய அரசில் முஸ்லிம் அல்லாத மக்கள் இஸ்லாமிய அரசை நடத்துவதில் இருந்து விலக்கப்படுகிறார்கள். ஆனால், இரண்டாம் தர குடிமக்களின் அனைத்து உரிமைகள், சலுகைகளைப் பெறுவதற்கான அந்தஸ்தைப் பெறுகிறார்கள்.

அபுல் அலா மவ்துடி pic: http://mideastweb.org

இஸ்லாமிய அரசு எனப்படுவதன் இன்னும் பிரத்தியேகமான பண்புகளைக் கவனித்தால், நிர்வாகப் பணிகளிலிருந்து அது பெண்களைத் தடுக்கிறது. அபுல் அலா மவ்துடியின் பார்வையில், வீட்டுக்கு வெளியே சமூகத்தில் பரபரப்பான பாத்திரங்களை வகிப்பதற்குப் பெண்கள் இயற்கையிலேயே தகுதியற்றவர்கள்.

இஸ்லாமிய அரசியல் முஸ்லிம் ஆண்களைப் போலவே முஸ்லிம் பெண்களும் முதல் தர குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள். ஆனால், இஸ்லாமிய அரசு மட்டுமே அவர்களின் விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இஸ்லாமிய சட்டங்களையும் இஸ்லாமிய அடிப்படைகளையும் நன்கு அறிந்த புத்தியுள்ள தொழில் வல்லுநர்களாகக் கருதப்படும் ஆண்கள் மட்டுமே அரசை நடத்த உரிமை பெறுகிறார்கள்.

இவ்வாறு, இஸ்லாமிய அரசு செயல்பாட்டில் உலகளாவியதாகவும் அமைப்பில் பிரத்தியேகமாகவும் இருக்க வேண்டும். மவ்துடி இஸ்லாமிய அரசை இறையியல்-ஜனநாயகம் என்று அழைக்கிறார். ஏனெனில் அவரது பார்வையில், ’முழு முஸ்லீம் மக்களும் இறைவனால் அருளப்பட்ட குர்ஆனினதும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபியின் நடைமுறைக்கும் ஏற்ப அரசை நடத்துகின்றனர்.’ இறைவனின் ஆதிக்கத்தின் கீழாக வரையறுக்கப்பட்ட மக்கள் இறையாண்மை குறித்து இவர் பேசுகிறார்.

இந்த வரையறுக்கப்பட்ட இறையாண்மை முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தை அமைக்கவும், அது ஷரீஆவுக்கு (இஸ்லாமிய சட்டம்) முரணாகச் செயல்படுவதைக் கண்டால் அதனை அகற்றவும் உரிமை அளிக்கிறது. மவ்துடியின் பார்வையில், ’சட்டத்தின் விஷயங்களில் ஒரு நல்ல கருத்தை அளிக்கும் திறனும் தகுதியும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் சட்டத்தை விளக்குவதற்கு தகுதியானவர்.’ இந்த இறையாண்மை ஷரீஆவில் வெளிப்படையான உத்தரவு காணப்படாத அனைத்து கேள்விகளும் முஸ்லிம்களிடையே ஒருமித்த கொள்கையால் தீர்க்கப்படுகின்றன. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் வாண்மையான அறிஞர்களால் மட்டுமே சட்ட விஷயங்களில் நல்ல தீர்ப்பை வெளிப்படுத்த முடியும். பெரும்பான்மையானவர்கள் அறிஞர்களாக, சட்ட வல்லுநர்களாக மாற முடியாது என்பதால் இந்தத் துறை சமூகத்தின் ஒரு சிறிய பகுதியால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும், நாட்டின் தலைவர் பற்றிய கேள்விக்கு வரும்போது, வரையறுக்கப்பட்ட இறையாண்மை இன்னும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு முஸ்லிம் ஆண் மட்டுமே அமீர் பதவிக்குத் தகுதியுடையவராகக் கருதப்படுகிறார். அவருக்கு ஆலோசனைக் குழு உதவ வேண்டும். மவ்துடி பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அனுமதித்தாலும் இஸ்லாமிய சட்டத்தின்படியாக நிரந்தர தொழிலாளர் பிரிவை வரையறுத்து இதில் பெண்களுக்கு உட்புற கடமைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்.

