மார்ச் 30, 1979இல், அமெரிக்க மத்திய உளவு அமைப்பின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் கேட்ஸ் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் பாதுகாப்புத் துணைச் செயலர் வால்டர் ஸ்லோகாம்பே கேட்டார், “ஆப்கானிய கிளர்ச்சியில் நம் தலையீட்டுக்குப் பெறுமதி இருக்கிறதா?”

“நாங்கள் முஜாஹீதீன்களை ஆதரிக்க வேண்டும்” என்று ஜூலை 3, 1979இல் உத்தியோகபூர்வ முடிவை அமெரிக்க அதிகாரிகள் நிறைவேற்றினார்கள். அந்த முடிவை நோக்கி, அமெரிக்கா விரைவில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவிகளை அனுப்பியது.

உண்மையில் 1950களிலிருந்து ஆப்கானிஸ்தானின் தொடர்ச்சியான நவீனமயமாக்கும் திட்டங்களில் அமெரிக்காவும் சோவியத் யூனியனும் ஈடுபட்டுவந்திருக்கின்றன.

சலாங் சுரங்கப்பாதை

சோவியத் யூனியன் சலாங் சுரங்கப்பாதையைக் கட்டியது. இது வடக்கு ஆப்கானிஸ்தானை காபூலுடன் இணைத்தது. தெற்கு ஆப்கானிஸ்தானில் அணைகள் கட்டுவது குறித்த நீர்ப்பாசனத் திட்டத்தையும் விவசாயத் திட்டமாக இருந்த ஹெல்மண்ட் பள்ளத்தாக்குத் திட்டம் என அழைக்கப்படுவதிலும் அமெரிக்கா ஈடுபட்டது. 1950களிலும் 1960களிலும் இவ்விரு நாடுகளும் கணிசமான தொகையை ஆப்கானிஸ்தானின் அபிவிருத்திக்கு வழங்கியிருக்கின்றன.

ஆப்கானிஸ்தானிற்கு இவ்விரு பெரிய சக்திகள் இரண்டினாலும் கிடைத்த பெருந்தொகைப் பணம் நாட்டிற்கு மிகவும் முறையான ராணுவ உறவாக களம் அமைக்கிறது. 1970களில் எந்தவொரு ராணுவ விரிவாக்கத்தையும் ஆதரிக்க அமெரிக்கா முதலில் தயங்குகிறது. தாவூத் கான் சோவியத் யூனியனுடன் மேலும் மேலும் கூட்டணி வைக்கத் தொடங்குகிறார். அவர் ஒரு நட்பு உறவை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அவர் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான சொற்றொடர் உள்ளது: ”அமெரிக்காவின் சிகரட்டை சோவியத்தின் லைட்டர் கொண்டு பற்றவைக்கும்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.”

இது உண்மையில் முரணான, சங்கடமான பனிப்போர் உறவை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சியைப் பேசுகிறது. ஆனால், சோவியத் யூனியனுடனான அவரது நட்பு அமெரிக்காவை மிகவும் பதட்டப்படுத்துகிறது.

1978ஆம் ஆண்டில், ’புகழ்பெற்ற சவுர் புரட்சி’ தாவூத் கானை அதிகாரப்பூர்வமாகத் தூக்கி எறிந்தது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் அரசாங்கம் நிறுவப்பட்டு ஆப்கானிஸ்தான் ஜனநாயக குடியரசாக மாற்றம் கண்டது. சோசலிச எதிர்ப்புப் புரட்சியில் ஈடுபட்டிருந்த குழுக்களுக்கு அமெரிக்கா உதவி செய்யத் தொடங்கியது. கம்யூனிச எதிர்ப்பு இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டு கிளர்ச்சித் தீயிற்கு எண்ணெய் வார்ப்பதில் திறமையான வெளியுறவுக் கொள்கையாளர்களை அமெரிக்கா தாராளமாகக்கொண்டிருந்தது.