சையித் குத்ப் மிகவும் வெளிப்படையாகவே, ஒரு பெண் மனைவியாகவும் தாயாகவும் இருப்பதன் மூலம் தனது இயற்கையான செயல்பாட்டை நிறைவேற்றுகிறார். அதே நேரத்தில் ஓர் ஆணின் செயல்பாடு அதிகாரக் கடமைகள் புரிவது, உணவு வழங்குவது, பொது வாழ்க்கையில் செயலில் உள்ள உறுப்பினராக இருப்பது என்று மட்டுப்படுத்துகிறார். அதாவது, மிகத் தெளிவாக இஸ்லாமிய அரசு என்பது தொழில்முறையில் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமே தனிச்சிறப்புப் பெறுகிறது.

அரசு அதிகாரம் பற்றிய கேள்வியில், இஸ்லாமியர்கள் பாரம்பரிய சீர்திருத்தவாத மத சிந்தனையாளர்களை விடவும் தீவிரமானவர்கள். கடந்த கால சீர்திருத்த சிந்தனையாளர்களிடமிருந்து அவர்கள் வெளியேறிய புள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். அரச அதிகாரம் இப்போது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளதால் அதன் பறிமுதல் ஒரு குறிக்கோளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, ஜிஹாத் (புனிதப் போர்) பாரம்பரியமாக மதரீதியானது. இது இறைவனுக்கான தீவிர உழைப்பாகக் கருதப்படுவது. இது காஃபிர்களுக்கு எதிராக மட்டுமல்ல, இஸ்லாத்தின் கோட்பாடுகளும் விதிகளும் புறக்கணிக்கப்பட்டால் அல்லது மீறப்படும் போது கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகின்றது. இந்த அர்த்தத்தில், ஜிஹாத் என்பது நிரந்தர அரசியல் போராட்டத்தின் ஒரு வடிவம். சையத் குத்ப் வாதிடுவது போல், உருவ வழிபாட்டுக் கொடுமைகளின் அடக்குமுறை சக்திக்கு எதிராக ஷரீஆவைப் பயன்படுத்த தடையின்றி இஸ்லாம் அனுமதிக்கிறது.

சையது குத்ப் pic: wikipedia

மவ்துடி, குத்ப் ஆகிய இரு சிந்தனையாளர்களும் மதக் கடமைகளிலும் ஜிஹாதை முன்னிலைப்படுத்துகின்றனர். அனைத்து முஸ்லிம் ஆண்களுக்கும், குறிப்பாக அவர்களின் மதம் தாக்குதலுக்கு உள்ளாகும் போது ஜிஹாத் ஒரு கடமை என்று வாதிடுகின்றனர். மவ்துடி ஜிஹாத் மதத் தீவிரவாதிகளால் நடத்தப்படும் ஒரு ’புனிதப் போர்’ என்ற கருத்தை நிராகரிக்கிறார். ஜிஹாதை அவர் ஒரு புரட்சிகரச் சித்தாந்தம் என்கிறார். இஸ்லாத்தின் இயல்பான இயக்கத்திற்கும் இதற்கும் தொடர்பு உள்ளது என்கிறார். எல்லைகளைத் தேசிய பிரதேசங்களைக் கடந்த அதிகாரத்தைக் கைப்பற்றி இஸ்லாத்தை நிறுவும் உலகளாவிய குறிக்கோளுக்காக உலக முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சர்வதேச புரட்சிகர சித்தாந்தத்தில் தங்கள் சக்திகளைப் பயன்படுத்த வேண்டும்.

அனைத்துப் புரட்சியாளர்களுக்கும் போலவே அரசியல் அதிகாரத்தைப் பெறுவது இஸ்லாமியர்களுக்கும் மையமான செயல்முறை. இஸ்லாமியர்களுக்கு இஸ்லாம் ஒரு ’புரட்சிகர சித்தாந்தம்’, அதன் ஆதரவாளர்கள் ’புரட்சியாளர்கள்.’ அவர்கள் தேர்தல் நடத்துவதையும் அரசு அதிகாரத்தை அடைவதற்கான மீதமுள்ள ஜனநாயக நடைமுறைகள் உள்ளிட்ட படிப்படியான சீர்திருத்த அணுகுமுறைகளையும் நிராகரிக்கின்றனர். அவர்கள் இந்த அணுகுமுறைகள் யாவும் மேற்கத்திய உலகின் பங்களிப்பு என்பதாகவும் இவற்றின் மீது இஸ்லாத்திற்கு எந்த அவசியமும் இல்லை என்கின்றனர்.