அமெரிக்க அரசாங்கத்தில் இருந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செபேக்நிய ப்ரூசெஸ்ன்கி (Zbigniew Brzezinski) இதில் ஈடுபடுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். நாங்கள் ஈடுபட்டால் சோவியத் யூனியன் ஈடுபட வேண்டும் என்று நினைக்கும் மற்ற ராணுவத் தலைவர்களும் இருந்தனர். அதனால் அவர்கள் ஒரு கலப்பு அணுகுமுறையைக் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் 1978இல் அவர்கள் கிளர்ச்சியாளர்களை ஊக்குவித்தார்கள். 1979இல் பாகிஸ்தானின் உளவுத் துறைக்குப் பணத்தை வழங்கினார்கள். பின்னர் அவர்கள் அதை எதிர்ப்பின் கைகளில் செலுத்துகிறார்கள். முஜாஹதீன்களுக்கான அமெரிக்க நிதி சீராக அதிகரித்தது. ஆப்கானிஸ்தான் அமெரிக்கன் கல்வி நிதி போன்ற தீங்கற்ற பெயரிடப்பட்ட பரப்புரைக் குழுக்களால் முஜாஹிதீன்கள் செறிவூட்டப்பட்டனர். ரகசிய பிரச்சாரத்திற்கான மேலதிக ஒதுக்கீடுகள் 1985க்குள் $250 மில்லியனை ஆண்டுதோறும் எட்டியது. கடும்போக்கு இஸ்லாமிய குழுக்கள் எப்போதுமே பெருமளவு நிதியுதவியைப் பெற்றன. அமெரிக்கப் பணத்தின் மூன்றில் ஒரு பங்கு மத ஆர்வலர்களுக்குச் சென்றது.

முஜாஹிதீன்கள் ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் குடியரசின் அடக்குமுறையின் விளைவாக வெளிப்பட்ட ஒரு வகையில் எதிர்ப்பு வடிவம். இந்த இடத்தில் ஒரு விடயம் கவனிக்கப்பட வேண்டியது. முஜாஹதீன்கள் ஒரு குழு அல்ல. முஜாஹீதீன்களைப் பற்றிப் பேசப்படும் இடங்களில் அது ஒரு குழுவாகவே பெரும்பாலும் கவனிக்கப்படுகின்றது. ஆனால், அவர்கள் உண்மையில் நான்கு வெவ்வேறு வகையான தன்மை அல்லது கொள்கை நிலை கொண்டவர்களாக இருந்தார்கள்.

முன்னை கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டதுபோல முஜாஹிதீன்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள். ஜிஹாதி சித்தாந்தத்தில் பயிற்சி பெற்ற குல்புதீன் ஹேக்மத்யார் போன்றவர்களின் தலைமையிலான இஸ்லாமியப் பிரிவுகளும் முஜாஹிதீன்களாக இருந்தார்கள். குல்புதீன் ஹேக்மத்யார் ஓர் இஸ்லாமிய அரசாங்கத்தைப் பார்க்க விரும்புகிறார். இவர் அரக்கத்தனமான கொடூர பிற்போக்குத்தனத்தின் வடிவம். உண்மையில், சோவியத் படையெடுப்புக்கு முன்பே, அவர் பெண்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான கொடூரமான அமிலத் தாக்குதல்களை நடத்தினார். முஜாஹிதீன்களில் இது மிகவும் விரும்பத்தகாத பாத்திரம் அல்லது வகை.

முஜாஹிதீன்கள்

மிதவாதியான அஹ்மத் ஷா மசூத்தின் வழியிலானவர்களும் முஜாஹிதீன்களில் இருந்தார்கள். அஹ்மத் ஷா மசூத் பெண்கள் மீது ஆசிட் தாக்குதல்களை நடத்தவில்லை. ஒரு வகை கட்டுப்பாடுகள் கொண்ட சமத்துவப் பார்வையுடனான இஸ்லாமியக் குடியரசு இவரது கொள்கையாயிருந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டில் நிகழ்ந்துகொண்டிருந்த எதேச்சாதிகார ஆட்சியைவிட இஸ்லாமியக் குடியரசு சிறந்தது என்று பிரஸ்தாபிக்கிறார். ஆனால், கடும்போக்குக் கொள்கையுடைய குல்புதீன் ஹேக்மத்யார் மிதவாதியான அஹ்மத் ஷா மசூத்துடன் கூட்டணி வைத்துள்ளார். இவர்கள் இருவருக்கிடையில் பல்வேறுபட்ட கருத்தியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் அல்லது குறைந்தபட்சம் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு எதிராக இணைகிறார்கள்.

முஜாஹிதீன்களின் மற்றொரு பகுதியாக இடதுசாரிகளும் உள்ளனர்; இந்த அரசாங்கத்தால் அதிருப்தி அடைந்த மாவோயிஸ்டுகளும் கம்யூனிஸ்ட்டுக்களும். முஜாஹதீன் கம்யூனிஸ்ட் கட்சியின் சொந்த ராணுவத் தளபதிகளாலும் அரசாங்கத்திலிருந்து விலகிய இளம் ராணுவத் தளபதிகளின் குழுவாகவுமே தொடக்கத்திலிருந்தது. அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்வதையே நோக்கமாகக்கொண்டிருந்தார்கள். குல்புதீன் ஹேக்மத்யார் போன்ற கடும்போக்குவாதிகள் எதிர்ப்பு இயக்கத்தின் வடிவத்தை முற்றிலுமாக மாற்றி இஸ்லாமியக் குடியரசை நோக்கி நகர்த்துகின்றனர்.

முஜாஹிதீன்களின் இன்னொரு வடிவமும் இருந்தது. இவர்கள் சாதாரண மக்கள். கிடைக்கும் ஆயுதங்களை எடுத்து சண்டையிட்டு எதிர்க்கின்றவர்கள். இவர்களுக்கு ஒரு சித்தாந்தம் இல்லை. அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் அல்லது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட பார்வை எதுவும் இல்லை. இந்த அரசாங்கம் அடக்குமுறையானது என்பதை அவர்கள் உணர்கிறார்கள் அல்லது அவர்கள் மகிழ்ச்சியடையாத வகையில் விஷயங்கள் மாற்றப்படுவதை எதிர்க்கிறார்கள். இந்த கொஞ்சம் மெதுவான இயங்குநிலை கொண்ட வடிவமாக இருக்கிறது. சோவியத் படையெடுத்தவுடன் இந்தச் சாதாரண மக்கள் குழு வியத்தகு முறையில் வளர்ந்து இது முஜாஹீதின்களின் பெரும்பகுதியாகியது.

சோவியத் இருக்கும்போது மட்டுமே வெவ்வேறு குறிக்கோள்களைக் கொண்ட குழுக்களின் கூட்டணி பற்றிப் பேசுகிறோம். சோவியத் போனவுடன் இந்தக் குழு தங்களுக்குள் மாறிவிடும். மேலும் 1990களில் உள்நாட்டுப் போரை பார்க்க நேரிடும்.

’நாங்கள் முஜாஹதீனை உருவாக்கினோம்’ என்று அமெரிக்க அதிகாரிகள் பெருமையுடன் தங்கள் முதுகில் தட்டிக்கொள்வது ஒரு மிகைப்படுத்தலான செயல். முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செபேக்நிய ப்ரூசெஸ்ன்கியின் (Zbigniew Brzezinski) சொந்தக் கூற்றுகள், சொற்பொழிவுகள் பல இவ்வாறு இருக்கின்றன. உண்மையில், காப்பகங்களைப் பார்க்கும்போது இந்தக் கூற்று உண்மையல்ல. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஈடுபாடு சீரற்றது. அமெரிக்கா முஜாஹிதீன்களுக்கு நிதியளித்ததினால் மட்டுமல்ல எல்லா வழிகளிலுமே அது சீரற்றதாயிருக்கிறது. உண்மையில் முஜாஹதீன்களை அமெரிக்கா சுரண்டுகிறது. முஜாஹீதீன்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறது. மேலும் அவர்கள் பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) மூலம் பணம் செலுத்துகிறார்கள். ஆனால், அந்தப் பணம் பெரும்பாலும் முஜாஹதீன்களின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கடும்போக்குக் குழுக்களின் கைகளுக்குச் செல்கிறது.