சையித் குத்பின் பார்வையில், குறிப்பாக வெகுஜன ஊடகங்களின் யுகத்தில் சாதாரண பொதுமக்கள் நம்ப முடியாதவர்கள். அவரது பார்வையானது, அதிகாரத்தைக் கைப்பற்றுவது ’தேர்ந்தெடுத்த உயரடுக்கின்’ பணி, தொழில்முறை புரட்சியாளர்களாலேயே ஆட்சி அதிகார நோக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க முடியும். இஸ்லாத்தின் நீண்ட நடைப்பயணத்தில் ஒரு நல்ல ஆவியால் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, ஊக்கமளிக்கப்பட்ட புரட்சியாளர்கள் வெற்றி பெறாமல் இருக்க முடியாது.

சையித் குத்ப் அமெரிக்காவை வெறுத்தார். அவர் பார்வையில் அமெரிக்கா ஜாஹிலியத்துக்களின் நிலம். (இஸ்லாத்திற்கு முந்தைய காலம்). 1948இல் அங்குள்ள கல்வி முறையைப் பயில்வதற்காக உதவித் தொகையில் அமெரிக்கா சென்றார். கொலராடோ மாநிலத்தின் கல்வியியல் கல்லூரியில் பயின்ற காலத்தில் மத முக்கிய விமர்சனத்தின் முதல் பெரிய தத்துவார்த்த படைப்பான அல்-ஆதலா அல்-இஜ்திமிய்யா ஃபில்-எல்-இஸ்லாம் (இஸ்லாத்தில் சமூக நீதி), 1949இல் வெளியானது.

அவர் அங்கு இருந்த காலத்தில் அமெரிக்கக் கலாசாரத்துடனும் அரசியல் முறைமையுடனும் எந்த வகையிலும் சமரசம் கொள்ளவில்லை. குத்பைப் பொறுத்தவரை அமெரிக்கா ’புதிய உலகின் எழுத்துப் பிழை.’ வரம்பற்ற இன்ப பூமி. எகிப்தில் போலல்லாமல் கனவுகள் நனவாகும் பூமி. ஆனால், மக்களைக் குருடாக்கும் சக்தியின் உச்சம். அவர் இவற்றை மிகவும் ஆபத்தானது என்று கண்டார்.