முஜாஹிதீன்களாக இருந்த சாதாரண மக்களை CIA அல்லது பாகிஸ்தானின் ISI கண்டுகொள்ளவில்லை. அவர்களுக்குப் பயிற்சிகளுமில்லை. வீடுகளில் துப்பாக்கிகளை வைத்திருக்கும் இந்தச் சாதாரண மக்கள் வகை முஜாஹிதீன்களால் CIA க்கோ ISI க்கோ பயனில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட பிற்போக்குக் கூறுகளைக்கொண்டிருந்த குல்புதீன் ஹேக்மத்யார் போன்ற மிகவும் ஆபத்தான இஸ்லாமியர்களே நிதி பெற்றனர். பயிற்சி உதவிகளையும் பெற்றனர்.

ஆப்கானியர்களுக்குப் பயிற்சியளிப்பது மிகவும் கடினம் என்று புகார் செய்யும் சிஐஏ (CIA) ஆவணங்கள்கூட உள்ளன. ஏனென்றால் அவர்கள் வெவ்வேறு நேர உணர்வுடன் செயல்படுகிறார்கள். அமெரிக்க ராணுவம் ஏற்பாடு செய்யும் விதத்தில் இவர்கள் செயற்பாடுகளை ஒழுங்கமைக்க மாட்டார்கள். மத்திய கிழக்கு கலாச்சாரம், மத்திய ஆசிய கலாச்சாரம் அல்லது இந்திய கலாச்சாரம் தெரிந்த எவருக்கும் தெரியும். ஒரு திருமணம் மாலை 7 மணிக்குத் தொடங்கிகிறது என்று சொன்னால், அது இரவு 9 மணிக்குத் தொடங்கும். முஜாஹிதீன்கள் நாங்கள் 8 மணிக்கு தொடங்கப் போகிறோம் என்பார்கள். ஆனால், அவர்கள் அதைத் தங்கள் சொந்த நேரத்தில் செய்வார்கள்.

இந்த ஒழுங்கற்ற பிற்போக்குத்தனமான கூறுகளைக் கொண்டவர்களுடன் தான் அமெரிக்கா கூட்டணி வைக்கிறது. கம்யூனிச அரசை எதிர்ப்பதற்கு எந்த எல்லைக்கும் இறங்கும் போக்குடன் அமெரிக்கா இருந்ததையே இது காட்டுகிறது. மேலும், அமெரிக்கா சில பயங்கரமான தவறுகளைச் செய்கிறது. அமெரிக்கா செய்து முடித்தவற்றில் ஒன்று, எகிப்து கைது செய்த இஸ்லாமியர்கள் குழுவை விடுவிக்க அழுத்தம் கொடுத்தது. எகிப்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்லாமியர்களில் ஒருவர் அய்மான் அல்-ஜவாஹிரி. இவர் அல்-காய்தாவின் இரண்டாவது தளபதியாக இருக்கிறார். வேறு நாடுகளிலிருந்து தீவிரப்போக்குடைய போராளிகளை இறக்குமதி செய்து அழைத்து வருவதன் மூலம் முஜாஹிதீன்களை வலுப்படுத்தும் முயற்சி எளிதாக இருக்கும் என்பது காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அரபு ஆப்கானியர்கள் அல்லது அரபு முஜாஹிதீன்கள் என்று அழைக்கப்படுவதைக் கொண்டு வரத் தொடங்குகிறார்கள். இவர்கள் எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள், இவர்கள் யேமனைச் சேர்ந்தவர்கள், சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள் இப்படியாக.

இங்கே ஓர் உறவு கவனக்குறைவாக அல்லது வேண்டுமென்றே கட்டமைக்கப்படுகின்றது. பாகிஸ்தான் உளவுத்துறை சேவைகளுடாக அமெரிக்கா முஜாஹிதீன்களின் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கூறுகளுடன் கூட்டணி வைத்திருக்கும் வெளிநாட்டுப் போராளிகளின் குழுவுக்கே நிதியுதவி அளிக்கிறது. இதன் விளைவு அமெரிக்காவும் சோவியத் யூனியனும் தங்கள் செல்வாக்கைத் திரும்பப் பெற்றவுடன் ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரில் விழும். அந்த உள்நாட்டுப் போரில் அல்கொய்தாவும் தலிபான்கள் இருவரும் பிறப்பார்கள். (எதிர்காலம்)

1980களின் முற்பகுதியில், பாகிஸ்தான் ஊடாக அளிக்கப்பட்ட உதவிகள் கணிசமான எண்ணிக்கையிலான சர்வதேச தொண்டர்களையும் உள்ளடக்கியது. பல முஸ்லீம் நாடுகள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், ஆப்கானிஸ்தானை கம்யூனிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான மோதலாக மட்டுமல்லாமல், நடுத்தர வர்க்கத்தின் விரக்தியடைந்த மத ஆர்வலர்களுக்கும் வசதியான பாட்டாளி வர்க்கத்திற்குமான அரசியல் திணிப்புத் தளமாகவும் பார்க்கத் தொடங்கின.

அமெரிக்க மத்திய புலனாய்வு மையம் (CIA) பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸின் (ISI) தீவிர ஊக்கத்துடன், ஆப்கானிஸ்தான் ஜிஹாத்தை சோவியத் யூனியனுக்கு எதிராக அனைத்து முஸ்லீம் நாடுகளும் நடத்திய உலகளாவிய போராக மாற்ற விரும்பியது. 1982 மற்றும் 1992 க்கு இடையில் 40 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த 35,000 முஸ்லீம் மததீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானின் போராட்டத்தில் இணைந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் உலகெங்கிலுமிருந்தும் பாகிஸ்தான் மதரஸாக்களில் படிக்க வந்தனர். இறுதியில், 100,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு முஸ்லீம் மதத்தீவிரவாதிகள் ஆப்கான் ஜிஹாத் மூலம் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தினர். சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அல்லது ஏதேனும் காரணங்களில் சொந்த நாடுகளில் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.

அமெரிக்க மத்திய புலனாய்வு மையம் (CIA) பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) கூலிப்படைகள் உலகெங்கிலுமுள்ள மத ஊக்கமுள்ள தன்னார்வலர்களை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தையும் ஆதரித்தது. 1988 வாக்கில், நியூயார்க், டெட்ராய்ட், சான் பிரான்சிஸ்கோ உட்பட பல அமெரிக்க நகரங்களில் ஆட்சேர்ப்பு மையங்கள் இருந்தன.

ஒசாமா பின்லேடன்

இதற்கு முன், ஒசாமா பின்லேடனை ஆப்கானிஸ்தானுக்கு அவரது நண்பர் சவுதி உளவுத்துறை தலைவர் இளவரசர் துர்கி அழைத்துச் சென்றார். இளம் பின்லேடன், உயரமான, கம்பீரமான, பக்தியுள்ள அத்துடன் பணக்கார இளைஞன். உண்மையான சவுதி இளவரசருக்குண்டான தகைமை பொருந்திய ஓர் ஆளுமை. ஆப்கானிஸ்தானில் பின்லேடனின் பணிகள் உள்கட்டமைப்பு ஒழுங்கமைத்தல், முஜாஹதீன்களுக்கான ராணுவ தளவாடங்களை ஒருங்கிணைத்தல், தொழில்நுட்ப உதவி, நிதியை ஒதுக்குதல் அத்துடன் சண்டையிடுதலும். சர்வதேச தொண்டர்களின் தலைவர்களில் ஒருவராக, பின்லேடன் மற்ற ஆள்சேர்ப்பவர்களைக் கண்காணித்து அவர்களின் அடையாளங்களையும் தொடர்புத் தகவல்களையும் பதிவு செய்தார். இந்தப் பட்டியலில் இருந்து அல்கொய்தா தோன்றியது.

இருப்பினும், எந்த ஓர் ஆளுமையையும் அமைப்பையும்விட முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாக இருந்தது, உலகம் முழுவதிலுமிருந்து ஆப்கானிஸ்தான் போரின் தீயைக் கடக்க கோபமடைந்த அந்நியப்படுத்தப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை. 1990களின் முற்பகுதியில் நவீன தாராளமயக் கொள்கைகள், கொடூரமான அரசாங்க அடக்குமுறை, தெளிவான மதத்தால் உருவாக்கப்பட்ட வறுமையால் சம பாகங்களில் தூண்டப்பட்ட குறைந்த தீவிரம் கொண்ட மோதல்களின் அலையைக் கொண்டு வந்தது.

(தொடரும்)

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.