’புதியது’ மேலும் ’மேம்படுத்தப்பட்டது’ என்ற கருத்தை குத்ப் நிராகரித்தார். அவர் பார்வையில் அறிவொளி, தொழில்துறை யுகம், நவீனத்துவம் இவை எதுவும் முன்னேற்றம் இல்லை. ’ஒவ்வொரு நாகரிகத்தின் உண்மையான மதிப்பு என்பது மனிதன் கண்டுபிடித்த கருவிகளிலோ அல்லது அவர் எவ்வளவு அதிகாரத்தைக் கையாளுகிறார் என்பதிலோ இல்லை’ என்று குத்ப் எழுதினார். ’நாகரிகங்களின் மதிப்பு அவர்கள் அடைந்த உலகளாவிய உண்மைகளிலும் உலகக் கண்ணோட்டங்களிலும் உள்ளது.’ அறிவியலிலும் கண்டுபிடிப்பின் மீதான நவீன மோகமும் முதல் கருவி தயாரிப்பாளர்களின் பழமையான நிலைக்கு ஒரு தார்மீக பின்னடைவாகும். மேலும் அவரது பார்வையில், அதன் ‘இடைவிடாத, கணக்கிட முடியாத கன்னி நிலத்தின் விரிவாக்கங்கள்’ ஒரு நாகரிக வாழ்க்கைக்குத் தேவையான நேரமும் பிரதிபலிப்பும் இல்லாத ’சாகசக்காரர்களின் குழுக்கள் மற்றும் குற்றவாளிகளின் குழுக்களால்’ தீர்க்கப்பட்டது. குத்பின் அமெரிக்கர்கள் மதத்தின் மீது உணர்வற்ற, ஆன்மிக விழுமியங்களில் நம்பிக்கையற்ற ஒரு பூமியை எதிர்கொண்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே அவர் அமெரிக்காவில் இருந்தார். 1950இல் அவர் விரைவாக நாடு திரும்பினார். முஸ்லிம் சகோதரத்துவம் என்று அழைக்கப்படும் தேசியவாத, மதப் போராட்ட இயக்கத்தின் நிறுவனர் ஹசன் அல்-பன்னா படுகொலை செய்யப்பட்ட பின்னர் எகிப்து திரும்பி அந்த இயக்கத்தின் பொறுப்புகளைக் கையில் எடுத்தார். அவரது வாழ்வின் அடுத்த ஒன்றரை தசாப்தங்கள் அவர் சிறையிலேயே கழிக்க நேர்ந்தது. சிறையிலிருந்து அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க மூல நவீனத்துவ எதிர்ப்பிலிருந்து ஓர் இறையியல் அரசியலைச் செம்மைப்படுத்துவதாயிருந்தன. குத்பின் கோட்பாட்டின்படி நவீனத்துவம் என்பது ஜாஹிலியத். முஹம்மது நபி அவர்களின் காலத்திற்கு முந்திய காட்டு மிராண்டிகளின் நிலை. இஸ்லாமிய இறையியல் கோட்பாட்டையும் முஹம்மது நபி அவர்களின் சுன்னாவையும் உள்ளடக்கிய கடுமையான மாறாத சட்டம் மட்டுமே இந்த நாகரிகமற்ற நிலையை மீட்க முடியும். யூதர்களின் துரோகம் என்று கருதப்படும் வன்முறையால் நிகழ்த்தப்பட்ட ’சிலுவைப்போர்’ குற்றவாளிகளை விடவும் மேற்கத்திய நாடுகளுடன் கூட்டணி வைத்திருந்த முஸ்லிம் தலைவர்கள் சிறந்தவர்கள் அல்ல. எனவே, குத்ப் அனைத்து உண்மையான முஸ்லிம்களையும் சக்திவாய்ந்த முறையில் அமெரிக்கா பிரதிநிதித்துவப்படுத்தும் நவீனத்துவ ஜாஹிலியாவுக்கு எதிரான ஜிகாத் அல்லது புனிதப் போருக்கு அழைத்தார்.

இந்தத் தத்துவம் 1966இல் குத்பின் மரணதண்டனைக்கு வழிவகுத்தது. ஐக்கிய ராச்சியத்தின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்து விவசாய சீர்சிருத்தத்தை அறிமுகப்படுத்தி நவீன அரசியல், பொருளாதாரக் கொள்கைகளால் ஆன நவீன சோசலிய ஆட்சியை எகிப்தில் நிறுவிய ஜனாதிபதி கமல் அப்தெல் நாசர் ஹூசைன் ஆட்சியில் சையது குத்ப் மரண தண்டனை விதிக்கப்பட்டார். நாசர் ஹூசைனின் மதச்சார்பற்ற ஆட்சியை எதிர்த்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகச் செயல்பட்டார் என்ற காரணத்தினால் தூக்கிலிடப்பட்ட சையது குத்பின் தியாகம் அவரது இயக்கத்தைத் துரிதப்படுத்தியது. இவர் தூக்கிலிடப்பட்ட காலத்தில் இளைஞராக இருந்த அல்-ஜவாஹிரி ‘எகிப்திய இஸ்லாமிய ஜிஹாத்’ (EIJ) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். இந்த அமைப்பு எகிப்தில் மதச்சார்ப்பற்ற இஸ்லாமிய ஆட்சியைத் தூக்கி எறிந்து இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்காக அர்ப்பணித்துக் கொண்டது.

முஹம்மது குத்ப் pic: .islam21c.com

இதற்கிடையில், சையது குத்ப் தூக்கிலிடப்பட்டதும் அவரது சகோதரர் முஹம்மது சவுதி அரேபியாவில் தலைமறைவாகினார். பின்னர் அங்கு அவர் கிங் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தில் கற்பித்தார். சவூதி நாட்டின் கட்டுமானத்துறை செல்வத்தின் வாரிசான ஓசாமா பின்லேடன் இவரது மாணவர்களில் ஒருவர்.

தொடரும்…

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.